ஒரு அடிமை சிக்கிட்டான்யா…


valluvar

ஒரு வேலையெ ஒரு ஆளுகிட்டெ குடுக்கிறதுக்கு முன்னாடி, அவனாலெ அதெ செய்ய முடியுமான்னு பத்து தடவெ பலவிதமா பாத்து யோசிச்சி அப்புறமா அவன் கிட்டெ கொடுத்து வேலெ வாங்கனும். இது ஐயன் வள்ளுவன் சொன்னதுங்க. இதெத்தான் Resource Allocation  அது இதுன்னு ஏகமா பக்கம் பக்கமா எழுதி இருக்காய்ங்க. ஆனா நம்ம ஐயன் வள்ளுவன் ரெண்டே வரியிலெ நச்சுன்னு சொல்லிட்டார். வள்ளுவரை இந்தியா முழுதும் அறிமுகம் செய்ததில் பெரும் பங்கு நம்ம அப்துல் கலாம் ஐயாவையே சேரும். அவர் தனது பதவி ஏற்பு விழாவில் குறள் ஒன்றினை தமிழில் கூறி அதன் பொருளை வழக்கமான ஆங்கிலத்தில் கூறியது நினைவில் இருக்கலாம் பலருக்கு. அந்தமான் தீவின் கல்வித்துறை இயக்குனர் கூட (வட இந்தியர் தான்), யார் அந்த வள்ளுவர்? நம்ம கலாம்ஜீ அடிக்கடி சொல்றாரே என்று விசாரித்தார். பொறுப்பாய் குறளின் ஆங்கில வடிவத்தினை அவரிடம் சேர்த்தோம். (ஏதோ நம்மால் முடிந்தது).

சமீப காலமாய் அந்த வேலையை உத்தராகண்ட் எம் பி திரு தருண்விஜய் அவர்கள் செய்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் அந்தமான் வந்திருந்தார். அவரது வருகையினை அறிந்து, அந்தமான் நண்பர் காளிதாசன் அவர்கள் அவரை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார். வாய் மொழி செய்தி பரவி 25க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கூடி விட்டனர் அவர் தங்கியிருந்த இடத்தின் வரவேற்பரையில். சரளமாய் அவர் வாயிலிருந்து தமிழ் வார்த்தைகள் வந்து விழுகின்றன. தேங்க்ஸ் என்று கேட்டு கேட்டு பழகிய நம் காதுக்கு ”நன்றி” ”நன்றி” என்று அவரிடமிருந்து கேட்பது கூட வித்தியாசமாய்த்தான் தெரிந்தது.

Tarun

குறள் தெரியாத அந்தமான், முழுமை பெறாது என்கிறார். அது போல் வட இந்தியாவில் குறள் அறிமுகம் இல்லாவிடில், அதுவும் முழுமை ஆகாது என்கின்றார் தருண்விஜய். அது சரி…. இம்புட்டு பிரியம் திருவள்ளுவர் மேலே எப்புடி வந்திச்சி? என்று கேட்டேன். ஒரு வேளை முன் ஜென்மத்தில் நான் தமிழனாய் இருந்திருப்பேன் என்று பதிலாய் சொன்னார். எப்படியோ, தமிழின் பெருமையினை பெருக்கிட தமிழர் அல்லாதவர் பலர் முன்னோடியாய் இருந்திருக்க,  இப்பொ இவர் கோடு போட்டு, ரோடும் போடுகின்றார். நாம ஜாலியா அதில் பயணிக்க வலிக்கவா செய்யும்?

சமீபத்தில் மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார் அந்தமானுக்கு.. அவருடைய பையன் படிக்கும் பள்ளியில் இருந்து ஆசிரியர் அழைத்தாராம். அப்பா அம்மா ஆசிரியர் குழந்தை உறவு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு இருபது அம்ச திட்டம் தந்து அட்வைஸ் மழை பொழிந்தாராம். கடைசியில் தான் அந்த அட்வைஸ் காப்பிரைட் உரிமையாளர் திருவள்ளுவர் என்றாராம் அந்த மராட்டிய ஆசிரியை. அவர் கணவர் பாண்டிச்சேரியில் வேலை பார்க்கும் போது கத்துகிட்டது என்றாராம். [ஆனா நம்ம மக்கள் பாண்டிச்சேரிக்கு போகும் காரணமே வேறெ…]

