இன்ப அதிர்ச்சிப் பரிசு
சமீப காலமாய் வரன் தேடுவது எவ்வளவு சிரமமான காரியமாக இருக்கிறதோ, அதை விட நமக்கு, அந்த கல்யாண விழாவுக்குத் தேவையான பரிசுப் பொருள் தேடுவது அதீத சிரமமான காரியமாகி விட்டது. சிறு பிராயத்து திருமணப் பரிசுகளின் பட்டியலைப் பாரத்தால், முழுதுமாய் பாத்திரங்களும் பண்டங்களுமாய்த் தான் இருக்கும். திருமணம் ஆனவுடன் தம்பதிகளுக்கு பாத்திரங்கள் தேவை என்பதை அறிந்து பரிசு கொடுத்த காலம் அது. (ஒரு வேளை பாத்திரம் அறிந்து…… போடு என்று சொன்னதிலும் ஏதும் உள் அர்த்தம் இருக்கலாமோ?)
காலம் மாற மாற, இந்தப் பாத்திரப் பரிமாற்றம் கூட மாறித்தான் வருகின்றது. (இன்னும் மதுரை போன்ற மாநகரங்களில், திருமண சீசன்களில், பாத்திரக் கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிவதைப் பார்க்க முடிகிறது. சீர்வரிசைக்கும் மக்கள் வரீசையாய் வாங்க நிற்பதும் உண்டு). இப்போதெல்லாம் திருமணத்திற்கு முன்னரே என்னென்ன தேவையோ, அவை அனைத்தும் வாங்கி வைத்து விடுகின்றனர். அல்லது எல்லாம் வாங்கிய பிறகு தான் கலயாணம் என்றும் பலர் உள்ளனர். (வருங்கால மனைவி மேல் இவ்வளவு கரிசனமா?). சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், வீடு வாசல் எல்லாம் வாங்கிய பிறகு தான் திருமணம் என்றும் இருக்கிறார்கள். (எல்லாம் செட்டில் ஆன பிறகு தான் மற்ற “எல்லாம்” என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்). வங்காளிகள் இதில் மிகவும் கவனமாய் இருந்து 40 வயதாகியும் செட்டிலும் ஆகாமல், கல்யாணமும் ஆகாமல் கடைசியில், கிடைத்த வாழ்க்கை வாழ்கின்றதை அந்தமானில் காண முடிகின்றது.
அப்படி இல்லாவிட்டால் என்ன குடியா முழுகிவிடப் போகுது? இதில் இன்னொரு சின்ன சௌகரியம் இருக்கிறது. ”எனக்கு கல்யாணம் ஆனப்பொ எங்க வீட்டுக்காரர் சின்னதா ஒரு கருப்பு வெள்ளை டீவி தான் வச்சிருந்தார். நானு வந்த பொறவு தான் கலர்டீவி மொதக்கொண்டு எல்லாமே வந்தது” இப்படி தம்பட்டம் அடித்துக் கொள்ள, வீட்டிக்கு விளக்கு ஏற்ற வரும் அம்மனிக்கு ஒரு சந்தர்ப்பம் தரலாமே… (பொறுப்பில்லாத ஆட்களுக்காய் எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு??)
நமக்கு மற்றவர்கள் என்ன பரிசு கொடுத்தார்களோ அதையே நாம் அவர்களுக்கும் பரிசாய் தரமுயல்வது ஒரு ரகம். அவர்களின் தேவை அறிந்து, அவர்களுக்கு இது தேவை என்று விசாரித்து அறிந்து தருவதும் ஒரு கலைதான். (அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் வீட்டிற்க்குப் போய் ஆராய்ந்து பரிசு தர முயல்வது). சிலர் வெட்கத்தை விட்டு, ”எனக்கு இதை நீ வாங்கிக் கொடு பரிசாய்” என்று கேட்பவர்களும் உண்டு. ஆனால் அந்த பரிசின் விலை கொடுக்க நினைத்ததினை விட அதிகம் ஆகி விட்டால் அதே வெட்கமில்லாமல், வித்தியாச தொகையை கேட்டு வாங்குவதும் நடக்கும்.
