பொய் சொல்லக் கூடாது காதலி…


காதலில் பொய் சொல்லக் கூடாதா? அல்லது காதலியிடம் பொய் சொல்லக் கூடாதா? என்று ஒரு கேள்வி வந்தால், எல்லாரும் சொல்லும் ஒரே பதில் “இரண்டிலும் பொய் சொல்லலாம்”. ஏனென்றால் காதல், கத்தரிக்காய், கவிதை இதெல்லாம் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளரும் புலவர் பெருமகனார்களின் வளர்ப்புப் புத்திரிகள். கவிதைக்குப் பொய் அழகு. கவிதையில்லையேல் காதல் இல்லை. காதல் சொல்லுமிடம் (அல்லது செல்லுமிடம்) காதலி. அப்பொ பொய் செல்லுபடியாகுமிடம் காதல்… (அப்பொ, கல்யாணம்?? ’பொய் சொல்லி செமெயாய் மாட்டிக் கொள்ளுமிடம்’ என்று இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்)

காதல் கசக்குதய்யா… என்று வர வர பாடினாலும், அதென்ன பேட்ஸ்மேன் அவுட் ஆனவுடன் அடுத்த பேட்ஸ்மேன் களத்தில் இறங்குவது போல் காதலியை இறக்க முடியுமா என்ன? அப்பொ சுகமான காதல் என்பது சொல்லாமலே வரணும். (பொய் சொல்லாமலும், என்று நான் சொல்கிறேன்).

காதலன் காதலியிடம் சொல்லும் பாட்டு, இப்படி வருது:

பொய் சொல்லக் கூடாது காதலீலீலீலீ……
(அப்படியே பொய் சொல்லிவிட்டாலும்..)
பொய் சொன்னாலும் மெய் தான் அது காதலி..

ஆக பொய்க்கும் காதலுக்கும் தொடர்பு இருக்கு என்பதை மட்டும் சொல்லிபுட்டு முன்னே போவோம்.

ஆனால் அந்த காதல் வயப்படும் போது சொல்லிய பொய்கள், கல்யாணம் என்ற ஒரு பந்தம் வந்த பிறகு காத்து இறங்கிய பலூன் ஆக புஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆகி விடுகிறது. இங்கெ தான் காதல், கல்யாணத்தில் வந்து தடம் புரளும் இடம். சரி அவர்கள் சண்டை போடட்டும், நாம கொஞ்சம் வேடிக்கை பாத்துட்டு, அப்படியே வெளியே மேய்வோம்…

வாழ்க்கைக்கும் பொய்க்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கு? உண்மை விளம்பிகள் கோஷ்டி (ரொம்பக் குறைவு என்றாலும் கூட) சிரமத்துக்கு ஆளாகி இருக்கு. பொய்யும் புரட்டும் சொல்லி புரள்பவர்களிடம் செல்வலெட்சுமியும் பெட்டி(யி)ல் கூட இருக்கிறாள். காந்தீஜி பாத்த ஹரிச்சந்திரா படமோ நாடகமோ, நமக்கு சொல்லும் பாடமே, உண்மையா இருக்க நெனைச்சா… தனக்கு மட்டுமில்லெ, பொண்டாட்டி புள்ளெகளுக்கும் கஷ்டம் தானுன்னு இப்பொவும் புரியுது. ஆனா, அந்த ஆளுக்கு மட்டும் ஏன் புரியலெ? ஆனா அப்படி மாத்தி யோசிச்சதாலெ தான் மோஹன்தாஸ் கரம்சந்த், மஹாத்மா ஆகிவிட்டார் என்று மட்டும் சொல்லலாம்.

உண்மைக்குக் காலம் இருக்கு என்று திரி இடியட் (தமிழில் நண்பன்) படத்தில் வரும் இண்டர்வியூ காட்சிகளில், கைதட்டலுக்கு வேண்டுமானாலும் கை கொடுக்கலாம். உண்மையில் உண்மை, வாழ்க்கைக்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும்? இது உண்மையிலேயே கஷ்டமான கேள்வி தான். ஒரு கேஸ் (எந்த கேஸு என்று வில்லங்கமா கேள்வி வேண்டாம்) பாக்கலாம்.

