மோட்டிவேஷன் ரொம்ப முக்கியம்


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 88
(18-06-2019)

சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, ஒரு பிரபலமான வங்கியிலிருந்து. வழக்கமா வங்கியிலிருந்து கால் என்றாலே உடம்பெல்லாம் சூடாகும். இது அப்புடி இல்லாமல் இருந்தது. அந்த வங்கியிலிருந்து கடன் வாங்கிய நபர்களை அழைத்து, அவர்களை முதலாளி ஆக்கும் பயிற்சி நடத்துகிறார்களாம். Achivement & Motivation பற்றி வகுப்பு எடுக்க வந்த அழைப்பு தான் அது. (ஆமா தெரியாமத்தான் கேக்குறேன், ஊர் ஒலகத்திலெ ஆளா இல்லெ? என்னெ ஏன் இதுலெ எல்லாம் கோத்து விட்றானுங்க? அதான் எனக்கும் புரியலை)

வங்கிக்குச் சென்று மொதொ வேலையா, அந்த சம்பந்தப்பட்ட ஆட்களை பிடிச்சிக் கேட்டேன். என்னை இதில் கோத்து விட்ட புன்னியவான் யார்? என்று. என் நண்பன் பெயர் சொன்னார். (படுபாவி நண்பனா அவன்? ) ”மற்றபடி உங்களெப்பத்தி ஏதும் தெரியாது. நீங்க வந்த வேலெயெப் பாருங்க”  என்றார் கடமையே கண்ணாக.

புதுசு புதுசாய் நம்மளெ(யும் நம்பி) கூப்பிட்டு கிளாஸ் எடுக்கச் சொன்னா, முதலில் கேட்பது காலை நேரமாய்க் குடுங்க என்பது தான். இங்கும் அப்படித்தான். ஆனால் அரசு அலுவல் சதி செய்து மதியம் 2 மணிக்கு கொண்டு சென்று விட்டது. மத்தவங்களெ விடுங்க. எனக்கே தூக்க கலக்கம் இருந்தது. (பின்னே… வீட்டில் நண்டுக் கறி எல்லாம் சாப்பிட்டு வகுப்பெடுக்கப் போனா, தூக்கம் வராமெ என்ன செய்யும்?)

எப்ப பயிற்சி வகுப்புக்குப் போனாலும், லேப்டாப்பும் கையுமா போகும் ஆள் அன்னெக்கி சும்மா போயிட்டேன் கையெ வீசிட்டு. ஆனாலும் பழக்க தோசத்தில் பாயிண்டர் கையோட இருந்திச்சி. பின்புறத்திலிருந்து, ”சாரி சார்.. ஒரு கேபிள் லயனில் சப்ளை வரலை. புரஜெக்டர் எல்லாம் வேலை செய்யாது. நீங்க எப்படியோ பேசியே சமாளிங்க ப்ளீஸ்” ஹிந்தியில் கொஞ்சியது. (அடெ சந்தேகமா பாக்காதீங்க, ஆம்பளெக் குரல் தான் அது).

விதி வலியது பாத்தீயளா? தூக்கம் வரும் நேரம்; படமும் காட்ட முடியாது; நேரமும் மாறிப்போச்சி. இப்படி நீங்க நெனெச்சது எல்லாமெ நடக்காமெ ஆரம்பிப்பது தான் எல்லா வியாபாரமும். உங்களெ தூங்க விடாமெ நான் முதலில் ஜெயிக்கணும். நீங்களும் ஆரம்பிக்க இருக்கும் வியாபாரமும் ஜெயிக்கணும். இப்படி ஆரம்பிக்க, லேசாக சூடு பிடிக்க ஆரம்பித்தது. வந்தவர்களில் டூர் ஆப்பரேட்டர் ஆகவும், கடை வைக்கவும் நம்பி கடன் கொடுத்திருந்தது அந்த பேங்க். ஒரு நல்ல கடை எப்படி இருக்கணும், ஒரு மோசமான டூர் ஆப்பரேட்டராய் எப்படி இல்லாமெ இருப்பது இப்படியே போனது.

