கர்மவீரர் காமராஜர்


வியப்பூட்டும் விஐபி – 34

அந்தமானுக்கும் பெருந்தலைவர் காமராஜருக்கும் இருக்கும் தொடர்பு, அவர் பெயரில் இங்கு இயங்கி வரும் ஒரு பள்ளியும், முச்சந்தியில் கூரையுடன் கூடிய முதல் சிலையும் தான்.

இப்பள்ளியின் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அதே விழாவிற்கு வந்திருந்த ஓய்வு பெற்ற அதிகாரி மூலமாய் காமராசருக்கும் அந்தமானுக்கும் தொடர்பு உண்டான இன்னொரு செய்தி கிடைத்தது.

அப்போது அந்த அதிகாரி சிதம்பரம் அன்னாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தாராம். பெருந்தலைவர் விருதுநகரில் பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்ற அறிவிப்பு வரும்போது காமராஜர் அவர்கள் சிதம்பரத்தில் இருந்திருக்கிறார்.

முழங்கை வரை நீண்ட கதர் சட்டை, வேஷ்டி மற்றும் துண்டை தோளில் போட்டு கிளம்பிவிடும் பழக்கம் உள்ள காமராஜர் அடுத்த நேரத்திற்கு உணவு & பணம் எதுவும் இல்லாமல் இருந்தாராம். பயணச்சீட்டு எடுக்கவும் பணம் இருப்பதில்லையாம் எப்போதும், அப்போதும்.

இதனைக் கேள்விப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பணத்தை மாணவர்களிடையே வசூல் செய்து பயணச்சீட்டு எல்லாம் வாங்கி அனுப்பி வைத்தனராம். அந்த மாணவர் குழுவில் அந்தமானிலிருந்து பயிலச் சென்ற மனோஹர் சிங் என்பவரும் ஒருவர்.

அவர் அந்தமான் மின்வாரியத்தில் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.

காமராஜரின் எளிமை கண்டு மிரண்டு போய், இப்படியும் ஒருவரா? என்று வியந்ததோடு, அவருக்கு உதவி செய்ய (அவருக்கே தெரியாமல்) ஒரு வாய்ப்பு கிடைத்ததையும் வியந்து வியந்து சொல்வார் அந்த தமிழர் அல்லாத, மனோஹர் சிங் அவர்கள்.

எளிமை நேர்மை கக்கன்


வியப்பூட்டும் விஐபி – 33

அந்தமான் துறைமுகத்தில் பயிற்சிப் பொறியாளனாக (வடிவேலு பாஷையில் அப்ரசண்டிகள்) வேலைக்குச் சேர சென்னையில் நேர்முகத் தேர்வு நிகழ்ந்தது. ஒரு கேள்வி கேட்டார்கள் , ”கேம்பல்பே – தீவுக்கு வேலைக்கு வருவீகளா?”

”அந்தமானுக்கே போவதா முடிவுசெஞ்சாஞ்சி! கேம்பல்பே என்ன? வருவேன்” – இப்படிச் சொல்லாமல், தலை மட்டும் அசைத்தேன்.

அந்தமானுக்கு மூன்று நாள் பெரிய கப்பலில் பயணம் செய்து, போர்ட் பிளேயர் சென்று, மீண்டும் மூன்று நாள் சிறிய கப்பலில் பயணம் செய்தால் தான் கேம்பல்பேக்கு சென்று சேரலாம் எனப் பின்னர் தெரிவித்தார்கள்.

“கக்கன் யார் என்று தெரியுமா?” அடுத்த கேள்வி வந்தது. ”கேள்விப்பட்ட மாதிரி இருக்கு முழுசா தெரியலை” – இது நான்

ஓரிரு மாதத்தில் கேம்பல்பே தீவில் பயிற்சிப் பொறியாளனாய் சேர உத்திரவு வந்தது. அந்தமானில் அரசுப் பணிக்குச் சேர்ந்தேன் 1986 மே தினத்தன்று.

