திரும்பத் திரும்ப…


கற்போம் கம்பனில் – 9
(28-10-2019)

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

’ஏம்ப்பா தம்பி…. கையெப் பிடிச்சி இழுத்தியா?’
’என்ன கையெப் பிடிச்சி இழுத்தியா?’
’ஏற்கனவே அவெய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்காத் தகராறு….’
’என்ன வாய்க்காத் தகராறு?….

இப்படித் தொடங்கி, திரும்பத் திரும்ப பேசுறே என முடியும் வடிவேல் காமெடியெத் திரும்பத் திரும்ப பாத்திருப்பீங்க. கூகுளில் கூட, ‘வாய்க்காத் தகராறு’ எனத் தேடினால், சுந்தர் பிச்சை அவர்களும் இதே காமெடியைத் ‘திரும்பத் திரும்ப’ பார்க்க அனுப்புகிறார். தீபாவளி தொடங்கி, காமம், காமெடி, காதல் (திருமணமானவர்கள் மனைவியையை), ரிவ்யூ மீட்டிங், ஹிந்தி பக்கோடா, அதில் சமோசா இவையெல்லாம் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும்.

’வரும்… ஆனா வராது….’ என்ற காமெடியும் அடிக்கடி பாத்திருப்பீயளே? அது காமெடி மட்டும் அல்ல. சிந்திக்கவும் தான். நோய்க்கும் பிணிக்கும் ஒரு, எட்டு வித்தியாசம் எல்லாம் இல்லையாம். ஒரே ஒரு வித்தியாசம் தானாம். நோய் என்பது வரும். ஆனா மருந்து சாப்பிட்டா வராதாம். பிணி என்பது வரும்… ஆனா வரும்; திரும்பவும் வரும், எனச் சொல்வது போல் தான். பசியெ எடுத்துக் கொள்வோம் (எப்படி எடுப்பது என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே?) மூக்குப் புடைக்கத் தின்றாலும் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பசி திரும்பத் திரும்ப வருவதும் நடக்கிறது. (இன்றைய நவீன மருத்துவம் சுகர் இத்யாதி நோய்களையும் பிணி ஆக்கி விட்டது தான், காலக் கொடுமை)

சாமானியர் நமக்கே இப்படி திரும்பத் திரும்ப செய்வதில் இம்புட்டு அலாதி இன்பம் இருக்கறச்சே, கவிஞர்களைப் பத்தி கேக்க வேணுமா என்ன? காலம் காலமா, மன்னர்களை போற்றிப் பாடி வந்தும், ஏழ்மையில் இருந்தவர்கள் தானே அவர்கள். ஒரு புலவன், பகல் வேளை கையில் விளக்குடன் சென்றானாம். ஏன் இந்த விளக்கென்றேன். விளக்கு பத்தி விளக்கம் சொல்றார் அந்தப் புலவர். என்ன தான் நீங்க பலப்பல வண்ண விளக்குகள் வச்சி தீபாவளிக்கு டெக்கரேஷன் செஞ்சிருந்தாலும், அதெல்லாம் விளக்கு என்ற டெஃபனிசனிலேயே வராதாம். அப்பொ எது தான் விளக்கு? பொய் சொல்லாமெ இருப்பது தான் ’நம்’மைப் போன்ற நல்லவர்களுக்கு விளக்காம். (நாமலே நம்மை நல்லவர்னு சொல்லாட்டி வேறு யார் தான் சொல்லப் போறா?) இந்தா நன்பா என வெண்பா என்றபடி வள்ளுவர் வந்தார்.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”

இதே மாதிரி எதையாவது சொல்லி மனைவியிடம் திட்டு வாங்கும் வாலிப வயோதிக ஆண்மக்களே! (தீபாவளியும் அதுவுமா, பாட்டு இந்நேரம் வாங்கியிருப்பீயளே…!) எல்லாத்துக்கும் என்ன காரணம்ணு பாத்தா, நாம பேசும் பேச்சுக்கள் தான். பேச்சு பேச்சா இருக்கணும்கிறது சமாதானத்துக்கான அழைப்பு தான். அந்தப் பேச்சும் எப்புடி இருக்கணுமாம்? இதெவிட நல்ல ஃபிகர், நல்ல மாடல் மொபைல் இருக்கவே படாது, இப்படி இருக்கணுமாம். (அதுவும் அடுத்த ஃபிகர் காட்சி தரும் வரை, அடுத்த மொபைல் விளம்பரம் வரும் வரை தான் நீடிக்கிறது) ஆனா அய்யன் வள்ளுவர் வாக்கே தனிதான். மீண்டும் வள்ளுவர் உதவிக்கு வாரார். எல்லோரும் ஒதுக்கிங்கிங்க ப்ளீஸ்.

சொல்லுக சொல்லைப் பிரிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!

ஒவ்வொரு வீட்டிலும் மனைவி சொல்லும் சொல் தான் வெல்லும் சொல் என்பதை வாசுகி உட்பட அறியாதவர் யார் இருப்பர்?

ஒரு காலத்தில் தீபாவளி நாளை தினசரி காலண்டரின் மடக்கி வச்சி, இன்னும் பத்து நாள், ஒம்பது நாள், எட்டு நாள், ஏழு நாள் என்று எதிர்பார்த்த ஆனந்தம் இப்போது மொபைலில் காலண்டர் பார்ப்பதால் அடி பட்டுப் போச்சி. அன்று நாள் குறையக் குறைய மகிழ்வு அதிகரித்தது. (அதானே நமக்கு முக்கியம்); உண்மையில் தேதி கிழிக்கும் போது, அடடா ஒரு நாள் போயிடுச்சே என்ற வருத்தம் வரும். நாலடியாருக்கும் வந்திருக்கு. ஒவ்வொரு நாளும் காலத்தை அறுக்கும் வாள மாதிரி தெரியுதாம். இனிமே எல்லாரும் நாளின் அருமை தெரிய, தினசரி தேதி காலண்டர் வாங்கி (இதெக்கூட கிழிக்காமெ ஆஃபீசில் என்ன தான் …….) வைய்யும் வாங்கக் கடவார்களாக.

வைகலும் வைகல் வரக்கண்டும், அஃது உணரார்,
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார்.

திரும்பத்திரும்ப ஒரே வேலையைச் செய்தால், அதிலும் எக்ஸ்பெர்ட் ஆகாமலா போவர்? எதையுமே திரும்பத் திரும்பச் செய்வதால் அதில் ஒரு ஈடுபாடு வந்திடுமாம். (வம்படிய்யா கல்யாணம் செய்து வைப்பதும் அதுக்குத்தானோ?). இந்து மதத்தை சகட்டுமேனிக்கு (இதுக்கு என்ன அரத்தம்?) திட்ட ஏகப்பட்ட இந்துப் புரானங்கள் படித்தாராம் கண்ணதாசன். அதுவே பின்னர் அர்த்தமுள்ள இந்துமதம் வர காரணமாச்சி. (அர்த்தமற்ற இந்துமதம் எனவும் திக பேர்வளிகள் எழுதி உள்ளனர்); அவர் சொல்லும் போது கம்பனை திரும்பத் திரும்ப படிக்கும் போது அவருக்கே அடிமை ஆனேன் என்கிறார்.

