இயல்பினான் (குறள் – 47)


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. (47)

Translation :
In nature’s way who spends his calm domestic days,
‘Mid all that strive for virtue’s crown hath foremost place.

Explanation :
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state

வாடகைக்கு வீடு தேடிப் போனாலே… கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்பார்கள்…

அப்பொ அந்த “வீடு” நிரந்தரமா தங்க நல்ல கல்யாணம் செய்து நல் வாழ்வு வாழ்ந்தியா?? என்று அந்த வீட்டின் சொந்தக்கடவுள் கேட்க மாட்டாரா???

கம்ப தர்மர்


ஏழாம் அறிவு படம் மூலமாய் போதி தருமர் பற்றி தமிழ் உலகமே கண்டு கொண்டது. தமிழர்களுக்கு ஆறாம் அறிவு தாண்டி வேறு என்னவெல்லாம் இருந்தது..இருக்கிறது..இருக்கும் என்ற கோணத்தில் இப்போது யோசிக்க வேண்டியுள்ளது.

வடிவேலு காமெடி ஒன்று.. “ஹலோ நான் வட்டச் செயலாளர் வண்டுமுருகன் பேசுறேன்…யார் பேசுறது” என்று கேட்பார். பதிலுக்கு நான் சதுரச் செயலாளர் பேசுறேன் என்றும், வட்டத்துக்கு ஒரு செயலாளர் இருக்கும் போது சதுரத்துக்கு இருக்க மாட்டாரா என்று கேள்வி வேறு இருக்கும் அருமையான ரசிக்க வைக்கும் காமெடி அது.

ஒரு உன்மை மட்டும் மறுக்க முடியாது இதில். வட்டம் ஏதாவது வம்பு செய்தால் நாம் அனுக வேண்டிய இடம் மாவட்டம். மாவட்டம் ஏதும் வில்லங்கம் செய்தால் அவரை விட மேலிடத்தை நாம் அணுக வேண்டும் என்பது தான் அந்த காமெடி பீஸ் நமக்கு உணர்த்தும் 6ம் அறிவு.

நியூட்டனின் விதி தெரியுமா என்று யாரைக்கேட்டாலும் அந்த மூன்றாம் விதி தான் கூறுவர். இது தான் விதி போலும் என்று மற்ற விதிகள்,  விதி வலியது என்று சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்குமோ..??

முதல் விதியினை கொஞ்சம் பாருங்கள்.. நகரும் பொருள் நகர்ந்து கொண்டே இருக்கும்… நகராப் பொருள் நகராதும் இருக்கும்.  எது வரை?? ஏதாவது ஓர் இடைஞ்சல் அதற்கு வராத வரை..

அதுவும் புவி ஈர்ப்பு விசை உள்ள இடத்தில் அதையும் மீறி ஏதாவது பொருள் போக வேண்டுமா..என்ன செய்யணும்?? அதை விட மஹா சக்தி தேவை. இதைச் சொல்லத்தான் மாவட்டம் வட்டம் கதை எல்லாம் எடுத்தேன் முன்னாடியே..

கம்பராமாயணத்தில் ஒரு கட்டம் வருகிறது.. அனுமன் இலங்கையின் மதிற்சுவரை தாவி அதன் மேல் நிக்கிறார்..(மதில் மேல் பூனை கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மதில் மேல் குரங்கு) அதைப் பார்த்து சந்தோஷப்பட்ட மேல் உலகு வாழ் தேவர்கள், அனுமனுக்கு வாழ்த்து தெரிவிக்க மலர்கள் தூவினார்களாம்… அந்த மலர்களும் நேரே கொஞ்சம் இறங்கி வந்தனவாம்.. அப்புறம் அந்த இராவணனுக்கு கோபம் வந்துட்டா என்னா செய்றது என்று நெனைச்சி அப்படியே மேலே போயிடிச்சாம்..

கீழே விழுவது வேண்டுமானால் புவி ஈர்ப்பு விசையில் விழுவதாய் வத்துக் கொள்ளலாம்.. ஆனால் தேவர்களின் ஆசியையும் தாண்டி இராவணனின் எதிர் விசை செயல் படுகிறதாம்.. அதுவும் அந்த புவி ஈர்ப்பு விசையையும் தாண்டி… நட்சத்திரம் போல் அங்கேயே நின்னுடுதாம்…கம்பர் சொல்றார்..நானும் படிச்சதைச் சொல்றேன்.

இரண்டு விஷயங்கள் இங்கு தெளிவாகுது:

  1. நியூட்டனின் முதல் விதி நியூட்டனுக்கு முன்பே கம்பன் அறிந்திருக்க வேன்டும்.
  2. புவி ஈர்ப்பு சக்தி பற்றிய சேதியும் கம்பர் தெரிந்து வைத்திருக்கிறார்.

 இதோ அதன் ஆதரவுப் பாடல்:

எண்ணுடை அனுமன் மேல் இழிந்த பூமழை
மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில
அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய் கதிர்
விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்.

கம்பனின் பார்வையில் என்னும் என்ன என்ன கிடைக்குமோ?? பாக்கலாம்..

எல்லாம்…ம்..எல்லாம்….


சமீப காலமாக பிரகாஷ்ராஜ் கலக்கும் ஒரு ஃபோன் விளம்பரம் டிவியில் பிரசித்தம்..அதிலும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் லேசா கண் சிமிட்டி விட்டு லேசாக சிரித்தபடி ம்…எல்லாம் என்று சொல்வதும், அழகோ அழகு தான்.

இவ்வளவு வரிஞ்சி கட்டி எழுதும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஏதோ பலான மெட்டர் என்று… இருக்கட்டுமே..அதுவும் வாழ்க்கையோடு சேர்ந்த பகுதி தானே.. எவ்வளவு என்பதில் தான் மனிதனின் தரம் நிர்ணயம் ஆகிறது.

