உரோமபத மன்னன் முனிவர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 5

கம்பன் காப்பியத்தில் இன்று நாம் காண இருப்பது நேரடியான சந்திப்பு அல்ல. வசிட்ட முனிவர் சொன்ன ஒரு சந்திப்புக் காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் போனதாம். அக்குறையினைக் களைய முனிவர்களின் சந்திப்பு நிகழ்கிறது. மழை என்றதும் நமக்கு ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மராபிலேய்… ஹொய்
வெயில் வருது வெய்யில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே…
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

இப்படி ஒரு பாடல் யேசுதாஸ், சித்ரா குரலில் தேனைக் குழைத்துத் தந்தது போல் கேட்டு மகிழ்ந்திருப்பீர்கள். மழை என்றாலே மகிழ்வு தான். அந்தமானில் இருப்போர்க்கு இந்த மழை அடிக்கடி, பல மாதங்களுக்கு வந்து இன்பம் தந்து கொண்டிருக்கும். மழை இல்லை என்றால் குடிநீருக்கும் சிக்கல் தான். ஏன் மழை இல்லாமல் போகிறது? நல்லவர்கள் நாட்டில் குறைவது தான் காரணம் என்கிறது மூதுரை. ரொம்பவெல்லாம் வேண்டியதில்லை. நல்லார் ஒருவர் இருந்தாலும் போதுமாம் மழை பெய்ய.

நம் கல்லூரித் தோழரும் நல்லவருமான அந்த ஒருவர் கதை பார்ப்போம். பொதுவாக யாருக்காவது சிரமம் வந்து, அது நல்லபடியா சரியானால், கடவுளுக்கு நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வர். பொங்கல் வைப்பது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது இப்படி இத்யாதி இத்யாதி. நம் நல்லவரோ, வித்தியாசமான நேர்த்திக்கடன் வேண்டி இருக்கிறார். வருஷத்துக்கு ஓர் இலட்சம் என ஏழைகளுக்கு மருத்துவச் செலவு செய்வதாக. அதுவும் ஐந்து ஆண்டுகள்.
சரி எப்படி உதவ? அதுக்கு ஒரு நல்லவன் தேவைப்பட, நான் அகப்பட்டேன். (இன்னுமா என்னை இந்த உலகம் நல்லவன்னு நம்பிட்டிருக்கு!!) கோவையில் உள்ள ஒரு டாக்டரிடம் விசாரித்த போது, உடன் நோயாளி தயாராய் இருப்பதைச் சொன்னார். தான் வாங்கும் ஃபீஸ் எல்லாம் தள்ளுபடி செய்து உதவ முன் வந்தார். அதெப்படி டிவி நியூஸ் தவிர மற்ற எல்லா இடங்களிலும் நல்லவர்களாகவே நிறைந்து இருக்கிறார்கள்? ஆச்சரியமாக இருந்தது. உதவியது யார் என்றே தெரியாமல், ஓர் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட திருப்தி நம் நண்பருக்கு. தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

நம் நல்ல(வர்) நண்பர் உதவியால் கோவை மருத்தவர், ஏழை நோயாளிகளுக்கு உதவி செய்ய, அது அரசல் புரசலாக வெளியே தெரிந்திருக்கிறது. நாமும் செய்வோம்லே என்று ஒரு குணமடைந்த நோயாளி, 1000 பவுண்ட் (ஏறக்குறைய ஒரு லட்சம்) தந்து விட்டு, அந்த நண்பர் மாதிரியே உதவுங்க எனச் சொல்லிட்டுப் போனாராம். இப்ப தெரிகிறதா கோவையில் தொடர்ந்து மழை பெய்வதன் காரணம்?

கோவை டாக்டருக்கும் கிடைத்த ஒரு நல்லவர்

அப்படியே மழை இல்லாமல் இருந்தால், நல்ல காரியங்கள் செய்யத் தொடங்கினால் போதுமாம்! இப்படித்தான் ஒரு காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில், முனிவர் ஒருவர் வசித்து வந்தாராம். அதன் அருகே ஒரு கிராமத்தில் மழை இல்லாமல் பஞ்சம் நிலவியதாம். குடிப்பதற்கு கூட, தண்ணீர் கிடைக்காமல் மிகவும் கவலையோடு இருந்தனர். ”இன்னும் சிறிது நேரத்தில், இங்கே மழை பொழிய வைத்து, கிராமத்தின் குடிநீர் பஞ்சத்தையும் போக்கப் போகிறேன்; ஆனால், அதற்கு முன், நீங்கள் எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும்…” என்றாராம் வந்தவர். உங்கள் கிராமம் செழிப்படைந்த பின், தான, தர்மங்கள் செய்வதை அதிகப்படுத்த வேண்டும். என்ற உறுதிமொழி வாங்கி பின்னர் மழை பொழிய வைத்தாராம்.

