எந்திரிங்கோ.. எந்திருங்கோ…


தெனாலி என்று ஒரு கலக்கல் காமெடி படம். இதில் கமல் ஓர் ஈழத்து இளைஞரா வந்து கலக்குவார். நடிப்பிலும் இலங்கைத் தமிழிலும். இலங்கை வானொலி அறிவிப்பாளர்  அப்துல்ஹமீது  தான் பயிற்சியாளராம். அதில் எஞ்சிருங்கோ..எஞ்சிருங்கோ என்றால் நம்மூர், என்னங்க என்பதின் ஈழத்து வடிவாம்.. (வடிவு என்றால் அழகு… அப்போ வடிவுக்கரசி??? அவங்களும் ஒரு காலத்தில் ஹீரோயின் தான்.) இங்கே நான் சொல்ல வந்தது, எந்திரிங்கோ பத்தி.. 

 

ஊரெங்கும் எழுப்புதல் கூட்டம் என்று அடிக்கடி நடக்கிறது…அப்போ பகலில் கூடவா தூங்கறாங்க… யாரையோ.. எதற்கோ… தட்டி எழுப்பும் கூட்டம் அது..

 

கனவு காணுங்கள் என்றார் நம் கலாமய்யா… நம்மாள் கேக்கிறான்.. தூங்கினாத்தானே கனவு வரும்…ஆபீஸ், கிளாஸ்ரூம் இதிலே தூங்கிடவா??? என்ன செய்ய?? ஆயிரம் கலாம் வந்தாலும் அறியாமையில் தூங்கும் இப்பேற்பட்ட ஆட்களை எழுப்ப முடியுமா??

 

ரொம்ப குடுத்து வைச்ச ஆசாமி.. எங்கே படுத்தாளும் தூங்கிடுவார் என்று எனக்கு ஒரு நல்ல பேர் உண்டு. ஆனால் எழுப்புதல் சிரமமான காரியம். 

 

அது கிடக்கட்டும்.. இறைவனை எழுப்பும் பாடல்கள் செம பாப்புலர். கௌசல்யா சுப்ரஜா ஆகட்டும், திருப்பாவை திருவெம்பாவை ஆகட்டும்.

 

சிறுவயதில்… மார்கழியில் அதிகாலை எழுவது மட்டும் ஏதோ எனக்கு பிடிக்காத காரியம். அதிலும் குளிரும் போது போத்திப் படுப்பதில் சுகமே சுகம்….அலாதி சுகம். ஒரு முறை நான் எழுந்து கோவிலுக்கு போய் வந்து விட்டேன். எல்லாருக்கும் ஆச்சரியம்.. எப்படி? என்று.. நானும் சாட்சிக்கு உலர்த்திக் காய வைத்திருக்கும் துண்டு & ஜட்டியினை காட்டினேன். எல்லாரும் நம்பிவிட்டார்கள். குளிருக்குப் பயந்து குளிக்காமல், அவைகளை மட்டும் நனைத்துக் காயப் போட்டு விட்டு கோவிலுக்கு போனேன் என்பதை என் பையனிடம் ஜாலியான நேரத்தில் ரொம்ப வருஷம் கழித்து உளறிவிட்டேன். அதை அப்படியே என் அம்மாவிடம் போட்டும் கொடுத்து விட்டான்.

 

ஒரு நாள் என் பையன் கேட்டான்… ஏன் இந்த IT ஆட்கள் ராவெல்லம் முழிக்கனும்? என்று. நான் சொன்னேன், இங்கே இரவு… அமெரிக்காவில் பகல்..அதான் நாம் அவர்கள் பகலுக்காக இந்தியாவில் ராவெல்லாம் முழிக்கிறோம்.  அவன் கேள்வி தொடர்ந்தது.. எப்போ அவங்க நம்ம பகலுக்காக ராத்திரி முழிப்பாங்க?? நான் பதில் தெரியாமல் முழித்தேன்.. 2020 என்று பதிலும் பையன் சொன்னான்…

 

கலாமய்யாவிடம் ஒரு பத்து நிமிடம் அந்தமான் வந்தபோது பேசி இருக்கிறான்… வருங்காலம் யோசிக்குது..

 

தூங்குறது இருக்கட்டும்… எழுப்பும் கலை பற்றி யோசிக்கலாமா??? தூங்கும் ஆளை எப்படி எழுப்ப?? தூங்கும் ஆளை எழுப்பலாம்…தூங்குவது  மாதிரி நடிப்பவனை எழுப்புவது கஷ்டம். (இதை எந்த வாய் சண்டையின் கிளைமாக்சிலும் தவறாமல் கேக்கலாம்)

 

ஹஜாரே போர் ராம்லீலா மைதானத்தில் நடந்து கொண்டிருந்த போது அரசியல் வாதிகளின் முகத்தில் கவலை ரேகைகள். இங்கும் அரசு வட்டாரத்த்லும் சோகமோ சோகம்… எனக்கு ஒர் பழைய படத்தில் வில்லன் வீரப்பா பேசிய  டயலாக் ஞாபகம் வந்தது. … தூங்குறவனை தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும் கொடுத்து தலையையும் நீட்ட சொல்கிறான்…

 

இது ஒரு பக்கம் இருக்கட்டும்…

 

நான் சிறு வயதில் செய்த சேட்டைகளை என்பையன் இப்போ செய்கிறான். அவனை எழுப்புவது மிகவும் சிரமமான காரியம். அவங்க அம்மா பொறுமை தன் லெவல் மீறி கத்தினால் தான் எந்திரிப்பான். ஆனா… அவனுக்குப் பிடிச்ச பொம்மை ஹெலிகாப்டரை ஓட விட்டு அந்த சத்தம் மட்டும் கேட்டால் போதும் எழுந்து விடுவான்.. (ஆமா..அதுக்கு 500 செலவு & அடிக்கடி பேட்டரி வேற மாத்தனும்)

 

சிமெண்ட் மூட்டையை அடுக்கி வெளியே எடுக்கும் போது..FIFO (First In First Out)  என்பதை கையாள வேண்டும் அதே மாதிரி.. 2 மணி நேரத்தும் முன்னால் borading Pass வாங்க போகும் என் மதிரி ஆட்களின் லக்கேஜ் (FILO – First In Last Out )  தான். தூங்கும் போது காது தான் கடைசியில் தூங்கப் போகுமாம். எனவே இந்த FILO முறை எழுப்ப ஏதுவானதாம்.. கண்ட இடத்தில் தட்டி எழுப்பினால் விவரீதங்கள் வருமாம்.. அப்போ எழுப்பும் முறை தான் என்ன?

 

அதுக்கு The School of Sleepalogy க்கு போனா..என்ன??

 

அட.. அங்கே நமக்குத் தெரிஞ்ச பேர் தான்… Dr Kambar அங்கே தான் இருக்கார். விசாரிச்சா போச்சு…

 

எல்லாரும் பிரிஷ்கிருப்சன்லே மருந்து மாத்திரை தருவாங்க…இவர் பாட்டு எழுதி தந்தார்..

 

வாலியின் வதம் முடிஞ்ச கொஞ்ச நாளுக்கு அப்புறம்… சுக்ரீவன் கொஞ்சம் அதிகமா குடிச்சி ஓவர் ஹேங்க்  ஆகிவிட, Govt Office மாதிரி No Response. கோவமா இலக்குவன் வந்து விசாரிக்கிறார். விஷயம் கேள்விப்பட்ட நம்ம ஜுனியர் அங்கதன், சுரீவனை எழுப்புறார்… இதெப் பாத்து எழுப்பும் விதம் கத்துக்குங்க…

 

பொன்போன்ற காலடியை நன்றாகப் பிடித்துக் கொடுத்து தடவி துயில் எழுப்பனுமாம்… இது எப்படி இருக்கு??.. நாளைக்கு ஒரு டிரையல் அவங்கவங்க கணவன்/மனைவியினை இப்படி எழுப்பிப் பருங்களேன்.. (வீட்டிலே சண்டை சச்சரவே இனி இருக்காது.. அதான் காலைப் பிடிப்பது கை வந்த கலையாகிவிடுமே!!!) 

 

போனபின் தாதை கோயில் புக்கு அவன் பொலங் கொள் பாதம்

 

தான் உறப்பற்றி முற்றும் தை வந்து தடக் கைவீர

 

மானவற்கிலையோன் வந்து உன் வாசலின் புறந்தான் சீற்றம்

 

மீன் உயர் வேலை மேலும் பெரிது இது விளைந்தது என்றான்.

 

குடும்ப சிக்கல் தீர தேடல்கள் தொடரும்…

 

ஏ ஜி… ஓ ஜி… 2G…. 3G.


