பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்த படை எடுப்பு பற்றிய படிப்படியான தகவல்கள் கொண்ட, ஹிஸ்ட்ரி படிக்க வேண்டும் என்றால், பலர் பயந்து ஓடியே போவார்கள். ஆனா, ”இந்த ஹிஸ்ட்ரி என்றால் வரலாறு தானே?” என்று வடிவேல் கேட்ட கேள்வி மட்டும் நம் தமிழ் கூறும் நல்லுகத்துக்கு மிகப் பிரபலம். ”வந்தார்கள் வென்றார்கள்” மதன் எழுதிய வரலாற்றுப் புத்தகம். ஆடியோ புத்தகமாகவும் நிழல்கள் ரவியின் குரலில் வந்துள்ளது. ”இந்த மாதிரி வரலாறு சொல்லி இருந்தால் நான் இப்படி பயந்து போய் தூரப் போயிருக்க மாட்டேன்” என்று சுஜாதாவே சொன்னாராம். (வரலாற்று நாவல் எழுதி உள்ள அவரே இப்படீன்னா, நாமெல்லாம் எம்மாத்திரம்?)
அப்படியே கார்லெ தனியா போறச்செ அந்த வரலாற்றை மதன் நகைச்சுவை நெடியோடு கேட்டுகிட்டே போவேன். [தனியே என்பதை அண்டர்லைன் இட்டுப் படிக்கவும். மனைவி கூட இருந்தாலும் கேட்டுக் கொண்டே தான் போவேன். ஆடியோ பிளேயர் மட்டும் சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கும். கூடவே அடிக்கடி ஆமா..ஆமா போடுவேன்]. அந்தடி சாக்கிலெ ஒரு சங்கதி மனசெ நெருடியது. ஷாஜஹானின் மனைவி இறந்த இரண்டாம் நாளில் அவர் கண்ணாடி பாத்தாராம். தலை முழுக்க நரைத்து விட்டதாம். ரெண்டே நாளில்??!!! [ஆமா…தாஜ்மஹால் தொடர்பான வரலாற்றில் சொல்ற மாதிரி விஷயம் இது தான் கெடெச்சதான்னு கோபப்பட வேண்டாம்]
ஒரு வேளை மும்தாஜ் உயிரோட இருக்கிற வரைக்கும் கண்ணாடி பாக்க நேரமே இல்லாமெ இருந்திருப்பாரோ? அல்லது அவுகளே நல்லா மேக்கப் எல்லாம் போட்டு நல்லா கவனிச்சிருப்பாகளோ.. [சந்தடி சாக்கில் மும்தாஜின் இலவச இணைப்பான அவர் தம் தங்கையையும் கண்டு ரசித்திருக்கிறார் என்பது கொசுறுத் தகவல்].
ஒரு பழைய்ய்ய புதுக் கவிதை ஞாபகத்துக்கு வருது. வரலாற்றுக் காதலர்களாய் இல்லாமல் போனாலும் கூட, கூட வாக்கிங் போகும் அளவுக்கே உள்ள காதலர் ஒருவர் காதலியினைப் பாத்து உருகி எழுதினது.
”என் உயிரே…
என் கிராப்
கலைந்துள்ளது..
சரி செய்ய வேண்டும்…
எங்கே காட்டு
உன் கன்னத்தை….”
ஒரு வேளை இந்தக் காதல் இளவரசனும் கல்யாணம் செஞ்சிட்டு அப்புறமா காதல் மன்ன்ன் ஆகி கண்ணாடியெப் பாத்த ஆளாக இருப்பாகளா? [இதெப் படிக்கும் எல்லாருக்கும் ஒரு சின்ன விண்ணப்பம்… கன்னம் பாத்து தலை சீவ மட்டும் போயிடாதீங்க… உங்களைப் பாத்து என்ன ஆச்சி இந்த மனுஷனுக்குன்னு சண்டைக்கு வந்தாலும் வந்திடுவாய்ங்க. வேணும்ன்னா, என் செல்லக் கண்ணம்மான்னு கன்னத்தெக் கிள்ளிப் பாருங்க. வித்தியாசமான் ரியாக்ஷன் மட்டும் ஏதாகிலும் கெடெச்சா எழுதுங்க]
இதேமாதிரி கண்ணாடி பாத்து ”ஐயோ வயசாயிடுச்சே…நரைக்க வேறு ஆரம்பிச்சிடுச்சே” என்று கவலைப்பட்ட விவேக் காமெடி ஒன்றும் எல்லாருக்கும் ஞாபகம் இருக்கும்னு நம்புறேன். ஆமா…அதுக்காக, இதெ வச்சி பதவுரை தெளிவுரை மாதிரி எழுத முடியுமா என்ன?
பஞ்சதந்திரம்னு கமலின் கலக்கலான காமெடி கலாட்டா படம். [கே டீவில் விளம்பரத்தைக் காட்டிலும் அதிகமா இந்தப் படம் தான் காட்டி இருப்பாங்க]. அதிலும் இந்தக் கண்ணாடி முன்னாடி என்று செமெ கலாட்டாவான காமெடி சீன் வரும். நாகேசும் சேந்து முன்னாடி உக்காந்துட்டு பின்னாடி இருக்கும் ஆட்களோட கலாட்டா செமெ காமெடியா இருக்கும்.