அந்தக் காலத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று படங்கள் சில வந்தன.. குழந்தைகளோடு அந்தப் படங்கள் போகாது இருந்தோம்.. இப்பொ சின்ன வீடா வரட்டுமா? என்ற பாடல் நமது வீட்டின் முன் அறையில் எல்லார் முன்பும் கேட்கிறது.

சமீபத்திய Science Exhibhition ல் கருத்தடை சாதனங்கள் வைத்து ஒரு எட்டாம் வகுப்பு மாணவி விளக்கிய போது.., கேட்கும் நமக்குத்தான் சங்கடமாய் இருந்தது.

என் பையனிடம், பொடிப்பயலே, Facebook ல் அம்மனமா படம் வருதாம் பாத்து பாரு என்றேன்.. அவன் கூலா சொல்றான், அந்த Close button எதுக்கு இருக்கு?. Internet ல் எல்லாம் தான் இருக்கும். நாம நல்லதை எடுத்துக்க வேணும் என்று லெக்சர் தருகிறான். ம்… என்னத்தெச் சொல்ல???

இந்த பலான சமாச்சாரங்கள் காலம் காலமாய் இருந்து தான் வருகின்றன. அறத்தின் வழியாக பொருள் ஈட்டி அதன் மூலம் இன்பம் துய்க்க வேண்டும் என்கிறார் நமது ஐயன் வள்ளுவர்.

அந்த காலத்து A சர்டிஃபிகேட் வாங்கிய பாடல்களின் தொகுப்புகள் அகப் பாடல்கள் என்று அடக்கி விட்டனர்.

இப்பொ யார் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் படிக்கலாம் என்று வந்ததில் தான் சிக்கலே உருவாகிறது. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சாமான்யன் ஒருவன் படித்து.., அதை எப்படி பொருள் கொள்வான் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

உணர்சிகளை கட்டுக்கும் வைத்திருக்கும் கலை மனிதனுக்கு வேன்டும் என்பதால் தான், சில சேதிகளை அரசல் புரசலாக வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்தில் அப்படி ஏகப்பட்ட இடங்களில் அரசல் புரசல்களாக வந்ததை கம்பரஸம் என்று தொகுத்து விட்டார்கள்.

நம்ம கண்ணுக்கும் அப்பப்பொ சில சங்கதிகள் மாட்டுது. அதில் அந்த மாதிரி ஒரு மேட்டரைத் தாண்டி கம்பர் சொல்லும் சேதியும் தெரியுது. ஒரு காட்சி பாக்கலாமா??

அனுமன், ஜாலியா இலங்கைக்கு என்ட்ரி செய்கிறார். அனுமனின் பார்வையில் என்ன என்ன படுகிறது என்பதை கண்ணில் பார்த்த கம்பன் அப்படியே எழுதுகிறார்… வாங்க… நாமளும் கூடவே ஒட்டுப் பாப்போம்.

மனைவிமார்கள் தங்கள் கணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்… அவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா?? வீராதி வீரர்கள்..சூராதி சூரர்கள்.

அவர்களுக்குத் துணை யார் தெரியுமா? காதல் மயக்கம் தான். உயிரை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் உடலாய் படுக்கையில் கிடந்தார்களாம் காதல் மயக்கத்தில்..

அந்த மயக்கத்திலும் வாசல் மேல், விழி மேல் விழியே வைத்து பாத்துக் கிடந்தார்களாம். அப்போது தூது சென்ற மகளிர் வந்தார்களாம். அவர்களைப் பாத்ததும்..அவர்களின் முகத்தில் புன்னகையைப் பாத்ததும் போன உயிர் திரும்பி வந்ததாம்… ஆனந்தத்தில் அப்படியே பூரித்தார்களா??…அதுதான் இல்லை…துடித்துப் போய் விட்டார்களாம்..கம்பன் சொன்னது இது.

கம்பன் சொல்லாத கதை இப்பொ பாக்கலாமா… இது கம்பன் எழுதியது என்றாலும் கூட, பார்த்தது யார்? அனுமன். ஒரு வகையில் அனுமனும் தூதர் தானே… சீதா தேவியைப் பாத்துவிட்டு தகவல் சொன்னால் ராமரும் இப்படித்தான் சந்தோஷத்திலும் துடித்துப் போவார் போலும்..என்று அனுமன் நினைப்பதாய் கம்பர் நினைத்து எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. ஆமா..நீங்க என்ன நெனைக்கிறீங்க???

அதுக்கு முன்னாடி பாட்டையும் போட்றேன் (சன் ம்யூசிக் பாக்கிற பின் விளைவு தான்)

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய சலத்தர் வைகும்
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலின் சாய்வர்
மாதுயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை  .

 மீண்டும் அனுமனோடு பாத்து வருகிறேன்.

எங்கே தொட்டா எங்கே வலிக்கும்??


 தொட்டுக் கொள்ளவா?? என்று செல்லமாய் கேட்கும் பழைய பாடல் ஒன்று கேட்டிருப்பீங்க… கேக்கும் போதே தொடத் தோன்றும்… அவ்வளவு பாவனையுடன் அமைந்த பாடல் அது.

அதுக்கப்புறம் தொட்டால் பூ மலரும்…என்று சொல்லி, பதிலுக்கு தொடாமல் நான் மலர்ந்தேன் என்று போட்டு வாங்கியது.. அதுக்காக காதலன் தொடவே கூடாது என்ற அர்த்தத்தில் காதலி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை தான்.  தொடாமலேயே என் மலர் போன்ற முகம் இவ்வளவு மலர்கிறதே… நீ தொட்டால்..இன்னும் மலரும் என்று யோசிக்க வைக்குது.. (நான் மட்டும் ஏன் இப்படி யோசிக்கிறேன்..உங்களுக்கு அப்படி ஏதும் படுதா???)

