வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 90
(28-07-2019)
’நீரில்லாத பூமி பாழ்’ எனக் காலம் காலமாய் சொல்லி வந்தாலும் கூட, நிலத்தடி நீர் இல்லா (தமிழ்) நாடு குறித்த சமீபத்திய நிதி ஆயோக் அறிக்கை ஒரு பக்கம் பயமுறுத்த்திக் கொண்டு தான் இருக்கிறது. ஆன்மீகப் பக்கமோ ’நீறீல்லா நெற்றி பாழ்’ என்கிறது. சில வருடங்களாக லேசான விபூதி கீற்று வைத்து வருகிறேன். ”கிருஷ்ணன் பேரு வச்சிகிட்டு திருநீறா?” இப்படிக் கேட்பவர்களும் உண்டு. அளவில் கொஞ்சம் பெருசானாப் போதும், தாலி கட்டியவள் நெற்றிக்கண் திறப்பார். எங்கே பக்திமான் ஆகி, நித்யாணந்தா மாதிரி ஆகிவிடுவேனோ என்ற பயமாக, ஒருவேளை இருக்கலாம்.
சமீபத்திய ஜுன் மாதம் என் நெற்றிவிபூதி அதிகம் பேசப்பட்டது. பின்னே…. நல்லா தமிழ்க்காரன் எனத் தெரியும் படி விபூதி வச்சிகிணு, ஹிந்திக் காரர்களிடமே, கம்ப்யூட்டரில் ஹிந்தியைத் திணிப்பது, சாரி சாரி உபயோகப் படுத்துவது எப்படி என வகுப்பு எடுத்தா? கடுப்பாக மாட்டாய்ங்க? ஆனாலும் அந்த திருநீறு அணிந்த நெற்றி அழகே அழகு தான்.
இந்த ஹிந்திப் பாடம் நடத்தும் சங்கதி ஒன்றும் பிளான் செய்து வந்தது அல்ல. தற்செயலான நிகழ்வு. சிவில் பொறியியலின் ஒவ்வொரு வேலைக்கான ரேட் எவ்வளவு என நிர்ணயம் செய்யும் Analysis of Rates தான் தொந்திரவு தந்தபடி இருந்தது. நிமிந்தாள், சித்தாள் கூலி ஆறு மாதத்துக்கு ஒரு முறை ஏறும் (குறைந்தபட்ச கூலி தான்); டீசல் டீவீ பார்க்கும் போதெல்லாம் விலை ஏறும்; கம்பி மணல் இதுவும், இப்படி எதுவும் நம்ம கையில் இல்லை; ஏறுமுகம் தான் விலையில். இதை திரும்ப திரும்ப ஒவ்வொரு முறையும் ரேட் ஏறும் போது எஸ்டிமேட் தயார் செய்வதில் மண்டெ காஞ்சி போகும். எக்செல் வைத்து அதை எளிமை ஆக்கினேன். மாறக்கூடிய சங்கதிகள் எல்லாத்தையும் ஒருசீட்டில் போட்டு அதை வைத்து கணக்கு பண்ணும் சங்கதிகளை, இன்னொரு பக்கத்தில் வைத்து லிங்க் செய்தேன். ஒரு தடவை உழைத்தால் போதும் அப்புறம் ரேட் சீட்டில் மாத்தினா பூரா எஸ்டிமேட்டும் தயாராகி விடும்.
இதை உற்று பாத்த ஒரு ஹிந்திக்காரர் இங்கிலீஸ் ஒரு பக்கமும் ஹிந்தி ஒரு பக்கமும் வச்சா என்ன? என்ற வீணாப்போன ஐடியா குடுக்க, அது செமெ ஹிட்டாயிடுத்து. ரேட் அனாலெஸிஸை விட, ஹிந்தி வகுப்பு தான் அதிகம் எடுத்து வருகிறேன். தற்செயலாக வந்தாலும் தக்கடாவா (உறுதியாக) வந்திடுச்சி.
