திர்ஷா இல்லனா நயன்தாரா


Thirisha illana nayanthaara

இந்தக் காலத்தில் பாருங்க, சினிமா பட டைட்டிலுக்கும் கூட பஞ்சம் வந்து போச்சி. இப்பொல்லாம் பழைய படத்தோட டைட்டிலெ வைக்கிறது தான் வழக்கமாயும் கூட ஆகிப்போச்சி. இப்படி, த்ரிஷா நயன்தாரான்னு எல்லாம் பேரு வச்சா, அவங்க ஏதும் சொல்ல மாட்டாகளாங்கிற சந்தேகமும் வருது. ஒரு வேளை இலவச விளம்பரம் வருதுன்னு நெனைப்பாங்களோ? இன்னொரு விசயமும் நடக்குது இப்பொ. படத்தோட பேரெ சுருக்கிக் சொல்றது. அழகிய தமிழ் மகன்னு அழகா பேரு வச்சா, அதெ ATM ன்னு சொன்னாங்க. நல்ல வேளை இந்த த்ரிஷா இல்லனா நயந்தாராவை சுருக்கி TIN கட்டாமெ இருந்துட்டாங்களேன்னு சந்தோஷப்படலாம்.

atm

இந்தப்பட டைட்டில் நமக்கு ஒரு மெஸேஜ் சொல்லுது. இதெ நாம ஏத்துக்கத்தான் வேணும்.  நாம எதையாவது குறி வைக்கும் போது அது கிடைக்கலையா? ”சீ சீ இந்தப் பழம் புளிக்கும்”னு போகலாம். இது தான் பாட்டி காலத்துப் பால பாடம். ஆனா இந்த நவீன தத்துவவாதிகள், எதுக்கு சோர்ந்து போகணும்? அது இல்லனா இன்னொன்னு… ஆக..த்ரிஷா இல்லனா நயன்தாரா அம்புட்டுத்தானே?

அந்தமானில் விஸ்வகர்மா பூஜை மிகவும் பவாண்டோகலமாக நடக்கும். (மேக் இன் இண்டியா பாலிஸி என்பதால் கோலாகலம் என்பது பவாண்டோகலமாகி விட்டது என்பதை கவனிக்கவும்). இப்பண்டிகை தீவிரமாய் இருக்கும் எல்லா ஆயுதமிருக்கும் இடங்களிலும். நம்மூர் ஆயுத பூஜை எல்லாம், பிரமாண்டமாய் நடக்கும் துர்கா பூஜையில் அட்ரஸ் இல்லாமல் கரைந்து போய் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிஜம். எல்லா இந்து மத விழாக்களிலும் பிற மத்ததவர்களும் சேர்ந்து வழிபடுவது அந்தமானின் பிறவிக் குணமாய் இருக்கும். சமீபத்திய பூஜையில் ஐயர் (தற்காலிக பூஜைக்கான ஏற்பாடு தான்) செம்புக்கு பதிலாக சின்ன டம்ளர் வைத்திருந்த்தார். இங்கே இப்படித்தான் என்றார் தெலுங்கு பேசும் ஐயர் ஹிந்தியில். செம்பு இல்லனா டம்ளர் – இது  த்ரிஷாவுக்கும் நயந்தாராவுக்கும் கனெக்‌ஷன் கொடுத்தது.

thirishaa

இது எல்லா இடத்திலும் செல்லுபடியாகுமா? அப்படியும் சொல்லி விட முடியாது. நமக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் பேசும் போது அடிக்கடி ”புரிஞ்சதா? புரிஞ்சதா?” என்று சொல்லிக் கொண்டு தான் பேசுவார். நாளைக்கு காலை 8 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிட்டு, அதுக்கும் ”புரிஞ்சதா?” என்பார் வங்காள வழக்கில் வழக்கமான ஹிந்தியில். எப்போது பாத்தாலும் நோயாளிகளோடு பேசிப் பேசி இந்தப் பழக்கம் வந்திருக்குமோ? இப்படிப் பேசுவது த்ரிஷா ரகம் தான்; யாருமே நயன்ரகமில்லையோ?

புரட்டாசி வந்தாலும் வந்தது, முதன் முறையாக அந்தமானில் நாமும் சைவம் சாப்பிட்டு தான் பாப்போமே என்று ஆரம்பித்து இன்றோடு 18 நாள் வெற்றிகரமாய் ஓடி விட்டது. இதை அப்படியே ஐப்பசியிலும் மேலும் தொடரலாமே என்றேன் என் குழ்ந்தைகளிடம். மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பழகிய குழந்தைகள், ”ஆப்ஷன் தாங்கப்பா” என்றனர். நானும் தந்தேன் நான்கு விதமானவைகளை:

ஆப்ஷன் 1: இரண்டாம் ஞாயிறு மட்டும் அசைவம் சாபிட அனுமதி. மற்ற நேரமெல்லாம் சைவம்.