இதெல்லாம் நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதல்லவா? வெளிநாட்டில் நடந்த சமாச்சாரம் என்றால் நீங்கள் எளிதில் நம்பிட ஏதுவாக இருக்கும். அது 1991 இன் லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணம். அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மழை இல்லையாம். இந்தியாவிலிருந்து சென்ற யோகி ஒருவர்தான் யாகம் வளர்த்து மழை பெய்ய வைத்தாராம். முதலில் யாகம் வளர்த்த போது, பக்கத்து வீட்டுக்காரரோ தீயணைக்கும் படைக்கு தகவல் சொல்லி யாகத்தை நிறுத்திவிட்டாராம். பின்னர் தான், மழை அவர்களுக்கும் தேவை என்பதால் அனுமதி தந்தார்களாம். யாகம் நடந்த ஒரு வாரகாலத்தில் 08-07-1991 இல் நல்ல மழை பொழிந்ததாம் சுவாமி லக்‌ஷ்மன் ஜு ரைனா அவர்களின் கைங்கரியத்தால்.

சுவாமி லக்‌ஷ்மன் ஜு ரைனா

அதென்ன நல்ல மழை என்று கேட்கிறீர்களா? தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான அளவு பெய்தல் தான் நல்ல மழை எனப்படும்.

இப்படித்தான் உரோமபத மன்னன் ஆட்சிக் காலத்திலும் மழை இல்லாமல் சிரமப்பட்டார்களாம். அப்போதைய முறைப்படி (ஏன் இப்போதைய நடைமுறையும் கூட) ஏதாவது சிக்கல் வந்தால் முனிவர்களிடம் ஆலோசனை கேட்கும் சந்திப்பு நிகழ்கிறது. நாம் பார்த்த ஜு ரைனா மாதிரி அந்தக் காலத்தில் கலைக்கோட்டு முனிவர் வந்தாலாகும் என முனிவர்கள் சொன்னார்களாம். இப்படிச் சொல்கிறது கம்பனின் சந்திப்பின் வரிகள் இதோ.

‘அன்னவன் தான் புரந்து அளிக்கும் திரு நாட்டில்
நெடுங் காலம் அளவது ஆக.
மின்னி எழு முகில் இன்றி வெந் துயரம்
பெருகுதலும். வேத நல் நூல்
மன்னு முனிவரை அழைத்து. மா தானம்
கொடுத்தும். வான் வழங்காது ஆக.
பின்னும். முனிவரர்க் கேட்ப. “கலைக்கோட்டு-
முனி வரின். வான் பிலிற்றும்” என்றார்.

அந்த உரோமபத மன்னன் காத்து ஆட்சி புரியும் அந்தச் சிறந்த நாட்டில் நீண்ட கால அளவாக மின்னி எழுகின்ற மேகங்கள் இல்லாமையால் கொடிய துன்ப நோய் மிகவே அந்த அரசன், வேதங்களையெல்லாம் கற்றறிந்த முனிவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேதங்களில் கூறியபடி சிறந்த தானங்களைக் கொடுத்த போதும் மழை பெய்யாது போகவே மறுபடியும் முனிவர்களை அழைத்து மழை பெய்விக்க வழி யாதெனக் கேட்க கலை கோட்டு முனிவன் வந்தால் இங்கு மழை பெய்யும் என்றார்கள்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
28-07-2022

கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 4


தயரதன் வசிட்டர் சந்திப்பு

கம்பனின் படைப்பில் இதுவரை பார்த்த மூன்று சந்திப்புகள் எல்லாமே, வசிட்ட முனிவர் தன் மனதில் நினைத்துப் பார்த்தவைகள். இன்று நாம் அந்த வசிட்டர் எப்படி தயரத மன்னரைச் சந்தித்தார்? என்பதைப் பார்க்க உள்ளோம். அதனைக் கம்பன் அவர்கள் தன்னுடைய வரிகளில் எப்படி குறிப்பிட்டுள்ளார்? என்பதையும் சற்றே பார்க்கலாம். நேராக மூக்கைத் தொடுவது என்பது தான் நம் வழக்கம் இல்லையே! சற்றே கொஞ்சம் கொஞ்சமாக சுற்றிவிட்டு, மீண்டும் கம்பனின் மூக்கை தொடுவது பற்றி யோசிக்கலாம்.

களத்தூர் கண்ணம்மா… களத்தூர் கண்ணம்மா என்று ஒரு படம். இந்த படத்தில் மற்ற எல்லாச் சிறப்புகளையும் தூக்கி எறிந்து விட்ட்து ஒரு குழந்தை நட்சத்திர அறிமுகம். ஆம். அன்று குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் தான், இன்றைய உலக நாயகன் கமலஹாசன்.

இப்போதைக்கு, களத்தூர் கண்ணம்மா என்றாலே கமலஹாசன் அறிமுகமாகிய படம் என்கின்ற அளவிற்கு புகழ் பெற்று விட்டது அந்தப் படம். அந்தக் காலத்தில், அதாவது கமலஹாசன் என்று பெயரே, யாரும் அறியாமல் இருந்த காலத்தில் நடந்திருக்கும் செய்தியினை ஒட்டியது தான் நான் சொல்ல வந்திருக்கும் சேதி. இந்தப்படம் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டதாம். அதைப் போலவே கமலஹாசன் பிறந்த ஊரான பரமக்குடியிலும் மிகப் பிரபலம் அப்படம். அந்தப் படத்தில் கமலஹாசன் பாடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் பாடல் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! மேலும் பிரசித்தம். அந்தப்பாட்டை அப்படியே கொஞ்சம் மாற்றி வீடுகளின் பாடிக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருகிறது. தமிழின் சிறப்பே அது தானே!

