இடையோ இல்லை, இருந்தாலும்…


சமீப காலமாய் வரும் பஞ்ச் டயலாக்குகள் திகைக்க வைக்கின்றன. “நான் இப்பொ கெளம்பிட்டா.. என் பேச்சை நானே கேட்க மாட்டேன்” இது சமீபத்திய டயலாக். நானும், என் பேச்சை கேட்கும் நானும் வேறு வேறா?? அய்யா சாமி கொழம்புதே.. இதுக்கு பேசாமெ அத்வைதம் துவைதம் இப்படி ஏதாவது படிச்சி போற நேரத்திலெ புண்ணியமாவது தேடிக்கலாமெ!!!

இப்படித்தான் ஒரு படத்தில் செந்தில் உதைபடும் காட்சி வரும். அதான் எல்லா படதிலும் வந்ததே… அது என்ன புதுசா? என்று கேட்க வேண்டாம். ராமராஜனுடன் காரைத் தள்ளும் ஒரு கலக்கல் காமெடி. “அதெ என்னைப் பாத்து ஏன்டா கேட்டெ?” என்று திரும்பத் திரும்ப உதைக்கும் சீன் அது.

கேட்ட விஷயத்தை, விட தன்னிடம் கேட்டது தான் வீரியம் அதிகம் என்பது தான் நான் இப்பொ கையில் எடுத்திருக்கும் சங்கதி… அதில் நாம் காண வேண்டிய நீதியும் இருக்கு.

கோபம் வந்துட்டா நான், நானாகவே இருக்க மாட்டேன் என்பார்கள் சிலர். அது எப்படி ஒரு ஆள் என்பது என்ன… ஒன்பது ஆட்கள் குடி இருக்கும் வீடா என்ன?? நேரத்துக்கு நேரம், மாறி மாறி எடுத்து விட. மனம் போல் மாங்கல்யம் என்பர். அது போல் குணம் போல் மனிதன். எல்லாராலும் கோபமாய் கத்திவிட முடியாது. அதுபோல் அத்தனை பேராலும் சாந்தமாயும் பேசிவிட முடியாது.

பெண்கள் வேலை செய்யும் இடங்கள்ல சிக்கல்கள் அதிகம். ஆண் ஊழியரை திட்டுவது போல் அவர்களை திட்டிவிட முடியாது. (ஆமா அவர்கள் வீடுகளில் திட்டு தருபவர்களாய் அல்லவா இருப்பர்!!) ஒரு கட்டை குரல் உயர்த்தி சொன்னால் போதும், அணை உடைந்து வருவது போல் கண்ணீர் அப்படியே பெருக்கெடுத்து வரும். எப்போதும் எப்படித்தான் அப்படி தயாராய் கண்ணில் ஸ்டாக் வைத்திருப்பார்களோ!!! அந்த பெண் தேவதைகளுக்குத் தான் வெளிச்சம்.

சமீபத்தில் ஒரு பெண் ஊழியர் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தார். என்ன? என்று விசாரித்ததில் ஒரு நபர் அவரை ஊனமுற்றவர் என்று சொல்லி விட்டாராம். நான் கேட்டேன், நீங்கள் ஊனமுற்றவர் தானே? ஆம் என்று பதில் வந்தது. உண்மையை ஒப்புக் கொள்வதில் ஏன் தயக்கம்? இல்லை என்னை கேவலப் படுத்துவதற்குத் தான் அந்த வார்த்தையை பயன் படுத்தினார்.

சரி அது நியாயமான வாதம் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, வருத்தப்பட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவர் பேசுகிறார். வருத்தப்பட்டால் வந்தவர் ஜெயித்த மாதிரி. நாம் சகஜமாய் அதனை எடுத்துக் கொண்டால் நாம் ஜெயிக்கலாம் என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.

சில மாநிலங்களில் ஊன்முற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று தான் அழைக்க வேண்டும் என்று அரசு ஆணையே பிறப்பித்துள்ளதாம். இதே போல் ஹிந்தி தெரியாத ஆட்களை அஹிந்திபா4ஷி என்று சொல்லி வந்தனர். இப்போது அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு ஹிந்தி தெரியாத இடத்திலிருந்து வந்தவர்கள் என்று சொல்லச் சொல்கிறது அரசு.

