கம்பன் பார்வையில் நிர்வாகவியல்


கவிச்சக்கரவர்த்தி:

கணியமும், அதில் தமிழும் இருக்கும் நவீன வசதிகள் கொண்ட இக்காலத்தில் கூட இரண்டு பக்கங்கள் தமிழில் எழுதுவது என்பது மிகவும் சிரம்மான ஒன்றாக தமிழர்கள் கருதி வருகிரார்கள். ஆனால் பத்தாயிரம் பாடல்களுக்கும் மேலாய் ஏடும் எழுத்தாணியும் மட்டுமே கொண்டு எழுதிய அக்காலத்து புலவர்களை நாம் அப்படியே ஒதுக்கி வைத்து விட முடியாது. இக்காலத்தில் திருத்தம் செய்வது எவ்வளவு எளிதோ, அக்காலத்தில் அவை அவ்வளவு கடிது. அச்சூழலில் கவி பாடியவரில் ஒருவர் தான் கவிச் சக்கரவர்த்தி என்று உலகத் தமிழர்களால் அழைக்கப்படும் கம்பர். கம்பரின் கைவன்னத்தில் அமைந்த கம்பராமாயணம் பற்றி அனைவரும் அறிவர். கம்பராமாயணம் ஒரு மதம் சார்ந்த நூல், காப்பியம் என்ற உண்மைகளையும் மீறி இக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் நிர்வாகவியல் தொடர்பான பல செய்திகளும் இருப்பதை அலகிறது இக்கட்டுரை.

தர்க்கம்

தர்க்கம் என்பது ஒருகாலத்தில் ஒரு சாத்திரமாய் அறியப்பட்டு வந்தது. அதனை ஆங்கிலத்தில் Logical thinking என்று மொழி பெயர்ப்பர். தொழிலாளிக்கும் முதலாளிக்கும் இடையே வரும் மோதல்கள், மேலதிகாரிக்கும் உடன் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இடையே வரும் சிக்கலகள், இவைகளுக்கான ஆதாரமம், அந்தப் பிரச்சினையினை தர்க்க ரீதியாக ஆராயாமல் அடம் பிடிக்கும் காரணம் தான். இதைத் தான் நிர்வாகவியல் சார்ந்த புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பல வழிகளில் சொல்கின்றனர்.

ஒரு பிரச்சினைக்கு முடிவு எடுப்பதற்கு ஆதாரமாய் ஆவணங்களும், பிறர் சாட்சியங்களும் தான் மிக மிக முக்கியமான சாட்சிகளாக இன்றளவும் கருதப் படுகின்றன. இவ்வளவு பெரிய சங்கதியினை எடை போட, இடை பற்றிய செய்திகளொடு சேர்த்து சொல்லும் புலமை கம்பன் காட்டும் நிர்வாக இயலுக்கு ஒரு சான்றாகும். சீதையின் இடையினைப் பார்த்தவர்கள் யாரும் இல்லையாம். அதைப் பார்த்து ஆதாரமாய் எழுதி வைத்த ஆவணங்களும் ஏதும் இல்லையாம்.. இப்படிப் போகிறது கம்பனின் பாடல்.ங்கள்

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.

Goal Setting

நிர்வாகவியல் படிப்புகளில் எங்கு சுற்றினாலும் கடைசியில் சில பல M என்ற ஆங்கில எழுத்தில் துவங்க்கும் வார்த்தையில் வந்துவிடுவர். Money, Man, Material, Machinery இப்படியாக… பல. அதையும் தாண்டி இலக்கை எட்டுவது எப்படி என்று பயில்வது தான் நிர்வாகவியலின் சிறப்பு. இதனை கம்பர் எவ்வாறு சொல்லி இருகிறார் என்பதையும் பார்க்கலாம். அவர் ஒரு செய்லினை எந்த மாதிரி செய்தல் தகும் என்பதை கூறுகிறார்.

1. என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். Objective of the Job.
2. யாருக்கு என்ன வேலை தரவேண்டுமோ அதனைப் அவரிடம் தேர்வு செய்து தருதல் Assighn the Job.
3. வேலைக்குத் தேவையான அனைத்தையும் தருதல் Give him the required resources.
4. இலக்கினை எட்ட நாள் குறித்தல் Fix the Target.
5. செயலின் விளைவுகளைப் பெறுதல் Feed Back.
6. குறித்த நேரத்தில் வேலை நடக்கிறதா என்பதை கன்காணித்தல் வேண்டும் Review the Task.

இதை எல்லாம் கம்பர் தனது ராமாயணத்தில் கையாண்டு இருக்கிறார். இடம் பொருள் ஆகியவற்றுடன் சற்று நோக்கினால்,நிர்வாக குரு என்று கம்பனை நீங்களே இனி அழைப்பீர்கள்.

1. வேலையில் தெளிவு : சீதையினை தென் திசை சென்று தேட வேண்டும்.
2. Team Leader: அனுமனை அதற்கு தேர்வு செய்தல்.
3. Resource: இரண்டு வெள்ளம்(மில்லியன் அல்லது பில்லியன் என்று என் ஊகம்) வானரப் படை தருதல்.
4. கெடு: முப்பது நாள் தான். (அட..இதைத்தான் இன்றும் தகவல் பெறும் உரிமை சட்டத்திலும் தகவல் தர நாள் கெடுவாய் வைத்துள்ளாட்களே?)
5. தகவல் அவ்வப்போது பெற வேண்டும்.
6. ஒரு மாசம் முடிந்து மறுபடியும் சந்திப்பதாய் முடிகிறது.

இது சுக்ரீவன் இட்ட நிர்வாக திட்டம். கம்பர் தான் இங்கு நிர்வாக ஆசான். இதோ கம்பன் வார்த்தைகள்:

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினார்.

இதுக்கு முன்னாடியும் இப்படி

அரசு மற்றும் தனியார் நிர்வாக அலுவலகங்களில் ஏது பிரச்சினை எழும் போது, “இப்படி ஏற்கனவே செய்திருக்கிறார்களா??” என்று கேட்டு முடிவு எடுப்பார்கள். இதற்கு விதி விலக்க்காய் தனித்துவம் வாய்ந்த முடிவுகள் எடுப்பவர்களும் உண்டு. அது ஒரு சிலரால் தான் முடியும். திரு டி என் சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாய் நின்று ஒளிர்ந்தது இந்த ரகம் தான்.

இராமயண காதையில் கம்பருக்கும் இப்படி ஒரு சிக்கல் வருகிறது. அரக்கியாகவே இருப்பினும் ஒரு பெண்ணைக் கொல்ல்லாமா? என்ற குழப்பம் கதாநாயகன் இராமனுக்கே வருகிறது. கூட இருக்கும் ஆலோசகர் விசுவாமித்திர முனிவர் சொல்கிறார்,” இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கிறது”. இப்படி முன்பே நடந்ததாக முனிவர் கொடுக்கும் இரண்டு முன் உதாரணங்கள்: கியாதி & முகதி என்ற இரண்டு பெண் அரக்கிகளை திருமாலும் இந்திரனுமே இதுக்கு முன்னர் அழித்துள்ளனர் என்பது தான். (கம்பராமாயணம் : பாடல் 381 & 382)

ஈகோவை உதறுங்கள்:

அரசு வேலைகளிலும் தாமதம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகி இருக்கிரது. அதற்கான காரணம் பற்றி சற்றே யோசித்தால், “யார் பெரியவர்? யார் யாரைப் பார்க்க வரவேண்டும் போன்றவைகளால் கூட தாமதங்கள் ஆகும். இந்த சிக்கல் முழுதும் Decision Making, Art of Communication, Relatioship தொடர்பானவைகள். இவற்றிலிருந்து விடுபட கம்பர் ஒரு நல்ல தீர்வு சொல்கிறார். ஒரு சிக்கல் அல்லது பிரச்சினைக்கு முடிவு வேண்டுமா அந்த பிரச்சனையை அலசும் நல்ல ஓர் ஆளைப் பிடியுங்கள். அவரோட ரேங்க் அல்லது status எல்லாம் யோசிக்காதீர்கள். சட்டுன்னு அந்த Expert இருக்கும் இடத்துக்கே செல்லுங்கள்…வேகமாகச் செல்லுங்கள். விமானதிலும் கூட செல்லலாம். எப்படி போனாலும் தனியாகவே செல்லுங்கள். காரோட்டியைக் கூட தவிர்க்கவும். இது தான் கம்பர் தரும் நிர்வாக ரகசியங்கள்.

