கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு


வியப்பூட்டும் விஐபி – 44

கடலும் கடல்சார்ந்த நிலமும் எனச் சொன்னவுடன், ’நெய்தல்’ க்கு அடுத்து நினைவுக்கு வரும் பெயர் கடல் சார் ஆய்வாளர் ஒரிசா பாலு. அந்த அளவுக்கு கடலும், கடலை ஒட்டிய மக்களின் வாழ்வும், கடல் வாழ் உயிரினங்கள் பற்றியும் தகவல் பொக்கிஷங்களை அவர் வைத்துள்ளார்.

நாமும் கடல் பக்கத்திலேயே நினைவுதெரிந்த நாளாய் (வருடங்களாய்) இருப்பதால், நட்பானோம். சென்னையில் அவர் வீட்டில் போய் சந்தித்தோம்.

அந்தமான் என்றதும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி நீந்தி வந்து முட்டையிட்டு வாழும், கடல் ஆமைகளைப் பற்றி அதிகம் தகவல் தந்தார். கடலோடிகள் என அழைக்கப்படும் அனைவரும், கடல் சார்ந்து வாழ்பவர்கள் தானாம்.

முன்பெல்லாம் ஆமை போகும் பாதையினைத் தொடர்ந்துதான், கடல் பயணங்கள் எளிதாய் அமைந்தனவாம். ஏறக்குறைய இப்போதைய நவீன கூகுள் டைரக்சன் மாதிரி.

பர்மா தேக்குகள் உள்ள வீடுகள், தென் மாவட்டங்களில் இன்றும் பிரபல்யம். அப்படிப்பட்ட தேக்கு மரங்களை பர்மாவில் வெட்டி, பெயரினை அதில் செதுக்கி ஆமை போகும் பாதையில் விடுவார்களாம். அது மிதந்து மிதந்து தனுஷ்கோடி வரை வந்து விடுமாம். பின்னர் அதனை எடுத்து காரைக்குடி வரை கொண்டு சென்று பயன் படுத்துவராம்.

அந்தமானுக்கும் பாய்மரக் கப்பலில் வரவேண்டுமாம்; சோழன் வந்த வழித் தடத்தில் வர வேண்டும் என்ற ஆசையினையும் வெளிப்படுத்தினார். உடல்நிலை அதனை செயல்படுத்த இன்னும் அனுமதி தரவில்லையாம்.

ஆய்வு என்பது பலருக்கு வேலைக்கோ, பதவி உயர்வுக்கோ தேவைப்படும் தகுதி.

ஆனால் ஒரிசா பாலுவுக்கோ, அதுவே வாழ்க்கை. இப்படியும் ஒருவரா? என்ற வியப்பு மேலோங்கிகிறது.

ஆன்மீக இலக்கியப் பேச்சாளர் கவிஞர் சுமதிஸ்ரீ


வியப்பூட்டும் விஐபி – 43

அந்தமானில் நடைபெறவிருக்கும் ஒரு விழாவிற்கு ஆன்மீக இலக்கியப் பேச்சாளரும் கவிஞருமான திருமதி சுமதிஸ்ரீ அவர்களை அழைக்க நினைத்து தொடர்பு கொண்டோம். தனது சொந்தக் காரணங்களால் வர இயலாது எனத் தெரிவித்ததால், அவரால் அந்தமான் வர முடியாது போனது. முகம் பாரா அறிமுகம் முகநூலில் மேலும் தொடர்ந்தது.

சில நாட்களுக்குப்பின் அலுவல் வேலையாக தில்லியில் இருந்தேன். அப்போது ஒரு நண்பரிடமிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. ”உங்கள் பாமரன் பார்வையில் கம்பன் – நூலின் விமர்சனம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கிறது. பார்க்கவும்”

தில்லியில் இருந்ததால் அந்நிகழ்ச்சியைப் பார்க்க இயலவில்லை. கவிஞர் சுமதிஸ்ரீ அவர்களைத் தொடர்பு கொண்ட போது தான் சொன்னார்கள், ”உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரலாமென இப்படி”;

”… ஆமா கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், கம்பனா?” என் கேள்விக்கு பதிலாய், ”நூல் தேர்வு என் முடிவில் விட்டிருந்தார்கள்” என வந்தது.

