தானாச் சேர்ந்த கூட்டம் (1025)


தானாச் சேர்ந்த கூட்டம் (1025)

குறளின் குரல் – 1

அழைப்பிதழ்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம். சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக, தவிர்க்க முடியாத சூழலாக சில அழைப்பிதழ் வந்து சேரும். அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் மேடைகளில் அவ்வளவு கவனம் போகாது. ஆனால் பார்வையாளர்களைக் கவனித்தால் செமெ சுவாரசியமாக இருக்கும். அன்றும் அப்படித்தான் ஓர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சி. வழக்கமான, பார்வயாளர்களின் பக்கம் பார்வையைத் திருப்பினேன். ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒரு முறை மாறிக் கொண்டிருக்கிறது. ஏன் என்று புரியவில்லை. நான் மட்டும்தான் புடிச்சி வச்ச பிள்ளையார் மாதிரி இருக்கேன். கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க நடக்கப் போகிறது இந்தக் கூத்து. மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மாணவியிடம் விசாரித்தேன் (மாணவர்களிடம் ஏனோ விசாரிக்கத் தோனலைங்கோ…) ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் ஒரு பீரியட் இங்கு வந்து உட்கார வேண்டும். மதிய சாப்பாடு இருக்கு எனச் சொல்லிவிட்டார்களாம் முன்பே.

ஆக… இது தான் அழைத்து வரப்படும் கூட்டம். ஒரு வேளை பிற்காலத்தில் அரசியல்வாதியாக ஆகும் போது, கூட்டம் சேர்க்கும் கலையும் கத்துக்க, செலெபஸ்லேயே வச்சிருப்பாகளோ? இருக்கலாம். இன்னொரு வகையும் இருக்கு. அது தானே சேரும் கூட்டம். தலைமைப் பண்பு உள்ளவர் எங்கே இருந்தாலும், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தானே சேருமாம்.

சமீபத்தில் பாண்டிச்சேரிக்குப் பக்கத்தில் உள்ள பஞ்சவடிக்குப் போயிருந்தேன். (அப்போ… பாண்டிச்சேரி போகலையா? பாண்டிச்சேரிக்கும் போயிட்டுத்தான் வந்தேன். இப்பொ நிம்மதியா? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்டினு…) பஞ்சவடியில் பிரமாண்டமான அனுமார் சிலை. வெளியில் வாட்ச்மேன் போல் ஒரு சிலை. உத்துப்பாத்தா, அட நம்ம சுக்கிரிவன் தான் அது. சுக்ரீவன் ராஜாவாச்சே? கோவிச்சுக்க மாட்ட்டாரா என்ன?

மாட்டார். ஏன் தெரியுமா? தலைவர் வேண்டுமானாலும் சுக்ரீவனாக இருக்கலாம். ஆனால் தலைமைப் பண்பு உள்ளவர் அனுமன். அதான் அவரைத்தேடி கூட்டம் சேருது.

அது என்ன பெரீய்ய பண்பு? ராம இலக்குவர்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்டவர் சுக்ரீவன். அனுமனுக்கு என்னமோ செய்யுதாம். வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி என்பது போன்ற ஓர் உணர்வு. எலும்பே உருகிப் போச்சாம். கம்பர் சொன்னா தப்பா இருக்குமா என்ன? (கொஞ்சம் ஓவர் பில்டப் என்றாலும் கூட). அந்த மாதிரி உணர்வு உள்ளவர்களைத் தேடித்தானே கூட்டம் வரும்.

அங்கே என்ன கூட்டம். ஒரே சிவனடியார்கள் கூட்டமா இருக்கே. அங்கே எப்படி கூட்டம் சேர்ந்தது? அங்கேயும் அந்து எலும்பு உருகும் நிகழ்வு நடந்திருக்குமோ? மாணிக்கவாசகர் விளக்கிக் கொண்டிருக்கிறார். நினைக்கும் போதும், பார்க்கும் போதும், பேசும் போதும் அட..எப்போதும் அனைத்தெலும்பும் உள்ளே உருகிட அன்பு செலுத்துகிறார். அப்ப கூட்டம் சேராதா என்ன?