 காலங்கள் மாறின… அட சன்டாளா..உன் கண் பட்டாலே கர்ப்பம் ஆயிடுவாளே!!! என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்… இது என்ன கண்கட்டு வித்தை என்று யோசிக்க வேண்டாம்.. கர்ண பரம்பரையாக கர்ணன் பிறந்த கதையும் இந்த கர்ப்ப வகை தானே..

சரி அப்படியே… எங்கே தொட்டா எங்கே  வலிக்கும் எரியாவுக்கு வந்து ரவுண்ட் கட்டுவோம்.

கதாநாயகனை வழிக்குக் கொண்டு வர இந்த வலியினை கையில் எடுக்கும் யுத்தி. இதில் நாயகனுக்கு வேண்டிய நபர்கள் அம்மா, அப்பா, தாத்தா, தங்கை, சகோதரன் குழந்தைகள் என்று எது எதுவோ மாறி மாறி வரும்.. ஆனா மாறாத ஒரு விஷயம்… அந்த ஒரு டயலாக்.. அங்கே தொட்டா இங்கே வலிக்கும் என்பது தான்.

மேடைப் பேச்சுகளிலும் எதைத் தொட்டா ஆடியன்ஸ் காதில் சங்கதி ஏறும்? என்பதை தெரிந்து கொள்ளல் அவசியம்.. (இந்த மாதிரி போஸ்டிங்க் போடும் போது உங்களுக்கு என்ன பிடிக்குமோ, அதை நான் போடுகிறேனா?? – என்ன நான் சரியா….எழுதுறேனா???)

இன்று (17-11-2011) லிட்டில் அந்தமான் தீவுகளின் அனைத்து பள்ளிகளும் ஒன்று சேர்ந்து அறிவியல் கண்காட்சி நடத்தினர். நான் தான் சிறப்பு விருந்தினர் இங்கு அதனைத் திறந்து வைக்க…பேச.. (புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பதில் இந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கிறது). மாணவர்கள் கூட்டம் எக்குத் தப்பாய். கலை நிகழ்ச்சிகள் வேறு உண்டு அதை பார்க்கவும் பொது ஜனங்கள் வேறு.. இவர்கள் மத்தியில் அறிவியல் பற்றியும் பேச வேன்டும்.

“நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது எங்க அப்பா தண்ணி குடிக்கக் கேட்டா, உடனே கொண்டு வந்து குடுப்பேன்.. இப்பொ நீங்க குடுப்பீங்களா??” இது என் முதல் கேள்வி…

நஹி… என்று உண்மையான பதில் வந்தது. குழந்தைகள் எந்த ஊரிலும் எந்தத் தீவிலும் பொய் சொல்வதில்லை.

“இதெ..இதெ தான் எதிர் பாத்தேன்.. ஏன் இப்படி?? Generation Gap என்று நான் சொல்ல மாட்டேன். This generation needs everything into scientific approach… ஏன் நான் தண்ணீர் தரனும்? நீங்களே ஏன் போய் தண்ணி புடிச்சி தரக்கூடாது?? அக்காவை அல்லது தம்பியை ஏன் கூப்பிடலை?? இவ்வளவு ஏன் எதற்கு எப்படி இப்போதைய பசங்க கேக்கிறாய்ங்க… கேளுங்க… கேளுங்க.. நல்லா கேளுங்க.. இந்த மாதிரியான கேள்விகள் தான் அறிவியலின் ஆதாரம்..” கூட்டம் ஆர்வத்துடன் கேக்க ஆரம்பித்தது.

கண்டுபிடிப்பாளர்கள் எல்லாம் பெரிய படிப்பு படித்தவர்கள் அல்ல. என்னையும் உங்களையும் மாதிரி சாமானியர்கள் தான். சொல்லப் போனால்,  காதுலெ என்ன பஞ்சா வச்சிருக்கே என்று திட்டு வாங்கின பையன் தான் Ear Muff கண்டுபிடித்த சேதியும், வீட்டு வேலை செய்த பெண்மனி மேடம் கியூரி ஆகி இரண்டு நோபல் பரிசு பெற்ற சேதியும் சொல்ல… பசங்க மாத்திரமில்லெ மற்றவர்களும் நல்லா கேட்டார்கள்..

சம்பந்தம் இல்லாததை இழுத்துக் கொண்டு வந்து சம்பந்தப் படுத்தி எழுதுவது எதில் சேத்தி… நான் மட்டும் வம்படியா கம்பரை இழுக்கலையா என்ன???

இப்பொ கம்பர் வந்துட்டாரா… இவர் பாருங்க… சம்பந்தம் இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்வார்.. பாக்கலாமா???

அனுமனைப் பாக்கிறார்.. பாத்தா ஒரு பாய்மரம் மாதிரி தெரியுதாம்.. (எனக்கு என்னமோ Life Boat மாதிரி தெரியுது). ஓகெ Fine.. எப்பொ தெரியுமா?? ஒரு மலைமேலே அனுமன் கால் வைக்கிறார். அப்பொ அந்த மலை அப்படியே பூமிக்கும் கீழே போகுதாம்.. அதெப் பாத்தா ஒரு படகு மூழ்கும் போது பாய்மரம் வெளியே தெரியுதே…அது மாதிரி இருக்காம். இது வரை எல்லாம் சரி தான்.

நடுவில் கம்பர் ஒரு பிட்டு போட்றார் பாருங்க..