ஓர் அழகான பருவப் பெண்ணை சில ரவுடிகள் துரத்துகிறார்கள். (என்ன காரணம் என்றெல்லாம் சொல்லாமலேயே தெரிந்திருக்கும். எத்தனை படம் பாத்திருப்பீங்க??). அந்த வாலிப மங்கை உங்க வீட்டிலெ வந்து ஒளிஞ்சிக்கிறா… (நீங்களும் ஹீரோ ஆக இதோ ஒரு சான்ஸ்..) ரவுடிகள் உங்க வீடு தேடி வர்ராய்ங்க… கேக்கிறாய்ங்க.. நீங்க அப்பொ என்ன சொல்லுவீங்க??

உண்மை விளம்பியாய் இருப்பீர்களா? அல்லது ”பொண்ணா? இங்கேயா? நானே பொண்டாட்டி ஊருக்க் போயிட்டான்னு கவலையோட இருக்கேன்.. வாங்க.. வாங்க..நானும் உங்க கூட வந்து தேடறேன்..” என்று சொல்வீர்களா?? இப்படிச் சொன்னா நீங்க நல்ல புள்ளெ… நம்மன் ஐயன் வள்ளுவரும் நம்ம கட்சிங்க…
உண்மைக்கு 2000 வருஷத்துக்கு முன்னாலேயே டெபனிஷன் குடுத்துட்டாரு அய்யன். யார் ஒருவருக்கும் தீமை நடக்காதவாறு சொல்லப்படும் எந்த ஒரு சொல்லும், (அதில் பொய்யும் அடக்கம் தான்) உண்மை என்றே கருதப்படும்.

கம்பரிடமிருந்து பேஸ்புக்கில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. “நாங்களும் சொல்லி இருக்கோம்லெ…” என்று. அட நம்ம கம்பர்கிட்டேயும் போய் கேப்போமே என்று பதிலுக்கு ”சொல்லுங்கண்ணே..சொல்லுங்க..” என்றேன்.

ராமன் பொய் செய்த காட்சி தெரியுமா? – இது கம்பன்.

கம்பன் பாட்டே, படித்தவுடன் புரியாது. (யாராவது கோணார் நோட்ஸ் மாதிரி எழுதி வச்சாத்தான் புரியும்). இவரது பேஸ்புக் எழுத்துக்கும் இவர்கிட்டேயே கேப்போமே??)

”பொய் செய்த….??? புரியலையே ஸ்வாமி!!!”

கம்பர் பதில் உடனே வந்தது. (இந்தப் பாமரன் மேல் கம்பருக்கு கொள்ளெப் பிரியம்)
”எல்லோரும் பொய் சொல்லுவார்கள். இராமன் பொய் சொல்லி அதைச் செய்தும் காட்டி இருக்கிறார்.”

என் கேள்வி தொடர்ந்தது. “அப்பொ அது தப்பில்லையா?”

”நாலு பேத்துக்கு நல்லது செஞ்சா…எதுவுமே தப்பில்லை…(தென் பாண்டி சீமையிலே… தேரோடும் வீதியிலே)” சொல்லி விட்டு கம்பர் ஆப்லைனுக்கு போய் விட்டார்.

நான் தேட ஆரம்பித்தேன். சாதாரணமா எவனாவது தப்பு செஞ்சாலே, அதெ நோண்டி நோண்டிப் பாப்போம். அப்பொ ராமனே செஞ்சா..??? உடுவோமா?? கெடெச்சது கைக்கு.

ராமன் காட்டுக்குப் போகும் இடம். ராமன் இருக்கும் இடம் சீதைக்கு மட்டுமா அயோத்தி? [மாமனார் வீட்டில் டேரா அடிக்கும் போது நானும் மனதிற்குள் சொல்லிக் கொள்ளும் சமாதானம், ம்ம்ம்ம்ம் சீதை இருக்குமிடம் தான் ராமனுக்கும் மிதிலை]. எல்லா மக்களுக்கும் அதே நிலை தான். மக்கள் நினைத்தார்களாம். நாமும் ராமர் கூடவே போயிட்டா… போற இடமே அயோத்தியா அல்லது மிதிலையா ஆயிடுமே?? அவங்க சந்தோஷமா இருப்பாகளே… என்று நினைத்ததாம் அக்கூட்டம். (அந்தக் கூட்டம் தானே வந்த கூட்டம், கட்டிங், பிரியாணி பொட்டலம், செலவுக்கு மேல் காசு இதெல்லாம் வாங்கி வந்த கூட்டமில்லை)..