கல்யாணப் பரிசாய் பெரும்பாலோரின் தெரிவு கடிகாரமாய்த்தான் இருக்கின்றது. ஒரு வீட்டில் எத்தனை தான் மாட்டி வைக்க முடியும்? (அதுக்காக டாய்லெட், பாத்ரூம் என்று எல்லாமா மாட்டி விட முடியும்??). விழாக்களில் பிரபலங்களுக்கு மரியாதைப் பரிசுகளாய் வரும் பொன்னாடைகளை அவர்கள் என்னதான் செய்வார்கள்? (பொன்னாடை என்று அழகு தமிழில் இருப்பதை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்ய முடிவதில்லை. வெறும் சால்வ் என்ற சொல்லோடு அது முடிந்து விடுகின்றது. தமிழன் அந்த ஆடைக்கு பொன் என்று பெயர்சூட்டி அதிலும் மகிழ்வு காண்கிறான்… வாழ்வின் இரகசியமே… மகிழ்தல் என்பதில் எப்போதும் தமிழருக்கு தனி அக்கரை இருந்திருப்பதை மறுக்க இயலாது.
சாதாரணமான பரிசை எதிர்பார்த்து பள்ளிகளில் போட்டிகள் நடக்கும் போது மிகப் பெரிய பரிசு கிடைத்தால் எப்படி இருக்கும்? இப்படிப்பட்ட ”இன்ப அதிர்ச்சி”ப் பரிசு கன்னடத்துப் பைங்கிளிக்குக் கிடைத்திருக்கிறது. அப்போது அவருக்கு அந்தப் பெயர் இல்லை. பேங்களூரில் (அப்போது பெங்களூருவும் இல்லை தான்) புனித தெரசா பள்ளியில் அந்த இளம் சரோஜா பாடியிருக்கிறார் ஒரு இசைப் போட்டியில். தலைமை தாங்கியவர் அன்றைய பிரபல நடிகர் கம் தயாரிப்பாளர் ஹன்னப்ப பாகவதர். இந்த இனிய குரலை சினிமாவுக்கு பயன்படுத்தலாமே என்று இன்ப அதிர்ச்சிப் பரிசு தந்தாராம். குரல் தேர்வின் போதே, நடிகை ஆக்கலாமே என்று அவர் மனது ஓடியதாம். அந்த ஹன்னப்பரின் மனதில் ஓடிய அன்றைய பரிசு, 1958 முதல் தமிழக ரசிகர்களின் இதயங்களில் அபிநய சுந்தரியாய் இன்னும் இருக்கிறது. [ஆமா…நெஞ்செத் தொட்டுச் சொல்லுங்க… ஹன்னப்ப பாகவதர், சரோஜாதேவி இவர்களில் உங்களுக்கு யாரைத் தெரியும்?] வில்லங்கமான ஆசாமிகளுக்குத் தெரிந்த அந்த .. .. .. தேவியைப் பற்றி…. சாரி… நான் மறந்திட்டேன்.
அந்தக் காலத்தில் ஏதாவது வெற்றியடைந்தால் அவருக்கு பரிசாக தன் மகளைப் பரிசாகத் தரும் வழக்கம் இருந்திருக்கிறது. என்ன ஆதாரம் என்று கேப்பீகளே?? முருகனுக்கு தெய்வானை எப்படி மனைவி ஆனாள்னு பாக்கீக?.. இப்படிப் பட்ட ஒரு வெற்றிப் பரிசாகத் தான், முருகனுக்கு ஒரு பக்கம் தெய்வானை வந்து சேர்ந்தது. சூரசம்ஹாரம் முடித்த பின்னர், இந்திரன ஏதாவது பெரிச்ச்ச்ச்ச்சா தரணும் என்று (கவுண்டமனி போல்) நினைத்தாராம். அப்போது கையில் சிக்கிய பெரிய்ய்ய்ய பரிசு தெய்வானை. அப்புறம் என்ன டும் டும் டும் தான். (சிலருக்குத்தான் இப்படி டபுள் லக்கி பிரைஸ் அடிக்கிறது முருகன் மாதிரி).