அந்த மலையில் அனுமன் கால் அழுத்தத்தால் வானத்திலெ கீற நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் மேகம் இவை எல்லாம் கொஞ்சம் மெரண்டு போய் மேலே போயிட்டதாம்.. இங்கே கால வச்சா அங்கே என்ன நடக்குது பாத்தீகளா??

தாரகை சுடர்கள் மேகம் என்று இவை தவிரத் தாழ்ந்து
பாரிடை அழுத்துகின்ற படர் நெடும் பனி மாக் குன்றம்
கூர் உகிர் குவவுத் தோளான் கூம்பு எனக் குமிழி பொங்க
ஆர் கலி அழுவத்து ஆழும் கலம் எனல் ஆயிற்று அன்றே!

இன்னும் வரும்.

அரண்டவன் கண்ணுக்கு…


வெளிப்பார்வைக்கு சாதுவாய் இருப்பவர்கள் வீட்டிலும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. வீட்டில் ராமன் வெளியில் கிருஷ்ணன் என்று சில லீலை செய்பவர்களும் இருக்கிறார்கள்.

அலுவலகத்தில் சாந்த சொரூபியாய் இருந்து கொண்டு, வீட்டிற்கு வந்தால் மூக்குக்கு மேலும், தொட்டதுக்கெல்லாம் அடி என்று விளாசுபவர்களும் இருக்காக..

பிறர் முன்னர் தான் இன்னார் என்று நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு இமேஜ் உருவாக்க வேண்டியது.. பின்னர் அதைக் காப்பாற்ற சிரமப் பட வேண்டியது..இதுவே பலரின் வாழ்க்கை தத்துவம்.

என் நண்பர் ஒரு பார்ட்டிக்கு போனார்… நல்ல வெளிநாட்டு சரக்கை ஒரு பிடி பிடிக்கலாம் என்று இருந்தாராம். ஆனா..நீங்க எல்லாம் எங்கே தண்ணி அடிக்கப் போறீங்க??.. இந்தாங்க..என்று ஒரு ஜுஸ் கிளாஸ் கையில் கிடைத்ததாம்… அட..உலகம் இன்னுமா என்னையெ நல்லவன்னு நெனைச்சிட்டு இருக்கு?? என்று அவரும் நல்ல புள்ளையா ஜூஸ் குடிச்சிட்டு வந்திட்டாராம்.. இது எப்படி இருக்கு??

மாமியார் ஒடைச்சா மண்குடம்…அதே மருமகள் ஒடைச்சா.. பொன்குடம் என்று கேள்விப்பட்டிருப்பீங்க…. அந்தமானில் ஒரு மாமியார் ஊரிலிருந்து வந்தால் போதும்… அந்த மருமகளின் நண்பிகள் அனைவரும் அந்த மாமியாரை அம்மா என்று அழைத்து விடுவார்கள்… எனக்கு அது விளங்கலை ஆரம்பத்தில்.. நண்பியின் அண்ணாவை அண்ணா என்றும், தங்கையை தங்கை என்றும் அழைப்பவர்கள்… அத்தையை மட்டும் அம்மா என்கிறார்களே..ஏன்??

அத்தை உறவு கொஞ்சம் சிக்கலானது..அம்மா..அன்பு மயமானது.. இதை விட்டால் வேறு என்ன காரணம் பெரிசா இருக்கப் போவுது.

மரத்துக்கும் பேய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா யாரோ நல்லா கதை கட்டி விட்டாங்க… புளிய மரம்… மரத்து உச்சி…என்ன சம்பந்தமோ… பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளிய மரத்தில் தொங்கித்தானே ஆகனும்…இப்படி வேறு…

டி என் கே, அந்த பேயும் புருஷன் கூட சன்டை போடும் தெரியுமா??

யாரது?? திரும்பினா… அட..நம்ம கம்பர்.. வாலை சுருட்டி ஐயா என்ன சொல்றாருன்னு கேப்போமே…

இலங்கைக்கு அனுமன் போகும் மெய்டன் விசிட். பாக்குறது எல்லாம் வித்தியாசமா தெரியுது.

அங்கே அரக்க மகளிர் சரக்கு அடிச்சி கெடக்கிராய்ங்க… இடை எக்கச்சக்கமா இருக்காம்…ஆகாயம் மாதிரி.. ஒரு ஷேப்பில் இல்லாமெ..

தண்ணி அடிக்கிற அடியில் கண்ணே சிவந்து போச்சாம்… ஓரம் வேறு கருப்பா அந்த மை வேறு… வாய் வெளிறிப் போச்சாம்… புருவம் வளைஞ்சே போச்சாம்… துடித்தன வாயும் கண்ணும்..

மதிமுகம்…புதுமுகமா ஆச்சாம்… எங்கே பாத்தாக அதை?? அதே கள்ளில் முகம் பாத்தாக..

அட..யாரு இந்த சக்களத்தி…?? அப்படியே புருஷன் கூட போய் சன்டை போட்டாகளாம்…

அனுமன் அமைதியா ஜாலியா அதை ரசித்தபடி நடக்கிறார்.

உள்ளுடை மயக்கால் உண் கண் சிவந்து வாய் வெண்மை ஊறி
துள் இடைப் புருவம் கோட்டித் துடிப்ப வேர் பொடிப்ப தூய
வெள்ளிடை மருங்குலார் தம் மதி முகம் வேறு ஒன்று ஆகிக்
கள்ளிடைத் தோன்ற நோக்கிக் கணவரைல் கனல்கின்றாரை.

நாம ஏதோ சீரியல் பாக்கிற மாதிரி இல்லை??

