யார் யார் கிழம்?


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 98
(29-08-2019)

இப்பொல்லாம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேவாரம் திருவாசகம் பாடும் சிவலோக அமைப்பிற்குப் போய் விடுகிறேன். மகனும் மகளும் ஒன்றாய் கோரஸாக, ’அப்பா உங்களுக்கு வய்சாயிடுச்சி’ என்பதை உறுதிப் படுத்தினர். அங்கே போனால், ஒரு சிறுமி, ’தாத்தா’ என்று யாரையோ கூப்பிட்டுக் கொண்டிருக்க, நான் சிவ சிந்தனையில் இருந்தேன். ’உங்களைத்தான் தாத்தா’ என்ற போது தான், என்னையே நான் உணர்ந்தேன். அடப் பாவிகளா… உண்மையிலேயே…. நான் தாத்தா ஆயிட்டேனா?; திரும்பிப் பாத்தா வெளக்கம் வேறெ வருது. ‘எங்கம்மா உங்களை அப்பா என்கிறார்கள்; அப்பொ நீங்க தாத்தா தானே? லாஜிக் சரியாத்தானே இருக்கு!

திரைப்படங்களில், ’நூறு வருசம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்…’ என்ற வாழ்த்துப்பா வருது. ’அண்ணே…!!, நூறு வருசம் வாழ ஒரு வழி சொல்லுங்கண்ணே…’ என்று கவுண்டமனியிடம் கேட்டால், அவரு திரும்பக் கேள்வி கேக்கிறார். ’சிகரெட் பீடி? தண்ணி கிண்ணி? பொம்பளை கிம்பளை? அப்படி இப்படி?’ – இப்படி எதுவும் இல்லை என, நல்ல புள்ளையா தலை ஆட்டினா, ’அப்புறம் என்ன ம….க்குடா 100 வயது வாழணும்?’ என்கிறார். அப்பொ வயோதிகம் வரை வாழ்வதே இதுக்காகத்தானா?

ஒரு காலத்தில் வாலிப வயோதிகர்களே என் அழைத்து ரோட்டோரத்தில் டெண்ட் கொட்டகை போட்டு பணம் பறித்து ஏதோ மூலிகை தந்து கொண்டிருந்தனர். ஆனா இப்பொ அதே டெண்ட் எல்லாம் உல்லாச உறைவிடமா Luxury Tent ஆ மாறி, வாடகை கொடுத்து தங்க வேண்டி வந்திருக்கு. ஆனால் அந்த வாலிப வயோதிக விளம்பரங்கள் மட்டும் வீட்டுக்குள் வந்திடுச்சி தொலைக்காட்சி வழியா… உங்களை வாழ்நாள் முழுதும், குறிப்பா வயோதிக வாழ்விலும் வாலிப இன்பம் தந்து மகிழ்விக்க எவ்வளவு ஈடுபாடோடு இருக்காக பாத்தீயளா?

வாழ்க்கை சந்தோசமாய் இருந்தால் வயது தெரியாது. எல்லா வயதிலும் மகிழ்வாய் இருக்கும் உத்தி தெரிந்தால் வயோதிகம் தெரியாது. ’உங்கள் பதிவுகள் படிச்சா மகிழ்வா இருக்கு. ஆனா எப்படி இம்புட்டு எழுத நேரம் கிடைக்கிறது?’ இந்தக் கேள்வி பலரால் கேட்கப்படுது. ’டைம் மேனேஜ்மெண்ட் பத்தி ஒரு வகுப்பு எடுக்கணும்’ என சக அதிகாரி அப்துல் ரஹ்மான் வேண்டுகோள் வைத்தார். ஆனா அதுக்குத் தான் நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது. சீக்ரெட் தெரிந்துவிடும் என்ற பயமா இருக்குமோ?
டைம் கிடைக்கதவர்களுக்கு, டைம் எப்படி உருவாக்குறது என்ற இரகசியத்தெச் சொல்றேன் சந்தோசமா கேட்டுக்கிடுங்க.
ஜாலியா ஆஃபீஸ் வேலை முடிச்சி ( ’பேய் மாதிரி’ என மற்றவர்கள் சொல்லக் கூடும்) வீட்டுக்கு வந்தா, இனியபாதி (மனைவிக்கு எத்தனை பெயர் என்று ஒரு பதிவு ஓடிகிட்டு இருக்கு; அதில் இல்லாத பெயர் இது… நோட் செய்ங்கப்பா..நோட் செய்ங்கப்பா) சீரியஸாக சீரியலில் இருந்தார். (மகிழ்வின் காரணம் “ர்” – புரியுதுங்களா?) நாமிருவர் நமக்கிருவர், ரோஜா எல்லாம் முடிய ஒரு மணி நேரம் ஆகும். அவர் கூடவே நீங்களும் சீரியலில் மூழ்கினால், உங்கள் நேரமும் வீண். தனியா… நைஸா.. விலகிட்டா அது உங்கள் டைம். அப்பப்பொ விளம்பர இடைவேளையில் கவனமாப் போய் சிரிச்சிப் பேசினால் இன்னும் அதிக ஆண்டுகள் நீங்க உயிர் வாழலாம். அதெ விட்டுப்போட்டு, சீரியல் பத்தி கிண்டல் அடிச்சீங்க… கதை கந்தல் தான்..

ஒரு விஷயம் தான் செமெ உறுத்தலா இருக்குதுங்க. பரமக்குடியில் பசுஞ்சாண சாம்பலில் தான் பல் விளக்கினோம். பல்லில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை அப்பொ; வயித்துப் பிரச்சினை வந்தால், வெத்திலை, நாலு மிளகு, கல் உப்பு சேத்து குடுப்பாங்க; போயே போகும்; சின்னக் காய்ச்சல் வந்து படுத்து, முழிச்சிப் பாத்தா சொத்தக்காரங்க வீடு முழுக்க இருப்பாய்ங்க. ம்.. இப்பொ… பசு என ஆரம்பித்தாலே திட்ட ஆரம்பிச்சிட்றாய்ங்க.

அவ்வப்போது நம்மைச் சுற்றி நிகழும் திடீர் மரணங்கள், பல கேள்விகளை எழுப்புகின்றன. 100 வருடம் வாழ ஆசைப்படும் நம் முன், 40 முதல் 50 வயதுக்குள் வரும் திடீர் மரணங்கள் யோசிக்க வைக்குது. வாழ்க்கை முறை மாறிப் போச்சி என்கிறார்கள் பொத்தாம் பொதுவா. நம்மைப் படைத்த ஆண்டவன் மேல் எனக்கு ஒரு கோபம் வருது. தாகம் எடுத்தால் குடித்தே ஆக வேண்டும்; பசி எடுத்தால் சாப்பிட்டாக வேண்டும்; மல ஜலம் இதெல்லாம் தடுக்க இயலாது; இப்படி வைத்த இறைவன், உடல்பயிற்சி செய்யாமல் இருக்க முடியாத மாதிரியோ, Stress at Work / Occupational Hazards ஐத் தடுக்கும் விதமாகவோ, உடலை ஏன் மாற்றி அமைக்கவில்லை?

