ஏதுடா வம்பா போச்சி?


கற்போம் கம்பனில் – 13
(09-12-2019)

கேள்விகள் பலவிதம். (ஒவ்வொன்றும் ஒருவிதம் என நீங்கள் பாடினால் உங்கள் வயது(ம்) 55 க்கு மேல். என்ன சரிதானே?); கேள்விகளால் தான் இவ்வுலகம் அறிவு பெறுகிறது என்பர். அதிகம் கேள்வி கேட்பவர்கள் பகுத்தறிவாளர்களாகி, அவர்களிடம் கேள்வியே கேட்க முடியாத நிலை உருவாகும் விபரீத சூழலும் சில சமயங்களில் ஆவதுண்டு.

”ஏது வெகுதூரம் வந்து விட்டீர்?” இக்கேள்வி ஜாக்சன் துரை கேட்டதில் ஓர் அலட்சியம் பார்த்து இரசித்தோமே! இதேபோல் “ஏதுடா வம்பாப் போச்சி? லவிக்கையும் கிடையாது…” என்பதில் இருக்கும் ஒரு கிண்டல் செமெய்யா இருக்கும். சாதாரணமான் கேள்வியை மேலும் சிறப்புக்கு உரியதாக சிறப்பின் கொடியினை உயர்த்திப் பிடித்திட இப்படிப்பட்ட ’ஏது’ கள் உதவுகின்றன.

காற்று வந்தாலே கவிஞர்கள் மனதில் பல கேள்விகள் வருமே? (ஏன் வந்தது? கொடி அசைந்தது ஏன்?) இப்படிப் பல. அந்தக் காற்று, முல்லை மலர்களில் பொருந்திய மகரந்தத்தை அசைத்து, வளப்பம் மிகுந்த கொன்றைப் பூங்கொத்துகளையும் அசைத்து, வண்டுகள் ஆரவாரிக்குமாறு, இந்நிலவுலகத்து வந்ததாம். அத்தோடு போச்சா? காற்றானது, கடலால் சூழப்பட்ட நிலவுலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் சொல்லுதற்கு அரிய பேரின்பத்தைத் தோற்றுவித்ததாம். இனிமே காத்து அடிச்சா, இம்புட்டும் இரசிங்களேன்.

எல்லைநீர் வையகத்து எண்ணிறந்த எவ்வுயிர்க்கும்
சொல்லரிய பேரின்பம் தோற்றியதால்; –
முல்லைசேர் தாது அலைத்து, வண்கொன்றைத் தார் அலைத்து,
வண்டு ஆர்க்கப் பூதலத்து வந்த புயல்

இன்னொரு கிலுகிலுப்பான கவிஞர், ’ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே’ ஸ்டைலில் பாடி வருகிறார். (ஞாபகம் என்றால், தாடி வச்ச சேரன் என்பதோடு, ’அறிவிப்பு’ என்ற பொருளும் இனி ஞாபகம் வரட்டும் என் இனிய தமிழ் மக்களே!) ஆனால் வேர்த்து விறுவிறுத்து இருக்கிறார். ஏது இந்தப் பக்கம்? என்றேன். வந்த பதில் செமெ ஹாட் மச்சி… ரொம்ப நாள் கழிச்சி பாக்க வந்த காதலனைக் கட்டிப் பிடிக்கத் துடிக்கும் காதலியின் நிலை எப்படி இருக்கும்? அப்பொ அதைப் பாத்த கவிஞன் நிலை? (ஆமா அந்த இடத்தில் கவிஞனுக்கு என்ன வேலை? ) இதோ பாட்டில் வடிக்கிறார் படியுங்களேன்.

காதலன்மேல் ஊடல் கரைஇறத்தல் காட்டுமால்
மாதர் நுதல்வியர்ப்ப, வாய்துடிப்ப, – மீது
மருங்கு வளை வில்முரிய, வாள் இடுக நீண்ட
கருங்குவளை சேந்த கருத்து

தலைவியின் நெற்றி வியர்த்தது; வாய் துடித்தது; இரு பக்கமும் வளைந்த புருவங்களாகிய விற்கள் மேலும் மேலே சென்று வளைந்தன; வாள் படையும் தோற்கும் படியான நீண்ட கரிய நீலமலர் போன்ற கண்கள் சிவந்தன. இந்த காட்சிகள் யாவும் அவள் தன்னுடைய காதலன் மீது கொண்ட ஊடல் அளவு கடந்து செல்வதைச் சொல்லும் அறிவிப்பாம் அதாவது ஞாபகமாம்.

