வளைகாப்பு


[இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல. ஆனால் அரசியல் களத்தில் நடக்கும் சம்பவங்களை எடுத்து இலக்கிய சாயம் தரும் முயல்வு தான்]

பிரதமர் மோடி அவர்களுக்கும், பா ஜ கட்சியின் தலைவருக்கும் வளையல்கள் அனுப்பும் போராட்டம் நடந்ததாய் பத்திரிக்கையில் செய்தி வந்தது. நாமும் நம்ம கோட்டாவுக்கு எங்கெங்கோ சுத்தி அதில் வளையல்கள் எப்படி பேசப்பட்டிடுக்குண்ணு சொல்ல விழைகிறேன்.

வளையல்களுடன் தொடர்வு நிறைய இருப்பது, வளைகாப்பு தான். பரமக்குடி நெசவாளர் குடியிருக்கும் பகுதியில் வளைகாப்பு நடக்கும். 5 மாத கர்ப்பினியை தலைக்கு அலங்காரம் செய்வார்கள். கத்திரிக்கய் அலங்காரம் எனக்குப் பிடிக்கும். கிட்டத்தட்ட 7 பேர் சூழ்ந்து அந்த அலங்காரம் செய்ய வேண்டும். பக்கம் மூவர் வீதம் ஆறு நபர்களும்,, தலைமை அலங்காரம் செய்பவர் ஒருவர். இப்படி நாமெல்லாம் உன்னோடு இருக்கோம். கவலையே பட வேண்டாம் எனச் சொல்வது போல் நடக்கும் சடங்கு அது. எல்லாம் முடிந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்வது வழக்கம்.

நான் அந்தமானுக்கு திருமணமாய் வந்த புதிதில் ஒரு இஸ்லாமிய நண்பரின் மனைவிதான் எங்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்.. அவருக்கு பதில் மரியாதையாக், அவரின் மனைவிக்கு பரமக்குடியில் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்தோம். தலை அலங்காரம் & போட்டோவும் உண்டு. .

அப்படியே நம்ம பார்வையெ கொஞ்சம் சங்க காலத்துக்கு திருப்புவோம். அங்கேயும் வளையல் சத்தம் கேக்குது. இல்லெ..இல்லெ.. கேக்காமெ என்ன செய்றாய்ங்க பாக்கலாம்.

காதலும் வீரமும் போட்டி போட்டு அதை கவிதை வடிவில் தொகுத்த தொகுப்பு தான் நம்ம புறநானூறு. போரில் (அக்கப்போரிலோ அல்லது இந்தக் கால பீரிலோ இல்லீங்கொ) தலைவன் (இந்த இடத்தில் கட்சி தலைவன் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) அடிபட்டுக் கிடக்கிறான். தலைவியோ, இரவு நேரத்தில் அவரைத் தேடிப் போகிறாள். அழ நினைக்கிறாளாம். அழுதால் பக்கத்து ஏரியாவிலிருந்து புலி வந்தாலும் வந்துவிடும். எனவே, தலிவா… என்னை ..என் வளையலோடு சேத்துப் பிடிச்சிக்க.. அந்த சத்தமும் கேக்காது. நீயும் தப்பிச்சிக்கலாம். எப்புடி ஐடியா?

இந்தக் கால வளையல் மேட்டருக்கு கைக்குக் கிடைத்த அந்தக் காலப் பாடல் இதோ…

’ஐயோ!’ எனின்யான் புலிஅஞ் சுவலே;

அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கவல்லேன்;

என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை

இன்னாது உற்ற அறனில் கூற்றே;

நிரைவளை முன்கை பற்றி

வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

(புற நானுறு 255 பாடல் )

வளையல் நம்ம கையில் இருந்தா தானே சத்தம் எல்லம் வரும் அதுக்குப் பதிலா தலைவா, வலையலையே வச்சிக்கோ. இப்படியும் எடுத்துக் கொள்ளலாமோ?

