வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 84
(27-03-2019)
வீட்லெ பொண்டாட்டி இல்லைன்னா செமெ ஜாலி தான். (சும்மா ஒரு குறுகிய நாட்களுக்குத் தான் சாமி) எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க வேண்டிய அவசியமில்லை. மேட்சிங்கா பேண்ட் சட்டை போட வேண்டியதில்லை; சாக்ஸ் கூட எந்தக் கலரிலும் போட்டுத் திரியலாம். புது சட்டை என எடுத்து வைத்திருப்பதிலும், நாம கை வைக்கலாம். (’ஓ.. இது புதுசா….? நான் பழசுன்னு நெனெச்சேன்’ என அப்புறம் கதையும் விடத் தெரிஞ்சிருக்கணும்); முக்கியமான ஒண்ணு, இஷ்டத்துக்கு வேண்டிய டி வி சேனலும் பாக்கலாம். (சீரியல் முடியும் வரை காத்திருக்காமல்)
இப்படி வந்த ஒரு சான்ஸில், சேனலை மாத்தினா, ஒண்ணுமே வரலை. கேபிள் ஆபரேட்டரை பார்த்தேன். கேட்டா, பெரிய்ய பெரிய்ய ஃபார்ம் எல்லாம் ஃபில்லஃப் செய்ய வச்சி, சேனல் லிஸ்ட் போட்டு துட்டு கட்டுங்க என்றார். நூத்துக்கும் மேலே சேனல்கள் இலவசம் என ஆசி வேறு. நான் கேட்டேன்: விருப்பமான சேனலுக்கு நாம் பணம் கட்றோம்; விருப்பம் இல்லாத சேனல் குடுத்தா, அதுக்கு நீங்க பணம் தருவீங்களா? அவருக்கு புரியலை. அதாங்க இந்த ஆன்லை ஷாப்பிங், உடம்பு இளைக்க லேகியம், அப்புறம் அந்த பலான சமாச்சாரம் (இதுக்கு விளக்கம் தேவை இல்லை என நினைக்கிறேன்) மதமாற்ற பிரச்சாரம் இப்படி உள்ள சேனல்களை நாம் பாக்க, நீங்க தானே பைசா தரணும்? இவ்வளவு நாள் கடை நடத்தி ஒரு ஆளும் இப்படி கேக்கலையே? புலம்பினார் கடைக்காரர்.
இலவச சேனல் பிரச்சினை சமீபத்தில் தில்லி போன போதும் எதிரொலித்தது. ஒளியும் ஒலியும் பார்த்தே பழகிய நமக்கு, பல சேனல்களில் வெறும் ஒளி மட்டும் வந்தது. ஏதோ ஒரு மாநிலத்து ஹிந்தி (மாதிரி இருந்தது) சேனலில் ஒரு கட்சியின் இலவசமாய் பணம் தருவது பற்றி வந்தது. தொடர்ந்து இதுக்கெல்லாம் முன்னோடிகள் என காமராஜ், எம் ஜி ஆர் உட்பட்ட எல்லாரையும் காண்பித்தார்கள். இலவசத்துக்கு முன்னோடி நாம் தான் என்பதை எல்லா பாஷையிலும் சொல்றாங்க. அடப்பாவிகளா! வயித்துக்கு சோறு இல்லாதவங்களும் படிக்கணும் எனக் கொண்டு வந்த அந்த மதிய உணவையும் இலவச லிஸ்டோடு சேத்திட்டீங்களேப்பா?
இதெப் பாத்தப்போ ஒரு கதெ ஞாபகம் வந்திடுச்சி. ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப் போனாராம். (அப்பொ காட்டுக்குப் போகாமெ, நாட்டிலேயேவா வேட்டை ஆடுவார்?) ராத்திரி தங்கல். சாப்பாடு எல்லாம் சமைக்கிறப்பொத்தான் தெரிஞ்சதாம் உப்பு கொண்டு வர மறந்தது. என்ன செய்ய? மூன்று ஆலோசனை வந்ததாம்;
- உப்பை மறந்த ஊழியரின் தோளை உறிச்சி உப்புக் கண்டம் போடலாம்.