என் பாடல்களை திரும்பத் திரும்ப பயன்படுத்தி வருவதில் எனக்கு ரொம்ப ரொம்ப குஷி தான் சொல்லியபடி கம்பர் வந்தார். எட்டு எட்டா பி(ரி)ச்சிப் பாக்கச் சொன்ன உங்க காலத்துப் பாடல் போல், ஏழு பத்தி பாடின என் பாட்டும் பாரேன் என்றபடி ஒரு டிப்ஸ் தந்து அகன்றார்.

இராமனையே சோதிக்கும் நக்கீரத்தனமான இடம் கிட்கிந்தையில். ’என்னமோ வாலியெ கெடாசிடுவேங்கிறெ, எங்கே இந்த ஏழு மரத்தை ஒரே ஷாட்டில் அடி பாக்கலாம்!!!’ என ஏகே 47 தருவது போல் வரும் சூப்பர் இடம் அது.

பாட்டு பாருங்களேன்…

ஏழு வேலையும், உலகம் மேல் உயர்ந்தன ஏழும்
ஏழு குன்றமும், இருடிகள் எழுவரும், புரவி
ஏழும், மங்கையர் எழுவரும், நடுங்கினர் என்ப-
’ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம்?’ என்று எண்ணி

 [கிட்கிந்தா காண்டம்,  மராமரப் படலம்]

[ஏழு கடல்களும், மேலே உயர்தனவாய் உள்ள உலகங்கள் ஏழும், ஏழு குல மலைகளும், ஏழு முனிகளும், சூரியன் தேரை இழுத்துச் செல்லும் ஏழு குதிரைகளும், ஏழு கன்னியர்களும், இந்த அம்பிற்குக் குறி என்று அஞ்சி நடுங்கினர்]

கம்பனிடம் நாம் கற்கும் இன்றைய அணிப்பாடம்

சொற்பொருள் பின்வருநிலையணி – பாடலில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது.

குறட்பாவில், ’விளக்கு’, ’சொல்’, நாலடியாரின் வைகல் என்னும் சொற்கள் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்

கம்பன் பாட்டிலும் ஏழு என்பதை பலமுறை (அடெ..அதுவும் ஏழு முறை) சொல்லி நமக்கு புரியும் படி சொன்னதும் இதே சொற்பொருள் பின்வரு நிலையணியே தான்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

நாங்களும் சொல்லுவோம்லெ…


கற்போம் கம்பனில் – 8
(21-10-2019)

கூட்டல் என்பது எவ்வளவு நல்ல வார்த்தை! கொஞ்சம் கூட்டிக் கொடுப்பா… என்று வியாபாரம் தகையாத போது சொல்லி வந்த வார்த்தை இப்போது வசைபாடும் வார்த்தை ஆகி விட்டது துரதிருஷ்டவசமானது. (நாற்றம் என்ற வார்த்தையின் பொருள் கூட, ஒருகாலத்தில் மணம் என்பதாய் இருந்ததாம்) ஆனா ஒரு பொருளைச் சொல்லும் போது அதை சுவைபடப் பலவற்றோடு கூட்டிச் சொல்வதும் உண்டு. நடைமுறை வழக்கில் இதுக்குப் பேரு பில்டப் எனவும் சொல்லலாம். வடிவேலுவுக்குப் பின் இருக்கும் சிலர் போல். (பிரச்சினைகள் வரும் போது நைஸாகக் கழண்டு விடுவது தான் நகைச்சுவையின் உச்சமே). அரசியல்வாதிகளின் கதை அப்படி அல்ல.

சமீபத்தில் ஓர் அரசியல்வாதியின் அறிமுகம் கிட்டியது. ’நடமாடும் என்சைக்ளொபீடியா’, ’அண்ணன் தான் எங்களுக்கெல்லாம் டேட்டா பேங்க்’ என்ற பில்டப்போடு அவரின் அறிமுகம் ஆனது. ’ஓஹோ… அந்தமானா… அந்தமானில் மொத்தம் 18 தீவுகள்’ என்றார். கூட இருந்தவர்கள், ’பாத்தீயளா நாங்க சொன்னோம்லே, அண்ணன் தகவல் களஞ்சியம் என்று கூ(ட்)டி மகிழ்ந்தனர். அந்தமான் 836 தீவுகளைக் கொண்டது என்று அரசுக் குறிப்பு சொல்லுது. (நான் அவரிடம் எதிர் வாதம் செய்யலை – அடியாட்களின் கரைவேட்டி பயம் காரணமாய்); மறுபடியும் அந்தமான் பற்றி பேச்சு வந்தது, சென்னையிலிருந்து 732 கிமீ தானே? என்ன சரி தானே? என்று எந்தக் குறிப்பும் இல்லாமல் மிரட்டும் தோரணையில் சொல்ல, அப்படியே சென்னையிலிருந்து 1200 கிமீ தூரம் அந்தமானுக்கு ஓடி (ஓடிண்ணா ஓடியா ஃபிளைட் பிடிச்சித்தான்; பிடிச்சி…??) வந்துட்டேன்.

கவிஞர்களுக்கு இப்படிக் கூட்டிச் சொல்ல அனுமதி தரப்பட்டிருக்கு. அவரவர் இஷ்டத்துக்கு பில்டப் செய்து சொல்லலாம். ஒருவரை பிச்சிட்டா போதும், சகட்டு மேனிக்கு தூக்கிப் பாடுவது கவிஞர்களுக்கு கைவந்த கலை. (நான் வாலியைச் சொல்லலைங்க). காஞ்சி என்றவுடன் சங்கராச்சாரியாரும், அறிஞர் அண்ணாவும் நினைவுக்கு வரும் (பட்டுப் புடவை என சத்தம் வருது என் தர்ம பத்தினியிடமிருந்து) ஆனா காஞ்சி நகரம் பத்தி கவிஞர் சொல்றதெப் பாருங்க.

அந்த நகரம் சூப்பரா இருக்காம். காரணம் சொல்ல வந்து, கூட்டிச் சொன்ன விதம் பாருங்க. மலை மாதிரி ஏகாம்பர நாதராம். மலை மேடு பள்ளமாத்தானே இருக்கும்? ஏன் இப்படி ஆச்சாம்? அதுக்கும் பதில் இருக்கே! உமையாள்  மார்பில் அனிந்திருந்த அணிகலன்கள் அழுத்தியதால் சிவன் மலையின் நிலை இப்படி ஆச்சாம். (ம்…அப்பா… இப்படி ஒரு அழுத்தமா?) அப்புறம் விளக்கு எப்பவும் வெளிச்சம் தருதாம்; தெய்வீகமானதுமாய் இருக்குதாம்.  திரி எல்லாம் தேவையில்லாமல் நம்ம Self Inking Pad போல் இருக்காம். மத்தவங்க பாத்து பொறாமெப் படும் அளவுக்கு கொடுத்துக் கொடுத்து சிவந்த கரம் இருக்கும் சான்றோர்கள் இருக்காகளாம். இப்படி கோரஸ் பாடும் மூன்றும் இருப்பதால் தான் காஞ்சிக்கு பெயரும் புகழுமாம். எப்படி  கவிஞரின் கற்பனைப் போக்கு பாத்தீகளா?