பின்னர் அதன் பதிவினை யூ டியூபில் தான் பார்த்தேன்.
( https://youtu.be/Fe6vXqvczRA ) பாமரனை, பாமரன் அல்ல எனச் சொல்வதைக் கேட்கும் போது என்னவோ போல் இருந்தது.

அப்புத்தகம்தனைப் பிரசுரம் செய்த மணிமேகலைப் பிரசுரத்திடமும் இவ் விமர்சனைத்தைக் காட்டினேன். ”முகம்பாரா நட்பு” என்றேன். வியந்து போனார்கள். அவர்கள் மட்டுமல்ல; நானும் தான்.

சுமதிஸ்ரீ அவர்கள் ஓர் இலக்கிய ஆன்மீகப் பேச்சாளர்; 5 நூல்கள் எழுதியுள்ளார். இவரின் ஒரு நூலை ஆய்வு செய்து மூவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். கூட்டம், சண்டமாருதம், வானவில் ஆகிய படங்களின் பாடல் எழுதியவர்; பல வெளிநாடுகளில் இலக்கிய ஆன்மீகக் கூட்டங்களில் பங்கு கொண்டுள்ளார்;

ஜாம்பியா,உகாண்டா ஆகிய ஆப்ரிக்க நாடுகளுக்கு சொற்பொழிவிற்காக அழைக்கப்பட்ட முதல் பெண் பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர் இவர்.

வட அமெரிக்க ஃபெட்னா விருது, வாசிங்டன் தமிழ்ச் சங்க விருது, கனடாவின் தமிழ்க் கலைவாணி & சிவத்தமிழ் சிரோன்மணி விருது, கனடா அரசாங்கத்தின் பாராட்டுப் பத்திரம், உ.வே.சாமிநாதர் விருது, நாவரசி, கவிதைச் சுடர்மணி, திருமுறைச் செம்மல் இன்னும் பல பாராட்டுக்களும் பெற்றவர்.

இவ்வளவு சிறப்புக்கும் சொந்தமானவர், எங்கோ ஒரு தீவில் இருந்து கம்பனை கலாய்த்து எழுதிய ஒரு நூலைப் படித்ததோடு மட்டுமல்லாமல், அதனை உலகெங்கும் கொண்டு சேரும்படி நல்ல முறையில் விமர்சனம் செய்த திருமதி சுமதிஸ்ரீ அவர்களது நற்பண்பு, வியப்பில் ஆழ்த்தியதில் வியப்பில்லை தானே!

புலவர் சி சக்திவேல்


வியப்பூட்டும் விஐபி – 42

புகழ், பதவி, பெயர் வந்தால், அதனை உதறித்தள்ளவோ, அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கவோ எத்தனை நபரால் முடியும்? அந்தமானில் இப்படி ஒரு உதாரண மனிதராய் இருந்து, ’என் கடன் தமிழ்ப் பணி செய்து கிடப்பதே’ என இருந்தவர் தான் புலவர் சி சக்திவேல் அவர்கள்.

2005 வாக்கில் ஒரு முறை அவருக்கு ஒரு சான்றிதழ் தமிழில் தேவைப்பட்டுள்ளது. அந்தமானில், கம்ப்யூட்டரும், பிரிண்டரும் சிலர் மட்டுமே வீடுகளில் வைத்திருப்பர். அதிலும் தமிழ் உபயோகம் செய்பவர், மிகக் குறைவாயும் இருப்பர். என்னால், தமிழில் தட்டச்சு செய்ய முடியும் என்பதால் என் வீட்டிற்கு வந்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே சான்றிதழ் அமைந்தது. கீழே இடப்பக்கம் செயலர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் எனவும் வலப்பக்கம், தலைவர், அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம், அவர் சொல்படியே செய்தேன்.

செயலர் என்பதற்கு மேல், தனது பெயரான சி சக்திவேல் என வரட்டும் என்றார். ”நீங்கள் தலைவரல்லவா? செயலர் என்றல்லவா தட்டச்சு செய்யச் சொல்கிறீர்கள்?” இதற்குப் பதில் சொல்லுமுகமாய், ”தலைவர் என்பதன் மேல் சென்று, கிருஷ்ணமூர்த்தி என இருக்கட்டும்” என்றார்.