இண்டர்வியூ செய்து தேர்வு செய்த அதிகாரியான திரு சிவசாமி அவர்களை அந்தமானில் மரியாதை நிமித்தமாய் பார்க்கச் சென்றேன். ஞாபகம் வைத்து மீண்டும், ”கக்கன் பத்தி கேட்டப்போ, தெரியாமெ முழிச்ச அந்தப் பையன் தானே? இப்பொவாவது சொல்லு ஏதாவது தெரியுமா?” நல்ல வேளையா இண்டர்வியூக்குப் பின்னர், கொஞ்சம் படிச்சித் தெரிஞ்சி வச்தெச் சொன்னேன்.

தன் மனைவியை அழைத்து அறிமுகம் செய்தார் அந்த அதிகாரி;

“அந்தக் கக்கன் பெற்ற மகள் தான் இவர்”

மரியாதையுடன் வணங்கி விடை பெற்றேன்.

நேர்மையான போராட்ட வீரர் கக்கன் அவர்களின் உறவுகளோடு, நான் அரசு வேலை துவங்கப் போகிறேன் என்ற வியப்போடு என் அரசுப் பயணம் துவங்கியது.

கக்கன் என்றது தொடர்ந்து வரும் பெயர்… காமராஜர்.

அப்பொ அடுத்த விஐபி கர்மவீரர் காமராஜர்

காத்திருக்கவும்.

வியப்பூட்டும் விஐபி – 32


முனைவர் அந்தமான் அய்யாராஜு

ஒரு இடம் கலகலப்பாக இருக்கிறதா? அந்த இடத்தில், ஒருவருடைய குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறதா? அங்கு முனைவர் அய்யாராஜு அவர்கள் இருக்கிறார் என்று பொருள்.

அவர் அந்தமான் கல்வித்துறையில் உயர் பதவி வகித்து வந்தார்; நல்ல பேச்சாளர்; நாடக ஆசிரியர்; கவிஞர்; எழுத்தாளர் இப்படி பன்முகம் கொண்ட நல்மனிதர். இந்த அரிய குணங்கள் பார்த்து நாமும் நட்பானோம்.

ஒருமுறை லிட்டில் அந்தமான் தீவில் பணியில் இருக்கும் போது, முனைவர் அய்யாராஜு அவர்கள் அலுவல் நிமித்தமாக வந்திருந்தார். அவர் பணிகள் எல்லாம் முடித்து, இரவு உணவு வேளையில் தான் ஒன்று சேர்ந்தோம்.

ஆர் டி ஐ சட்டம் அப்போது தான் வந்த புதிது. அது தொடர்பாக பொதுமக்கள் கேள்விகளைக் கேட்டுத் துளைக்க, அதை என்னிடம் கேட்டுக் கொண்டே வந்தார்.
எல்லாவற்றிற்கும் தேவையான பதில்கள் (சட்டப் பிரிவு எண்கள் உட்பட) சொல்லிக் கொண்டே வந்தேன்.

”என்ன இது? ஆர் டி ஐ சட்டம் தொடர்பாய்க் கேட்கும் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கிறீர்களே! பேசாமல் நீங்க ஒரு புத்தகமே எழுதலாம் போல் இருக்கிறதே?”

அவர்தம் அருள் வாக்கு பலித்து, எனது முதல் நூல் ‘தகவல் அறியும் உரிமை – ஏன்? எதற்கு? எப்படி?’ 2006 ஏப்ரலில் வெளி வந்தது.

தான் ஓர் எழுத்தாளராய் இருந்தும், பிறரை நூல் எழுதும்படி செய்தது வியப்பு தான்.

மேலும் மறுநாள் நடந்த ஒரு கூட்டத்தில், என் பெயரின் முன் இருக்கும் T N என்பதினை, யாரும் எதிர்பாரா நேரத்தில் Tamil Nenjan தமிழ் நெஞ்சன் என்று விரிவு செய்ததும் இவர் தான். அது ஒரு புனைப்பெயர் போலும் ஆகிவிட்டது.

தொடரும் அடுத்த விஐபி எளிமை நேர்மை – கக்கன்

காத்திருக்கவும்.

வியப்பூட்டும் விஐபி – 31


இலக்கியச் சுடர் இராமலிங்கம்

ஒருமுறை காரைக்குடிக்கு கம்பன் விழாவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் வழக்கம் போல் ஓர் இலக்கியப் பட்டிமன்றம் இருந்தது. காரசாரமாய் விவாதம் ஓடியது. அதில் ஒரு பக்கம் பேசிய பேச்சாளர் தன் பேச்சு முடிந்தவுடன் நைஸாய் நழுவிச் சென்று விட்டார். விசாரித்ததிலும், அவர் பேசும் முறையிலும், அவர் ஒரு வழக்கறிஞர் என்பது தெளிவாயிற்று.