சமீப காலமாய் ஐடியா மொபைல் அறிமுகம் செய்த 3G க்கு தரும் விளம்பரம் பாத்தீங்களா??

No Baby… Only 3G… என்று சொல்கிறது.

அதாவது 3G போன் இருந்தால் மக்கள் தொகை குறையும் என்ற சமூக அக்கறையில் விளம்பரம் வருது. கேக்கவும், பாக்கவும் நல்லாத் தான் இருக்கு. தொட்டில்கள் குறைவதும்.. சென்னை டிராபிக் திடீரென அந்தமான் ரோடு மாதிரி ஆவதும்.. இருந்தா நல்லா இருக்குமோன்னு தோணுது.

அந்தமானில் 3G ஆரம்பித்த புதிதில் சகட்டு மேனிக்கு எல்லாருக்கும் இலவசமாய் வழங்கிவிட்டார்கள்.

ஆனால் யாரும் பயன் படுத்துவதில்லை (நல்ல விஷயங்களுக்கு). சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்யுது.

1. பொய் சொல்வது சிரமம். (சலூனில் இருந்து கொண்டு ஜரூரி மீட்டிங்க் மே ஹு என்று சொல்லித் தானே முதலில் மொபைல் வீட்டிற்குள் நுழைந்தது)

2. எப்போதும் போட்டோவுக்கு தயாரா நாம இருப்பதில்லை.

3. நம்ம முகம் நல்லா தெரிய நாம மொபைலை தள்ளி பிடிக்கனும். அப்போ புளு டூத் அல்லது ஹெட் போன் வச்சிருக்கனும் கூடவே (கங்காரு குட்டியை வச்சிட்டு திரியற மாதிரி). 

4. என்ன தான் 3G வசதி இருந்தாலும் அதை Hide Me என்பதை வைத்து சாதா போனா மாத்திக்கலாம்.

5. உங்களை உங்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ போட்டோ வீடியோ எடுத்துவிடலாம். (வில்லங்கமா பேசினா அம்பேல் தான்).

6. இப்பொத் தான் Skype வீடியோ சாட் என்று தண்ணிபட்ட பாடா இருக்கும் போது, இந்த போனில் முகம் பாத்து பேசும் சங்கதி…எடுபடுமா??

7. எல்லா ஊரிலும், இடத்திலும் 3G வசதி இல்லையே?? பரமக்குடியில் 3G வரும் என்று, நானும் அம்மாவிடம் அந்தமானில் இருந்து பேச காத்திருக்கிறேன்..

சரி மறுபடியும் விளம்பரத்துக்கு வருவோம்… குடும்பக் கட்டுப் பாட்டுக்கு இது உதவுமா?

இப்படிப் பாத்தா அய்யன் வள்ளுவரே அதைப் பத்தி எழுதி இருக்காருன்னு நான் சொல்றேன்.. அதெப்படி கிமூ 2000 வருஷத்துக்கு முன்னாடி குக பத்தி எழுதி இருக்க முடியும்??

நிலத்தின் தாங்கு திறன் (Bearing Capacity) பாத்து தான் பில்டிங்க் கட்டனும். புரியலையே… புரியும் படி சொல்லனும்னா.. “குடி”மக்கள் தங்களின் தாங்கு திறன் பாத்து தான் தண்ணி அடிக்கனும்.

என்ன தான் வண்டி பக்கவா இருந்தாலும் ஒரு மயில் இறகு ஓவர் லோடு ஆனாலும் வண்டி கொடே சாஞ்ச்சிடும். வண்டியே அப்படின்னா??? குடும்பம் மட்டும் அளவுக்கு மீறினா??

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

நாம ஆசை ஆசையா ஒரு மொபைல் வாங்கினா.. அடுத்த பார்வையே… அடுத்தவன் மாடல் என்ன என்று பாக்கத்தான் கண் ஒடும்.

ஒரு பழைய சிவாஜி படம். அதில் சிவாஜிக்கு காலில் பிரச்சினை. சக்கர நாற்காலியில் இருப்பார். கேமிரா அதை முதன் முதலில் காட்டும் போது மற்ற அத்தனை பேரின் கால்களை காட்டும். என்ன ஒரு கேமிரா கோணம் (Angle)??

ஆனா அதற்கு அப்பாற் பட்டவர் நம்ம மஹாத்மா காந்தி. கோட்டு சூட்டு போட்ட ஆட்கள் மத்தியில் கம்பீரமா துண்டு கட்டி பீடு நடை போட்டவர் அவர். அதனால் தான் அவர் மஹாத்மா..

சிலர் பொண்டாட்டி இல்லாத நேரத்தில் மட்டும் ஃபேஸ்புக்கில் வருவதால் ஏழுதுபவர்கள் எல்லாரும் அப்படித்தான் போல் என்று நினைக்கிறார்கள்..

இப்படித்தான் பொண்டாட்டியைக் காணாமனு ஒருத்தர் போயிட்டே இருக்கார். ஒரு சத்தம் கேக்குது. எவ அவ..? என்று திரும்பிப்பாத்தா அங்கே ஒரு அன்னமும் திரும்பிப் பாக்குதாம். அவரு நெனைக்கிறார்.. ஓ..இதுவும் மனைவியைப் பிரிஞ்சதாய் இருக்குமோன்னு பாக்குறார்.

அதுவும் காதலால் ஒன்றினைந்த அன்ன ஜோடி பிரிந்து இருக்காம். உடலும் உயிருமா இருந்த ஜோடியில் உயிர் பிரிஞ்ச மாதிரி பிரிவு அந்த அன்னத்திற்கு. அப்போ ஒரு குளம். அதிலே சில பிகர்கள் குளிக்க வருதாம். அவுக கால் கொலுசு சத்தம் போடுதாம். அது ஆண் அன்னம் காதில் விழுந்து அட.. என் பொஞ்சாதி வந்திட்டாளோன்னு பாத்ததாம்.

இது ராமன் நிலையில் இருந்து கம்பன் பார்க்கும் ஒரு நீர் நிலையின் காட்சி.

இந்த இடத்தை விட்டா அப்புறம் பாட்டு போட முடியாது..

தானுயிர் உறத் தனி தழுவும் பேடையை

ஊனுயிர் பிரிந்தென பிரிந்த ஓதிமம்

வானர மகளிர் தம் வயங்கு நூபுரத்

தேனுகு மழலையைச் செவியின் ஓர்ப்பது. 

அடுத்த பாட்டை கொஞ்சம் பின்னர் எட்டிப் பாப்போம்

புகை நமக்குப் பகையா???


 [முன் குறிப்பு: நான் இன்னமும் புகை பிடிக்கும் கெட்ட பழக்கத்தை ஆரம்பிக்க வில்லை]

புகை பகையா??

இதென்ன கேள்வி? எந்தப் படம் பாத்தாலும், இந்த அறிவுரை தான், நடு நடுவுலே வருதே…??

புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு என்று போட்டே விக்கிறாங்க… Cancer Danger Poison என்கின்ற பெயரிலும் புகைகள் செமையாய் விற்பனை ஆகின்றன. நம்ம ஆட்களுக்கு எது வேண்டாம்ணு சொல்றோமோ அதில் தான் ஈர்ப்பு அதிகம் ஆகும் போலத் தெரியுது…. அதை மறைக்கிறார்களோ அதை திருட்டுத் தனமாய் எட்டிப் பார்ப்பதில் அலாதி சுகம் தான். (எந்த விஷயத்தையும் அளவோடு தான் வச்சிக்கனுமாம்… Advice, ஜாலி, குரூப், போஸ்டிங்க், கிண்டல்,காதலி, சில்மிஷங்கள் etc etc..etc)

அதான் நம்ம பியாரிலாலும் அடிக்கடி வந்து ஒரு நாளைக்கு ஒண்ணு அல்லது ரெண்டுக்கு மேல் போஸ்டிங்க் வேண்டவே வேண்டாம் என்கிறார்.

சொல்ல வந்த ஒரு விஷயத்தெ சொல்லாம ஜவ்வு மாதிரி இழுத்தா… என்ன இது ராமாயணம் மாதிரி இழுக்குறே என்பார்கள்… (அப்போ ராமாயணம் பத்தியே எழுதும் போது இழுவைக்கு குறை இருக்குமா என்ன??)

இழுவை… புகைக்கும் தொடர்பு உள்ளதாம். இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை..இறுதி என்பது சிகரெட் முடியும் வரையா??. உயிர் போகும் வரை – இது தான் அதன் அர்த்தமாய் இருக்கனும்.

ஒரு சட்டைப்பையில் விவேக், சிகரெட் இருப்பதை மோந்து பாத்து… ஐய்யயோ… அந்த சிகரெட்டா… குப்பை லாரி நாத்தம் வருமேடா…. உன் பக்கத்தில் உன் மனைவி எப்படி வருவா?? குழந்தை எப்படி வரும் ? என்பார்.