தமிழில் ஒன்றை நாம் எப்படி உச்சரிக்கின்றோம் என்பதை ஒட்டி அதன் பொருள் மாறுபடும். நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் கமலஹாசன் பாடிய பாடலின் சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் பாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் அதன் பொருளும் மாறி இருந்தது. அம்மா உண்ணியே! அப்பா உண்ணியே என்று பாடிக் கொண்டிருந்தனர். பரமக்குடி வட்டாரத்தில் உண்ணி என்பது, ஆடு மாடுகள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூச்சி.

ஆனால் அந்தப் படத்திலோ, இறைவனைப் பார்த்து அம்மாவும் நீயே தான்; அப்பாவும் நீயே தான்; என்று பாடுவது போல அமைந்த பாடல் அது. அப்பா ஒரு பூச்சியைப் போல்; அவன் அம்மாவும் ஒரு பூச்சி தான்; கடவுளே! நீ தான் எல்லாம் என்ற வகையில் வயோதிக பாட்டிகள் பாடிக்கொண்டிருந்தனர். சிறுவயதில் கேட்டது இன்னும் மனதில் நினைவாக இருக்கிறது. கடவுளையே இப்படிப் புகழ்ந்து பாராட்டி வருகிறார்களே! ஏன் இப்படி? உணர்வுபூர்வமாக யோசிக்கத் தோன்றுகிறது, இந்த பாடலை கேட்டதும். கடவுள் தான் எல்லாமே என்று முழு சரணாகதி அடந்த நினையினைக் கடவுளிடம் சொல்வது போலத்தான் அமைந்திருந்த்து அப்பாடல்.

அதேபோலத்தான் எல்லாம், எல்லாம்தான் என்று பிரகாஷ்ராஜ் ஒரு ரகசியமானதை பகிரங்கமாக விளம்பரம் செய்து ஏதோ விற்பனை செய்து கொண்டு இருந்தார். ஆனால் வெளிப்படையாக எல்லாவற்றையும் விட்டாலும் கூட, விடாமல் இருக்க போவது எதை? இப்படி ஒரு கேள்வி கேட்டாரல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தான் பதில் சொல்வார். இங்கே இப்படிப்பட்ட கேள்விகு ஓர் ஆங்கிலேய அதிகாரி என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.

அது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு வடமொழியில் இருந்த பகவத்கீதையை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கான செலவு கணக்கை எடுத்து அவருடைய மேலதிகாரிக்கு அனுப்பி இருக்கிறார். மேலதிகாரியோ, இன்றைக்கும் கேட்கும் அதே கேள்வியை அன்றைக்கே கேட்டாராம்! இதற்காக ஆகின்ற செலவை நியாயப்படுத்த வேண்டும் என்றாராம். அதற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி சொன்ன பதில் தான், மேலே குறிப்பிட்ட எல்லாம் தான்… எல்லாமே தான் போன்ற பதில். நாம் தான் ஏதோ ஒரு காலத்தில், இங்கிலாந்துக்கு திரும்பி செல்லத்தான் வேண்டும். அப்பொழுது ஒன்றுமே வேண்டாம் ஆனால் எல்லாமும் இருக்கின்றது போன்ற நிலையிலும் ஏதாவது ஒன்றை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லவேண்டும் என்றால், அது இந்த பகவத்கீதை ஆகத்தான் இருக்க முடியும். மேலதிகாரிக்கு அவரின் விளக்கம் பிடித்திருந்தது. பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையும் அப்படித்தான் தொடங்கியது.

இப்படித்தான் கம்பனின் வரிகளை படித்தவுடன் நினைக்கத் தோன்றுகிறது. வசிட்ட முனிவரை தசரத மன்னன் சந்தித்தபோது. யாரையாவது சந்திக்கும் பொழுது, நீங்க வல்லவர், நல்லவர் என்பதும், மானே தேனே எனப் புகழ்ந்து தள்ளுவதும் இப்போதைய பழக்கம் என நினைக்க வேண்டாம். காலம் காலமா கம்பன் காலம் தொட்டு அது நடந்திட்டே இருக்கிறது. இது தூரமாய் இருக்கின்ற ஒருவரை, மிகவும் அருகில் அவரை நெருக்கி, நெருங்கியவர் ஆக்கிக் கொள்வதற்கு இத்தகைய புகழ் வார்த்தைகள் தேவைப்படுகின்றது. இதைத்தான் கம்பனும் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது போலத்தான் படுகிறது.

ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது தொல் குலத்
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.

தயரத மன்னன், ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி, பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும், தந்தைமாரும் தவப்பயன்களும் அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும் மற்றையோரும். வேறுபட்ட உயிர்களும் எல்லாமே எனக்குத் தாங்களேதாம் என்றாராம். வசிட்டரை மன்னன் எப்படி மதித்துள்ளான் என்பது இதனால் புலப்படும்.

அதென்ன ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் பிரம்மன்? இதற்கும் பதில் பகவத்கீதையில் இருக்கிறது. ‘ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘யுகம்’ என்பது ‘மகாயுகம்’ என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு.