அடுத்த நாள், அதே வக்கீல் ஃபேஸ்புக்கிலும் இருப்பது தெரிந்தது. நட்புத்தூது கேட்டுவிட்டு, சுடச்சுட “இப்படி பாதியில் பட்டிமன்றத்தில் எழுந்து போனீர்களே, இது நடுவருக்கு அவமரியாதை செய்வதாய் ஆகாதா? நீதிமன்றத்தில் இப்படிச் செய்தால், நீதிபதி தப்பா நெனைக்க மாட்டாரா?” இப்படிக் கேட்டேன்.

பொறுப்பாய் பதில் வந்தது. ஏற்கனவே இப்படி விரைவில் செல்ல வேண்டி, கம்பன் கழகத்தாரிடம் அனுமதி பெற்றதும் தெரியத் தந்தார். (கம்பன் கழகமே அனுமதி தந்து விட்டது. நடுவில் நீ என்ன நாட்டாமெ? என்று மனதில் நினைத்திருப்பாரோ!!!).

அந்த பாதியில் போனவர், இவ்வளவு நல்ல மனுஷரா இருப்பார் என்பதை நான் கனவிலும் எதிர்பாக்கலை. 40 ஆண்டுகாலமாய் கம்பருடன் தொடர்பில் இருப்பவர்; 19 புத்தகங்கள் எழுதியவர்; சாம்பிளாக சில புத்தகங்கள் அனுப்பி வைத்தார். எவ்வளவு பெரிய மனிதர்!! அதுவும் பாரதிவிருது, பாரதி பணிச்செல்வர் விருது, கம்பர் சீர் பரவுவார் விருது, இலக்கியச்சுடர் என்று விருதுகளின் அணிவகுப்பே வைத்திருக்கும் அவர் தான் திருமிகு த இராமலிங்கம் அவர்கள்

.

என் நூலான ’பாமரன் பார்வையில் கம்பனை’ அனுப்பி வைத்தேன். பாண்டிச்சேரிக்கு வாங்களேன்… கம்பன் விழா இருக்கிறது. அழைத்தார். அத்தோடு நில்லாமல் பலருக்கு அறிமுகம் செய்ய, மேடை ஏற்ற, போக்குவரத்து என்று எல்லாத்துக்கும் என்மீது ஒரு கரிசனம் காட்டினார். (’இவரெப்பாத்து அப்படி ஒரு கேள்வி கேட்டோமே?’ என்று அரித்து எடுத்தது…)

தன்னைப் பார்த்து கோபம் வரும்படி கேள்வி கேட்ட இந்த இன்னா செய்தார்க்கு மேடை ஏற்றி, பலருக்கும் என்னை அறிமுகம் செய்து நன்னயம் செய்தது வியக்க வைக்கிறது.. அதைவிட நான் எழுதிவரும் கம்பன் தொடர்பான பதிவுகளில் வரும் செய்திகளை என் பெயரோடு. தன் மேடைப்பேச்சிலும் குறிப்பிடுவது தான் மேலும் வியப்பு.

ஒரு சாமானியன் பார்வையில் கம்பன் என்ற என் நூலுக்கு அணிந்துரை தந்து, அந்தமானுக்கே வந்து முழுநாள் நிகழ்விலும் மகிழ்வோடு கலந்துகொண்டு வியப்பிலும் ஆழ்த்தினார்.

வியப்பூட்டும் விஐபி – 30


பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன்

கம்பன் கழகம் நடத்தும் விழாக்களில் சென்றால் ஒரு தாழ்மை உணர்ச்சி வந்துவிடும். பார்க்கும் நபரெல்லாம் முனைவர் பட்டம் வாங்கியிருப்பர். இரண்டு முனைவர் பட்டங்கள் வாங்கியவரும் இருப்பர்.

நூற்றுக் கணக்காய் புத்தகம் எழுதித் தள்ளியும் இருப்பர். நாமெல்லாம் அந்தமானிலிருந்து அங்கே எல்லாம் போனால் காணாமல் போய் விடுவோம். அந்தமானை வைத்துத்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கும்.

