தாலியை விட்டு…


thaali

அந்தமான் என்றவுடன் எல்லாருக்கும் ஒரு காலத்தில் ஜெயில் தான் ஞாபகம் வந்திட்டு இருந்திச்சு. ஆனா சமீக காலமா சுனாமி தான் ஞாபகத்துக்கு வருதாம். அந்தா இந்தான்னு அதான் 11 வருஷமும் ஆச்சி. ஆனால் புதுசா யாரும் வந்தா தவறாம கேக்கும் கேள்வி, “ ஆமா, சுனாமி சமயத்திலெ எங்கே இருந்தீங்க?” என்னமோ நமக்கும் ஏதோ காலா காலமா சுனாமியோட பழக்கம் இருக்கிற மாதிரி கேக்கிறாகளே, “நல்லா கேக்கிறாங்கப்பா கொஸ்டினு” என்று பதில் சொல்ல ஆரம்பிப்பேன். ஆனால் நடு ரோட்டில் படுத்ததை இன்னும் மறக்க முடியாது தான். வீடு ஆடிகிட்டே இருந்தா எங்கே சாமி படுக்க? அதான் இப்படி.

அந்தமானில் சுனாமியின் கோரத் தாண்டவம் அதிகம் இருந்தாலும், சமயம் சார்ந்த கோவில் மசூதி தேவலயம் இவை எல்லாம் அதிகம் சேதமடையாமல் தப்பித்துள்ளன். கோவில் அப்படியே இருக்க பக்கத்தில் இருந்த அரசு விருந்தினர் மாளிகை இருந்த இடம் தெரியாமல் போன கதை எல்லாம் உண்டு. ஒரு சமயம் ஒரு கிருத்துவ தேவாலய திறப்பு விழாவில் பேசவும் கையில் மைக் வந்தது. (அப்பப்பொ இந்த மாதிரி கையில் மைக் வருவது தவிர்க்க இயலாத ஒன்று தான்). அப்போது ஒரு அரசுக் கட்டிடம் ஆரம்பித்து முடியாமல் இருந்தது. அதன் பின்னர் ஆரம்பித்த அந்த தேவலயம் திறப்பு விழா வரை வந்துவிட்டது. நான் பேசும் போது, அரசு வெறும் கோட் (CPWD Code) வைத்து வேலை செய்யும். ஆனால் நீங்கள் காட் (God) வைத்து கட்டியுள்ளீர்கள் என்றேன். இது அங்கு நன்கு எடுபட்டது.

cn temple

ஒரு வேளை கோவில் போன்றவை சுனாமியிடமிருந்து தப்பித்தமைக்கு நல்ல கட்டுமானமும் கடவுளின் அருளும் காரணமா? யோசித்தேன். சென்னை ஐ ஐ டி யிலிருந்து ஒரு பேராசிரியர் ஒரு சம்பவத்தினை சொன்னார். அதஒ உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு பெரிய அரசுக் கட்டிடம் கட்ட தயாராய் இருந்தது. கம்பிகள் எல்லாம் கட்டி ரெடி. சரி பாக்க வந்தார் ஜுனியர் எஞ்ஜினியர். எல்லாம் நல்லா தான் இருக்கு. ஊரிலிருந்து கம்பி எல்லாம் அந்தமான் வர்ரதுக்குள் தேஞ்சி போயிடுதே. அதனாலெ ஒவ்வொரு கம்பி எக்ஸ்ட்ரா போடுங்க என்றாராம். அப்படியே ஆனது. அடுத்து அசிஸ்டெட் எஞ்ஜினியர் வந்தார். எல்லாம் சை… இங்கே கிரானைட் அளவில் தரமான கல்லு கெடைக்காது. வேணும்னா ஒரு கம்பி கூட போடுங்களேன்.

images rod

அடுத்து எக்ஜிகூடிவ் எஞ்ஜினியர் முறை வந்தது. அவரும் மணலைக் காரணம் காட்டி ஒரு கம்பி கூடுதலாய்ச் சேர்த்தாராம். பின்னர் டெபுடி சீஃப் எஞ்ஜினியர் வருவதாய் தகவல் வந்ததாம். கட்டிடம் கட்டும் வேலையில் இருந்த சூபர்வைசர், தன்னோட சைக்கிளை வேகமாய் போய் மறைத்தாராம். டெபுடி சீஃப் வர்ரதுக்கும் சைக்கிளுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? கைவசம் ஒரு கம்பியும் இல்லை. ஒரு வேளை சைக்கிளைப் பாத்தா அந்த போக் கம்பி எல்லாம் புடிங்கி போடுங்க என்று சொன்னாலும் சொல்லுவார்கள். இப்படி சொல்லி முடித்தார் பேராசிரியர்.