‘பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும் – நாண்தாங்கும்
வண்மைசால் சான்றவரும் காஞ்சி வளம்பதியின்
உண்மையால் உண்டிவ் வுலகு’

ஒரு விஷயத்தெத் தலைக்கு மேல் தூக்கி வச்சி ஆட மட்டும் தான் கவிஞர்களுக்குத் தெரியுமா என்ன? ஒரு ஆளை தூக்கி சாவடிக்கணும் என்றால், அதுக்கும் நம்ம கிட்ட ஓர் ஆளு பாட்டெ வச்சிகிட்டு ரெடியா இருக்கார் திரிகடுகத்தில். மழை பெய்யாததுக்கு கெரகம் தான் காரணம் என கரகாட்டக்காரனில் கரகாட்டக்காரி கோவை சரளா ரேஞ்சில் வருது பாட்டு. அதிகமா வரி வசூல் செய்யும் ராசாவும், மெய்யே சொல்லாத ஆளும், எல்லை தாண்டும் பொண்டாட்டியும் இருந்தா… அது தான் கெரகமாம்.

கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தனும்
உள்பொருள் சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல் இருந்(து) எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே மழை அருக்கும் கோள்.

அப்படியே நம்ம சீரியல் பக்கம் வந்தா, இப்ப்பொல்லாம் நளினி என்ற ஒரு குண்டம்மா வாராக பாத்திருப்பீயளே! ஒரு காலத்தில், அவுகளை அறிமுகப் படுத்தும் பாட்டு, டி ஆர் போட்டிருக்காரு பாருங்க. பாக்கலையா? உயிருள்ள வரை உஷா படத்தில் பாருங்க.  செம்மெ பில்டப்புங்க. (அப்பொ அவுங்க செம ஃபிகரூங்கோ… ஆனா என்ன முகம் மட்டும் கொஞ்சம் ஹி ஹி ஹி முகம் மாதிரிங்கோ). இந்திர லோகத்து சுந்தரி, மோகினி, உயிர் பறிக்கும் காளை, ரதி என்பேன்; மதி என்பேன்; கிளி என்பேன்; உடல் என்பேன்; உயிர் என்பேன்; உறவென்பேன்; இப்புடி.. இப்படி பல விதமா (சீரியல் குண்டம்மாவெ பாத்துட்டே, அந்த பாடல் பாருங்க செமெ காமடியா இருக்கும்..!)

நாங்களும் சொல்லுமோம்லெ….. என்றபடி கம்பர் வந்தார்.

சீதையம்மா அரசவைக்கு வருகிறார். நளினியெப் பாத்தே, டி ஆர் க்கு அம்புட்டு மனசுலெ வந்தா, நம்ம கம்பருக்கு பில்டப் செய்ய வராதா என்ன? கம்பர் சொல்றார். (உங்களை இராமனாக கற்பனை செய்து கொண்டு சீதையைப் பார்க்கவும்.) சீதைப் பெண், பொன் மாதிரி மின்றாகளாம்; குளிர்ச்சியாவும் இருக்காகளாம்; மின்னல் போல் ஒளி பரவுதாம்; பூவின் மணமும் வருதாம் (வெறி என்ற சொல்லுக்கு மணம் என்ற பொருள் இருப்பது கம்பர் சொல்லித்தான் தெரிய வருது). அன்னம், தேவலோக மகளிர், அமிழ்தம் எல்லாமே சீதைக்கு முன் நிக்க முடியாமே ஒரே ஓட்டமா ஓடியே போயிட்டாகளாம். யப்பா… முடியலெ.. அப்படியே பாட்டும் பாருங்க.

இதோ பாடல்.

பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் நிழல் அன்னவள் தன் மேனி ஒளி மான,
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்.

[பால காண்டம், கோலம் காண் படலம்]

[அந்தச் சீதை, தன் உடலில் எழும் பொலிவுக்கு பொன்னின் ஒளியையும், பூவின் மணத்தையும், சந்தனத்துக் குளிர்ச்சியையும், மின்னலின் அழகையும் ஒப்புச் சொல்லுமாறு , (தன் நடைக்குத் தோற்று) அன்னப் பறவையும், (தன் அழகுக்குத் தோற்று) தேவலோகப் பெண்டிரும், (தன் இனிமைக்குத் தோற்று) அரிய தேவ அமுதமும் வெட்கமுறுமாறு அரசவையில் அமைந்திருந்த மணி மண்டபம் அடைந்தாள்]

கம்பனிடம் நாம் கற்கும் இன்றைய அணிப்பாடம் ”ஒப்புமைக் கூட்ட அணி”. இதெ உடனிலைச் சொல்லணி என்றும் சொல்லுவாக. ஒண்ணெச் சொல்ல வரும் போது, அதன் குணத்தை வச்சி ஓவரா பில்டப் அல்லது பில்டவுன் செய்வது தான் இந்தக் கலை.

ஓவரா பிலடப் செஞ்சாக்கா, புகழ் ஒப்புமைக் கூட்ட அணியாம்.

இதையே உல்டாவா செஞ்சாக்கா, அதாவது ஓவரா பில்டவுன் செய்தால், அது பழிப்பு ஒப்புமைக் கூட்ட அணியாம். (இந்தப் பதிவில் சொல்லிய எல்லாமும் இந்த வகை அணிப் பாடல்கள்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?)

பின் குறிப்பு: கம்பனின் இப்பாடலை கண்ணில் கொண்டு வரும் விதமாய் அருமையான் குரலில், இனிய இசையில், நல்ல காட்சிகளோடு (இங்கும் புகழ் போபுமைக் காட்ட அணி வருதோ?)  பாடல் யூ டியூபில் உள்ளது. இந்த அதை இந்த லிங்கில் சொடுக்கி கேட்டு இன்புறவும்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்

வைரம் பாய்ந்த கட்டை


கற்போம் கம்பனில் – 7
(16-10-2019)

இதுவோ அதுவோ என்று ஒரு பாட்டு செமெ ஹை பிட்சில் மேடையில் பாடுவாக. (காலை தொட்டுக் கும்பிட்டு கண்ணீர் மல்க SPB முன்னாடியும் பாடுவர் சின்னத்திரையில்). எதையாவது பாத்தாக்கா, சிலருக்கு வேறு ஏதாவது தோணும். சமீபத்தில் முதலையெப் பாக்க சென்னைக்குப் போனேன். அந்தமானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முதலைத் தாக்குதலில் இருந்து காப்பாத்தும் ஒரு நல்ல முயற்சி தான். இலவச இணைப்பாக சிங்கம் புலிகளையும் காட்டினார்கள். சிங்கம் புலிகளை விட சுவாரஸ்யமாக, அதனைப் பார்க்க வந்தவர்கள் அடிக்கும் கமெண்ட் தான் செமெயா இருந்தது. எதையாவது பாத்தா அதெப்பெடி இவங்களுக்கு மட்டும் சட்டுன்னு வேறு நெனெப்பு வருது?