மறுபடியும் அந்த வேலையினை பாத்துத் தரும், குறளுக்கே வருவோம். கார்பரேட் கலாசாரத்தில் யார் ஒரு வேலையை திறம்படச் செய்ராகளோ, அவர்கள் தலையில் அந்த வேலையெக் கட்டியிரணும். அரசுத்துறை கொஞ்சம் விசித்திரமானது. வேலையெச் செய்யும் ஆளுங்க கிட்டெ வேலையெக் கொடு. மத்தவனுக்கு சம்பளத்தெக் கொடு. இது அரசிதழில் எழுதப் படாத (அ)தர்மம். புதிய டெக்னாலஜியினை கற்பதற்க்கு அரசு ஊழியர்களின் தயக்கம் இருக்கும். காரணம், தெரிந்து கொண்டால் தலையில் வேலையெக் கட்டிடிவாகளேங்கிற பயம் கூடவே இருக்கும். தெரியலை என்றால், தெரியாது என்று தப்பிச்சிரலாம்லெ…

ஆனா சமீபத்திய மோடிஜீயின் அரசு அதுக்கும் ஆப்பு வைத்து விட்டது. தெரியாத விஷயத்தெக் தெரிஞ்சிக்கிங்கொ என்று அறிவுரை வழங்கியுள்ளது. வாராவாரம் புதன் கிழமை 10 முதல் 11 மணிவரை தெரிந்தவங்க தெரிஞ்ச விசயத்தெ தெரியாதவங்களுக்கு (தெரியாத மாதிரி நடிக்கிறவங்களுக்கும் சேத்துதான்) சொல்லித் தர உத்திரவு வந்திருக்கு. மத்த எடத்திலெ நடக்குதோ இல்லையோ, அந்தமானில் அந்த வேலை அடியேன் மேற்பார்வையில் (நான் இருக்கும் துறையில்) தொடர்ந்து நடக்குது.

10527311_729670610453353_8831568050053572345_n

ஆனா, ஒரே ஆளுகிட்டெ ஓவர் லோடா வேலையெக் கொடுக்கிறது நல்லதா? கெட்டதா? இந்த மாதிரி டவுட்டு எல்லாம் வந்தா நேரா கம்பர் கிட்டெ போய்க் கேட்டா போதும். அவரு சூப்பரா பதில் சொல்லிடுவாரு. நீங்களும் வாங்க ஒட்டுக் கேளுங்க நாம பேசுறதெ. (ஒட்டுக் கேக்கிறதும் ஓட்டுக் கேக்கிறதும் தான் நம்ம தேசிய குணமாச்சே..)

கம்பரே…… எனக்கு ஒரு டவுட்டு…

கம்பர் கேள்வியினை கேக்கும்முன்னர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

ஒரே ஆளு மேலெ வேலையெத் தலையி்ல் கட்டுறதிலெ ரெண்டு சிக்கல் இருக்கு. ஒண்ணு அவரோட டென்ஷன் ஏறுது. அடுத்து, அந்த துறையிலெ இந்த ஆளை விட்டா வேற ஆளே இல்லைங்கிற ஒரு கெட்ட இமேஜ் உருவாக்கும். இது ரொம்ப மோசமான இமேஜ். இதெ தவிர்க்கும் வேலையிலெ மும்முரமா இருக்கனும். அதுக்கு பிளான் B பிளான் C தயாரா வச்சிருக்கிற மாதிரி அடுத்தடுத்த ஆளுகளெ தயாரா வச்சிருக்கனும்.

கம்பரே… கேக்கிறேன்னு கோவிச்சுக்கக் கூடாது. வக்கனையா இவ்வளவு பேசுற நீங்க அதெ ஃபாலோ செஞ்சிருக்கீங்களா?

தெரியும் கிட்டப்பா…இப்படி கேப்பேன்னு. நம்ப ராமாயணத்திலேயும் இந்த மாதிரி ஒரு சீனு வருது. அங்கதன் தூதுப் படலம் போய் தேடு கிடைக்கும்.

தேடினேன். கிடைத்தது. இராவணனுடன் யுத்தம் துவங்கும் முன்னர் இன்னொரு முறை தூதுவர் ஒருவரை அனுப்பலாமே என்று பொதுக்குழுவில் முடிவு எடுக்கிறார்கள். யாரை அனுப்பலாம்? நாமளா இருந்தா என்ன செய்வோம்? பழைய ஃபைல் தேடிப் பாத்து, ஏற்கனவே இந்த வேலையெ அனுமன் பாத்திருக்கான். அவன் தலையிலெ கட்டு என்போம். ஆனா கம்பன் மேன் மேனேஜ்மெண்ட் வேறு மாதிரி. அனுமனை அனுப்பினா, வேற ஆளு இல்லையோங்கிற கெட்ட இமேஜ் வந்திடும். அதனாலெ இப்பொ அங்கதனை அனுப்பலாம் என்று முடிவு செஞ்சாகலாம்.