மனதில் இதைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்த மாத்திரத்தில் ’விதுர நீதி’ இது குறித்து சொல்லும் வீடியோ பதிவு கிடைத்தது. சரியான நேரத்தில் கேட்காமலேயே அனுப்பிய முன்னாள் அதிகாரி பொய்யாமொழி அவர்களுக்கு நன்றி ( நாங்க மட்டும், கேட்ட ஆளுக்கா அனுப்புறோம்?) நம் ஆயுளை அறுக்கும் வாள் ஆறு என்கிறார் நம் விதுரர். 1. கர்வம் (Ego/Arrogance) (சிலது தமிழில் சொல்லா விளங்காது எம்பதால் எளிதாய் புரிய ஆங்கிலத்திலும் தந்துள்ளேன்) 2. அதிகம் பேசுவது 3. தியாக உணர்வு இன்மை 4. கோபம் 5. சுயநலம் & 6. துரோகம் (நன்றி: ஆலயம் செல்வீர் புலனக் குழு); இந்த ஆறிலிருந்து விலகி வாழ்ந்தால் நாம் நூற்றாண்டுக்கு மேல் வாழலாமாம். இதெத்தான் இங்கிலீஷில் சொன்னா கேப்பீக… தமிழ்லெ சொன்னா கேக்க மாட்டீயளே…

வயோதிகர்கள் கழங்களிலும், வாலிபர்கள் கண்ணோடு கண் நோக்குவதையும் இரசிப்பதால் எல்லாரையும் கவர்ந்தவன் கம்பன். வயோதிகம் பற்றிய கம்பர் பார்வை என்ன? என்று பார்க்கலாமே.. கிழவன் என்றால் அமைச்சராம்… எப்பேற்பட்ட அமைச்சன்? கல்வியில் சிறந்தவன்; எக்ஸ்பர்ட் ஒப்பீனியன் சொல்வதில் எக்ஸ்பெர்ட்; நல்லது எனப் பட்டால் அதைத் துணிந்து சொல்பவன். இனிமே தாத்தா என்றாலும் சரி.. கிழம் என்றாலும் சரி.. காலரைத் தூக்கிட்டு நடப்போம்லெ!

அதே நடையில் ஒரு எட்டு கம்பப் பாடலையும் பார்க்கலாம் வாங்களேன்….

’மாட்சியின் அமைந்தது வேறு மற்று இல்லை;
தாட்சி இல் பொருள் தரும் தரும மூர்த்தியைக்
காட்சியே இனிக் கடன்’ என்று, கல்வி சால்
சூட்சியின் கிழவரும், துணிந்து சொல்லினார்.

[யுத்த காண்டம் – வீடணன் அடைக்கலப் படலம்]

[தாழ்ச்சி இல்லாத மேலான ஞானத்தைத் தருமறமே வடிவமான இராமபிரானைக் கண்டு தரிசிப்பதே இனி நமக்குரிய கடமை. மாண்பு பொருந்தியது (சிறப்புடையது) இதைவிட வேறு எதுவுமில்லை என்று கல்வி மிக்க , ஆலோசனை கூறுவதில் வல்ல அமைச்சர்களும் தாம் எண்ணித் துணிந்த முடிவைக் கூறினர்.]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

வம்பன் பார்வையில் வம்பன்


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 97
(25-08-2019)

அவனவன் நூத்துக்கணக்கான ஃப்ரெண்ஸோட ரொம்ப நிம்மதியா இருக்காணுவ… நானு ஒரே ஒரு ஆளெ வச்சிகிணு படாத பாடு படும் அவத்தைகளின் (அவஸ்தை தாணுங்கோ… நான் தூய தமிழ் வாரத்தைகளை தவிர்க்கிறேன் என்ற புகாரை தவிர்க்கும் விதமாய் பயன் படுத்தியது) புலம்பல் கேட்டிருப்பீங்க. எனக்கு என்னவோ, இலக்கியக் கூட்டங்களில் போகும் போது ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை வந்து சேரும். பின்னே சந்திக்கும் இலக்கியவாதிகள் எல்லாமே நூத்துக்கும் அதிகமான நூல் எழுதியோர் தான். எப்படி இது சாத்தியம்? என்ற கேள்வியை முந்திக் கொண்டு, ’எப்படி அவுக சம்சாரம், இதையெல்லாம் கண்டுக்காமெ இருக்காக?’ என்ற கேள்வி வந்து விழும்.

கம்பன் பற்றிய முதல் நூலான “பாமரன் பார்வையில் கம்பன்” வெளியிட நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதெல்லாம் தாண்டி இப்பொ மூன்றாவது நூலாக ’வம்பன் பார்வையில் கம்பன்’ என்றதும் இதுவரை ஆதரவு தந்த பிரசுரமே யோசிக்கிறது. ”வம்பன்” என்பது ஏதோ லோ பட்ஜெட் படம் மாதிரி இருக்கு போல, ஏதேதோ காரணம் சொன்னார்கள். வம்பன் பேர் வச்சி 100 தொடர் வரும் இந்த நேரத்தில், இப்படி ஒரு சிக்கல். (சிக்கல் என்பது மூணு முடிச்சிலும் வரலாம்; நூறு பதிவிலும் வரலாமோ?

ஆமா… தெரியாமத்தான் கேக்கேன்? பாமரன், சாமாண்யன் மாதிரி வம்பன் ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி. நல்லாத்தானே இருக்கு? வம்பன் என்ன கெட்ட வாரத்தையா என்ன?

சொல்லப்போனா “கம்பன் ஒரு வம்பன்” என்று அண்ணா காலத்து, மீம்ஸ் மாதிரி, அப்பவே சொல்லி இருக்காய்ங்களே…? போதாக்குறைக்கு, பாரதிக்கே ’கம்பனைப் புகழ்ந்த வம்பன்’ என்று பெயரும் இருக்கே! (அது நல்ல பெயரா? கெட்ட பெயரா? தெரியலையே? இதில் தானே சிக்கலே உள்ளது அமைச்சரே)

அமைச்சர் என்றவுடன், மெத்தப் படிச்ச அமைச்சர் நமக்குத் தெரிந்து, மாணிக்கவாசகர் தான் இருக்கார். அவர் கிட்டெ கேட்டாக்க, அவரே தன்னை ஒரு வம்பர் என்று சொல்லிக்கிறார். (என்ன இந்த அமைச்சர்கள் செய்யும் கூத்து?) “வம்பனேன் வினைக்கிறுதி இல்லையே” என்று ஆனந்தாதீதத்தில் புலம்புகிறார். ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன் என்பதாய் பயனிலி என்பது தான் வம்பன் என்பதற்க்கு பொருள் சொல்கிறார்கள். மாணிக்கவாசகர் தன்னை ஒரு வம்பன் எனச் சொல்லும் போது, அதை எப்படி புறம் தள்ளிட முடியும்?

