எங்கேயும் எப்போதும் – பாக்யராஜ் ஸ்டைல்


அந்தாக்ஷ்ரி விளையாடுவோமா? என்றால் கும்பலாய் கூடும் இடங்களில் அந்த இடமே களை கட்டும். அந்தமான்  மாதிரி பல மொழிகள் பேசும் ஆட்கள் இருக்கும் இடங்களில் எல்லா மொழிப் பாடல்களும் பாடலாம்..அதிலும் kaa Gha எல்லாவற்றிற்கும் க வில் ஆரம்பிக்கும் தமிழ் பாடல் பாட சிறப்பு அனுமதி கிடைக்கும்.

இது அந்தாதி என்பதின் நாகரீக வடிவம் தான். அபிராமி அந்தாதி கேள்விப் பட்டிருப்பீர்களே… பாட்டு முடியும் வார்த்தையில் அடுத்த பாடல் ஆரம்பிக்க வேண்டும். அது தான் நியதி.

சினிமா பாட்டில் அந்தாதி இருக்கா?? ஏன் இல்லை… மூன்று முடிச்சு படத்தில் ஆடி வெள்ளி தேடி உன்னை என்ற பாட்டு அந்த அந்தாதி வகை தான். இப்பொ இன்னொரு தடவை உற்றுக் கேளுங்கள் அதன் சுவை இன்னும் கூடும். பிரபலமான பாடல்களின் வரிகளை படங்களுக்கு பெயராக வைப்பது தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்.

லெட்சுமிக் கல்யாணம் படத்தில் செம ஹிட்டான பாட்டு, ராமன் எத்தனை ராமனடி… ராமன் எத்தனை ராமனடி படம் வந்தது. அதில் அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு…ஹிட்டாச்சி. அதே பெயரில் படமும் வந்தது. அதில் தேன் சிந்துதே வானம் பாட்டு இன்றும் உருக்கும்.. அதே பெயரில் படம் வந்தது… உன்னிடம் மயங்குகிறேன் என்று ஒரு பாட்டு.. அந்தப் பெயரில் படம் கண்டிப்பா வந்திருக்கலாம்…

ஆனா சுடச் சுட அப்பொவே ஹிட் பாட்டை வச்சி தான் புது படம் வரும். எப்பொவொ வந்த எங்கேயும் எப்போது சங்கீதம் சந்தோஷம் பாட்டை வச்சி இப்பொ ஒரு படம் வந்திருக்கே..அது கொஞ்சம் யோசிக்க வைக்குது.

பரமக்குடி வாழ் மக்கள் ஒன்று சேர்ந்து Facebook ல் ஒரு குரூப் ஆரம்பித்திருக்கிறார்கள். (கமல்ஹாசனையும் சேருங்கப்பா அந்த குருப்பில்).. தீபவளிக்கு எந்தெந்த தியேட்டரில் என்னென்ன படம் (வாழ்க்கைக்கு தேவையான ரொம்ப ரொம்ப முக்கியமான கேள்வி…!!!) என்ற என் கேள்விக்கு ரவி தியேட்டரில் எங்கேயும் எப்போதும் ரிலீஸ் என்ற பதில் வந்தது.

ஓர்  ஊர் பெரிய்ய ஊரா சின்ன ஊரா என்ற சர்ச்சை காலேஜ் ஹாஸ்டலில் அடிக்கடி வரும். அப்போது Yard stick புதுப்படம் ரிலீஸ் ஆவது என்பதும் ஒன்று.. பரமக்குடிக்கு அப்பப்பொ அந்தப் பெருமை வரும். ஆனா சொதப்பலான படம் (அவள் அப்படித்தான்) மாதிரி ரிலீஸ் ஆகி பரம்க்குடி & பரமக்குடியான் (கமல்தான்) பெயரையும் கெடுக்கும்.

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சரி.. சந்தோஷம் எப்படி?? எப்போதும் எப்படி சந்தோஷமாய் இருப்பது??

சின்னத் தீவில் அரசு அதிகாரியாய் இருப்பதால் அப்பப்பொ கூட்டத்தில் பேசும் வாய்ப்பும் கிடைத்து விடும். ஒரு முறை லிட்டில் அந்தமான் தீவு மாணவர்கள் கலந்து கொண்ட அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பரிசு வாங்கி கலக்கிவிட்டனர். (கோ கோ வில் மட்டும் கோட்டை விட்டு விட்டனர்). பள்ளியின் தலைமை ஆசிரியர் செம குஷி ஆகி விட்டார்.

பின்னெ சும்மாவா… சுனாமியில் சுருண்ட அந்த தீவு மீண்டும் மீண்டது என்பதற்கு ஒரு சாட்சி அல்லவா அந்த வெற்றி.. தாரை தம்பட்டைகளுடன் கப்பலடி முதல் பள்ளிவரை உற்சாக வரவேற்பு.. மாணவர்களுக்கு பாராட்டு மழை தரவும் ஏற்பாடு. எனக்கு முன் பேசிய அனைவரும் கோக்கோவில் தோல்வி பற்றி தான் கவலைப்பட்டார்கள். மைக் என் கைக்கு வந்தது. எவ்வளவு வெற்றிகள் பெற்றிருக்கிறோம் அதைப் பாருங்கள்.. கோகோவை விடுங்கள்..பிறரை தள்ளி விட்டு அதுவும் முதுகில் பின்னால் நின்று விளையாடிம் விளையாட்டு..அதில் தோற்றதுக்கு சந்தோஷப்படுங்கள் என்றேன்.. என் பேச்சு அங்கு நன்கு எடுபட்டது.

அப்பொ… இப்பொ கம்ப ராமாயணம் பக்கம் போகலாமா… அன்றும் ராமன் சந்தோஷமா காட்டுக்கு போனதை அங்கும் சொன்னேன். எங்கேயும் எப்போதும் கம்ப சங்கீதத்தை இசைப்பது எனக்கு சந்தோஷம்.. உங்களுக்கு எப்படியோ..??

கம்பர் கொஞ்சம் ஜனரஞ்சகமான ஆளு தான். அப்பப்பொ பாலசந்தர் வியாட்நாம் வீடு சுந்தரம் மாதிரி சீரியஸான மெட்டர் எழுதினாலும் அப்பொப்பொ பாக்யராஜ் பாணியிலு எழுதுவார்..

எங்கேயும் எப்போதும் கனிந்தே இருக்கும் இனிக்கும் பழம் பத்தி கம்பர் எழுதி இருக்கார். முண்டகத்துறை என்ற ஒரு சோலை..எப்படி இருக்கும் தெரியுமா?? நல்லவர்கிட்டெ இருக்கும் செல்வம் மாதிரி.. எங்கேயும் உலகத்தார் அதை அனுபவிக்கலாம். எப்போதும் நிலைத்தும் நிற்குமாம். இது பாலசந்தர் ஸ்டைல்.

பாக்யராஜ் ஸ்டைலிலும் கலக்குறார் நம்ம கம்பர்… நல்ல ஒழுக்கத்தோட இருக்கும் பிகர்களின் (அதுவும் எளசான) உதடுகள் மாதிரி அங்கே உள்ள கனிகள் எங்கேயும் எப்போதும் கனிந்தெ இருக்குமாம்..

ஞாலம் நுங்குறு நல்லறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம் பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீங் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.

