அந்தக் கொசு செத்துப் போச்சா?


thampi raamaiyaa

சில சினிமாப் படங்கள் பாத்துட்டு வந்தா ஜம்முன்னு சில டயலாக் அல்லது பாட்டு மனசுலெ நிக்கும். (சில பேத்துக்கு சில நாயகிகள் ஜில்லுன்னு பல நேரங்களில் மனசிலெ நிக்கலாம்) ஆனால் முக்கியமானது  ஒன்று… தியேட்டரில் மட்டும் படம் பாத்துட்டு திரும்பணும். அப்பொத்தான் இந்த அனுபவங்தை உங்களால் உணர முடியும். வீட்டிலெ உக்காந்துட்டு திருட்டு வீசீடி பாத்தா எந்த எஃபெக்டும் வராது. படம் இன்னுமா பாக்கலை? என்று ரொம்ப கேவலமான பார்வையை வேண்டுமானால் இது தடுக்கலாம்.

சமீபத்தில் அந்தமான் தலைநகராம் போர்ட்பிளேயரில் இப்படி ஒரு படம் பாத்து வந்த நிம்மதி கிடைத்தது. புதிதாய் கட்டியுள்ள நவீன தியேட்டர் அது. பாத்த படம் தனி ஒருவன். (தனியா இல்லீங்கோ. குடும்பத்துடன் பார்த்த முதல் படமும் இது தான்). படம் என்னவோ நல்ல சிந்தனையை தூண்டும் செய்தியில் தொடங்கினாலும், படம் பலப்பல அதிரடி ஹைடெக்குகள் சுமந்து வந்தாலும், நல்ல இசையில் பாடல் வரிகள் கவர்ந்தாலும், அனைத்து மகளிருக்கும் மனதிலெயாவது எதிர்பார்க்கும் வரனாய் (ஒரு காலத்தில்) விளங்கிய அரவிந்தசாமி வில்லனாய் கலக்கினாலும் சரி, மனசிலெ கடைசியிலெ என்னவோ அந்த “கடைசியிலெ அந்தக் கொசு செத்துப் போச்சா?” என்ற டயலாக் தான் மனசுலெ நின்னது.

ஒரு வேளை அந்த ”தம்பி ராமையா” யாவின் அப்பாவித்தனம் தான் கதையின் மூலக்கருவோ? (நீங்க படம் பாரக்கலையா? அப்பொ புரியாது?) அப்பாவியாய் இருத்தல் என்பது ஒரு இயல்பு. குழந்தைகளிடம் தான் அந்த இயல்பு இருக்கும். வளர்ந்த பின்னர், அறிவு(??) என்னவோ வளர்ந்து விட்டதாய் நினைத்துக் கொண்டு, நாம் இயல்பிலிருந்து விலகி விடுகின்றோம். படத்திலும் சரி, நிஜ வாழ்க்கையிலும் சரி, அப்பாவியாய் இருந்து விட்டால் மகிழ்வாய் வாழ்வினைக் கடத்தி விடலாம். மகிழ்ச்சியாக வாழ்வது தான் வாழ்க்கையின் லட்சியம்னு நானு நெனைக்கிறேன். இதெ மிஞ்சி ஏதாவது இருந்தா கொஞ்சம் சொல்லுங்கலேன். சந்தோஷமாக் கேக்போமெ! (நல்லா கவனிங்க. சந்தோஷமா…)

நேத்து ஜன்மாஷ்டமி கொண்டாட்டம் தொடர்பான விழாவில் பேச எனக்கும் கையில் மைக் கிடைத்தது. 100 நபர்களை அடக்கிய கூட்டம் கொள்ளும் அளவிலான கோவில் தான். அதில் 80 வரையிலும் குழந்தைகள் மாணவர்கள் இப்படித்தான். நான் உடபட இன்னொரு பேராசிரியர், ஒரு விஞ்ஞானி இப்படி மூவர் பேசிட ஏற்பாடு. (அபதுல் கலாமுக்குபின்னர் சைண்டிஸ்ட் என்று அறிமுகம் செய்த போதே கைதட்டல் பறந்தது. என் கையில் சோதனை முயல்வாய் மைக் தரப்பட்டு களத்தில் இறக்கப்பட்டேன். அப்பாவியாய்…  அவர்களே, இவர்களே.. என்று ஹிந்தியில் தொடங்கி, பின்னர் அனைவருக்கும் ஜென்மாஷடமி வாழ்த்தும் சொல்லியாச்சி. யாரும் கேக்கிற மாதிரியே இல்லெ நம்ம பேச்செ.

வந்த கூட்டம் மொத்தமுமே, போட்டிகளில் கலந்து கொண்டவர்கள். இன்னும் கலந்து கொள்ள இருப்பவர்கள். அவர்களின் பெற்றோர். இவ்வளவு தான் என்பது அப்போது தான் உரைத்தது. யாரும் யாருடைய பேச்சையும் கேக்க வரவில்லை என்பது புரிஞ்சது. (எல்லாமே நமக்கு மட்டும் ஏன் லேட்டாவே புரியுது?) எல்லாருடைய கவனம் முழுதும் பரிசு யாருக்கு கிடைக்கும்? ஆளுக்காள் நம்க்கும் கிடைக்காதா? என்ற ஆவலில் இருப்பதும் புரிந்தது.