இன்னொரு கவிஞர் ஒரு காரியத்தைக் காரணத்துடன் சேர்த்துச் சொல்ல வருகின்றார். சந்திரன் வானத்தில் தோன்றுகிறது. அப்போது மகளிர் நெஞ்சிலுள்ள ஊடல் தீர்கின்றதாம். மனசில் நினைச்சி என்னத்தெ உருக? காதலன் வந்திருப்பாரோ? இப்படி காரியத்தையும் சிக்கெனச் சொல்லுது பாட்டு.

‘பெருந்திங்கள் தோன்றுமே பெய்வளையார் நெஞ்சில்
பொருந்(து)ஊடல் தீர்தற் பொருட்டு.’

பெரும்பாலும் கவிஞர்கள் மகளிர் கடைக்கண் பற்றித்தான் எழுதுவர். இங்கே ஒருவரோ மன்னனுடைய பார்வை பார்த்து எழுதுகிறார்.

‘கூர்கொள்நெடு வேலுடைநம் கோன்கடைக்கண் பார்வையே
சீர்கொள்கவி வாணர் திரு.’

வேலுடைய நம் மன்னனுடைய கடைக்கண் பார்வையே கவிபாடுவதில் வல்ல புலவர்கட்குச் செல்வமாகும். அரசனுடைய கடைக்கண் பார்வைக்கு உரியராதல் என்ற காரணத்தால் புலவர்கட்குப் பெருஞ்செல்வம் பெறுதலாகிய காரியம் வாய்க்கும் என்று கூறாமல், அக்காரணத்தையே செல்வப் பேறு ஆகிய காரியமாகக் கூறியமை கவனிக்கத் தக்கது. காரணத்தையும் காரியத்தையும் ஒன்றாக்கிச் சொல்லும் வித்தையில் வல்லவர் நம் கவிஞர்.

’ஏது ரொம்ப தூரம் வந்துட்ட மாதிரி இருக்கே?’ கம்பர் வந்து கேட்டார்.

‘ஏன் இந்த “ஏது” என்பதை இந்த அழுத்து அழுத்துறீக ஐயனே?’ கம்பனிடம் கேட்டேன்.

‘ஏது அணி பத்தி எழுதத்தானே இந்த இழுவை?’

கம்பன் நேரே பாய்ண்டுக்கு வந்தார். அவர் தரப்பில் ஒரு பாடலும் தந்து மறைந்தார்.

கம்பர் தந்த பாட்டு இதோ…

தாம் இடித்து எழும் பணை முழக்கும், சங்கு இனம்
ஆம் இடிக் குமுறலும், ஆர்ப்பின் ஓதையும்,
ஏமுடைக் கொடுஞ்சிலை இடிப்பும், அஞ்சி, தம்
வாய் மடித்து ஒடுங்கின – மகர வேலையே

[தாம் அடிக்கப்படுவதால் எழுந்த போர் முரசின் ஒலியும், சங்குகளின் தொகுதிகளில் இருந்து தோன்றுகின்ற இடி போன்ற குமுறலும், வீரர்கள் ஆர்த்தலால் தோன்றிய ஓசையும், பாதுகாவல் உடைய கொடிய வில்லின் (நாணைத் தெறித்தலால்) உண்டான ஓசையும், ஆகிய பேரொலிகளுக்கு அஞ்சி மகர் மீன்களைக் கொண்டுள்ள கடல் தம் வாயை மடித்துக் கொண்டு ஒடுங்கின]
[யுத்தகாண்டம்; அதிகாயன் வதைப் படலம்]

பிற ஓசைகளுக்குக் கடலின் ஒலி குறைந்துவிட்டதை கடல் அவ் வோசைகளைக் கேட்டு அஞ்சி வாய் மூடி ஒடுங்கியது எனக் கற்பனை செய்வது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி

சுருக்கமா சொல்லணுமா? தோசைக்கும், ஸ்பெஷல் தோசைக்கும் உள்ள வித்தியாசம் தான் தற்குறிப்பேற்ற அணிக்கும், ஏதுத்தற்குறிப்பேற்ற அணிக்கும் உள்ள வித்தியாசம்.

கற்றலும் கற்பித்தலும் தொடரும்.

பின் குறிப்பு: ’கம்பன் பாடல் தவிர, இங்கு எடுத்தாளப்பட்டுள்ள பாடல்கள் எங்கிருந்து எடுக்கட்டுள்ளன?’ என நீங்கள் கண்டுபிடித்துச் சொன்னால் உங்கள் பெயர் அடுத்த பதிவில் குறிப்பிடப்படும்.

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.