எல்லாம் தெரிஞ்ச நம்ம ராமனுக்கு, மாஸ் சைக்காலஜியும் தெரிந்திருக்கு. ஒரு சின்ன ஐடியா (ராமர் மக்களை ஏமாத்தினா, அதுக்குப் பேரு ஐடியா… நாம செஞ்சா ஐ பி கோ செக்சன்… ஜாக்கிரதை). காலங்காத்தாலெ ரதத்தை அயோத்தி போற மாதிரி போக்கு காட்டி (நல்லா தடம் தெரியும் படி பொய்யா செஞ்சி, அப்படியே காட்டுக்கு ஓடிப் போயிடலாம்). அது சாட்சாத் அந்த ராமனே சொல்லி செஞ்சதுங்க..
நான் சொன்னா நம்ப மாட்டிங்க… கம்பர் சொன்னா நம்பிடுவீங்க தானே..

கம்பர் வார்த்தைக்கு இந்த வம்பனின் உரை இதோ.. பேரன்பு கொண்ட ரசிகசிகாமணிகளை திசை திருப்புறது கஷ்டம். அவங்களை இங்கேயே விட்டுட்டு நானு ஜகா வாங்குறதும் அம்புட்டு நல்லா இல்லெ. நம்ம ஆளுங்க நல்லா தூங்கிட்டு இருக்கிறச்சே, காரை (அதாங்க தேரு) ரிவர்ஸ் எடுத்து, அயோத்தி பக்கம் போக்கு காட்டிட்டு வேற ரூட்லெ போயிடுவோம். காலங்காத்தாலே அதெப் பாத்து எல்லாரும் பெட் டீ சாப்பிட அயோத்தி ஓடியிருவாய்ங்க… (அப்புறம் அவங்க அவங்க பொண்ட்டாட்டிகளை புரிஞ்சிக்க இன்னொரு டீ சாப்பிட்டு நம்மளை மறந்திடுவாய்ங்க…) இட் ஈஸ் மை ஹம்பில் ரிக்வஸ்ட் என்று டிரைவரிடம் சொன்னதாய் கம்பராமாயணத்தில் வருது.

பின்னாடி யாரோ நிக்கிறாகளேன்னு பாத்தா… என் பையன்… எல்லாம் வக்கனையா படிச்சிட்டு, “டாடி எனக்கு ஒரு டவுட்டு” என்றான். குத்து வாங்கும் தூரம் தள்ளி நின்று விபரம் கேட்டேன். “இந்த ராமன் பொய் செய்ர சீன்லெ இலக்குவன் உண்டா??” நான் பதிலாய், “தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு” என்றேன்.

”அப்பொ அதே டெக்னிக்கை, அதாவது சீதையை இலக்குவன் தனியே விட்டுப் போகும் போது செஞ்சிருக்கலாமே? ராமரைத்தேடி போற மாதிரி போயி அப்புறம் மறைஞ்சி இருந்துட்டு (காடு தானே!!), கொஞ்ச நேரம் போனப்புறம், ராமன் கூட திரும்பி வந்து, ஜாலியா கர்சிப் வச்சி, மொகம் தொடெச்சிட்டு வர்ரா மாதிரி வந்திருக்கலாமே!!! சொல்லுங்க டாடி சொல்லுங்க..” குத்த வருவதற்குள், ”கொஞ்சம் டயம் கொடு… இப்பத்தான் சிங்கப்பூர் பொறியாளர் எழுதிய இலக்குவன் பற்றிய புக் ”அண்ணையின் ஆணை” கையிலெ இருக்கு படிச்சிச் சொல்றேன்…” (அப்பா…பசங்க கேக்கிற கேள்விக்கு பதில் சொல்றதுக்கு முன்னாடி தாவு தீந்து போகுது…)

சரி அப்படியே கம்பனின் அசல் பாட்ட்டைப் போட்டு இன்னெக்கி வணக்கம் வச்சிறலாம்.. இதோ பாடல்..:

ஏனையரும் இன்னணம் உறங்கினர் உறங்கா
மானவனும் மந்திரி சுமந்திரனை வா என்று
ஊனல் இல் பெருங்குணம் ஒருங்கு உடைய உன்னால்
மேல் நிகழ்வது உண்டு அவ் உரை கேள் என விளம்பும்.

நீதி: ராமன் என்ன??? நீங்களே கூட பொய் சொல்ல்லாம்..செய்யலாம். ஆனா அதுலெ ஒரு நீதி, நியாயம் தர்மம் இருக்கணும். சுருக்கமா..ஒன்ஸ் எகெய்ன்… நாலு பேத்துக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லெ.. பொய்யும் கூட.