சிகரெட்டே இப்படி என்றால், இந்த பீடி சுருட்டு ஆகியவைகள் இன்னும் மோசம்.

2000 வாக்கில் லண்டன் BBC தமிழோசையில் டாக்டர் கலாம் அவர்களிடம், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது. லஞ்சம் என்பது காட்டாற்று வெள்ளம். அதை மேலேயே தடுத்து அணைகட்ட வேண்டும். கீழே தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.

எனக்கு ஒரு விஷயம் புரியலை.. இந்த புகையை தடை செய்து விட்டால்… என்ன குடியா முழுகி விடும்??

சர்க்காருக்கு வருவாய் இழப்பு…

அப்போ இதே விட வருமானம் வரும் பல….ன தொழிலை அரசே ஏற்று நடத்தலாமா??? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு.

வினோபாஜீயிடம் சிலர் கேட்டார்களாம், நமது விவசாயிகளும் பணத்துக்குகாகத் தானே உழைக்கிறார்கள்?.. வினோபாவின் பதில் இதோ: பணம் மட்டும் தான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்கள் நெல் கோதுமைக்குப் பதிலாக கஞ்சா தான் பயிர் செய்திருப்பார்கள். அப்படி இல்லையே..

அப்போ Tamil Nadu Agricutural Unversity மாதிரி Tamil Nadu கஞ்சா Unversity தொடங்கி, அதில் நம்ம கஞ்சா கருப்பை விசி ஆக்கியிரலாமா என்ன??

பாக்கப் போனா, புகையினால் அரசுக்கு வரும் வருமானத்தை விட புகை சார்ந்து வரும் நோய்களுக்கு அரசு அதிகம் செலவு செய்கிறது என்பது தான் உண்மை…

இந்த புகை பத்தி சொன்னா நம்ம பகை ஆயிடுவோம்… அவங்க பாட்டுக்கு புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆத்தட்டும்…நம்ம பாட்டுக்கு இதிலே ஏதும் புதுக் கவிதை இருக்குதான்னு தேடலாம். 

இருவிரல்

நடுவில்

திடீரெனத்

தோன்றும்

ஆறாம் விரல்.

சூப்பரா இருக்கில்லே.. ஆனா கூடவே பிறந்த விரல் சுடாது. இந்த ஆறாம் விரல் அல்ப நேரத்துக்கு அப்புறம் சுடும்.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?? கம்பர் ஒரு புகை ஆதரவாளர்… ஒரு புகை இல்லை… நாலு புகைக்கு ஆதரவு தருகிறார்… ஒரு புகையே இவ்வளவு குமட்டும் போது நாலு புகை.. தாங்குமடா பூமி..?? 

நீங்க நினைக்கும் புகை வேறு… கம்பர் நேசிக்கும் புகை வேறு… அறம் பொருள் இன்பம் வீடு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு புகை விரும்பியாம்..

ஒண்ணும் புரியலையே..!!!

வாங்க அப்படியே அயோத்திக்கு ஓப்பன் ஜீப்புலே போவோம்.. அப்பத்தான் எல்லா புகை பத்தியும் உணரலாம்.

 அயோத்தி ஒரே புகை மண்டலமா இருந்ததாம்.

அன்னதானம் செய்யும் பொருட்டு சமையல் செய்து..செய்து..செய்து..அதன் புகை (அறப்புகை)

கரும்பு ஆலையில் இருந்து வரும் வாசம் மிகுந்த  புகை (Admissible pollutant as per the Pollution Control norms) .. இது பொருள் சார்ந்த புகை.

பெண்கள் கூந்தலுக்கு இடும் அகிலின் புகை (சகிலா என்று மாத்தி யோசிக்காதீங்க)..இது இன்பத்தின் புகை

வேள்வியால் உண்டாகும் புகை.. இது தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வீடு சேர உதவும் புகை.

 இப்படி அந்த அயோத்தியே எப்போதும் புகை மண்டலமா இருந்ததாம்..

 அகில் இடும் புகை அட்டில் இடும் புகை

நகில் இன் ஆலை நறும் புகை நான் மறை

புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்

முகிலின் விம்மி முயங்கின எங்கணும்.

 இப்போ சொல்லுங்க. இந்த புகை.. பகையா??

இதில் வரும் அறம் பொருள் இன்பம் வீடு மேட்டர் மட்டும் சுகி சிவம் பேச்சிலிருந்து ஒட்டு கேட்டு சுட்டது.

இழுக்க இழுக்க இன்பம் (கம்ப)ராமாயணம் இறுதிப் பாடல் வரை… இது எனக்கு… உங்களுக்கு எப்படி இருக்கு???

இது தான் உங்க ஊர்ல ஃபுல் பேண்டா??


அந்த 1980களில் மிக பாப்புலரான கவுண்டமனி செந்தில் டயலாக்கில், இந்த ஆஃப் பேண்ட் பத்தின சர்ச்சையும் ஒண்ணு. (இதை விட சுவாரஸ்யமான சமாச்சாரம் … கவுண்டமனி, அப்பாவியாய் மூஞ்சி வைத்து நிக்கும் ஆஃப் பேண்ட் அணிந்த செந்திலிடம் கேக்கும் கேள்வி: “என்னைப் பாத்து ஏண்டா இப்படி கேட்டே?”. அதை கொஞ்சம் விலாவாரியாக எழுதப் போக, சிலர் கண்டிக்க ஆரம்பிச்சிட்டா…. ஒகே..ஒகே.. ரொம்ப நல்ல புள்ளையா மட்டும் எழுதுவோமே..)

என் பையனோட ஸ்கூல் யூனிபார்ம் ஆஃப் பேண்ட் தான் போன வருஷம் வரை. இந்த வருஷம் ஏழாவது போனவுடன் ஃபுல் பேண்டுக்கு வந்துட்டான். அதை போட்டு போகும் போதே ஒரு கம்பீரம் வருதாம். ஏதோ மத்த 6 ம் கிளாஸ் படிக்கும் பசங்களை விட நாம ஒசத்தி என்ற feelig வருது என்கிறான். (சந்தடி சாக்கில் இன்னும் ஒரு  நன்மை இருப்பதையும் சொன்னான்… நீங்க ஒரு நாள் அவசரத்தில் ரெண்டு காலில் வேற வேற மாடல் சாக்ஸ் மாட்டி விட்டீங்க..ஆனா அது இந்த ஃபுல் பேண்ட் போட்டதால் தெரியாமலே போச்சி.. தப்பிச்சேன் என்றான்.)

அரைக்கை சட்டையை விட முழுக்கை சட்டை ஒரு கம்பீரம் தரும். செமினார்களில் பெரும்பாலும் முழுக்கை சட்டை தான் அணிந்து வருகிறார்கள்…. கேப்பவர்கள் இல்லை…படம் காட்டவும் பாடம் நடத்தவும் வருபவர்கள் தான் இப்படி வருகிறார்கள். ஆனால் டி வி செய்திகளை உற்றுப் பார்த்தால் பெரிய பதவி வகிக்கும் அதிகாரிகள் இந்த முழுக்கை சட்டை அணிவதில்லை அல்லது இன் செய்வதுமில்லை..(ஒரு வேளை தொந்தி கொஞ்சம் தூக்கலாத் தெரியும் என்கிற காரணமாய் இருக்குமோ??)

எப்படியோ இந்த இன் செய்யும் கலை யூத் என்பதையும்… நெட்டில் போஸ்ட்   செய்யும் ISO தரமான நபர என்பதையும் நிரூபிக்க உதவுது.

இதைத்தான் அந்தக் கால கவுண்டமணி வாயில் வருது..: வர்ரப்போ… ஆஃப் பேண்ட் போட்டு வந்தான்..இப்போ ஃபுல் பேண்ட் போட ஆரம்பிச்சுட்டான்..இனி இன் பண்ணியிருவாண்டா….

 இது தான் வளர்ச்சியின் உருமாற்றங்கள்..

நான் முழுக்கை சட்டை போட்டு இன் செய்ய ஆரம்பித்தது ஒரு எதிர் பாராத விபத்து.

ஒரு முறை (1987 என்று ஞாபகம்) ஒரு நண்பரைப் (நாதம் ரஃபீக்) பாக்க Long Island சென்றிருந்தேன். (பேரு தான் Long Island… அது மிகவும் சின்ன தீவு தான்). அவரைப் பாத்துட்டு அன்றே திரும்ப ஏற்பாடு. ஆனால் நண்பரும் அவரின் பக்கத்து வீட்டு ஆண்டியும் அவரின் துறுருதுறு மகளும் (அண்ணா அண்ணா என்று மூச்சுக்கு முன்னூறு தரம் அழைத்ததும்) கேட்டு ஒரு நாள் தங்க வேண்டியதாய் விட்டது.