ஊனமுற்றவர்கள் அவர்களின் திறனை வளர்த்துக் கொள்வதின் மூலம் மட்டுமே அந்த ஊனத்தின் உபாதையிலிருந்து மீண்டு வர முடியும். அட..ஊனம் இருந்தாலுமே…. இப்படியா??? என்று உலகம் மூக்கில் கை வைத்து வியக்கும்படி செய்ய வேண்டும்.

சிறுபிள்ளைக் காலத்தில் என்னை பூனைக் கண்ணா என்று கேலி செய்வர், அதே பெயரிலும் அழைப்பர். ஆரம்பத்தில் கோபம் வந்தது. பின்னர் அவர்கள் சொன்னது உண்மை தானே என்று எடுத்துக் கொள்ள கிண்டலும் கேலியும் குறைந்து விட்டது. இப்போ ஐஸ்வர்யா ராயின் ஐஸ் என்று ஐஸ் வைக்கிறார்கள் எனக்கு முன்பாக. (பின்னாடி பூனைக் கண்ணன் என்றும் பேசி வரக்கூடும்)

உன்னை அறிந்தால்..நீ உன்னை அறிந்தால் என்பது மட்டும் தான் பொதுவான உண்மை. நான் யார் என்பதை அறிந்து விட்டால் யார் தான் நம்மை காயப்படுத்த முடியும்? முதலில் நம்மைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை நாமே ஏற்படுத்திக் கொள்வோம். அது பிறரின் சங்கடமான வார்த்தை தாக்குதலில் இருந்து காப்பாற்றும்.

எதையாவது எழுதி அப்படியே இடையிலே கம்பராமாயணம் கொன்டு வருவது என்பதும் நடந்துட்டு தான் இருக்கு. இந்த மாற்றுத் திறனாளியாக சீதையை சொல்லும் இடமும் வருது. சீதையா?? எப்படி? எப்படி? என்கிறீர்களா? சூர்ப்பநகை மூக்கு இல்லாமல் இருக்கும் போது, நானும் சீதையும் மாற்றுத் திறனாளிகள் தானே என்கிறார். நீங்க கேட்ட மாதிரி, ராமனும் எப்படி? எப்படி? என்கிறார். ஆமா… சீதைக்குத்தான் இடையே இல்லையே…

இடை பற்றி இன்னொரு இடமும் வருது. அசோக வனத்தில் சீதை வாடி வதங்கிப் போனாராம். எப்படி? எப்படி? இப்படி நீங்க கேக்கனும். கல்லுக்கு நடுவிலே ஒரு சொட்டு தண்ணியும் கெடைக்காமெ, வளரும் நல்ல மருந்துச் செடி மாதிரி வாடி இருந்தாராம். முன்னர் இடை மட்டும் தான் மெலிந்திருந்தது. இப்போது இடை போல் எல்லாம் இளைத்து துரும்பானாராம். எங்கே இருந்தார்? பெருத்த இடை வைத்திருக்கும் அரக்கியர் நடுவில் இருந்தாராம். கம்பர் பார்வை எங்கே போகுது பாருங்க…

வன் மருங்குல் வாள் அரக்கர் நெருக்க அங்கு இருந்தாள்
கல் மருங்க எழுந்த என்று ஓர் துளி வரக் காணா
நல் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல் வேறு உள அங்கமும் மெலிந்தாள்.

அது சரி உங்க பார்வை எங்கே போகுது??

காலில் விழும் கலாச்சாரம்


இந்தக் காலில் விழும் பழக்கம் தொன்று தொட்டு நடந்து வருவது தான். நான் முழுவதும் என்னை உன்னிடம் ஒப்பதைத்து விட்டேன், இனி எல்லாமே நீதான்… என்று சராணாகதி தத்துவத்தை போதிக்கும் Total Surrender தான் காலில் விழும் உச்ச கட்ட முயற்சி.