அதாவது கிருத யுகம் (17,28,000 ஆண்டுகள்), திரேதாயுகம் (12,96,000 ஆண்டுகள்), துவாபரயுகம் (8,64,000 ஆண்டுகள்), கலியுகம் (4,32,000 ஆண்டுகள்); ஆக மொத்தம் ஒரு மகாயுகம் என்பது 43,20,000 ஆண்டுகள். ஆயிரம் மகாயுகங்கள் என்றால், 432 கோடி ஆண்டுகளுக்குச் சமமானவரே என்று அழைக்கிறார் அரசர். அப்புறம் சந்திப்பு வெற்றியாய் முடிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன?

கம்பன் வரிகள் மூலம் நாம் கற்க வேண்டிய பாடமும் அது தானே!

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 3


குத்துப் பாடல்கள் இப்பொழுது மிகப் பிரபலம். பல்வேறு தொலைக்காட்சிகளிலும், குறிப்பாக டிஜே என்ற பெயரில், கூட்டம் கூடுகின்ற எல்லா இடங்களிலும் இந்தக் குத்துப்பாட்டு அரங்கேறும். இப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சியிலும் இவைகளுக்கு தனி நேரம் ஒதுக்கித் தருகிறார்கள். குத்துப்பாடல்கள் என்னவோ இப்பொழுதுதான் வந்தது என்று நினைக்க வேண்டாம். இதற்கெல்லாம் தாத்தா பாடல் எல்லாம் இருக்கிறது. சித்தாடை கட்டிகிட்டு, சிங்காரம் பண்ணிகிட்டு என்ற குத்துப் பாடலும், மச்சானைப் பார்த்தீங்களா? என்று குசலம் விசாரிக்கும் பாட்டாகவும் இருக்கட்டும், தன் இசையால் அனைவரையும் மயக்கி சொக்க வைக்கிறது.

ஒய் திஸ் கொலவெறி? துவங்கி, பத்தலை பத்தலை வரை இளைஞர்களை குறி வைத்தே இப்பாடல்கள் அமைகிறது. பாடல்களின் வரிகளில் இலக்கணம், இலக்கியம் எல்லாம் பார்க்கக் கூடாது. ஆனால் கால்களும் கைகளும் தானாகவே ஆட்டம் போட ஆரம்பிக்க வேண்டும். இது மட்டும்தான் இந்த குத்துப் பாடல்களின் விதி. லாலாக்கு டோல் டப்பிமா அல்லது ரண்டக்க ரண்டக்க இவற்றுக்கெல்லாம் கூகுளில் சென்று தேடி பார்த்தாலும் பொருள் தெரிய வாய்ப்பில்லை. ஆட்டம் போடுவதற்கு இந்தப் பாடல்களின் இசை மிக அவசியமாக இருக்கிறது.

சில சமயங்களில் நம் வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகள் நம்மை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கும். சபை நாகரீகம் கருதி ஆடுவதைத் தவிர்த்தாலும் கூட, மனதில் ஒரு குதூகலம் இருக்கத்தான் செய்யும். இந்த மாதிரியான குதூகலம் தான் கம்பன் படைத்த இந்த மூன்றாவது சந்திப்பில் நாம் காண இருக்கிறோம். தேவர்கள் முதலில் சிவனிடம் சென்று உதவி கேட்க, அவர் பிரம்மனை நோக்கி கைகாட்ட, பிரம்மனுடன் சேர்ந்து திருமாலை, அவர் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கும் நிகழ்ச்சியைத் தான் நாம் இப்போது காண இருக்கிறோம்.

நடக்காத ஒன்றை நடந்ததாக கற்பனை செய்து, அதனால் இன்பம் எய்தும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் கனவில் வந்து போவது என்னமோ, கவர்ச்சிக் கன்னிகளாகத்தான் இருக்கும். காதலர்கள் படும் பாடும் பெரும்பாடு இந்த நேரங்களில். காதலன், காதலியை கனவிலேயே சந்தித்து, நேரில் சந்திக்கின்ற இன்பத்தை பெற்ற மாதிரி நினைப்பர். ஒரு காதலன் சற்றே வித்தியாசமானவன். அவன் தேசத்தைக் காதலிக்கின்றவன். மனம் முழுதும் தேச ரதம் இழுப்பவன். அவன் பெயர் பாரதி. அப்போது சுதந்திரம் அடையவில்லை; ஆனால் சுதந்திரம் அடைந்து விட்டோம் என அவன் மனது கும்மியடிக்க சொல்கிறது. சுதந்திரத்தை பாராதே மூடிய அவன் வீரியக் கண்கள், சுதந்திரத்தை கண்டுவிட்டோம் என்று களியாட்டம் ஆனந்த நடனம் புரிந்து இருக்கின்றது.

இதேபோல் சுதந்திர இந்தியாவை வீரத்துடன் எதிர்நோக்கி காத்திருந்த சுபாஷ் சந்திர போஸின் கண்களில் 1943 ஆம் ஆண்டிலேயே அப்படி ஒரு கனவு வந்துள்ளது. அதை அந்தமான் நிக்கோபார் தீவுகளில், முதன் முதலாக சுதந்திர இந்தியக் கொடியினைப் பறக்கவிட்டு, அந்த ஆனந்தத்தை அனுபவிக்கிறான். தந்தையின் விருப்பம் அரசு நிர்வாக அதிகாரி ஆக வெண்டும் என்பது. அதில் தேர்வாகி தந்தையின் விருப்பம் நிறைவேற்றுகிறான். பின் தன் விருப்பம் சொல்லி அதன் பின்னர் தேசத்திற்காக பாடுபட தந்தையின் ஒப்புதலோடு, தேசியக்கொடியை பார்த்தவன் அல்லவா அந்த வீரன்! நேதாஜி அவர்கள் ஆனந்த நடனம் ஆடினார் என்ற தகவல் இல்லை.