மாற்றுத்துணி கைவசம் இல்லை. நண்பன்டா என்று துணி குடுத்தான். (தோள் குடுப்பவன் மட்டுமே தோழன் இல்லை. துணி குடுப்பவனும் தோழன் தான்.)

கைவசம் வந்து சேர்ந்த சட்டை முழுக்கை சட்டை. நான் அதுவரை அப்படி சட்டை போட்டதே இல்லை. ஏதோ மனீஷா கொய்ராலா அழகான ராட்சஷியே பாட்டுக்குள் நிக்கிற மாதிரி ஒரு feeling. என் உடம்புக்கு கொஞ்சம் தொள தொள ஆகி விட்டது.. எப்படி சமாளிக்க.. அட்வைஸ் வந்தது…. இன் செய் மாமூ என்று..

அட..அதுக்கு பெல்ட் வேணுமே??? சட்டை தருபவன் பெல்ட் தரமாட்டேனா??? பதில் வந்தது.

அன்று முதல் இன்று வரை முழுக்கை இன் செய்து பெல்ட் போடும் executive  கலாச்சாரம் தொடர்கிறது. ஒரு தொள தொள சட்டை ஓசியில் போட்டதுக்கு இவ்வளவு பில்டப்பான்னு சண்டைக்கு வராதீங்க..

போன வருடம் என் அம்மா, மாமா, அத்தை (மமி) ஆகியோருடன் அந்தமான் வந்தார்கள். இதுவரை அவர்கள் விமானத்தை வானத்தில் அன்னாந்து தான் பாத்தவர்கள். அவர்களை விமானத்தில் பறந்து வர வைக்கணும் என்ற என் ஆசை. எல்லாம் கூடியது அப்போது.

அடுத்த முறை பரமக்குடிக்கு சென்ற போது அந்தமான் எப்படி? என்று கேட்டேன். அத்தை தந்த பதில்: எல்லாம் நல்லா இருந்தது.. அங்கே ஏன் எல்லாரும் செந்தில் டிரௌசர் போட்டு சுத்துறாங்க???

அடப்பாவமே…அப்பத்தான் உறைக்குது.. நானும் மத்த, நான் அழைத்து சென்ற நண்பர்கள் வீடுகளிலும் அவர்கள் இந்த பெர்முடாஸ் தான் போட்டிருந்தார்கள்… இதை பரமக்குடியில் செந்தில் டிரவ்ஸர் என்று பேர் குடுத்திருப்பது எனக்கு எப்படி தெரியும்?? (வருஷத்துக்கு ஒரு வாரம் மட்டுமே ஊரில் இருந்தா.. இதெல்லாம் எப்படி தெரியும்???)

தொடைகள் தெரிய பெர்முடாஸ் போடுவது மகளிருக்கு பிடிப்பதில்லை என்பது மகளிரின் தாழ்மையான கருத்தாம். – இது என் மனைவியின் கருத்து. ஆனா ரம்பா தொடை அழகை விவரிச்சி எழுதுற ஆட்கள் ரம்பாலீலா மைதானுக்கு வாங்கன்னு சொல்லிப் பாருங்க…கூட்டம் அலை மோதும்.

பெர்முடாஸ் அணிவது அவ்வளவு மோசமானதா??… அப்படியே கொஞ்சம் யோசித்தேன்..

உங்க ஊகம் சரிதான்… இப்போ நேரே கம்பராமாயணம் தான் போறேன்..

அடே.. அங்கும் ஒரு அந்தமான் மாதிரி காடு.. அதில் ஒருத்தன் பெர்முடாஸ் போட்டு நிக்கிறானாம்… ஐயா… நான் சொல்லலை..  ராமாயணம் மேலே சத்தியமா சொல்றேன்… கம்பரே சொல்றார்….

அங்கேயும் தொடை தெரியும் உடை..

Echo Sounder  போன்ற கருவிகள் இல்லாமலேயே தண்ணியின் ஆழத்தை கண்டு பிடிப்பவனாம் அவன். (பெண்களின் மனதின் ஆழத்தை அளக்கும் கருவி தெரிந்தால் உடன் விவேக்குக்கு சொல்லவும்).

பெர்முடாஸ் கலர் சிவப்பாம். அவன் தோலுக்கு மேட்சிங்காக…இடுப்புல புலி வால் தான் பெல்ட்டாம்..

இந்த மாதிரி காஸ்டியூம்லே எண்ட்ரி தரும் ஹீரோ எவன்?

 யார் அவன்..?? அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்… அவன் தான் குகன்…

 காழம் இட்ட குறங்கினன் கங்கையின்

ஆழமிட்ட நெடுமையினான் அரை

தாழ விட்ட செந் தோலன் தயங்குறச்

சூழ விட்ட தொடு புலி வாலினான்.

காழகம் – ஆஃப் டிராயர்  என்று உரையாசிரியர் எழுதி வைக்க எனக்கு ஒரு போஸ்டிங்க் போட வசதியாப் போச்சி..

 இன்னும் ஏதாவது சிக்குமா பாக்குறேன்..

பார்த்த முதல் நாளே…


சமீப காலத்தில் வந்த திரைப் பாடலகளிலேயே அன்பையும் காதலையும் இழைத்து இழைத்துப் பாடிய ஒரு பாடல் எது என்று கேட்டால்…தயங்காமல் “பார்த்த முதல் நாளே..” என்ற பாடலைச் சுட்டிக் காட்டலாம். அவ்வளவு அர்த்தம்.. மெலோடி எல்லாம் அதில் இருக்கிறது. இசையும் அதற்கு தோதாக ஒத்து ஊதுகிறது (அதானே இசையின் வேலையே)

 ஆனால் பார்த்த முதல் நாளே மிரண்டு போய்… காஃபியில் சக்கரை போடாலையா???….பரவா இல்லை பொண்ணே ஸ்வீட்டா இருக்கா என்று ஜொள்ளு விட்ட ஒரு விளம்பரம் தூள் கிளப்புகிறது… அதே போல் இன்னும் ஒரு விளம்பரத்தில் ஒரு டீ ஒரு வருடம் பூரா உங்கள் வீட்டிற்கு வர வேண்டுமா என்று கேள்வி கேட்கிறார்கள். திரிஷாவை வைத்து.. (அது சரி திரிஷாவை ஒரு நாள் வீட்டுக்கு டீ சாப்பிட வரவழைக்க என்ன செய்யலாம் ???)

பார்த்த மாத்திரத்தில் சில பிடிக்கிறது… பாக்கப் பாக்கத்தான் பிடிக்கும் என்கிறதும் இன்றைய சினிமா தான்.

 இது இப்படி இருக்க… எதிர்காலத்தை நிகழ் காலமாய் நினைத்து வாழ்வதை கேள்விப்பட்டிருக்கீங்களா??? (ஜாலியா திரிஷா பத்தி எழுதினது, இந்த மாதிரி கேள்வி கேக்கத் தானா???)

 அப்படி வாழ்ந்தவர் பாரதியார்.

 1947, ஆகஸ்ட் 15 க்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடியவர். சுகி சிவம் இதைப் பற்றி சொல்லும் போது, இவர்கள் அதிக உயரத்தில் இருப்பவர்கள். இவர்களின் பார்வையும் விசாலமானது. சாதாரணமாய் நம் கண்ணுக்கு புலப்படாத சேதிகள் அவர் கண்ணுக்கு தெரியும் என்கிறார்.

ஈஸியா புரியணுமா?? கூகுள் மேப்பில் உலகமே சின்னதாய் தெரியிற மாதிரி.

இன்னும் சிலர் பத்தி பாக்கலாமே…

மதுரையில் புகழ்பெற்ற கல்லூரியின் பேராசிரியர் ஒருவர். மெத்தப் படித்தவர். நடந்து கொண்டே இருப்பார்… நடுவழியில் நம்பர் 1 போய் விடுவார்.

அவரை மாணவர்கள் ஒரு குரூப் போட்டோவுக்கு அழைக்கிறார்கள்… அவரும் இரண்டடி எடுத்து வைக்கிறார்.. சரி போட்டோ எடுங்கள் என்கிறார். இன்னும் போக வேண்டுமே என்கிறார்கள் மாணவர்கள். நான் அந்த குரூப்பில் தானே இருக்கிறேன் என்கிறார் அவர்.

ஏன் இப்படி நடக்கிறது இவருக்கு??

இவருடைய உடல் மெதுவாய் நடக்கிறது. மனம் வேகமாய் இயங்குகிறது.