அப்பொ இலங்கைக்கே போய் அங்கே இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அய்யாகிட்டெ விளக்கம் கேக்கலாம்ணு போனா, அங்கே அவருக்கு கருப்பு கொடி காட்டிகிட்டு இருக்காய்ங்க.. (அவருக்குமா….?) கம்ப வாரிதிக்குப் பதிலாக வம்ப வாரிதி அல்லது வம்ப வாரிசு எனப் பட்டம் தரலாமா என்று கி.பி. அரவிந்தன் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார். (கி பி யோசித்து, க வா யா? அல்லது வ வா ஆ? என முடிவு செய்தாரா? என்பது பற்றி தகவல் இல்லை.) கிமூ ரேஞ்சில் 1894 இல் ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல்லெ கூட வம்பன் வர்துங்கோ…; அதில் வம்பர் பகாசபைக்குத் தலைமை தாங்கும் சுப்பம்மாள் கேரக்டெர் செய்யும் வம்புகளுக்கு அளவே இல்லையாம். (முழு நாவலும் நெட்டில் கிடைக்கிறது; நான் வம்பன் குறிப்பு மட்டும் படிச்சேன்)

இலக்கிய உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஜெயமோகன் அவர்களும், இலக்கிய வம்பர்கள் என்ற பட்டியலில் அசோக மித்ரனையும் சேர்த்துள்ளார். (ஆக வம்பன் என்பதில் சகட்டு மேனிக்கு A to Z எல்லாரும் இருப்பாகளோ?). பொதுவா இணைய உலக விளக்கப்படி அடிக்கடி கேள்வி கேட்பவர்களுக்கு பொத்தாம் பொதுவாய் வம்பர் என்பார்களாம். கூகுள் பொய் சொல்லாதுங்கோ… (நன்றி: கோமாளி திரைப்படம்.)

பெரிய பெரிய் கோயில் எல்லாம் கட்டிய சோழர்களின் தாத்தாவுக்குத் தாத்தா, உருவப் பல்தேர் இளஞ் சேட் சென்னி (பெயர் மட்டும் சிறுசா இருக்குமா என்ன?) வம்பர், வடுகரை ஜெயிச்சவர் என்று அகநாணூறு சொல்லுது. (கூகுலே பொய் சொல்லாது என்றால், அக400 மட்டும் பொய் சொல்லுமா என்ன?) அப்பொ வம்பர் என்பது ஏதோ ஒரு குட்டி(க்கு) ராஜாவையாவது குறிகலாம். (காலரை தூக்கி விட்டுக்கலாமா அப்பொ?)

ஒரு எட்டு கருப்புச் சட்டைக்காரர்கள் பக்கமும் போய் விசாரிச்சேன்.. வட சொல் தமிழ்ச்சொல் அகராதியில் துஷ்டன் என்பதற்க்கு தமிழாக தீயவன், பட்டி, வம்பன், பொல்லான், கொடியோன் என்ச் சொல்லி இருக்கு. ஏனுங்க என் மொகத்தெப் பாத்தா அப்படியாங்க இருக்கு? [என் பதிவுகளை ஹிந்தி ஆக்கம் செய்ய வேண்டுகோள் வருது. வடிவேலின், ’வடெ போச்சே?’, ’ஆணியே புடுங்க வேணாம்’ என்பதை எப்படி ஹிந்தியில் சொல்வது என முழிக்கிறேன்) ஐய்யய்யோ தப்பான எடத்தில் ஹிந்திட்டேனோ? என்னது வம்பன் காலனியா? வம்பன் நால் ரோடா? புதுக்கோட்டை மதிமுக பெரும்புள்ளி இருக்கும் இடமா.. என்ன இது பெரும் வம்பா போச்சி?

”என் இனிய வம்பனே! வம்பனுக்கு இன்னொரு பொருளும் இருக்கு தெரியுமா?” கம்பர் கிளைமாக்ஸில் வரும் ரவிகுமார் போல் வந்தார்.

”தெரியாதே சாமீ… “ வழக்கம் போல் நான்.

“அப்போ… தம்பி உடையான்….”

”படைக்கு அஞ்சான்…” முந்திக்கொண்டு முடித்தேன்.

“அதான் இல்லை. தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்… அதே பாட்டில் வம்புக்கு வேறு பொருள் கிட்டும். பாரு கிட்டு… “ சொல்லி மறைந்தார் கம்பர்.

ஆமா… வம்பு என்றால் வாசனை எனவும் பொருள் இருக்காமே… அப்பொ வம்பன் என்றல், மணமுள்ள கிட்டுவா நான்? ஆஹா… பாரதிராஜா படத்து ஹீரோயின்களின் தோழிகள் கூட வார மாதிரியே இருக்கே…!!!

வாங்க… அதே வாசத்தோட, பாசத்தோட அந்த வம்பு பற்றிச் சொன்ன பாட்டும் படிக்கலாம் … வாங்களேன்.

‘கம்ப மதத்துக் களி யானைக் காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க் கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்,
”தம்பி உடையான் பகை அஞ்சான்” என்னும் மாற்றம் தந்தனையால்.
[யுத்த காண்டம் – இந்திரசித்து வதைப் படலம்]

[(இலக்குவ! நீ இந்திரசித்தனை வென்றதனால்) அசைந்தாடும் இயல்புயை மதக்களிப்பு மிக்க யானை போன்று தன் இனத்தைக் காக்கும் காவற்சிறப்பினை உடைய சனகன் பெற்ற பூங்கொம்பு போன்றவளாகிய சீதையும் இனி என்னிடம் வந்து நெருங்கிவிட்டாள் என்று மனங் குளிர்ந்தேன்; மணம் நிறைந்த தாமரை மலரைக் கோயிலாகக் கொண்ட பிரமன் படைத்த இப்பெரிய உலகத்தில் ”தம்பியை உடையவன் பகைக்கு அஞ்சமாட்டான்” என்னும் சொல்லை எனக்குத் தந்தனை” (என்று பாராட்டினான்).]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்

சொல்லாமலே யார் செய்தது?வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 96
(22-08-2019)

யதார்த்தமா எங்காவது வீட்டை விட்டு வெளியே போயிட்டு வந்தாலே, ”என்ன சொல்லாமெ கொள்ளாமெ எங்கே போய்த் தொலைஞ்சீங்க?”  என்று வீட்டில் திரும்பியவுடன் பாட்டு விழும். இந்தியாவின் அத்தனை பார்வையும் ’ப சி’ வீட்டு கதவுப் பக்கம் பாத்திருக்கிறப்போ, அவங்க திருமதியும் இப்படித்தான் ”சொல்லாமெ கொள்ளாமெ எங்கே போனீக?” என்று கேட்டிருப்பாகளோ? அவங்க சொல்லாமெ நமக்கு எப்படி தெரியும்?

’ப சி’ சொல்லாமல் வீட்டை விட்டுப்போனது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தச் ”சொல்லாமலே…. யார் பார்த்தது “ என்ற 1995 வாக்கில் வந்த பாட்டு ஞாபகம் இருக்கா? என்ன…? சுத்தமா ஞாபகத்தில் இல்லையா? அப்பொ அந்தக் காதல், பின்னிப் பெடல் எடுத்த வரிகள் சொன்னால் ஞாபகம் வந்து விடும். மழை சுடுகின்றது; தீ குளிர்கின்றது; பஞ்சு மெத்தை முள்ளைப் போல குத்துகின்றது; முந்தானை காதல் வலை; நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடை;  வாவ்… என்னே ஒரு …இல்லை இல்லை பல கற்பனைகள்! ஆனா பாடகர் ஜெயசந்திரன் குரல் தான் விஜய்க்கு ஒட்டாமலே தனீய்யே நிக்குது..