கம்பர் கையில் எடுத்த பிரச்சினை, இராவணன் சீதையை கவர வேண்டும். சரியான ஆலோசகர் மாரீசன். இராவணன் வான வழியே பறந்து செல்லும் விமானத்தில் ஏறி, தனியா போனதை கம்பன் சொல்கிறார்.. என்ன தான் மாரீசன் தன் கீழ் வாழும் சொந்தக்காரன் என்றாலும் Expert Opinion தேவைப்பட்டால், ஈகோவை உதறிவிட்டு நேரில் போகவேண்டும் என்பதாய் கம்பர் சொல்கிறார். (கம்பன் கதாநாயகன் பக்கம் தான் இருக்க வேணும் என்ற கட்டாயம் இல்லையே? வில்லனுக்கும் உதவுகிறார்)

வந்த மநதிரிககளோடு மாசு அற மரபின் எண்ணி
சிந்தையில் நினைந்த செயயும் செய்கையன் தெளிவி இலநெஞ்சன்
அந்தரம் செல்வது ஆண்டு ஓர் விமானத்தில் ஆரும் இன்றி
இந்தியம் அடக்கி நின்ற மாரீசன் இருக்கை சேர்ந்தான்.

வரமா சாபமா??

உங்களுக்கு ஏதாவது சங்கடங்கள் வரும் போது யாராவது சந்தோஷமாகச் சிரியுங்கள் என்றால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆனா வள்ளுவர் கூட இதையே இடுக்கண் வருங்கால் சிரி என்றிருக்கிறார்.

நடப்பதெல்லாம் எல்லாம் நன்மைக்கே என்று இருப்பது நல்லது. எது நடந்தாலும் சரி… எதுவுவே நடக்கவே இல்லையென்றாலும் சரி, எல்லாம் நல்லதுக்குத்தான் என்று இருப்பது பக்குவமான நிலை. சில இடர்பாடுகளைக் கூட, நாம் வாழ்வின் கிடைத்தற்கு அரிய வரமாய் கருதும் சூழலும் நிர்வாகத்தில் வரும். கம்பரின் காவியத்திலும் இப்படி, வரமா? சாபமா? என்று கேட்கும் சம்பவம் வருகிறது.

வேட்டைக்குப் போன தசரதன், யானை என்று நினைத்து சிரவணனை அம்பு எய்து கொல்கிறான். விபரம் தெரிந்த சிரவணனின் குருட்டுத் தந்தை சாபம் தருகிறார். “நீயும்இப்படி மகனை இழந்து துடிப்பாய்” என்று. இதை கேட்டு தசரதனுக்கு ஒரே குஷி… “எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது” என்று. சிக்கலைக் கூட சிக்கலாக கருதாமல் இருக்கும் நிர்வாகக் கலையினை கம்பர் தருகிறார்.

ஹிந்தியில் பான்ச் பான்ச்

பெரும்பாலான தமிழர்கள் அந்தமானுக்கு வருகையில் ஹிந்தி தெரியாமல் தான் வருவர். பின்னர் அதே ஹிந்தியில் கவிபுனையும் திறமையும் பெற்ற தமிழர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழர்களுக்கு ஹிந்தியில் எண்கள் சொல்வது என்பது சிக்கலான ஒரு செயல். தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும். ஆனால் ஹிந்தியில் ஒன்று துவங்கி நூறு வரை மனப்பாடம் செய்தாக வேண்டும். தமிழர்கள் அந்த சிக்கலுக்கு தீர்வும் கண்டனர். அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்.

15 க்கு பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்.
47 க்கு சைந்தாலீஸ் சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு. பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பற்றி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்பதாய் வருகிறது. பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்..  இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது போல் தான் படுகின்றது. அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போய் விடுவேன் என்பதற்கும் மூ…ன்று நாளா?? என்று பெரு மூச்சு விடுபவர்களுக்கும் உள்ள வித்தியாசம் உணர கம்பன் பாடல் உதவுகிறது. நிர்வாக சிக்கலைனை எதிகொள்ள நாம் எப்போதும் தயாராய் இருக்க வேண்டும். மேலும் அதனை சுலபமாய் எதிர் கொள்ளவும் பழக வேண்டும் என்பதை கம்பர் மூலம் நாம் அறிய வேண்டும்.

அதுவா? இதுவா?? எதை செய்ய ???

இந்த மாதிரியான சிக்கல்கள் நமக்கு பல நேரங்களில் வந்திருக்கும். சில சமயங்களில் ஆண்டவன் அல்லது இயற்கை objective type கேள்வியாய் சந்தர்பங்களை தந்து விடும். இரண்டில் ஒண்றை த்ற்வு செய்தாக வேண்டிய நிலை அமையும் அல்லது அத்றகு இது பரவாயில்லை மாதிரியும் சூழ்ல்கள் வந்து சேரும்.

ஒரு நிறுவனத்தின் வெற்றி தோல்வி எல்லாமே நாம் நமக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை எப்படி பயன் படுத்தியுள்ளோம் என்பதைப் பெறுத்து தான் அமையும். சைக்ளோஸ்டைல் மிஷின்களின் ஜாம்பவனாய் இருந்த ஒரு நிறுவனம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விட்டது. காலச்சூழலுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமை தான் அதன் வீழ்ச்சிக்குக் காரணம்.

இராமயணத்திலும் ஒரு சூழல் வருகின்றது. ராமனும் சுக்ரீவனும் இருவருமே மனைவியைப் பிரிந்தவர்கள். அனுமன் மெதுவாக ஆரம்பிக்கிறார். (சுக்ரீவனைப் பார்த்து ) “அரசனே, இவர்களைப் பார்த்தால் உங்கள் மனைவியைத் தேடிக் கொடுக்கும் ஆளாத் தெரிகிறார்கள்”.

சுக்ரீவனோ… இந்த இராமனே, மனைவியை பறி கொடுத்து நிற்கிறார். இவரால் எப்படி முடியம்? சந்தேகம்.. நமக்குத்தான் வரனுமா என்ன? வானரங்களுக்கும் வந்தது. வானர அரசனுக்கும் வளர்ந்து வந்தது. ஒரு வழியா கடைசியில் ஒரு முடிவுக்கு .. வழிக்கு வந்தனர். புரிந்தோ புரியாமலோ ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கை குலுக்காமலும் கையெழுத்து போடாமலும் அரங்கேறியது.

அடுத்த கேள்வி.. “யாருடைய மனைவியை முதலில் கண்டு பிடிக்க களம் இறங்குவது?” நாம் பரீட்சையில் பதில் எழுதும் போது என்ன செய்வோம்? நல்லா பதில் தெரிந்த கேள்விக்கு முதலில் பதில் எழுதுவோம். அதே அந்த இரண்டில் ஒன்றினை தெரிவு செய்யும் உத்திதான் இங்கும் வருது.

ஒரு மனையாள் சிறை வைக்கப்பட்ட இடம் வாலியிடம். சீதை இருக்கும் இடம் எங்கே? என்பதே யாருக்கும் தெரியாத விடயம். என்ன செய்யலாம்?. பரீட்சை எழுதும் அதே டெக்னிக். தெரிந்த இடத்துக்கு உடன் போகலாம் . இப்படித்தான் முடிவானது அந்த வாலியின் முடிவின் ஆரம்பம். நிரவாக காரியங்களில் முடிவு எடுப்பது எப்படி என்று கம்பன் கற்றுத் தரும் பாடம் இது.

முடிவுரை:

கம்பனின் காப்பியக் கடலின் ஓரத்தின் நின்று வேடிக்கை பார்த்த போது கிடைத்த செய்திகள் தான் இந்த நிர்வாகவியல் கருத்துகள். இன்னும் கம்பன் கடலில் மூழ்கினால் முத்துக்கள் எடுக்கலாம். நிர்வாகவியல் என்பது இப்போதைய காலகட்டத்தில் பய்ற்சி அளித்து வந்தாலும் அதன் அடிப்படையான கருத்துகளை தமிழர்கள் முன்னரே அறிந்திருந்தனர் என்பதை இங்கே பதிவு செய்வது தான் இக கட்டுரையின் நோக்கம். இன்னும் கலகலப்பாய் கம்பராமாயணம் படித்து மகிழ http://www.andamantamilnenjan.wordpress.com வலைப் பூவிற்கு வருக வருகவென அழைக்கின்றேன்.