சாமி கும்பிடுவதை விட்டால் இப்படி சாஸ்டாங்கமாய் காலில் விழுவது தீபாவளி அன்று தான். பட்டாசும் பலகாரமும் அம்மா அப்பாவின் காலில் விழுந்து வணங்கிய பின் தான் கிடைக்கும் என்ற போது, அதை எப்படி செய்யாமல் விட இயலும்? பட்டாசும் பட்சனமும் முக்கியம்.

முழுவதும் காலில் விழவில்லை என்றாலும் சற்றே குனிந்து ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெறும் டிரில் கண்டிப்பாய் நடக்கும் நாள், திருமண தினம். அதிலும் முதல் மரியாதை என்று தெரிவு செய்து சரியாய் அதே வரிசைக்கிரமமா விழ வேண்டும் இல்லையேல் அதுவே பெரிய்ய பிரச்சினையாக வெடித்துவிடும்.

சாஸ்டாங்கமாய் காலில் விழுவது ஒழிந்து போய் விடுமோ என்று இருந்த போது, அதை சில அரசியல் கட்சிகள் தூக்கி நிறுத்தின. புடவை பேண்ட் மாதிரியான உடைகள், கீழே விழுந்து நமஸ்கரிக்க ஒவ்வாத உடைகள். வேட்டி சுடிதார் தான் அதுக்கு ரொம்ப சௌகரியம். ஒரு வேளை அரசியல்வாதிகள் காலில் விழும் கலாச்சாரத்தை கெட்டியாய் பிடித்து வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ??

வடநாட்டவரிடம் இன்னும் அந்தக் காலை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. அப்படியே காலை வாரிவிடும் பழக்குமும் இருக்கு என்பதையும் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆனா வாஜ்பேய் காலில் விழுந்தது தமிழகத்திற்கே மரியாதை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு இத்தகைய நல்ல பழக்கங்களை நாம் சொல்லிக் கொடுக்க மறந்திட்டோமோ?? கோவையில் இருந்து என் கல்லுரித் தோழர் குடும்பத்துடன் அந்தமான் வந்து திரும்பினர். அவரின் துணவியார், நாம் படித்த அதே பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். டூர் முடிந்து ஊர் திரும்பும் போது அவர்தம் குழந்தைகள் சாஸ்டாங்கமாய் வரிசையாய் அனைத்து பெரியவர்களின் காலில் விழுந்த போது, உண்மையில் புல்லரித்து விட்டது.

அலுவலகத்தில் காரியம் ஆகனுமா?? காலைப்பிடி என்ற தத்துவம் படு பிரபலம். நான் கூட சில முறை கழுதை ஆகி இருக்கிறேன். வயது வித்தியாசம் கூட பாக்காது சிலர் விழுந்திருகிறார்கள். அப்போதெல்லாம் நான் மனதில் நினைப்பதுண்டு.. இவர்கள் என் காலில் விழவில்லை… அந்த காரியத்தில் குறியாய் இருக்கிறார்கள். காரியத்தில் கை வையடா தாண்டவக்கோனே.. என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வரும்.

இந்தக் காலில் விழுந்து காரியம் சாதித்து சம்பாதிப்பதை வைத்து கவுண்டமணி ஒரு படத்தில் நல்ல காமெடி செய்திருப்பார். மேலிடம் என் கையில் என்று உள்ளே புகுந்து அவர் காலில் விழுந்து காரியம் சாதித்து வெளியில் கம்பீரமாய் வந்து வாய் சவ்டால் விட்டு தூள் கிளப்புவார். எப்படியோ காரியம் ஆக வேண்டியது நம் எல்லாரின் கட்டாயத் தேவை.

இந்தக் காலில் விழும் கலாச்சாரம் காக்காய் பிடிக்க இருந்திருக்கோ இல்லையோ, அந்தக் காலத்திலும் இருந்திருக்கு. இதுக்கு நான் வேறு எங்கே போகப்போறேன்.. வழக்கமா கம்பரைத்தான் புடிக்கனும்.
கம்பராமாயணத்தில் இராவணனை வர்ணிக்கும் ஒரு இடத்தில் கம்பர் இந்த மேட்டரை எடுக்கிறார். இராவணனின் பாதங்களில் ஏகப்பட்ட வடுக்கள் இருக்காம். அது எப்படி அங்கே வந்தது? எதிரி மன்னர்கள் கிரீடத்தோட காலில் விழுந்து விழுந்து அதனால் காயமான தழும்புகளாம்.. எப்படி கீது??