தமிழ் இலக்கியத்திலெ சீவக சிந்தாமணியில் இதே மாதிரி ஒரு கண்ணாடி பிட்டு வருது. [ கம்பர் அவர்களே… மன்னிக்கவும். என்னடா நம்மாளு புது வருஷத்திலெ நம்மளெ கலட்டி உட்டுட்டு சீவக சிந்தாமனிக்கு மாறிட்டதா நெனைக்க வேணாம். வர வேண்டிய நேரத்திலெ, அதுவும் நம்ம டைரக்டர் ரவிக்குமார் ஸ்டைல்லெ, கிளைமாக்ஸ்லெ உங்களை கூப்பிட்றேன். அது வரைக்கும் கொஞ்சம் வெயிட் செய்யுங்க சாமி அல்லது வாட்ஸ் அப்பிலெ ஏதாவது பாருங்க சாமி]
காதல் இலக்கியம் ரசிச்சிப் படிக்க வேண்டுமா? சீவக சிந்தாமனியெ ஒரு ரவுண்டு படிங்க. நெறைய டிப்ஸ் கெடைக்கும். ஆளைக் கவுக்கவும் குடும்பத்தெ ஒழுங்கா நடத்தவும் தான். ஒரு இண்ட்ரஸ்டிங் செய்தி என்னன்னா, இதெ எழுதுனது சமணத் துறவியாம். துறவிகளும் பலான காரியமும் என்பது ’சேர்ந்தே இருப்பது?’க்கு பதிலா வருமோ? இருக்கலாம் யார் கண்டது. நாம இலக்கியக் கண்ணாடி போட்டுகிட்டு லேசா அந்த இலக்கியத்தெப் பாப்போம்.
கன்னத்தெ கண்ணாடி போலப் பாக்கிறது இந்தக் காலக் காதல். அப்போ, அப்படி இல்லையாம். காதலி நெஞ்சு முழுக்க கண்ணாடி மாதிரி, தன் முகம் தெரியுதாம். அட… கண் ஆடி பார்க்குதாம். கண்ணாடியின் அடுத்த பிரயோகம். அட..அடடே.. மலர் மாலையிலெ இருக்கிற கள் ஆடி வண்டு, டாஸ்மாக் கடை முன்னாடி கெடக்கிற ஆள்மாதிரி கெடந்ததாம். கள் ஆடி என்பதும் கண்ணாடி மாதிரி வருதில்லெ??… மூதூர் கண் ஆடி…[அந்தாண்டெ… அங்கெ வச்சி பாத்தேன் என்கிற மாதிர்] அதாங்க அந்த ஊர்லெ ஆடி என்று முடியுது பாட்டு.. அடடடடடா.. அப்படியெ பஞ்ச தந்திரம் ஸ்டைல்லெ இருக்கும் பாட்டையு,ம் கொஞ்சம் இதுக்குப் பின்னாடி படிங்க என்கிற சேதியும், முன்னாடியே சொல்லியிடறேன்.
கண்ணாடி யன்ன கடிமார்பன் சிவந்து நீண்ட
கண்ணாடி சென்று களங்கண்டு நியம முற்றிக்
கண்ணாடி வண்டு பருகுங்கமழ் மாலை மூதூர்க்
கண்ணாடி யானை யவர் கைத்தொழச் சென்று புக்கான்.
.
கம்பர் மறுபடியும் வாட்ஸப்பிலிருந்தே செய்தி அனுப்பினார். ராமாயணத்திலெயும் ஒரு கண்ணாடி சீன் வருதே? உன் கண்லெ படலெயா?
ஆமாம் ஐயனே… தசரதன் கண்ணாடி பாத்ததாகவும், நரை முடி தெரிந்ததாகவும் கதை கேட்டிருக்கேன். ஆனா நானும் நல்லா தேடிட்டேன் ஐயனே… அந்த சீன் மட்டும் உங்க “கம்ப ராமாயணம்” புக்லெ மிஸ்ஸிங். சின்னதா…பெரிசா இருக்கிற எல்லா புக்லெயும் தேடிட்டேன். கெடைக்கலியே…
அப்பொ, தமிழ் இணைய பல்கலைக் கழகம் இணைய தளம் போயிப் பாரேன்…
வழக்கம் போல் அந்தமானில் நெட் சொதப்பி விட்டது. பின்னாடி கொஞ்ச நேரம் கழிச்சி கண்ணாடி மேட்டர் மாட்டிகிச்சி.
அந்த இராவணன் செஞ்ச தீமைதான், தசரதன் தலை மேலெ நரை முடி மாதிரி வந்து எட்டிப் பாக்குதாம். நல்ல வேளை நம்ம தலை மேலெ அப்படி ஆளுங்க இதுவரைக்கும் வரல்லை…
தீங்கு இழை இராவணன் செய்த தீமைதான்
ஆங்கொரு நரையது ஆய் அணுகிற் றாம் எனப்
பாங்கில்வந்து இடுநரை படிமக் கண்ணாடி
ஆங்கதில் கண்டனன் அவனி காவலன்.
நீங்களும் மறக்காமெ ஒரு தபா உங்க தலையெ கண்ணாடி முன்னாடி நின்னு பாத்துகிடுங்க.. யார் கண்டா? யார் தலை மேலெ எத்தனை ராவணன் உக்காந்திருக்கானோ? எத்தனைன்னு மட்டும் என்னிச் சொல்லுங்க பின்னாடி…
அப்பொ கம்பரோட பின்னாடி மறுபடியும் வாரென்…