இப்படித்தான் 2014 aஅம் ஆண்டு காரைக்குடி கம்பன் கழக விழாவில் என் பஜனை ஓடிக் கொண்டிருந்தது. ஓரிடத்தில் மகளிர் பேராசிரியர் பட்டாளம்  இருந்தது. என்னை அறிமுகம் செய்தவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (அதாங்க தமிழில் ஆர் டி ஐ) பற்றி நூல் எழுதி இருக்கார் என்று சொல்லி நகர்ந்தார்.

நானும் கம்பனில் ஆர் டி  ஐ சட்டம் வரும் இடங்கள் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு அம்மையார் கவனமாய்க் கேட்டார். எல்லாம் கேட்டு முடித்து, ”நான் இதே பொருளில் மூன்று மணி நேரம் பேசியிருக்கேன்!” சொல்லி நகர்ந்தார்.

பின்னர் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் தான் அவர். ஆர் டி ஐ சட்டத்தின் மாநில அளவில் தலையாய பொறுப்பான, மாநில தகவல் ஆணையராகவும் செயல் பட்டிருக்கிறார். கலைமாமணி பட்டம் பெற்றவர். மறைமலை அடிகளின் பெயரர் நம்பி ஆரூரன் அவர்களை மணந்தவர். அத்தகைய பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் அவர்கள், எனது ஆர்டிஐ யின் கம்பன் தொடர்பான அலசல்களையும்  காது கொடுத்துக் கேட்டது வியப்பாய் இருந்தது.

கம்பன் கழகம் போன்ற அரங்குகளிலும் கூட, புதியவர்களை பேசவிட்டு, அவர்களின் கருத்துகளையும் கேட்ட தழும்பாத அந்த நிறைகுடமாய் நின்ற பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களின் செயல் கண்டு, இந்தக் குறைகுடம் வியப்பில் ஆழ்ந்தேன்.

வியப்பூட்டும் விஐபி – 29


சென்னை சிவபுரம் கபிலன்

கம்ப்யூட்டரை  பாடங்களில் படிக்காமல், அதனை உபயோகிப்பவர்களுக்கு ஒரு நல்ல வரப்பிரசாதமாய் வந்து அமைந்தது ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழ். லிட்டில் அந்தமான் தீவில் இருந்த போது, தமிழ் கம்ப்யூடர் வரவழைத்துப் படிப்பேன். அதில் ஓர் அட்டைப்படம் சற்றே வித்தியாசமாய் பட்டது.

நெற்றியில் பட்டையுடன், கழுத்தில் ருத்திராட்சமும் கொண்டு, வெந்தாடியோடு லேப் டாப் சகிதம் இருந்தார் ஒருவர். தமிழ் மென்பொருள் பற்றிய கட்டுரை அது. கட்டுரை சொன்னது அவர் பெயர் கபிலன் என தொலைபேசியுடன்.

உடனே தொடர்பு கொண்டேன். தொலைபேசியின் மறுபக்கத்தில் “சிவாயநம” என் பதில் ஒலித்தது. ”ஃபோன் எடுத்து, ஹலோ சொல்லாமல், சிவாயநம என்கிறீர்களே?” வம்பைத் துவக்கி வைத்தேன். சென்னைக்கு வரும் போது அலுவலகம் வாருங்களேன். பேசுவோம் என்றார்கள்.

சென்னையில் அவர்கள் அலுவலகம் சென்றேன். பெரீய்ய அளவில் நடராசர், மாணிக்கவாசகர் படங்கள். மறுபுறம் அதே அளவில் தந்தை பெரியார் படம்; வியப்புடன் கேட்டேன். ”சாமி படத்துக்கு சரிநிகர் சமமா சாமியே இல்லேன்னு சொன்ன ஈவே ராமசாமி படமா?”

”பெரியாரைப் பார்த்ததும் ஏன் எல்லாருக்கும் அவரது கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும் நினைவுக்கு வரணும்? அதையும் தாண்டி அவர் மொழிக்கும், சமூதாயத்திற்கும் செய்தவை போற்றப்பட வேண்டும்” என்று சொல்லிய விதம் வியப்பாய் இருந்தது.

