ஒரு காலத்தில் நான் யார்? நான் யார்? நான் யார்? என்று ஆரம்பிக்கும் பாட்டு வந்தது. அந்தப் பாட்டின் அடுத்த வரியிலேயே அதற்கான பதிலும் வந்துவிடும். நாலும் தெரிந்தவர் யார்? யார்? எல்லாம் தெரிந்த நபர் யாரும் இல்லை என்பதை ரொம்பவும் நாசூக்காய் சொல்லித் தந்த பாட்டுங்க அது. (பாட்டெல்லாம் ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் எழுதிய காலம்…. ம்….. அதெல்லாம் அந்தக் காலமுங்க)
ஒரு கேள்வி கேட்டால், மற்றொரு கேள்வியே எப்படி பதிலாகும்? இப்படி எதிர் கேள்வி கேக்கீகளா? அது வேறெ ஒண்ணும் இல்லீங்க. கேள்விக்கு பதில் சரியா தெரியல்லேன்னு வச்சிக்கிங்க… அப்பொ இப்படி ஏதாவது சொல்லி சமாளிச்சே ஆகணும். இப்படித்தான், தெரிஞ்சோ தெரியாமலோ, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பயிற்சியாளன் ஆகி விட்டேன். (எல்லாருமா சேந்து ஆக்கிட்டாய்ங்க) எல்லா வகுப்பிலும் சொல்லும் அதே சங்கதியினை (கேள்வியையே கேள்விக்கான பதிலாக தரும் வித்தை) உங்களுக்கும் சொல்றேனே..
2005ம் ஆண்டுக்கு முன்பு வரை (அதாவது இந்த ஆர் டி ஐ சட்டம் வராத வரை) ஒரு பொது ஜனம், ஏதாவது அரசு நிறுவனத்தில் சென்று, ஏதும் தகவல் கேள்வியாய் கேட்டால் என்ன பதில் வரும் தெரியுமா? ஒரு பதிலும் வராது என்பது தான் எல்லாருக்கும் தெரிந்த கதையாச்சே… அதுக்கும் மேலே நாலு பதில் கேள்வியும் வரும்… நல்லா ஞாபகப் படுத்திப் பாருங்க.. இதோ என் ஞாபகத்துக்கு வந்த பதில் கேள்விகள்:
- ஆமா… வக்கனையா இங்கே வந்து கேக்கறியெ, யாருய்யா நீ?
- இல்லெ, தெரியாமத்தான் கேக்கிறேன், இதெல்லாம் உனக்குத் தேவையா? எதுக்கு இப்படி எல்லாம் கேட்டு எங்க உயிரெ வாங்குறெ?
- நீ கேக்கிற கேள்விக்கு எல்லாம் பதில் சொல்றதுக்கா இந்தக் கவர்மெண்டு சம்பளம் குடுத்து என்னெயெ வேலைக்கு வச்சிருக்கு…?
- பதில் சொல்ல முடியாது. உன்னாலெ என்ன முடியுமோ செஞ்சிக்க.
இப்படித்தான் பெரும்பாலான இடங்களில் பதில் கெடைக்கும். ஒருவேளை இப்படிச் சொல்லிட்டு, நாக்கெப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டேன் என்று அவர்களும் சந்தோஷப் பட்டிருப்பாங்களோ?
எது எப்படி இருந்தாலும் நாம் செய்யும் உரையாடல்கள் ஏதோ ஒரு வகையில் கனி இருப்பக் காய் கவர்ந்தற்றுவாக இருக்க வேண்டும். அது பொய்யாகக் கூட இருக்கலாம். உதாரணமாய் ஒரு ஆஸ்பத்திருக்கே போறீங்க. நோயாளிக்கு நம்பிக்கை தரும் விதமா நாலு வார்த்தை சொல்லாட்டி, நீங்க அங்கே போயும் என்ன பிரயோஜனம்? அய்யய்ய இங்கே ஏன் அட்மிட் ஆனீங்க. பத்துக்கு ஒன்பது பேர் பொழெக்க மாட்டாகளே? இப்படிச் சொன்னா நோயாளி என்னத்துக்கு ஆவார்? (ஒரு வேளை போறதே அந்த நோயாளியெ மேலே அனுப்புறதுக்கா இருக்குமோ?)
கம்பர் உதயமானார்.. என்ன ஆச்சி? என்னெக் கழட்டி விட்ட மாதிரி தெரியுதே?
அதெல்லாம் இல்லெ சுவாமி. மோடி சர்க்காரில் கொஞ்சம் வேலைப் பளு அதிகம் அதான்…. சரி….. உங்க கிட்டெ ஏதும் சங்கதி இருக்கா?
அடெப் பாமரனே… நீ யார்? இப்படி யாராவது கேட்டா, நீ ரெண்டு நிமிஷத்திலெ சொல்லிடுவே. ஆனா அதுலெ யாருக்கும் ஒரு புண்ணியமும் இருக்காது. சொல்ற பதில் கேக்கிற ஆளுக்கு நம்பிக்கை தரணும். அனுமன் சீதைகிட்டெ விசிட்டிங்கார்ட் கொடுக்காமெ அறிமுகம் செஞ்ச இடம் படிச்சிப் பாரு. உனக்கே புரியும்.