ஐயன் வள்ளுவர் கிட்டே போனா… ரொம்ப சுலுவ்வா ஒரு வழி சொல்றார். நல்லவனா இரு. நாலு பேருக்கு நல்லது செய். உலகமே உன் பின்னால் வரும். அட இம்புட்டுதானா?

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

சுற்றமாச் சுற்றும் உலகு. (குறள் – 1025)

பொருள்

குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்.

குறளின் குரல் மீண்டும் ஒலிக்கும்.

அந்தமான் தமிழ்நெஞ்சன்

03-05-2022

என் செல்லக் குட்டி (யானை) ?


*என் செல்லக் குட்டி (யானை) ?*

[கார் நாற்பதில் கம்பராமாயணம்  – 29]

யானைக்கு மொத்தம் எத்தனை பெயர்கள் இருக்கின்றன தெரியுமா? ஒன்று, இரண்டல்ல, மொத்தம் 60 பெயர்கள் உள்ளனவாம். எல்லாமே தூய தமிழ்ப் பெயர்களாம். நமக்கு இதெப்பத்தியெல்லாம் கவலை இல்லை. குட்டியானைக்கும் ஏதாவது தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று தேடலாம். குட்டி என்றாலே ஒரு கிறக்கம் தான். இனி உங்கள் காதலியை, என் செல்லக்குட்டி, யானைக்குட்டி என்று கொஞ்சுவதற்குப் பதிலாக சும்மா அதக் குட்டியானையின் தூய தமிழ்பெயர் வைத்துக் கொஞ்சியும் தமிழை வளர்க்கலாமே என்ற நல்லெண்னம் தான், வேறு ஒன்றும் இல்லை.

”தென்பாண்டி கூடலா தேவார பாடலா…”  இப்படி ஒரு திரைப்பாடல் ஜேசுதாஸ் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அட தேவாரத்தைப் பற்றி ஏதோ சொல்றாங்க போலிருக்கே! அப்படியே அங்கே போய் எட்டிப் பார்த்தால், தேவாரத்தில் சுந்தரர் ஒரு வித்தியாசமான யானையை காட்டுவார்.  எல்லா யானைக்கும் 2 தந்தம் தானே இருக்கும்! நான்கு  தந்தங்கள் இருக்கிற ஒரே யானை ஐராவதம்.
பிரம்ம லோகத்தில் இருக்கிற யானைதான் அது. சூரன் சூரன் என்றொரு அசுரன் இருந்தானாம். அவர் கூட சண்டை போட்டப்போ அந்த நாலு தந்தமும் வெட்டி கிடாசுட்டார் அந்த சூரன். பெரிய சூரன்தான் போலிருக்கும் அசுரன்.  சரி அது யார் கிட்ட கேட்டா திரும்ப கிடைக்கும்? சிவபெருமானிடம் கேட்டா திரும்பக் கிடைக்குமாம்.

சிவபெருமான் இருக்கிற பக்கமா போயி எட்டிப்பார்த்தா அந்த ஊர் பெருமையை பாருங்களேன்; அந்த ஊர்ல மாடமாளிகைகள் இருக்கு. இந்த மாளிகை மேல யார் யார் இருக்கிறார்கள்? என்றும் செத்த பாக்கலாம்.  பொதுவா ஆண் (??) மயில்கள் தான் அழகா இருக்கும்; ஆனால் சுந்தரர் பார்வையில் அது பெண்மயில் மாதிரி படுதாம்.  அப்படித்தான் இளமையான பெண் கிளிகளும் இருக்காம்; இளைய மான்களுக்கும் பஞ்சமில்லை. எல்லாமே மாடத்திலே வீட்டு மாடத்திலே! இப்படி எல்லாம் சொல்ற ஊரு பேரு திருநின்றியூர்;  அங்க போயி ஒரு கும்பிடு போட்டதால்  பழையபடி அந்த தந்தங்கள் வந்துருச்சாம். நமக்கும் நம் குடும்பத்திலிருந்து விட்டுப்போன செல்வம், விட்டுப்போன உறவு இப்படி ஏதாவது இருந்தா இந்த சாமிக்கு ஒரு சலாம் வச்சா, திரும்ப கிடைத்துவிடும்; இதுதாங்க தேவாரம் சொல்லுது. அப்ப ஜேசுதாஸ் பாடையும் மனசுல அசை போட்டு விட்டு அசல் தேவாரம் பாடிப் பார்க்கலாமே