கம்பனில் புரோட்டோகால் அதாங்க… protocol


Image

[ காரைக்குடி கம்பன் கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட எனது ஆய்வுக் கட்டுரை… இவர்கள் முன்னர் படைக்கத் தவறியதால் இங்கு இவர்கள் முன் பதிகிறேன்]

கம்பனில் அரசு கடைபிடிக்கத்தக்க மரியாதை முறையியல்
(PROTOCOL)

முன்னுரை:

கம்பர் காலத்து அரசாட்சியும் இன்றைய காலத்து அரசாட்சியைனையும் ஒரே கண் கொண்டு பார்ப்பது என்பது ஓரளவு சிக்கல் நிறைந்த செயல் தான். எனினும் மக்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்வதில் தான் மாற்றம் இருக்கின்றதே ஒழிய ஆட்சி செய்யும் முறை, நெறி ஆகியவற்றில் கம்பகாலமும் இக்காலமும் ஒன்றும் வெவ்வேறதானதல்ல என்கின்ற மன அலசலின் முடிவாய்த்தான் இக்கட்டுரை எழுகிறது. பாலகண்டப் பகுதியில் வரும் அரசு கடைபிடிக்கத்தக்க மரியாதை முறையியல் குறித்து மட்டும் இனி காண்போம்.

அறம் சார்ந்த அரசு:

மக்களைக் காக்கின்ற அரசிடம் எப்போதும் அறம் சேர்ந்த்தே இருத்தல் வேண்டும். அறமற்ற வழிகளால் வருகின்ற பொருள் மீது எந்த அரசும் ஆசை வைக்காதிருத்தல் வேண்டும். சினம் கொள்ள வேண்டிய இடத்தில் சினமும் கொள்ளல் வேண்டும். அரசு பெற வேண்டிய வரிப்பணம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும். மக்கள் மீது சுமத்தப்படும் வரிகள் அவர்களுக்கு சிரம்ம் தராது விரும்பியே அதனைச் செலுத்தும் வகையில் இருத்தல் வேண்டும். தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களிட்த்து மட்டுமல்லாது, அனைத்து உயிர்களிட்த்தும் அன்பு காட்டி இரக்க்குணம் கூட்டி வாழ்ந்திடும் அரசு இருத்தல் அவசியம் என்பதை கம்பர் தனது வரிகளில் காட்டுகின்றார்.

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்….
                                          (நாட்டுப் படலம்)

பெண் கல்வியும் செல்வமும்:

      ஒரு நாடு சிறப்புற்ற நிலையில் இருந்து, தொடர்ந்து அப்படியே இருந்திட வேண்டுமா? கம்பர் காட்டும் உன்னதமான வழி ஒன்று உளது. அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் நீங்காத செல்வமும், நீங்கிடாத கல்வியும் இருந்திட வழிவகை செய்திட வலியுருத்துகின்றார். மகளிரிடம் ஒரு முறை மட்டும் சேர்ந்திட்ட செல்வத்தினால் பயன் இல. அச்செல்வம் அவர்களிடமே நீங்காது இருந்திடவும் அரசு வழிவகை செய்திட வேண்டும். மேலும் மகளிர்க்கென கல்வியும் அதுவும் நீங்கிடாத கல்வியாய் அமைந்திட அறிவுரை தருகின்றார்  கம்பர்.

பெருந் தடங் கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து கல்வியும் செல்வமும் பூத்தலால்..
                        (நாட்டுப் படலம்)

 பேரிடர் மேலாண்மை:

      இந்தியக் கடலோரப் பகுதிகள் சந்தித்த 2004ஆம் ஆண்டின் சுனாமிப் பேரலை இந்திய அரசின் திட்டமிடும் இயக்கத்தையும் சற்றே மாற்றி அமைத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய பேரிடர் மேலாண்மையின் இருப்பை உணர்ந்து இதன் மீது கவனமும் செலுத்த ஆயத்தமாய் உள்ளது இப்போதைய அரசு. ஆனால் கம்பர் காலத்து கோசல அரசு இதற்கெல்லால் ஏற்கனவே தயாரான நிலையில் இருந்த்தை கம்பர் கூறும் போது ஆச்சரியப்படாமல் இருக்க வாய்பில்லை. நிலத்தை அழித்துக் கொண்டிருத்தல் தான் கடல் நீரின் தன்மை என்கிறார் கம்பர். அத்தன்மை உடைய கடல் நீர் ஊழிக் காற்றால் மேலும் உந்தப்பட்டால் என்ன ஆகும்? கடல் நீர் தன் எல்லையினைக் கடந்து நிலத்தினூடே பாய்ந்து வரும். அப்படி வந்தாலும் எந்த அழிவும் இல்லாத சிறப்பைப் பெற்றதாக கோசல நாட்டின் பெருமை தனைக் கம்பர் கூறுகிறார். பேரிடர் மேலாண்மையின் ஆசான் என்று நாம் கம்பரை அழைக்க யார் தடை சொல்ல இயலும்?

.வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம்
கூடு கோசலம்
                  (நாட்டுப் படலம்)

குற்றமிலா குடிமக்கள்:

      அரசு இயந்திரம் என்று, இதயமிலாத தன்மை பற்றிச் சொல்லிட்டாலும், அரசு என்பது, இதயமுள்ள மக்களின் கூட்டுத் தொகுப்பு தான் என்பதனை யாரும் மறுதலித்திட இயலாது. அத்தகைய அரசின் அங்கமாய் அமைந்திட்ட குடி மக்களும், தத்தம் பொறுப்பினை உணர்ந்து வாழ்தல் மட்டுமே, ஒட்டு மொத்த அரசின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்பதாய் அமையும். அயோத்தி நகரின் மாண்பினைப் பேச வந்த கம்பர், இத்தகைய குடிமக்களைப் பெற்ற அரசு என்பதாய் கவி வரைகின்றார். குற்றமே இல்லாத தரம சிந்தனையுடன் வாழும் அரசன் போலவே அளவற்ற குடிமக்கள் இருந்த்தாய் அறிவிக்கின்றார் கவிஞர். மக்கள் எவ்வழி..மன்னர் அவ்வழி. இது பெரும்பாலோர் கூற்று. பெருங்கவியோ மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்கின்றார். ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக் கோன் நிகர் குடிகள் என்ற நகரப் படலத்தின் கம்ப வரிகளே இதற்கு சான்று பகர்கின்றன.

அரசின் கடமைகள்:

அரசு என்பது எப்படி அமைந்திட வேண்டும்? என்பதில், திடமான சிந்தனையினைக் கம்பர் தந்திருக்கின்றார். அரசோடு அறிவு கைகோர்த்திருத்தல் வேண்டும். அந்த அறிவு உண்மையான அறிவாய் அமைந்திருத்தல் வேண்டும். மேலும் முதன்மையுடையனவாகவும் இருந்திடல் வேண்டும். கருணை, தருமம், சாந்தம் இவைகளும் அரசோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருத்தல் வேண்டும். வீரம் அரசோடு கை கோர்த்திருத்தல் மிக அவசியம். அந்த வீரமோ, வலிமையோடு கூடியதாயும் இருந்திட விருப்பம் தெரிவிக்கின்றார் கவிச்சக்கரவ்ர்த்தி. இத்துடன் கொடை நீதி நெறியில் தவறாது நிற்கும் திறன் அவை அணைத்தும் அரசின் அத்தியாவசியத் தேவைகள் என்கிறார் கவிஞர். அவரது வார்த்தைகள் இன்றளவும் இம்மியும் மாற்றமில்லாமல் பயன் படுத்த ஏதுவாய் இருப்பது தான் காலம் கடந்து வாழும் கவியின் சிறப்பு. இதோ அரசு நியதியினை கம்பர் அன்றே சொன்ன தீர்க்க தரிசன வார்த்தைகள்:

ஆதிம் மதியும் அருளும் அறனும் அமையும்
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண் இல் யாவும்
நீதிந் நிலையும்
                              (அரசியல் படலம்)

மன்னராட்சியில் மக்களாட்சியின் மாண்பு:

      இன்றைய அரசின் மிகப்பெரிய குற்றச்சாட்டே, அவை மக்களை விட்டு விலகி இருப்பதான காரணம் தான். மக்களால் மக்களுக்காக ஆள உருவான அரசே இப்படி மக்களை விட்டு விலகி நிற்பது வேதனையான உண்மை. ஆனால் மன்னராட்சி நடந்த கம்ப காலத்தில் அரசு எவ்விதம் மக்களோடு இருந்த்து என்பதை ஒரு சிறு சம்பவம் கொண்டு விளக்குகின்றார் கம்பர். காப்பிய நாயகனான இராமபிரான் நகர்வலம் வந்த போது எதிர்ப்பட்ட மக்களை எவ்விதம் எதிர் கொண்டார் என்பது எல்லோரும் கவனிக்கத்தக்கதான ஒன்று. கருணையான முகம் துணை கொண்டு, செந்தாமரை மலர் போன்ற ஒளி வீசும் முகத்தின் தன்மை சற்றேனும் குறையாமல் குடிமக்களை வினவுகின்றாராம். அரசின் பார்வைக்கு தரத்தக்க செய்திகள் ஏதும் உண்டா? அரசின் முடிவுகள் உங்களுக்கு ஏதும் சிரமத்தை தரவில்லையே? இல்லறம் இனிதாய் இல்லாளும், வாரிசுகளுடனும் இனிதாய் சுகமாயும் நோயற்று வலிமை பெற்றவர்களாக இருக்கிறார்களா? என்ற நலன் விசாரிப்பை நல்கிச் செல்கிறார் கம்பர் கதை நாயகன் வாய் வாயிலாக.

எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடல் இலை இனிதும் நும் மனைவியும்
மதிதரு குமர்ரும் வலியர்கொல் எனவே
                              (திரு அவதாரப் படலம்)    

பொதுவான நடைமுறை விதி:

      இன்றைய நவீன காலத்து மேலாண்மை சார்ந்த அறிவியல் துறை வெளிப்படையான நிர்வாகம் நடந்திட அரசின் எல்லா நடவடிக்கைகளையுமே எவ்வித செய்திடல் வேண்டும் என்பதைனை விதிகளாக்கி அதனை பொதுவான நடைமுறை விதி (Standard Operating Procedure) என்று பெயரிட்டு அழைப்பர். கம்பன் காவியத்தில் இப்போற்பட்ட அரசின் சிறு நடைமுறையிலும் எவ்வப்டி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட்தாய் குறிப்பு வருகின்றது. எனவே அப்பேற்பட்ட நடைமுறை விதிகள் இருந்திருக்கின்றது என்பதையும் அதனைத்தான் அக்கால அரசு கடைபிடித்திருக்கின்றது என்பதினையும் ஊகிக்க முடிகின்றது. ”முகந்தனர் திருவருள் முறையின் எய்தினார்…” என்ற எழுச்சிப் படலப் பாடல் மூலம் தூதுவர்கள் அரன்மனையில் நடந்து கொள்ள வேண்டிய முறை இருந்ததை  கம்பர் கவி உறுதி செய்வதை உற்று நோக்கி காண்க.

விசாரிப்பு மரியாதை:

      பொதுமக்களின் பார்வையில் அரசு கடைபிடிக்கத் தக்க மரியாதை முறையியல் (PROTOCOL) என்ற வார்த்தைப் பிரயோகம் அரசு சார்ந்தவர்களை கௌரவப்படுத்தும் போதும், அவர்களை அமர வைத்தலின் போதும் தான் பொதுவான தேவையாக்க் கருதுகின்றனர். அவ்வரிசையில் மாற்றம் ஏற்படும் போது அதனை அரசின் அங்கம் வகிப்போர் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாய்க் கருதுகின்றனர் இன்றும் ஆளும் அரசின் அதிகாரிகள். இந்தச் சிக்கல் கம்ப காலத்திலும் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் சனகனின் சபையில் தசரதர் விசாரிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் குற்றமற்ற முறையில் வரிசை முறையோடு விசாரித்த குறிப்பை கம்பர் ஏன் குறிப்பிட்டிருக்க வேண்டும்?  ”வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்” என்ற எதிர்கொள் படல வரிகள் இதற்கு சான்று பகர்கின்றன.