ஆப்ஷன் 2: அசைவம் அவ்வப்போது வரும். ஆனால் சாப்பிடக் குறைவான அளவே கிடைக்கும்.

ஆப்ஷன் 3: நாமெல்லாம் எகிட்டேரியனுக்கு மாறிவிடலாம். அதாவது முட்டை மட்டும் சைவத்துக்கு கொண்டு வந்திடலாம்.

என்ன சொல்றீங்க? என்றேன் நான்.

உடனடியாக கேள்வியே பதிலாக வந்தது.

“None of the Above” தரவே இல்லையே?

இங்கே பார்த்தால், த்ரிஷாக்கள் வந்தாலும் கூட நயன்தாரா தேவைப்படுகிறது.

Nayanthaara

“நிறுத்துப்பா”… ஒரு குரல் கேட்டது. கம்பர் கோபமாய் நின்று இருந்தார். “இப்படியே போனால், அடுத்து சீதை இல்லனா சூர்ப்பனகை என்று சொன்னாலும் சொல்லுவே!!!” அனலாய் வந்தது வார்த்தைகள். தொடர்ந்து அதே கோபத்தில், ”வேண்டுமானால் இப்போதைக்கு கம்பராமாயணம் இல்லனா குறுந்தொகை, இப்படி ஏதாவது கையில் எடுக்கலாமே?” என்றார்.

பவ்யமாய் சொன்னேன்… கம்பர் ஐயா…உங்களின் கற்பனையினை வியந்து பார்ப்பவன் நான் உங்களுக்கு கோபம் வரும் அளவுக்கு ஏதும் எழுதிட மாட்டேன். என்னதான் எல்லாரையும் கலாய்ச்சாலும் உங்களை கலாய்ய்ச்தே இல்லை தெரியுமா? எனக்கு கம்பர் இல்லனா கம்பர் தான்”

கம்பர் கோபம் மறைந்து சிரித்தபடி மறைந்தார். ஆனால் அவரது வரிகள் மனதில் ஓடின. இந்த அது இல்லனா இது என்கின்ற சாயலில் எங்காவது கம்பசரக்கு இருக்கா? என்று தேடினேன். கிடைத்தது. கம்பனில் எதைத் தேடினாலும் தான் கிடைக்குமே!!

மாரீசன் மானாக மாறும் முன்னர் நடந்த நிகழ்வு. இராவணன் சொன்ன சொல் தவறாது, மானாக மாறி செல்லத் துணிந்த நேரம் அது. மைண்ட் வாய்ஸ் என்று சொல்வார்களே, அப்படி அந்த மாரீசனின் மைண்ட் வாய்ஸைப் படித்து கம்பர் தனது வரிகளில் சொல்லி இருக்கிறார். (என்ன கம்பரே… இதில் ஏதும் வில்லங்கமா இல்லை என்பதில் சந்தோஷம் தானே?) மாரீசன் மைண்ட் வாய்ஸ் இப்படிப் போகுதாம்…

இராவணன் சொல் கேட்டா எப்படியும் நமக்கு ஆப்பு தான். என்று தன்னோட  சொந்தக்காரங்களைப் பத்தி நெனெச்சி கவலைப் பட்டாராம். எப்படியும் நமக்கு இராம இலக்குவர்களால் சங்கு ஊதல் நிச்சயம் என்று பயந்து நடுங்கினானாம். அந்தப் பயம் எப்படி இருந்திச்சாம்?… ஆழமான குழி நீர் மாசு பட்டால் அங்கு வசிக்கும் மீன் என்ன ஆகும்? புட்டுக்கும். இல்லன்னா கரைக்கு குதிச்சு வரும். அப்பவும் பூட்டுக்கும். நீர் இல்லன்னா நிலம்; அதே த்ரிஷா இல்லன்னா நயன்தாரா?

என்ன நான் சரியாத்தான் சொல்றேனா?

இவ்வளவு படிச்ச நீங்க பாட்டையும் படிங்களேன்…. இல்லனா???

வெஞ் சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு
அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்
நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்
நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

இதிலெ ஒரு வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு சொல்லிட்டு, அவரோட மைண்ட் வாய்ஸ் எல்லாம் யாரும் தெரிஞ்சிக்க முடியாதபடி கலங்கினானாம் என்றும் சொல்கிறார் கம்பர்.

இப்பொ சொல்லுங்க; கம்பர் இல்லனா கம்பர். சரிதானே?