சிறுத்தெ அது பாட்டுக்கு (அது ஏன் நடுவுலெ பாட்டு?) கெடக்கு. நம்மாளு கமெண்ட் பாருங்க. ’ஆமா… பயோமெட்ரிக், GST, டார்கெட் இப்படி எந்த கவலையும் இல்லாமெ எப்புடி தூங்குது பாருங்க? வேட்டையாடவும் வேண்டியதில்லெ. மணியடிக்காமலேயே சோறு கெடைக்கும்.’ இதாவது பரவாயில்லை. இன்னொன்னு சிந்திக்க வைத்தது. ‘பாத்தா அசப்பிலெ, தமிழ்நாட்டு சிறுத்தையா தான் இருக்கணும். அஞ்சு ரூபாவில் அம்மா உணவகத்தின் தீனி. மதியம் கோயில் அன்னதான சோறு, அப்பப்போ மொட்டெ மாடியில் ஏறி யாருக்காவது எதுக்காவது கருப்புக் கொடி காட்டும் சோம்பேறி இனமா போயிட்த்தோ இது?’

இப்படி யோசிப்பது நம்ம பரம்பரையிலேயே வந்திருக்கணும். இல்லாட்டி பாம்பையும் எள்ளையும் சேத்து வச்சி யோசிக்க முடியுமா? (ஒரு வேளை மனைவி எள்ளுருண்டை கீது செஞ்சி குடுத்திருப்பாகளோ?) காளமேகப் புலவரின் கற்பனை இது. (புலவர்களுக்கே இந்தக் கதி என்றால்…?)
ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்

மூடித் திறக்கின் முகங்காட்டும் – ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளனவே யோது.

படமெடுத்து ஆடியபின் குடத்துள் போயிடுமாம், சத்தம் போடுமாம் செக்காடிய பின் எடுத்த எண்ணெயைக் குடத்தில் ஊற்றுவர். அங்கும் சத்தம் இருக்கும். (ஆமா இன்றைய இளைய தலைமுறைக்கு செக்கு என்றால் புரியுமா? செக் புக் மட்டும் தான் தெரியும்) ஆக எள்ளுக்கும் பாம்புக்கும் முடிச்சுப் போட்றார் காளமேகம்.

இன்னொரு புலவனுக்கோ, மண்டெயெச் சுட்டெரிக்கும் சூரியனைப் பார்க்க, சோழன் ஞாபகம் வந்ததாம். (நம்ம கவிஞர் வாலிக்கு எதெப் பாத்தாலும் ஏதோ ஞாபகம் வந்த மாதிரி)

செங்கரங்க ளான்இரவு நீக்கும் திறம்புரிந்து
பங்கய மாதர் நலம்பயிலப் – பொங்குஉதயத்து
ஓர்ஆழி வெய்யோன் உயர்ந்த நெறிஒழுகும்
நீர்ஆழி நீள்நிலத்து மேல்

சூரியனாகப்பட்டது கடல்நீர் சூழ்ந்த பூமி மீது, தன்னோட சிவப்புக் கதிரால் இருட்டை விரட்டுதாம். தாமரையெப் பாத்து சைட் அடிப்பது போல் லேசா மேலே வருதாம். ஒத்தெச் சக்கரம் வச்சிகினு இன்னா சுத்து சுத்துறான் பாரு நம்ம சூரியன்; இப்படி ஒரு அர்த்தம். அப்படியே சோழனுக்கு சூட் ஆகும் பாருங்களேன். எப்புடி? சொல்லுவோம்லெ…

எம் ஜி ஆர் மாதிரி கொடுத்துச் சிவந்த கரம். அந்தக் கையால் வறுமை எனும் இருட்டை விரட்றாராம். லெட்சுமி தாமரை பூவிலெ சம்மணம் போட, வரி வசூல் செமெயா நடக்குதாம். அட அந்த சக்கரம், ஆணைச் சக்கரமா படுதாம். உலகத்தாரால் விரும்பப்படும் இயல்பு உடையவன்; சான்றோர் வகுத்த உயர்ந்த ஒழுக்க நெறியில் நடப்பவன்’ இப்படி மானே, தேனே எல்லாம் சேத்துக்கிடலாம். சூப்பரில்லெ!!

புற400 பக்கம் போனா, அங்கே கோவூர்கிழார் ஒரு பிட்டுப்போடுகிறார். “செல்வை ஆயின் செல்வை ஆகுவை” என்கிறார். “செல்வை’ என்பது “செல்லுதல்’ என்றும், “செல்வத்தை’யும் குறிக்குமாம் என விளக்கம் தாரார். எப்படி பிட்டு? இன்னொரு மாங்குடி கிழாரோ (கிழவரா என்ற குறிப்பு இல்லை) கடற்கரையில் உக்காந்து சைட் அடித்து பாடுகிறார். கேட்டா, “முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்” என்கிறார். நுங்குநீர், கருப்பின் நீர் (சாறு நானுங்க), இளநீரும் சேத்து சாப்டாகளாம். அதான் முந்நீராம். அப்படிச் சாப்பிட்டு சூப்பரா குளிக்கும் போது (டூ பீஸா என்ற விபரமும் இல்லீங்கோ) அவர்கள் “முந்நீர் எனப் பெயர்பெற்றக் கடலில் தான் குளிச்சாகலாம். செமெ லொகேசன் தான் போங்க.

’தென்றல் வந்து முத்தமிடும்…’ என்ற இப்போதைய பாட்டை ஒட்டி ஐங்குறுநூறில் ஒரு பாட்டு இருக்கு. ”மாலை வந்தன்று, மன்ற காலை யன்ன காலை முந்துறுத்தே” “காலை’ என்றால் காற்று என்பதும், எமன் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும். (பீரில் எத்தனை வகை எனக் கேட்டால் டான் டான் என பதில் வருமே!).

சினிமா பாட்டு பத்தி சொல்லாமெ போனா நல்லாவா இருக்கும்? ’சக்கரை நிலவே பெண் நிலவே…’ பாடலில் வருமே…, அதில் காதல் & கடவுளை முடிச்சு போட்டதெப் பாருங்களேன்.

“காதல் என்ற ஒன்று அது கடவுள் போல*
உணரத்தானே முடியும் அதில் உருவம் இல்லை… “

சரீ… இம்புட்டு சமாச்சாரமெல்லாம் எதுக்கு?

சும்மா செம்மொழிச் சிலேடையணி பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக் கிடலாம்ணு தான். ஒரு செய்யுளில் ஒரு சொல் பிரிவுபடாமல் நின்று, ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைத் தந்தால் அது செம்மொழிச் சிலேடையாம். எல்லாம் சரிதானா? என திரும்ப ஒரு எட்டு படிச்சிப் பாத்துகிடுங்க.