ஆகாயப் பந்தலிலே…


இதை சாதாரணமாகப் படிப்பதற்கும், பாட்டாய் படிப்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? சாதரனமாய் படிக்கும் போது இரண்டு வார்த்தைகளின் உச்சரிப்பு.. அவ்வளவு தான். ஆனால் அதே பாடலாம் படிக்கும் போது இருக்கும் ஏற்ற இறக்கங்கள்,அதுவும் காதலில் உருகிப் பாடும் TMS. இதெல்லாம் சேர்ந்து கேட்கும் போது அலாதி சுகம் தான்.

மிகப் பிரமாண்டமாய் யாராவது, ஏதாவது வரவேற்பு குடுத்தால், அங்கே… அந்தப் பந்தல் பாக்கனுமே ஆகாசத்தையே மறைச்சிட்டு நிக்குது என்பார்கள். அதுக்கு நேர் மாறா.. நம்பவே முடியாத ஒரு செயலை செய்வதாக யாராவது சொன்னால், ஆகாச கோட்டை கட்டுவதாகவும் நம்ப மறுப்பார்கள்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நுழைவாயில்கள் அதான்.. Gate என்பது ரொம்பப் பிரபலம். அது India Gate ஆகவும் இருக்கலாம்… அல்லது Gate way of India ஆகவும் இருக்கலாம். (அது சரி ஒரு பாஸ்மதி அரிசிக்கு ஏன் இண்டியா கேட் என்று பெயர் வைத்தார்கள் என்பது யோசிக்க வேண்டிய செய்தி தான்… ஒருவேளை உடம்பின் கேட் வாய்.. அதுக்கு ருசியா, நல்லா இருக்கட்டும்னு வச்சிருப்பாங்களோ..!!). இந்த வாசலுக்கு சம்பந்தமே இல்லாத water gate (ஊழல்) & Bill Gates இப்படி சிலவும் இருக்கு (அ) இருக்கிறார்கள்.

சென்னையில்கூட பிரபலமான நுழைவாயில் பெசண்ட் நகர் பீச்சில் இருக்குமே.. அதான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஏரியா தான். அண்ணா சதுக்கம், சைதை வளைவு இப்படி ஏகமாய் இருக்குது. யானையுடன் கூடிய அண்ணா பலகலைக்கழக வளாக வாயில் ரசிக்கும் படி தான் இருக்கு எப்பொ பாத்தாலுமே..

ஒரு நுழைவாயில் என்பது, …. அதன் உள்ளே எப்படி இருக்கப் போகுது என்று சொல்வதின் ஒரு ஆரம்ப அடையாளம் தான். வெள்ளையர்கள் காலத்தில் தான் இந்த வளைவுகள் அதிகமாக வைத்து கட்டினார்கள். இப்பொ வளைவுகள் ஜாக்கிரதை என்று லேடீஸ் காலேஜுக்கு முன்பாக போர்டு மட்டும் தான் வைக்கிறார்கள்.

அது சரி..அப்பொ நுழைவாயில் பாத்துட்டு ஊர் பாக்காமெ போயிடலாமா என்ன?? இதையும் கொஞ்சம் கேளுங்க… இதைப் பாத்தா அதெப் பாக்க வேண்டியதில்லைன்னு சொல்லுவாங்க.. ஆப்பிள் இல்லையா?? நெல்லிக்காய் போதும்.. காசி ராமேஸ்வரம் போக வசதி இல்லையா?? போரூர் போனால் போதும்.. இப்படி ஏகமாய் சொல்லுவாய்ங்க.. முக்கியமான சேதி ஒண்ணு இருக்கு.. அம்மாவை படித்துறையில் பாத்தா பொண்ணை வீட்டில் போய் பாக்க வேண்டியதில்லை என்பார்கள்.. நான் பெண் பார்த்த போது நடந்த கலாட்டா இது..

மதுரைக்காரங்க கொஞ்சம் ஒரு கோட்டிங்க் மேக்கப் அதிகமா போடுவார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. (எல்லா ஊரிலும் அப்படித்தான் என்று உலகம் சுற்றிய வாலிபர்கள் சொல்லக் கேள்வி.. நமக்கெதுக்கு ஊர் பொல்லாப்பு?) சம்பிரதாயமாய் பெண்பார்த்தது போதவில்லை எனக்கு.. சரி டீச்சரா வேலை செய்றவங்க தானே என்று, ஸ்கூல் பெயரை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து கிளம்பினேன்… ஸ்கூல் விடும் சமயம் பாத்து.

ஸ்கூல் வாசலில் ரொம்ப ஆவலோடு காத்திருந்த போது எல்லா டீச்சர்களும் (அந்த ஆயா உட்பட) அனைவரும் அழகானவர்களாய்த் தான் தெரிந்தார்கள்.. (இந்தக் காலமாய் இருந்தால்.. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று மனசுக்குள்ளாவது கேட்டிருக்கலாம்?) ஒரு அழகிய தமிழ் டீச்சர் ஆங்கலத்தில் கேட்டது.. யார் வேண்டும்? என்று.

உஷா என்றேன்.. One Minute Please என்று என்னை பத்து நிமிடம் காக்க வைத்தார்.. (அது மட்டும் பத்து மணி நேரமாய் கனத்தது).. உஷா please என்று ஒரு யூனிபார்ம் போட்ட குழந்தையை கையில் தினித்தார்கள்.. நானும் அந்த குழந்தை அதைவிடவும் விழித்தது…
மிஸ்… நான் கல்யாணம் செஞ்ச்சிக்கப் போற பெண்ணு உஷா மிஸ்ஸைப் பாக்க வந்தேன்..என்றேன். அப்போது தான் அவர்களுக்கே வெக்கம் வந்து.. சாரி..சாரி.. அவர் இதே ஸ்கூல் தான் ஆனால் அதன் கிளை வேறு இடத்தில் என்றுசொல்ல… அப்புறம் பாத்தது கல்யாணம் ஆனது எல்லாம் தனிக்கதை..

பரமக்குடியில் Archவளைவு என்பது ஒரு லேண்ட் மார்க். ஒருபக்கம் காந்திசிலை, மறுபக்கம் ரயில் நிலையம். இன்னொரு பக்கம் பேருந்து நிலையம். மீதம் இருப்பதோ அடிக்கடி கலவரமாகும் ஐந்துமுனை. இப்படி எல்லாத்துக்கும் வழி சொல்லும் இதமாய் இருந்த Archவளைவு சமீபத்தில் காணவில்லை. ஏதோ விபத்தில் உடைந்து விட்டதாய் தகவல். அது வெறும் ஒரு வளைவு அல்ல. அதன் பின்னால் இருக்கும் வரலாறும் அல்லவா காணமல் போகிறது? யாரோ எப்பவோ வந்ததிற்கு வேறு யாரோ அமைத்த வளைவு என்று தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

உலகத் தமிழ் மாநாடு நடந்ததின் விளைவாக மதுரைக்கு இப்படி பல நுழைவாயில்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரும் உண்டு. இனி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதன் பெயர் கேட்டாலும் கேட்கக் கூடும். மதுரை மக்கள் வாய்ப்பை பயம் படுத்திக் கொள்ளவும்.

கம்பருக்கு ஒரு சிலை இருக்கு மாட்டுத்தாவணி பேரூந்து நிலயத்துக்கு அருகில். பக்கத்தில் ஒரு வளைவும் உண்டு. ஒரு நாள் கம்பரின் கழுத்தில் மாலைகள் அமர்க்களமாய். பொதுவாய் சாதீய தலைவர்களுக்கும், சாதி சாயம் பூசப்பட்ட தேசீயத் தலைவர்களின் சிலைகளுக்கு தான் அப்படி மாலைகள் விழும். கம்பருக்கு மாலைகளளிருக்கே… ஆட்டோவில் போகும் போது கவனித்தது.