நான் எக்செல்காரன்..எக்செல்காரன்..(எக்செல் பாடம் – 6)


நான் ஆட்டோக்காரன்.. ஆட்டோக்காரன் ஸ்டைலில் எக்செல்காரன் என்று பாடினால் என்ன என்று யோசிச்சேன்.. (எதுக்கு இப்படி எல்லாம் யோசிக்கிறேன்னு யாரும் கேக்க மாட்டேங்கிறீங்க…அதான் அப்படி யோசிக்கிறேன்)

அந்தப் பாட்டின் நடுவில் இசுக்கு என்னா இசுக்குத்தான்..என்பதை இஃப்புக்கென்னா இஃப்புக்குத்தான் என்று மாற்றி பாடும் போது தான் இந்த IF சமாச்சாரம் பத்தி எழுதினா என்ன???… தலைப்பு ரெடி… மேட்டர்..கீழே படிங்க..

லாஜிக்கே இல்லாமெ படம் எடுக்கிறாய்ங்க என்று சில படம் பாத்திட்டு வந்து நாம பேசுவோம் அல்லது லாஜிக் ஒதைக்குதுன்னு சொல்றதை கேட்டிருப்போம்.

இதுக்கு சரியான தமிழ் தர்க்கம் என்று கோணார் இ- அகராதி சொல்கிறது.

நீ நல்லவனா? கெட்டவனா?? என்ற கேள்விக்கு பதில் நல்லவன் அல்லது கெட்டவன் இவ்வளவு தான் இருக்கணும். தெரியலையே என்று பதில் வந்தால் சங்கடம் தான்.

வீட்டுக்காரியிடமிருந்து இந்த மாதிரி பதில் வரும்… ஆமா..அந்த கல்யாணத்துக்கு போகணுமா??? இது என் கேள்வி.. போலாம்னு தான் நெனைக்கேன் என்று இழுத்தால்… ஆமாமும் இல்லை. இல்லையும் இல்லை.

எக்செலில் அந்த இழுவை இல்லாத தர்க்கம் லாஜிக்கல் கேள்வி இருந்தா அதை அந்த IF வச்சி தூள் கிளப்பலாம்.

ரொம்ப சிம்பிளா ஒரு பசங்களோட மார்க்கை entry செய்வோம். 35 அல்லது அதுக்கு மேலும் எடுத்தா பாஸ் இல்லாட்டி பூட்டுகிச்சி என்று வரணும்.. செய்யலாமே.. அப்படியே நாமலும் எக்செல் கத்துகிட்ட மாதிரி ஆச்சி.

உதாரணமா இப்படி Data type செய்யுங்களேன்:

A1 Name
A2 Kuppan
A3 Suppan

(வேறு பெயர்களும் வைக்கலாம் தப்பே இல்லை… கத்துகணும் என்பது முக்கியம்..பெயரை விட)

அப்படியே குப்பன் எடுத்த மார்க் 61 என்பதையும் சுப்பன் எடுத்தது 16 என்பதையும் போடுங்க.. எப்படி..இப்படித்தான்.

B1 Marks
B2 61
B3 16

வித்தை ஆரம்பிக்கலாமா???

C1 ல் Result போட்டுவைங்க.

C2 ல் குப்பன் பாஸா, பூட்டகேஸான்னு பாக்கணும். C2 லெ ஒரு சின்ன சூத்திரம் எழுதுங்க..(கம்பனைப் பத்தி இவ்வளவு எழுதினீங்க..இது தான் கம்ப சூத்திரமா???)

=IF(B2>34,”பாஸ்”,”பூட்ட கேஸு”)

இங்கே தான் எக்செல் லாஜிக்கா ஒரு கேள்வி கேக்குது. பையன் 34க்கு மேலே வாங்கிட்டானா??

அந்தக் கேள்விக்கு ஆமா என்றால் பாஸ் என்பதை Double quote க்குள் போடுங்க.

அதே கேள்விக்கு பதில் இல்லை என்று வந்தா…??? இருக்கவே இருக்கு.. Fail அல்லது பூட்டகேஸு..எதை வேணாலும் எழுதுங்க..ஆனா..அந்த Double quote மறந்திராதீங்க.

இதையே எல்லா ரிசல்ட் பாக்கவும் புடிச்சி இழுத்து பயன்படுத்தலாம்.

அப்பொ Home Work தரட்டுமா??

D1 Class  போடுங்க..

D2 ல் குப்பன் எந்த Class ல் Pass செய்துள்ளான் என்று வர வேண்டும்.

இதுக்கு முன்னாடி சில லாஜிக்கல் கேள்விகள்.

ஆளூ Fail ஆ…?? ஆமா..அப்பொ No Class.

60 க்கு மேலே வாங்கின நல்ல புள்ளையா???  கண்டிப்பா First Class.

50 முதல் 59 க்குள் – Second Class.

50க் கும் கீழே – இருக்கவே இருக்கு Third Class.

இந்தா புடிங்க ஃபார்முலா…

=IF(C2=”பூட்ட கேஸு”,”No Class”,IF(B2>59,”First Class”,IF(B2>49,”Second Class”,”Third Class”)))

Mark மாத்தி மாத்திப் போடுங்க…. Result & Class மாறுதா???

செஞ்சி பாருங்க சரியா வருதான்னு சொல்லுங்க..

இந்தக் குதி குதிக்கிறான்


பெயரை வைத்து சிலரும்… பெயரை மாற்றி வைத்து சிலரும் நல்ல காசு சம்பாதித்து வருகிறார்கள்.. ஆனால் பேருக்கு ஏற்ற மாதிரி இருக்காகளா என்பது தான் 3G கோடி கேள்வி..