நீ நினைத்த காரியம் ப்ளான் செய்தபடி வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தால், நீ தோல்வி பெற ப்ளான் செய்துள்ளாய் என்கிறார் ஆக்ஷன் ப்ளான் துறவி விவேகானந்தர். வடிவேலாணந்தர் இதையே நச்சுன்னு, எதையுமே ப்ளான் செய்யாமெ செஞ்சா இப்படித்தான் என்கிறார். ஆனால் சில, நாம் ப்ளான் ஏதும் செய்யாமல் தற்செயலாக கைக்கு கிடைத்துவிடும். ப்ளான் செய்து பெற்ற வெற்றியை விட இப்படி தற்செயலாய் வரும் எந்த சமாச்சாரத்துக்கும் (சம்சாரம் இல்லீங்கோ) ஒரு பிட் சந்தோஷம் அதிகம் தான். பலனை எதிர்பாராமல் செய்த கடமையின் பலன் என்பதால் இருக்குமோ? ஏடாகூடமான நேரத்தில் தற்செயலாக சம்சாரம் வந்தால், என்ன நடக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிட்டு தொடர்கிறேன்.
ஆனா சம்சாரம் இல்லாத நேரத்தில், “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என முதல் நாள் கத்தினாலும் (சந்தோஷமாத்தான்) அடுத்தடுத்த நாட்களில் மனைவி இல்லாதது, கை ஒடிந்த மாதிரி தான் இருக்கிறது. ஒரு நெயில்கட்டரை கடந்த 10 நாளா தேட்றேன். என்னைக்கோ காணாமல் போன சார்ஜர் முதல், முதல் கேர்ள் ஃபிரண்ட் போட்ட லெட்டர் (இப்பொ அதெக் கிழிச்சிப் போட்டென் என்பதை எதுக்குச் சொல்லிட்டு?), காலேஜில் தொலைஞ்சது என நெனெச்ச ஆட்டோகிராப் புக், 1985 இல் எந்த விளம்பரம் பாத்து அந்தமான் வந்தேனோ அந்த எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் பேப்பர், இப்படி எல்லாம் கிடைக்குது. நெயில் கட்டர் மட்டும் கையிலெ சிக்கலை இன்னும்..
ஒரு வேளை பாலகுமாரனின் கரையோர முதலைகள் நாவல் தேடினா, நெயில் கட்டர் கிடைச்சிடுமோ? ஆனா மனைவிமார்களின் கைக்கு மட்டும் எப்படித்தான் இதெல்லாம் டக்குன்னு சிக்குமோ? தொலெஞ்சே போச்சி என நினைத்த பாலாவின் நாவல், 15 வருஷம் கழிச்சி கெடெச்சது. மகிழ்சியின் உச்சத்தை அடைந்தேன் என்பதை சொல்லவும் வேணுமோ? அப்பொ 15 வருஷம் கழிச்சித்தான் நகம் வெட்டிக்கணுமோ?
இருப்பதை தொலைக்கும் நபர்கள் பலர். ஆனா இருக்கும் நிம்மதியை தொலைக்கும் மக்களும் இருக்காகளே? ஒருமுறை விமானப் பயணத்தில் ஜன்னல் சீட்டில் உக்காந்த ஒரு மனுஷனுக்கு ஏதோ தீப்பொறி கண்ணில் பட்டது. (ஒரு சீட் தள்ளி உக்காந்த எனக்கு, மயில் கலரில் உள்ள சேலை எப்படி எல்லா ஏரிண்டியா மகளிருக்கு பொருந்துது என்ற ரோசனையில் இருந்ததேன்.) கோ பைலட், பைலட் வரை வந்து எட்டி எட்டி பார்த்தனர் ஜன்னல் ஓர சீட்டிலிருந்து. அவருக்கும் எனக்கும் நடுவே இருந்த பயணி, பயந்து போய் கடைசி சீட்டுக்குப் போயிட்டார். ஜன்னல் சீட்க்காரர் சோறு தண்ணி இல்லாமல் வெறிச்சி பாத்தபடி இருக்க, நான் அந்த வடை உப்புமா இரசித்தபடி இருந்தேன். (என்ன ஒரு சாதி இது? என மனசிலெ திட்டி இருக்கலாம்). உயிர்பயமே இல்லையா? என்றார். உயிர் போவது முடிவாயிடுச்சி, உப்புமா வாடெ சாப்பிட்டு தெம்பா சாகலாமே? கேட்டதும் கடுப்பாயிட்டார் அந்த பட்டினி கிடந்த சக பயணி. எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் தரை இறங்கியது. நான் பசி ஏப்பம் விட்டேன். (பின்னே ஒரு ஸ்பூன் உப்புமாவும் மினிமினி வடையும் பசி தீர்க்குமா என்ன?) அந்தப் பயணி, போன உசுரு திரும்பி வந்தது போல் நிம்மதியாய் அசடும் வழிந்தபடி இறங்கினார். அவர் நெனெச்சபடி விமானம் தீப்பிடிக்காதது அவருக்கு மிகப் பெரும் கவலை.