வழிபாடு என்பது தனியே ஏதுமில்லை; வாழ்தலே வழிபாடு எனச் சைவ நெறியினை எளிமையாய் விளக்குபவர்; நினைத்த மாத்திரத்தில் மெட்டு போட்டு பாட்டு எழுதும் திறன்; கிராமப்புற மாணாக்கர்களுக்கும் கணிப்பொறி அறிவை தந்திடும் ஆவல்; தேவாரம் திருவாசகப் பாடல்களை அனைவரும் பாடும் வகையில் இசையோடு எளிமையாக்கித் தருவது; இவை எல்லாம் வியப்படைய வைத்தமையின் பிற காரணங்கள்.

அந்த வியப்பில் தொடங்கிய அறிமுகம்தான், இசையமைப்பாளர் வீ. தஷியின் அறிமுகமும் கிட்டிட உதவியது.

தொடரும் அடுத்த விஐபி சாரதா நம்பி ஆரூரன்

வியப்பூட்டும் விஐபி – 28


இசையமைப்பாளர் வீ. தஷி

[இப்பதிவைப் படிக்குமுன் பதிவு – 27 ஐப் (படிக்காதவர்கள்) படித்து விட்டுத் தொடரவும்]

அந்தமானில் கருக்கொண்ட ’ஆல்பம்’ வளர்ந்து பிரசவிக்க பத்து நாளில் ஒரு வாய்ப்பு கிட்டியது சென்னையில் இசையமைப்பாளர் வீ. தஷியினைச் சந்திக்கும் வகையில்.

லிட்டில் அந்தமான் தீவிலிருந்து பாதிரி அருள்தாஸ் அவர்களின் பாடலை கேட்கச் செய்தேன். கேட்ட இசையமைப்பாளரோ, ”யார் குரல் இது?” கேட்டார்.

”ஒரு டம்மி வாய்ஸ் வேண்டும் என்பதால், நான் தான் பாடினேன்” – என் பதில்;

”பாதிரியார் ஆல்பம் வெளியிடுவது இருக்கட்டும்; நீங்க எப்ப ஆல்பம் போடப் போறீங்க?”

”அதுக்கு இது பதில் இல்லையே?….” என முழித்தேன்.

தஷி அவர்கள் கேட்டார்; “கவிதை எழுதுவீகளா? ரெண்டு கவிதை கொண்டு வாங்க.
பாதிரியார் பாட்டு இருக்கு; ஆல்பம் ரெக்கார்டிங் ஆயிடும்.”

தூது போன இடத்தில் தோது செயத மாதிரி, ‘அந்தமான் அலைகள்’ ஆடியோ ஆல்பம் தயாராகி வந்தது.

குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஆலபம் வெளி வர வைக்கலாம் என எதிர்பாராத வகையில் ஓர் இன்ப அதிர்ச்சி தந்த அந்தக் கேரள மாநில விருது பெற்ற இசையமைப்பாளர் வீ. தஷி அவர்களின் செயல் வியக்க வைக்கிறது. இவர் 1330 குறளுக்கும் இசை அமைத்து பாடல் வடிவிலும் வெளியிட்டுள்ளார்.

ஆல்பத்தில் ஒரு பாடலுக்கு, ’ஆதிசிவனின் அதிசயத்தைப் பாருங்களேன்’ என்ற வரியினை மட்டும் பாட, பொள்ளாச்சியிலிருந்து ஒரு சிறுமி தனுஸ்ரீயை வரவழைத்தோம்.

சில நாட்களில் அந்த சிறுமி தணுஸ்ரீ பாடிய பாடல்கள் ‘சிறுவாபுரி பிள்ளைத்தமிழ்’ என வெளிவந்தது மேலும் வியப்பு தான்.

அந்தமானில் இருக்கும் நபருக்கு சென்னை இசையமைப்பாளரை எப்படித் தெரியும்?

அதற்கு சந்திக்கலாம் அடுத்த விஐபி சென்னை சிவபுரம் கபிலன்

காத்திருக்கவும்.