அதுமட்டுமா? முரட்டுத்தனமான வீரன் இராவணன். யானை எல்லாம் மோதி மோதி அந்த தந்தக் காயங்கள் உடம்புலெ அங்கங்கெ இருக்காம். இராவணன் உடம்பிலெ பூசின சந்தனம் யானையின் முகத்திலெ மாறுது. அதே மாதிரி யானையின் முகத்திலெ இருக்கிற குங்குமம் இராவணன் உடம்புக்கு டிரான்ஸ்பர் ஆகுதாம்.

மாலை போட்டிருக்கும் இராவணன் பக்கத்திலெ வந்து ஒரு வண்டு தேன் குடிக்குது. அது அப்படியே யானையின் மதத்தில் போயும் திளைக்குதாம். அங்கே திளைத்த வண்டுகளும் மாலைகளுக்கு Exchange ஆகுதாம்.
ஆனா காலில் விழுந்த ஆட்களுக்கு மட்டும் பயம் தான் Exchange Offer ஆக கிடைக்குதாம்.

தோடு உழுத தார் வண்டும் திசை யானை
மதம் துதைந்த வண்டும் சுற்றி
மாடு உழுத நறுங் கலவை வயக் களிற்றின்
சிந்துறத்தை மாறு கொள்ள
கோடு உழுத மார்பானை கொலை உழுத
வடிவேலின் கொற்றம் அஞ்சி
தான் தொழுத பகை வேந்தர் முடி உழுத
தழும்பு இருந்த சரண்த்தானை.

சரி.. இப்பொ யார் கால்லெ விழுவதா உத்தேசம்?? நானு கம்பர் கால்லெ விழுந்து நமஸ்காரம் செய்யலாம்னு இருக்கேன். நீங்களும் கூட வாரியளா?

காதலில் ஜெயிப்பது எப்படி?


காதலில் சொதப்புவது எப்படி? என்று அருமையான படம் வந்தது. இன்றைய காதலின் உண்மை நிலவரத்தை தோலிருச்சி (எதை எதையோ உரிச்சியும்) காட்டியது. காதலில் சொதப்புகிறார்களோ இல்லையொ, காதலிப்பவர்களின் சொதப்பல் தான் மிகப் பெரிய சொதப்பல்.

காதல் எவ்வளவு சிரமமோ, அதை விட அதனைச் சொல்வது அல்லது வெளிப்படுத்துவது. ஏன் இப்படி இவ்வளவு சிக்கல்கள்? காதல் மலர்வதற்கு எந்தவித காரண காரியங்களும் தேவை இல்லை. இப்படி ஏதும் காரண காரியங்களுக்காய் காதலித்தால் அதனை புராஜக்ட் என்று அழைக்கலாம் என்று ஓகே ஓகே (ஒரு காதல் ஒரு கண்ணாடி) படம் சொல்லித் தருகிறது. கவுக்கிறது என்ற கொச்சையான சமாச்சாரத்தை மங்களகரமாய் மொழி பெயர்த்து Project என்கிறார்கள்.

காதலை காதலியிடம் தெரிவிப்பது எவ்வளவு சிரமமோ, அதே சிரமம் பெற்றோர்களிடம் அவர்கள் தம் காதலையும் தெரிவிப்பது. எனக்கு அந்த மீடியேட்டர் வேலை வந்து சேர்ந்தது. (புரோக்கர் என்பதை எப்படியெல்லாம் மாத்திச் சொன்னாலும்… அதை சொல்லாமல் இருக்க முடிவதில்லை). பையனின் அப்பாவிடம் நைஸாக ஆரம்பித்தேன்.