நான் அவரைப் பார்த்தேன். ”இனிமேல் இப்படித்தான்” என்று விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அன்று முதல் இன்று வரை அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைமைப் பொறுப்பு என் வசமே இருக்கிறது.

பதவியினை விட்டு தந்த தகைமை, பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தும் திறன், அடுத்த தலைமுறையினை தமிழ் பால் ஈர்க்க செய்திட்ட முயல்வுகள், பிழை இல்லாமல் பேச, எழுத, பயிற்சிப்பட்டறை இப்படி பல தமிழ்ப்பணிகளை ஆற்றிய பேச்சாளர், கவிஞர், எழுத்தாளர், ஓவியரும் புலவருமான சி சக்திவேல் அவர்களை நினைத்தால், வியக்காமல் இருக்க முடியவில்லலை.

உலக நாயகன் கமலஹாசன்


வியப்பூட்டும் விஐபி – 41

அந்தமானில் என்னைச் சந்திக்க வரும் பலர் கேட்கும் கேள்வி, ”சாருக்கு எந்த ஊரு?”.

“பரமக்குடி” எனப் பதில் தந்ததும், உடன் வரும் எதிர்க் கேள்வி, “ஓ… கமல் பிறந்த ஊரா?”

அந்த அளவுக்கு, பரமக்குடி என்றாலே, கமல் என்று ஆகி விட்டது. கமல் பரமக்குடிக்கு பல தடவை வந்திருந்தாலும், நான் எட்டாவது படிக்கும் போது வந்ததை மறக்கவே முடியாது. மார்ச் 1976 என்று சமீபத்திய முகநூல் படம் சொல்கிறது.

ஜெமினி கணேசன் அவர்களும் உடன் வந்திருந்தார். இருவரையும் பரமக்குடி சௌராஷ்டிரா பள்ளியின் விழாவுக்கு அழைத்திருந்தனர். சம்பிரதாயமான வரவேற்புரையினை AHR என்று அழைக்கப்படும் எ எச் ராஜகோபாலாச்சாரி அவர்கள் வழங்கினார்.

அவரது வரவேற்புரையில் ஒவ்வொரு வாக்கியத்தை முடிக்கும் போதும் ’மிகையாகாது’, ’மிகையாகாது’ என முடித்திருந்தார்.

கமல் கையில் மைக் வந்தது. ”இப்பள்ளியில் எங்களை எல்லாம் அழைத்து வந்து நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி மட்டும் சொன்னால் அது, (சற்றே நிறுத்தி வரவேற்புரை வழங்கியவரைப் பார்த்து) மிகையாகாது” என முடித்தார்.

”கூட்டத்தில் உட்கார இடம் இல்லாவிட்டாலும் கூட, இங்கே இவ்வளவு பேர் திரண்டு வந்திருக்கிறீர்கள் என்றால் அதன் காரணம் நீங்கள் எங்கள் மேல் காட்டும் பாசம், (சற்றே நிறுத்தி….) என்று மட்டும் சொன்னால் அது…., கூடியிருந்த மக்கள் ”மிகையாகாது” என முடித்தனர்.

அடெ… கூட்ட ஆரம்பத்தில் பேசியதை வைத்தே பேசி, நம்ம உலக நாயகன் கமல் அவர்கள் அசத்தித் தள்ளி விட்டாரே என்ற வியப்பு மேலிட்டது என்றால், அதுவும் மிகையாகாது.

பரமக்குடி தோழர் நீ சு பெருமாள்


வியப்பூட்டும் விஐபி – 40

சமீபத்தில் கமலஹாசன் அவர்கள், ஒரு தலைவரைச் சந்திக்கும் போது, அத் தலைவர் ஒரு நூலைப் பரிசளிக்கிறார் அது கீழடி தொடர்பான புத்தகம். ’நாமளும் படிக்கணுமே’ என்று நினைத்து அது மறந்து போனது.