முதன் முதலில் கேட்டபோது அந்த ஹம்மிங் இளையராசா குரல் மாதிரியே இருந்தது. (நல்ல வேளை யாரும் சொல்லாமலே இருந்திருந்தால் தெரியாமலே போயிருக்கும்); கோவை சி ஐ டி காலேஜ் படிக்கிறப்பொ தண்டபானி தண்டபானின்னு ஒரு நண்பன் இருந்தார். (ஒரு ஆளு தாணுங்க.. இப்பொ பெரீய்ய பதவியில் இருப்பதால் இருந்தார் என மருவாதைய்யா சொல்றேணுங்கோ) மெல்லிய குரல். ’அது வந்துட்டு, இது வந்துட்டு’ என குழந்தைத் தனமாய்ப் பேசும் குரல். இப்பத்தான் அதுக்கு பேரு ஹஸ்கி வாய்ஸ் என்றும், இளையராசா குரலுக்கு அது ஒத்துவரும் எனவும் யாரோ (சொல்லாமால்) சொன்னாய்ங்க. சமீபத்தில் நம்ம காலேஜ் இளசுகளோட இந்த இளசும்(??!!) போய் இளையராசா பாடல் பாடி மூணு மணி நேர இசைக் கச்சேரியில் கலக்கிட்டு வந்தாருங்க என்பதைச் சொல்லத்தான் இம்புட்டு ரகளை.

கொஞ்சம் பத்திரிக்கைகள் சொல்றதையும் பாக்கலாமே! போர் போட்ட குழியில் விழும் குழந்தையை எடுக்க ரஷ்யர்கள் என்ன செய்றாக தெரியுமா? (ஆக, குழந்தைகள் குழிக்குள் விழுவது உலகப் பிரச்ச்னை என்பது மட்டும் புரியுது) ஒல்லியான சிம்ரன் (பழைய ஸ்லிம்) மாதிரி நபரை தலைகீழா அனுப்பி குழந்தையை எடுப்பாகளாம். சொல்றாய்ங்க. நம்மூர்லெ அப்புடி யாரும் நெனெக்கவும், நம்ம டீவிக்காரெய்ங்க உட மாட்டாகளே! ஒரு கொழந்தெ விழுந்தா, ஒரு வாரம் அதெ வச்சித்தானே அவெய்ங்க பொழெப்பு ஓடுது. இதெல்லாம் நாம எதுக்கு சொல்லிகிட்டு…? ஒவ்வொரு டிவீக்கும் பின்னாடி ஒரு பெரீய்ய கூட்டமிருக்கு.

சமீபத்தில் படிச்ச சேதியெச் சொல்றேன் கேளுங்களேன்…

“…தற்காலம் நம்நாடு பலவித ஊழல்களை மேற்கொண்டிருக்கிறது. மதம் ஒடுங்குகின்றது. மதகுருமார்கள் தங்கள் கடமைகளைச் செய்யப் பதுங்குகின்றனர். வாலிபர் மிஞ்சுகின்றனர். மாதர்கள் கடமையை நிராகரிக்கின்றனர். பாஷ மறைகின்றது. தெய்வபக்தி குறைந்துவிட்டது…”

இது என்னவோ தமிழக அரசு அல்லது மத்திய அரசு பற்றிய விமர்சனம்ணு நீங்க சொன்னா, அது 100 க்கு 100 தப்புன்னு நான் சொல்லுவேன். இது 1-2-1926 இல் எழுதப்பட்ட நிலவரமாம் (நன்றி சொல்வோம் விகடன் பொக்கிஷத்துக்கு)

”என்ன ஒரு வில்லித்தனம்?” என்று கேட்டபடி கம்பர் சொல்லாமலேயே உதயமானார்.  

வில்லத்தனம் தானே நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதென்ன வில்லித்தனம்? அப்பாவியாய் (அதான் என் ஒரிஜினல முகமாச்சே) கேட்டேன்.

”வில்லனின் தங்கையை வில்லி எனச் சொல்லலாம் தானே? சூர்ப்பனகை இங்கே ’சொல்லாமலே….’ ஸ்டைலில் சொல்லும் சேதி சூப்பர். கொஞ்சம் இதையும் தான் பாரேன்…” சொல்லி மறைந்தார் கம்பர்.

சூர்ப்பனகை மூக்கு அறுபட்ட இடம். நாமளா இருந்தா, அழுது ஆர்ப்பாட்டம் செய்து மூக்கு சிந்துவோம். ஆனா நம்ம ஹீரோயின் சூர்ப்பனகைக்கு சிந்த மூக்கே இல்லையே? அப்பொ அவுக ஹீரோ இலக்குவன் கிட்டெ சொன்னாகலாம்; எம் மேலே எம்புட்டு ஆசை? நான் அழகா இருந்தா வேறு யாராவது டாவடிப்பாகண்ணு என் மூக்கை எடுத்தீயளே! ராசா…என் ராசா.. என் இளைய ராசா… என சொல்லாமல் சொன்னாகளாம். (அப்பொ காதலி முகத்தில் ஆஸிட் வீசுறதும் இதுக்காகவா? இப்புடி எல்லாம் கேள்வி கேட்டா நம்மாலெ பதில் சொல்ல முடியாது சாமி)

கம்பர் இப்படி எல்லாமா எழுதி இருக்காரு? இப்படி சந்தேகம் வருதா? இதுக்குத்தான் கம்பர் பாடல் படிக்கச் சொல்றேன். வாங்க படிக்கலாம்.    

பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண,
மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ?
“இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்து
ஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்;
பின், இவளை அயல் ஒருவர் பாரார்”
என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ?
அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி
பூண்டது நான்? அறிவு இலேனோ?

 [ஆரணிய காண்டம் – சூர்ப்பணகைப்  படலம்]

[பொன்னால் ஆக்கப்பட்ட அழகுள்ள வீரக்கழல் அணிந்தவரே! பெருந்துளைப் படும்படி என் மூக்கை அறுத்ததற்க்கு வேறு ஏதேனும் பொருள் உள்ளதா? எதுவெனில், மூகறுபடலுக்கு முன்னிருந்த இனிய அழகிய வடிவம் இதைக் கொண்டு இவ்விடத்திலிருந்து சென்றுவிடுவாள் நம்மை விட்டு. மூக்கை இழந்த பின் வேறு இடம் செல்லாள். பின்னர் இப்பெண்ணை மற்றவர் எவரும் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார் என்று என் மூக்கை அறிந்தீர். ஆதலால் நீங்கள் தவறு செய்தவர் ஆவீர்களோ? மாட்டீர். அவ்வுண்மையை அறிந்து அல்லவா உங்களிடத்து இரு மடங்கு அன்பு நான் கொண்டேன். நான் இதை உணராத அறிவு இல்லாதவளா? இல்லை.]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

வருதப்பா….வரதப்பா…வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 95
(17 -08-2019)

கோடிக்கணக்கில் நேரிலும், சமூக வலைதளங்களிலும் அத்தி வரதரை தரிசித்த பக்த கோடிகளின் மனம், இப்பதிவிற்காய் சிரமப்பட்டால், அதற்காய் முன்கூட்டியே வருந்துகிறேன்.. ஆமா… அப்படி தெரிந்தும் ஏன் எழுதுறே? – இது என் மன சாட்சி? மனசாட்சியைத்தான் யாரும் மதிப்பதில்லையே? நான் மட்டும் விதி விலக்கா என்ன? சும்மா ஒரு நகைச்சுவைக்காய்த் தானே?

