கலந்து பேசி ஒரு முடிவு


ஏதாவது ஒரு பிரச்சினை என்று வந்தால், நாலு பேரைப் பாத்து மனம் விட்டுப் பேசினால், அதன் பாரம் குறையும் என்பார்கள். இன்னொரு பக்கமும் இருக்கு. நமது பிரச்சினையினைக் கேட்கும் மற்றவர்களில், பாதிப்பேருக்கு அதில் அக்கறை இருப்பதில்லை; மீதி நபர்கள் நமது பிரச்சினையினைக் கேட்டு சந்தோஷம் அடைகின்றார்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் பற்றிய வெவரமே தெரியாமல் வாழும் அடுக்குமாடி கலாச்சாரத்தில், இதெல்லாம் எந்த அளவு சாத்தியம்? [இப்போதெல்லாம் அந்தமான் தீவுகளிலும், இந்தத் தனித் தீவாய் வாழும் மனித வாழ்க்கை கலாச்சாரம் ஆர்ம்பித்து விட்டது. சோசியல் கேதரிங் சென்றாலும், அங்கும் ஃபேஸ்புக், வீடியோ கேம் என்று ”மொபைல் நோண்டி”கள் இருக்கத்தான் செய்கிறார்கள்]

ஆனால் அடுத்தவருக்கு நம்ம பிரச்சினையில் அக்கரை இருக்கோ இல்லையோ, ஒரு வகையில் யாரிடமாவது கொட்டித் தீர்த்தால் கிடைக்கும், கொஞ்ச நஞ்ச நிம்மதிக்காகவே பலர் உளறுவாயர்களாய் மாறி விடுகிறார்கள். என்னிடம் கனிசமான ஆட்கள் வந்து, இப்படிக் கொட்டி விட்டுப் போவார்கள். வீட்டில் நான் போய் புலம்பினால், “உங்க முகராசி அப்படி” என்று ஒரு எக்ஸ்ட்ரா சர்டிபிகேட் கிடைப்பது தான் மிச்சம். (நம்மால், வீட்டில் கூட பிரச்சினையை வைத்து புலம்ப முடியலை என்பது தான் இங்கு சொல்ல வரும் கருத்து). ”தலைவா” படம் பத்தி யாரிடமாவது இப்படி பேசித் தொலைச்சிருந்தா வீணா ஓர் உயிரு போயித் தொலைச்சிருக்காதோ??

சமீபத்தில் அந்தமானில் ”பிரம்மகுமாரிகள்” சார்பில் ’சந்தோஷமாய் இருப்பது எப்படி?’ என்ற வகுப்பு நடந்தது. எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை. (அப்படி வராத எல்லோரும் சந்தோஷமாய் இருப்பதாய் எடுத்துக் கொள்ளலாமா?) இதே வகுப்புக்கு 1000 ரூபாய் கட்டனம் வைத்திருந்தால், அதிக மக்கள் வந்திருப்பார்கள் என்பது என் யோசனை. இலவசமாய் எது கிடைத்தாலும் அதுக்கு அவ்வளவு மரியதை இருப்பது இல்லை தான்.

அந்த வகுப்பில், நாமெல்லாம் சந்தோஷமாய் இல்லாமல் இருப்பதற்கான மூன்று காரணங்கள் சொன்னார்கள்:
1. நாம் நினைத்தது நடக்காத போது;
2. நாம் நினைக்காத ஒன்று நடந்த போது;
3. ஏதோவொரு நமக்குக் கிடைக்காத நல்லது, அடுத்தவர்க்குக் கிடைத்துவிடும் போது.