சில மாதங்கள் கழித்து, பிறந்த ஊரான பரமக்குடி போயிருந்தேன். ஊருக்குப் போனால், இரு ரகமான மக்கள் வீட்டுக்கு வருவர். ”அந்தமான் போக பாஸ்போர்ட் தேவையா?” என ஆரம்பித்து அந்தமான் வர திட்டமிடும் மக்கள் ஒரு வகை. ”வேலை வாய்ப்பு இருக்குமா?” இது அடுத்தவகை.

இந்த இரண்டும் இல்லாமல், ஒருவர் சந்திக்க வந்தார். என் நண்பர் மூலமாய் என் வருகையை அறிந்து வந்துள்ளார். வந்தவர் ஒரு புத்தகம் பரிசாய்த் தந்தார். ’நல்ல பழக்கம்’ எனப் பார்த்தால், அதே கீழடி தொடர்பான புத்தகம். ”நான் தான் இதன் ஆசிரியர் நீசு பெருமாள்”. அறிமுகம் துவங்கியது அதில்.

வியப்பை வீட்டிலேயே கொண்டு வந்து தந்தார் அவர்.

இளைஞர்கள் நம்பிக்கையற்று இருப்பதைக் கவனித்த தோழர் பெருமாள் ’நம்பிக்கை வெளிச்சம்’ என்ற நூலும் எழுதியுள்ளார். அந்நூல் அந்தமான் இலக்கிய உறுப்பினர்களுக்கும் அறிமுகம் ஆகியுள்ளது, அவர் முகம் பாராத போதே. சேக்கிழார் விருதும், நான்காம் தமிழ்ச் சங்க விருதும் பெற்றவர்.

இயற்கையிலேயே அநீதியினைக் கண்டால் போராடும் குணம், ஆனால் சிரித்த முகம், ஆன்மீகத்திலிருந்து முற்றிலும் விலகாமலும், சமுதாய வளர்ச்சிக்கு எதுவெல்லாம் தேவையோ, அதெல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரு வியப்பான ரகம் தோழர் பெருமாள்.

ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, முறையான கல்வி அதிகமாய் ஏதும் கற்காமல், அரசியலிலும் நேர்மையாய் இருந்து, பல் துறையிலும் தனது கருத்துக்களை முத்திரையாய்ப் பதித்து, பரமக்குடியிலிருந்து தோழர் நீ சு பெருமாள் அவர்கள், ஒரு பிரபல நாளிதழுக்கும் தொடர்ந்து தலையங்கமும் எழுதுகிறார் என்றால், அதுவே நமக்கெல்லாம் மகிழ்வும் வியப்பும் தானே!

பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன்


வியப்பூட்டும் விஐபி – 39

ஒரு வித்தியாசமான பட்டிமன்ற நிகழ்வினை முனைவர் கு ஞானசம்பந்தம் அவர்கள் அந்தமான் வந்த போது நிகழ்த்தி இருக்கிறார். அரங்கில் நடக்க வேண்டிய நிகழ்ச்சியினை கிராமப்புற மக்களோடு சேர்ந்து (பாத்துபஸ்தி கோவில் ஒட்டி) நடத்தி இருக்கிறார்கள். வியப்பு தான்.

பல வருடங்களுக்குப் பின் அவரின் மதுரை நண்பர் பாலன் என்பவர் அந்தமானில் சிறிது காலம் இருந்தார். இருவரும் சேர்ந்துதான் ஹுமர் கிளப் ஏற்படுத்தினார்களாம் மதுரையிலும் மற்றும் பல இடங்களிலும்.

பாலன் அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம், ஞாச பற்றித்தான் பேசுவார், அவரின் நகைச்சுவை பற்றியும் பேசுவார். கம்பன் தொடர்பான எனது நகைச்சுவை கலந்த பதிவுகள் பற்றியும் அவரிடம் சொல்லி இருக்கிறார்.

சில ஆண்டுகளுக்குப் பின்…

தற்செயலாக மதுரை விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன்.

வணக்கம். நான் அந்தமானிலிருந்து வந்திருக்கேன் எனச் சொன்னது தான் தாமதம், ”அங்கே கிருஷ்ணமூர்த்தி என ஒரு இஞ்ஜினியர் இருக்காராமே? தெரியுமா?” என்றார்.