பாத்ரூம் செல்ல நினைத்து உடல் நடக்கிறது. வேகமாய் மனம் அங்கு போய்விடுகிறது… ஆனால் உடல் அதற்குள் அங்கு செல்லவில்லை. குரூப் போட்டோ அழைப்பில் ஏற்பட்ட சிக்கலுக்கும் இது தான் காரணம்

Physical Speed & Mental Speed குழப்பங்கள் தான் காரணம்.

இந்த மாதிரி சிக்கல் இப்பொத்தான் வந்திருக்கா…??

பாரதியார் மாதிரி எதிர்காலத்தை நிகழ் காலமாய் நினைத்து வாழ்ந்தவர்கள் அந்தக் காலங்களில் இல்லையா??

எப்பொவுமே என்னோட கோணார் தமிழ் உரை ஆசிரியர் கம்பர் தான்.

இப்புடு சூடு… என்று சுந்தரத் தெலுங்கில் சொல்லி… செம்மொழித் தமிழ் பாடல் தந்தார்.

அடடே…Same Feeling…

அனுமன் முதன் முதலாய் இராமனை சந்திக்கும் இடம். பரஸ்பர அறிமுகம் முடிகிறது. விசிட்டிங்க கார்ட் முதல் இமெயில் முகவரிகள் தருகிறார்கள். ராமன் அனமனிடம் விசிட்டிங்க்  கார்ட் கேட்கிறார். அந்தமான் போன்ற காடுகளில் 2011 ல் கூட அதை வைத்துக் கொள்ளாமல் இருக்காக..என்னிடம் எப்படி இருக்கும்?… அதுவும் என்னோட Boss சுக்ரீவன் இருக்க நான் விசிட்டிங்க கார்ட் வச்சிக்கிறது தப்பு.. வேணும்னா சார் கிட்டே சொல்லி வாங்கினு வாரேன்..என்று செல்கிறார் அனுமன்.

இது வரைக்கும் ஓகே… போகும் போது அனுமன் அங்கே தன் Boss சுக்ரீவன் கிட்டே போய் சொன்னது என்ன ? இது தான் இன்றைய டாபிக்.

“ஐயா… வாலி கெட்டிக்காரன் தான் ஒத்த்க்கிறேன்.. மாலையோடவே திரியும் ஆளு தான்.. அதுவும் Super Smell இருக்குது… எல்லாம் சரி. ஆனா அந்த ஆளை கொல்லும் எமன்… வந்துட்டான்யா….வந்துட்டான்யா…. நம்ம துன்பமெல்லாம் தூரமா போயே போச்சு…” அப்படீன்னு அனுமன் சுக்ரீவன் கிட்டே சொல்றான்…

என்ன உங்களுக்கும் இப்படி பாத்த முதல் நாளே, ஏதும் உங்க மனசுலே பட்சி ஏதாவது சொல்லி இருக்கிறதா???

யோசிங்க… யோசிங்க… அதுக்கு நடுவில் இந்த கம்பரோட பாட்டையும் படிச்சிடுங்க..

 மேலவன் திருமகற்கு உரைசெய்தான் விரை செய்தார்

வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்

காலன் வந்தனன் இடர்க் கடல் கடந்தனம் எனா

ஆலம் உண்டவனின் நின்று அரு நடம் புரிகுவான்.

 நீதி: எதிர் காலத்தை நிகழ் காலமாய் நினைத்து தேசத்திற்கு விடுதலை உணர்வினை ஊட்டிய பாரதியாரை விடுதலை நாளில் நினைவு கொள்வோம்.

நியூட்டனின் மூன்றாம் விதி…


தமிழ் பாட நூல்களில் தவறாமல் இடம் பெறும் ஒரு பாடம் பண்டைக்கால அறிவியல் தலைப்பை ஒட்டியதாக இருக்கும். தமிழர்கள் அந்தக் காலத்திலேயே பல அறிவியல் நுணுக்கங்க்களை அறிந்து வைத்திருந்தனர் என்பதாகவே அந்தப் பாடம் போகும்…

அதற்கு எல்லோரும் சொல்லும் உதாரணம் அணுவைப் பற்றிய அறிவு. (அணு என்றவுடன் சுகுணா சிக்கன் விரும்பிக் சாப்பிடும் அணுஹாசன் அல்லது காஃபி வித் அணு  பத்தி நினைத்து என் பேரைக் கெடுக்க்க வேண்டாம்.)

நான் குறிப்பிடும் அணு சின்ன…சின்ன..துகள் தான்.

திருக்குறளைப் பத்தி புகழ்ந்து பாடும் போது ஒரு கவிஞர்… உணர்சி வசப்பட்டு (வாலியும் வைர முத்துவும் மேடடையில்  பாராட்டுவது போல்) கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்கிறார்.

அதுக்கு அப்புறம் வந்தவரோ…

அதுக்கும் கொஞ்ச்சம் மேலே போய்…. அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள் என்று ஒரே போடாகப் போடுகிறார்…. இது அந்தக் காலத்தில் அணு பற்றிய அறிவு இருந்ததாய் அறிஞர்கள் கூறும் ஆதாரங்கள்..

இதற்கு முன்னர் கொஞ்சம் எடிசன் பத்தியும் கொஞ்சம் சின்ன தகவல் அறிந்து விட்டு தொடர்வோம்…

 இந்த எடிஸனை அவங்க ஸ்கூல் டீச்சர் மொதோ நாளே அவங்க அம்மாவைப் கூப்பிட்டு, இவன் இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டான் என்று கூட்டிப் போகசச் சொல்லி விட்டார்கள். ஸ்கூல் டீச்சரே தேராத கேஸு என்று கைவிட்ட அந்த குழந்தை மட்டும் அன்று  இல்லை என்றால் உலகமே இன்று இருண்டு கிடந்திருக்கும்…

நியூட்டன் பார்வை கொஞ்சம் வித்தியாசமானது. ஆப்பிள் விழுகிறது மரத்திலிருந்து…அதுக்கும் முன்னரும் பலர் அதை பாத்திருக்கிறாங்க… அவங்க பார்வையில் இந்த நியூட்டனின் மூளையில் உதித்த கேள்வி எல்லாம் வரலையே???

என் பையன் கேக்கும் கேள்வி… அந்த நியூட்டன் தலையிலே ஆப்பிளுக்குப் பதிலா…ஆப்பிள மரம் விழுந்திருந்தா…  நமக்கு இந்த விதிகள் படிக்கும் விதி வந்திருக்காது… ம்..அவனவன் கவலை..அவனவனுக்கு…

என் பார்வையில் நியூட்டனின் விதிகள்… குறிப்பாக மூன்றாம் விதியினை பழந்தமிழர் அறிந்திருக்கும் ஆதாரங்கள் இருக்குமா?? கேள்வியோடு கொட்டவியும் வந்தது…

அப்படியே தூக்கம் வந்திடுச்சி…

கனவில் வந்தார் கம்பர்… (கனவிலுமா???)

என்ன என்னவோ..நியூட்டன் விதி..எல்லாம் பொலம்பிட்டே இருந்தே..என்னது அது..

அது ஒன்னும் இல்லை கம்பர் சார்… உங்களுக்கு தெரியாத சங்கதி…நீங்க போங்க..நானு தூங்குறேன்..

 அடேய் பொடிப்பயலே… எனக்கே தெரியாத சங்கதியா… என்ன சமாச்சாரம் சொல்லு மொதல்லே…

 நியூட்டனின் மூணாம் விதி… ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான எதிர்விசை உண்டு…இது தான் சாமி…குட் நைட்.  கம்பராஜா…

 ஹலோ..இதை நான் ராமாயணத்திலே எழுதியிருக்கேனே….. வாலி சுக்ரீவன் கூட சண்டை போட இறங்கும் சமயத்தில் நான் இந்த நியூட்டன் விதியை நியூட்டன் கண்டுபிடிக்கும் முன்பே எழுதி இருக்கேன்….

கனவு கலைந்தது…

ஓடிப் போய் இராமாயணம் தேடினேன்… அட…அப்படித்தான் இருக்கு… நீங்களும் பாருங்களேன்..

ஊழி முடிவில் வரும் அலையின் விசை ஒத்து சுக்ரீவனை அழைக்க வாலி எழுந்தானாம். அந்த விசையால் அந்த கிஷ்கிந்தா மலையே கீழே சென்றதாம். மேலும் தோள்களை உதறிய போது எழுந்த காற்றால் அந்த மலையின் பக்கத்தில் உள்ள மலைகள் எல்லாம்இடம் பெயர்ந்தனவாம்…

நியூட்டன் விதி மாதிரி இல்லே????

 எழுந்தனன் வல் விரைந்து இறுதி ஊழியில்

கொழுந்திரைக் கடல் கிளர்ந்தனைய கொள்கையான்

அழுந்தியது அக் கிரி அருகில் மால் வரை

விழுந்தன தோள்புடை விசித்த காற்றினே..