எப்படியோ கம்பர் வரை வந்து விட்டோம்.. அப்புறம் இன்னும் கொஞ்சம அவர் சொல்லும் நுழைவாயில் சமாச்சாரத்தையும் தான் பாத்திடுவோமே.. கம்பருக்கு முன் அனுமன் தான் Gateway of Lanka வைப் பார்க்கிறான். சாதாரணமா எதுக்கும் பயப்படாத பய தான் நம்ம அனுமன்.. ஆனாலும் அந்த நுழைவாயில் பாத்து செத்த நொடிஞ்சி போகிறார் என்பது தான் உண்மை.

நம்ம நாகேஷ் மெட்ராஸை முத்ன்முதலாக பாத்து, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று வாயெப் பிளந்தது மாதிரி அனுமன் வாயை மூடாமல் பாக்கிறார். ஒரு valuation கணக்கு போகுது.. ஏழு உலகத்து மக்கள் எல்லாரும் சண்டை போட வந்தாலும் (அனுமன் சண்டைக்கு வந்ததால் இப்படித்தானே யோசனை போகும்?) எல்லாரும் ஒண்ணா போயிடலாமாம்..அவ்வளவு பெரிய நுழைவாயில்..அதுவும் இதெல்லாம் சாதாரண டிராபிக் போகத்தானாம்.. அப்படிப்பாத்தா இந்த ராஜாவோட படை ஏழு கடலைவிட அதிகமா இருக்குமே… இப்படி போகுதாம் யோசிப்பு..

ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்த்தால்
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான்.

சரி..சரி.. வேற எந்த வளைவைப் பத்தியும் யோசிக்காம பொங்கல் வைப்போம்.. பொங்கல் வாழ்த்துக்கள்.

தூக்கமோ தூக்கம்…


சில பாட்டுகளை மேடைக் கச்சேரிகளில் நாம் கேக்க முடியாது. பாடும்படி கேக்கவும் முடியாது அவர்களும் பாடமாட்டார்கள்.. அவர்களால் பாடவும் முடியாது.. இப்படியான பாடல்கள் லிஸ்ட் இதோ..

சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி
நான் ஒரு ராசியில்லாத ராஜா
என் கதை முடியும் நேரமிது…
தூக்கம் என் கண்களை தழுவட்டுமே..

இதில் கடைசி பாடல் மட்டும் அடிக்கடி இரவு நேரங்களில் இரவின் மடியில், நடுநிசி என்றும் அப்பப்பொ போடுவார்கள்.. Mid Night Masala வராத காலங்களில் இந்தப் பாட்டுக்கு இருந்த மவுசு தனி தான்.. இருந்த மவுசு என்ன?? இன்னும் இருக்கிறது.

தூக்கம் என்பது ஒரு தற்காலிக மரணம் தான். ஆனால் அது மட்டும் சரியா இல்லை என்றால், எவ்வளவு சிக்கல்கள் வரும் என்பதை.. தூக்கம் வராமல் தவிப்பவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்..

எனக்கும் தூக்கத்துக்கும் ரொம்ம நெருங்கிய சம்பந்தம். எங்கே போனாலும் நல்லா தூங்கிடுவேன்.. எவ்வளவோ முக்கியமான விவாதங்கள் சூடு பறக்க நடந்திட்டு இருக்கும். எனக்கு தூக்கம் வருதே என்று நைஸா தூங்கப் போயிடுவேன்.

டீவிகளில் அடிக்கடி பார்க்கலாம். பட்டிமன்ற நிகழ்சிகளில் தங்கள் முகம், டிவியில் வரும் என்ற ஒரே காரணத்துக்காய் போனவர்கள் அடிக்கடி கொட்டாவி விடுவதை (எடிட்டிங்க் செய்ததையும் மீறி வரும்).

கணக்குப் பாடத்தில் தூங்கும் மாணவர்கள் இருப்பார்கள். ஆக ஒரு விஷயத்தில் மனது லயிக்கவில்லை என்றாலும் தூக்கம் வரும். யோகா போன்ற வகுப்புகளில் ஒரு விஷயத்தில் மனதை லயிக்க வைத்தாலும் தூக்கம் வரும்.

ஆனா காதல் விஷயத்தில் அது உல்டா.. இங்கே லயிச்சா முதலில் காலியாவது பர்ஸ்.. அப்புறம் உங்க தூக்கம்.. சொல்றதெ சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட சர்வேயில் பிரேயர் நடக்கும் இடங்களில் தான் மக்கள் அதிகம் தூங்குகிறார்களாம். அது சரி… நாம அதை இப்படி ஏன் எடுத்துக்கக் கூடாது? உலகம் முழுவதிலும் பிரேயருக்கு வரும் மக்கள் தான், தாங்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்கிறார்கள்.

ரசித்து லயித்து தூங்கின வருஷங்கள்.., கோவையின் குளிரான… இதமான அந்த CIT இல் பொறியியல் படித்த அந்த நான்கு வருஷங்கள் தான். இரவு 12 மணிக்கு விழித்து படிக்க ஏதுவாய் ஹாஸ்டல் மெஸ்ஸில் தேநீர் ஏற்பாடாகி இருக்கும். டீ குடித்து ரெண்டு மணி நேரமாவது படிப்பாய்ங்க பசங்க.. ஆனா டீ குடிச்சிட்டு வந்து சொகமா தூங்கும் ஒரே ஆள் நானாகத்தான் இருப்பேன்.

எப்பொ ஒரு மனுஷனுக்கு தூக்கம் வரும்? நல்ல டைல்ஸ் போட்ட பெட் ரூம்.. ஏசி எல்லாம் இருக்கு.. பஞ்சு மெத்தை? அதுக்கென்ன பஞ்சம்?? எல்லாம் இருந்தா தூக்கம் வந்திடுமா என்ன??? குழந்தைகள் நல்லா தூங்குகிறார்கள். அவர்கள் தாயின் அரவணைப்பில் பாதுகாப்பாய் இருப்பதாய் உணர்ந்து நிம்மதியாய் தூங்குகிறார்கள். அப்புறம் குழந்தைங்க ஹார்ட் டிஸ்க் காலியா இருக்கு. நமக்கு??? எத்த்னை GB இருந்தாலும் பத்த மாட்டேங்குது. எல்லாம் அதிகப்படியான தேவையில்லாத குப்பைகள்.

சிலருக்கு… இல்லாத பொல்லாத எண்ணம் எல்லாம் தூக்கத்தை கெடுக்க தூங்குறப்பத்தான் ஞாபகத்துக்கே வந்து தொலைக்கும் தூக்கத்தை. உப்பு சப்பில்லாத விஷயங்கள்.. அட அவன் நம்மலெ பாக்காமெப் போயியோட்டானே… இது போதும் நம்ம தூக்கம் போக. பக்கத்து வீட்டுக்காரர் அல்லது காரி ஏதாவது வாங்கினதை காட்டினாலும் தூக்கம் போகும்… சில சமயம் அப்படி காட்டாது போனாலும் தூகம் போவும். அட.. எல்லாத்தையும் வந்து காட்டுவா..இதெ ஏன் காட்டாமெப் போனா… அப்பவும் தூக்க்கம் தான் அவுட்..

காலேஜ் காலத்தில், நாங்களும் முழிப்போம்லெ என்று ஒரு மஹாசிவராத்திரி அன்று பந்தயம் போட்டு எப்படியோ முழு இரவு முழித்து (ரம்மி ஆட்டம் எல்லாம் ஆடி) முடித்தேன். ஆனால் அதுக்கும் சேத்து அடுத்த நாள் சோறு தண்ணி கூட இல்லாமெ (தூக்கத்தை எதுக்கு கெடுத்துக்கணும் என்கிற நல்லெண்ணத்தில் தான்) முழு நாள் & இரவும் சேர்த்து தூங்கியது என மலரும் தூக்க நினைவுகள்.