என் முகத்தைப் பாத்தா கிருஷ்ணன் மாதிரி இருந்து எனக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்திருப்பாகள் என்று நான் சந்தோஷமா நினைத்துக் கொண்டிருக்க… சமீபத்தில் என்னைப் பார்த்த ஒரு நபர் பூதம் மாதிரி இருக்கீக என்றார்… என்னது என்று நான் கேட்க, மாத்ரு பூதம் என்று வேறு சொல்லி வைத்தார்…

இதை நானும் முகநூலில் போட்டு வைக்க நடுராத்தியில் “எனக்கு ஸ்டார்டிங்க் டிரபிள்..என்ன செய்யலாம்..” இப்படி கேள்வி எல்லாம் வருது. 

தந்தை பெரியார் அவர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் நிதி வாங்கித்தான் பெயர் வைப்பாராம். இங்கு அந்தமானில் உடற்கல்வி ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்… கொஞ்ச நேரம் அவரிடம் பேசி அவரின் பின்புலம் பிறந்து வளர்ந்த சூழல் இதெல்லாம் கேட்டபிறகு பணம் வாங்காது பெயர் வைத்தாராம்..

பெயருக்கு பொருத்தமாய் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை அன்னா பொறியியல் கல்லூரியில் Soil Mechanics பாடம் எடுப்பவர் பூமிநாதன். Water Resources எடுப்பவர் கார்மேகம்…. Auto CAD ல் வல்லவர் சாந்தக்குமார்.. சாந்தமே வடிவாய்…

குள்ளமாய் இருக்கும் ஒரு டைரக்ட்ருக்கு கஜேந்திரன் என்று பெயர்.. அகத்தியர் பெருரும் குள்ள முனிக்குத் தானே இருக்கு.. பார்த்திபன் ஒரு படத்தில் இவரை (இவரையுமா??) படாத பாடு படுத்துவார். அப்பொ அவர் குதி குதி என்று குதிப்பார்.. அதுவும் காமெடியாகத்தான் இருக்கும்.

அது சரி…சாதாரண மனிதர்கள் கொஞ்சம் சரக்கு அடிச்சா அவங்களை மிதக்கிறான் என்கிறார்கள்.. அதுவே இன்னும் கூடுதல் ரவுண்டு கட்டி விட்டால் பறக்கிறான் என்பார்கள்..

மரம் ஏறும் மீனை சமீபத்தில் ஒரு படத்தின் பாட்டில் அழகாய் காட்டி இருந்தார்கள்… அந்தமானில் வேகமாய் போகும் கப்பல் பயணத்தின் போது பறக்கும் மீங்களையும் பாக்கலாம். சிறிது தூரம் பறந்து கப்பல் கூடவே வந்து மறுபடியும் கடலில் விழும்… எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது.. (ஆமா…இதையே 26 வருஷமா பாத்து வந்தாலும் கூட..)

அப்புறம்… இஞ்சி திங்கு கொரங்கு பாத்திருப்பீங்க…. (அதுக்காக Facebool ல போய் என்னோட Profile photo எல்லாம் பாக்காதீங்க..) ஆனா…நண்டு தின்னும் குரங்கு பத்தி தெரியுமா?? கிரேட் நிகோபார் தீவில் இருக்கிறது… உலகில் அரிய வகை இனம் என்று அறியப் பட்டிருக்கிறதாம் அது.

இன்னொரு பறக்கும் செய்தி. பெரும்பாலும் வௌவால்கள் பாழடைந்த கோவில்களில் பாக்கலாம்.. பெரிய கழுகு போன்ற அளவில் லிட்டில் அந்தமான் தீவின் டுகாங்க்கிரீக் பகுதியில் பாக்கலாம்..கூட்டம் கூட்டமா…

எல்லாம் சரி..எதுக்கு இந்த குதி குதிக்கிறே?? … திரும்பினால், கம்பர் ஏதோ சொல்ல வருகிறார்… இவ்வளவு கேட்டவங்க இதையும் தான் கேளுங்களேன். அனுமான் ஒரு மலையின் மேல் கால் வைக்கிறார். அந்த மலை அப்படியே சாய்கிறது. அந்த மலையின் மறு பக்கத்தில் இருந்த அரசர்களும் வீரர்களும் அப்படியே வானதிற்கு குதிக்கிறார்கள். அதைப் பாத்தா எதிரிகள் காலை வெட்ட வரும் போது வீரர்கள் குதி குதி என்று குதிக்கிறது மாதிரி இருக்கு என்கிறார் கம்பர்.

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்நெரிந்து சிந்த தூக்குறு தொலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் தாக்குறு செருவில் நேரார் தாள் அற வீசத் தாவி மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர் விஞ்சை வேந்தர். அது

சரி..இதெப் படிச்சிட்டு நீங்க என்ன குதி குதிக்கப் போறீங்களோ… யார் கண்டா???

மதுரெ மதுரெ தான்…


சுத்தி சுத்தி எப்படியாவது மதுரைக்காரங்க வாயிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் வந்து விழும் வார்த்தைகள் தான் இந்த மதுரெ மதுரெ தான்.

எனக்கு என்னவோ மதுரை என்றதும் மல்லி தான் நினைவுக்கு வரும். அந்தமான் தீவுகளில் மல்லிகை பூ வந்து சேர்கையில் பக்கத்தில் போய் பாத்த தான் அட இது மல்லி..என்பதே தெரிய வரும்.

கையில் கிளி வைத்திருக்கும் மீனாட்சி இருக்கும் ஊரில் கிளி மாதிரி அழகான பெங்களுக்கு பஞ்சமே இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்த 4ம் நம்பர் பஸ்ஸில் ஒரு வேளையும் இல்லாமல் சும்மா சுற்றுபவர்களும் இருக்காங்க..

வீட்டில் மதுரையா?? சிதம்பரமா?? என்று உலகத்தில் எந்த மூலையிலுன் கேட்கும் அளவுக்கு மதுரை பேமஸு. சமீப காலமாய் மதுரெ கிட்னிக்குமாடா பேமஸு என்ற வடிவேலுவின் டயலாக் அசத்தலோ ஆசத்தல்.

