நான் ஏதோ கம்பரை படிச்சி எழுதப் போக…. என்னையும் பெரிய புலவன் ரேஞ்சுக்கு கற்பனை செய்து இந்த மாதிரி கேள்வி கேட்டு போட்டு வாங்குறாய்ங்க… இருந்தாலும் வுடுவோமா என்ன???
ராம அவதார நோக்கம் வாலி வதமா? அது ஓர் இடைச் சம்பவம்.
அவதார நோக்கம் அற வழியில் நிற்றல். அதுவும் சந்தோஷமாய் நிற்றல். நமக்குத் தெரிந்த காந்தி, ஹரிசந்திரன், ஜீஸஸ் எல்லாரும் கஷ்டப்பட்டதாய் தான் தெரிகிறது.
கம்பர் வித்தியாசமாய் மகிழ்விலும் சரி …, துயர் வரும் போதும் சரி ஒரே மாதிரி இருந்ததை எல்லா இடங்களிலும் காட்டுவார்.
பெரியவா செஞ்சா பெருமாளே செஞ்ச மாதிரி… அந்த பெருமாளின் அவதாரமே செஞ்ச ஒரு காரியம் எப்படி தப்பாகும்…
வாலி வதத்தின் முன்னர் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாக்கலாம்.
வாலியை வதம் செய்யும் நோக்கத்திலா ராமன் கிஷ்கிந்தை வந்தான்?. இல்லையே..
ராமனை முதலில் பார்த்தவன் அனுமன்.
அனுமன் தான் ராமனுடன் நட்பு கொண்டால் நல்லது..நாமும் அவர்க்கு உதவலாம் என்று யோசித்தவன்.
ஒரு பேச்சுக்கு என் பையனிடம், ” எத்தனை ராமாயண் கார்ட்டூன் பாத்திருக்கே!!…. வாலியை கொன்னது சரியா??” கேட்டேன்…
சரி…. தப்பு ரெண்டுமே இருக்கு. இது பதில்.
எப்படி சரி?? எப்படி தவறு?? மறுபடியும் கேட்டேன்..
பதிலும் வந்தது.
ஏன் சரி என்றால், பிறத்தியார் மனைவியை அபகரித்தான்.. அதற்கான தண்டனை.. (வாலி தவறு செய்தால், ராமனும் செய்யணுமா???..ஓதைக்குதே)
தவறு ஏன் என்றால், மறைந்து நின்று கொன்றது.
நான் மறுபடியும் செய்த வாதம் இதோ உங்களுக்காய்..
வாலி மனிதன் அல்ல… விலங்கு.. விலங்கை நேருக்கு நேர் சென்று தான் கொல்ல வேண்டும் என்ற நெறி இல்லை.. மறைந்து சிங்கம் புலி கரடியை கொல்வது போல் வேட்டை ஆடலாம் தவறில்லை.
மேலும் எது ஆதாயம் என்று யோசித்து ராமன் முடிவு எடுத்திருந்தால் வாலிதான் பெட்டர்.. சுக்கிரீவனை விட.. ஆனால் அறம் அவனிடம் இல்லை. சுக்ரீவன் தான் வாலியை விட நல்ல தேர்வு.
சுக்ரீவன் கூட எளக்காரமாய்த் தான் ராமனைப் பாத்தான்.. இவனே பொண்டாட்டி பறி கொடுத்து நிக்கிறான்..இவன் எப்படி??? நம்மாளை மீட்டுத் தருவான்… சங்கடம் வருது..சந்தேகமும் கூடவே வருது.
அனுமன் தான்… ” ராமன் வல்லவரு நல்லவரு” எல்லாம் சொல்லி, இந்த ஆல் இன் ஆல் ராமராஜா இல்லாட்டி கதி இல்லை என்று சொல்லி…
கடைசியில் ஏழு மரம் துளைக்க ஒரே அம்பு விட்டு..ராமன் ராமன் தான் என்று நிரூபிக்கவே இவ்வளவு சிரமப் பட்டு கடைசியில் வாலி வதம் ஓகே ஆகிறது..
இப்படி முன்னரும் கூட, அறம் காக்க சில தடுமாற்றங்கள் வருது..நம்ம ராமனுக்கு..
பெண் அரக்கியை கொல்லலாமா என்று?? விசுவாமித்திரர் தான் Precedence இருப்பதாய் File எடுத்து கான்பிக்க..அங்கும் OK சொல்கிறார் ராமன்..
அறம் + மகிழ்வு = ராமன் (கம்பன் வடித்த பாத்திரம்).
என் முடிவு…வாலி வதம் சரி..சரி..சரியே என்று அந்தமான் செவத்தய்யா தீர்ப்பளித்து அமர்கிறேன்..நன்றி வணக்கம்.