5 மணிக்கே பொல பொலவென்று சூரியன் உதிக்கும் அந்தமான் தீவுகள்… அதிகாலை 6 மணிக்கு பணிகள் துவங்கி விடும் சூழல்.. என் தூக்கமும் எல்லாரையும் போல் போயே போச்சு… ம்…

அப்படியும் ஊர் பக்கம் வரும் போது, என்னை மறந்து தூக்கம் வரும். அரக்கோணம் மைத்துனி வீட்டில்,.. கும்பகோணத்தில் ஒரு நண்பரின் குடும்பத்தில்..நானும் ஒரு அங்கம் போல்..சுகமாய் தூங்குவேன்.. என்ன உங்களுக்கும் தூக்கம் வருதா??

மிகப் பெரிய தூக்கம் தூங்குவதாய் Mr Bean ஐக் காட்டுகிறார்கள் Pogo டீவிக்காரர்கள். மிஸ்டர்பீன் தூங்கிக் கொண்டிருப்பார். அலாரம் அடிக்கும். தலையணையை காதில் பொத்திப் படுப்பார். அடுத்து இன்னொரு அலாரம்.. அதை பக்கத்தில் இருக்கும் தண்ணியில் போடுவார்..(அதுக்காகவே மொத நாளே.. தயாரா வச்சிருந்த மாதிரி..) அப்புறம் தண்ணி எல்லாம் காலில் பீச்சி அடிக்கும். அதை கால் விரலில் அழுத்தி நிப்பாட்டி தூங்குவார்… முகத்திலும் தண்ணி அடிக்க.. எப்படியோ எழுந்து விடுவார்…

இந்தக் கதை எல்லாம் நம்ம கிட்டெ ஆவாது மவனே.. என்ன ஆனாலும் நானு எந்திரிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கேரக்டர்கள் சமீப காலமாய் படத்திலெ வருது. கட்டிலோடு ரோட்டுக்கு வரவழைப்பர் அவர்களை.. எழுப்பப் பயந்து தான்.

இவங்க எல்லாத்துக்கும் சூப்பர்மேன் தூங்குறதில் இருக்கார். அவரை நாம எப்படி விட முடியும்? அவர் தான் திருவாளர் மாண்புமிகு தூக்க சக்கரவர்த்தி கும்பகர்ணன் அவர்கள். கம்பர் அவரை நமக்கு காட்டும் முதொ இடம் அனுமன் பாக்குற இடம் தான். அனுமன் பாக்கும் போதும் கு.க தூங்கிட்டுத்தான் இருந்தார். அப்பவுமா??? எப்படி இருந்ததாம் அந்த சீன்.. வாங்களேன்.. அனுமன் Skype இல் அழைக்கிறார். அப்படியே Live ஆ பாக்கலாமே.

கும்பகர்ணன் தூக்கம் தான் உலகப் பிரசித்தம். (அந்த பீன்ஸ் எல்லாம்.. இத்துனுகான்டு) சாதாரணமாவே தூங்கும் மனுஷன்.. சாரி… அரக்கன். தேவ மகளிர் காலை பிடிச்சி வுட்டா எப்புடி??? அவங்க முகம் சந்திரனா பிரகாசிக்குதாம். பக்கத்திலெ சுவத்திலெ கல்லு,,, அதுவும் சந்திர காந்தக் கல். அது அந்த மகளிரைப் பாத்து ரூட் விடுது. தண்ணியை அவங்க முகத்திலெ அடிக்குது.. அது கும்பகர்ணன் முகத்திலெ தெறிக்குது.. அப்பவும் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்…

அட ஸ்கைப் கனெக்சன் கட் ஆயிடுத்தே… ஓகே.. அப்புறம் பாக்கலாம் மத்ததை… இப்பொ பாட்டை பாப்போம்:

வானவர் மகளிர் கால் வருட மா மதி
ஆன்னம் கண்ட மன்டபத்துள் ஆய் கதிர்க்
கால்நகு காந்தம் மீக் கான்ற காமர் நீர்த்
தூநீற நறுந் துளி முகத்தில் தூற்றவே..

சரி.. இப்பொ போய் நல்லா தூங்குங்க..

சும்மா அதிருதில்லெ…


இந்த டயலாக் ரஜினி பேசும் போது, உண்மையில் தியேட்டரே அதிர்ந்தது என்னவோ உண்மை தான். ஆனால், உண்மையில் பூமி ஆடிய அந்த கருப்பு ஞாயிறு டிசம்பர் 2004 ஐ நினைத்தால், ரஜினி மாதிரி பூமி “சும்மா அதிருதில்லெ” என்று சொல்லிவிட முடியாது.. அந்தமானைப் புரட்டிப் போட்ட அந்த சுனாமியின் நினைவுகளை அசை போடலாமா?.. லேசா பயத்துடன் தான்.

எப்போதும் 8 மணிக்கும் மேல் தான் எல்லா ஞாயிறுகளும் விடியும் எனக்கு. ஆனால அந்த ஞாயிறு மட்டும் அதிகாலை 6.30க்கு பூமியையே குலுக்கி எழுப்பி விட்டது. என்ன நடக்கிறது? என்பதை மூளை தீர்மானிக்கும் முன் டிவி பிரிட்ஜ் ஆகியவை அங்கங்கே நகர, ஏதோ இறுக்கமான பிளக் இருந்த காரணத்தால் வயரை கயிறாய் கொண்டு அங்கங்கே நின்றன அவை. தனியறையில் படுத்திருந்த இரு குழந்தைகளையும் வாரிச் சுருட்டி, முதலில் வெளியில் போய் நிற்போம் என்று ஓடினோம். சில விநாடிகளில் சிலிண்டர் வெடித்து பக்கத்த்தில் இருந்த ஒரு மரவீடு தரை மட்டம் ஆனதை.. வெறுமனே வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது.

சுனாமி என்ற வார்த்தை மட்டும், அன்பே சிவம் படத்தில் கேட்டதோடு சரி.. சத்தியமா அப்போது அதன் spelling T ல் ஆரம்பிக்கிறது என்று கூடத் தெரியாது. மனிதர்களை அழவைத்த பூமியின் அதிர்வு ஒரு பக்கம் இருக்கட்டும்..

பூமியே அதிரும் படி சிரிக்கிற நிகழ்சிகள் பாத்திருப்பீங்க.. டீவிகளில்… தமிழில் அப்படி யாரும் சிரித்து விட முடியாது நம்ம மதன்பாப்பை விட்டால். ஆனால் காமெடி சர்க்கஸ் என்று ஹிந்தியில் வரும் நிகழ்ச்சியில்… சிரிச்சா காசுங்க்கிற மாதிரி.. எப்பொ பாத்தாலும் கெக்கெ புக்கெ என்று சிரிச்சிகிட்டேயே இருப்பாங்க.. பொம்பளை சிரிச்சா போச்சி என்கிற டயலாக் மட்டும் அங்கே போய் சொல்லிட முடியாது அம்ம்புட்டுத் தான்.
நாம சிரிச்சா பரவாயில்லெ.. நம்மளைப் பாத்து நாலு பேரு சிரிச்சிடக்கூடாது. அதெத்தான் நம்ம வாத்தியாரு எப்பொவோ பாடி வச்சிட்டாரே… சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழாதேன்னு..

எல்லாராலும் இப்படி வாய் விட்டு சிரிச்சிட முடியாது. ஆஃபீசில் பெரிய்ய அதிகாரி மொக்கெ ஜோக்குக்குச் சிரிச்சா… நாம அவரோடு சேந்து அதுக்கும் சிரிக்கலாம்.. ஆனா கவனமா இருக்கனும். அவரு எப்பொ நிப்பாட்டுறாரோ, அதுக்கு ஒரு செகண்ட் அதிகமா நாம சிரிச்சிடப் படாது. நல்ல ஜோக்குக்கு உங்களுக்கு சிரிப்பு வரலாம்.. ஆனா உங்க பாஸ் அதை ரசிக்கலையா?? நீங்க ரசிச்சா… பின்னாடி வரும் விளைவுகள், ரசிக்கும்படியா இருக்காது.

சிரிப்பில் உண்டாகும் ராகங்களில் பிறந்தது தான் சங்கீதம் என்கிறார் ஒரு கவிஞர். ஊரே சிரிக்குது என்பார்கள்… ஊரா சிரிக்குது? ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று தமிழாசிரியர் சொன்ன இடவாகுபெயர் இலக்கணம் தான் ஞாபகத்துக்கு வருது. ஆமா இந்த இலக்கணத்தால் ஏதாவது பிரயோஜனம் இருக்கா?? (நல்லா தூக்கம் வரவழைப்பதைத் தவிர… ஆமா.. பாதி தூக்கத்தில் கேட்ட இடவாகு பெயரே.. இம்புட்டு ஞாபகம் இருந்தா…!!!)