அனைவர் மேலும் அன்பு:

      இன்றைய காலகட்டத்தில் குடும்ப அரசியல் என்பதினை மத்திய மாநில  அரசியல் காட்சிகளில் சரவ சாதாரணமாய் இந்திய நாடு முழுவதும்  காணக் கிடைக்கின்றது. அனைவருக்கும் வாய்ப்பு தரும் அரிய முயல்வு, தெரிந்தோ தெரியாமலோ முறியடிக்கப் பட்டுவிடுகின்றது இந்தக் குடும்ப அரசியல் காரணமாய். கம்பர் இதனை ஆதரிக்கின்றாரா? என்ற கேள்வியினை எழுப்பி அதற்கான விடையினைக் கம்பரிடமிருந்தே பெறவும் முடிந்தது. சனகர் அரண்மனையில் திருமண விருந்து நடக்கின்றது. அப்போது தாழ்ந்த நிலையில் உள்ளோர்க்கும் அழைப்பு தந்து அவர்களும் வந்துள்ளனர். அவர்களை உபசரிக்கும் விதம்தனைப் பார்த்தால், மாப்பிள்ளையினை எப்படி உபசரிப்பரோ அதே மாதிரியாய் இருந்ததாய் கம்பர் காவியம் அறியத் தருகின்றது. ”கொண்டாடலின் அன்புதான் இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்த்தே” என்ற உலாவியல் படலப் பாடல் அதனை உறுதி செய்கின்றது.

முடிவுரை:

கம்பன் காலத்து அரசியல் சூழல் மன்னராட்சி உள்ளடக்கியதான ஒன்று. ஆனால் அதிலும் மக்களாட்சியின் மாண்பினை பல இடங்களில் கம்பர் கண்டு நமக்கு பாடலாய்த் த்ந்திருக்கின்றார். அவைகள் இப்போதைய அரசின் நடந்து கொள்ள வேண்டிய மரியாதை முறைகளில் சற்றும் மாற்றமில்லாது இருப்பது தான் வியப்பான செய்தியாகும். அரசு கடைபிடித்த மரியாதை முறையியல் கம்பகாலத்தில் ஓங்கி செழிப்பாய் இருந்திருக்கின்றது. பாலகாண்ட்த்தினுள் மட்டுமே ஆதாரமாய் கிடைத்தவைகளை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். இன்னும் முழு காப்பியத்திலும்  இதன் தொடர்புகள் இருக்கின்றது என்பதையும் அறிஞர் பெருமக்கள் ஒப்புக் கொள்வர். இந்த மரியாதை முறையியல் இக்காலத்து மக்களாட்சிக்கும் ஒத்துப் போவதாய் ஒப்பு நோக்கும் போது தான் கம்பரின் பார்வையில் இருக்கும் விசாலம் புலனாகின்றது. 

2014-03-22 13.18.14-1

இப்படியும் பார்க்கலாமா?


TNK with Dr Saraswathi Ramanathan at A

[பாமரத்தனமாய் கம்பனை எழுத ஊக்கம் அளித்து, என நூலான பாமரன் பார்வையில் கம்பனுக்கு முனைவர் சரசுவதி இராமநாதன் அளித்த அணிந்துரை…. சாரி… மிகப் பெரிய கௌரவம்… இதோ உங்கள் பார்வைக்கு)

இப்படியும் பார்க்கலாமா?

(முனைவர் சரசுவதி இராமநாதன்.
தமிழ்ப் பேராசிரியை – பணி நிறைவு, பள்ளத்தூர்.
தலைவர், கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.
தலைவர், இசைப்பிரியா, திருவாரூர்.
தலைவர், சரசுவதி இராமநாதன் அறக்கட்டளை, பள்ளத்தூர்.
தலைவர், ஔவைக்கோட்டம், திருவையாறு)

ஒன்பது வயதில் காரைக்குடி கம்பன் திருநாளில் பாட மேடையேறி, 10 முதல் 12 வயது வரை நடனம் ஆடி, அதே மேடையில் 22 வயது முதல் இந்த 74 வயதிலும் பேசிவரும் பேறு பெற்ற ஒரே பேச்சாளர் நானாகத்தான் இருக்க முடியும். அது குறித்து நான் இறையருளையும், குருவருளையும் வணங்கி மகிழ்கிறேன். பலப்பல கோணங்களில் கம்பனை அணுகி ஆராயும், அல்லது அரைத்த மாவையே அரைக்கும் எந்த அறிஞரும் சிந்திக்காத புதுக் கோணத்தில் கம்பரை அணுகிப் பல கட்டுரைகள் தந்துள்ள அந்தமான் தமிழ்நெஞ்சன் கிருஷ்ணமூர்த்தியை உளமார வாழ்த்துகிறேன். [ ”என்ன பார்வை உந்தன் பார்வை” என்று தலைப்பிட்டு முன்னுரை எழுதலாமா என எண்ணினேன்! சரிதானே?]