நீதி: எங்கேயும் எப்போதும் சந்தோஷமா இருங்க.. கூடவே இனி எங்கேயும் எப்போதும் உங்களுக்கு கம்பரே சந்தோஷமா ஞாபகம் வரட்டும்.

Goal Setting


எதை எதையோ செஞ்ச்சி வெட்டியா பொழுது போக்குறீங்களே…ஏதாவது MBA மாதிரி ஏதாவது படிச்சா என்ன?? என்று என் திருமதியார் நொய் நொய் என்று அனத்தி எடுக்க நான் இப்போது MBA முடித்து விட்டேன்.

நீதி : (எப்பொவும் என்னோட போஸ்டிங்க் படித்த பலர் அல்லது சிலர் கேட்கும் கேள்வி: என்ன சொல்ல வர்ரீங்க??…) அதனால நீதியை மொதலில் சொல்லி வைக்கிறேனே.. பொண்டாட்டி நொய் நொய் என்றால் கொஞ்சம் காது குடுத்து கேளுங்க..நல்லதும் நடக்கலாம் (சில சமயங்களில்)

எங்கே சுத்தியும் கடைசியில் கம்பராமாயணம் இழுத்து வரும் கலை (சிலர் கொலை என்றும் நினைக்கலாம்) மாதிரி MBA ல் எங்கு சுத்தினாலும் கடைசியில் சில பல M Factors சொல்லி விடுவார்கள்.

Money
Man
Material
Machinery இப்படியாக…

இன்னும் இதே போல் விடுபட்ட (பாடபுத்தகங்களில் சொல்லப் படாத) M Factors பத்தி யோசிச்சா… ஒரு லிஸ்ட் கெடைக்குது miscellaneous என்ற தொகுப்பில் அதனை அடக்கி விடலாம். அதில் Malaiyaalee, Madam, Methods, முகவெட்டு…இப்படி நிறைய சேத்துட்டே போகலாம்.

அது சரி.. தமிழில் Management தொடர்பான புத்தகங்கள் இல்லையே என்று கவலைப் படுபவரா நீங்க??

வள்ளுவரிடம் பாத்த Management Skills பத்தி இறையன்பு IAS ஜம்முன்னு ஒரு புத்தகமே போட்டிருக்காரு… அதன் ஆங்கில வடிவம் வேணுமா??? தேடுங்க.. கூகுலாண்டவர் அருள் புரிவார்.

சமீபத்தில் ராமர் ஒரு Management Guru என்று பெயரை விட அதிகமாய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அதிகமாய் வைத்துள்ளவர் எழுதிய புத்தகம் மேலோட்டமா பாத்தேன்..(எதையுமே முழுசா பாப்பதில்லைங்கிறது தான் ஊருக்கே தெரிஞ்ச சேதியாச்சே..??)

ராமர் எப்படி Management பத்தி பாடம் எடுக்க முடியும்??

சீதை பிறந்த வீட்டுக்கு போனப்பொ இரு நாள் ராமர் பொழுது போகாமெ ஒரு டிராமா (அதாங்க..அந்த கால கூத்து…) பாக்க போனாராம். அங்கே போனா…அங்க்கேயும் ராமாயணம் தான் கதையாம். ராமர் சீதையை பிரிஞ்ச சீன்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார் அந்த நடிகர். ராமர் யோசிக்கிறார்… அடப்பாவி.. நான் கூட இவ்வளவு கவலைப் படலையே?? இந்த நடிகன் இவ்வளவு கவலைப்பட்டது போல்… ராமன் கவ்லைப்பட்டு யாரிடமும் சபாஷ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் நடிகனுக்கு சபாஷ் வாங்கியாக வேண்டும்.. (இந்த இடத்தில் சுகி சிவம் அவர்களுக்கு நன்றி சொல்லியாகனும்..இதை அவரிடம் சுட்டதுக்கு)

அப்பொ ராமகதையோ…ராமரோ..அவர்களை விடவும் போற்றுதலுக்கு உரியவர் அதை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் தானே.. ஆக கம்ப ராமாயணத்தில் Management Guru கம்பர் தானே?? (இதை நேரடியா சொல்லித் தொலைக்க வேண்டியது தானே?? எதுக்கு இவ்வளவு இழுவை?)

சரி இப்பொ… கம்பர் சொல்லும் Goal Setting கதைக்கு வருவோம்… அவர் சொல்லும் Sequence கொஞ்சம் பாருங்க…

1. Objective of the Job: என்ன செய்யனும்கிறதில் தெளிவு வேணும்.. இது தெரியாமா பொழுதன்னைக்கும் ஃபேஸ்புக்குலெ விழுந்து கிடந்தா என்ன யூஸ்??

2. Assighn the Job..: யாருக்கு என்ன வேலை தரனுமோ நச்சுன்னு அதைப் பாத்து குடு.

3. Give him the required resources: நல்ல மேனேஜருக்கு அழகு என்ன தெரியுமா?? நீ என்ன வேண்ணாலும் செய்யி… எனக்கு தேவை இதை முடிக்கனும்..அவ்வளவு தான். இதையெ சிடுமூஞ்சிப் பேர்வழிகள் எப்படி சொல்லுவாங்க தெரியுமா?? நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது… நம்மாளு எதையும் செய்யாமெ வந்து நிப்பான்.

4. Fix the Target: கெடு வச்சி கையில குடு..அவன் கிடு கிடுன்னு வேலை பாப்பான்..

5. Get Feed Back: வேலையைக் குடுத்தா முடிஞ்சதா வேலை?? அப்பப்பொ மொபைல்ல புடி… மயிலும் செய்..ஆளை கண்கானிச்சு ரிப்போர்ட் கேளுபா..

6. Review the Task: அலசு…அலசு…அழுக்கு போகும் வரை அலசு… வேலை முடியற வரை விடாம அலசு.

இதை எல்லாம் கம்பர் சொல்லி இருக்கார்… சொன்னா நம்ப மாட்டீங்க.. இடம் பொருள் விளக்கம் சொன்னா நம்புவீங்களா?? (உங்களை நம்ப வைக்கவே நான் இந்தப் பாடு பட வேண்டி இருக்கே???)

1. வேலையில் தெளிவு : சீதையினை தென் திசை சென்று தேட வேண்டும்.
2. Team Leader: அனுமனை appoint செய்தல்.
3. Resource: இரண்டு வெள்ளம்(மில்லியன் அல்லது பில்லியன் என்று என் ஊகம்) வானரப் படை தருதல்.
4. கெடு: முப்பது நாள் தான். (அட..இதைத்தான் நம்ம Right to Information – தகவல் பெறும் உரிமை சட்டத்திலும் கெடு வைத்தார்களோ??)
5. தகவல் அப்பொப்ப தரணும்
6. ஒரு மாசம் முடிஞ்சி மறுபடியும் சந்திப்போம்.

இது சுக்ரீவன் இட்ட Action Plan. கம்பர் தான் இங்கு Management Guru..

பாட்டு பாக்கலாமா??

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினான்.

இப்பொ மேலாண்மை ஆசான் கம்பர் தான் என்றால் நீங்க ஒத்துக்கிவீங்க தானே???

மீண்டும் சந்திப்போம்.

நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…


நீங்க அசப்பில் தமண்ணா மாதிரி…

இப்படி நீங்க யார் கிட்டெயாவது சொல்லிப் பாருங்க… உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்.. (கொஞ்ச நாளுக்குத்தான் இந்தப் பெயரை யூஸ் செய்யலாம். அப்புறம் ஆள் பேரை மாத்தி அதே புளுகு புளுக வேண்டியது தான்).