”நாமளும் தான் அந்த பேராசிரியர் ரேஞ்சுக்கு சொல்லுமோலெ….” கம்பர் குரல் ஒலித்தது. நானும் தொடர்ந்தேன். “உலகப் பேராசிரியர்கள் ஒருவருக்கும் நீங்க கொறெஞ்சவர் இல்லெ… சங்கதியெ, ஒரு கோடா சொல்லுங்க..நானு ரோடே போட்டுடறேன்”

கம்பர் பதில், “சிவில் எஞ்ஜினியருக்கு கோடும் ரோடும் நல்லாவே போடத் தெரியும் என்பது எனக்கும் தெரியும். அனுமனை கட்டிப் போட்டாங்களே, அங்கே போய்த் தேடு… தேடியது கிடைக்கும்.” இப்படியாய் வந்தது.

இலங்கைக்கு ஓடிப்போய் பாத்தா…அடெ…சூப்பர் சமாச்சாரம் இருக்குதே.. வாங்க எல்லோருமா சேந்து ஒட்டுக்கா எட்டிப் பாப்போம்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்டபடி கட்டிப்பிடிடா என்று பாடாமல் அனுமனை கயிற்றால் கண்டப்டி கண்ணில் கண்ட கயிறு எல்லாம் வச்சிக் கட்டினாகளாம். அப்படி கட்டி முடிச்சி திரும்ப ஒரு எட்டு எட்டிப்பாத்தா இலங்கையில் ஊஞ்சலோட கயிறெல்லாம் காணவில்லையாம். தேரேட கயிறுகளும் காயப். குதிரை யானை இதெல்லாம் கட்ட கய்று மிஸ்ஸிங். அதான் அங்கே அனுமனை கட்ட எடுத்துட்டு போயிட்டாகளே.. அப்புறம் கண்ணுலெ கண்ட எல்லா கயித்தெயுமே எடுத்துக் கட்டப் போயிட்டாகளாம்…

சைக்கிள் கேப்லெ, நம்ம சைக்கிளை மறைச்ச மாதிரி இலங்கை மகளிர் எல்லாம் ஓடி ஒளிஞ்சாகளாம். தாலிக் கயிறைக் கையில் மறைச்சிட்டு. அதனாலெ அந்த தாலிக்கயிறு மட்டும் மிஞ்சி நின்னதாம்.

கயிறு கட்டாமெ மனசிலெ நிக்கும் அந்தப் பாட்டும் பாக்கலாமா?

மண்ணில்கண்ட, வானவரை வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரியஏனையரை இகலின் பறித்த–  தமக்கு இயைந்த
பெண்ணிற்குஇசையும் மங்கலத்தில் பிணித்த கயிறேஇடை பிழைத்த
கண்ணில் கண்டவன் பாசம் எல்லாம் இட்டு, கட்டினார்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும்;  தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக்
கொண்டு வந்த பாசங்களும்;  வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்;  எண்ண முடியாத மற்றையோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் (ஆக);  தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள்; தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்தபெண்களுக்கு அமைந்த;  திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக்கட்டியி்ருந்த கயிறே, அந்தச்சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

”தாலியை வித்து….” என்று சொல்வதெத்தான் இது வரை கேட்டிருப்பீங்க. ”தாலியெ விட்டு….” கம்பன் சொல்லும் கதெ எப்படி கீது?

நாமளும் செய்வோம்லெ….


பழமொழி சொல்பவர்களை ‘பழமையான மனிதர்கள்’ என்று இன்றைய நவீன இளைஞர்கள் முகம் சுழித்து ஒதுக்குவதை கவனித்திருக்கிறீர்களா? இதே போல் தலைசீவுவது, பவுடர் போடுவது (பாடி ஸ்பிரே அடிப்பது இதில் அடங்காது), தலைக்கு எண்ணெய் வைப்பது, முழுக்கை சட்டை போடுவது இப்படி எல்லாமே இன்றைய இளைய தலைமுறைக்கு எட்டிக்காயாகத் தான் இருக்கின்றது. ஒரு காலத்தில் இளமைத் துள்ளலுக்கு இவை எல்லாம் அத்தியாவசியத் தேவையாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதில் பழமொழிக்கு பதிலா ‘புதுமொழி’ மட்டும் இந்த சந்தானம் புண்ணியத்தில் இப்போதும் இளைஞர்கள் வாயில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