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ: http://www.andamantamilnenjan.wordpress.com

வியப்பூட்டும் விஐபி – 27


அருட்கவிஞர் அருள்திரு மு. அருள்தாஸ்

லிட்டில் அந்தமான் தீவில், சுனாமியால் பழுதடைந்த துறைமுகத்தினை சீரமைக்கும் பணியில் இருந்தேன். ஒரு நாள் அங்குள்ள கிறிஸ்தவ பாதிரியார் அருள்தாஸ் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது.

சிவனே என்று திருநீறு பூசி இருக்கும் என்னை, சர்ச்சுக்கு அழைத்து அங்கு வந்திருப்போருக்கு நல்ல கருத்து நாலு சொல்வதற்கான அழைப்பு அது. வந்த வேலை இனிதே முடிந்தது.

அருள்தாஸ் அவர்கள் தனது அடுத்த வேலையினைக் காட்ட ஆரம்பித்தார். அவர் கவிதையும் எழுதுவார். அந்தமான் பற்றி ஒரு பாடல் எழுதி வைத்திருந்தார். அதற்கு டியூனும் போட்டிருந்தார். உள்ளூர் இசைக் கலைஞர்களை வைத்து   இசை அமைத்தும் வைத்திருந்தார்.

நான், பாடல் கேட்கத் தயாராய் இருக்கும் போது, மைக் கையில் தந்து பாடுங்கள்; இதை பதிவு செய்யலாம் என்கிறார். சரி… என்று அதுவும் செய்தேன்;

”இது போன்று ஐந்து, ஆறு பாடல்கள் வைத்துள்ளேன்; அதனை எல்லாம் வைத்து ஒரு ஆடியோ ஆல்பமாய் கொண்டு வர நினைக்கிறேன். உங்கள் குரலில் பதிவிட்ட பாடலை, சென்னை போகும் போது எடுத்துச் சென்று, ஆடியோ ஆல்பம் தயாரிக்க விசாரணை செய்து வாருங்கள்” என்றார்.

”பாதிரியார் அருள்தாஸ் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் தன் பாடலுக்கு, என்னை ஏன் தெரிவு செய்தார்?” என்பது அப்போது வியப்பாய் இருந்தது.

ஒருமுறை அரக்கோணம் சென்றபோது, பாதிரியாரிடம் பேசி ரொம்ப நாளாச்சே என நினைத்து  தொலைபேசியில் அழைத்தேன். ”இதோ ஐந்து நிமிடத்தில், நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பேன்” என வந்து சேர்ந்தார். அடெ… அவரும் அரக்கோணத்தில் தான் இருந்திருக்கிறார். வாழ்க்கை தான் எத்தனை வியப்புகளை தந்து கொண்டே இருக்கிறது. நாம் தான் கவனிக்கத் தவறுகின்றோமோ?

ஆமாம்… சென்னையில் இசை அமைப்பாளர் ஒருவரைச் சந்தித்த போது அந்த வியப்பு இன்னும் அதிகம் ஆனது.

தொடரும் அடுத்த விஐபி இசையமைப்பாளர் வீ. தஷி

காத்திருக்கவும். அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ:   www.andamantamilnenjan.wordpress.com

வியப்பூட்டும் விஐபி – 26


மாவீரன் பழ நெடுமாறன்

’அந்தமான் முரசு’ வார இதழின் 40 ஆம் ஆண்டு தொடக்க விழாவின் பொருட்டு அந்தமான் வந்திருந்தார் பழ நெடுமாறன் அவர்கள் (24-08-2008). அதே விழாவில் அந்தமான் அலைகள் என்ற இசைக் குறுந்தகடினையும் வெளியிட்டார்.

சுப்பிரமணிய பாரதியினை மறுபடியும் பிறந்து வரச்சொல்லி அழைப்பு விடுக்கும் பாடல் ஒன்று திரையில் காட்டப்பட்டது. பராசக்தியிடம் காணி நிலம் வேண்டும்; தென்னைமரம் வேண்டும்; நிலா ஒளி வேண்டும் என்று கேட்ட அனைத்தும், அதற்கு மேலும் இந்த அந்தமானில் இருக்கிறது. எனவே அந்தமானுக்கு மறுபடி பிறந்து வரச்சொல்லி அழைப்பு விடுக்கும் பாடல் அது.

படக்காட்சிகள் உள்ளூர் நண்பர்களை வைத்துப் படமாக்கியது. ஒரு சிறுவன் தான் சின்ன பாரதியாய் வலம் வருவான்.