1943 இல் நேதாஜீ கொடியேற்றியதின் நினைவாக இன்று அந்தமானில்

அந்தமானில் சிறைச்சாலை வருவதற்கு முன்பு, முழு அந்தமான் தீவே ஒரு சிறையாகத்தான் இருந்திருக்கிறது. அங்கும் பாட்டும் ஆட்டமும் நடந்திருக்கிறது. ஆனால் ஆடியோர் ஆங்கிலேயர். உடன் ஆடியவர் மட்டும் தூத்நாத் திவாரி என்ற வடநாட்டு எட்டப்பன். இதென்ன புதுக்கதை என்கிறீர்களா? வாருங்கள் அப்படியே 1858 ஏப்ரல் மாதத்தை கொஞ்சம் எட்டிப் பார்க்கலாம்.

அப்போது அந்தமான் தீவுகளின் காடுகளில் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட கிரேட் அந்தமானிய ஆதி பழங்குடி இருந்தார்களாம். அவர்கள் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். வேட்டையாடுதல் தான் அவர்களின் ஒரே தொழில். அந்த வேட்டையாடல் தொழிலுக்கு ஆங்கிலேயர்களின் வரவு தடையாக இருப்பதை உணர்ந்து அவர்களோடு மோதியுள்ளனர். இந்தப் போரில் ஆதிவாசிகள் தோல்வி தான். ஆனால் அதைப் பார்த்து தூத்நாத் திவாரி மட்டும் பரிதாபமாக ஆடிக் கொண்டிருந்தார்.

திறந்தவெளி சிறைச்சாலையாக அந்தமான் இருந்தபோது அங்கிருந்து 130 கைதிகளுடன் தப்பித்து ஓடிய ஒருவர்தான் அந்த தூத்நாத் திவாரி. தப்பித்த கைதிகள் அனைவரும் ஆதிவாசிகளின் அம்புக்கு இறையாகிவிட, இவர் மட்டும் சிறு சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். தப்பித்த அவர், மீண்டும் சிக்கினார். இந்தமுறை அவரின் நல்ல நேரம். மகளிரும் குழந்தைகளுமாய் ஆதிவாசிகள். தூத் என்ற பெயரை ஒட்டி பால் வடியும் முகம் பார்த்து ஆதிவாசிகளின் உள்ளமும் ஏதோ உருகி இருக்கிறது. அந்த கருணையின் காரணமாக அவருக்கு மன்னிப்பு வழங்கப்படுகிறது அவர் ஆதிவாசி கூட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆதிவாசிப் பெண்ணுடன் திருமணமும் செய்தி வைக்கிறார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, கண்ணா… ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று கேட்காமலேயே இன்னொரு மனைவியும் தந்திருக்கிறார்கள் அந்த ஆதிவாசிகள்.

இதற்கிடையில் மிகப்பெரிய போராட்டம் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆதிவாசிகள் போரிடத் தயாரான பொழுது, ஏனோ தெரியவில்லை இந்த எட்டப்பன்தான் அந்த தகவலை ஆங்கிலேயர்களுக்கு அனுப்பி வைக்கிறார். அம்புகளோடு வந்த ஆதிவாசி மக்களை, துப்பாக்கியால் சுட்டு அழித்து நாசமாக்கியது பிரிட்டிஷ் இராணுவம். அந்தமான் நிக்கோபார் தீவுகளிலேயே மிகவும் அதிகமான அளவில் இருந்த ஆதிகுடிகள் இப்போது மிகவும் குறைந்த அளவாய் ஆக்கியது அயோக்கிய ஆங்கில அரசு. பிரிட்டிஸ் மன்னர்களும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் ஆடிப்பாடியது ஒருபக்கம் இருக்கட்டும். இங்கே தேவர்கள் எப்படி ஆடிப் பாடுகிறார்கள் என்பதை கம்பனின் பார்வையில் பார்க்கலாம்.

ஆதிவாசிகளின் போர்க் கருவிகள் கொண்டு அலங்கரித்த ஆங்கிலேயர்கள்

கம்பன் பார்வையில் அப்படி ஒரு சந்திப்பு தென்படுகிரது. ஏன் இப்படி ஆட்டம்? பாட்டம்? என்ன நடக்கிறது அங்கே? நம்ம கையில் இருப்பதே அந்த கம்பன் பாடல் என்ற தொலைநோக்கி தான். அந்தப் பெருமாளைச் சந்தித்த போது அப்படி ஒரு மகிழ்ச்சியாம். தொலைநோக்கு சிந்தனையில் தேவர்கள் ஆடுகிறார்கள் பாடுகிறார்கள்.