”நான் தான் அது” என வாழைப்பழச் செந்தில் போல் சொன்னதும் மகிழ்ந்தார்.

தொலைபேசி மூலம் அறிமுகம் ஆகி இருந்தும், பெயர் எல்லாம் நினைவு வைத்திருக்கும் பேராசிரியர் முனைவர் கு ஞானசம்பந்தன் அவர்களின் திறன் குணம் வியப்பாய் இருந்தது.

நகைச்சுவை இல்லாத ஞானசம்பந்தமா?

  1. அந்தமானில் பூமாலைகளை ரொம்ப கவனமாய் கையாளுவதைப் பார்த்து, ”இங்கே பூ கிடைக்காது எல்லாம் சென்னையிலிருந்து வரணும்” என்றவுடன், ”அப்பாடா, இங்கே யாரும் என் காதில் பூ சுற்ற முடியாது”என்றார்.
  2. ”ஓய்வாக எங்கே போகலாம்?” கேட்டார். ”ஜெயிலுக்கு…” என்றவுடன், என்ன இது வந்தவுடன் ஜெயிலுக்கு அனுப்புறீங்க என்று சிரிக்க வைத்தார்

[தகவல் தந்து உதவிய முனைவர் அய்யாராஜு & முனைவர் கு ராஜ்மோகன் அவர்களுக்கு நன்றி]

அந்தமான் காரா என்ற எஸ்.பி.காளைராஜன்


வியப்பூட்டும் விஐபி – 38

அந்தமான் நிகோபார்த் தீவுகளின் தென் கோடித் தீவுதான் கிரெட்நிகோபார். இந்தியாவின் இறுதி முனை இத்தீவில் தான் இருக்கிறது. கன்யாகுமரியை விட கீழே இருக்கும் இந்திய தீவுப் பகுதி இது.

அந்தத் தீவில், 1987 புத்தாண்டு துவக்கத்தில், பொங்கல் விழா கொண்டாட, அதுவும் ஒரு நாடகம் நடத்தலாமென அழைப்பு வந்தது. 10 பேர் மட்டுமே உட்கார முடியக் கூடிய சிறு அறையில் 10 பேர் கூடினோம்.

அமைப்பாளர் ரொம்பக் கறாரான பேர்வழியாய்த் தெரிந்தார். நாடகக் கதை சொல்லி விட்டு, ”யாருக்கு எந்தப் பாத்திரம் என்பதை நான் தான் முடிவு செய்வேன்; அதை அவரவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார். அனைவரும் ஏற்றனர். எனக்கு தமிழாசிரியர் வேடம்;

அத்தீவில் நடந்த முதல் நாடகம் அது. மிகப் பெரிய வெற்றியினைத் தந்தது. நாடகக்கதை வசனம் பாடல்கள், இசை, என எல்லாம் செய்த அந்த அமைப்பாளர் தான் காரா என்ற எஸ்பி. காளைராஜன் என்ற ஒரே நபர்.

ஆண்டுகள் கடந்தன. தொழிற்சங்க தலைவர் என்ற ஒரு முகம், சத்யசாய் பெயரில் ஆன்மீகத்துடன், தேவைப்படுவோர்க்கு சேவைகள் செய்வது, மரபுக் கவிதைகள் எழுதுவது என பல முகங்களாய் வளர்ந்து நிற்பது தெரிந்தது.

சில மாதங்களுக்கு முன் கப்பலில் சந்திப்பு நிகழ்ந்தது. 20 நிமிடங்களில் ’வெண்பா எழுதுவது எப்படி?’ என்பதை அன்பா(க) விளக்கிவிட்டார் அந்தப் பொறியாளத் தோழர், அருள்மிகு காளைராஜன் அவர்கள்; வியக்காமல் இருக்க முடியவில்லை
இப்படியான பன்முகத்திறத்தினைக் கண்டு.

சமீபத்தில் இவரது ‘கவிதை இலக்கணமும் கணினியும் (பைனரிடிஜிடல் முறையில்)’ என்ற நூலினையும் வெளியிட்டு ’எழுத்தாளர்’ என்ற முகமும் காட்டி வியப்படைய வைத்துள்ளார்.