நாம பொதுவா எப்பொ சந்தோஷமா இருப்போம் தெரியுமா?? யாராவது நம்மளை பத்தி ஏதாவது சொல்லனும் நல்ல விதமா…அதே ஏதாவது வில்லங்கமா சொன்னாங்க…அம்புட்டு தான்…அன்னெக்கி பூரா மூட் அவுட்… அவங்களுக்கும் அவங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கும்..

துணிமணி நகை நட்டு இவை எல்லாம் அந்த எதிர்பார்ப்பின் விரிவு தானோ… ஒரு வகையில் ஃபேஸ்புக்கில் எழுதுவது கூட அதன் extension மாதிரி தான். அதுவும் ஒருத்தரோட கம்பேர் செய்து சொல்லிட்டா தாங்கவே முடியாது நம்மாலெ…

நாம ஏதாவது எசகு பிசகா சொன்னா… அண்டப் புளுகு…ஆகாசப் புளுகு என்பார்கள்… ஆனா அதையே கவிஞர்கள் சொன்னா… தலையில வச்சி ஆடுவாங்க…

எப்பொவுமே தமிழ் பாட்டு பக்கமே தலை வச்சி படுக்கும் நாம் கொஞ்சம் மாறுதலா வடக்கே தலை வச்சி படுத்துப் பாக்கலாமே…

ஜேசுதாஸ் பாடிய ஜப் தீப் ஜலே ஆனா பாட்டில் வரும் வரிகளில், நீ வந்த பிறகு தான் நட்சந்திரங்களே வருதுங்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொருவர் காதலியின் கையைப் பாக்கிறார்… மெஹந்தியில் சிவந்திருக்காம்..(அது இல்லாமலும் சிவப்பு தானே??) ஆனா அது அந்த சிவப்பு இல்லையாம்.. என் இதயம் வடிக்கும் ரத்தமாம்.. இது எப்படி இருக்கு?? (அச்சா சிலா தியா துனே)

தூனே காஜல் லகாயா பாடலில் உன் கண்ணில் கரு மை இட்டால், பகல் கூட ராத்திரி அயிடுமடி என்கிறார் மற்றவர்.

கஜல் பாடல்கள் போல் தமிழிலும் பல பாட்டு இருக்கு… வைர முத்து அதை எல்லா வாயிலும் கொண்டு சென்றவர். சாம்பிளுக்கு ஒரு பாட்டு போடலாமா??

உன் வெள்ளிக் கொலுசொழி வீதியில் கேட்டால்…. அத்தனை ஜன்னலும் திறக்கும்.

நீ சிரிக்கும் போது பௌர்னமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்

நீ மல்லிகை பூவை சூடிக் கொண்டால் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும். …

இந்த மாதிரி நீங்க சொன்னா..உங்களை ஒரு மாதிரியா பாப்பாய்ங்க.. கவிஞருக்கு லைசன்ஸ் இருக்கு இப்படி சொல்லலாம்.

அடப்பாவிகளா.. இல்பொருள் உவமை என்று இதைத் தானே காட்டுக் கத்தல் கத்தி தமிழ் வாத்தியார் சொன்னார்.. அப்பொ மண்டையில் ஏறலையே..

இப்பொ சிம்பிளா சொல்லவா… தமண்ணா சிரிச்சா காது வரை வாய்… காது வரை வந்தா அது வாயா??? அது கார்ட்டூன்.. ஆனா அப்படி சொல்லுவோம்… அப்பொ இ பொ உ அ இனி மறக்காது உங்களுக்கு..

டொய்ங்க்… Hi …
ஒரு Chat Message வருது. யாருன்னு பாத்தா… நம்ம friend கம்பர் தான். Hai… Whats Up பதில் தந்தேன்..

என்ன டாபிக் இன்னெக்கி?

உவமை பத்தி…உங்களை பத்தி சொல்ல இருந்தேன்…அதுகுள்ளே நீங்களே வந்துட்டீங்க….

கம்பர் Offline ஆகி விட்டார்.

சரி நம்ம தொடர்வோம்.. பாரதி மேலெ நல்ல அபிப்பிராயம் வந்து பாரதி தாசன் ஆனார் கனக சுப்புரத்தினம். அவர் மாதிரியே…மாதிரியே சுப்பு ரத்தின தாசன்…ஆகி அதுவே சுரதா ஆன கதை சொல்லிட்டு அப்புறம் கம்பருக்கு போவோமே… ஆமா உவமைக் கவிஞர் சுரதாவை உவமை டாபிக்லெ எடுக்காமெ இருக்க முடியுமா???

இப்பொ கம்பரை பாக்க போவோம்… ஒரு இடத்திலெ கம்பர் தினறுகிறார்.. இதுக்கு உவமையே சொல்றதுக்கு இல்லையேன்னு…எந்த இடம் தெரியுமா?? சீதையை முதன் முதலில் பாத்த இடம் தானே??? அது தான் இல்லை… அந்த ஐயோ..சமாச்சாரம் தான் எல்லாரும் சொல்றாகளே…நாம வேற மேட்டர் பாக்கலாமே??

நம்பிக்கை இல்லாத மனத்தோட வாணர சேனையைப் பாக்கிறார்…பாக்கிறார்…பாக்கிறார்… நம்பிக்கை அப்பவே வந்திருச்சி. ஆமா எப்படி இருந்தது தெரியுமா?? கம்பர் யோசிக்கிறார்.. கடல் ஆழம் மாதிரி… இல்லையே…அதைக் கண்டுபிடிக்கத்தான் Echo Sounder மாதிரி சாதனம் இருக்கே…

இருபது நாள் ராமர் லெட்சுமன் ரெண்டு பேரும் Shitf போட்டு மாத்தி மாத்தி Duty பாத்து… பாத்தால் கூட பாதி கூட்டத்தைத்தான் பாக்க முடியுமாம்… முழுப் படை பத்தி சொல்ல உவமையே இல்லையேன்னு கவலையில் இருக்காராம் கம்பன்..

அடங்க் கொப்புரானே… கம்பண்டா…

அத்தியொப்பு எனின் அன்னவை உணர்ந்தவர் உளரால் வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறுயாதோ பத்து இரட்டி நன் பகல் இரவு ஒருவலர் பார்ப்போர் எத் திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ

இந்த ரேஞ்ச்சுலே போனா நானும் கம்பராமாயணம் பாதி முடிக்கிறதே பெரிய விஷயம்ன்னு நெனைக்கிறேன்.

நீதி: முடிந்தவரை எவரையாவது பாராட்டுங்கள்… முடியலையா..இந்த மாதிரி நாம எழுதுவதையாவது படிங்க..

தொடருவேன் !!!

தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ள வா!!!


நான்கு குடித்தனங்கள் சேர்ந்த வீட்டில் தான் என்னோட சின்ன வயது ஆரம்பித்தது. பெரிசுகள் எல்லாம் கதர் கட்டும் காங்கிரசுக்கு ஆதரவாய் இருக்கு இளசுகள் எல்லாம் சிவாஜி ரசிகர்கள் ஆக்கப் பட்டோம். (திராவிட கட்சி ஆதரவாளர்களின் பசங்க எல்லாம் எம் ஜி ஆர் ரசிகர்கள் ஆனார்கள்)

இந்த சூழ்லில் வளர்ந்த நான், உலகமே பாத்து வியந்த உலகம் சுற்றும் வாலிபனைக் கூட பாக்க முடியாம போச்சி. சிறந்த நடிகர் விருது எம் ஜி ஆருக்கு வந்த போது கூட… அட… போங்கப்பா… பாபு படத்தில் சிவாஜிக்கு ஈடு வருமா என்று பேச வைத்தது விடலைப் பருவம்.