எப்போவும் போகும் ராமாயணக் காட்சியை, இன்னெக்கிம் கிளைமாக்ஸில் பாப்போம். அதுக்கு முன்னாடி ஒரு மஹாபாரதக் காட்சி (அ) கதைக்கு போவோம். கரணன் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான். ஆனால் சாவு மட்டும் வரவில்லை. (சிவாஜி நடித்த கர்ணன் படம் ஞாபகம் வந்திருக்குமே!!! ஒரு சின்ன coincidence : இதை எழுதி முடிக்கும் போது, முரசு டிவியில் கர்ணன் படப் பாடல் ஒளிபரப்பானது. 10.50 காலை 8 ஜனவரி 2012).. தர்மம் தலை காக்கும் அல்லவா?? அப்பொ கடவுளே ஐடியா குடுக்கிறார்.. நல்லதுக்கு பாவமில்லெ.. நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா, எதுவுமே தப்பில்லே… (தென் பாண்டி சீமையிலெ… இது மட்டும் கடவுள் போட்ட டியூன் இல்லெ.)

ஒரு ஆளை கூப்பிட்டு, செய்த தர்மத்தை எல்லாம் தானமா கேளு என்றார் கட்வுள். அந்த ஆளுக்கு ஒரு சந்தேகம்.. சாதாரன தர்மமே தலை காக்கும் என்றால், செஞ்ச எல்லா தர்மத்தையே தர்மம் செஞ்சா.. அப்பொ அந்த தர்மம் தலை காக்காதா??

கடவுளுக்கே கலங்குது.. அட.. நாம இப்படி யோசிக்காமெ போயிட்டோமே?? என்ன பன்னலாம்.. பிரச்சனை சொன்ன ஆள் கிட்டேயெ தீர்வு கேப்போம்… (அவர் என்ன அரசியல்வாதியா பிரச்சினைகள் இருக்கட்டும்… ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒதவும்னு சொல்றதுக்கு??)

அந்த நபரே பதில் சொல்றார்.. கடவுளே.. நான் கொஞ்சம் இலக்கணம் தூங்காமெ படிச்சிருக்கேன். “செஞ்ச தர்மம் தா” என்று கேக்காமெ, “செய் தர்மம்” கேக்கிறேன். இதில், இதுவரை செய்த தர்மம், இப்போது செய்கின்ற தர்மம், இனி மேல் செய்யப் பொகும் தர்மம் எல்லாம் வந்திடும். அப்புறம் கர்ணன் செய்யும் எல்லா தர்மத்தோட புன்னிய கிரிடிட் நம்ம அக்கவுண்ட்டுக்கே வரும். தேவைப்பட்டா sms வரவழைக்கவும் முடியும்.. இப்படியாக கரணன் கதை முடித்த இலக்கணம் தான் வினைத்தொகை.

சரி இப்பொ ராமாயணத்துக்கு வரும் நேரம் வந்தாச்சி..

ஊர் சிரிக்கிற மேட்டர் தான் முன்னாடி பாத்தோம். ஆனா ஊர் எப்போவாவது ஓடறதைப் பத்தி கேட்டிருக்கீங்களா?? இல்லையா?? அப்பொ கம்பர் கிட்டெ வந்து பாருங்க.. எல்லாம் தெரியும்
அனுமன்… தன் முழு வேகத்துடன், ராமர் விட்ட பாணம் போல், வேகமா இலங்கை நோக்கி போய்க் கொன்டிடுக்கிறார். அந்த வேகம் எப்படி இருந்ததாம்??

கையில் வஜ்ராயுதம் வச்சிருக்கிற இந்திரனோட தேவலோகமே கவலைப்பட்டதாம்.. கிளம்பிட்டான்யா… கிளம்பிட்டான்யா… என்று கோரஸாவும் அந்தக் காலத்தில் சொல்லி இருக்கலாம்!!. இலங்கை வரைக்கும் தான் பயணம் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா.. வரும் வேகம் அப்படித் தெரியலை… அப்படி நெனைச்சி இலங்கைக்கு அப்பால் உள்ள நாடுகள் எல்லாம் வெலகி ஓடியே போயிடிச்சாம்.

வலங் கையின் வயிர ஏதி வைத்தவன் வைகும் நாடும்
கலங்க்கியது ‘ஏகுவான் தன் கருட்து என்கொல்?’ என்னும் கற்பால்;
’விலங்கு அயில் எயிற்று வீரன் முடுகிய வேகம் வெய்யோர்
இலங்க்கையின் அளவு அன்று’ என்னா இம்பர் நாடு இரிந்தது அன்றே.

எனக்கு என்னமோ, சுனாமியில் கானாமல் போன ஊர்களும் ஒரு தீவு மூன்று தீவானது மட்டும் அனாவசியமா ஞாபகத்துக்கு வந்து போகுது. உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வருது??

அது போல் வருமா? இந்தப் பொன்னாள்?


ஆண் குரல் மட்டும் உருகி உருகிப் பாடும் இந்தப் பழைய பாட்டு, தேன்கிண்ணம் போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாய் இடம் பெறும். ஆனால் கூடவே வரும் பெண் குரல், வெறும் ஹம்மிங்க் மட்டுமே செய்து கிரங்க வைக்கும் பாடல் அது.. நாம எல்லாத்தையும் உட்டுட்டு அந்த “போல்”… அதை மட்டும் வச்சிட்டு காயை நகர்த்துவோம்.

“அரசியல்லெ இதெல்லாம் சகஜமப்பா” என்று டயலாக் நாம் சொல்லுவோம்.. ஆனா இதுக்கு, முன்னாடி ஏதாவது ஏடாகூடமா ஒரு சேதி நடந்திருக்கனும்.. அப்பத்தான் இந்த சகஜ டயலாக்கை சகஜமா சொல்ல முடியும். சமீபத்திய நிகழ்வு இது தான். ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கியவர் கட்சி மாறிவிட்டார். அடுத்த கட்சிக்குப் போயிட்டா ஊழல் கரைஞ்சிடுமா?? ஆளை உட்ட கட்சி கேக்குது.. கங்கையில் சின்ன ஓடை வந்து கலந்தா, அதுவும் புனிதம் ஆவது போல் என்று பதில் சொல்லுது வரவுக் கட்சி.. நமக்கெதுக்கு கட்சி விவகாரம்?? அந்த “போல” இங்கேயும் வந்திடுச்சா?? அடுத்த கட்சிக்கு இல்லெ இல்லெ காட்சிக்கு.. சாரி ஒரு கதைக்குப் போவோம்.. (இது தெரிஞ்ச கதை தானே என்பவர்கள் அடுத்த போலவுக்குத் தாவலாம்).

கங்கைக்கரையில் ஒரு முதியவர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். தன் மனைவியை கங்கை அடித்துக் கொண்டு போகிறது, என்பதை தெளிவாய்த் தெரிவிக்கிறது அந்த அவலக்குரல். காப்பாற்றப் போனவர்களை அவரே தடுக்கிறார். “ஒரு சாபமமிருக்கு. பாவம் செய்யாத நபர் தான் தன் மனைவியை காப்பாற்ற முடியும்” என்கிறார்.

“இல்லாட்டி… பாவம் செய்தவர் தலை தண்ணீரில் கரைந்து விடும்”. கதை கேட்டு கூட்டமும் கரைந்து விடுகிறது. ஒரு மீனவ இளைஞன் ஜம்மென்று குதித்து கிழவியை கரை சேர்த்தான்.. (இந்த இடத்தில் கிழவி என்று சொன்ன காரணம்… நீங்க பாட்டுக்கு படத்து சீன் மாதிரி தண்ணியை உறுஞ்சும் காட்சி வரும்னு ஜொள்ளு விடாமல் இருக்கத் தான்.)