ஆமா..ஆமா… அத்திதாராவா? நயன் வரதரா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு அத்தி வரதர் பத்தி சகட்டு மேனிக்கு எல்லாரும் எழுதிய பிறகும் நான் எழுதலைன்னா? (தமண்ணா தரிசனம் செய்ய வருமுன் நடை சாத்திட்டாங்களே…? என்ற வருத்தம் லேசா ஒரு மூளையில் ஓடுது) அப்புறம் மேலே இருக்கும் கணக்குபிள்ளை சித்திர குப்தன் கேக்க மாட்டாரா? ஏன் எழுதலைன்னு? அவர் கேக்கலைன்னாக்கூட கேக்குறதுக்கும் ஆள் இருக்கில்லெ!! கொச்சியில் இருக்கும் நெல்லை பழனிராசு கேப்பாக!!  ஆஃபீசுக்கே நேரில் வந்து பதிவு இன்னுமா எழுதலைன்னு  கேட்ட ரஞ்சன் டேனியல்,  (மதிய உணவுக்கு 2.45க்கு வீட்டுக்கு போய், மாலை 6 மணிக்கு தயாராய் இரு… கோவிலுக்குப் போலாம் எனச் சொல்லி, இரவு 8.45 க்கு வீட்டுக்குப்போய் இலத்தரசியிடம் பாட்டு வாங்கியது யார்க்குத் தெரியும்? – ஆனா அந்தப் பாட்டின் ஊடே, ஹைலைட் வார்த்தை வந்து விழுந்தது – நீங்க 6 மணிக்கு வந்திருந்தா, அது தான் பெரீய்ய ஆச்சரியம்!!! ஆஹா… என்ன ஒரு புரிதல்), இந்த மனுசனுக்கு எப்படி பாட்டு (இங்கே சொல்வது கம்பன் பாடுங்கோ) கெடெக்குது? என ஆச்சரியப்படும் இலக்கியச் சுடர் இராமலிங்கம்… இப்படி பலர் சுத்தி இருக்காகல்லே!!

”வருதப்பா வருதப்பா கஞ்சி வருதப்பா…” என்று ஒரு பாட்டு அக்காலத்தில் செமெ ஹிட்டு. கைரிக்‌ஷா இழுப்பவராக வந்து நடிகர்திலகம் தன் திறமை எல்லாம் கொட்டி நடித்துத் தீர்த்தபடம் அது. ஆனால் அதே காலகட்டத்தில்  புரட்சித் தலைவர் ஜாலியா பாடி ஆடிய ரிக்‌ஷாக்காரன் படமும் வந்தது. அதுக்கு பெரீய்ய அவார்ட் எல்லாம் கெடெச்சது. [அழகிய தமிழ்மகள் இவள்….. இப்பொ ஞாபகம் வந்திருக்குமே?] இந்த ரெண்டு படம் பாத்து நம்ம எம் பி ஏ படிச்ச மூளைக்கு எட்டுவது என்னவென்றால், ஹார்ட் ஒர்க்கை விட ஸ்மார்ட் ஒர்க் தான் ஒசத்தி… (சந்தடி சாக்கிலெ நான் எம்பிஏ படிச்சதையும் சொல்லிட்டோம்லே… எப்புடி???)

சரி..சரீ… அந்த வருதப்பா வருதப்பா பாட்டுக்கே வருமோம்…பள்ளிக் காலத்தில் நண்பர்களான வரதர்களை கலாய்க்க அது செமெ யூஸ் ஆச்சி. சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக் கொண்ட வரதராஜன் இப்போதும் சிரித்துக்கொண்டே ஊசி போடும் குழந்தை நல மருத்துவர் ஆயிட்டார் எமனேஸ்வரத்தில். பரமக்குடியில் ஒரு சுந்தரராஜப் பெருமாள் என்றால், ஆற்றின் மறுகரை எமனேஸ்வரத்தில்  அருள் பாலிப்பவர் வரதராசப் பெருமாள். கல்லாரியில் படித்த வரதராசனும் அந்தக் கிண்டலை சிரித்தே ஏற்றது தான் உச்சம். என் பதிவை படித்து ரசிக்கும் மெரீன் ஸர்வேயரும் சரீ, அகில இந்திய வானொலியில் கலக்கும் நண்பராகட்டும், பணி நிறைவு ஆனாலும் அடிக்கடி தொடர்பில் வரும் என் பழைய அதிகாரி என வரதராசர்கள் பலர். எல்லார்க்கும் பொது அம்சம், அந்த அத்தி வரதர் போல் சிரித்த முகம். எந்த வீட்டில் கொடூர, வெளியே வராத வரதமுகம் இருக்குமோ? யாருக்குத் தெரியும்? அந்த அத்தி வரதருக்கே வெளிச்சம்!!

சரியான நாட்டுக் கட்டை என்று தச்சர்கள் (அதாங்க தமிழில் கார்பெண்டர்கள்) சொன்னதை விட அதிகம் மன்மத லீலைக்காரர்கள் சொல்லி இருப்பார்கள். இதே பாணியில் திம்ஸுக்கட்டை… ஓஹோ திம்ஸுக் கட்டை என்று உற்சாகமான் பாடல் ஒன்று இருக்கு. [உடனே உங்கள் கண்ணில் மின்னலடித்தாற் போல் “ஜோதிகா” தோன்றினால், நீங்கள் மரத்தமிழர். இல்லையென்றால் மற(ந்த)தமிழர். ஆனால் அத்திமரக் கட்டையில் செய்யப்பட்ட வரதர் புகழ் உலகம் பூரா பரவிடுச்சே…

பொதுவா ஒரு கற்சிலையானது பூசை செய்யச்செய்ய அதன் சக்தி கூடுதல் ஆகும் என்கிறார்கள். (அரசியல்வாதிகளின் சிலையும் இதில் அடங்குமா? என வம்பா கேக்காதீங்க ப்ளீஸ்…) கட்டையும் இப்படித்தான். மரத்தை வெட்டி தண்ணீரில்  ஊற வைத்த கட்டைகளுக்கு வலிவு அதிகம். அந்தமானில் முன்பெல்லாம் இப்படித்தான் செய்தார்களாம். இப்பொ அதுவரை பொறுத்துக்கொள்ள நேரமில்லை. அந்தமான் காதலி படத்தில் தான் அது போன்ற கட்டைகளை ஊற வைக்கும் காட்சிகள் பாக்க வேண்டி இருக்கு.

சாதாரண கட்டைக்கே இம்புட்டு வலிமை. ஊற வச்சா… அப்பொ  அத்திக் கட்டையில் செய்து, 40 வருஷம் ஊற வச்ச வரதருக்கு வலிமை இருக்காதா என்ன? (ஹலோ..ஹலோ… நான் என்ன ஊறல் பத்தி சொல்லிக்கிட்டிருக்கேன்.. நீங்க எதெப் பத்தி யோசிக்கிறீங்க… ஆனாலும் டாஸ்மாக் ரொம்பத்தான் தமிழ்நாட்டெ கெடுத்திருச்ச்சி)

“கிட்டு… அத்தி என்றால் என்ன தெரியுமா?” கம்பர் உதித்தார்.