கல்லூரியில் காலடி வைத்த பிறகு தான் எம் ஜி ஆர் என்ற சக்தி பற்றிய தெளிவு பிறந்தது. அதை செய்தவர் கல்லூரி தோழர் பழனிச்சாமி. (அவரை நாம் எல்லோரும் எம் ஜி ஆர் பழனிச்சாமி என்று தான் அழைப்போம்). அவர் பிறந்த ஊர் விருது நகருக்கு அருகே உள்ள விளாம்பட்டி. எம் ஜி ஆர் உடல் நலம் இல்லாத போது அந்த ஊர்க்காரர் ஒருவர் தன்னோட கையை வெட்டி ஆண்டவனுக்கு காணிக்கை செய்தாராம். (சிவனுக்கு கண்கொடுத்த பரம்பரையாக இருக்குமோ??)

எம் ஜி ஆர் மேல் ஈடுபாடு வந்ததோ இல்லையோ, அருமையான பாடல்கள் மீது காதல் பிறந்தது. குமரிக்கோட்டத்தில் எங்கே அவள்; நான் ஏன் பிறந்தேனில் நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்; இப்படித் தொடரும் லிஸ்டில் வரும் இன்னொரு பாடல் தான் “தொடுக் கொள்ளவா??..” மட்டுக்கார வேலன் என்று நினைக்கிறேன். TMS சொல்லும் பாவனையுடன் இன்றும் இனிக்கும் பாடல் அது. தொட்டுக் கொள்ளவா?? என்று இந்த பாவத்துடன் கேட்டால் யாருக்குமே மறுக்கும் தைரியம் வராது.

இந்த வித்தையினை இவ்வளவு வருஷம் கழித்து ஒரு ஊறுகாய்க்கென பயன்படுத்திக் கொண்ட விளம்பரம் பாத்தேன்.. அசந்து போயிட்டேன். அதில் வரும் வரிகள் தொட்டுக்கொள்ளவா?? தொட்டுக்கொள்ளவா??
தொட்டுக்கொள்ளவா?? மட்டும் தான். இறுதியில் ஊறுகாய்… வாய்… தொட்டுக் கொள்ளத்தன் தோணும்.

அதே மாதிரி தொட்டுத் தொடரும் ஒரு பட்டுப் பாரம்பரியம் என்றும் ஒரு தூள் கிளப்பும் விளம்பரம் பாத்திருப்பீங்க… தொடரும் பாரம்பரியம் என்று சொல்ல் இருந்தா மட்டும் போதாதா??? அது எதுக்கு “தொட்டு” என்ற செட்டப்பு?? சாதாரண சந்திப்புக்கும், கைகுலுக்களில் தொடங்கி அதே மாதிரி கை குலுக்கி முடியும் சந்திப்புக்கும் இருக்கும் வித்தியாசம் தான் அது.

இதே மாதிரி தொடர்ந்து வேறு என்ன வெல்லாம் இருக்கு??- இப்படி யோசிக்கலாமே?? ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன ஆகுமோ என்று ஏங்க வைத்த அந்தக் காலத்து சரித்திரத் தொடரின் “தொடரும்” மிகப் பிரபலம். சிறுகதை கூட ஹைக்கூ வடிவில் இருந்தால் தான் படிப்பார்கள் என்ற நிலை இன்று…(ஆமா..எந்த நம்பிக்கையில் நான் நீட்டி முழக்கி எழுதுகிறேன்??).

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இன்னும் சிந்துபாத் லைலா என்ன ஆனாள் என்பதை அறியத் தூண்டும் கன்னித்தீவு தொடரும்… தொடர்ந்து போவதில் சிக்கலும் உண்டு.. கழுதைக்குப் பின்னாலும் ஆபீசருக்கு முன்னாலும் அதிகம் போகக்கூடாது என்பார்கள்… எப்பொ உதைக்குமோ..?? கடிக்குமோ என்ற கவலை தான் காரணம்..

யாரோ பின்னாடி தொடர்ந்து வர்ரது மாதிரி இருக்கே…!!! திருப்பிப் பாத்தா…அட…நம்ம கம்பர்.. Happy Deepawali Mr Kambar அவர்களே… Thanks & Same to U… ஆமா இன்னெக்கி என்ன டாபிக் அலசல்?? ஒண்ணுமில்லை… ஆபீசர் எப்படி இருக்கனும்கிற டாபிக்… ம்…உங்க காலத்திலெ அதுக்கு அவசியம் இருந்திருக்காது..நீங்க போங்க..

அப்படி சொல்லிட முடியாது கிமூ… நீ எப்படி சுத்தி வளைச்சி என்னோட ரமாயணம் கொன்டு வர்ரயோ..அதே பாணியில் நானும் அதெப் பத்தி எழுதி வச்சிருக்கேன்.. போய் நல்லா தேடிப் பாரு கிடைக்கும்…

தொடர்ந்து தேட …அடெ… கெடெச்சது… ஒரு ராஜா எப்படி இருக்கனும்னு கம்பர் ராமர் வாயிலா சொல்றார். யார் கேக்கிறா?? சுக்ரீவன் தான்.. நாம கேட்டாலும் அது நமக்கு suit ஆகுற மாதிரி இருக்கு.. அப்பொ இன்னும் நல்லா பாக்கலாமா??

அறிவுள்ள அமைச்சனை பக்கத்திலெ வச்சிக்க
ஒழுக்கம் உள்ளவனை படைத் தலைவனா ஆக்கு
குற்றமில்லாத வேலையை மட்டும் செய்யி
தப்பான காரியம் பன்னாதே..
அமைச்சர்களை ரொம்ப தூரமும் வச்சிக்காதெ..ரொம்ப கொஞ்ச்சிக் குலாவவும் வேணாம்.
நீ எல்லார்க்கும் சாமீ மாதிரி இருக்கனும் கன்னு…
என்று செமெ அட்வைஸ் செய்றார்…

இப்பொ இருக்கும் ஆட்சியாளர்க்கும் ஆபீசர்களுக்கும் கூட இந்த அட்வைஸ் பொருந்தும் தானே..???

வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரொடும்
தூய்மை சால்புணர்ச்சி பேணித் துகளறு தொழிலை ஆகி
சேய்மையோடு அணிமை இன்றித் தேவரின் தெரிய நிற்றி.

நீதி: ஃபிரியா கெடைக்கும் எல்லாமே தரம் இல்லாதது என்று விலக்கி விட முடியாது.. இந்த ஃபிரியா கெடைச்ச அட்வைஸ் கொஞ்சம் யோசிச்சி பாருங்க.

தேடல் தொடரும்…

கருப்பா பயங்கரமா… பயங்கர கருப்பு


அந்தக் காலத்தில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்ற விளம்பரங்களுடன் சில படங்கள் வந்தன. பழிக்குப் பழி… ரத்ததுக்கு ரத்தம் என்பது அதில் கண்டிக்பாக வரும். அதோடு வில்லன்கள் குழுவோடு தவறாமல் ஒரு கவர்ச்சி நடனம் இருக்கும்.