கம்பர் பாட்டு மட்டும் போடலைன்னா, அவரு தொலெச்சிப் புடுவார் தொலெச்சி. வீடியோ காலில் கூப்பிட்டேன். வாட்ஸப்பில் தகவல் வந்தது. பாடல் பற்றிய குறிப்பு. மரத்தைப் பற்றி வைரமுத்து ரேஞ்சில் ஏதோ இருக்குண்ணு பாத்தா, மரத்தையும் வாலி சுக்ரீவன் ரிலேசனையும் சொல்லிட்டு நடையெக் கட்டிவிட்டார் கம்பர்.

இதோ பாடல்.

வள்ளல் இந்திரன் மைந்தற்கும், தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என, ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய;
தெள்ளுநீரிடைக் கிடந்த பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண்படம் குடைந்து கீழ் கொகிய வேர.

[கிட்கிந்தா காண்டம், துந்துபிப் படலம்]

[வள்ளலாகிய இந்திரன் மன்னனாகிய வாலிக்கும் அவன் தம்பி சுக்ரீவனுக்கும், பகைமை முற்றிய மனம் போல அம்மரங்கள் ஒன்றைவிட மற்றொன்று உள்ளே வயிரம் பாய்ந்தவை. தெளிவான நீரையுடைய கடலினிடையே தங்கிய பூமியைச் சுமக்கின்ற ஆதி சேடன் என்னும் பாம்பின் வெள்ளி போன்ற வெண்மையான படத்தை துளைத்துக் கொண்டு கீழே ஊன்றிச் சென்ற வேர்களை உடையன.]

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

மைனஸ் X மைனஸ் = ப்ளஸ்


கற்போம் கம்பனில் – 6
(08-10-2019)

என்ன தான் கணக்குப் பாடம் படித்து அதிக மதிப்பென் வாங்கி, பொறியியல் சீட் சிரமப்பட்டு வாங்கி இருந்தாலும் (அந்தக்காலக் கதைங்க) இந்த ’மைனஸ் X மைனஸ் = ப்ளஸ்’ என்பதை ஏத்துக்க முடியலைங்க. அதெப்படி இரு அதள பாதளங்கள் பெருக்கி, மலையாகும்? கணக்குப் பாடம் சொல்லித் தராத வித்தையினை வாழ்க்கைப் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. உயரம் அதிகம் என்ற மைன்ஸ் தான் அமிதாப் என்ற லம்பூவை, உயர்ந்த மனிதனாக்கியது. உயரம் போதவில்லை என்ற மைன்ஸ், கலாமை ராணுவத்தில் சேரவிடாமல் சதி செய்து, பின்னர் முப்படைகளே சலாம் செய்ய வைத்தது மிகப்பெரிய ப்ள்ஸ் தானே.

கொஞ்சம் முன்னாடி போய் பாத்தா அங்கே மாணிக்கவாசகர் பயந்துட்டு நிக்கிறார். குதிரைப்படை வாங்கப் போனவர் ஏதாவது ஊழலில் மாட்டினாரோ என்ற அச்சம் தான் வரும். அவரோ விளக்கம் சொல்றார் பாருங்க. கொடும் வேல் பாத்தாலும் பயமா இல்லையாம். பெண்களின் கடைக்கண் பார்வைக்கும் பயப்பட மாட்டாராம். இரண்டு மைனஸுக்குப் பின் சூப்பர் ப்ளஸ் தருகிறார். சிவனின் அருளை பருகாத ஆளெப் பாத்தா பயம்மா கீது என்கிறார் தன் திருவாசகத்தில்.

வன்புலால் வேலும் அஞ்சேன், வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்,
என்பெல்லாம் உருகநோக்கி அம்பலத்துஆடுகின்ற
என்பொலாமணியை ஏத்தி இனிதுஅருள் பருகமாட்டா
அன்புஇலாதவரைக் கண்டால் அம்ம, நாம் அஞ்சுமாறே.

ஒரே மாதிரி இருக்கும் ஆனா கிளைமாக்ஸில் கொஞ்சம் வித்தியாசமா காட்டும் கலை தான் நம்ம மாணிக்கவாசகர் செய்தது. வள்ளுவர் மட்டும் செய்ய மாட்டாரா என்ன? தீயினால் சுட்றாய்ங்க. நாக்கினாலும் சுட்ற மாதிரி பேசுறாய்ங்க. ரெண்டும் சுடும். ஆனா ரெண்டாவது ஆறவே ஆறாது, என நாம ரெண்டாம் கிளாஸ்லேயே படிச்சிருக்கோமே.

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

ரெண்டடியார் இப்படிச் சொல்லிட்டா, அப்பொ நாலடியார் எப்படிச் சொல்றார் என்றும் பாக்கலாமே..? அவர் பார்வைக்கு திங்களும் (அட நம்ம நிலாங்க) சான்றோரும் தென்பட்றாய்ங்க. ரெண்டுமே அழகான இடத்திலெ இருப்பாகளாம்.  உயர்ந்த இடத்திலும் இருப்பாகளாம். ஆனா ஒரு விஷயத்தில் ஒத்துப் போக மாட்டாக. அதாவது நிலா களங்கத்தை வைத்திருக்கும். சான்றோர் அப்படி இல்லை. தனக்கு ஒரு களங்கம் வந்தா, உசுரையே உட்ருவாகளாம்.

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசுறின்’

லேசா நவீன காலத்துக்கு வருவோம். ஏடும் எழுத்தாணியும் வச்சிகிணு ஏகமா எழுதிக் குவிச்சாய்ங்க நம் மூதாதையர். இப்பொ என்னடான்னா, பெத்த அம்மாவுக்கு கடுதாசி எழுதவே நேரமில்லை. நொந்து போன ஒரு அம்மா தன் மகனுக்கு எழுதிய லேட்டஸ்ட் கவிதை பாருங்களேன்…

”… மகனே…நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று

எங்கள் வியர்வையில் நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில் தென்னை வளர்ந்தது

எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது

ஒருநாள்…
நீ ஈமெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்.
இறுதிப் பயணத்தில் நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை எங்கள் கடைசி மஞ்சமாகும்!….”

தென்னையையும் பிள்ளையையும் ஒண்ணு போலக் காட்டி புள்ளை கடைசியில் கழட்டி விட்ட சோகம் பாத்தீயளா?

‘என்ன கிட்டப்பனே, இன்னெக்கி ஏதோ வேற்றுமை அணி சொல்ல வந்த மாதிரி இருக்கே! நம்ம கிட்டேயும் ஒரு சரக்கு இருக்கே! தரட்டுமா?’ கம்பர் விசாரித்தார்.

’ஐயனே.. இந்த மாதிரி அணியிலெழுதணும்னு யோசிச்சி எல்லாமா எழுதுவீங்க?’ தெரிஞ்சிக்கக் கேட்டேன் நான்.