உங்க பையனுக்கு ஏதோ லவ் மேட்டர் இருக்கிறதா அரசல் புரசலா பேசிக்கிறாங்ககளே??
கிடைத்த பதில்: “ஆமா…. அவர்களை நம்பி நாம் இருக்கும் போது அவர்கள் நம் அனுமதி கேப்பாங்க என்று எதிர் பாப்பதே தப்பு”. என்ன நிதர்ஷனமான யதார்த்தமான அப்பா…!!!.
சில ஆண்டுகள் கழிந்தன. அதே அப்பாவிடம் கேட்டேன்: மருமகள் எப்படி?

“இந்த மாதிரி மக கெடைக்க ஆண்டவன் அருள் இருந்திருக்கனும்.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஊரிலிருந்து ஒரே ஜாதி ஒரே மதம் பாத்து பெண் எடுத்திருந்தாலும் கூட இப்படி அமைந்திருக்குமா தெரியவில்லை..” இப்படிப் போனது அவர் பதில். இது ஜெயித்த காதல் கதை.

இன்னொரு வீட்டில் நடந்த கதை. தங்கையின் கல்யாணத்திற்கு, அண்ணன் தன் கல்லூரித் தோழர் தோழிபடை பட்டாளத்துடன் களம் இறங்கி இருக்கிறார். ஒரு தோழி மட்டும் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு பார்த்து வருகிறாள். கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் அதை கவனிக்கத் தவறவே இல்லை. விடைபெறும் நேரம் வந்தது. தோழி சாதாரனமாய் ஆசி வாங்க அம்மா காலில் விழுந்தாள். நம்மாளு சொன்ன கடைசி வார்த்தை, “அம்மா இது தாம்மா நம்ம மாட்டுப் பொண்ணு..”. ஏதாவது மறுப்பு சொல்ல முடியுமா? அம்மாவாலும்… யாராலுமே!!!

அதற்கு நேர் மாறாக நாள் நட்சத்திரம் பற்பல பொருத்தம் என்று தடபுடலாக நடந்த ஒரு கல்யாணம். இரண்டு வருடத்திற்குள், தன் IT துறை கணவன் அடிப்பதாய் மனைவி புகார் சொன்ன போது நொந்து போனார்கள் பெற்றோர். “பேசாமல் நீயும் யாரையாவது லவ் பண்ணித் தொலெச்சிருக்கலாமே” என்ற அளவுக்கு வந்து விட்டது நெலமை.

ஜெயித்த காதல் ஒரு பக்கம். தோற்ற காதல் பல. தன் காதலி ஒரு கிளியோபாட்ரா என்று சொக்கி விழுந்தவன் அவன். ஓரிரு வருடங்களில் அந்த காதலி 90 கிலோவை நெருங்க, காதலன் முகம் தொங்கிப் போனது.

ஆட்டத்தோடு பாட்டுப் பாடும் ஜாலியான ஆசாமி இன்னொருவன். காதல் அதில் தான் தொடக்கம். கல்யாணத்தின் பின் ஆட்டமும் இல்லை. பாட்டும் காணோம். மனுஷன் நொந்து போய் குடியில் திளைக்க, வருடங்கள் உருண்டன. தன் கணவர் உயிரோடு இருந்து தொல்லை தருவதை விட இறப்பதே மேல் என்றது அந்தக் காதலி. விதவை ஆவதை விரும்பி ஏற்ற அந்த மாஜி காதலி..ஆமா.. காதல் ஏன் இப்படி ஆச்சி??

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நண்பர்கள் பெரும்பாலும் தங்களுக்குள் மச்சி (மச்சான்) என்றோ, மாப்பிள்ளை என்றோ அழைத்துக் கொள்வர். உண்மையில், நண்பர்களுக்குள் அப்படி உறவு அமைவதும் உண்டு. என் கல்யாணத்திற்கு வந்த ரெண்டு நண்பர்கள் ஒன்றாய் பஸ்ஸில் போகும் போதே இப்படி தங்கை பற்றிச் சொல்ல விரைவில் எனக்கு கல்யாணப் பத்திரிக்கை வந்தது.