சின்னவளை முகம் சிவந்தவளை என்று ஒரு அட்டகாசமான பாட்டு டி எம் எஸ் பாடியது கேட்டிருப்பீங்க. ஆனா ஆண்டாள் வளை(யல்) பக்கம் சற்றே கவனம் செலுத்திப் பாப்போம்.

சாரி கொஞ்சம் ஓவர் தினுசில் தான் இருகும் இந்த சீன். ரங்கன் திருவீதி உலா வருகிறார். எல்லாரும் தேமேன்னு கும்பிட்டுப் போக, இந்த ஆண்டாள் மனதுக்குள் மட்டும் ஓர் அனாவசியமான கேள்வி எழுகிறது. ஏன் இவர் என் வீட்டுப் பக்கம் வருகிறார்? (சைட் அடிக்க வருகிறாரோ என்று நினைப்பதை ஆண்டாள் எழுதவில்லை என்பது என் யூகம்)

ஆண்டாள் தொடர்கிறார். நம்ம திருமால் கலர் இருக்கே, சுண்டினா ரத்தம் வார மாதிரி எம் ஜி ஆர் மாதிரி தக தகன்னு மின்றாராம்.

பசுமையான் நிறம் கொண்ட திருமால். அட அப்புறம்….ரொம்ப செல்வாக்கானவர். அதை விலை உயர்ந்த கற்கள் பதித்த மாளிகையில் வேறு வசிக்கிறவராம். வாமன அவதாரம் எடுத்தப்பொ, கவுரவம் படத்து பாட்டு தான் எல்லாருக்கும் தெரியுமே? மூன்றடி மண் கேட்டான் வாமணன் உலகிலே..ஆனா அதுலெ திருப்திப்படாமெ ஏதோ குறை இருக்காம். அப்பொ குறை ஒன்றுமில்லைன்னு பாட என்ன செய்யலாம்னு நெனெச்சி, ஆண்டாள் வளையலை ஆட்டெயப் போட வந்திருப்பாரோ இந்தப் பொல்லாத இரங்கன்.

இப்படி ஓடுது ஆண்டாள் கற்பனை. என் கற்பனை இந்த மாதிரி ஏதும் குத்தம் குறை இருந்தா வச்சிக்கட்டும் என வளையல் அனுப்பி இருப்பாகளோ? நாம பாட்டும் பாத்திடுவோம்.

மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார்
பச்சை பசும் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற
பிச்சை குறை ஆகி என்னுடைய பெய் வளை மேல்
இச்சை உடையறேல் இத் தெருவே போதாரோ ?

திருவரங்க திவ்ய தேசத்தை ஆண்டாள் மங்களாசாசனம் செய்த 610 ஆவது பாசுரம் இது.

இவ்வளவு பாத்த நாம, கம்பனை விட்டுட்டா அவரு கண்டிப்பா கோவிச்சிக்குவாரு. கம்பன் பார்வையில் வளையல் என்ன பாடு படுதுண்ணும் தான் பாத்திடுவோமே. அண்ணலும் நோக்கி, அண்ணியும் நோக்கிய பின்னர் நிகழும் ஒரு காட்சி. வில் ஒடிந்த சத்தம் காதை எட்டுகிறது. உடைத்தது அந்த ஆசாமிதானா? அதை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரணமாகப் பெண்கள் ஆண்களை நிமிர்ந்து பார்ப்பது அந்தக் காலத்தில் வழக்கம் இல்லையே. ஏதாவது தந்திரம்தான் செய்யவேண்டும். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், அப்பாடா அந்தக் காலத்தில் அவனா நீ எனக் கேட்கவில்லை.

அப்பொ இந்தமாதிரி நாடகமே தேவையில்லை எனில், வளையலுக்கே வேலை இல்லையோ!! நமக்கெதுக்கு அரசியல்? இலக்கியத்தில் குதிப்போம்.

இதோ கம்பன் வளையலை வைத்துக் கலக்கும் பாடல்.

எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்
கை வளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள்

தொலைக் காட்சியினைத் தொடர்ந்து பார்த்தால் இன்னும் ஏதாவது சங்கதி கிட்டும். அப்பொ கம்பனோடு கை கோர்த்து வருகிறேன்.