மாருதி இன்னம் செல்லின் மற்றிவன் அன்றி வந்து
சாருநர் வலியோர் இல்லை என்பது சாரும் அன்றே
ஆர் இனி ஏகத்தக்கார் அங்கதன் அமையும் ஒன்னார்
வீரமே விளைப்பரேனும் தீது இன்றி மீள வல்லான்

கம்பரோட ஃப்ரீ யோசனை நீங்களும் கடைபிடிக்கலாமே. ஃப்ரீயா கெடெச்சா நாம ஃப்னாயில் கூட குடிப்போமெ. இதெச் செய்ய மாட்டோமா?

அப்புறம் ஏதாவது ஃப்ரீ ப்ளானோட வாரென்…

தந்தை சொல் மிக்க தந்திரமில்லை


large_89622

”அடி உதவுகிற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க” என்ற சொல் வழக்கு இருக்கு. இது என்னவோ ஒரு பக்கம் பாத்தா அடிக்கு அடித்தளம் போடும் பேச்சு வழக்கா தெரிஞ்சாலும் கூட, ஏதோ அண்ணன் தம்பிகள் கூட உதவாத செய்தி தான் பெரிசா படுது எனக்கு. அடியாத மாடு படியாது என்றும் சொல்லுவாக. அப்பொ அண்ணன் தம்பிக மாட்டெ விட கேவலமா பாக்கிறாகளா அன்பர்களே! நண்பர்களே… அது சரி…இப்பொ எதுக்கு இந்த ஆராய்ச்சின்னு கேக்கீகளா? இருங்க.. இருங்க.. சொல்லத்தானே போறேன்…

அஞ்சில் வளையாதது அம்பதில் வளையாது என்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் அஞ்சி வயசில் வாங்கிய அடி அம்பது தாண்டினாலும் மறக்காம வச்சிருக்கு. இந்தக் கதெ தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன். ஆமா… கதெ கேட்டு கதெ கேட்டு வளந்த நாடு நம்ம நாடுங்கிறது பழங்கதையா போச்சு. இப்பொல்லாம், வாட்ஸ் அப்பில் ஜோக் படிச்சி ஜோக் படிச்சி வளந்த நாடுன்னு சொல்ல்லாம் போலெ. இளமையில் கல் என்பது எனக்கு இளமையில் பட்ட அடி மாதிரி பசு மரத்து ஆணி மாதிரி.. (சின்ன வய்சிலெ படிச்சதெல்லாம் ஞாபகம் வருதா என்ன?) முதுகுலெ பதிஞ்சு போச்சி.

சின்ன வயசிலெ விளையாடாத நபர்கள் யாராவது இருப்பாகளா என்ன? என்ன… இப்பொ இருக்கிற மாதிரி பிளே ஸ்டேஷன் 3, கம்ப்யூட்டர் கேம்கள் மாதிரி இல்லை நம்ம விளையாடின கேம்கள். எதையாவது சாக்கு வச்சி, எங்கிருந்தாவது எங்கினயாவது ஓடனும். வேத்து விறுவிறுக்கும். அதையும் மூக்கையும் ஒன்னாவே சேத்து அப்பப்பொ நாம சட்டைக்கு பண்டமாற்றம் செய்வோம். அந்த வெளெயாட்டு ரூட்லெ என்னோட அப்பா உக்காந்திருந்தார். ஏதோ எண்ணெயெ தலையில் தேய்க்க உக்காந்திருந்த மாதிரி பின்னாடி தான் வெளங்கிச்சி. (அங்கெனெயா உக்காந்திருந்தார்? இப்படி விவேக் மாதிரி கேள்வி எல்லாம் வேண்டாமெ!) போற வேகத்தில் கையையும் எண்ணெயையும் ஒரு சேர தள்ளிவிட்டு ஓட…சாரி… நிக்க, விழுந்தது முதுகில் ஒரு தரும(மில்லா) அடி. சுருண்டு விட்டேன்.

அந்த அன்னெக்கி விழுந்த ஒரு அடியில் நான் என் அப்பாவிடமிருந்து பல ‘அடி’கள், இல்லை இல்லை பல கிலோ மீட்டர்கள் விலகிப் போய்விட்டேன். அரசுத்துறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாய் மனு அனுப்புவது மாதிரி அம்மாவிடம் ’துரூ ப்ராப்பர் சேனலில்’ பேசும் ஆளாக மாறிவிட்டேன். அதை என் அப்பாவும், ஏதோ தன் மேல் இருக்கிற மரியாதை என்றே நினைத்து மகிழ்ந்ததும் அவ்வப்போது தெரிந்தது. ஆனா நமக்குத்தானே அந்த ’புறமுதுகு’ சமாச்சாரம் தெரியும்?