தொழிற்சங்க போராட்ட குணம் மேற்கு எனில், ஆன்மீக முகம் கிழக்கு; இலக்கண மரபோடு கவிதை வழங்கல் வடக்கெனில், கணிய முறை ஆய்வு தெற்கு. இப்படி எப்பக்கம் பார்த்தாலும் வியப்பாய் ஒரு ராஜன்தான், இந்தக் காரா என்ற எஸ்பி காளைராஜன்

சொல்வேந்தர் சுகி சிவம்


வியப்பூட்டும் விஐபி – 37

சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள் அந்தமானுக்கு இது வரை வந்ததில்லை, ஆனால் பல முறை தொடர்பு கொண்டுள்ளனர். பல்வேறு காரணங்களால் அவரின் வருகை நடைபெறவில்லை.

இந்தப் பின்னோட்டத்தில் ஒரு முறை எதிர்பாராத விதமாக சென்னை விமான நிலையத்தில் சுகிசிவம் அவர்களைச் சந்திக்க முடிந்தது. அவரும் நானும் போக வேண்டிய நுழைவாயில், வேறு வேறு திசையில் இருந்தது. இருந்தாலும் பொதுவழியில் பிரியும் வரை பேசிக் கொண்டு நடந்தோம்.

முதலில் அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். ”எனது கம்பன் தொடர்பான பல பதிவுகளில் உங்கள் கருத்துகளைத் திருடிப் போட்டு வருகிறேன்; உங்கள் பெயரோடு. முதலில் அதற்க்காக மன்னிப்பு கோருகிறேன். ” என்றேன்.

”அதனால் என்ன? நல்ல கருத்துகள் நாலு பேருக்குப் போய்ச் சேர்வதென்றால் நான் மகிழ்வேன். அதில் என் கருத்துக்களை என் கருத்தாகவே போடுவதில் எனக்கு மகிழ்வு தான்” என்றார். உலகப் புகழ் பெற்ற பேச்சாளர் தன் கருத்துகள் இன்னும் வேறு வேறு தளங்களில் செல்லட்டுமே என உளமாறச் சொன்னது வியப்பாய் இருந்தது.

என் மானசீக குருவை எதிர்பாராத வேளையில் வியப்புடன் சந்தித்தில் மகிழ்வு தான்.

கிடைத்த சில மணித்துளிகளை செல்ஃபி எடுத்து விரயமாக்காமல் தவிர்த்த காரணத்தால் படம் இல்லை இப்பதிவில்.

திரைப்பட நடிகர் நெப்போலியன்


வியப்பூட்டும் விஐபி – 36

அந்தமானில் பிரபலங்களை அழைத்து விழா நடத்துவது உண்டு; பிரபலங்கள் வேறு வேலையாக இங்கு வந்திருக்கும் போதும் விழா ஏற்பாடு ஆவதுண்டு; விழா நடைபெறும் போதே, வேறு பிரபலம் வந்திருந்தால், அவர்களையும் மேடை ஏற்றுவதுண்டு.

இப்படி மூன்றாவது வகையில் அந்தமான் வந்த நடிகர் நெப்போலியன் அவர்களை மேடை ஏற்றியது தமிழர் சங்க அரங்கம்.

அவர் பேச ஆரம்பித்தார். ”தாயே தமிழே தரணி ஆளும் தங்கமே….” என்று மூச்சு விடாமல் மூன்று நிமிடம் அழகு தமிழில் அந்தக்காலத்து எதுகை மோனை எல்லாம் வைத்து, யாரும் எதிர்பார்க்காமல் பேசி எல்லார் கை தட்டலும் பெற்றார்.

ஏறக்குறைய எல்லாப் படங்களிலும் கிராமிய மணம் கமழும் தமிழ் பேசியதையே கேட்டுப் பழக்கப் பட்ட நமக்கு அந்த தீந்தமிழ் வியப்பாய் பட்டது.

”இப்படி எல்லாம் பேசணும்னா யாராவது இப்படி நல்லா எழுதிக் கொடுதாத்தான் உண்டு” என்றபடி ஒரு பேப்பரை எல்லார் முன்பும் காண்பித்தார். பின்னர் சாதரணமாய் கிராமியத் தமிழில் பேச்சினைத் தொடர்ந்தார்.