சரீ..இதெல்லாம் சரி… தலைப்பு என்ன? காதலில் ஜெயிப்பது எப்படி? சொல்லிட்டு காதல் கத்தரிக்காய் மட்டும் சொல்லிட்டு வந்தா எப்படி? அது ஒண்ணுமில்லை சார். கிரேஸி மோகனின் ஒரு நாடகம் DVD ல் பாத்தேன். “கிரேஸி கிஷ்கிந்தா” அதிலும் ராமாயணம் வந்தது.. கிரேஸியின் டிராமாவில் மட்டும் தான் இராமாயணம் வருமா? நம்ம போஸ்டிங்லெயும் வருமே!!!

காதலித்துப் பார் வருஷங்கள் நிமிஷமாகும். நிமிடங்கள் வருஷங்களாகும். இது வைரமுத்துவின் பார்முலா. காதலில் ஜெயிக்க கம்பர் ஒரு பார்முலா சொல்கிறார். எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க..

காதலில் விழுந்தவர்களின் கண்களுக்கு காதலி மட்டும் தான் காதலியாய்த் தெரிவாராம். மற்றவரெல்லாம் ஆண்கள் மாதிரி தெரிய வேண்டுமாம். என்ன நம்ப மாட்டீங்களா..?? இதோ சற்றே விரிவாய்..

இராவணனுக்கு சீதை மேல் காதல். (அடுத்தவன் பொண்டாட்டி மேலே வருவது மோகம் தானே?? காதலா என்ற கேள்விக்கு பதிலை வேறு என்றைக்காவது வைத்துக் கொள்வோம்.) நாகர்கள் வழும் பாதாள லோகம் தொடங்கி பிரம்மன் வாழும் சத்தியலோகம் வரைக்கும் அதன் இடைப்பட்ட எந்த இடத்திலும் மயில் மாதிரி பிகருங்க இருந்தாலும் அவர்கள் எல்லாம் காதல் கொண்டவர்களின் கண்களுக்கு ஆடவராகத் தெரிந்தார்களாம்.

சரி இப்பொ Test வைக்கலாமா?? உங்க காதலியை மனசுலெ நெனைச்சுக்குங்க.. தமண்ணா முதல் திவ்யாபாலன் ஹன்சிகா அமலாபால் இப்படி யாரைப் பாத்தாலும் ஆண்களாக காட்சி தர வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் காதலில் ஜெயிக்கிறீங்க…

அப்படியே அந்த குஷி மூடில் பாட்டையும் படிச்சிருங்க…:

ஏகநாயகம் தேவியை எதிர்த்ததன் பின்னை
நாகர் வாழ் இடம் முதல் என நான்முகன் வைகும்
மாக மால் விசும்பு ஈறு என நடுவண வரைப்பில்
தோகை மாதர்கள் மைந்தரின் தோன்றினர் சுற்ற.

அப்புறம் வரட்டா..???

[இந்தப் பதிவிற்கு புதிய நடிகைகளின் பெயர் தேவை என்று சொன்னவுடன், இது போதுமா? என்று பெயர் தந்து உதவிய மதுரை மைந்தன் ருப்பா கேசவ ராஜாவுக்கு என் சிறப்பு நன்றிகள்].

மாற்றான் தோட்டத்து மல்லிகை


இந்த மந்திரத்தை தமிழ் கூறும் நல் உலகிற்கு தந்தவர் அறிஞர் அண்ணா. அவரது கருத்துக்களை திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமே முழுதாய் கேட்பவர்களாய் இருபந்தாலும் கூட, இந்த “மாற்றான் மல்லி” டயலாக்கை எல்லாரும் கண்டிப்பா யூஸ் செஞ்சிருப்பாய்ங்க.

ஆனா இதை பேரறிஞர் எந்த அர்த்தத்தில் சொன்னாரோ அதை மட்டும் சரிய்யா, எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாய்ங்க. பக்கத்து வீட்டு பொண்ணை ஒரு வாலிபன் சைட் அடிக்கனுமா?, அடுத்த வீட்டு அக்கா பாக்க நல்ல பளிச்சுன்னு இருக்காகளா? கீழ் போர்ஷன்லே செவத்த குட்டியை டாவடிக்கனுமா?, சில ஆண்டிகளை பலருக்குத் தெரியாமல் சில நேரங்களில் ரசிக்கனுமா? – இது எல்லாத்துக்கும் ஒரே பதில் இது தான்:- அண்ணா சொன்ன மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம். இதை அவுத்து விட்டு விட்டு நிம்மதியா கடலை போட ஆரம்பிச்சிருவாங்க.. (நான் அப்படி எல்லாம் கிடையாதுங்க.. எந்த வீட்டிலும் குழந்தைகள் தான் எனது நண்பர்கள்)