கூட்டம் வியப்போடு கேட்டது. என்னப்பா?? ஒரு பாவமும் செய்யலையா நீ?? பதில் தெம்போடு வந்தது… ஹ..ஹ…ஹ…. செய்திருந்தேன்.. கங்கையில் மூழ்கினதாலே எல்லாமெ போயிடுச்சி போலெ என்று முடித்தார். (அந்த “போல” அங்கும் ஆஜர்)

இங்கிட்டியும் அங்கிட்டியும் சுத்திப் பாத்தா.. அங்கே வடிவேலானந்தா நிற்கிறார். அவர் பக்கத்திலே யாரோ போலீஸ் மாதிரி தெரியுதே?? பார்த்திபனா இருக்குமோ?? சே..சே.. அவர் பக்கத்தில் இருந்தா வடிவேல் முகத்தில் சிரிப்பு ஏது?? ஒரே அவஸ்தை தானே.. (ஆனா நமக்கு செமெ ஜாலிதான், அந்தக் கூட்டணியால்).. வேற யாரு?? அட நம்ம டைரக்டர் கம் நடிகர் வெட வெட மனோபாலா தான். வ.வே லேசாக தட்டுகிறார் அவர் நெஞ்சை. ரொம்ப பீத்திக்காதெ.. உன்னெயெ தப்பா போலீஸ் வேலைக்கு சேத்தாக போல… (போல வந்ததால் நாம் வந்த வேலை முடிந்தது.. நகர்வோம்)

சொந்தகதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் எப்படி வரும்?? என் வீட்டுக்காரியும் அப்பப்பொ என்னையெ கேப்பா.. உங்களை தப்பா இஞ்ஜினியர் வேலைக்கு சேத்துடாங்க போல. பேசாமா தமிழ் வாத்தியாரா போய் பரமக்குடியிலேயே இருந்திருக்கலாம்…(கம்பராமாயணத்தை விடாமல் இருப்பதை குத்திக் காட்டுறாப்பலெ..)

காட்டுறாப்பலெ… வந்தாப்லெ, போனாப்லெ, சொன்னாப்லெ என்ற வார்தைகள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனா யூஸ் செஞ்சிருக்கீங்களா.. நான் அடிக்கடி யூஸ் செஞ்சிருக்கேன். எப்பொ இதை யூஸ் செய்ய முடியும் தெரியுமா?? உங்களோடு எப்போதோ கூட படித்தவர்.. நண்பர் தான். இப்போது உயர் பதவியில் இருக்காப்லெ. இருக்கிறான் என்று உரிமையுடன் சொல்வதா? அல்லது இருக்கிறார் என்று மரியாதையுடன் சொல்வதா என்ற குழப்பமா?? அந்த “பொலெ” ஐ சேர்த்தா பிரச்சனைக்கு குட் பை. (அது வீட்டுக்காரி பேச்சுக்கும் சொல்லலாம் என்பது சீக்ரட்டான சேதி)

அப்படியே ஊர்க்கதையும் பாப்போமே.. பரமக்குடியில் அந்தக் கால தியேட்டர்களில் படம் பாக்க, பெண்களில் இடுப்பில் வரும் குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.. தியேட்டர் வரை நடந்து வந்து, டிக்கட் எடுக்கும் நேரத்தில் மட்டும் அம்மா, பெரியம்மா, சித்தி, பக்கத்து வீட்டு அக்கா இப்படி யார் இடுப்பாவது எனது சவாரிக்கு தோதாக கிடைக்கும். ஓசியில் படம் பாத்துட்டு, இடைவேளையில் முறுக்கு, குச்சி ஐஸ் சாப்பிட்டு… வாவ்.. அந்த சந்தோஷம் போல இப்பொ வருமா?? இப்பொ தியேட்டர் என்னமோ ஏசி தான்.. ஆனா மனசுலெ ஏன் இத்தனை வெப்பம்??

அந்தக் கால நடிகைகளில் அபிநய சுந்தரி சரோஜா தேவியை தன் மகள் போல்.. மக படம் போட்டிருக்காங்க.. போய் பாக்கணும்.. என்று பெரியம்மாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று இப்படி எந்த நடிகையையாவது இப்படி கூப்பிட மனசு வருமா? ஆரம்ப கால சுஹாசினி, ரேவதி வேண்டுமானால் சொல்லலாம் போலெ… இப்பொ சமீபத்ததிய நடிகைகளில் சினேகா..?? ஓகே வா???

உங்க மூக்கு சூப்பரா தமண்ணா மூக்கு போல இருக்கு… இப்படிச் சொன்னா என்ன அரத்தம். கொஞ்சம் இலக்கணப் பக்கம் போனால், உவமை என்று சொல்லுவாய்ங்க.. ஐஸ் வைக்க பொய் சொன்னா, அது உலகத்திலெ இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்றது (இல்பொருள் உவமை அணி); சாதாரணமா நடக்கிறதை இதுக்காகவே நடக்குது போலெ என்று சொல்வது என்ன வகை? (தற்குறிப்பேற்று அணி – இது சரி தானா?? தமிழ் அறிஞர்கள், தவறு என்றால் மன்னிக்கவும்).. இந்த நேரத்தில் என் மனசுல பட்டதை சொல்லியே ஆகனும். எனக்கு தமண்ணா ஓகே.. ஆனா அந்த மூக்கு தான் கொஞ்சம் ஒதைக்குதே..? ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு??

சரி இத்தனை போல தேடிய பிறகு எங்கே முடிக்க?? வேறு எங்கே.. கம்பராமாயணம் தான்.. கம்பர் உவமை சொல்றதிலெயும் மஹா கெட்டிக்காரர்.. நம்ம லெவலுக்கு தமண்ணாவை வச்சி இவ்வளவு எழுதினா…, பக்தி சிரத்தையோட ராம காவியம் படைத்தவர்… அவர் கண்ணுக்கு உவமை வந்து கொட்டாதா என்ன?? வந்ததே..

தானா தினசரி நடக்கும் செயல்… உலகத்திலெ இல்லாத ஒண்ணு… ரெண்டையும் காக்டெயிலா கலந்து கலக்கி நம்மை மகிழ்விக்கிறார் கம்பர். இலங்கையில் அனுமன் பாத்த முதல் நாள் மாலை நேரம். சூரியன் மறைகிறது.. அது கம்பன் பார்வையில் வேறு மாதிரி தெரியுது.
எப்பொவுவே கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியன் அன்று வடக்கில் உதித்து தெற்கில் மறைஞ்சதாம்.. அது சரி எதுக்கு இப்படி?? ராவணன் தவத்தோட பயன் எல்லாம் சீதையைக் கவர்ந்ததால் போய்விட, இனி அழியப் போகிறான் என்பது சூரியனுக்கு தெரிஞ்சு போச்சாம். ராவணன் 20 கைகள், பத்து தலை வச்சி, ஐந்து புலங்களையும் அடக்கி பெற்ற தவம் வீனாச்சே என்று பன்ச் வேறு வைக்கிறார் கம்பர்..

தடக்கை நால் ஐந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
அடக்கி ஐம்புலங்கள் வென்று தவப்பயன் அறுதலோடும்
கெடக் குறியாக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கைசெல்லும் பரிதி வானவனும் ஒத்தான்.

இனிமே எதைப் பாத்தாலும் அல்லது யாரைப் பாத்தாலும் வேறு ஏதாவது போல யோசிக்க முடியுமான்னு பாருங்க..

பறக்கும் கப்பல் (அ) கடல் விமானம்.


நண்பர்களோடு சின்ன வயசில் என்னென்னவோ செஞ்ச்சிருப்போம். விளையாடியும் இருப்போம். எனக்கு தொட்டில் பழக்கமாய் இருந்து வந்த பழக்கம் இந்தக் கப்பல் செய்வது.. பலர் மழைக் காலத்தில் தான் கப்பல் செய்து விடுவர். நான் மட்டும் எப்போதும் ஏதாவது ஒரு கப்பல் செய்து கொண்டே இருப்பேன். சாதாக் கப்பல், கத்திக் கப்பல், பறக்கும் கப்பல் இப்படிப் பல…

பெரும்பாலும் இந்த கப்பல் செய்து விளையாடும் பழக்கம் எல்லா ஊர்களிலும் மழைக் காலத்தில் தான் வெகு விமரிசையாக நடக்கும்.. ஆனால்.. என இளம் பிராயமோ, மழையே மழைக்கு ஒதுங்கும் பரமக்குடியில் கழிந்தது.. ஆனாலும் இந்தக் கப்பல் விடும் ஆசை மட்டும் விட்டு விடுவதாய் இல்லை. திறந்த வெளி கழிவு நீர் பயணிக்கும் தண்ணீரையும் கூட விட்டு வைக்காமல் பயன் படுத்தி கப்பல் விட்டிருக்கிறேன்.

