உறவுக்குப் பாலம் அமைக்க வேண்டும்.
சமீபத்தில் உலா வரும் வாட்ஸ் அப் பட ஜோக்:
”அழகு என் கூடவே பிறந்தது”.
“நானும் அதைத்தான் சொல்றேன்… உன்னைவிட உன் தங்கை அழகுதான்”
மைத்துனி அழகானவளாக அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் [உங்க வீட்லெ எப்படி? – இப்படி எடக்கா கேட்டா, ரெண்டுமே அழகுதான் நம் கண்ணுக்கு இது தான் ரொம்ப ஷேஃப்பான பதில். மனைவி கையில் தினம் சாப்பாடும், மச்சினி கையில் எப்போதாவது பிரியாணியும் கெடைக்க வேண்டுமே!]
மைத்துனி அழகு? நட்பு?? தம்பி?? – இப்படி எல்லாம் கலந்த கலவையாக நாம் உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம். கம்பர் இன்ஸ்ட்டிடுயூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டின் முதல்வர் கம்பர் இப்படிச் சொல்கிறார்.
குகன் ஒரு வனவாசி. ஆதிவாசி. அந்தமான் ஆதிவாசி மாதிரி அல்ல. நல்ல நாகரீகமடைந்த ஆதிவாசி. இராமனுக்கு அந்த குகனை ரொம்பவே பிடித்து விடுகிறது.
கங்கையினைக் கடக்கும் போது இராமன் சொன்னாராம், “ என் தம்பி, இனி உன் தம்பி; நீ எனக்குத் தோழன்; சீதை உனக்கு மைத்துனி” இப்படிச் சொல்லி திருமதி குகனை மைத்துனி ஆக்கினாராம். சீதை வனவாசத்தில் இருந்த போது இதெல்லாம் நினைந்து வருந்தினாராம்
நமக்குத் தேவையான சங்கதி: உறவுகளை பல்வேறு வழிகளில் வளர்ப்போம். தம்பியாய், தோழனாய், வீட்டுக்காரியின் சகோதரியாயும் நாம் உறவுகளுக்குப் பாலம் அமைப்போம்.
இதோ கம்பரின் வரிகள்:
ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி நீ
தோழன் மங்கை கொழுந்தி எனச் சொன்ன
வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.
வம்பன் பார்வைகள் தொடரும்
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.