ஆனால் சினிமா வளர வளர… படம் முழுக்க சண்டைகளும், நெகட்டிவ் ஹீரோ என்ற பெயரும், வில்லன் கதாநாயகனாக மாறி கதாநாயகியே கவர்ச்சி நடனம் ஆடும் பரினாம வளர்ச்சி அடைந்து விட்டது.

சினிமா இப்படி என்றால், சின்னத்திரை நிலவரம் இதை விட மோசம். இதில் கதாநாயகன் கிடையவே கிடையாது. சுமாரான ஒரு ஃபிகர் தான் கதாநாயகி. உள்ளதிலேயே சூபர் ஃபிகர் தான் வில்லி ரோல் செய்யும்… (வில்லி தானே சீரியல் முழுக்க வரனும்).. வெட்டியிருவேன், குத்திடுவேன், கொன்னுடு, போட்டுத்தள்ளு, ஜெயில், போலீஸ் எல்லாமே சர்வ சாதாரனமா எல்லா சீரியல்களிலும் வரும்.

ஆனா இந்த உலகமே, பழிக்குப் பழிக்கு எதிரா நிக்கிரேன்னு நின்னுட்டு பழிக்குப் பழி வாங்கவும் துடிச்சிட்டு இருக்கு என்பது தான்  கசப்பான உண்மை.

சரி.. பழிக்குப் பழி வேணாம்.. என்ன செய்ய??

ஏசு பெருமான் சொல்றார்… ஒரு கண்ணத்தில் அடித்தால்…காட்டு அடுத்த கண்ணத்தை… (ஏகே 47 வச்சிம்…. அணுகுண்டு போடும் இந்த காலத்தில் திரும்ப ஆளே இருக்க மாட்டானே??)… நம்மாளு சொல்றான்… அவரு சாமி…

சரி..காந்தி…??  அவரு தான் மகாத்மா ஆச்சே…?? நாம எல்லாம் சாதா மனுஷங்கள் ஆச்சே??

சரி … வேற வழி இல்லெ… கம்ப ராமாயாணம் போக வேண்டியது தான்…

இல்லையே..அதுவும் சிரமம் தான். நம்ம ராமரும் கூட அவதார புருஷன் தானே??

கடைசியா நம்ம தாத்தா சொன்னா கேப்பீகளா??? (பாட்டி சொல்லை தட்டாதே தெரியும்.. அது என்ன?? தாத்தா மேட்டர்???)

அந்த தாத்தா யாரு தெரியுமா?? நாம கொரங்கிலிருந்து தானே வந்தோம்.. அப்பொ கொரங்கும் நம்ம தாத்தா தானே..??

வாலி தாத்தா சொல்லும் சங்கதி தீபாவளி நாள் அதுவுமா காது கொடுத்து கேளுங்க..

நான் ரெபர் செய்றது…தாடி வச்ச கவிஞர் இல்லெ… நெசமாவே வால் வச்ச வாலி சொன்ன சேதி தான் நான் சொல்ல வந்த தகவல்.

பெரும்பாலும் திருவாசகத்தில் எல்லா இடங்களிலும் நாயினும் கீழாக, கேவலமாக..என்று அடிக்கடி வரும்.

ராமாயணத்தில் வாலி சொல்றார்: ஓவியத்தில் எழுத்தப்பட்ட வடிவம் போல் வடிவம் கொண்ட ராமனே!!! (தப்பா வரைஞ்சதா வாலி கண்ணுக்கு தெரியுதோ??).  நாய்யான நான் ஒண்ணு கேக்கேன். நான் குடிச்சா பயங்கரமா இருப்பேன்.. ஆனா இந்த சுக்ரீவன் கீரானா அவன் பயங்கரமா குடிப்பான் (கருப்பா பயங்கரமா வடிவேல் காமெடி ஞாபகம் வருதா??). அப்படி ஏதாவது அவன் தப்பு செஞ்சிட்டா என்னை கெடாசின மாதிரி அவனெக் கெடாசிட வேண்டாம்.. ப்ளீஸ்..

பகைவன் சுக்ரீவன். சண்டை போட்டு தோற்றது (முறையா இல்லையா என்ற வாதம் இங்கு வேண்டாம்… ஏகமா அலசி இருப்பாய்ங்க..)

வள்ளுவர் ரெண்டு வரியில் சொன்ன நன்னயம் செய்யும் செயல் பற்றி கம்பர் சொன்ன அந்த நாலு வரிப் பாடல் இதோ:

ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாநி புந்தி வேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

நரகாசுரன் கேட்ட வரம் தந்து தீபாவளி கொண்டாட வைத்ததும் இன்னா செய்தாரை பொறுத்து நல்லது செய்த மாதிரி தெரியலை???

யோசிங்க…. நல்லா யோசிங்க…

அனைவர்க்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…


இப்படி சந்தோஷமா குதிப்பவர்கள் எத்தனையோ பேர். (நானும் இந்த கும்பலில் ஒருவன் தான்). அனால் வீடு இருக்கும் லட்சனத்தைப் பாத்தா… பொண்டாட்டி இல்லாத வீடு வீடே இல்லை என்று தான் சொல்லத்தோணும்.

வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு ஆளு வேணாமா???… வழக்கமான இந்த கேள்விக்கு நானும் இதுக்கெல்லாமா ஆளு வைப்பாக??? நாம விளக்கு ஏத்தினா ஆகாதா என்று… நம்மால் தீ கொளுத்தப் படுகிறது… குடும்ப விளக்கால் அது ஏற்றப்படுது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் குடுத்த வரம் என்கிறார்கள்…. மனைவிமார்களின் மத்தியில் இப்படி சொல்லிக் கொள்வார்களோ…!!! எப்படி??

புருஷன் அமைவதெல்லாம் பிசாசு போட்ட பிச்சை என்று…

ஒரு ராஜஸ்தானியருடன் கப்பல் பயணம் சமீபத்தில். ஏன் குடும்பம் அங்கேயே வைத்து விட்டு நீங்க மட்டும் தனியா கஷ்டப்படறீங்க என்று கேட்டேன்.. (நான் மட்டும் கஷ்டப்பட…அவர் ஜாலியா எப்படி திரியலாம்?? – யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்… இது தானே நம்ம பாலிசி)

ஆனா சூப்பரா ஒரு பதில் வந்தது.. அவர்களும் இங்கு வந்து விட்டால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை யாரு கவனிப்பாக??

அட… இப்படி ஒரு சேதி இருக்கா??? ராஜஸ்தானியர்களின் பிற்ப்பின் நோக்கமே விருந்தாளிகளை உபசரிப்பது தான் என்கிறார். நகரங்கள் நரகமாய் ஆன பின்னரும் கூட இன்னும் புறநகரின் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் அதைக் காணலாம் என்றார்.

நானும் என் பங்குக்கு விருந்தோம்பல் பத்தி வள்ளுவர் சொன்னதையும், ராஜாவே ஒரு புலவருக்கு சாமரம் வீசிய கதையும் சொல்லி தமிழருக்கு வக்காலத்து வாங்கி வைத்தேன்.

வாடகைக்கு வீடு கிடைப்பதிலிருந்து, கல்யாண வீட்டில் ஆசி வழங்கும் வைபவம் வரை.. கல்யாணம் ஆன ஆட்களுக்கு நல்ல மரியாதை தான்.