பாடல் காட்சி  முடிந்தது. நிகழ்ச்சியும் முடிந்தது.

அரங்கின் வெளியே பழ நெடுமாறன் ஐயாவின் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்; அவ்விடம் வந்த ஐயா, அங்கே நின்றிருந்த ஒரு சிறுவனைப் பார்த்து, ”குட்டி பாரதி நீ தானே?” என்று கண்டுபிடித்து அருகில் அழைத்தார். தனது ’தமிழன் இழந்த பூமி’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். ”இளம் பாரதிக்கு என் இனிய வாழ்த்து”  எனக் குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டுத் தந்தார்.

பெருந்தலைவரால் மாவீரன் எனவும், திருமதி இந்திராகாந்தியால் ’என் மகன்’  எனவும் பெயர் வாங்கிய பழ நெடுமாறன் ஐயா, என் மகனான அச் சிறுவனையும் கூட, மதித்துப் பாராட்டிய விதம் வியப்பைத் தந்தது.

அந்த அந்தமான் அலைகள் ஆடியோ ஆல்பம் எப்படி உருவானது? வாருங்கள் லிட்டில் அந்தமான் தீவுக்கு. ஒரு கிருஸ்தவப் பாதிரியார் தான் அதற்கு மூல காரணம்.

தொடரும் அடுத்த வி ஐ பி அந்த அருட்கவிஞர் அருள்திரு மு. அருள்தாஸ்

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)
வலப்பூ:   www.andamantamilnenjan.wordpress.com

வியப்பூட்டும் விஐபி – 25


அந்தமான் விஷ்ணு பத ரே

அந்தமானில் முதன் முறையாக கம்பன் கழக பன்னாட்டு ஆய்வு மாநாடு 2016 ஏப்ரலில் நடந்தது. தமிழில் நடக்கும் விழா என்றாலும், உள்ளூரில் இருக்கும் ஒரு விருந்தினரை அழைக்க விரும்பியது கம்பன் கழகம்.

அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரான திரு விஷ்ணு பத ரே அவர்களை அழைக்கலாம் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டது. தொலைபேசியில் பேசி ஒப்புதலும் வாங்கியாயிற்று. முறைப்படி அழைப்பிதழ் தந்து பாராளுமன்ற உறுப்பினரை, ஒரு தட்டில் பழம் பூ எல்லாம் வைத்து அழைத்திடக் கோரிக்கை வைத்தது தாய்க் கம்பன் கழகம்.

பாராளுமன்ற உறுப்பினரோ, ”அதெல்லாம் வேண்டாம்; எத்தனை மணிக்கு தமிழர்
சங்கத்தில் இருக்க வேண்டும் என்ற விவரத்தை குறுந்தகவல் வடியில் அனுப்பினால் போதும்” என்றார்.

சொன்னபடியே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்து விட்டார். அவருக்கோ தமிழ் தெரியாது. பெரும்பாலான தமிழ் ஆர்வலர்க்கோ ஹிந்தி தெரியாது. இருப்பினும் அனைவரைப் பற்றியும் ஒவ்வொருவராய்ச் சென்று விசாரித்து அறிந்தார்.

”தமிழ்நாட்டில் அரசியல் கட்சியின் சிறு சிறு பதவிகளில் இருப்போரையே பார்க்க முடியாத சூழலில், அந்தமானில் தமிழ் தெரியாமல், தமிழ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆர்வமுடன் வந்திருப்பது வியப்பு” என்றனர் வந்திருந்த தமிழறிஞர்கள்.

நேரில் போய் பேசாமல், தொலைபேசியில் பேசி ஒப்புதல் வழங்கி, குறுஞ்செய்தியில் நேரம் வாங்கி ஒரு பன்னாட்டு ஆய்வரங்கில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பு செய்த திரு விஷ்ணு பத ரே அவர்களை நினைக்கையில் வியப்பு தான் மேலிடுகிறது.

தொடரும் அடுத்த விஐபி மாவீரன் பழ நெடுமாறன்

காத்திருக்கவும்.

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. (9531835258)

இதற்கு முன் வெளியான பதிவுகள் படிக்க எனது வலப்பூவுக்குள் செல்லவும்.
http://www.andamantamilnenjan.wordpress.com