திருட்டு மாங்கா புளிக்குமா??


அறிஞர் அண்ணா மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என்று சொன்னாலும் சொன்னார். அதனை நம் மக்கள் எல்லாருமே, ரொம்பவே சரீய்யா தப்பா புரிஞ்சி கிட்டாய்ங்க போலத்தான் எனக்குப் படுது. (ஒருவேளை இப்படி அர்த்தம் படும்படி இருந்திருந்தா, அவரு இந்த மாதிரி சொல்லாமலேயே இருந்திருப்பாரோ !!!!) அறிஞர் அதுவும் பேரறிஞர், அவரோட பேச்சுக்கு இந்தப் பாமரன் எல்லாம் அருஞ்சொல் பொருள் விளக்கம் மாதிரி சொல்ல முடியுமா என்ன?

எதிர்க் கட்சியை, எதிரிக் கட்சியா நெனைக்கப் படாது என்பது தான் இந்த வாசகத்தின் அடிநாதமான உண்மையின் குரல். (அடுத்த வீட்டுக்காரன் வட நாட்டானாக இருந்தாலும் சரி, சூப்பர் பிகர் ஏதாவது இருக்கா பாரு என்று சொல்வது தான் இன்றைய நவ நாகரீக வடிவம்). எதிரிகளை விரோதிகளாய் நினைக்காமல், அவரிடம் கூட ஏதாவது நல்ல குணங்கள் இருந்தால் அதைப் பேச வேண்டும் என்ற நல்ல கருத்துக்காக சொன்ன சேதி…ஆலோசனை எங்கே போச்சு?? கனி இருக்கும் போது காய் பற்றி என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு என்று தானே வள்ளுவரும் ரெண்டு வரி எழுதி வச்சாரு?? நாமும் இனி பழம் நோக்கியே காயை நகர்த்துவோம்.

ஆமா… காய் நகர்த்தல் என்கிறார்களே??? அப்டீன்னா?? அந்த காலத்திலெ காய் வைத்து ஆடிய ஆட்டங்கள் அதிகமாய் இருந்திருக்குமோ?? தாயம், ஆடு புலி ஆட்டம், செஸ் என்று இப்போதைய பெயரில் விளங்கும் சதுரங்கம், பரமபதம் இப்படி எல்லாத்துக்கும் காய் நகர்த்தல் தான் முக்கியமான மூவ். (பாவம்.. இந்தக் காலத்தின் வீடியோ கேம் மட்டுமே விளையாடத் தெரிந்த இளைய தலைமுறைக்கு… இந்த காய் வைத்து விளையாடும் விளையாட்டுகள் பற்றிய பெயர் கூட தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை) ஆனாலும் இந்த காய் வைத்து ஆடும் எல்லா ஆட்டங்களும், ஆரம்பம் ரொம்பவே டல்லு தான் (ஃபேஸ் புக்கில் கூட இப்படி ஆரம்பம் டல்லாத் தானே இருக்கு… அப்புறம் ஆராவாரம் தானே?)

நாம செய்யிற ஒவ்வொரு காரியத்தையும் நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தோடு சம்மந்தா சம்மந்தமில்லாமல் சம்பந்தப் படுத்திப் பேசுகிறோமே?… கேட்டிடுருக்கீகளா? இப்படித்தான் ஒரு நாள் ஏதொ பேசிக்கொண்டிருந்தோம். பல்லி அடிக்கடி கத்தியது. அது என்னோட அரட்டைக்காரனுக்கு செமெயா பாதிச்சது. (எனக்கென்னவோ அந்தப் பல்லி குஜாலா, நேத்து ராத்திரி யம்மா என்று பல்லி பாஷையில் பாடுவது போல் இருந்தது.) அத்தனைக்கும் அவரு டாக்டர் வேறு. நோயாளிக்கு ஏதாவது பிரச்சினையா?? போன் போட்டு விசாரிக்கிறார்… அவரால் நிம்மதியாக இருக்க முடியலை.. அரசு மருத்துவர் இவ்வளவு அக்கறையோடயா?? என்று மனதுக்குள் பல்லி கத்துது. நட்ட நடு ராத்திரியில் (இரவு 11 மணி தானுங்க.) நாய் வேறெ கத்திச்சா??? அவரு அப்செட் ஆகி தூங்கப் போயிட்டார். அடுத்த நாள் அந்தமான் தீவில் 4.8 அளவில் பூகம்பம் வந்த செய்தி தெரிந்தது. பல்லிக்கும் நாய்க்கும் தெரியுது… நமக்குத் தெரியலையே?? ஆமா 30 நளில் பல்லி பாஷை கத்துக்க புத்தகம் ஏதும் இருக்கா??