- பக்கத்து ஊர் கடைக்குப் போய், அரசர் உப்பு கேட்கிறார் என, ஓசியில் (அதைச் சொல்லி இன்னபிறவும் பல அதிகாரிகள்) வாங்கலாம்
- சாதாரண பிரஜையாக பணம் கொடுத்து உப்பு வாங்கலாம்.
ராஜா அந்த மூன்றாவது ஐடியாவை (அதிகாரிகளின் முனுமுனுப்புகளுக்கிடையே) டிக் செய்தார். இதனால் ராஜா, ஒரு உப்பு கூட சரியா மேனேஜ் செய்ய முடியலை, நாட்டை என்ன செஞ்சி கிழிச்சிடப் போறார்? என்ற என்ற கேளிவி எழும் முன்னரே தடுத்தார். ஊழலுக்கான கதவும் மூடப்பட்டது.
கேக்காமெ குடுப்பது இந்தக் காலம். அந்தக் காலத்திலெ (எந்தக் காலத்திலே? என்றெல்லாம் கேக்கப்படாது) கேக்கிறதே தப்பு என நெனெச்சாகலாம். ஈ யென பல்லைக் காட்டி கேட்பது தப்பு தான். ஆனா, அப்படி கேட்ட பின்னாடியும் ஹி..ஹி.. என கொடுக்காமல் தலை சொறிவது அதெவிட தப்பாம்.
ஈ என இரத்தல் இழிந்தன்று அதன் எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று.
இப்படிச் சொல்லுது ஒரு சங்கப் பாடல்; கழைதின் யானையார் எழுதி வச்சிருக்கார் புறநானூற்றில் ஈ ஈ என வரும்படியாய்.
ஹி ஹி என்றபடி கம்பர் உதித்தார். சங்கப் பாடல், கேட்டாக் குடுக்கணும் என்கிறது. நம்ம பாட்டு, குடுத்தாலும் வாங்கப் படாது என்பது தான். பாட்டு சொல்லி மறைந்தார்.
எல்லா சண்டையெல்லாம் ஓஞ்சி, மாடல் கோட் ஆஃப் கண்டக்ட் எல்லாமும் முடிஞ்சி இராமர் தலையில் மகுடம் ஏறும் சமயமது. சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் புத்தம் புது அரசரான வீடணனுக்கு அழைப்பு அனுப்பப் படுகின்றது. வருகின்றார் அயோத்திக்கு. உள்ளதில் பெரிய ஸ்டார் ஹோட்டல் வகையில் பெரீய்ய சூட் ஒதுக்கித் தருகிறார் பரதன். வாங்கலையே அந்த ராசா? நீங்க தரலாம். அது உங்க நல்ல மனசெக் காட்டுது. அதுக்கு நான் தரும் பதில் மரியாதை, அதெ வாங்காமெ இருப்பது தான். எவ்வளவு சூப்பரா தருவதை மறுக்கிறார் பாத்தீயளா?
ம்.. அப்படியே வாங்க பாட்டு பாக்கலாம். ஓசியா தானே கிடைக்குதுன்னு படிக்காமெ போயிடாதீங்க ப்ளீஸ்.
’பங்கயத்து
ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்த பான்மைத்து
இங்கு இது மலராள் வைகும் மாடம்’ என்று இசைத்த போதில்
’எங்களால் துதித்தலாகும் இயல்பதோ’ என்று கூறி
செங்கைகள் கூப்பி, வேறு ஓர் மண்டபம் அதனில் சேர்ந்தார்.
[யுத்த காண்டம்; திருமுடி சூட்டு படலம்]
[தாமரையில் வீற்றிருக்கும் பிரம்ம தேவன், இட்சுவாகு மன்னனுக்கு அளித்த சிறப்புக்குரிய,
இங்கு அமைந்துள்ள, இந்த திருமகள் தங்கும் இனிய மாடம் என்று பரதன் இயம்பிய போது, வீடணாதியர்
‘எங்களால் புகழக்கூடிய அளவினதோ இது?’ என்று கூறி தம் சிவந்த கரங்களால் வணங்கி, மற்றொரு
மண்டபத்துக்கு சென்று சேர்ந்தனர்.]
*[பின் குறிப்பு: இது கம்பன் பாடல் தொடர்பான பதிவு. இதில் உங்கள் மூளைக்கு, அரசியல் நெடி அடித்தால், அதுக்கு நான் பொறுப்பாளி அல்ல]*
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.