காலங்கள் உருண்டன. ஒருமுறை ஆஸ்பத்திரியில் நான் படுத்துக் கிடக்க, எனக்கு சேவை செய்ய வேறு வழியே இல்லாமல் அப்பா.. அப்போது தான் தன் பழைய கதைகளும், ’பாசக்கார அப்பா’வின் உண்மை சொரூபமும் தெரியத் தெரிய.. ”அடடா..அடடா…. இந்த அப்பாவையா அந்த ஒரு அடி இவ்வளவு தூரம் பிரித்து விட்டது?” என்று யோசிக்க வைத்தது. அவர் கஷ்டப்பட்டது முழுதும், நான் அப்படி எங்கும் அடிபடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தானே? காலத்தின் கணக்கு வேறு மாதிரி இருந்தது. நான் இப்போது அந்தமானில் சுகமாய் வாழும் போது அதை முழுதும் பார்த்து மகிழ அவர் கொடுத்து வைக்கவில்லை.

சரி… இறந்த பிறகு செய்யும் சடங்குகள் செய்யலாம் என்றால், அந்தமானில் அதுக்கும் வழியில்லை. குறிப்பிட்ட சமூக வழக்கங்களுக்கு மட்டும் செய்யும் நபர்கள் இருக்கிறார்கள். தேதி பற்றி தகவல் சொல்லும் பரமக்குடி ஐயரே, ’அந்தமானுக்கு வரட்டுமா?’ என்றார் பொறுப்பாக. அன்று விஜய் மல்லய்யாவும், இன்று ஸ்பைஷ் ஜெட்டும் கை விரிக்க டிக்கெட் விலையும் ஆகாய விமானம் போல் ஆகாயத்தை தொடும் அளவுக்கு இருக்கு. எப்படியோ இல்லாளுக்குத் தெரிந்த மந்திரங்களோடு, அந்தமான் தீவின் பீச்களை அதிகமாய் மாசு படுத்தாமல் ஒரு முழுக்கு போட்டு அப்பாவை நினைவு கூர்ந்தேன்..

அப்பாவை இப்படி அப்பாவியா தப்பா நெனைச்சேனே என்ற வேதனை உள்ளூர வரத்தான் செய்தது.

ஆறுதல் கூற வந்தார் கம்பர். “வாழ்க்கையிலெ இதெல்லாம் சகஜமப்பா…”

”வணக்கம் கம்பரே… அப்பொ, ராமாயணத்திலெயும் இப்படி ஏதாவது கீதா சாமீ?”

”ஏன் இல்லை? அந்த இளவல் இலக்குவனே, கண்ணாபின்னான்னு திட்டியிருக்கானே… ” – இது கம்பர்.

கொஞ்சம் விரிவா சொன்னா நல்லா இருக்கும்.

கம்பர் கனவில் விவரம் சொன்னதை உங்களுக்கு விளக்கமா சொல்றேன் இப்பொ…

அப்பா புள்ளெக்கு இடையில் நடக்கும் கோபத்தின் வெளிப்பாடு. களம்: இராமன் காடு செல்லத் தயாராய் இருக்கும் நேரம். செய்தி அறிந்த இலக்குவன் கோபமாய் கொந்தளித்தானாம். ”என் கண் எதிக்கவே நாட்டெ கொடுக்கிறேன்னு சொல்லிட்டு அப்புறம் பெப்பே சொன்னா அது கொடுமையான் அரசன் செயல் தானே? அப்புடி நம்மாலெ இருக்க முடியாது நீங்க காட்டுக்கு போக, நானு துன்பத்தோடு இங்கேயே கிடக்க… ” இப்படி வருது இலக்குவன் வாயிலாக.

அப்பாவை திட்டிபுட்டு அப்புறம் சமாதானம் ஆவது எல்லாம் அந்தக் காலத்திலிருந்தே நடக்கும் சேதி போலெ.. சாமான்யன்கள், நாமெல்லாம் விதிவிலக்கா என்ன?

அப்படியே விதியேன்னு பாட்டையும் லேசா படிங்க பார்க்கலாம்.

நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க
புன்கண் பொறி யாக்கை பொறுத்து உயிர் போற்றுகேனோ
என்கட்புலமுன் உனக்கு ஏஎந்துவைத்து இல்லை என்ற
வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல் என்றான்.

மீண்டும் வருவேன்.