sara sara

நிலைமையை சீராக்க ”ஒரு கதை சொல்லட்டுமா?” என்று கேட்டேன். சட்டென்று “ஓ” என்று பதில் வந்தது. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதும், கல்லூரியில் படித்த போதும், இல்லெ இல்லெ.. இருந்த போதும், இது மாதிரியான கேள்விக்கு ”வேண்டாம்” என்று விரட்டி அடித்து எல்லாமும் கூட ஏனோ, தேவையில்லாமல் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு இஞ்ஜினியர் ஆறாவது மாடியில் உள்ளார். உதவியாளர் கீழ் தளத்தில் உள்ளார். அவரை அழைக்க வேண்டும். கதை சொல்ல ஆரம்பித்தேன். எப்படி கூப்பிட? சொல்லுங்களேன்… என்றேன். ”மைக் தான் கையில் இருக்கே” என்றும், ”மைபைல் என்னாச்சி?” என்றும் நம்மை உண்டு இல்லை என ஆக்கினாலும், கதையால் ஆடியன்ஸ் கட்டுக்குள் வந்தது அப்பாடா என்று ஆனது. இன்னொரு கதையும் சொல்லி அன்று முடித்தேன்

கல்லூரிப் பேராசிரியரே, ”எப்படியோ பசங்களை சமாளிச்சிப் பேசிட்டீங்க..” என்று சொன்னது மிகப் பெரிய பரிசாய்ப் பட்டது அந்த ஆசிரியர் தின நாளில். அமர்ந்தேன் அப்பாவியான முகத்தோடு. (இருக்கிற முகம் தானே இருக்கும். அதுக்காக கமல் மாதிரி மொகத்தெ மாத்திட்டு வர முடியுமா என்ன?).

”அடப்பாவி… அப்பாவி, பாமரன், சாமான்யன் இன்னும் எத்தனெ பேரு தான் இருக்கு?” அசரீரியாய் கேள்வி வந்தது.

திரும்பி யாரென்று பார்த்தால், அட… நம்ம டிகிரி தோஸ்த் கம்பர்.

”ஹாய்” என்று அப்படியே, ”ராமாயணத்திலெ இப்படி ஒரு அப்பாவி கேரக்டெர் உங்க பார்வையில் யாரு? சொல்லுங்களேன்” என்றேன்.

appavi kulandai

“நூத்துக்கணக்கான வருஷங்களா, பட்டிமன்றங்கள் நடத்தி விடை சொல்ல முடியாத எத்தனையோ கேள்விகள் இருக்கு. இதுவும் இதில் ஒன்று. சத்ருக்கணன், ஊர்மிளா, மண்டோதரி, திரிசடை இப்படி பட்டியல் தொடரும்.” pபதில் சொல்லிட்டு பறந்தார் கம்பர். அப்பப்பொ நமக்கு இப்படி டிப்ஸ் சொல்லிட்டு மறைவது பழக்கம் தானே

பரதனைப் பத்தி யோசிச்சேன். பதவி தலைக்கு வந்தாலும் கூட வேண்டாம் என்று உதறியது. அப்புறம் தான் ஆளாமல் பாதகை வைத்தே ஆண்டது. 14 ஆண்டுக்குள் வரலைன்னா, தீக்குள் இறங்க முயன்றது… அப்பா..அப்பப்பா. யுத்த காண்டத்து மிட்சிப் படலத்தில் பரதனது அப்பாவித்தனம் காட்சி கம்பன் வரியில் பாக்கலாம்.

இராவணவதம் முடிந்து, அக்னிப்பிரவேஷம் முடிந்த பின்னர் திரும்புகின்றனர் மகிழ்வோடு. மனைவி கிடைத்த மகிழ்ச்சியில் பரதன் பற்றிய நினைவு கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாமோ. பதைத்துப் போகிறார் ராமர். நெட்வொர்க், இமெயில் எல்லாம் இல்லாத காலம். அனுமனிடம் தான் தூது சொல்லி அனுப்பப்படுகிறது. தூது சொல்ல தோதா ஒரு ஆளு கெடெச்சா எவ்வளவு சௌகரியமாப் போச்சி? பறந்து வருகிறார் பரதனிடம் தகவல் சொல்ல அனுமன். அப்பாவியாய், ”இம்புட்டு குட்டியூண்டு குரங்கு ஒதவி செஞ்சதா சொல்லுதே, இதெல்லாம் கேக்க நல்லாவா இருக்கு?” என்று நினைக்கிறார். (கம்பர் சொன்னாரா என்று கேட்க வேண்டாம்) இந்தப் பாட்டெப் படிச்சாப் புரிஞ்சிக்கலாம்.

ஈங்கு நின்று யாம் உனக்கிசைத்த மாற்றம் அத்
தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர
ஓங்கல ஆதலின் உவப்பு இல் யாக்கையை
வாங்குதி விரைந்து என மன்னன் வேண்டினான்.

பரதன் நம்ப ஏதுவாய் தன் வடிவைப் பெரிதாக்கிக் காட்டுகின்றான் அனுமன். அப்புறம் பரதன் ஏதோ சொல்ல, அது அனுமன் காதுக்கு ஏறவில்லையாம். (அவ்வளவு உயரம் காரணமாய்) ஐயா கொஞ்சம் சிறு உடம்புக்கு வாங்க, காதுலெ வாங்க என பரதன் அழைத்ததாய் கம்பன் வரைந்ததை படிக்க நான் அழைக்கிறேன்.

என்ன இப்பொ நான் சொல்றது உங்க காதுலெ ஏறுதா?