மதுரை மண்ணை அனுபவித்து வைரமுத்து கவிதையே பாடலாக தொகுப்பில் எழுதி இருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த வரிகள்..உங்களுக்கும் பிடிக்கும்..அட..அடடே என்று சொல்ல வைக்கும்.

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் 
பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் 
தோகைமார்தம் மெல்லடியும் 
மயங்கி ஒலித்த மாமதுரை – இது 
மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான் 
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ் 
அழுந்தப் பதிந்த சுவடுகளும் 
காணக் கிடைக்கும் பழமதுரை – தன் 
கட்டுக் கோப்பால் இளமதுரை!

தமிழைக் குடித்த கடலோடு – நான் 
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் 
ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 
மானம் எழுதிய மாமதுரை – இது 
மரபுகள் மாறா வேல்மதுரை!  

போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும் 
பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை 
நிறுத்திப் போகும் வளையொலியும் 
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண் 
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும் 
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம் 
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று 
பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் – வையை 
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப் 
பட்டாப் போட்டுக் கொண்டதனால் 
முகத்தை இழந்த முதுமதுரை – பழைய 
மூச்சில் வாழும் பதிமதுரை

கடைசி வரிகள் பாடும் போது உங்களையும் அறியாமல் ஒரு சோகம் வரத்தான் செய்யும்… எப்படி இருந்த மதுரை இப்படி ஆயிடுச்சே என்ற கவலையும் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்.

சமீபத்திய மதுரையே இப்படி இருந்தா…கம்பன் காலத்து மதுரை எப்படி இருக்குன்னு பாக்க வேணாமா… வாங்க..ஏறுங்க…நம்ம Time மிஷினில் ஏறினால் கம்பன் காலத்துக்கு நொடியில் பயணம் at free of cost.

எல்லா உலகமும், எல்லா வகையிலும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் இருப்பவை ரெண்டாம்..1. முத்து 2. தமிழ் (அதுவும் இயல்,இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தது). இந்த ரெண்டும் எக்கச்சக்கசக்கமாய் ஓர் எடத்திலெ இருந்தா அங்கெ செல்வங்களுக்கு குறையே இருக்காதாம்… அப்பேற்பட்ட இடம் தேவலோகம் தான்.. ஆனா மதுரையிலு இதெல்லாம் கீது..அதனாலெ மதுரெயும் தேவலோகம் தான் என்கிறார் கம்பர்.

அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எத் திறத்திலும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து முற்றலால்.

இப்பொ மதுரெ மதுரெ தான் ஒத்துக்கிறீங்களா??? எங்கே..எல்லாருமா சேர்ந்து ஓ போடுங்க பாக்கலாம்.

பூவோடு சேர்ந்த நாரு…


இந்தக் காலத்தில் நல்ல கூட்டனி மட்டும் அமைஞ்ச்சிட்டா ஆட்சி நிச்சயம். அந்தக் கால தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் பழங்கதை. கூட்டனி ஆட்சியை பிடிக்க உதவும் என்பது தான் இப்போதைய கூட்டனி தர்மம்.

இங்கே தான் பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் எங்கிறதை சரியாக் கவனிக்கணும். இதையே வேண்டாத ஆட்களோட சேர்ந்தா..பன்றியோடு சேர்ந்த கன்னுக்குட்டியும்………..திங்கும்.

இன்னும் சில பழைய புதுசுகளும் இருக்கு… கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். இது பழசு.

இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை பாடும் இது புதுசு

ஏ ஆர் ரஹ்மானின் எதிர் வீட்டு ஃபிகரும் ஹம்மிங்க் தரும் என்பது சமீபத்திய ஜொள்ளர்களின் கண்டுபிடிப்பு.

காந்தி வேடத்தில் படத்திற்காய் நடிக்க இறங்கிய ஹாலிவுட் நடிகர்  பெங்கிங்க்ஷ்லி அசைவம் சாப்பிடுவதை விட்டு சைவத்திற்கு மாறிட்டார் என்பது  பழைய சேதி… நம்ம ஊர் பாரதியாய் நடித்தவரை சகீலாவோட நடிக்க வச்சி அழகு பார்த்தது தமிழ் உலகம். சில படங்களில் காமெடியனாகவும் வலம் வந்தார். என்ன செய்ய?

அம்பதுக்கும் மேலே கம்பராமாயணம் வச்சி போஸ்டிங்க் போட்டு விட்டேன். நானும் கொஞ்சம் நல்ல புள்ளையா மாறணுமோ???

சிலபேர்கூட சேரவே வேணாம்… அவர்களின் தொடர்பு கிடைத்தாலே போதும், வாழ்வு நிலை மாறி விடும்.

ஆனா சில பேரு எதைச் செய்தாலும் எதாவது கிடைக்குமா??என்று தான் கேட்கிறார்கள்??

இந்த மாதிரி போஸ்ட் போடுகிறீர்களே..அதனாலெ என்ன கிடைக்கும்? அதன் அரத்தம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தான்… ஒண்ணுமே கிடைக்காதா?? அப்பொ சும்மாவே இருக்கலாமே…சரி சும்மா இருக்கும் இவரு என்னா சாதிச்சிட்டார்??

இப்படித்தான் ஒரு ஏர் போர்ட்டிலெ ஒரு மனுஷன் வெயிட்டிங்க் ரூம்லெ கடையை விரிச்சி தண்ணி சிகரெட் என்று ஜாலியா இருந்தாராம். அப்பொ நம்ம கிட்டெ அனத்தும் பார்ட்டி மாதிரி ஒரு ஆளு பொயி, ஐயா..எப்பொ இருந்து இந்தப் பழக்கம்.. சின்ன வயசில ஆரம்பிச்சது…ஆமா எதுக்கு?? என்று திருப்பிக் கேட்டாராம்.