 கம்பன் ஆய்வுகள் இன்னும் வரும்.

மின்சாரக் கண்ணா…


இராஜீவ் காந்தி அக்ஷய் ஊர்ஜா திவஸ் என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள்… அதில் சோலார் காற்றாலை இப்படி எத்தனையோ சொல்கிறார்கள்.. ஆனால் கண்ணிலிருந்து மின்சாரம் எடுக்கும் வித்தையை நமது சினிமாக்கள் தான் சொல்லித் தருகின்றன்…மின்சாரக் கண்ணா..என்பது அதற்கான சான்று.

திடீர் திடீரென்று மின் தடை வரும்… சங்கடமும் கூடவே வரும்.

அதுசரி… மின் தடை வரும் போது எல்லோருமே எரிச்சலின் உச்சத்திற்குப் போகும் போது நான் மட்டும், இதில் ஏதும் பாசிட்டிவ் திங்கிங் இருக்காதா என்று யோசித்தேன்.

மின் தடை அடிக்கடி ஏற்படும் வீடுகளில் சில நன்மைகளைப் பாக்கலாமே…

  1. 1. Advanced Planning: காற்றுள்ள போதே தூற்றுக் கொள் இது பழமொழி… கரண்ட் உள்ள போதே பயன்படுத்திக்கொள்..இது புது மொழி. பசங்களோட யூனிபார்ம்களை press செய்வது தொடங்கி, சட்னிக்கு ஆட்டுவது, மொபைல் சார்ஜ் செய்வது இதை plan செய்து செய்ய முடிகிறது.
  2. Outdoor Games: Comuter Games, Play Station  இதை விட்டால் வேறு நாதி இல்லை என்று கிடக்கும் பசங்க.. கொஞ்சமா outdoor games எட்டிப்பார்க்கும் காலம் தான் அந்த இந்த இருண்ட காலம்.
  3. Cycling: நான் சைக்கிள் ஓட்டப் போறேன் என்று பெரும்பாலும் கரண்ட் இல்லாத நேரத்தில் தான் குரல் கேட்கும். நானும் இப்போ சந்தடி சாக்கில் walking போறதுக்குப் பதிலா சைக்கிளிங்க் போக ஆரம்பித்தேன்.
  4.  Sequence of Work: எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்?..என்ற தெளிவு வந்திருக்கிறது. சில வேலைகளை கரண்ட் இல்லாத நேரத்தில் செய்யலாம் என்று ஒதுக்க முடிகிறது.
  5. கைவினைப் பொருள்களுக்கு ஆதரவு தரும் முகமாய் கைவிசிறி, மெழுகுவர்த்தி விற்பனை தூள் கிளப்புகிறது.
  6. மண்பானை யில் தண்ணி ஊத்தி வைத்து Fridge இல்லாத குறையை போக்குகிறது.
  7.  டி வீ சீரியல்கள் பார்த்த்து உடம்பு ஊதும் அம்மனிகளுக்கு நல்ல சேதி… (போன் போட்டு கதை கேட்கும் ஆட்களை நான் இங்கு கணக்கில் சேக்கலை)… சீரியலும் கட்டு… கொரிப்பான்களும் கட்டு..
  8. CN, Pogo என்று அலம்பல் செய்யும் பசங்களுக்கு ஒரு விடுதலை.
  9. முக்கியமான சந்தோஷிக்கும் காரணம்: கரண்ட் பில் குறையும்.
  10. வியாபாரிகள்…குறிப்பாக Battery, UPS, Invertor தயாரிப்பாளர்கள் ஆகியோர் மகிழ்வுடன் இருக்கிறார்கள்…

 இப்படியே பாசிட்டிவ் ஐடியாக்கள் தொடர்ந்து கொண்டே வருது.

அது சரி… இப்போ எதுக்கு இந்த மாதிரி எல்லாம் யோசனைன்னு கேக்கிறீங்களா??

அது ஒண்ணுமில்லை. சமிபத்தில் அந்தமான் ஆதிவாசிகள் சிலரை, இந்தியாவின் பிற மாநகரங்களை சுற்றி காட்டி அழைத்து வந்தார்கள். (அரசு விருந்தினர்களாக, அரசு செலவில்). அதில் ஒருவரின் வாயை லேசாக கிளறினேன்.

எப்படி இருந்தது Mainland Cities??

வாவ்… அருமை…அருமை..பிரம்மாண்டம். அதில் பிடிச்ச சிட்டி பெங்களூரு தான். காரணம் அங்கே இரவில் கூட இருளே வருவதில்லையே..

இது பெங்களூரு பற்றி ஓர் ஆதிவாசியின் கமெண்ட்.

அப்படியே கம்ப காலத்துக்கு வாங்க…

அங்கே நீங்க பாக்க வேண்டிய சிட்டி அயோத்தி. உங்களுக்கு அந்த சிரமம் இல்லாமல் கம்பர் போய் பாத்து எழுதி வைத்திருக்கிறார்.

அயோத்தியில் எல்லா வளங்க்களும் இருக்காம். அதனாலே அங்கே அந்த ஊரில் இருக்கும் நீண்ட சுவர்கள் எல்லாம் பளிங்கு கல் பதிச்சி வச்சிருக்காங்களாம். அதிலும் வரிசையாக பதுமராக மணிகள் பதிச்சி வச்சிருக்காங்களாம். அது அவ்வளவு ஒளி வீசுதாம். (அது என்ன பதுமராகம் என்று என் துனைவியாரிடம் கேக்கலாம்னு இருந்தேன். சன் செய்திகளில் சொல்லும் தங்கம் விலை 22000 என்று காதில் இந்த நேரத்தில், இப்படி ஏதும் எசகு பிசகான கேள்வி கேட்டு மாட்டிக்க விரும்பலை)..

இந்த மாதிரி பளிங்கு, பதுமராக ஒளி வீசுவதால் இரவில் கூட  இருள் வருவதே இல்லையாம். ஒன்னும் கொஞ்சம் மேலே போய் அந்தி நேரத்தில் வரும் செவ்வானம் கூடத் தெரிவதில்லையாம்..

பாட்டு பாக்கலமா???

வளம் கெழு திரு நகர் வைகும் வைகலும்

பளிங்குடை நெடுஞ்சுவர் படுத்த பத்தியில்

கிளர்ந்து எறி சுடர்மணி இருளைக் கீறலால்

வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே.

இதைப் படிச்சி பெங்களூரு வாசிகள் சந்தோஷப் படலாம். மற்ற ஊர்க்காரர்கள்…??? அடுத்தடுத்து வரும் போஸ்டிங்க் படிங்க… அதில் உங்க ஊர் சங்கதியும் வந்தாலும் வரலாம்..

வரட்டுமா??

மாத்தி யோசி மாத்தி யோசி மாமூ…..


மாத்தி யோசிங்க… மாத்தி யோசிங்கன்னு மாஞ்சி மாஞ்சி எழுதுறோம்.. ஆனா அதில் உள்ள சிக்கல் பத்தி யாராவது எழுதி வைக்கிறோமா?? உலகம் உருண்டை இல்லை என்று நம்பி வந்த காலத்தில் கொஞ்சம் மாத்தி யோசிச்ச விஞ்ஞானிக்கு நடந்த கதை தெரியுமா உங்களுக்கு??

அதே மாதிரி இன்னொருவர் ஸ்டீவன்சன்.. மாட்டுவண்டி குதிரை வண்டி மட்டும் ஓடிய காலத்தில், ரயில் ஓட்டி காட்டலாம் என்று புறப்பட்டார். இவ்வளவு வேகத்தில் (அந்தக் காலத்தில் போன வேகம் தான்) போகும் வண்டியில் ஏறிப் போனால் மரை கலண்டு போவும். இதெல்லாம் சரிப்படாது என்று reject செய்யப்பட்டது அந்த மாத்தி யோசிச்ச யோசனை. அப்புறம் அந்த மனுஷன் சரி..நானே ஏறி வந்து காமிக்கிறேன்… நான் என்ன லூசா என்றாராம்.

ஆமாம்..நீ லூசு தான். அதான் இப்படியெல்லாம் திறிரியரே என்றார்களாம் சுடச்சுட. அவரை ஒரு பஞ்சாயத்தில் வைத்து விசாரித்தார்களாம். வெளிய வந்த அவரை ஆஜ்தக் ரிப்போர்ட்டர் மாதிரி ஒருவர் மடக்கி கேள்வி கேட்டார்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?? தங்கள் வீட்டிற்கு வெளியில் அன்னா ஆதரவாளர்கள் மத்தியில் சிக்கிய நபர் மாதிரி நின்றேன் என்றாராம்.

ஆக மாத்தி யோசிப்பதில் சிக்கல் இருக்கத்தான் செய்யுது.