நடுவில் ஒரு பெண்குட்டி எழுந்து, நானு பியூட்டி பார்லர் வைக்கப் போறேன் என்றது பெங்காளியில் (ஹிந்தி என நினைத்து). நானும் பலமுறை ஒரு பியூட்டி பார்லர் போய் பாக்கணும் என நினைத்ததுண்டு. (பஞ்ச தந்திரம் படத்தில் பாத்தது தான்) .. சே, ஒரு வியாபார நுணுக்கம் கூட சொல்ல முடியாமெ போச்சே…ஆனா அவங்க நல்ல கலையான முகம். (அழகாகவும் இருந்தாங்க – என்று நான் சொன்னதை யாரு என் இனிய பாதியிடம் போட்டுக் குடுத்திடாதீங்க)

கொடுக்கப்பட்ட நேரத்தில் தாமஸ் ஆல்வா எடிசன், லிங்கன், கலாம், மேரீ கியூரி என்று எல்லாம் கோர்க்காமல், அந்தமானில் சின்ன சின்ன வியாபாரிகளாய் ஆரம்பித்து, இன்று உச்சியில் நிற்பவர்கள் பற்றி தகவல் சொன்னது நச்சுண்ணு எடுபட்டது.

ஒரு வாரம் கழித்து,  அதே வங்கிடமிருந்து மீண்டும் கால். ”சார் 10 நாள் புரோகிராமில் உங்களது தான் டாப். அடுத்த வாரம் நடக்கும் பயிற்சி வகுப்புக்கும் ஒரு கிளாஸ் எடுக்க இயலுமா?” தமிழ் குரல் ஹிந்தியது. அப்பொ நம்ம வகுப்பு   ஜெயித்த மாதிரி தான் தோன்றியது.   வீட்டிக்குப் போய் காலரைத் தூக்கி, ”ஐயா கிளாஸ் தான் டாப் தெரியுமா?” என்றேன் இல்லாளிடம். “அவெய்ங்க எல்லாரிட்டெயும் இதெச் சொல்லித் தான் கூப்பிட்டிருப்பாய்ங்க” – என்ன ஒரு அழுத்தமான் அனுபவ வரிகள். நாம இப்படி யோசிக்கலீயே?

”என்ன கிட்டப்பா… செமெ பல்பு போலிருக்கு?” கம்பன் உதயமானார்.

”சும்மா இருங்க சாமி… Learning is the Continuous Process… என கம்பர் கிட்டேயே வகுப்பெடுத்தேன்.. இடை மறித்தார்… இதெல்லாம் சொல்வதற்க்கு ஈஸியாத்தான் இருக்கும். ஆனால் கடைபிடிக்கக் கஷ்டமானவை. ராமன் கடைபிடிக்கும் நல்லொழுக்கம் போல்.

எனக்கு தலை சுத்தியது. நாம ஏதோ இராமன் ஜாலியா உலா வருகிறார் என்று தானே நினைத்தோம். கம்பர் வைக்கிறார் பாருங்க ட்விஸ்ட், ராமரைப் பத்தி. எப்போ தெரியுமா? அந்தமானில் இப்பொ கொட்டும் மழை, கிஷ்கிந்தாவில் கொட்டும் நேரம், ”ஒரு நாலு மாசம் கழித்து வா” என்று சொன்ன  ராமரை கம்பன் இப்படி சொல்றார். சொல்வதற்கு எளியதாயும் மேற்கொள்வதற்கு அரியதாயும் இருக்குமாம் நல்லொழுக்கம். ஆனா இராமருக்கு இதெல்லாம் ஜுஜுபியாம்.

ஆமா… நாம இப்படி டிரைனிங் கிளாஸ் எல்லாம் எடுக்கப் போவது நம்ம கம்பருக்கு எப்படி தெரிந்தது?

அது ஒரு பக்கம் கெடக்கட்டும். வாங்க வாங்க அப்புடியே கம்பர் பாட்டும் பாத்திடலாமே?

அரசியற்குரிய யாவும் ஆற்றுழி ஆற்றி ஆன்ற
திரைசெயற்கிரிய சேனைக் கடலொடும் திங்கள் நான்கின்
விரசுக என்பால் நின்னைவேண்டினென் வீர என்றான்
உரைசெயற்கு எளிதும் ஆகி அரிதுமாய் ஒழுக்கில் நின்றான்

[கிட்கிந்தா காண்டம்; அரசியற் படலம்]

[”(சுக்ரீவனைப் பார்த்து) வீரனே, அரசுக்கு உரிய செயல்களை எல்லாம் செய்ய வேண்டிய முறைப்படி செய்துபெரிய அலைகள் வீசும் கடல் போன்ற படையுடனே நான்கு மாதம் கழிந்து என்னிடம் வருவாயாக! என்றான், சொல்வதற்கு எளிதாயும் மேற்கொள்வதற்கு அரியதாயும் உள்ள நல்லஒழுக்கத்தில் நிற்கும் இராமன்]


வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.