யார் யார் சிவம்?
வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 74
(27-01-2019)
”யார் யார் சிவம்?….. அன்பே சிவம்” என்ற பாட்டு வரும், கமலுக்கு நல்ல பேரு தந்த “அன்பேசிவம்” எல்லாரும் பாத்திருப்பீங்க. தலைப்பு என்னவோ சிவம் என இருந்தாலும், அப்படத்து வில்லன்(நாசர்) ஒரு சிவ பக்தர். ஆனால் அன்பே இயேசு எனச் சொல்லாமல் படம் முழுதும் சொல்லி இருப்பார். கமல் தன் வாலிபக் காலத்தில் கிருத்துவ மதப் பிரச்சாரத்தில் இருந்த ஒரு தாக்கமா இருக்குமோ?
குடியரசு தினப் படமாய் தசாவதாரம் பாத்த போதும், சிவனடியார்கள் வைணவர்களை கல்லைக் கட்டிக் கடலில் போட்டது போல் காட்டியிருப்பார் கமல். உண்மையில் சமணர்கள் தான், சைவர்களைக் கல்லில் கட்டிப் போட்டதாயும், அதன் பின்னர் “கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணை ஆவது நமச்சிவாயவே” என்று பாடி மிதந்து வந்ததாகவும் தேவாரம் சொல்கிறது. அதெப்படி பரமக்குடிக்காரராய் இருந்து கொண்டு, கமலைக் குத்தம் சொல்லமா? எனக் கேட்பது புரியுது. கமல்க்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. நன்றி: நக்கீரன்.
வரலாற்றைக் கொஞ்சம் லேசா புரட்டிtஹ் தான் பாருங்களேன். (வாழ்க்கையிலெ புரட்டிப் பாக்க என்னென்னவோ இருக்க, வரலாற்றைப் போயா புரட்டனும்?) பொதுவாகவே வரலாறு, மக்களுக்குப் பிடிக்காது போச்சி! அதன் முதல் காரணம், அதைச் சொல்லிய பாலைவன டிரைத்தனமான விதம். மதன் எழுதிய (வந்தார் + வென்றார் +சென்றார்)கள் மாதிரி வரலாறு இருந்தா, செமெ ஜாலியா படிச்சிருப்பாய்ங்க. அதிலும் ஷாஜஹான் புரட்டிப் பாத்த பக்கங்கள் எல்லாம் செமெ கிலுகிலுப்பு தான் போங்க. ஐயா.. சொல்ல வந்தது அது இல்லீங்கோ. எப்பொவெல்லாம் சைவர்கள் ஆண்டார்களோ, அப்போதெல்லாம் மக்கள் மகிழ்வா இருந்திருக்காங்க. தமிழ் செழித்து இருந்திருக்கு. இது தான், நான் புரட்டிய போது தென்பட்டது.
நாகேஷ் சிவாஜி நடித்த திருவிளையாடல் படக் காட்சிகள் இன்னும் ஞாபகம் இருக்குமே? அதாங்க அந்த தருமி, கொங்குதேர் வாழ்க்கை பாட்டு etc etc; பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா என்ற பஞ்சாயத்து, பொதுமக்கள் வரை வந்துள்ளது. ஆக ஒண்ணு மட்டும் நிச்சயம். எல்லாருக்கும் சோத்துக்கு வழி இருந்திருக்கு. சோத்துக்கு வழி இல்லாமெ, இருக்கும் போதுகூந்தல் பத்தி யோசிக்க முடியுமா என்ன? இதைத் தான் சொல்ல வந்தேன். திருமுறைகள் செழித்தோங்கிய காலங்கள் பொற்காலம் எனச் சொல்லலாம்.