“அத்திக்காய் காய் காய்..

அத்தி பூத்தார் போல்… இது தானே! வேறு என்ன இருக்கு ஐயனே?” இது நான்.

”கடலும் கடல் சார்ந்த இடத்திலும் இவ்வளவு ஆண்டுகளா வேலை செய்தும் இந்த ’அத்தி’ என்றால், ’கடல்’ என ஒரு பொருள் இருப்பதை அறியாமல் இருக்கியே! கிட்கிந்தா காண்டம் ஒழுங்காப் படி” மறைந்தார் கம்பர்.

அட… நானு எதையும் ஒழுங்காப் படிக்கிறதில்லை என்கின்ற சேதி கம்பர் வரைக்கும் போயிடுச்சே… புரட்டினேன் கிட்கிந்தா காண்டத்துப் பாடலை. அடெ… ஆமா.. அத்தி என்றால் கடலாமே…கொரங்குப் படையெப் பாத்து பிரமிச்சுப் போனாகளாம் இராம லெட்சுமணர்கள். அத்தி மாதிரி இருக்கா? Not exactly like that but… என்று தசாவதாரம் கமல் டயலாக் போல் வரும் அந்த பாட்டையும் ஒரு எட்டு பாக்கலாம் வாங்களேன்.

அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்;
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதொ?
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒஅருவலர் பார்ப்பர்,
எத்திறத்தினூம் நடுவு கண்டிலர், முடிவு எவனோ?

 [கிட்கிந்தா காண்டம் – தானை காண்  படலம்]

[இச்சேனைத் தொகுதிக்கு கடல் நிகராகும் எனக் கூறினார், அக்கடல்களின் அளவைக் கண்டறிந்தவர்கள் இருக்கின்றார்கள். இச் சேனையின் பரப்பைக் கண்டவர்கள் இல்லை. இனி மேல் அறிவு உடையவரால் இச்சேனைக்கு எடுத்துக் கூறும் உவமை வேறு என்ன உள்ளது? எதுவுமில்லை. இருபது நாட்கள் இரவிலும் பகலிலுமிடைவிடாமல் பார்ப்பவராகிய இராமலக்குவர் எவ்வகையாலும் இச் சேனையின் நடுவையும் காணாதவராயினர். அவ்வாறானால் இதன் முடிவெல்லையைக் காண்பது எவ்வாறோ?
அத்தி – கடல்]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

இதெல்லாம் நமக்கு ….


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 75
(29-01-2019)

ஒரு மேட்டரெ, ரொம்ப ஈசியா செஞ்சி முடிப்பதை, ‘தண்ணி பட்ட பாடு’ என்கிறார்கள்.  (எந்தத் தண்ணி? – இப்படி எல்லாம் கேக்காதீங்க ப்ளீஸ்) தண்ணி ஒரு இடத்திலெ பட்டா சட்டுன்னு வெரெஸ்ஸா எல்லாப்பக்கமும் போகுதே, அதெ வச்சித்தான் இப்படிச் சொல்லி இருப்பாங்களொ! ஆனா சும்ம சொல்லக்கூடாது; தண்ணியெ வச்சி எத்தனெ பழமொழிகள் சொல்லி வச்சிருக்காங்க! தாயெப் பழித்தாலும் தண்ணியெப் பழிக்காதே தொடங்கி, தண்ணியில்லா காட்டுக்கு (அட நம்ம இராமநாதபுரம் தானுங்க) மாத்துவது வரை ஏகமாக் கொட்டிக் கிடக்குது. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் என்பது அந்தக்கால ’கோழி குருடானாலும் குழம்பு ருசி’ டைப். தண்ணியெ வச்சி பழமொழிகளே தண்ணிபட்ட பாடா இருக்கே! என்று தான் நினைக்கத் தோனுது.

ஹிந்தியில் இதே மாதிரி அர்த்தம் வரும் வகையில், இதெல்லாம் என்னோட இடது கை வெளாட்டு என்பார்கள் (ஏ தோ, மேரா பாயே ஹாத் கா கேள்) அது என்ன இடது கை விளையாட்டு? என யாரும் கேட்டதில்லை. நமக்கு என்னமோ இந்த டயலாக் கேட்கும் போதெல்லாம், தேவர் மகன் படத்தில் கை வெட்டப்பட்டு நிக்கும் வடிவேலு சொல்லும் டயலாக் தான் ஞாபகத்திலெ வந்து நிக்கும்… ‘ என்ன….. , சோத்தெச் சாப்பிட்ற அதே கையாலெ….’

தமிழ்ச் சினிமா நமக்கு, முதல்வர்களை மட்டும் தரவில்லை; கூடவே பல வார்த்தைகளுக்கு சிறப்பு அந்தஸ்தும் தந்திருக்கு. உதாரணமா, சம்பவம்; தூக்கியிரலாமா?; சின்னவீடு; கொலெவெறி; இப்படிப் பல. ரஜினி புண்ணியத்தில், இதில் இன்னொரு வார்த்தையினையும் சேர்த்துக்கலாம் . அது தான் “ஜுஜுபி”; ரொம்ப ரொம்ப சுலுவ்வா ஒரு வேலையெச் செய்ய உதவும் ரஜினித்தனம் தான் அந்த ஜுஜுபி.

சமீபத்தில் சுந்தரர் பிறந்த ஊரான, திருநாவலூர் போயிருந்தோம் கூகுள் டைரக்சன் வைத்து. அங்கே போனா, தேவார வகுப்பு நடக்குது. தேவாரம், திருவாசகம், பண், ராகம் என்றாலே ஒன்றும் விளங்காது என கொட்டாவி விடும் கூட்டம் தானே நாமெல்லாம். கத்துக்க வந்தவங்களைப் பார்த்தா, எல்லாருமே கிராமத்து சிறுவர் சிறுமிகள். (அப்படிக்கா பாக்கும் போது அன்னாச்சி கடை ஊழியர்களின் சின்ன வயது தோற்றங்கள்); தத்தன தானன்னா…என ஓதுவார் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

’நமக்குப் புரியாத சங்கதி, எப்படி இந்தக் கிராமத்துப் பொடியன்களுக்குப் புரியுது?’ என மண்டெ அப்படியே சூடாயிடுத்து. பசங்க கூட தரையில் உக்காந்து, வாத்தி(யார்) சொல்லிக் கொடுக்காமெ நீங்க ஒரு பாட்டாவது பாடிடுவீங்களா? என்றேன். ’முடியாது’ என்ற பதில் வரும் என்ற நம்பிக்கையில்.