இந்த ஊரு இன்னுமா கல்யாணம் ஆன நம்மளை மாதிரி ஆட்களை நல்லவங்கன்னு நம்பிகிட்டு இருக்கு?? அய்யோ…அய்யோ…

அப்புடியே யொசிச்ச படி காலங்காத்தாலே வாக்கிங் போனா…. என்ன வாங்கிங் போறீயான்னு ஒரு கேள்வி பின்னாடி இருந்து… நான் கடுப்பா திரும்பிப் பாத்தா… திருவாளர் கம்பர்..

என்ன ரொம்ப ஜாலியா இருக்கிற மாதிரி தெரியுது??? வீட்டுக் காரி ஊரிலெ இல்லேயா???

அடப் பாவி … நம்ம வீட்டிலெ ஆளு இல்லேங்கிற விஷயம் கம்பர் வரைக்கும் தெரிஞ்சு போச்சே…!!! அய்யா.. கம்பரே.. எப்புடி இதெல்லாம்…??

கம்பர்: ஆமா.. தெருவிலெ வாக்கிங்க் போறப்பொ… தனியா பேசிட்டு போவது தெரிஞ்ச்சது.. காதுலெ புளு டூத் கைய்லெ செல் ரெண்டுமே இல்லை… கூட்டி கழிச்சி பாத்தா.. மறை கழண்ட கேசு… வீட்டிலெ ஆளு இல்லென்னு அப்படியே தெரியுது… இதுக்கெல்லாம் என்ன பெரிய யுனிவர்சிட்டிக்கா போய் படிக்கனும்???

கம்பரே… உங்க கால்லெ விழறேன்.. ஆளை உடுங்க… இல்லெ…. தெரியாமத் தான் கேக்கிறேன்… இந்த மாதிரி வில்லங்கமா கம்ப ராமாயண்த்தில் எங்காவது இருக்கா??

கம்பர்: ஏன் இல்லை… ஓடிப்போயி… வாலி வதம் ஏரியாவை தம்மடிக்காமெ… பதம்மா படி.. வெவரம் புரியும்…

வீட்டுக்கு ஒரே ஒட்டமா ஓடி தேடிப் பிடிச்சி பாத்தா..அட… இதே மேட்டர் தான்.

வாலியில் மார்பில் அம்பு… ஆனால் வாயில் ராமன் மீது அம்பு..
அப்போது வரும் வார்த்தைகள் தான் நான் செய்யும் வம்பு (கொஞ்சம் குறும்பும்)

சாதாரணமான மனைவியை வாச்சவங்களே கொஞ்ச நாள் பிரிவிலெ மரை கலண்ட கேஸா திரிவாக… (சிலர் மனைவி ஊருக்கு அனுபிட்டு கவிதையும் கட்டுரை எல்லாம் எழுதி Facebook ல் நல்ல பேரும் வாங்குறாய்ங்க..அது தனிக் கதை).. ஆனா ராமனுக்கு வாய்த்தவள்…அன்னம்… அமுதம் உயிர் போன்றவள்.. அப்பேற்பட்ட பார்ட்டி மிஸ் ஆனா மனுஷன் என்னத்துக்கு ஆவான்.??

இதெ..இதெத் தான் வாலி வாயில் வருது..

அரச தர்மம் காப்பாத்த வேன்டிய நீ இப்படி அம்பு எய்தது முறையா…

வீட்டிலெ ஆளு இல்லாத காரணம் தான் இந்த தவறான செயலுக்கு காரணமோ??? கேக்கிறார்… மொதல்ல ஒரு சின்ன பஞ்ச்சும் வைக்கிறார்.. ராமனே… ஓவியத்தில் எழுத முடியாத உருவ அழகை உடையவனே…அப்புறம் தான் கேள்வி வருது..

கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை.

நீதி: எப்பவும் கவனமா இருங்க…பொண்டாட்டி இல்லாத நேரத்தில் கூடுதல் கவனம் தேவை.

வாழைப்பழத்தில் ஊசி


வாழைப்பழம் என்றதுமே அந்த ஒரு ரூபாய்க்கு பழம் வாங்கி வரும் அமர்க்களமான செந்தில் கவுண்டமனி காமெடி தான் ஞாபகம் வரும். அதே பாணியில் எத்தனை காமெடிகள் வந்தாலும் அந்த காமெடி சுவையே தனி தான்.

ஒத்தெ வாழைப்பழம் தனியா இருக்க முடியாமெ தூக்கிலெ தொங்குற மாதிரி படமும் ஜோக்கும் முகநூலில் அடிக்கடி இப்பொ தலை காட்டுது.

அந்தமானில் விளையும் குறைந்த அளவிலான பழங்களில், அதிகமாய் விளைவது இந்த வாழை தான். விதம் விதமாய் பெயர்களில் கட்டா சம்பா, மிட்டா சம்பா, பச்சை, சிவப்பு என்று கலர்களிலும் கிடைக்கிறது.
ஆனால் வாழைப்பழத்தில் ஊசி மட்டும் சில பழங்களில் குத்த முடியாது. விதையும் இருக்கும். விதையுள்ள வாழைப்பழங்கள் அந்தமான் தவிர எங்கும் கிடைக்கும் தகவல் எனக்குத் தெரியலை.

அது என்ன வாழைப்பழத்தில் ஊசி ஏத்தும் கதை.

[அது வேற என்ன…?? அங்கே சுத்தி இங்கே சுத்தி நைஸா கம்ப ராமாயணம் இழுக்கும் கலையின் இன்னொரு பேரு தான் அது]

ஒரு விஷயத்தை ஒரு பார்ட்டி அழகாச் சொல்லி அடுத்த பார்ட்டியை சம்பதிக்க வைக்கும் கலையும் தான் அது.
எனக்குத் தெரிந்து ஒருவர் ஒரு வாரம் முன்பு கட்டிப்புரண்டு அடிபிடி சண்டையில் இருப்பார் ஒருவருடன். அதே நபரோடு தோழில் கை போட்டு வருவார் ஒரு வாரத்தில். அவர் வாழைப்பழ ஊசியில் டாக்டரேட் வாங்கியிருப்பாரோ??!!!

ஆனாலும் அப்படி யாராவது பேசினாலும் கேக்காதீங்கன்னு சொல்றதுக்கும் பழமொழி இருக்கே.. கேக்கிறவன்………பயலா இருந்தா… கேப்பையில நெய் வடியுது என்பானாம்.

அது சரி… எதுக்கு சுத்தி வளைப்பானேன்? நேரடியா கேக்கலமே?? இந்த வாழைப் பழத்தில் ஊசி பத்தி கம்பராமயணத்தில் வருதா???

வருதே…

ஆனா வழக்கம் போல கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஒரு அசம்பாவிதமான இடத்தில் அதைச் சொல்றார் கம்பர்.

சாதாரண வாழைப்பழத்தில் ஊசி எப்படி ஸ்மூத்தா போகும்?? ஆனா சுவையான பழத்தில்??? அதாவது கனிந்த பழம். இப்படி சொன்ன அந்த மிருதுவான பழம் எதுன்னு பாத்தா… அங்கே தான் கம்பர் நிக்கிறார்.

ஒரு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் பார்ட்டி. அவரோட மார்பு அவ்வளவு ஸ்டார்ங்கா இருக்காம்… எவ்வளவு?? பூமி காற்று நெருப்பு நீர் அதோட குணம் சேர்ந்ததாம்.