அப்படியே லேசா (கம்)பர் + வால்(மீகி) = பர்வால் இராமாயணம் பக்கம் நம்ம பார்வையை செலுத்தலாம். சிவதனுசை ஒடிப்பவர்க்கு சீதையினை இல்லாள் ஆக்கும் பரிசுத் திட்டம் ஜனக மஹாராஜரிடம் உதயமானது. டப்பாவிலெ கெடெச்ச பொண்ணு, ஒரு டம்மி பீஸுக்கு போயிடக்கூடாது என்ற ஜனகனின் டக்கரான ஐடியா அது. ராமர் ஹீரோவா இருந்தாலுமே கூட, வில் ஒடிக்கும் திட்டமாய் மிதிலையின் வருகை ஏற்பாடு ஆகவில்லை. விசுவாமித்ரர் அழைக்கிறார். ஏதோ மிதிலையில் வேள்வி நடக்குதாம். ஒரு பார்வை பாத்துட்டு வரலாம். (காசா பணமா… இது அவர் சொல்லாமல் விட்டதுங்க). “…மிதிலையர் கோமான் புரியும் வேள்வியும் காண்டும் நாம் எழுக என்று போனார்…” இது கம்பரின் வாசகம்.
ஆனா அடுத்த பிட்டு அதே கம்பர் போட்றார்; ராமானுக்கே தெரியலை இங்கே சீதையை மணக்கப் போறோம் என்பது. ஆனா, மிதிலை நகரக் கொடிக்கு தெரிஞ்சிருக்காம். அதுக்கும் மேலே, அந்த திருமண ரகசியம் தெரிந்த தேவமாதர்கள் எப்படி சந்தோஷமா ஆடுவாங்களோ, அப்படி அந்தக் கொடியும் ஆடிச்சாம். ”… மணம் செய்வான் வருகின்றான் என்று அரம்பையர் விசும்பின் ஆடும் ஆடலின் ஆடக் கண்டார்….”; இப்படிப் போகுது கம்பரின் கற்பனை.
வால்மீகி பக்கம் கதை வேறு மாதிரி. (கதை கந்தல் மட்டும் எங்குமே சொல்ல முடியாத அளவு, இரண்டுமே செமெ சுவாரஸ்யம் தான்). விசுவாமித்திரருக்காய் வந்த வேலை முடிந்த பின்னர், அங்கிருந்த மகரிஷிகள், ”ஜனகரின் வேள்வியை ஜாலியா ஒரு ரவுண்ட்டு சும்மா பாத்துட்டு வரலாம்; அப்படியே ஏதோ சிவதனுசு இருக்காமே, அதையும் ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்” என்று சொல்ல அதனை விசுவாமித்திரரும், ராம இலட்சுமணர்களும் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் ஜனகர் சந்திப்பு நிகழ்கிறது. ஜனகர், ”இந்த ரெண்டு வாண்டுகள் யார்?” என்று கேட்கிறார். அப்போது எல்லா ஃப்ளாஷ்பேக் சொல்லி முடித்த பிறகு, அப்படியே ”இந்த நகரில் உள்ள சின தனுசுவைக் காண்பதற்காக இங்கு வந்துள்ளனர்” என்று முடிக்கிறார். இன்னொரு இடத்தில், இன்னும் கொஞ்சம் மேலே போய், “இந்தப் பசங்க இதெப் பாக்க விருப்பப் பட்டாய்ங்க. அதான் நானும் சரீன்னு கூட்டியாந்தேன்” என்கிறார் அந்த முனுக் என்றால் சாபம் தரும் முனி.
வால்மீகியின் கதையில் இந்த “கண்ணோடு கண் நோக்கல், நண்டுப்பிடியாய் பார்த்தல், அண்ணலும் நோக்கி அவளும் நோக்கல்…” எல்லாம் கிடையாது. ஜனகர் சீதை பத்தின ஹிண்ட் தருகிறார். முனிவரோ, ”ராமா சிவதனுசு இதான்.. நல்லா பாத்துக்க”; இவ்வளவு தான். ராமருக்கு வில்லைப் பாத்த்தும் வீரம் பீறீடுகிறது. ”இதைத் தொடவா, நாணேற்றவா?” என்று கேக்க, மகரிஷியும் “அப்படியே ஆகட்டும்” என்பதாய் முடிந்து, சீதை, வீரத்துக்குப் பரிசாய் கிடைக்கிறது இராமனுக்கு.
அதுசரீ… இப்பொல்லாம் இப்படி வீரம் காட்டினா பொண்ணு பரிசு என்றால், எந்த வெளையாட்டு வைக்க முடியும்? ”ஆங்கிரி பேர்ட்” மாதிரி ஏதாவது வெச்சாத்தான் உண்டு. அதுக்கு முன்னாடி பிரிகுவாலிபிகேசன் ரவுண்ட் வச்சி, அதில் ஸ்மார்ட்டான ஆட்களை வடிகட்டுவதும் நடக்கலாம்.
பர்வால் பார்வைகள் தொடரும்.