அண்ணா சொன்னதின் அத்தம் என்ன? எதிர் கட்சியினர் என்பவர் எதிரிக் கட்சியினர் இல்லை. நமக்கு எதிர் அணியில் இருப்பவர். அவர்களில் நல்லவர்கள் வல்லவர்கள் இருப்பார்கள். அப்படி எதிராய் இருப்பதாலேயே அந்தத் திறமைகளை குறைத்துச் சொல்லிவிட முடியுமா என்ன? அவர்களின் திறமைக்கு மரியாதை தரும் கண்ணியமான வாசக வசனம் அது.

ஆனா என்ன நடக்கிறது. எதிரணியினரை விரோதிகளாய் பாக்கும் வழக்கம் வந்து விட்டதே.. ஆய் ஊய் என்றால் வீச்சறுவா தூக்கும் வித்தையை சினிமாக்களும் தொடர்ந்து காட்டி வந்து கெடுக்கின்றன். கேட்டா காதலும் வீரமும் நமக்கு இரு கண்கள் என்று டயலாக் வேறு.. ஆமா எங்கே போய்க்கொண்டிருக்கோம் நாம்?

பக்கத்து வீட்டு வடநாட்டவர் ஒரு கேள்வி கேட்டார். தில்லியில் ஆளும் கட்சி தலைவரும் எதிர் கட்சி தலைவரும் பொது நிகழ்சிகளில் ஒன்றாய் தோன்றுவது போல் தமிழகத்தில் நடக்காதா? என்றார். ரொம்ப விவகாரமான கேள்வி அது. இதுக்கு நான் ஏதாவது சொன்னால் அது அரசியல் ஆகிவிடும். நானும் மழுப்பலாக அப்படி எல்லாம் இல்லையே ராஜாஜி பெரியார், கமல் ரஜனி, எம்ஜிஆர் சிவாஜி இப்படி எல்லாரும் ஒன்றாய் காட்சி தந்திருக்கிறார்களே என்று சொல்ல, கேட்டவர் அடங்கி விட்டார்.

ராஜாஜி, சக்கரவர்த்தி திருமகன் பெயரில் ராம காவியத்தை படைத்தவர். பெரியாரோ, அதே ராமருக்கு செருப்பு மாலை போட்டவர். பாம்பையும் பார்ப்பனரையும் ஒன்றாய் பார்த்தால் பார்ப்பனரை முதலில் விரட்டு என்று சொன்னவர்களின் தலைவரின் நண்பர் தான் ராஜாஜி என்ற பார்ப்பனர். ஆன்மீகவாதி ஒருவர் பெரியாரின் வீட்டில் தங்குவாராம். குளித்தவுடன் அவருக்கு திருநீரை ஏற்பாடு செய்து தந்தாராம் பெரியார். எவ்வளவு பெரிய மனிதர்கள்!!!

காமராஜர் கக்கன் போல் எளிமையின் மறு உருவமாய் வாழ்ந்தவர் தோழர் ஜீவா அவர்கள். அவரின் பெயரில் பரமக்குடியில் ஜீவா படிப்பகம் என்று உள்ளது. அங்கு ஆண் பெண் பலருக்கும் ஜீவா என்று பெயரும் வைப்பர். அவரைப் பற்றி வேறு ஒன்றும் அவ்வளவாய் வெளி உலகிற்குத் தெரியாது. ஆனால் வந்தார் ஒரு கதர் சட்டைத் தமிழர். பட்டி தொட்டி எங்கும், உலகெங்கும் உள்ள மேடைகளில் எல்லாம் ஜீவா பற்றி பேசினார். அந்தமானிலும் கூடப் பேசினார். ஆன்மீகச் சொற்பொழிவில் கூட ஜீவா இடம் பெறத் தவறவில்லை. அந்தப் பேச்சாளர் ஒன்றும் கம்யூனிச கட்சி ஆதரவாளர் அல்ல. மாற்றான் தோட்டத்து மல்லியின் மணத்தை மறுபடி மறுபடி மலரச் செய்த அந்த அபூர்வ மனிதர் தமிழருவி மணியன் அவர்கள்.
எதிரில் இருந்தாலும் எதிரணியில் இருந்தாலும் அவரும் மனிதர் தானே! எதிரியை அழிக்க வேண்டுமா? சுலம்பான வழி ஒன்று உள்ளது. அவரை நண்பனாக்கிக் கொள். இது ஒரு அறிஞர் சொன்னது.