அதோட உட்டாரா மனுஷன்.. பூமியை ஆதரவா புடிச்ச ஆளு காற்று; காத்தும் காத்தோட ஆளும் சேந்து நெருப்பை உண்டாக்கினாகளாம்…

ம்…அப்புறம்??? அந்த நெருப்பு நீரை உருவாக்குமாம்??? தலையை சுத்துதா???
சரி… பழம் இப்படின்னா??? ஊசி…???

வாலியின் மார்பில் பாய்ஞ்ச அம்பைத்தான் இப்படி சொல்றார்..

அடி ஆத்தி… அப்படியே பாட்டு பாக்கலாமா??

கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது எனச் செப்ப
நீரும் நீர் தரும் நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப்பகழி

எப்புடி நாம கம்பரையும் உள்ளே கொண்டு வரும் விதம்.

ஆமா… இதுலெ ஊசி எது ?? பழம் எது??

நூத்துக்கு நூறு


இந்தப் பெயரில் ஒரு பழைய படமும், அந்தப் படத்தில் நூத்துக்கு நூறு என்ற அட்டகாசமான TMS பாட்டும் இருக்கு தெரியுமான்னு நான் கேக்கிறேன்.

உங்கள் பதில், தெரியும் என்றால் உங்கள் வயது 45 +

அதே மாதிரி இன்னொரு டெஸ்ட்:

அந்தக் காலத்தில் Maths ல் மட்டும் தான் நூத்துக்கு நூறு வாங்குவாங்க.. என்று அடிக்கடி புலம்பும் நபரா நீங்கள்?? அப்பொ உங்கள் வயதும் 45 + தான்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாளில் தினத் தந்தியில் வந்த ஒரு முழுப்பக்க விளம்பரம் பாத்து என் நண்பரின் துணைவியார் திருமதி நாச்சியார் தன் குழ்ந்தையை அங்கே சேர்க்க முயற்சிக்க… என் பொண்ணும் திருச்செங்கோடு போக வழி வகுத்து விட்டது.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் வந்தது பொண்ணு கிட்டெ இருந்து. நம்ம ஸ்கூல டைரக்டர் உங்க போன் நம்பர் வாங்கினார். யாராவது அந்தமானுக்கு வருவார்கள் போல் தெரியுது என்று.

நான்கு நாட்கள் கழித்து ஒரு போன் வந்தது. அழகு தமிழில் பெயர் அறிமுகம் செய்து கொண்டு பேசியது.. திருசெங்கோடிலிருந்து வந்ததாய்.

நானும் பந்தாவாய் English ல் பேச..(தமிழ் காரர் என்று தெரிந்த பிறகு கூட அவர் கிட்டெ English பேசுவதில் நம்ம ஆட்களுக்கு அலாதி சுகம் தான். நான் மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன??)

வந்த பதில் : எனக்கு இங்கிலீஸ் எல்லாம் வராதுங்க..நான் அவ்வளவா படிக்காதவனுங்க…

அந்தமான் பாத்துட்டு நாளை கிளம்பும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த நாள் ஒரு சின்ன அந்தமான் ஆதிவாசியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசோடு ஏர்போர்ட்டில் அவரை சந்திக்க கிளம்பினேன்.

கதர் வெட்டியும் கதர் சட்டையும் எளிமையின் மொத்த உருவவுமாய் நின்றார். பரிசினை கறாராய் மறுத்தார். பரிசு வாங்குவது இல்லை என்ற கொள்கை முடிவில் இருப்பதாயும் சொன்னார். அன்போடு ஒரு காபி சாப்பிடலாமே என்றார்.

தான் படிக்கலை என்ற கவலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை (மலேசியா உள்பட) படிக்க ஏதுவாய் கல்வி நிறுவனம் நடத்திவரும் வித்ய விகாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் தான் அந்தமான் வந்தவர்.

காமராசரும் நேருவும் திருச்செங்கோடுக்கு வந்த போது எடுத்த போட்டோவினை தந்தார். கர்மவீரரின் பாதையில் (தான் படிக்காவிட்டாலும் சமூகத்தை படிக்க வைக்க) கல்விக் பணி செய்வது சொல்லாமல் தெரிந்தது.

மனசு அவருக்கும் அவர் தம் குழுமத்துக்கும் 100 க்கு 100 போட்டது.

நல்லவங்க உலகத்திலெ கொறெஞ்ச்சிட்டே வாராங்களேன்னு பலர் சொல்வாய்ங்க..

என் கருத்து என்ன அப்படீன்னா…??? நல்லவர்கள் பாண்டவர் மாதிரி குறைவு. கெட்டவர்கள் அதிகமா இருப்பாக… கௌரவா மாதிரி.. 100 க்கணக்கா..

கம்ப ராமாயணத்திலெயும் இதே மாதிரி ஒரு பிரச்சினை வருது.

அடுத்தவர் மனைவியை கவர்வது ஒரு செயல்.

அதை மனிதர்கள் செய்தால் பாவம்.

அரக்கர்கள் செய்தால் தண்டிக்கலாம்.

விலங்குகள் செய்தால்??…அது எப்படி தவறாகும்??

அது போக… சுக்கிரீவனை விட வாலி பலசாலி. கூட்டமும் அதிகமா இருக்கு. என்ன.. விலங்கோட இயல்பா இருந்தான்..அது ஒரு தப்பா… ??

இது லெட்சுமணன் போட்ட சின்ன பிளான்.

தலைவர் ராமர் ஒத்துக்குவாரா என்ன?? (நல்லதா இருந்தா கண்டிப்பா ஒத்துக்குவாரு)

ராமன் சொல்லும் வார்த்தைகளாக கம்பன் சொவது:

நல்லவங்க கொஞ்ச ஆளு தாம்ப்பா.. அப்படி இல்லாத ஆளுங்க எக்கச்சக்கம். நாம் சுக்ரீவனுக்கு தோஸ்த் ஆயிட்டோம். அவருக்கு நல்லதா யோசிக்கலாமே என்று சொல்ல வாலி வதம் தொடர்கிறது.

அட.. அங்கேயும் கம்பருக்கு 100 க்கு 100 குடுத்துட்டு அப்படியே பாட்டு பாத்துட்டு மத்த வேலையைப் பாப்போம்.. ராமர் வாலியை பாத்துக்கட்டும்… நாம நைஸா பாட்டை பாப்போமே…

வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்.

அது சரி இவ்வளவு சொல்ற எனக்கு எவ்வளவு மார்க் தருவீங்க???

தர்பூசனித் தத்துவம்


காட்சி 1: இடம் – அரக்கோணம்.

ஒவ்வொரு வருஷமும் சம்மர் லீவுக்கு ஊர் போகும் போது அரக்கோணம் விசிட் கண்டிப்பாக இருக்கும். சகலையின் வீடு இருப்பதால் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும்.

அவர் வீட்டை விட்டு கிளம்பி, வீடு திரும்பும் போது அவர் கையில் தவறாது இடம் பெறும் ஒரு பொருள் இந்த தர்பூசனிப் பழம்.

குழந்தைகளுக்கும் (இந்தப் பெரிய குழந்தைக்குமே) அந்த தர்பூசனி ரொம்பப் பிடிக்கும்.
நாம் எத்தனை நாள் அரக்கோணம் இருந்தோம் என்பதை அந்த பழம் கணக்கு வைத்து கணக்கிடலாம்.