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
சூடினர். முறை முறை துவளத் தாள்- மலர்.
[பாலகாண்டம் – பாடல் எண் – 194]

அசுரர்கள் இறந்து பட்டார்கள் என மனம் மகிழும் பொருமலால் (அத்தேவர்கள்) மகிழ்ச்சி என்னும் தேனைப்பருகி, எதுவும் அறியாதவர்களாய், ஆடியும் பாடியும் அங்கும் இங்குமாய் ஓடினவர்களாக அப்பரமனது துளசி மணக்கும் பாத மலர்களை வரிசை வரிசையாகச் சென்று வணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள். இதன் உட்குத்து (குத்துபாடல் சொன்னதெ இதற்குத்தானே!) ‘பரமனது தரிசனமே தமது துயரைப் போக்கும்’ என்ற நம்பிக்கை இருப்பதனால் துயருக்கே காரணமான அரக்கர் அழிவர் என்ற மகிழ்ச்சி மிகுதியால் ஆடிப்பாடி உவந்தனராம்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 2பிரம்மன் சிவன் சந்திப்பு

அந்தமான் தீவிற்கு மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீதர் அவர்களை, பொறியாளர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தோம். அவர் வருவதை கேள்விப்பட்டதும் அந்தமான் தீவில் இருந்த தலைமைச் செயலர் அவரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார். யார்? எங்கே? எப்படி? சந்திப்பது என்ற கேள்வி அப்போதும் எழத்தான் செய்தது. அரசு உயர் அதிகாரியான தலைமைச் செயலரை, அவருடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பது தான் மரியாதை என்று ஸ்ரீதர் அவர்கள் சொல்ல, அது ஏற்கப்பட்டது. மெட்ரோ மனிதர் தலைமைச் செயலகத்தில் நுழைந்ததும், தலைமைச் செயலர் அவரே தன்னுடைய அறையில் இருந்து இறங்கி வந்து, மெட்ரோ மனிதரை வரவேற்றது மனதை நெகிழ வைத்தது. சிறப்பான செயல்கள் செய்தற்கு உரிய மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது என்பதை உணர வைத்த தருணம் அது.


இதே போல் இன்னொரு முறை மத்திய இணையமைச்சர் அந்தமான் வந்த போது, ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை எந்த அலுவலகத்தில் வைத்துக் கொள்வது என தீர்மானம் செய்வதே பெருபாடாய் இருந்தது. ஓர் அலவலகத்தில் நட்த்தினால் அது அவர்களுக்கு சாதகமாகவோ, மற்றவர்களுக்குப் பாதகமாகவோ அமைந்துவிடும் என நினைப்பதால் வரும் சிக்கல்கள் இவை.

ஆனா கம்பன் காட்டும் சந்திப்புகள் வித்தியாசமானவை. இங்கே பொதுநலன் மட்டுமே மேலோங்கிநிற்கும். மற்றபடி புரோட்டோகால் போன்றவை எல்லாம் பின்னாடி வாய் மூடிக் கொண்டு நிற்கும். அப்படி ஒரு சந்திப்பு தேவர்களுடன், பிரம்மன் சந்தித்ததை கம்பன் சொல்லியதைப் பார்ப்போம்.

தேவர்கள் அனைவரும் அசுரர்களின் கொடுமையிலிருந்து தம்மை மீட்க வேண்டி சிவனை வேண்ட, சிவபெருமான் பிரம்மனிடம் அழைத்துச் செல்கிறார். இந்த இடத்தில் தேவர்கள் நிச்சயமாக ஏதோ சிந்தித்து இருப்பார்கள். சிவபெருமான் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டியபோது அவரின் உச்சியினைக் காண இயலாது தோற்றவர் அந்த நான்முகன். அதனால் பொய்யாக அங்கு மேலிருந்து கீழ் வந்து விழுந்த தாழம்பூவை கையிலெடுத்து, காணாததைக் கண்டது போல் சொன்ன கதை நிச்சயமாக நினைவுக்கு வந்திருக்கும். அத்தகைய பிரம்மனை வரவழைத்துக் கூட பேசியிருக்கலாம் இந்த சிவபெருமான். ஆனால் அசுரர்களின் செயலின் கடுமை கருதி, சிவனே பிரம்மனை நோக்கி செல்கிறார். பிரம்மனும் அதனைப் புரிந்துகொண்டு தன்னிடம் அவர் வருதல் தகாதென்று, ஆலோசனை மண்டபமாக இந்த காலத்தில் கான்ஃபரன்ஸ் கால் என்று சொல்கிறோமே அதுபோன்ற இடத்தில் சந்திப்பு நிகழ்கிறது.

தேவர்களின் நினைப்பு அந்தமானில் இருக்கும் இந்தப் பாமரனுக்கே புரியும் போது, அந்த சிவபெருமானுக்கு தெரியாமலா இருக்கும்? ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று நோயாளியை காட்டுவதற்கு முன்பாக அந்த மருத்துவர் செய்த சிகிச்சையின் பலனாக இன்னார் இன்னார் நலம் பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லி, நோயாளியின் மனதைத் திடப்படுத்த வார்களே! அதுபோலவே தேவர்களின் மனதை திடப்படுத்து வதற்காக, பிரம்மாவைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி அந்த அவையில் சந்திப்புக்கு முன் சிந்திக்க வைக்கிறார்.