ஆனால் எங்களுக்கு அதெல்லாம் ஜுஜுபி என்று சொல்லாமல், ஒரு பாட்டைப் பாட அரம்பித்தனர். “தான் எனை முன் படைத்தான்…” என்ற பதிகத்தை அவர் பிறந்த இடத்தில், இவ்வளவு ஆண்டுகள் கழித்து, அதே கிராமக் குழந்தைகள் பாடுவதைக் கேட்க அப்படியே கண் கலங்கிவிட்டது. (நானும்  யூ டியூப்பில் அதே பாட்டைப் பாட டிரெ செய்றேன்…ம்ஹும்; முடியலை. நாவலூரில் பிறக்க வேண்டுமோ என்னமோ தெரியலை)

இதேமாதிரி ஒரு ஜுஜுபித்தனம் ஜெய்பூரில் தென்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் தான் சாமி அது. ஏதோ ரெண்டாவது காசி, ரெண்டாவது கங்கை என என்னென்னவோ சொல்லி ஒரு இடத்துக்கு போகச் சொன்னார்கள். வழிமறித்தது பெண் போலீஸ்; அந்த இடத்துக்கு மகளிர் மட்டும் நிர்வானமாய் குளிக்கும் வேண்டுதல் செய்யும் இடமும் இருக்காம். (ஏன் இப்படி தப்பாவே யோசிக்கிறீங்க? சத்தியமா அது தெரிஞ்சிருந்தா குடும்மத்தோடு போவேனா?)


சரீ… அதெ விடுங்க; சொல்ல வந்த மேட்டருக்கு வருமோம். அதுக்கும் பக்கத்தில் நம்ம ஊர் ஸ்டைலில் செமெ கோயில். அட நம்ம இராமாநுஜருக்குத் தானுங்க ஜெய்பூர்லெ கோயிலு. அதை ஒட்டி ஒரு இராமாநுஜர் மடம். அதில் ராஜஸ்தானீய பொடிசுகள். கையில் ஹிந்தியாக்கம் செய்யப்பட்ட ஆழ்வார் பாசுரங்கள். நம்ம ஹிந்திப் புழமை எல்லாம் ஒன்று திரட்டி, ”எங்கே தமிழ் பாசுரம் பாடுங்க பாக்கலாம்” என்றேன். ம்…இதெல்லாம் நமக்கு ஜுஜுபி என்று சொல்லாமல், ஆண்டாள் பாசுரத்தை  (மோடியின் தமிழ் உச்சரிப்பு மாதிரி எல்லாம் இல்லாமல்) அப்படியே பரமக்குடி கோவிலில், பொங்கல் பிரசாதம் சாப்பிடுவதற்கு முன், கேட்ட அதே உணர்வு. காலில் விழுந்து சேவிக்க வேண்டும் போல் தோணித்து.

“ஏன் நாங்க மட்டும் ஜுஜுபி எல்லாம் சொல்ல மாட்டோமா?” கம்பர் வந்தார்.


இராமாயணத்தில் எப்புடிங்க?

எல்லாரும், ’தான் தான் ஜுஜுபி’ என்பார்கள். ஆனா நாம் அப்படி இல்லெ. மூனு ஜாம்பவான்களையே ஜுஜுபி என்கிறோம். யாரு தெரியுமா அந்த மூவர்? படைக்கும், காக்கும், அழிக்கும் தொழில் செய்யும் மூன்று கடவுளார் பிரம்மா, விஷ்ணு, சிவன் கள் தான். சீதை இராவணனைப் பாத்து, அடேய் கொடியவனே! நீ என்ன அந்த மூணு ஜுஜுபி மாதிரி இராமனையும் நெனெச்சிகினியா என்ன?  ‘அறிவு கெட்டவனே’ எனவும் திட்டுகின்றார்.

ஏன் இப்புடி ஒரு மாதிரியா பாக்கீக? பாட்டையும் படிங்க. அப்புறமா சொல்லுங்க யாரு ஜுஜுபி ன்னு.

அங்கண் மா ஞாலமும் விசும்பும் அஞ்ச வாழ்
வெங்கணாய் புன் தொழில் விலக்க உட்கொளாய்
செங்கண் மால் நான்முகன் சிவன் என்றே கொலாம்
எங்கள் நாயகனையும் நினைந்தது ஏழை நீ!

[சுந்தர காண்டம்; நிந்தனைப் படலம்]

[”இப்பெரிய மண்ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் அஞ்சுமாறு வாழ்கின்ற கொடியவனே! நீ செய்து வரும் இழிதொழிலை நீக்கிவிடும் எண்ணமற்றவனாய் இருக்கின்றாய். திருமால் நால்முகன், சிவபெருமான் ஆகியோரைப் போல எளியவன் என இராமன் என்றல்லவா நீ நினைத்துவிட்டாய்! அதனால் நீ அறிவற்றவனே!”]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.

காஃபி முதல் காஃபின் வரை


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 91
(31-07-2019)

சமீபத்தில் விஷமக்காரக் கண்னன் பற்றி அருணா சாய்ராம் பாடிய பாட்டு கேட்டேன். இயல், இசை, நாடகம் மூன்றும் கலந்த கலவை சூப்பரோ சூப்பர். இதுக்கும் முன்னாடி மாடு மேய்க்கும் கிருஷ்ணனை பாடியதையும் பார்த்து ரசித்ததுண்டு. எனக்கென்னவோ மத்திய அரசு, ஜல் சக்தி அபியான் போன்ற திட்டங்களை இவர்கள் மூலமாய் ஜனரஞ்சகம் ஆக்கலாமே எனத் தோணுது. சரீ… கோகுல கிருணனை விடுங்க… இந்த எஸ் எம் கிருஷ்ணா வின் நெருங்கிய உறவு சித்தார்த்தாவின் முடிவு இந்தியாவை, அதிலும் பணம் பணம் பணம் என அலையும் நபர்களை யோசிக்க வைத்துள்ளது. (நானே இன்னெக்கி சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன்னா பாத்துகிடுங்க…ஆமா நேத்து நைட்டு ராத்திரி 1 மணி வரை கரோக்கி வைத்து பாட்டுப் பாடினது தான் காரணம்ணு பேசிக்கிறாகளே…)

சித்தார்த்தா ஒரு ஹீரோவா? அல்லது வில்லனா? என்ற கேள்வியினை ஒதுக்கி வைத்து விட்டு, இத்தகைய சூழலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என யோசிக்கலாமே? (அப்பொ நான் ஹீரோ, நீங்கள் வில்லன; அல்லது நான் வில்லன் , நீங்க ஹீரோ..அட சந்தோஷத்தெப் பாருங்க…)

நான் இந்த விஷயத்தெ எப்புடி பாக்குறேங்கிறது தான் இப்பொ முக்கியம். எல்லாரும் அவரவர் சக்திக்கேற்ப கொஞ்சமாவோ, அதிகமாவோ புகழ் சம்பாதிச்சு வைக்கிறோம். பணமும் அதன் கூடவே வந்திருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை.. பணம் முந்தியா? புகழ் முந்தியா? கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா? இதுக்கு பதில் சொல்லுங்க; நான் அதுக்கு பதில் சொல்றேனே!!

புகழ் கொஞ்சமா இருந்தால் கூட, கூட இருக்கிறவய்ங்க அதெ, ராஜாதி ராஜ, ராஜ கம்ப்பிர அளவுக்கு (குலோத்துங்குவையும் மறக்காமல்) சொல்லி உசுப்பேத்தி விடுவர். இலக்கியம் பக்கம் ஒன்றில் பீமனை இப்படி ஏத்தி விடுகின்ற பாடல் வருது. சொல்லிக்கிற அளவுக்கு புகழ் ஏதும் பீமனுக்கு இல்லாங்காட்டியும், அர்ச்சுனனைப் பத்தி சப்ஜாடா சொல்லிட்டு, அவரோட ப்ரோ எனச் சொல்லுது ஒரு சிறுபாணாற்றுப் பாடல்.