இல்லெ இவ்வளவு காசை வெட்டியா கரி ஆக்கி இருக்கீங்க… அதெல்லாம் சேத்து வச்சிருந்தா சொந்தமா பிளைட்டே வாங்கி இருக்கலாமே??

போதையிலும் அந்த மனுஷன் தெளிவா கேட்டானாம், …சரி என்னையை விடுங்க..குடிக்காத ஆளு நீங்க..உங்களுக்கு சொந்தமா பிளைட் இருக்கா??

கேட்டு விட்டு தன் சொந்த பிளைட்டில் ஏறப் புறப்பட்டார் அந்த தாடி வைத்த விஜய் மல்லையா… (சும்மா நெட்டில் கிடைத்த கதை தான் இது)

மல்லையாகிட்டெ மல்லுக்கு நின்ற அந்த ஆளை நாமும் கொஞ்சம் அம்போன்னு விட்டுட்டு கம்பர் கிட்டெ போவோம்..நமக்கும் ஏதாவது ஞானம் கிடைக்குமான்னு பாக்கலாமே..

நம்ம ஆட்கள் எதையாவது கலக்கிகிட்டு இருந்தா, நம்ம கம்பர் எக்காலஜி பத்தி யோசிச்சிட்டு இருக்கார். அந்த எக்காலஜி கெடாமல் இருந்தா தான் குளங்களில் மீன்கள் இருக்குமாம். அப்படி இருந்த குளத்தில் திடீர்னு மீன் எல்லாம் காணாமல் போச்சாம். ஏன் தெரியுமா??

தெய்வீகப் பெண்கள் எல்லாம் தங்கள் அங்கங்களில் பூசி இருந்த சந்தனம் போக தேய்த்துக் குளித்தார்களாம். அப்புறம் அவர்கள் சூடியிருந்த பூ, அதில் இருக்கும் தேன் எல்லாம் சேர்ந்து அந்த எக்காலஜி மாறிப்போக..மீன் வாசம் போயே போச்சாம்… அங்கே வந்த பறவை எல்லாம் தீனி இல்லைன்னு ஓடிப் போச்சாம்.

சிலர் சிலர் கிட்டெ போனாலெ..என்ன நடக்கும் என்பதும் ஊகிக்கலாமே??

அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலைக் கலவை கோதையின்
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீனுணா புலவ் தீர்தலால்.

அது சரி நீங்க எங்கே யார் கூடப் போய் சேரப் போறீங்க??

சரக்கு பேசுது


நண்பர்களே…

அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கும் வாசகம் இது. “அது அவன் பேசலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு பேசுது…”. அப்பொ சரக்குக்கும் வாய் உண்டா பேசுறதுக்கு??

நாம நிதானமா ஏதாவது பேசும் போது அதன் பின் விளைவுகள் ஏதும் இருக்குமான்னு யோசிச்சி பேசுவோம்…

சில நேரம் சில பின் விளைவுகள் வருவதற்காகவும் பேசுவோம்.. போட்டுக் கொடுக்கும் வேலைகள்..

மேடைப் பேச்சாளர்கள் நீண்ட நேரம் பேச இந்த சரக்கு ஏத்திட்டு பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… நேரில் பார்த்தும் இருக்கிறேன்.

முழுமையான ஈடுபாடு, பேசும் பொருளின் ஆளுமை, நல்ல ஒத்திகை இவைகள் எல்லாம் தராத ஒரு தைரியத்தை ஒரு ரெண்டு பெக் சரக்கு தரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

மக்களின் ரியாக்சன் தெரியாது பேச வேண்டுமா?? சரக்கு அடிச்சிட்டு பேசலாம்..

பேச பயமா இருக்கா…சரக்கடிச்சா… அந்த பயம் போகும் (எங்கே போகும்???..அந்த பயம் இருப்பது தெரியாமல் போகும்…ஆனா…மீண்டும் வரும்).

ஆக மொத்தம் சரக்கு ஏத்திட்டுப் பேசினால் உண்மைகள் தான் வரும் அல்லது உண்மை விளம்பிகளாக மாறி விடுவார்கள்.

அது சரி நம்ம சரக்குக்கு வருவோம்..

பேசுறவன்.. சரக்கு அடிக்கலாம்…உண்மை பேசலாம்… இதை ஒரு வகையில் நாட்டு நடப்பென்று ஒத்துக்கலாம்.

ஊமையன் சரக்கு அடித்தால்…

(சுத்தி வளைச்சி ஏதோ இலக்கியம் சொல்லனும்.. அவ்வளவு தானே… சொல்லுப்பா…)

ஆமாம்….

மறுபடியும் கம்பன். கோசலை நாட்டை வர்ணிக்க இயலும் போது தான் இப்படி ஊமையன் சரக்கடிச்ச மாதிரி, எப்படி சொல்றதுன்னு தெரியலையேப்பான்னு சொல்றார்..

ஆனா ஒரு சின்ன வித்தியாசம்…

நம்மாளுக பட்டை முதல் பாரின் சரக்கு வரை அடிப்பானுங்க..

நம்ம கம்பன் அடிச்சது என்ன சரக்கு தெரியுமா??
கள்ளு.. ஆமா…கள்ளு தான்..

அன்பு என்னும் கள்…

ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்

(நாட்டுப்படலம் – பாடல் எண் -33; கோசல நாட்டு வளம்)

நாமளும் அந்த அன்பு எனும் கள் தினமும் பருகலாமே???