இதில் எந்த வகையிலும் சேராமல் கவலைப் படும் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பிரச்சினைகளை வைத்துக்கொண்டு புலம்பும் நபர்களைப் பாத்திருப்பீங்க. பிரச்சினையினை உருவாக்கிக் கொண்டு புலம்பும் நபர்களைப் பாத்திருக்கீங்களா? எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. (நேரில் புலம்பியது போய் இப்பொ எல்லாம் ஃபோன்லெயும் புலம்ப ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா…) ஃபோன் குரலின் புலம்பல் இப்படியாய் இருந்தது. தனக்கு ஒரு விருது கிடைத்திருப்பதை வருத்தம் கலந்து தெரிவித்தார். (ஒரு விருது கிடைத்த விவரத்தை கவலையோடு சொல்லிய முதல் நபர் அவராகத்தான் இருக்க முடியும்). கொடுக்கப்பட்ட விருதில் இரண்டு பிரிவுகள் இருந்ததாம். இதில் இவருக்கு முதல் பிரிவில் கிடைக்காமல் ரெண்டாம் பிரிவில் கிடைத்தது தான் வருத்தத்தின் கருவாம். என்னுடன் கொஞ்ச நேரம் கலந்து பேசியதில் (எதுவும் கலக்காமல்) சற்றே ஆறுதல் அடைந்து சந்தோஷம் பெற்றதாய் பின்னர் அதே வருத்தக் குரல் வருத்தம் நீங்கிச் சொல்லியது.

இப்பொ லேசா இராமயண காலத்துக்குப் போவோம். கலந்து பேசி முடிவு எடுக்கும் இடங்களில் வால்மீகியும் கம்பரும் தங்கள் கையில் கிடைத்த கதைக்கருவினை எப்படி கையாள்கிறார்கள் என்று பாக்கலாம். (கருவறை வாசம் கேட்டபடி எழுதுவதால் அடிக்கடி கரு என்ற வார்த்தை வருகின்றதோ?)

நான் இப்போதெல்லாம் ”பர்வால்” இராமாயணம் என்று கம்பரையும் வாலிமீகியையும் கலந்து எழுதுவது, ரெண்டையும் மேம்போக்காக படித்ததை உங்களுக்குக் காட்டத்தான். இதனால் அதுக்கு இது ஒசத்தி; இதுக்கு அது தேவலாம் என்கின்ற அதிகப் பிரசங்கித் தனமான வேலைக்கெல்லாம் நான் வரலைங்க. சில கம்பரில் சொல்லப்பட்டிருக்கு. ஆனா வால்மீகியில் அப்படி ஏதும் இல்லை. சிலது அப்படியே தலைகீழ். வால்மீகி பாத்ததை கம்பர், ”சீ சீ புளிக்கும்” என்று உட்டாரு போலெ. சிலவற்றை சில நேரங்களில் மாற்றி எழுதியதும் தெரிகின்றது. ஏன் அப்படி செய்திருப்பார்கள் என்ற யோசனையும் வருகின்றது.

தசரதன் தலைமுறைக்கு பேர் சொல்ல ஒரு குழந்தைப் பேறு வேண்டி யாகம் செய்ய இருக்கும் இடம். பாக்கப்போனா, அது ராஜாவோட ஒரு பிரைவேட் ஃபங்க்ஷன் தான். ஆனாலும் யார் யாரை அழைக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறார் வசிஷ்டர் சுமந்திரனிடம் (தசரதனின் நம்பிக்கையான அமைச்சர்). தசரதனின் நண்பர் ஜனகர், காசி நாட்டு மன்னர், தசரதனின் மாம்ஸ் கேகயன், மச்சினன் யுதாஜித், தசரதனின் அன்புக்குரியவர்களான உரோமபாதர், சிந்து, சௌவீரம், சௌராஷ்டிரம் ஆகிய தேசத்து ராஜாக்களையும் கூப்பிட முனிவர் சொல்கிறார். ஆனா தசரத மன்னர் உத்திரவு “குடிமக்களையும் அழையுங்கள்” என்று சொல்லியதாய் வால்மீகி சொல்கின்றார். மக்களாட்சி நடக்கும் இந்தக் காலத்திலும், எத்தனையோ சமாச்சாரங்கள் மக்களுக்கே தெரியாமல் செய்கிறார்கள். ஆனால் முடியாட்சி செய்யும் அந்தக் காலத்தில் குடும்ப விழாவில் கூட குடிமக்களை மரியாதை செய்திருக்கிறார்கள் என்பது இங்கே பார்க்க வேண்டிய கட்டம்.