‘அதெல்லாம் எழுதும் போது கற்பனை தன்னாலெ ஒரு ஃப்ளோவில் வரும். அப்புறம் மானே, தேனே என்று போட்டுக்க வேண்டியது தான். பிற்காலத்தில் வாரவங்க அவங்க பாணியில் வியக்யானம் செய்வாய்ங்க. உன்னெயெ மாதிரி வம்பர்கள் கையிலும் அகப்பட்டு தலை உருளும்; சரி இப்பொ நேரே கிட்கிட்ந்தா காண்டத்துக்குப் போனா, உனக்கு வேண்டிய பாட்டு கிடைக்கும்.’

போனேன். கிடைத்தது.

படர்ந்த நீள் நெடுந் தலை பரப்பி, மீது
அடர்ந்த பாரம் வந்து உற, அனந்தனும்
கிடந்து தாங்கும் இக்கிரியை மேயினான்,
நடந்து தாங்கும், இப் புவனம், நாள் எலாம்.

[கிட்கிந்தா காண்டம், நட்புக் கோட் படலம்]

[ஆதிசேடனும், ஆயிரமாகப் படர்ந்த நீண்ட பெரிய தலைகளைப் பரப்பிக் கொண்டு அத் தலைகளின் மேலே, நெருங்கிப் பாரம் மிகுதியாகப் பொருந்தி இருக்க, (நின்று தாங்க முடியாமல்) கீழே கிடந்து இப்பூமியை நாளெல்லாம் (எக்காலத்தும்) தாங்குவான், இந்தக் கிட்கிந்தை மலையில் வாழும் வாலியோ, நடந்து கொண்டே இப்பூமியைத் தாங்கும் ஆற்றல் உடையவன்.]

ஆதிசேடனும் வாலியும் பூமியைத் தூக்கும் ஆட்கள் போன்ற பலசாலிகள். ஆயிரம் தலெ வச்சி கஷ்டப்பட்டு தூக்கும் இறைவன் எங்கே, நம்ம இஷ்டப்பட்டு நடந்திட்டே ரஜினி ஸ்டைலில் தூக்கும் வாலி எங்கே! சூப்பர் கிளைமாக்ஸ் இல்லெ. அப்படியே இன்றைய அணிப்பாடமும் படிச்சிடுங்க.

வேற்றுமையணி:

செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிய பின்னர், அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாகும்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

அம்மாவாசையும் அப்துல்காதரும்


அம்மாவாசையும் அப்துல்காதரும்

கற்போம் கம்பனில் – 5
(02-10-2019)

சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதையாவது பேசிக்கொண்டோ, செய்து கொண்டோ (சமந்தாவைப் பார்த்துக் கொண்டோ) இருப்பவர்களை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் பேர்வழிகள் என்று அன்போடு அழைப்பர். அண்டப்புளுகு, ஆகாசப் புளுகுனிகள்  என அவர்களுக்கு ஒரு கெட்ட பெயரும் உண்டு. ஆனா இலக்கிய வட்டத்தில் இத்தகைய புளுகுவோர்க்குத் தான் அதிக மவுசு. எவ்வளவு அதிகம் புளுகுகிறார்களோ, அம்புட்டு மருவாதெ அவுகளுக்கு.

நம்ம பங்குக்கு இப்படி புளுகிய  மாமன்னர்களை ஒரு பார்வை பார்ப்போம். ’கடலோரம் வாங்கிய காத்து’ என்று பாட்டுப் பாடாமல் பீச்சுப் பக்கம் காத்து வாங்கப் போகிறார் திருவாளர் புகழேந்தி. (காத்து வாங்கப் போனால் கவிதையும் வாங்க முடியும் என வாத்தியாருக்கு முன்பு, அன்றே சொன்னவர் அவர்) என் கல்லூரி நண்பன் முரளி போல், அவருக்கும் நண்டு மேல் இரு கண்கள். (பின்னே, கல்லூரி விட்டுப் பிரியும் போது, ஆட்டோகிராஃபில் என்றைக்காவது ஒரு நாள் உன் நண்டுக்கறி சாப்பிடுவேன் என முரளியை விட்டா, யாரால் எழுத முடியும்?)

புகழேந்திப் புலவரும், நண்டு வேகமாப் போகுதே? காரணம் தெரியுமா? சொல்கிறார். சமைக்கத் தெரியாத ஆட்கள் மனைவியை விட்டு ஓட யோசிக்கணும். நளபாகமா சமைக்கத் தெரிஞ்ச நளன் ஓடுவதெக் கேக்கவா வேணும்? ஆனா அந்தப் பரிதாபக் காட்சியெப் பாக்கக் கூடாதென நண்டு ஓடிப் போச்சாம். வாரேவ்வா… கற்பனை எப்புடி போகுது பாத்தீயளா?

பாதகனை பார்க்கப் படாதேன்றோ – நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.  (நளவெண்பா)

எப்போவாவது ஒரு கோவில் குளத்துக்கு, ஒரு டியூப் லைட் வாங்கிக் கொடுத்து, அதில் லைட்டே வராதபடி பேரு போடும் ஆட்களெப் பாத்திருப்பீங்க. ஆனா 2700 பாட்டு மொத்தமா எழுதி, எழுதின ஆளு யாருண்ணே தெரிமல் வச்சிருந்தா, அது தான் தி கிரேட் முத்தொள்ளாயிரம் ஆசிரியர். சும்மாவா ஐநாவில் தமிழ் பாடல் பாடிட முடியும் நம் பிரதமரால்?  (2.7K மாதிரி, மூன்று தொள்ளாயிரம் 3 X900 = 2700) இதில் வரும் ஓர் அலம்பல் காட்சி பாக்கலாம்.. சோழன் யானைப் படை வச்சிருக்காரு. (ஆமா அந்த சொப்ன சுந்தரீ…?) அது பூமியெக் கூட சுமக்குமாம். (ஆங்கிலேய ஹெர்குலிஸ் கணக்கா) எதிரிப் படெயெப் பந்தாடுதாம், மேலே இருந்து வேடிக்கை பாத்த நிலவு பயந்து போய் மறெஞ்சி போச்சாம். என்ன ஒரு புருடா? இலக்கியத்தில் இதெல்லாம் சகஜமப்பா…

மண்படுதோள் கிள்ளி மதயானை, மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால், – விண்படர்ந்து
பாயும்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று.