தேவர்கள் முழுவதும் பயப்படுவது அசுரனான இராவணன் மீது தான். ஆனால் இராவணனின் மகன் மேகநாதன் (இந்திரசித்தன் எனப் பின்னர் பெயர் பெற்றவன்) இந்திரனையே கயிற்றால் கட்டி, கூட்டிச் சென்றபோது அவரை மீட்டு கொண்டு வந்தவர் இந்த நான்முகன். இப்படி சொன்னவுடன் தேவர்கள் மகிழ ஆரம்பித்தனர். இராவணன் மகனையே வென்றவர். அப்போ வயதான இராவணனையும் வென்றிடுவார் என நினைத்து மகிழ்ந்தனர் உம்பர்கள். புரோட்டாகால் மீறுவதில் தவறில்லை என்றும் நினைஹ்திருப்பர்.

கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு இந்த புரோட்டாகால் மீது மிகப்பெரும் வெறுப்பு இருந்திருக்கிறது. ஏழை தியாகி ஒருவர் தன் வீட்டு திருமணத்திற்கு பத்திரிக்கை நீட்ட, அன்று முக்கியமான வேலை இருக்கு என மறுத்து விட்டாராம். ஆனால் எந்தவித அறிவிப்புமின்றி திருமணத்திற்கு சென்று வாழ்த்திவிட்டு வந்தாராம். பொது நலன் மட்டுமே முக்கியம் என வாழ்ந்தவர் அவர்… ம்…. ஏக்கமெல்லாம் விட்டு விட்டு, நம் கம்பன் பாடல் பார்த்து சந்தித்ததை சிந்திப்போம்.

வடவரைக் குடுமியின் நடுவண். மாசு அறு
சுடர் மணி மண்டபம் துன்னி. நான்முகக்
கடவுளை அடி தொழுது. அமர கண்டகர்
இடி நிகர் வினையம்அது இயம்பினான் அரோ.
[பாலகாண்டம் – பாடல் எண் – 188]

மேருமலையின் சிகரத்தின் மத்தியிலே குற்றமற்ற ஒளிமிகுந்த மணிகளாலமைந்த மண்டபத்தை அடைந்து (அங்கு வந்து சேர்ந்த) பிரமனை அடிவணங்கி தேவர்களுக்குப் பகைவர்களான அரக்கரது இடிபோன்ற அக்கொடும் செயல்களை சொல்லலானான்.

பாகசாதனன்தனைப் பாசத்து ஆர்த்து. அடல்
மேகநாதன். புகுந்து இலங்கை மேய நாள்.-
போக மா மலர் உறை புனிதன்.- மீட்டமை.
தோகைபாகற்கு உறச் சொல்லினான்அரோ.
[பாலகாண்டம் – பாடல் எண் – 189]

(இராவணனது மகனாகிய) வலிமை மிகுந்த மேக நாதன் (இந்திரசித்து) எனுமரக்கன் (அமராவதி நகரக்குள்) புகுந்து, தேவர்கள் தலைவனான இந்திரனைக் கயிற்றால் கட்டி இலங்கைக்குக் கொண்டு போன போது இன்பம். தரும் அழகிய தாமரையில் வாழும் புனிதனாகிய பிரமன்தான் அந்த இந்திரனை மீட்டுவந்ததை உமையொருபாகனாகிய சிவபெருமானுக்குப் பொருந்த எடுத்தியம்பினான்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி
15-07-2022.

சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 1


சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை. தந்துவிட்டேன் என்னை. இப்படி ஒரு திரைப்பட பாடல் வரும். திரைப்படங்களில் வரும் காதலில் வேண்டுமென்றாலும் இது சாத்தியமாகும் ஆனால் ஒவ்வொரு சந்தித்த வேளையிலும் சிந்திக்க வைப்பவர் நம் கவிச்சக்கரவர்த்தி கம்பர். கம்பரின் இரு பாத்திரம் மற்ற பாத்திரங்களை சந்திக்கும் போதெல்லாம் எப்படி நம்மைச் சிந்திக்க வைக்கிறது என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கிறேன்.

இந்தவகையில் கம்பராமாயணத்தில் வரும் முதல் சந்திப்பு உம்பர்களுடன் சிவபெருமான் சந்திப்பு. (உம்பர்கள் – தேவர்கள்; உம்பர்கட்கரசே என்று மாணிக்கவாசகர் பாடியதை நினைவில் கொள்க).

சிவபெருமான் தியானத்தில் இருக்கிறார். அப்படித்தான் அவர் நம் கண்ணுக்குத் தெரிந்தவரையில். ஆனால் அவரோ வேறு ஒரு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். ஒரு பின்னோக்கு பயணத்தில் இருந்தார். முகத்தில் லேசான ஒரு புன்னகை.

தன்னிடம் வாங்கிய வரத்தை வைத்து தன்னையே, சோதிக்க முனைந்த ஒரு சிவனடியாரும் அசுரனுமாகிய பஸ்மாசுரனைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். பக்தி என்று வந்துவிட்டால், அதில் அடியார்களுடைய தவ வலிமையை மெச்சி அவர்களுக்கு வரம் கொடுத்து மகிழ்ந்த நேரங்களை சிந்தித்துக் கொண்டிருந்தார். தன் தலை மேல் கை வைத்தாள் எரியுமா? என்று சோதனை செய்து பார்க்க முயன்ற அந்த அசுரனின் வரத்தை எண்ணிப் பார்த்து சிரிக்கிறார். அப்பொழுது மோகினியாக உருவெடுத்து தன் தலை மேல் கை வைத்து அழிந்து போகச் செய்தது மகாவிஷ்ணுவை நினைத்துப் பார்க்கிறார் நன்றியுடன்.