அவனவன் Sattelite Phone வைத்து குண்டு வைத்து வரும் இந்தக் காலத்தில் உண்ணாவிரதம் இருந்து லோக்பால் என்பதை ஜன் லோக்பாலாய் ஆக்குவேன் என்று இருப்பவரும் இந்த மாத்தி யோசிக்கும் மாமு தான். என்ன … இதற்குள் 41/2 கிலோ இந்திய நவீன காந்தி இளைத்துவிட்டது.

உடம்பு இளைக்க எவ்வளவோ செய்யும் (செய்ய வைக்கும் விளம்பரங்களையும் சேர்த்துத்தான்) ஆசாமிகள்.. இந்த உண்ணாவிரத கலையை கற்கலாம். வேணும்னா விரதம், உபவாசம், ரோஜா, அன்னாவுக்கு ஆதரவு இப்படி எப்படி வேணும்னாலும் மாத்தி பேரு வச்சிக்கலாம்.. எப்படி என் மாத்தி யோசிக்கும் ஐடியா???

ஒரு வாரம் முன்பு தகவல் அறியும் உரிமை (Right to Information – RTI பற்றிய பயிலரங்கம் ஏற்பாடு ஆனது. (அன்னாவும் அர்விந்த் கெஜிர்வாலும் தான் இந்த RTI க்குப் பின்னால் இருந்தவர்கள் என்பது உங்க்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்). அந்தமானில் நான் தான் RTI க்கு  Resource Person. சம்பந்தப்பட்ட துறையின் செயலர் என்னை அழைத்து, தகவல் தரும் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் என்றால் என்ன என்பதை சொல்ல வேண்டும் அது தான் உங்க வேலை என்றார். நாகரீகமாய் சொன்னதின் முழு அர்த்தம் என்ன வென்றால், இங்கே யாருக்கும் ஒண்ணும் தெரியலை..நீங்க முழுசா சொல்லிக் கொடுங்க என்பது தான்.

IAS IPS என்று ஆரம்பித்து Director, Asst secretary என்று பெரும் தலைகளுக்கு நான் வகுப்பு எடுக்க ஆரம்பித்தேன். காலை மாலை 2 மணி நேரம் என்று வைத்து மூன்று நாட்கள் என் மூளையும் முட்டியும் பிதுங்கிய நாட்கள் அவை. கால் கடுக்க நிற்பது என்பது அப்போது தான் என்ன என்று விளங்கியது. (அந்த வலி ஏன் வீடு வந்த பிறகு மட்டுமே தெரிகிறது..அப்போதே தெரியாமல்???)

 1 1/2 மணிக்கு தோதாக 87 ஸ்லைட் காட்டி, 1/2 மணி நேரம் சந்தேகங்களைத் தீர்க்க ஏற்பாடு. நன்றி சொல்லும் ஸ்லைடுக்கு முன் ஏதாவது மாத்தி யோசிச்சா எப்படீன்னு சேக்ஸ்பியர் சொன்ன ஒரு விஷயத்தையும், RTI சமாச்சாரத்தையும் கலந்து கொடுத்தேன். மேட்டர் இது தான்:

If you want to be happy with man Love him less and understand him more. If yu want to happy with women lLove her more and never try to understand her.

கூடவே என்னுடைய பன்ச்: If you want to be happy with Government Service, Love RTI more & Understand RTI more.

மாத்தி யோசிக்க நான் சொன்ன இந்த ஸ்லைட் எல்லா பேட்சிலும் செம ஹிட்… 86 ஸ்லைடுகளை மாங்கு மாங்குன்னு தயார் செஞ்சதை யாரும் நோட் செய்யலை. இந்த  ஸ்லைடை மட்டும் திரும்ப கேட்டு எழுதிக் கொண்டனர்… அப்போ நான் மட்டும் தானா மாத்தி யோசிப்பேன்..?? மத்தவங்க அப்படி செய்ய மாட்டாங்க்களா என்ன??

முகநூல்  அன்பர்களும் இதுக்கு விதி விலக்கு அல்ல. மூளையை கசக்கி..அன்னா..அன்பு…அம்மா என்று எழுதினால், அம்மா ஆட்சியில் ..என்று பதில் வருவதும், குழந்தைகள் ஏன் அப்பாவை திட்டுகிறது என்று கண்டுபிடிக்கும் யுக்தியும் மாத்தி யோசிக்கும் யுக்தி தான்.

சினிமா காமெடிகள் எதுக்கும் சளைத்தது அல்ல.

100 அடி 500 அடி என்று தோண்டினால் தான் தண்ணியே வரும் இந்த யுகத்தில்… கிரிக்கெட் பேட்டை தட்டி தண்ணி வரவழைப்பதாய் ஒரு காமெடி வருமே…அதான் சத்யராஜும் வடிவேலும் கலக்கும் சீன் தான் நான் சொல்வது. இது மா……..த்தி யோசிப்பதின் உச்சமாய் இருக்குமோ??

ஆனா அந்த குழி ஆகும் சங்கதி என்னமோ சுட்ட சரக்கு மாதிரி தெரியுது. எங்கே தெரியுமா??

கம்பராமாயணம்.

களம் தான், கிரிக்கெட் இல்லை.. அது ஒரு கிச்சன் கேபினெட்.

கைகேயி, இராமன் பட்டத்துக்கு வருவதை அறிந்து சந்தோஷமாய் இருந்த காலம் அது. வில்லி இன்னும் வரவில்லை. இதோ வந்து விட்டாள். ஒரு மாலையை அந்த வில்லிக்கு அதான்… கூனிக்கு தந்தாள் கைகேயி. கூனியோ.. கோபமா சத்தம் போட்டா…எரிக்கிற மாதிரி பாத்து அதட்டினா…திட்டினா..ஆடை & அணிகள் ரெண்டையும் அலங்கோலம் ஆக்கிகிட்டா.. வாய் விட்டு அழுதா..கைகேயி குடுத்த மாலையை தூக்கி எறிஞ்சா… அது விழுந்த எடம் “குழியே” ஆயிடுச்சாம்…

தெழிந்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக

விழித்தனள் வைதனள் வெய்து உயித்தனள்

அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்

குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே.

 ஆக… இந்த குழி ஆகும் சமாச்சாரத்தின் விரிவாக்கம் தான் அந்த வடிவேல் கிரிக்கெட் காமெடியா இருக்குமோ??

இன்னும் படிக்கனும் நிறைய.

சந்தோஷமா இருப்பது எப்படி???


ாஜபார்ட் ரங்கதுரைன்னு ஒரு படம். சிவாஜியின் நடிப்பை எல்லா விதங்களிலும் காட்டிய அற்புதமான படைப்பு. அதில் வந்த ஒரு பாட்டு இன்னும் ஞாபகம் இருக்கு.

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க… என்று சொல்லி வைத்தார் வள்ளுவரு சரிங்க…

 இடுக்கன் வருங்கால் நகுக என்பதின் எளிய அருஞ் சொல் பொருள் விளக்கம் அது தான்.

 அதெப்படி கஷ்டம் வரும் போது சிரிப்பது? அடுத்தவன் என்ன நினைப்பானோ என்பதற்காகவே அழுது தொலைக்க வேண்டியிருக்கே….!!!

 அந்தமான் தீவில் நண்பர்கள் யாராவது ஊருக்கு கப்பலில் கிளம்பும் போது அவரின் மனைவி வழி அனுப்ப கப்பலடிக்கு (அதை ஜெட்டி என்கிறார்கள்.. நல்லாவா இருக்கு??) வருவார்கள்.. சும்மா ஜாலியா இருக்கும் அவர்களை, நாம் சீண்டுவோம். என்ன இது?? உங்க புருஷர் (அட… மரியாதை !!!) உங்களை உட்டுட்டு போறார்.. நீங்க ஜாலியா இருக்கீங்க??? உடன் கண்ணீர் பொங்கும்..

 ஆனா வள்ளுவர் டிரிக்ஸ் தனி.. கஷ்டமே வந்தாலும் ஜாலியா இருங்க என்கிறார் அவர். இது சாத்தியமா?? சத்தியமா சாத்தியம் தான்.

ஒரு Mind Set மாத்தி வச்சிட்டா போதும். அது என்ன மைண்டு? செட்டு??

 சீன் 1:

 நீங்க ஒரு பொண்ணு பாக்க போறீங்க.. (வாங்க ஜாலியா போவாம்)

(இந்த ஃபேஸ் புக், வீடியோ சாட்டிங்க் உலகில் இன்னுமா நடக்குது அந்தக் கூத்து??) பொண்ணு அழகா.. கலரா.. சூப்பரா இருக்கும்ன்னு கனவோடு போறீங்க. போய் பாத்தா கொஞ்சம் சுமார். மாநிறம். பரவயில்லை ரகம். உங்களுக்கு கவலை வரத்தானே செய்யும்? இந்த சீனில் நீங்க சிரிப்பது கஷ்டம்.