இதே போல் செவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்; குடிகாரன் உண்மையைத் தான் உளறுவான் போன்றவை உண்மை என்றே நம்பப் படுகின்றன. திரைப் படப் பாடல்களில் குடிகாரர்கள் பாடும் பாட்டில் நல்ல நல்ல கருத்துள்ள பல வருவதைப் பாக்கலாம். “கிக்கு ஏறுதே” என்ற கொஞ்சம் பழைய பாட்டு தான். ரஜினி படத்தில் வரும் பாட்டு அது. ஒரே தத்துவ மழை தான் போங்கள். தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை. பிறப்பை தேர்ந்தெடுக்கும், இறப்பைத் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை இல்லை. இப்படி ஒரு தத்துவம் கலந்த பாடல் கேட்டிருக்கலாம்.

தாய், தந்தை, பிறப்பு, இறப்பு மாதிரி நமக்கு கீழே வேலை செய்ய நல்ல எம்ப்ளாயீ கிடைப்பதும் இறைவன் தந்த வரம் லிஸ்டில் சேர்க்க வேண்டும். வேலை கிடைக்கவில்லை என்று பலர் புலம்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் வேலை செய்வதற்கான என்ன திறமை இருக்கிறது என்று சொல்லத் தெரிவதில்லை. கேட்டால், எது கொடுத்தாலும் செய்கிறேன் என்பார்கள். கொடுத்தால், என்னோட படிப்புக்கு இதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போவார்கள். இவர்களை எல்லாம் பேப்பர் போட்ட கலாம் கதைகளை எத்தனை முறை சொன்னாலும் மண்டையில் ஏறாது.

ரயில்வே ஸ்டேசனில் பிச்சை கேக்கும் ஒரு சிறுவனை தொழிலாளி ஆக்கும் காதாநாயகன் வேலை ஒரு படத்தில் வந்திருப்பதைப் பாத்திருப்பீங்க. பிச்சை கேக்கும் சிறுவனிடம் பணம் கொடுத்து குமுதம் கல்கி என வாங்கி விற்கும் வியாபாரியாக மாற்றும் நல்ல தரமான காட்சி அது. (அது கதாநாயகியைக் கவர செய்யப்பட்ட செயலாக இருந்தாலும் கூட). நாங்களும் செய்வோம்லே… என்று சொல்லும் அளவுக்கு ஒரு சான்ஸ் கெடெச்சது எனக்கும்.

ஒரு வாலிபனும் வாலிபியும் ஆஃபீசுக்கு வந்தார்கள். கையில் தயாராய் வைத்திருந்த பயோடேட்டாவுடன் கூடிய ஃபைலும் தந்தார்கள். வேலை ஏதும் இருந்தால் கொடுங்கள் என்று வேண்டினர். அரசுத்துறையில் இப்படி எல்லாம் வேலை தருவது கிடையாது என்று ஒரு வார்த்தையில் சொல்லி அனுப்பி இருக்கலாம். நாமளும் கதாநாயகன் ஆக ஒரு சான்ஸாக இதெ பயன் படுத்திகிட்டோம். (கவனிக்கவும் பக்கத்திலெ எந்த கதாநாயகியும் கிடையாது) உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டேன். சாஃப்வேர் தெரியும் என்றார்கள். (நாம இருப்பதோ ஒரு சிவில் எஞ்ஜினியரிங் தொடர்பான துறை). அப்புறம் எப்படியோ, ஒரு சிக்கலான அரசுப் பிரச்சினையினைக் கொடுத்து, இதனை உங்கள் சாப்ட்வேர் அறிவு கொண்டு தீர்வு செய்து கொடுங்கள். உங்கள் லேப்டாப் வைத்து வேலை செய்யலாம். வேலைக்கு தக்க வருமானம் கிடைக்கும். இது மட்டும் நல்ல முறையில் செஞ்ஜிட்டீங்க, அப்புறம் பல ஆட்களுக்கு நீங்களே வேலை போட்டுத் தரலாம். என்ன தயாரா?