காவெரி ஊட்டிய கவர்கணைத் தூணிப்
பூவிரி கச்சைப் புகழோன் தம்முன்

காட்டிற்கு எரி ஊட்டியவன்; அம்புகள் நிரம்பிய அம்புக் கூட்டை உடையவன்; கச்சையை அணிந்தவன்; ஆகிய புகழை உடையவன் அருச்சுனன். அவனுடைய தம் முன் (மூத்தவன்) பீமன் ஆவான் என்பது இப்பாடல் வரிகளின் பொருள். அப்படியே போனாப் போகுதுண்ணு பீமனின் சமையல் சிறப்பு மட்டும் அதிலெ சொல்லி இருக்காம். ஏத்தி உட்றதிலெ நம்ம புலவர்களெ அடிச்சிக்க முடியாது. அடிச்சிக்க முடியாது.

அதே புகழ் இருக்கும் இடம் தெரியாமல் போன போது கோபப்படாமல் அதை எதிர் கொள்வது ஒரு கலை. கார் நிகோபார் தீவில் ஒரு தமிழரின் கடை, வீடு எல்லாம் சுனாமியில் எல்லாமே போய் விட்டது. செந்தில் ட்ரவுசரோடு தான் நின்றார், தனி ஆளாய். மனுஷன் அசரலையே!. ஏப்படீங்க? கேட்டேன் சில மாதங்களுக்குப் பிறகு. ”நான் அந்தமான் வரும் போது இதே செந்தில் ட்ரவுசர் தான் போட்டு வந்தேன். மறுபடியும் ஆனா ஆவன்னாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டியது தான். என்ன…முன்னடி வந்த போது உங்களெ மாதிரி ஆடகள் அறிமுகம் இல்லெ. இப்பொ இருக்கே…” சூப்பரில்லெ… கோபமே படாமெ எப்படிச் சமாளிச்சார் ந்ம்மாளு? தன் இழந்த புகழை மீட்ட விதம். அசர வைத்தது.

புகழ் என்பது மற்றவர்களால் சூட்டப்படும் ஒரு மகுடம்… (அப்பன் மகனுக்குச் சூட்டுவது இதில் சேர்த்தி இல்லை.); அது மற்றவர்களால் கழற்றப்படும் போது கோபமாய் வெடிக்கிறது அதே சமூகத்தின் மீது. சமூகத்தை எதிர்கொள்ள பயப்படுகிறது அந்த புகழ் போதை.

அந்தமானில் 27 வயது வாலிபரின் கார் விபத்துக்குள்ளானதை தாங்க முடியாமல் உயிரை மாயத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தீகள் படிக்கும் போது, பிரம்மன் ஏதோ இம்மாதிரி ஆடகளை கார் ஓட்டிப் பழகவே படைத்தாரோ ? என்ற கேளவி எழுதின்றது..

புகழ் குழைந்து கோபம் கொப்பளிக்கும் போது, அதைச் சமாளிக்க மூளைக்கு அப்ளிகேஷன் போடுமாம். அந்த சிச்சுவேஷனை விட்டு மனதை விலக்குவது நல்ல அணுகுமுறை. (இதனால் தானோ, பலர் சின்ன வீடு வைப்பதை, நான் சரி என்று சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்); கோவத்துக்கான காரணம் ரொம்ப சப்பெ மேட்டரா இருக்கலாம். அதிலிருந்து முன்னாடி எல்லாம் எப்படி வெளி வந்திருக்கோம்ணு யோசிச்சி வரலாம். இல்லாட்டி ஏதாவது ஸ்டிர்ஸ் குறைக்கும் பயிற்சிகள் தியானம் முதலியன (மகளிர் சொல்லித்தரும் இடமாய் இருத்தல் நலம்) செய்யலாம். சித்தார்த்தாவும் செய்திருக்கலாமோ?

ஒரு பேராசியர் சமீபத்தில் சொன்னார்; எனக்கு மன அழுத்தம் வந்தா உங்க கம்பன் தொடர்பான புத்தகத்தெப் படிப்பேன்… அங்கங்கெ சிரிச்சிட்டு ரிலாக்ஸ் ஆயிடுவேன்… (என்ன…. அடிக்கடி சிர்ப்பதைப் பார்த்து, இந்த மனுஷனுக்கு என்ன ஆச்சி ? என்று கேட்கும் மனைவிக்கு மட்டும் பதில் சொல்ல முடியாதாம்) இதிலெ இன்னொரு கூத்து என்ன வென்றால், வேறு கல்லூரி முதலவர் ஒருவரும் மன அழுத்தம் எனப் புலம்ப, என் புத்தகத்தின் சில பகுதிகளை அவருக்கு அனுப்பி பின்னாடி அவர் ரிலாக்ஸ் ஆனாராம். எப்படியோ, கை காசு செலவு செய்து புக் போட்டு காசெக் கரி ஆக்குறீங்க என்று சொல்லும் என் மனைவியின் வாரத்தைகள் என்றும் எனக்கு பண்/மன அழுத்தம் தருவதில்லை. அதான் பழகிப் போச்சு …அப்படியே கேட்டு கேட்டு.

இந்த மேட்டர் பத்தி கம்பர் கிட்டேயும் மைக் நீட்டி கருத்து கேட்டா என்ன? கேட்டேன். யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் முழக்கத்தில் பதில் கிடைக்கும். (அப்பொ வில்லன் தானா?) புகழ் & கோபம் ரெண்டும் எப்படி மிக்ஸ் செய்யணும் எனச் சொல்கிறார் பாருங்க. கும்பகர்ணன் சொல்றார், இராமனே, இலக்குவனெ அடிச்சா புகழ் வராதுங்கரெச்சே கோபமும் வரலெ; அனுமன், சுக்ரீவன் யார் மீதும் கோபம் வரலெ. பாத்தீயளா? புகழ் மங்கும் போது கோபம் வராமெக் பாத்துக்க கம்பன் சொல்லும் சூத்திரமே இதுதான்…

கம்பன் பாட்டு இதோ:

உம்பியை முனிந்திலேன் அவனுக்கு ஊர்தியாம்
நம்பியை முனிந்திலேன் நயக்கும் வாலிதன்
தம்பியை முனிந்திலேன் சமபர் தன்னில் யான்
அம்பு இயல் சிலையினாய் புகழ் அன்று ஆதலால்

[யுத்த காண்டம் – கும்பகர்ணன் வதைப் படலம்]

[”அம்புடன் அமைந்த வில்லை ஏந்தியவனே! எனக்குப் புகழ் தரும் செயலன்று என்பதால்போர்க்களத்தில் நான், உன் தம்பி இலக்குவன் மீது கோபம் கொள்ளவில்லை; அவனுக்கு வாகனமாக அமைந்த அனுமன் மீது கோபம் கொள்ளவில்லை; உன்னை விரும்புகின்ற வாலியின் தம்பியாகிய சுக்ரீவன் மீது கோபம் கொள்ளவில்லை.”]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.