இப்பொல்லாம் ஹோட்டல்களிலும் சரி, வீடுகளிலும் சரி, ஒரு கை சாப்பாட்டிலும், இன்னொரு கை ஐ ஃபோனிலும் இருக்கும். (அப்பாடா என்னிடம் ஐ ஃபோன் இருப்பதை ஒருவழியா சொல்லியாச்சி) கை வேணும்னா, இப்படி ரெண்டு வேலை செய்யலாம். ஆனா ரெண்டு கண்ணு இருந்தாலும், அது ஒரே வேலை தான் செய்யும். ஆனா நம்ம ஐயன் வள்ளுவனுக்கு அது வேறெ மாதிரி படுது. இவளுடைய மை போட்ட கண்களுக்கு இருவகையான பார்வைத் தன்மைகள் இருக்காம். ஒன்று நோய் செய்யும். மற்றொன்று அந்நோய்க்கு மருந்தாகும். ஐயோ ஐயோ.. ஐயனே.. என்ன ஒரு கற்பனை? ஐயனே எங்கோ போயிட்டீங்க. இப்பொ, எந்தக் கண்ணெப் பாத்தாலும் எனக்கு இப்பொ ரெண்டு ரெண்டா தெரியுதே? (சே…இப்படி புலம்ப விட்டீங்களே)

இருநோக்(கு) இவளுண்கண் உள்ள(து) ஒருநோக்கு
நோய் நோக்கொன் றந்நோய் மருந்து!

நம்ம சினிமா கவிஞர்கள் மட்டும் லேசுப்பட்ட ஆட்களா என்ன? கண்ணெப் பாக்கிறாங்க (இவங்களுமா….?) இமை மூடி மூடித் திறக்குது. (அந்தமானில் பேராசிரியர் வணிதா மேடத்தின் மகள் ருத்ர தாண்டவ நாட்டியம் ஆடும் போது, பாத்தாக்கா கண் இமைப்பதே இல்லை. எப்படி? எனக் கேட்டேன். சிவனருள் என்கிறார்கள். ஓர் அடி பின்னால் வந்து வணக்கம் சொல்லி நகர்ந்தேன்) நம்ம சினிமா கவிஞர்களுக்கோ, ”மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன” ஏதோ பாரு பாரு என கூப்பிட்ற மாதிரி இருக்காம். சும்மா சொல்லக்கூடாது. செமெ கற்பனை தான். (உங்களுக்கு Bar Bar என பார் பார் (அப்பப்போ) ஞாபகம் வந்தா நான் என்ன் செய்ய முடியும்?) .

”அடெ நாமலும் சொல்லுவோம்லெ…” என்றபடி கம்பர் வந்தார். அந்தமானில் சுனாமி வந்திருக்கும் போது, எல்லாரும் பாத்திருப்பீங்களே? மத்தவங்க தசாவதாரம் படத்தில் பாத்ததை ஞாபகம் வச்சிகிடுங்களேன். போருக்கு எழும் படை சுனாமி மாதிரி வருது. செமெயா இல்லே…? சுனாமிப் பேரலை சாதாரணமா வருது. ஆனா நம்ம கண்ணுக்கு அதெப் பாத்தாக்கா, படை எழுவது போல் இருக்கு. என்னம்மா கண்ணுகளா.. பாட்டு வேணுமா?” குடுத்து மறைந்தார் கம்பர். நமக்கு அவரு டிகிரி தோஸ்த்துங்கோ…

போர்ப் பெரும் பணை ‘பொம்’ என் முழக்கமா,
நீர்த்தரங்கம் நெடுந் தடந் தோள்களா,
ஆர்த்தது எழுந்தது – இறுதியில், ஆர் கலிக்
கார்க் கருங்கடல் கால் கிளர்ந்தென்னவே

[ஆரணிய காண்டம், கரன் வதைப் படலம்]

[போரினைத் தெரிவிக்கும் பெரிய முரசுகளின் ஓசை பொம்மென்று ஒலிக்கின்ற ஆரவாரமாக இருக்க;  கடல் நீரிலுள்ள அலைகளாக நீண்ட பெரிய தோள்கள் இருக்க, முடிவே இல்லாத ஆரவாரத்தையும் மேகம் போன்ற கரு நிறத்தையுமுடைய கடல் ஊழிக்காற்றினால் பொங்கி மேலெழுந்தார்ப் போல் (அரக்கர் சேனை) ஆரவாரம் செய்து கொண்டு (போருக்கு) எழுந்தது]

இனி இலேசாக் கம்பனில் நாம் இன்று கற்க இருக்கும் அணிப்பாடம் காணலாம்:
தற்குறிப்பேற்றஅணி

இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவது தற்குறிப்பேற்ற அணி.

நண்டு நகர்வது, நிலவு தேய்வது, பார்வையும், இமைகள் மூடித்திறப்பதும், சுனாமி வருவதும் இயற்கையான இயல்பான நிகழ்வுகள். அதை புகழேந்தியும், முத்தொள்ளாயிரத்து பெயர் பதியாப் புலவரும், வள்ளுவன், சினிமாக் கவிஞன், கம்பன் என எப்படி தன் கவித்திறனை அதோடு ஏற்றிச் சொன்னார்கள் பார்த்தீர்களா? சுவை கூடுவதில் வியப்பென்ன?

நம்மாளுக பிரிச்சி மேய்வதில் கில்லாடிகள். தற்குறிப்பேற்ற அணியிலும் ரெண்டு வகை இருக்காம். அசையும் சொத்து அசையா சொத்து கேள்விப்பட்டிருப்பீங்க. அதே மாடலில் அணியையும் சொல்றாக.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்  (தண்டி, நூ. 56)

 (பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)

நேற்று அனிட்கோவில் (அந்தமானின் டாஸ்மாக்) செம்மெயா கூட்டம்;
இன்று காந்தி ஜெயந்தி

இது எந்த அணியில் வரும் என்பது எனக்குப் புரியலை..

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

ரொம்ப ஓவரா பில்டப்…


கற்போம் கம்பனில் – 4
(28-09-2019)

அடைமொழி சேத்துகினு, அல்டாப்பா பேசிக்கினு, ஓவரா பில்டப் செய்யும் காமெடியன்களைப் பாத்திருப்பீங்க. சில சமயங்களில், வில்லன் ஹீரோக்கள் கூட அப்படி இருப்பது உண்டு. (வீட்டில் கணவன்/மனைவி கூட இப்படி அமைவதை எல்லாம் எதுக்கு சொல்லிகிட்டு?). ஆனா அந்த ஓவர் பில்டப்பில் கொஞ்சம் உண்மை ஒட்டிட்டு இருக்கத்தான் செய்யும். நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் அந்தமான் வந்திருந்தார். ”போர்ட் பிளேயர் வரை விமானத்திலும், உங்க ஆஃபீஸுக்கு கப்பலிலும் வந்தேன்” என்றார். ஓவரா (நிஜமாகவே) பெய்த மழையில் காரணமாய் ரோடு படுமோசமாகி, கப்பல் ஆட்டம் போல், கார் ஆடி வந்ததை ஓவர் பிலடப்பில் சொன்னார் அவர்.

வீடுகளில் குழந்தைகளை பேய், பிராணனை வாங்கும் பிசாசு எல்லாமாய் ஏகமாய் பில்டப் செய்து திட்டும் தாய்மார்களைப் பாத்திருப்பீங்க. (தந்தைமார்களும் ஒத்து ஊதியபடி – வழக்கம் போல் இருந்திருப்பர்). ஆனா அதே குழந்தை தேமேண்ணு ரகளை எல்லாம் செய்யாமெ  இருந்தாக்கா, அப்பொவும் டாக்டர்கிட்டே ஓடுவாய்ங்க. ஐயன் வள்ளுவர் காதிலும் இந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகள் விழுது; அதை அப்படியே பில்டப் செய்வதைப் பாருங்களேன். அந்தக்  குரல் குழல் யாழைவிட இனியதாம். குறளில் சொன்னது

குழl இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!