ஏன் இப்படி திடீர் என்று இந்த எண்ணம் சிவபெருமானுக்கு? தேவர்கள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் காரணம் அவர் அறியாத்தா என்ன!! இராவணன் என்ற அசுரன் தங்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார் அவரிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொண்டு வந்திருந்தனர். வரம் கொடுத்தவரே சிவனே என்று உட்கார்ந்திருக்க, மற்றவர்கள் அலறிக் கொண்டிருந்தது தான் வேடிக்கை. கொடுத்த வரத்தை எப்படி திரும்பப் பெற முடியும்? சாபம் என்று ஒன்று இருந்தாலாவது சாபவிமோசனம் கிடைக்கலாம். ஆனால் சிவன் தந்தது வரமும் ஆயிற்றே!

நாட்டு நடப்பு ஒன்றைப் பார்த்துவிட்டு வரலாம். ஒரு செல்வந்தர் இருக்கிறார். அவரிடம் ஒரு தெரிந்தவர், ஒரு பத்தாயிரம் ரூபாயை கடனாக வாங்குகிறார். கடனாக பெறும்போது அந்த அன்பருக்கு பத்தாயிரம் ரூபாய் மிகப்பெரிய தொகையாக தெரிகிறது. ஆண்டுகள் பல கழிகின்றது வட்டியுடன் தருவதாகத் தான் பேச்சு. ஆனால் திருப்பிக் கொடுக்கும் எண்ணம் அவருக்கோ துளியும் இல்லை. மறைமுகமாக அந்த செல்வந்தர், பிறர் வாயிலாக விசாரித்தபோது பத்தாயிரம் ரூபாய் எல்லாம் ஒரு செல்வந்தருக்கு என்ன பெரிய தொகையா? என்று கேட்டதாய் தகவல் வந்தது.

வட்டி தருவதாக வாங்கியவரிடமே திருப்பி போய் கேட்பது எவ்வளவு சங்கடமோ, அதைவிட அதிகமான அளவு சங்கடம் அல்லவா வரம் கேட்டவரிடமே போய் வரத்தை திரும்ப பெறுவது. அதுதான் தர்மசங்கடத்தில் சிவபெருமான்.

சரி இன்னொரு நாட்டு நடப்புக்கும் வரலாம். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட்து. அந்த தீர்ப்பை எதிர்த்து அதை விட உயரிய உச்சநீதிமன்றத்தில் போய் முறையீடு செய்கிறார்களே! அப்படி செய்ய இயலுமோ?

அதற்கும் முன்பாக, ஒரு சமரசம் போவதற்கான வழிகளும் தான் கடைபிடித்து வருகிறார்கள். சமரசம் பேசுவதற்கு ஏதாவது ஒரு சொந்தக்காரர் இருந்தால் நல்லது என்று பட்டிருக்கிறது சிவபெருமானுக்கு. ஒரு தாத்தா சொன்னால் பேரன் கேட்பார் என்று நினைத்திருப்பாரோ? அதனால்தான் இராவணனுக்கு தாத்தா உறவுமுறை ஆகிய பிரம்மனிடம் சென்று முறையிடுங்கள் என்று சிவபெருமான் தேவர்களிடம் சொல்லியதாக கம்பர் சொல்கிறார். கம்பர் சொன்னது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான காரணங்கள் கம்பன் சொல்லாதது. என்னுடைய கற்பனையில் உதித்தது. ஆனால் ஒன்று மட்டும் நிஜம். பிரம்மனின் பேரன் தான் இராவணன் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். குபேரன் கூட இராவணணின் சகோதர உறவு தான். நம்பமுடியலையா? குடும்ப வாழையடி வாழைப் படம் பாருங்கள்.

சரி அப்படியே அந்த கம்பர் நிகழ்த்திய முதலாம் சந்திப்பு பாடலை இரசித்து விட்டு மேலே செல்லலாம்.

சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்.
[பாலகாண்டம் – பாடல் எண் – 186]

சுடுகின்ற தொழிலை உடைய அரக்கர்களால் வானுலகில் வாழும் தேவர்கள் வாழ்வறிந்து நஞ்சுதங்கிய மிடற்றை உடைய சிவபெருமானது பாதங்களை அடைந்து தமது துன்பத்தைக் கூறலும், மேலே நிகழவேண்டியவைகளை முன்னரே உணர்ந்துள்ள அப்பெருங்கடவுளான சிவபெருமான் இனி யான் அரக்கருடன் போர்புரிய மாட்டேன் என மறுத்து உரைத்து நான்முகனது இருப்பிடம் நோக்கிச் சென்றான்.

இதே போன்று அடுத்த சந்திப்பு நிகழ்ந்த இடத்திற்கு உங்களை பின்னர் அழைத்துச் செல்கிறேன்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி
10-07-2022.