இதே போல் இன்னொரு குடும்ப விழா நடக்கப் போகும் இடம். ராமன் ஜனகரின் வில்லொடித்து, சீதையினை திருமனம் செய்ய இருக்கும் செய்தியினை மிதிலை மந்திரிகள் அயோத்தியில் சொல்லும் இடம். [ஏற்கனவே ஜனகரும் தசரதரும் நல்ல தோஸ்த்கள் தான். இந்த சீதை வில் ஒடிப்பு எல்லாம் தசரதனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்குமோ? என்ற சந்தேகமும் இந்த மரமண்டைக்கு வரத்தான் செய்யுது]. இது திருமணம் பற்றிய செய்தி. வீட்டில் ஒண்ணுக்கு மூன்று மனைவிமார்கள் இருக்கும் போது, அவர்களை கலந்தாலோசிக்காமல் உடனடியாக வசிஷ்டர், வாமதேவர், மற்ற மந்திரிமார்களையும் பாத்து உங்களுக்கும் இஷ்டம்னா, வாங்க ஒரே ஓட்டமா போகலாம் மிதிலைக்கு என்கிறார் தசரதர். இங்கும் தன் குடும்ப திருமணத்தையும் மக்கள் சபையில் வைத்து முடிவு செய்யும் பழக்கம் இந்தியாவில் இருப்பதைத் தான் பாக்க முடிகின்றது.

மனைவிகளிடம் கேட்கலையே என்றவுடன் உடனே, ’ஆண் ஆதிக்க சமுதாயம்’ என்று இப்போதைய மகளிர் அணியினர் சண்டைக்கு வர வேண்டாம். இதே வால்மீகி பால காண்டத்தில் தசரதன் ஆட்சி செய்த முறை பற்றிச் சொல்கிறார். “தசரதன் தன் மனைவியரின் உதவியோடும், மந்திரிகளின் உதவியோடும் சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வந்தார்”- இப்படி வருகிறது அந்த வால்மீகி வரிகள். ஆக மனைவியின் உதவி இல்லையேல் ஆட்சியே அம்பேல் தான். (அப்பாடா… இந்த மகளிர் அணியை திருப்திப் படுத்த என்ன பாடு பட வேண்டி இருக்கு?)

இப்படி கலந்து பேசும் கலை பற்றி கம்பரும் பல இடங்களில் சொல்லி இருந்தாலும் கூட, இந்தக் குடும்ப விழாக்களில் இவைகள் தவிர்த்திருக்கிறார் என்றுதான் தோன்றுகின்றது. காலம் காலமாய் நடக்கின்ற செய்கையாய் இருந்தாலுமே, ’எதுக்கு குடும்ப விழாக்களில் மக்களை ஒன்றிணைக்க வேணும்?’ என்று நினைத்திருக்கலாம் கம்பர். மற்ற அரசாங்க காரியங்களில் மக்களோடு கலந்து பேசி தசரதன் முடிவு எடுத்ததை கம்பர் சொல்லி இருப்பதை நாம் மறந்து விட முடியாது.

நீதி:
1. காலம் காலமாய் தவறுகள் நடந்தாலும் அது சரி என்று ஆகி விடாது.
2. நமக்கு சரி என்று பட்டால் முன்னோர் செய்ததையும் மாற்றலாம்/மீறலாம்.
3. குடும்ப விழாக்களை பொது விழா ஆக்குவதை தவிர்க்கலாம்.
பர்வால் பார்வைகள் இன்னும் வரும்.