கம்பர் டிப்ஸ் கொடுத்துட்டு மறைஞ்சிட்டார். நானும் வழக்கம் போல் தேடிப் பாத்தேன்.. அடெ..ஆமா… சீதையம்மா விரக்தியின் உச்சியில் உயிரை மாய்த்துக் கொள்ள அசோக வனத்தில் தயாராகும் இடம். அனுமன் முன் சென்று காட்சி தொடர்கிறது. சோகம் ஒரு பக்கம். பயம் மறுபக்கம். ஒரு வேளை இராவணனே குரங்கு வடிவில் வந்திருப்பானோ? சந்தேகமும் சேர்ந்து குழப்பும் இடம். சீதை கேட்ட கேள்வி தான் இந்தப் பதிவின் தலைப்பான ”நீ யார்?”
இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் என்னெய மாதிரி அல்பமான ஆட்களுக்கு கெடெச்சா என்னோட சிவி பயோடேட்டா ரெஸுமி இப்படி என்னென்ன பேர்லே என்னவெல்லாம் தரமுடியுமோ எல்லாம் தந்திருப்பேன். இதனாலெ என் விபரம் கேட்டவர்களுக்குத் தெரியும். அவ்வளவு தான். ஆனால் அனுமன் நிலை முற்றிலும் வேறு. சீதையின் முகத்தில் இருக்கும் கவலை ரேகையினை களைய வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. ஏற்கனவே எல் கே ஜி பரீட்சை எழுதும் போதே டாக்டரேட் வாங்கியது போல் சொல்லின் செல்வன் பட்டம் வேறு வாங்கியாச்சி. சாதாரணமா பதில் சொல்லிட முடியுமா என்ன?
அனுமன் மூலமா கம்பர் சீதையின் மனக் குழப்பத்தை தீர்க்க உதவுகின்றார்.
தாயே, இராமபிரான் உங்களைப் பிரிந்த பின்னர் ஒரு தோஸ்த் புடிச்சார். சூரியனோட புள்ளெ. குரங்குக் கூட்டத்துக் கெல்லாம் தலைவன். குற்றமே இல்லாதவன். பேரு சுக்ரீவன். (நீ யாருன்னு கேட்டா உன்னோட ஆர்கனைசேஸன் பத்திச் சொல்றியேன்னு கோபம் வரலை சீதையம்மாவுக்கு. குற்றம் சில செய்திருந்தாலும் சுக்ரீவனைப் போட்டுக் குடுக்கலையே அனுமன்; நோட் பண்ணுங்கப்பா… நோட் பண்ணுங்கப்பா..)
தொடர்கிறார் அனுமன்: அந்த சுக்ரீவனுக்கு ஒரு வலிமையான அண்ணா வாலி. தன்னோட வாலில் இராவணனை கட்டி சுத்தி சுத்தி அடிச்சவர். (நிச்சயம் சீதை முகத்தில் சந்தோஷம் வந்திருக்க வேண்டும்) தேவர்கள் பாற்கடலைக் கடையும் போது லஞ்ச் பிரேக்கில் இந்த ஒத்தெ வாலி எல்லா வேலையும் பாத்தாரு. அம்புட்டு வலிமை. (வாவ்… மனதிற்குள் சீதை நினைத்திருக்க வேண்டும்)
அன்னையே, அம்புட்டு வலிமையான வாலியை உங்கள் அரசன் ஒரே அம்பில் போட்டுத் தள்ளிட்டார். (கவனிக்கவும்… இங்கேயும் மறெஞ்சி அம்பு விட்ட சங்கதி மிஸ்ஸிங். எதெ எங்கே எப்படி சொல்லனும்… கத்துகிடுங்க மக்களே) வாலியெத் தூக்கிட்டு, சுக்ரீவனை அரசனாக்கினார். அந்த அவைச்சரவையில் ஒருவன் நான். வாயு புத்திரன். என் பெயர் அனுமன்.
எப்படி இருக்கு அறிமுகம்? தான் யார் என்ற செய்தி சீதைக்கு தெரிவிப்பதை விட சீதையின் கலக்கத்தை முற்றிலுமாய் போக்க முழு முயற்சி எடுக்கும் கம்பரின் சொல்வித்தை பாத்தீங்களா?
முணு பாட்டா இருக்கும் கம்பரின் கவியில் ஒரு பாடல் இதோ
அன்னவன் தன்னைஉம் கோன் அம்பு ஒன்றால் ஆவி வாங்கி
பின்னவர்க்கு அரசு நல்கித் துணை எனப் பிடித்தான் எங்கள்
மன்னவன் தனக்கு நாயேன் மந்திரத்து உள்ளேன் வானின்
நல் நெடுங் காலின் மைந்தன் நாமமும் அனுமன் என்பேன்.
இனி மேல் ஆறுதல் சொல்ல நினைக்கும் சம்யங்களில் ஆயிரம் முறை கம்பனை நினையுங்கள்.. கொஞ்சம் இருங்க… ஒருத்தருக்கு ஆறுதல் சொல்லிட்டு வாரேன்…