திருமுறைகள் உள்ளிட்ட, சாமி பாட்டு என்றாலே ரொம்ப பவ்யமா பயத்தோட குந்திகினு பாடுவதா தான் இருக்கணுமா என்ன? அதுவும் ஒரு, மக்கள் பாட்டு தான். சில… ஏன் பல அந்தக் கால நாட்டுப்புறக் கலைகள் போல் தான் இருக்கு. ஆஃபீசில், ஜனவரி ஒண்ணாம் தேதி, வித்தியாசமான் பாடல் பாடலாம் என எனக்கு அழைப்பு வந்தது. ”நாட்டுப்புறப் பாடல் பாடவும்” என்ற வேண்டுகோளோடு. கைவசம் ரெண்டு பாட்டு இருந்தது. ”ஏ..ஏ…ஏ…ஏய்ஏய் என்ன புள்ளெ… கருத்த புள்ளெ…” எனப் பாடி இருக்கலாம். (ஆனா வீட்டுக்கு வந்தா சோறு கெடைக்காது)
கைவசம் இன்னொரு போல்க் ஸாங்க் இருந்தது. பாட்டு எழுதியது மிஸ்டர் மாணிக்கவாசகர். அந்தப்பாடலின் மெட்டைத் திருடித்தான், காதலிக்க நேரமில்லை படத்தில்,”அவ்வுலகம் சென்று வந்தேன், அமுதம் எடுத்து வந்தேன்…” இப்படி செமெ டப்பாங்குத்தா போட்டிருப்பாய்ங்க. திருவாசக் பாட்டும் இப்படித்தான். “புற்றில்வாள் அரவம் அஞ்சேன், பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்…” பாட்டை அதே டப்பாங்குத்து மெட்டில் பாட, எல்லாரும் கை தட்டி இரசித்தனர். பாட்டின் இறுதியில் வரும், அம்மநாம் அஞ்சுமாறே என்பதை மஞ்சுமாறே எனப் புரிந்து கொண்டு “யார் அந்த மஞ்சு? “ எனக் கேட்டதும் ஒட்டு மொத்த கூட்டமும் அன்பாய் சிரித்து மகிழ்ந்தது. அன்பே… சிவம்;
”ஹலோ கிட்டு, சாரி பார் த டிஸ்டர்பன்ஸ்” எனச் சொல்லியபடி கம்பர் வந்தார். ஒனக்கு ஒரு சிரெட் சொல்லட்டுமா? இந்த இராமாயணம் எழுத வேண்டிய காரணத்துள் முக்கியமானதா நான் நெனெச்சதே இந்த அரியும் சிவனும் ஒன் அண்ட் த ஸேம் என்பதை பளீச்சென சொல்லத்தான். கம்பன் இராமனை எழுத வந்தாலும், சான்ஸ் கெடைக்கும் போதெல்லாம் சிவபெருமானை நல்ல முறையில் இழுக்காமல் விட்டத்தில்லை.
இங்கும் இப்படித்தான். சாம்பவான் லேசா அனுமனை ஏத்தி உட்றான். எதை எதையோ சொல்லி கடைசியில் அசப்பில் பாத்தா நம்ம சிவன் மாதிரி இருக்கானே இந்த அழகன் என்று உசுப்பேத்துகின்றார். அதெப்படீங்க ஒரு கொரங்கைப் போயீ, சிவன் மாதிரின்னு …நம்ம முடியலையே!
அப்படியா, அப்பொ கம்பர் பாட்டை ஒரு எட்டு படிக்கலாம் வாங்க..
மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்
நூலை நயந்து நுண்ணியது உணர்ந்தீர் நுவல்தக்கீர்
காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்
ஆலம் நுகர்த்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்
[கிட்கிந்தா காண்டம்; மயேந்திரப் படலம்]
[சாம்பவான் அனுமனை நோக்கிக் கூறினான்: “ நீவீர் யாவரினும் சிறந்த நான்முகன் இறந்தாலும் இறவாத நீண்ட ஆயுளை உடையீர்! சாத்திரங்களையும் மிகவும் நுட்பமாக அறிந்திருக்கின்றீர்! அதனால் செய்திகளை எடுத்து விளக்கும் தன்மை உடையீர்! எமனும் அஞ்சத்தக்க மிக்க சினம், உடல் வன்ம இவற்றில் எல்லையில் நிற்பவரே! நஞ்சினை உட்கொண்டு சிவபெருமான் போலக் கடும் போர் செய்யும் திறம் படைத்தீர்!]
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.