 அடுத்த சீன் 2:

நீங்க மறுபடியும் பொண்ணு பாக்க போறீங்க..

பொண்ணு சுமாரா மாநிறமா பரவாயில்லை ரகமா இருந்தா போதும்ன்னு போறீங்க. போய் பாத்தா அப்படியே நீங்க எதிர் பாத்த மாதிரியே இருக்கு. உங்களுக்கும் பரவாயில்லை.. மகிழ்வும் இல்லை. வேதனையும் இல்லை. இங்கே… சிரிப்பது கொஞ்சம் முயற்சிக்கலாம்.

கடைசி சீன் 3:

நீங்க மறுபடியும் (மறுபடியுமா??) பொண்ணு பாக்க போறீங்க..

எனக்கு என்ன பெரிய தமண்ணாவா கத்திருக்கப் போறா… என்னோட மொகத்துக்கு ஏதோ போதும்ன்னு போறீங்க. போய் பாத்தா அதே கொஞ்சம் சுமார். மாநிறம். பரவயில்லை ரகம். உங்களுக்கோ பரம திருப்தி. இங்கே சிரிப்புக்குப் பஞ்சமில்லை.

பாக்கப் போனா….  பாக்கப்போன மூனு சீனிலும் சுமார். மாநிறம். பரவயில்லை பொதுவா இருக்கு. ஆனா முதல் சீன் சோகம். இரண்டாவதில் நார்மல். மூன்றாவதில் சந்தோஷம்.

உங்களை சந்தோஷமாக வைத்திருப்பது உங்கள் கையில் தான் இருக்கு. இது தான் மைண்ட் செட்டின் மகத்துவம். ஏதும் தப்பா சொல்லி இருந்தா மைண்ட் செய்யாதீங்க… ப்ளீஸ்.

சங்கடங்களில் தான், கடவுள் கூட வருவார்.

கடவுள் கூட, சங்கடங்களில் தான் வருவார்.

கடவுள் இருப்பதே, கஷ்டம் வரும் போது தானே ஞாபகம் வருது.

சோகமா இருக்கும் சமயம் ஒரு மனுஷனுக்கு குறி சொல்றாய்ங்க.. நீ என்னப்பா பெரிய யோகக்காரன். யாருக்குமே தெரியாம இருக்கும் இந்த ஜாதகக்காரன் யோகம் உலகத்துக்கே தெரிஞ்சி பின்னி பெடலெடுக்கப் போவுது.

சோகமா கேள்வி வருது. எப்போ வரும் அந்த நல்ல காலம்?

ஒரு ஆளு வருவார்.. எப்போ எப்படி வருவார்ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா… வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார். 

சரீ….  நான் எப்படி அவரை கண்டுகிறது ??

உனக்கு கஷ்டமான காலத்தில் அவர் வருவார். அவரை பாத்ததும் கண்டதும் காதல் மாதிரி அன்பு ஊற்றெடுக்கும்.

சொன்னப்போ எந்தப் பயலுகளும் நம்மலை.

ராமன் வந்தப்போ நம்பாம இருக்க முடியலை அனுமனால்.

சோகத்திலும் சிரிக்கலாம். கடவுள் துணை இருந்தால். கடவுள் கூடவே இருந்தா?? அது அனுமன் பெற்ற பாக்கியம்.

ராமனைப் பாத்த அனுமன் அன்பால் ஐஸ்கிரீம் உருகுறது மாதிரி உருகுகிறான். அதில் நொடியில் உடல் இளைத்து, எலும்புகளும் காணாமல் போயிடிச்சாம்..

ஆஹா… ரெண்டு கிலோ உடம்பு இளைக்க என்னென்ன செய்ய வேண்டி இருக்கு. கம்பரோ எலும்பையே உருகும் யுத்தி சொல்றார். அன்பு தான் அது.. ராமன் மீது அனுமர் காட்டிய அன்பு தான் அது.

துன்பு தோன்றிய பொழுது உடன் தோன்றுவான் எவர்க்கும்

முன்பு தோன்றலை அறிதற்கு முடிவு என் என்று இயம்ப

அன்பு சான்று என உரைத்தனன் ஐய என் ஆக்கை

என்பு தோன்றல உருகினஎனின் பிறிது எவனோ.

இன்னும் கம்பரை படிக்கனும் அன்போட… இன்னும் அன்பு சேர்த்து. 

கத்தி முனையில் …


ஒரு இளைஞன் சாமியாராக நினைத்து தன் அம்மவிடம் அனுமதி கேட்டான். (அப்புறம் முதல்வர் அம்மாவிடமா கேட்க முடியும்?)

அம்மா பையனுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வச்சாங்க. ஒரு சின்ன கத்தியை எடுத்து வரச் சொன்னாங்க. பையனும் கத்தியை கொண்டு போய் கொடுத்தான். உடனே அம்மா, நீ சாமியாராக போவதற்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். என்றார். கொஞ்ச நாள் போனது. மீண்டும் கத்தி சோதனை தொடர்ந்தது. மீண்டும் அதே முடிவு… மூன்றாம் முறை அம்மாவிடமிருந்து உத்திரவு கிடைத்தது.. சாமியாராக போலாம் என்று..

இளைஞன் கேட்டான்…என்ன இது சோதனை?? எப்படி தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார் அந்த இளைஞர். கிடைத்த பதில் என்ன தெரியுமா?? முதல் இரண்டு முறையும் கைப்பிடி இளைஞன் கையிலும் கூரான முனை அம்மாவை நோக்கியும் இருந்ததாம். மூன்றாம் முறை கூரான முனை கையில் வைத்து தந்த காரணத்தால் அனுமதி கிடைத்தது.

அடுதவர் நலம் தான் சாமியாராய் போக முதல் தகுதி என்று அந்த அம்மா நினைத்திருக்கலாம்..

அதை விடுங்க… புகை ஒழிப்பு தினத்தன்று என் கையில் மைக் கிடைத்தது. நான் புகை பிடிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்களை நாய் கடிக்காது என்றேன்..

ஒரே சிரிப்பு.. விளக்கம் சொன்னேன்… அதிகம் புகை பிடித்தால்… நுரையீரல் பாதிப்பு அடையும்.. அதனால் கூன் விழும்… கையில் தடி ஊன்றி நடக்க நேரும்.. தடி இருந்தால் எந்த நாய் தான் கடிக்க வரும்??

தடியினை விட்டு மறுபடியும் ஒரு கத்தி கதைக்கு வருவோம்…

முல்லா நஜ்ருதீன் தன் இளம் மனைவியோடு ஒரு ஓடத்தில் போய்க் கொண்டு இருந்தார். திடீரென்று ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார். வேடிக்கைக்காகத்தான்…

ஆமா..கல்யாணம் ஆன ஆரம்பத்தில் தானே இப்படி எல்லாம் விளையாட முடியும்… அப்புறம் கத்தி தான் மனைவி கையில் போய் விடுமே!!

இளம் மனைவி புன்முறுவலோடு இருந்தார். முல்லா கேட்டார்…என்ன பயமாய் இல்லையா என்று?? இளம் மனைவி சொன்ன பதில் தெரியுமா?? கத்தி கொடுமையான ஆயுதம் தான்… ஆனால் ஒரு முனை கொடூரமானதாய் இருப்பினும் இன்னொரு முனை அன்பே உருவான உங்களின் கை அல்லவா இருக்கு.. நான் ஏன் பயப்பட வேண்டும் என்றார்… கத்தி முனையில் அன்பு என்னும் ஆயுதம்…

இதே போன்ற ஒரு சிச்சுவேஷன் ராமாயணத்தில் வருது… கம்பர் அதனை எப்படி கத்தி வைத்து கையாள்கிறார் என்று பாக்கலாம்… இங்கு கத்திக்குப் பதில்…. அம்பு..

சுக்ரீவனுக்கு வந்திருப்பது ராமன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. (ராமனுக்கே இந்த identity crises…) ஒரே அம்பில் ஏழு மரம் துளைத்துக் காட்டினால் தான் இராமன் என்பது நிரூபனம் ஆகும்.. Proof ஆகி விடுகிறது… அந்த வேகம் பாத்து அனைவரும் பயந்து போய் விடுகின்றனர்… ஆனாலும் அறத்திற்கு உறு துணையாய் இருப்பவர் உடன் இருப்பதால் கவலை லேது என்று ஜாலியா இர்ந்தாகலாம்…

ஜாலியா பாட்டும் பாக்கலாமே…

அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன் என்னும் தன்மையை நோக்கினர் யாவரும்…..

தொடரும்….