அரங்கினில் கிடைத்த கை தட்டலுக்கு, தான் காரணம் இல்லை, அந்த பேப்பரில் எழுதித் தந்தவர் தான் என்பதை வெளிப்படையாக மேடையிலேயே ஒப்புக் கொண்ட குணம் வியப்பாய் இருந்தது.

இரவு உணவு விருந்துக்கு அசைவம் ஒரு பிடி பிடித்தார். ”அந்தமானில் மீன் உணவுகள் அதிக சுவையோடு இருக்கின்றன. சாப்பாடு இல்லாமல் அவனவன் சாவுறான். நாம் சாப்பிட என்ன வெக்கப் பட வேண்டி இருக்கு? நல்லா திருப்தியா கேட்டு வாங்கி சாப்பிடுங்க…” என்றார் பக்கத்து இலை மீனாக.

ஒரு பிரபலம் என்பதனையும் மீறி திரு நெப்போலியன் அவர்களது எளிய, மனதில் பட்டதைச் சொல்லிய விதம் எல்லாமே வியப்பாய்த் தான் இருந்தது.

முனைவர் பேராசிரியர் இராசேந்திரனார்


வியப்பூட்டும் விஐபி – 35

கம்பன் கவிமழையில் நனையும் போது, அச்சாரலில் சில நட்புகள் கிடைக்கும். அவற்றுள் ஒருவர் தான் பேராசிரியர் இராசேந்திரன் அவர்கள். சென்னை கிருஸ்தவக் கல்லூரியில் தமிழ்த்துறையில் பணி புரிந்து, இப்போதும் அதே தமிழ்ப்பணியினை தனது வீட்டு மாடியில் தொடரும் தமிழ் ஆர்வலர்.


கம்பராமாயணத்தில் உவமை குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.


வீட்டினுள் நுழைந்தால் ஏதோ நூலகத்தில் நுழைவது போன்ற உணர்வு. எங்கு நோக்கினும் நூல்கள்…. நூல்கள்…. நூல்கள்.

இயற்கை விவசாயம், விவசாயிகள் போராட்டம் என கோஷம் எழுப்பி விட்டு, பிளாஷ்டிக் பாட்டிலில் தண்ணீர் கேட்கும், போலி இயற்கை ஆதரவாளர்கள் மத்தியில், நொச்சி இலை மூலம் கொசு விரட்டுவதும், நிலக்கடலை, எள் போன்றவை கொறிப்பான்களாகவும் தந்து, சுக்கு, மிளகு மல்லியில் தேநீர் தந்து உபசரித்ததும் வியப்பாய் இருந்தது.

”இலங்கையில் ஈழத்து தமிழர்கள் இப்படி, இயற்கை சார்ந்து வாழ்கிறார்கள். இவை வெளி உலகம் அறிந்தால் தங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வியாபாரம் நடவாதே என்ற காரணமும் ஈழத்தமிழ்ர்களுக்கு எதிராய் உலகம் ஒன்று திரண்டமைக்குக் காரணம்” என்கிறார்.

”தமிழில் இல்லாதவைகளே இல்லை” என்கிறார். ”காலை எழுவது முதல், இரவு உறங்கப் போகும் வரை எல்லாவற்றிலும் மகிழ்வாய் இருப்பதின் விதிகளை தமிழன் கண்டு பிடித்து வைத்துள்ளான். ஆனால் நாம், அன்னிய மோகத்தின் பிடியில் சிக்கி மீள முடியாமல் இருக்கிறோம்” என்பதை வருத்தமுடன் கூறுகிறார் பேராசிரியர் இராசேந்திரனார்.

தனது வீடே தமிழ் ஆய்வாளர்களுக்கு உதவும் ஆய்வுக் களமாய் மாற்றி வைத்திருப்பதும் வியப்பைத் தான் தருகின்றது.

ஒரே சந்திப்பில் எத்தனை வியப்புகள்!! அத்தனையும் தந்தவர் முனைவர் பேராசிரியர் இராசேந்திரன் அவர்கள்.

தொடரும் அடுத்த விஐபி திரைப்பட நடிகர் நெப்போலியன்