அந்த drainage தண்ணியை மணல் போட்டு மூடி அணை கட்டி நிப்பாட்டி… அதுக்குக் கீழே இன்னொரு அணை கட்டி அதில் சின்ன ஊதுகுழல் பைப் வைத்து அதன் மூலம் தண்ணீர் போக ஏற்பாடு செய்ததும் ஞாபகம் இருக்கு.
வரும் காலத்தில் ஒரு சிவில் இஞ்சினியராக வர இருப்பதை முன்னரே காலம் அறிவித்த விதம் தான் அத்தகைய விளையாட்டுகளொ?? என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.

கப்பல் நிற்கும் துறைமுகங்கள் கட்டும் பணியில் இருந்தாலும் கூட, இந்த பேப்பரில் கப்பல் செய்யும் வேலை மட்டும் மறந்த பாடில்லை. அதுவும் எனக்கு ரொம்பவும் இஷ்டமான ஒரு கப்பல் அந்த பறக்கும் கப்பல் தான். எந்த வீட்டிலும் குழந்தைகளுக்கு அது ரொம்பவும் பிடிக்கும். ஏனென்றால் கப்பல் எப்பவுமே தண்ணியிலெ தானே போகும்?? அது என்ன பறக்கும் கப்பல்? இந்தக் கப்பல் பறக்குமா? என்ற கேள்விகளை ஆவலோடு கேட்கும் ஆரவமுள்ள குழந்தைகள்.
தொடர்ந்து ஒரு வீட்டிற்கு வாரந்தோறும் போய், அவர்தம் குழந்தைகளுக்கு இந்த பறக்கும் கப்பல் செய்து கொடுக்கப் போய் என்னோட பேரே, “கப்பல் மாமா” என்பதாக மாறி விட்ட கூத்தும் நடந்தது.

ஒரு காலத்தில் கனவாக இருந்த பல, பல ஆண்டுகள் கழித்து நிஜமாகவே நடந்துள்ளன. ரேடியோ, டீவி, மொபைல் போன் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எனது கனவுக் கப்பலான பறக்கும் கப்பல் அந்தமானில் தனது சேவையைத் துவக்கிய போது நான் தான் அதிகம் சந்தோஷித்தேன். கடலிலும் மிதந்து செல்லும்.. அப்படியே ஆகாயத்திலும் பறக்ககும் வகையில் வடிவமைக்கப் பட்ட பறக்கும் கப்பல் அது sea plane என்று ஆங்கிலத்தில் அழைக்கப் படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த மாதிரி இல்லை என்பதும் இதன் தனிச் சிறப்பு. விமானதளத்தில் கிளம்பி கடலில் இறங்குவதும், கடலிலிருந்து மேலே கிளம்பி விமான தளத்தில் இறங்கியதும் ஒரே திரில்லான அனுபவம் தான்.

இந்த பறக்கும் கப்பல் ஒரு வெளிநாட்டுத் தயாரிப்பு. அதனை ஓட்டும் விமானிகளும் வெளி நாட்டவர்.

சமீபத்தில் ஒரு நாள் துணை விமானி இல்லாமல் அந்த பறக்கும் கப்பல் வந்தது. அந்த துணை விமானி சீட்டில் உட்கார நல்ல படித்த பண்பான ஆளை விமானி தேடினார். லேப்டாஉம் கையுமாய் சென்ற நான் அதில் தேர்வானேன்.. அடெடே.. இன்னுமா இந்த உலகம் லேட்டாப்பும் டையும் போட்ட ஆட்களை நல்லவன்னு நம்புது??
பைலட் சீட்டுக்கு அருகில் பயணம்.. நான் எதிலும் கை வைக்க முடியாத அளவுக்கு சீட் பெல்ட்டுகள்… ஆனாலும் ஏதோ நானே ஓட்டுவது போல ஒரு உணர்வு..

நன்றாய் உற்று நோக்கினால்… நவீன தொழில் நுட்ப உபகரணங்களுக்கு மத்தியில் ஒரு சாமி படம் ஒட்டி இருந்தனர்.. பாத்தா..அட… அனுமான் தான் அது… இந்தியாவின் முதல் sea plane என்ற அடை மொழிக்குச் சொந்தக்காரர் அனுமன் தானே.. அதனை அந்த பறக்கும் கப்பலில் ஒட்டி வைத்திருப்பது பொருத்தமான ஒன்று தான்.
அனுமன் வந்தால் தானே ராமாயணமே களைகட்டும். அப்பொ லேசா கம்பராமாயணமும் டச் செய்யலாமே..!! அதுவும் அனுமன் பத்தின சேதி தான்.

ஒரு வேலையை செய்யும் முன் இதை என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் இறங்குவது ஒரு POSITIVE ரகம். இதெல்லாம் எங்கே முடியப் போகுது? இப்படி நினைத்தும் இறங்குவது Negative ரகம். ரெண்டுக்கும் நடுவிலெ ஒரு ரகம் இருக்கு. மயித்தெக் கட்டி மழையை இழுப்போம்.. வந்தா மலை.. இல்லையா மயிரே போச்சி.. இது எந்த ரகம். Neutral அல்லது நடுநிலை ரகம் என்றும் வச்சிக்கலாம்.

ஆனால் கம்பன் ஒரு புது ரகம் காண்பிக்கிறார். அனுமன் கடல் தாண்ட வேண்டிய தருணம். அனுமன் மனசுலெ என்ன ஓடுது என்பது அவர் கூடவே சுத்திகிட்டு இருக்கும் வானர நண்பர்களுக்குத் தெரியுது..

பூ.. இந்தக் கடல் தானா.. இதையா தாண்ட முடியாது?? இப்படி ஓடுதாம் அனுமன் மனசில்… இதுவும் ஒரு வகை complex தான். Superiority complex என்று சொல்லலாமா??

அதெப்படி முடியும். சாதாரன நபராக இருக்கும் ஒருவர் திடீரென ஒரு மந்திரியின் உதவியாளர் ஆகிவிட்டால், அவரோட நடவடிக்கைகள், எண்ணங்கள் எல்லாம் எவ்வளவு மாற்றங்கள் ஏற்படுது?? அப்பொ ராமர் கிட்டெ நட்பு பழகியவர் கொஞ்சம் மனசுக்குள் காம்ப்ளெக்ஸ் வரத்தான் செய்யும்.

ஆனால் கம்பரோ அப்படி வரப்படாது என்கிறார். சந்தானம் எப்போதும் சொல்லும் advice போல் எடுத்துச் சொல்கிறார்கள் அனுமனின் நண்பர்கள். உன்னோட தோள்கள் என்னவோ மலை மாதிரி இருக்கு. வெற்றி மாலையும் இப்பொவே போட்டுட்டே.. ஆனா மனசுலெ மட்டும் குள்ளமுனி அகத்தியரே குடிச்ச கடல் தானேன்னு நினைக்கிறே அதெ மட்டும் மாத்திக்கோயேன்.. என்றனர் அந்தக் கால சந்தானங்கள்.

குறுமுனி குடித்த வேலை குப்புறும் கொள்கைத்து ஆதல்
வெறுவிது விசயம் வைகும் விலங்கல் தோள் அலங்கல் வீர
சிறிது இது என்று இகழற்பாலை அல்லை நீ சேறி என்னா
உறு வலித் துணைவர் சொன்னார்; ஒருப்பட்டான் பொருப்பை ஒப்பான்.

அதுசரி.. இப்படி கம்பராமாயணம் பத்தி எழுதுறேனே.. என்ன நெனைச்சி எழுதுறேன்.. படிக்கமாட்டாங்கன்னு இல்லை… படிச்சா நல்லா இருக்குமே.. இந்த நெனைப்பு தான்.