காட்சி 2: இடம் – அந்தமான்

இப்போது அந்தமானில் தர்பூசனியும் கிடைக்கிறது…

(ஆமா… காக்கா..புறா எல்லாம் கிடைக்கிறப்போ… தர்பூசனி கிடைக்காதா??? எழுத வந்துட்டான்..)

மீண்டும் அதே ஆசையில் கருப்பு தோல் உள்ள பழத்தை 100 ரூபாய் கொடுத்து வாங்கி (விலை பாத்து பயந்து விட வேண்டாம்… இங்கே எல்லாம் இப்படித்தான்… வீட்டுக்காரியிடம் 50 ரூபாய் என்று சொல்லி) சாப்பிட்டோம்.

குழந்தைகளிடம் சம்மரில் தர்பூசனி சாப்பிடுகிறோம்… உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது என்று கேட்டேன்…(எனக்கு மச்சினி ஞாபகம் வந்திருக்கும் என்று உங்களுக்கு
தெரிந்திருக்கும்).

பத்தாவது படிக்கும் என் மகள் சொன்ன பதில்:
இந்த தர்பூசனி ஒரு Life மாதிரி.
அதில் இனிப்பானவை Good things.
கொட்டை Bad things.
நாம் அந்த bad things ஐ தூக்கிப் போட்டு Good things ஆன இனிப்பான வாழ்க்கையினை அனுபவிக்கனும்…

என்ன ஆச்சி? 10 வது படிக்கிற வாண்டு தத்துவம் பேசுதேன்னு பாத்தீங்களா?? அதுக்கும் காரணம் இருக்கு… அதுக்கு ரெண்டு காட்சி ஃபிளாஷ்பேக் போகனும்.

என் மகளோடு படிக்கும் தோஸ்த்களை நான் வானரப்படை என்று தான் சொல்வேன். அவ்வளவு சேட்டை.. அதில் எதிலும் நில்லாமல் எப்போதும் சிரித்த முகத்தோடு ஒரு கங்கா.. நான் கங்காவுக்கு மட்டும் வைத்த பெயர் புன்னகை அரசி.

அப்படியே கொஞ்சம் பள்ளி ஆண்டுவிழா கலையரங்கத்தையும் ரவுண்ட் அடிக்கலாம்.. (காசா பணமா??)

500 பேருக்கு மேல் வாத்திய கோஷ்டி வச்சி அந்நியன் ரேஞ்சுக்கு முடி வச்சி ரகுமான் பாடிய “தமிழா.. தமிழா.. நாளை நம் நாளே..” என்ற ரோஜாவின் பாட்டை நான்கைந்து பேர்களே வைத்து ஒரு பொடியன் அநாவசியமாய் ஒரு கையில்
கீபோர்ட் வாசித்து கலக்கிக் கொண்டிருக்கிறான்.

பக்கத்தில் உக்காந்த என் பையன் சொன்னான்.. டாடி அந்த பையா (ஹிந்தி பையா) யார் தெரியுமா? அக்காவோட படிக்கிற கங்காவின் தம்பி தான்.

அடுத்த நாள் மதியம்:

நான் வீட்டில் மதிய சாப்பாட்டுக்கு நுழைய… வீடு ஒரே நிசப்தம்.. அப்படியா… உண்மைதானான்னு விசாரிப்புகள்.

நாளை நம் நாளே…. என்று பாடிய அந்தப் பையனுக்கு நாளை இனி இல்லை. அடுத்த நாள் சென்னை அப்பல்லோ செல்ல தயாராய் இருந்த அந்த இளம் கலைஞனை எமன்
முந்திக் கொண்டான். (மூளையில் ஏதோ சிக்கல் என்று புரியாத பெயரில் ஒரு வியாதியாம்)

மரணங்கள் மனித மனங்களையும் செப்பனிட பயன்படும்.. அது பத்தாவது படிக்கும் என் மகளுக்கும் பொருந்தும்.

ABC 0F COMMUNICATION


தமிழ் இலக்கியங்களில் மேனேஜ்மெண்ட் கருத்துக்கள் இருப்பதாய் அடிக்கடி இணையங்களில் தகவல்கள் வரும். இதனை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது சமீபத்தில்
பரமக்குடி சென்ற போது கிடைத்த தீபாவளி மலர்கள் மற்றும் இதர நூல்கள் வாயிலாக.

(ஆனந்தவிகடன், கல்கி, சக்திவிகடன், தினமணி செம்மொழி மலர் இப்படி). தீபாவளி மலர்களை பொங்கல் கழித்தும் பொறுப்பாய் வைத்து எனக்கு அளித்தவர் எனது
மாமா தான். (என்னை முதல் வகுப்பு முதல் பி இ வரை படிக்க வைத்ததோடு நில்லாமல் இப்படியும் இன்றும் என்னை படிக்க வைக்கிறார்).

புத்தகங்களின் மொத்த எடை ஏழு எட்டு கிலோவை நெருங்க இல்லாள் முனக ஆரம்பித்து விட்டார். எதை எதையோ தொலைத்து விட்டு வரும் இந்த மனிதர் இந்த புத்தக மூட்டையை தொலைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வேண்டுதல் வேறு. வேறு ஒன்றுமில்லை அந்த எடைக்கு வெங்காயம் தக்காளி என்று விமானத்தில் ஏற்றி வரலாமே என்ற நல்ல பொருளாதார சிந்தனை தான்.

திணமனி செம்மொழி மலரில் படித்த சேதியினை உங்கள் முன் வைக்கிறேன். கம்பராமாயணத்தில் வரும் மேனேஜ்மென்ட் கருத்துகள் பற்றி ஒரு சின்ன சாம்பிள். டேல் கார்னகி என்ற மேலாண்மை குரு சொன்ன விஷயத்தை கம்பர் பயன்படுத்துகிறாராம்.

Always communicate Authenticity , in Brevity, with Clarity என்பது தான் காரனகியின் சூத்திரம்.

கம்பராமாயணம் போலாமா?

இடம்: இலங்கை சென்று அனுமன் திரும்பிய நேரம்

சூழல்: வருத்தமாய் இருக்கும் ராமனுக்கு சேதி சொல்ல வேண்டிய தருணம்.

ABC Technique அனுமன் வழியாய் கம்பன் வழங்குகிறார்.

அனுமன் சொன்னதாய் கம்பன் சொல்வது:

“கண்டனென், கற்பினுக்கு அணியை, கண்களால்”

“கண்டனென்” – சீதை உயிரோடு இருக்கிறாளா? என்ற சந்தேகத்திற்கு விடையாக Authenticity யோடு சொன்ன முதல் வார்த்தை அது.

கற்போடு இருக்க வேண்டும் என்ற ராமனின் ஆசைக்கு பதிலாய் அடுத்த வார்த்தைகள்
“கற்பினுக்கு அணியை” Brevity ரத்தினச் சுருக்கமாய்.

நச்சென்று கண்களால் பார்த்த Oral witness என்று Clarity யில் கலக்குகிறார் கம்பர். இது
எப்படி இருக்கு?.

என்னக்காவது இந்த மேலாண்மை தத்துவம் மாதிரி பொன்டாட்டியிடம் பேசி பேச்சு வாங்காமல் தப்பிக்க முயற்சி செய்த்துண்டா? இனி முயற்சி செய்யிங்க..

[ தகவல் உதவி : கம்பன் அடிசூடி பழ பழனியப்பன். நன்றிகளுடன்]