நாய் வித்த காசு குரைக்காது என்பார்கள். அதே போல் ஒரிஜினல் மாம்பழத்தை விடவும் திருட்டு மாங்காய்க்கு ருசியே தனி தான் போலிருக்கு. ஒரு வேளை இலவச இணைப்பு என்பது நமது கலாச்சாரத்தில் ஊறிப்போய்விட்ட விஷயமா ஆயிடுச்சோ? தாளிக்க சட்டி கிடைக்கும் என்பதற்காகவே ஏகப்பட்ட எண்ணெய்கள் வாங்கிய திருமதிகள் பலரில் என் தர்ம பத்தினியும் அடக்கம். (ஆனா அந்த தாளிக்கும் பாத்திரம் அத்தனையும் ஒரு தடவை கூட உபயோகப்படாமல் அப்படியே அடுப்பங்கரையில் தூங்கும் என்பது வேறு விஷயம்.) அந்தக் காலத்தில் பலசரக்குக் கடையில் சாமான் வாங்கினால். அம்மாவின் முந்தானையை பிடிச்சிட்டு கூடவே வரும் வாண்டுகளுக்கு அச்சு வெல்லம் அன்பளிப்பா கிடைக்கும். (அதுக்காகவே அம்மா பிள்ளை ஆனவன் நான்) அது டேஸ்டே தனி தான்.

தயிர் எவ்வளவு தான் வாங்கினாலும், அதில் கொஞ்சமாவது கொசுறு இல்லாட்டி கதையாவாது என்பது தனிக்கதை. இலவச இணைப்புகள் தான் மெயின் புத்தகத்தை விட நல்லா இருக்கு. மனிவியுடைய தங்கையை இலவச இணைப்பு என்றும் அழைக்கலாமா?? அவர்களுக்கு திருமணம் ஆகும் வரை… எப்படியோ… ஏதோ ஒன்று, சும்மாவோ அல்லது திருட்ட்டுத் தனமாவோ கெடைக்கிறது சுகம்மா இருக்கு. ஏன் இப்படி ஆயிடுச்சி??

தப்பு செய்வவர் தைரியமா, சந்தோஷமா இருக்காய்ங்க… நீதி நேர்மை நாட்டுக்கு நல்லது, நாலு பேத்துக்கு நல்லது செய்யலாம்னு நெனைக்கிறவங்க பயந்து பயந்து, நொந்து நூலாகி இருக்காங்களே?? எங்கேயோ தப்பு நடந்திருக்கே?? இன்னொரு விஷயம் நம்ம நாட்லெ தான் விதி மீறல் செய்வது கௌரவமான செயலா பாக்கப் படுது. ரூல்ஸ் ஃபாலோ பன்றவய்ங, பொழைக்கத் தெரியாதவங்க லிஸ்ட்லெ வந்திடுவாங்க. தப்பு செய்தால் தம்பியா இருந்தா கண்டிக்கலாம். அண்ணன் தப்பு செய்தா??? தம்பியும் சொல்லிக் காட்டலாமா??? ….மே… காட்டியிருக்காங்கலே… இப்பொ கம்பர் எண்ட்ரி ஆகிறார்.

கும்பகர்ணன் இரவணராஜாவோட அன்புத் தம்பி.. என்ன.. எல்லாத் தம்பிகளும் துக்கமா இருப்பாய்ங்க. இவரு கொஞ்சம் தூக்கமவே இருப்பார். அவ்வளவு தான் வித்தியாசம். அவரும் ஒரு நாள் ராஜாவெப் பாத்து சொல்றார்.. ஓவியங்கள் அதிகமா இருந்த நம்ம ராஜ்ஜியத்தெ தீ வந்து சாப்பிட்டுப் போயிடுச்சி…( தீ அழிச்சிடுச்சி என்று நெகட்டிவா சொல்லலை, கம்பர். தீ சாப்பிட்டு விட்டது என்று பாஸிட்டிவா சொல்கிறார்.) நல்ல குடியில் பிறந்த மாற்றான் தோட்டத்து மனைவியை சிறை வச்சியே…நல்லதா அண்ணா??( மோசமான குடியில் பொறந்த ஆளு கூட சகவாசம் வச்சிருந்தா பரவாயில்லையா கும்பண்ணே???)

ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய்
கோவியல் அழிந்தது என வேறு ஒரு குலத்தோன்
தேவியை நயந்து சிறை வைத்த செயல் நன்றோ
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?

கும்பகர்ணன் நல்லவரா கெட்டவானா என்று பட்டிமன்றம் வச்சா, இனி மேல் நீங்க நல்லவர்னு ரொம்ப தைரியமா பேசலாம்.