அதே மாதிரி, நேரம் காலம் தெரியாமல் லோன் வாங்கச் சொல்லித், துன்றுத்தும் பன்மொழிப் புலவர்களை பேங்கில் வேலைக்கு வைத்திருப்பார்கள். எந்த  மொழிக்கு மாறினாலும் பதில் வருது. அதை ஒரு உதவி என (ஒரு பில்டப்புக்குத்தானே எல்லாம்) வச்சிக்கிட்டா, அத்தகைய உதவி வானகமே, வையகமே தருவதற்கு ஈடாகுமாம். அய்யனின் இந்த பில்டப்பும் சூப்பர் தானே?

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!

நாம் ஒருவர்க்கு உதவி செய்யாத போதும், நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான்.  ஆமா பேங்க் லோன் நச்சரிப்பு இதில் சேர்த்தியா?

கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு என்பதும் ஒரு வகையில் பிலடப் தான்.

அண்ணன் தங்கை பாசத்தை உலகுக்கு காட்டிய ஒரு படத்தில், தங்கக் கடியாரம் வைர மணியாரம் (அதுவும் ஒரு பில்டப் தானே?)தந்து பேசுவதாய் பாடல் வரிகள் வரும். இப்ப இப்படி ஏதும் பேசினா, வரன் வருதோ இல்லையோ, இன்கம் டாக்ஸ் ரெய்டு தான்  வரும்.

வைரமுத்துவின் ஆரம்ப கால காதல் வரிகளை லேசா நோட்டம் விடலாம்: (ஆரம்பகால காதலியையும் சந்தர்ப்பம் கிடைத்தால் நோட்டம் விடுங்களேன். யாரு வேணாம்ணு சொன்னாக?) ”நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்”…அட.. அட.. அடடா…ம்… அப்புறம்…?


”நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோசாவுக்குக் காய்ச்சல் வரும்” (அந்த ஆந்திரத்து அரசியல்வாதி ரோஜா இல்லீங்கோ, நேரு மாமா கோட்டில் இருக்குமே, அந்த அசல் ரோசாவுக்காம்). செமெ பில்டப்பில்லே…

காதலி மேல் உள்ள பாசம் (வழுக்கி விழவும் வைப்பதால்) போல், ஊர்ப் பாசத்தையும் கூட சேத்துக்கலாம். காவிரி நாட்டிலெ மீன் கூட கரையேறி வந்து விளையாடுமாம். வாவ்..

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு – எங்கள்
உறையூரின் காவலரே வாழிய நீடு

காதல் வந்தாக்கா அப்புறம் வீரம் வரலைன்னா எப்படி? வாங்க அப்படியே ஒரு ரவுண்டு… (ஹலோ..ஹலோ… ஏன் இவ்வளவு உற்சாகம் உங்க முகத்திலெ? ரொம்பத்தான் அந்த டாஸ்மாக் கெடுத்திருக்கு உங்களை) புறநானூறு சொல்லும் போர்க் காட்சி பக்கம் போவோம். ராசா நலங்கிள்ளியோட படை ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே பெருசாம். (நம்மாலெ இம்படி மட்டும்தான் சொல்ல முடியும்) ஆனா ஆலத்தூர் கிழார் சொல்லும் விதமே தனி..

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,

தேர்தல் காலத்தில் நம்மாளுக ஊர்வலம் போடுவாய்ங்க, 5 மணி நேரம் ஆச்சு ஓர் இடத்தைக் கடக்க என்பார்கள். ஆழத்தூரார் அந்த படையெப் பாத்து சொல்றார். முன்னே செல்லும் படை பனங்காய் நுங்கு தின்னும் காலத்தில் இருக்காம். நடுவில் போகும் படை, போகும் போது பனம்பழம் வரும் காலமாகிவிடுமாம். (ய்ப்பா..என்ன பில்டப்பு?) கடைசியில் வரும் படை வரும் போது, பனம்பழம் பொதெச்சி, வரும் கெழங்கை சாப்பிட்டே வருவாகளாம். (நினைக்கவே முடியாத ஓவர் பில்டப்பா கீதே)

”என்ன ஒரே பில்டப் பிலடப்பா போகுது இன்றைய மேட்டர்?” கேட்டபடி வந்தார் கம்பர். அப்புறம் நோட்டம் விட்டார். நான் கேட்காமலேயே ஒரு பாட்டு குடுத்து கம்பி நீட்டி விட்டார். அதையும் தான் பார்ப்போமே…

பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால். எரி சுடர்க் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும்

[பால காண்டம், கையடைப் படலம்]

[சூரிய தேவன், நிலத்திலே சிறிதளவு ஈரமும் இல்லாதபடி குடித்து விடுவதற்கு தன் வெற்றிக் கொடியை மேலே உயர்த்திக் கொண்டு திரிகின்ற முதுவேனிற் காலமே அன்றி வேறொரு பருவம் அங்கே இல்லை. அவ்விடத்தை நினைத்தால் அவனுடைய நெஞ்சும் வெந்து போகும்]

மண்டெயெப் பிளக்கும் உச்சி வெயில். நாமெல்லாம் குடை எடுக்க ஓடுவோம். கம்பனுக்கு கற்பனைக் குதிரை ஓடுது. (அந்தச் சூட்டிலுமா…?)  இது தான் கம்பனில் நாம் இன்று கற்க இருக்கும் அணிப்பாடம்:

உயர்வு நவிற்சி அணி

உள்ளது உள்ளபடி சொல்லாமெ, கொஞ்சம், லேசாவோ, ஓவராவோ பில்டப் செய்து சொல்வது எல்லாமே இந்த அணியில் அடங்கும். ஆக (ஏன் உங்களுக்கு இப்பொ அனாவசியமா தளபதி ஞாபகம் வருது?), உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவன  யாவும் உயர்வு நவிற்சியணியாகும். (இலக்கணப் பாடம் நடத்தும் போது ஒரு வாக்கியமாவது இலக்கணத் தமிழில் சொல்லாட்டி எப்புடி???)

ஒரு பொருளின் தன்மை இருக்கணும். (பூ மணக்கும்; இது பூவின் தண்மை)

அதை கொஞ்சம் பில்டப் செய்து சொல்லணும். (பூ சூடியதால் அவள் மணக்கிறாள்… சூப்பரில்லே. நினைக்கும் போதே மணக்குதோ?)

முக்கியமான இன்னொரு விதி, இரசிக்கும்படியா பில்டப் செய்து சொல்லணும். பூவோடு சேர்ந்த நார் மணக்கும் ஓகே. பன்றியோட சேர்ந்த பசுவும்… நோ..நோ..பேட் வேர்ட்ஸ்…

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.