அரசு வேலைக்கு ஆள் எடுத்தோம். எழுத்துத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்வதாய் அரசல் புரசலாய் சேதி காதில் விழுந்தது. போட்டோவுடன் வந்து தேர்வு எழுத அழைத்தோம். 10% மக்கள் போட்டோ இல்லாமல் வந்தனர். இதை முன்பே எதிர்பார்த்து கேமிராவும் கையுமாய் ஒரு அரசு ஊழியரை அமர்த்தி, சுடச்சுட போட்டோ எடுத்து (இலவசமாய்) பிரிண்ட் போட்டு கையிலெ குடுத்து, போ பரீட்சை எழுதுப்பா என்றோம். அரசின் கரிசனம் பாத்து மிரண்டே போனார்கள்.

முதியவர் ஒருவர் வந்தார். தன் மகளுக்கு காலையில் வேறு பரீட்சை இருக்கிறது. என்ன செய்ய? என்று. மாலையில் வந்து எழுதலாமே. இதோ பிடிங்க புது ஹால் டிக்கட். நேரம் மாத்தி தர்ரேன் என்று தந்தேன். காலை பரீட்சை இருக்கு என்று சொன்னதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? என்று கூட அரசு கேட்காதா? என்றார் ஆச்சரியத்துடன். வயதில் பெரியவர். மகளை அழைத்து வராத போதே தெரிகிறது. மகள் அங்கே பரீட்சை எழுதுவது. அவங்க கையில் தான் அந்த ஹால் டிக்கட் இருக்கும். எதுக்கு இதெல்லாம் என்றேன் நான். இஸ்லாமிய பெரியவர் மனம் இளகி முதுகில் தட்டி “அல்லா உங்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்” என்றார். அவர் சண்டை போட தயாராய் வந்தவர் என்பது இங்கே நான் சொல்லாமல் விட்ட உண்மை.
இப்படித்தான் இராமயணத்திலெ…. அதான் தெரியுமெ.. சீதையை ராவணன் தூக்கினது மாற்றன் தோட்டத்து கதை தானே… ஹலோ.. ஹலோ.. கொஞ்சம் பொறுமையா இருங்க… இந்த மாற்றான் கருத்தையும் கொஞ்சம் கேளுங்க…

நான் சொல்ல வந்தது, இந்திரசித்தன் கதை. அனுமன் களேபரம் செய்து விளம்பர இடைவேளையில் இருக்கும் போது, இந்திரசித்தன் கிளம்புகிறார். எல்லா திசைகளிலும் வெற்றிக்கொடி நாட்டியவன். ஆனா செத்த நேரம் அங்கே இங்கே என்று கிடக்கும் செத்த உடல்களைப் பார்க்கிறார். அட.. அனுமனது பேராற்றல் மிகவும் சிறந்தது என்கிறாராம். கேட்ட பார்ட்டிங்க எல்லாம் ஆடியே போயிட்டாங்களாம். கம்பர் எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிக்கு பாட்டு எழுதி இருக்கார் பாத்தீகளா??

சென்றனன் என்ப மன்னோ திசைகளோடு உலகம் எல்லாம்
வென்றவன் இவன் என்றாலும் வீரத்தே நின்ற வீரன்
அன்று அது கண்ட ஆழி அனுமனை அமரின் ஆற்றல்
நன்று என உவகை கொண்டான் யாவரும் நடுக்கம் உற்றார்.

மீண்டும் தேடி வருவேன்.