”என்ன கிட்டு சம்பந்தா சம்பந்தம் இல்லாமெ வேற வேற சப்ஜெக்ட் ஓடிட்டு இருக்கே?” சொல்லியபடி கம்பர் அப்பியர் ஆகிறார்.
“சொல்வன நச்செனச் சொல் எனச் சொல்லிட்டு, ஒண்ணும் வெளங்கலையே?” என்றார்.
எல்லாம் உங்க பாணி தான் ஐயா… பொதுவா எல்லா புலவர்களும் ஒரு மேட்டருக்கு ஒரு உவமை சொல்லுவாக. நீங்க மூணு உவமை சொல்லிட்டு, கடைசியிலே வடிவேலு கணக்கா, முடியலைண்ணு வேறு அலுத்துக்கிறீங்க! நானும் உங்க தாசன்… உங்க பாணியில் ஹீ ஹீ ஹீ
“நடத்து கிட்டு… நடத்து நண்பா…” சொல்லி மறைந்தார்.
வாங்க… இப்பொ நாம் அசோக வனம் போவோம். கம்பனே எப்படி சொல்வது எனக் குழம்பிய இடம் வருது அங்கே. அனுமன் இராமபிரானின் மோதிரத்தை சீதையிடம் தருகிறார். அந்தக் காட்சியெ ஒரு தடவெ பாருங்க; அப்புறம் பதிவெப் படிங்க
அப்படியே கம்பன் பாட்டும் படிங்க:
இறந்தவர் பிறந்த பயன் எய்தினர்கொல் என்கோ
மறந்தவர் அறிந்து உணர்வு வந்தனர்கொல் என்கோ
துறந்த உயிர் வந்து இடை தொடர்ந்தது கொல் என்கோ
திறம் தெரிவது என்னைகொல் இந் நல் நுதலி செய்கை
[சுந்தர காண்டம் – உருக்காட்டு படலம்]
[நல்ல நெற்றியைப் பெற்றுள்ள சீதை அம்மோதிரத்தைக் கண்ட செயலை, வாழ்நாளை வீணாக்கியவர்கள், மறுமைப் பயன் தரும் ஒன்றைத் தற்செயலாகப் பெற்றதைப் போன்றது என்பேனா? விலை மதிப்பரிய ஒரு பொருள் வைத்துவிட்ட இடத்தைப் பல்லாண்டுகள் மறந்துவிட்டவர்கள், திடீரென்று வைத்த இடம் நினைவு வரப் பெற்றதைப் போன்றது என்பேனா? உடலை விட்டுப் பிரிந்து போன உயிர் மீண்டு வந்து அந்த உடலோடு சேர்ந்ததைப் போன்றது என்பேனா? சீதையின் செயலது சிறப்பினை எவ்வாறு தெரிந்து சொல்வது?]
நெற்றி, தற்செயலை, நெயில் கட்டர் தேடல், பாலா நாவல், தீப்பிடிக்காத விமானம்… இப்பொ லிங்க் ஓகே வா?…. நல்லா கேக்குராங்கப்பா டீட்டெய்லூலூலூ….
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.