கோடு நான்குடைக் குஞ்சரம் குலுங்க
நலங்கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற
பெற்றி கேட்டு நின் பொற்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும்
பிள்ளைக் கிள்ளையும் என்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும்
நிலவு தென்திரு நின்றியூ ரானே

யானை பிழைத்த வேல் பற்றி ஐயன் வள்ளுவன் சொல்லியிருக்கார். ஆனா யானெயெக் குறிவச்சி, கிடைக்காத புலி பத்தி மூவாதியார் தன்னுடைய ஐந்திணை எழுபதில் சொல்லி இருக்கார். பிளந்த வாயை உடைய பெரிய புலி, யானையைத் தாக்கிய முயற்சி தப்பிப் போனதால் ஊர் மன்றத்தில் புகுந்து இரை தேடப் பார்த்துக் கொண்டிருப்பது போல், எண்ணிப் பார்க்காமல் பொருள் மீதுள்ள ஆசையால் தலைவன் சென்றுள்ளார். என் உயிரே, அவரது அருளைப் பெறலாம் என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறாயோ? தலைவியின் மைண்டு வாய்ஸ் எண்ண ஓட்டம் பத்தி சொல்லும் பாடல் இது.  

பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப் பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை, 
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து, 
வாழ்தியோ மற்று என் உயிர்?

ஐந்திணை எழுபது என்ற தொகுப்புப் பாடலிலும் கூட, குஞ்சரம் குடைந்து ஒழுகு கொட்பதால் – என்று யானை பற்றிய குறிப்பு வந்து கொண்டே இருக்கு.

கார் நாற்பது கொஞ்சம் வித்தியாசமான யானையினைக் காட்டுகிறது. நம்ம் ஹீரோயின் வானத்து மேகம் பார்க்கிறார். யானை மாதிரி தெரியுது. வழுக்கிட்டுப் போகுதே! ஒரு வேளை வெண்ணெய் தடவிய யானையோ? இருக்கலாம். சந்தரி சீரியலில் வரும் சுந்தரி மாதிரி கருமையும், கச்சிதமும், அழகும் பொருந்திய மையுண்ட கண்களையுடைய, மயில் போல சாயலினையுடையாய்! நெய் பூசிய யானைகள் போல கரிய மேகங்கள், நம் தலைவர் வருவது உறுதி என்று கூறி எழாமல் நின்றது. இதோ மீண்டும் குஞ்சரம் வரும் பாடல்.

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்; –
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12

கம்பன் கற்பனையில் யானை வரலை. குட்டி யானை வருது. யானைக் கன்று… இதுக்கு ஒரு தமிழ்ப்பெயர் இருகாம். கம்பன் சொல்கிறார். போதகம். இராமன் அப்படி இருக்கிறாராம். (நம்மளை எல்லாம் எந்த்க் குட்டியோடு ஒப்பிட்டாக என்று சொல்லவும் வெண்டுமோ?) சனகர் தன் மகளையும் இராமனையும் அந்த சிவனின் வில்லையும் மூன்றையும் மாறி மாறிப் பார்த்த காட்சியில் தான் இந்த மோதகம்…இல்லை இல்லை… போதகம் சிக்கியது. இதோ கம்பன் வரிகள். (தனியாக ஏதும் வரிகள் விதிக்கப்படாது)

போதகம் அனையவன் பொலிவை நோக்கி. அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கி. தன்
மாதினை நோக்குவான். தன்மனத்தை நோக்கிய
கோதமன் காதலன் கூறல் மேறினான்;

கார் நாற்பதில் இன்னும் ரசித்துப்படிக்க 11 பாக்கி இருக்கு.

மீண்டும் வருவேன்…

அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (30-04-2022)