ஒரு நிமிடம் யோசித்தார். சரி என்றார். (நானே ஒரு ஹீரோ ஆன மாதிரி மனசுக்குள் பட்டாம் பூச்சி பறந்தது). ஒரு மணி நேரம் செலவு செய்து ஃப்ளோ சார்ட், நம்ம தேவைகள் இப்படி அவர்களுக்கு புரிய வைத்தேன். ஒரு வாரத்தில் வந்து சந்திப்பதாய் நம்பிக்கையோடு போனார்கள். போனவன் போனாண்டி தான். அந்த ஒரு வாரம் இன்னும் ஆகவே இல்லை. நாம ஒரு வேளை ரொம்ப அதிகமா எதிர்பாத்துட்டோமோ! ம்…ஹீரோ ஆகும் கனவு ஜீரோ வாட் பல்ப் மாதிரி ஆகிப் போச்சு.

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமக்கு கீழே வேலை செய்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா?  நாம என்ன நெனைக்கிறோமோ, அதெ மொகத்தெப் பாத்தே அடையாளம் கண்டுபிடிச்சி, அதெ ஜீரோ எர்ரர் மாதிரி எந்த தப்பும் இல்லாமெ, மனசாலெ ஒத்துப் போய் வேலை செய்யணும், அதுவும் நமக்கு வாய்த்த அடிமைகள் அம்புட்டு பேருமே அப்படி இருக்கணும். சர்ர்ர்ர்ர் என்று ஒரு சத்தம். பாத்தா அங்கே கம்பர்…

கம்பர் வானத்திலிருந்து இறங்கி வந்தார். என்ன கிமூ…. உனக்கு அப்படி ஊழியர்கள் கெடெச்சாங்களா?

நான்: வணக்கம் கம்பரே. நான் எங்கே கெடைசதுன்னேன்? கெடெச்சா நல்லா இருக்கும்.

கம்பர்: இந்த பரமக்குடிக்காரங்க கமல் மாதிரி பேசுறதெ நம்மாலெயே வெளக்கம் சொல்ல முடியாது. ஆனா நம்ம உருக்காட்டு படலம் படி. அப்பொ புரியும்.

கம்பர் மறைந்து போனார்.

உங்களையும் சுந்தர காண்டத்தின் உருக்காட்டு படலத்துக்கு அழைச்சிட்டுப் போறேன்…(ங்..ங்…என்ன நைஸா நழுவுறீங்க.. சந்தானம், அது இதுன்னு சொல்றப்பொ எல்லாம் இருந்தீக… இருங்க செத்த நேரம் தான்). சீதையிடம் அனுமன் சொல்கின்ற காட்சி. ராமன் ஒரு நிறுவனத்தின் தலைவர்ன்னு வச்சிக்குங்க. அனுமன் தான் ஜீ எம். தன்னோட எம்ப்ளாயீ வானரங்கள் பத்தி சீதையிடம் விளக்கும் இடம் அது.

ஒலகத்தையே கையிலெ எடுக்கும் திறமை (கொஞ்சம் ஓவரா பில்டப் இருக்கோ?) காலெ வச்சி ஒரு தம்பிடிச்சா கடலையே தாண்டுவாய்ங்க ஒவ்வொருத்தரும். நிமிந்து நின்னாலே வானமே வசப்படும் எம்ப்ளாயீ ஸ்ட்ரெந்த் 70 வெள்ளம். அடெ… அப்புறம் நான் எப்படி நெனெச்சேனோ அப்படியே அனுமனும் சொல்றாரே.. அட… அடடெ… ஒரு வேளை அந்தக் குரங்கு புத்தி கொஞ்சம் வந்திருக்குமோ?

வீட்டுக்கு வந்து விவரித்தேன். ”நான் நெனைகிற மாதிரி, நீங்களே இருக்க மாட்டேங்கிறீங்க… உங்களுக்கு இதெல்லாம் தேவையா?” இப்படி பாட்டு வந்தது. எதுக்கு வம்பு?. பேசாமெ கம்பர் பாட்டு போட்டு ஒதுங்கிக்கிடுவோம்.

எழுபது வெள்ளம் கொண்ட எண்ணன உலகம் எல்லாம்
தழுவி நின்று எடுப்ப வேலை தனித்தனி கடக்கும் தாள
குழுவின் உம் கோன் செய்யக் குறித்தது குறிப்பின் உன்னி
வழுஇல செய்தற்கு ஒத்த வானரம் வானின் நீண்ட.

எப்படி? உங்களுக்கும் இப்படி ஏதும் நெனெப்பு இருக்கா என்ன?