அந்தமான் தமிழர் சங்கத்துடன் எங்கள் ஔவைக்கோட்டம் இணைந்து மாநாடு நட்த்திய போது அறிமுகமான சிரித்த முகத்துத் தமிழ்நெஞ்சனின் மடிக்கணினி (அதாங்க லேப்டாப்) கம்பனை கலகலகம்பர் என அறிமுகப் படுத்தியது. கம்பன் கலகலக்க வைத்தாரோ இல்லையோ, கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரைகள் கலகலப்பாக, பாமரனையும், கம்பனையும் இணைத்து மகிழ்கிறது. எளிய யாவரும் அறிந்த திரைப்பாடல் வரிகளைத் தலைப்பாக்கி, நடைமுறைப் பேச்சுத் தமிழில் எழுதி அரிய செய்திகளைக் கம்பன் வழி நின்று விளக்கும் அற்புதக் கலவை இவரது கட்டுரைகள்! புதிய சிந்தனைகளை நூல்கள் வழி வெளியிடுவோர் (தேவகோட்டை) மணிமேகலைப் பிரசுரம், எங்கள் அண்ணா தமிழ்வாணனின் அன்புக் குடும்பம் வாழ்க! வளர்க!

எடுத்தவுடனேயே “காக்கா பிடித்த” விசுவாமித்திரர் நமக்கு அறிமுகமாகிறார். நமக்குத் தமிழ் நெஞ்சன் பாடம் சொல்கிறார், “யாராவது காக்கா பிடித்தா உண்மைன்னு நம்பிடாதீங்க. தள்ளி நின்னு ரசிங்க.” (பக்கம் 4)

டி எம் எஸ் என்ற மாபெரும் இசைக்கலைஞன் ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்றும், ‘என் கதை முடியும் நேரமிது’ என்றும் பாடியது தான் அவரது திரையிசைப் பயணத்தை முடித்ததா? தசரதன், “இத்தனை நாள் மன்பதை காத்து நான்பட்ட வேதனைகளை இனி என் மகன் இராமன் படட்டும்” என்று சொன்ன வேளைதான் இராமனின் துன்பங்களுக்கு ஆளானதோ? சிந்திக்க வைக்கிறார். எதையும் எதையும் முடிச்சுப் போட வைக்க முடிகிறது. (பக்கம் 6)

வரமா – சாபமா – தசரதன் புத்திர சோகத்தால் மரணம் அடைவான் என்று சலபோசன முனிவன் சாபம் கொடுத்தான். அப்போது தசரதனுக்குப் பிள்ளை இல்லை. ஆகவே பிள்ளை பிறப்பா என மகிழ்ந்தான். அது வரமாயிற்று என்றது அழகு! இப்படி கட்டுரை வருவது ‘வரமா? சாபமா?’ (பக்கம் 9)

நீண்ட தமிழால் உலகை நேமியில் அளந்த அகத்தியன் குறுமுனி. இராமனோ நெடுமையால் உலகளந்த நெடியோன். இருவரும் தழுவிக் கொண்டனர். கம்பனின் வார்த்தை ஜாலம் கிருஷ்ணமூர்த்திக்கு நன்றாகப் புலப்பட்டிருக்கிறது. நமக்கும் காட்டுகிறார். (பக்கம் 13)

ஒரு மாலையால் நிலத்தைக் குழி விழச் செய்ய முடியுமா? அவ்வளவு அழுத்தமாகப் பந்து வீசும் “பௌலரா” கூனி என்று கூஇயின் ஆத்திரத்தின் வேகத்தை நாம் அறிய வைக்கிறார் கம்பர்; இல்லை; தமிழ் நெஞ்சன். (பக்கம் 21)

‘பெர்முடாஸ்’ என்ற அரைக்கால் சட்டை நாகரீகம் எங்கும் பரவிவிட்ட்து. குகன் அப்படித்தான் போடு வந்தான். ’காழம் இட்ட குறங்கினன்’ என்ற தொடரின் விளக்கம் நன்று. (பக்கம் 25)
‘மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி’ என்ற வீரப்பனின் வசனம் – சூர்ப்பனகை வாயில் ’உல்டா’ ஆகிறது. (நானும் தமிழ் நெஞ்சன் நடைக்கு வந்து விட்டேனா?) மண்ந்தால் மாதவன் அன்றேல் மரணதேவன் – என்கிறாளாம். (சூர்ப்ப – முறம், நாகா – நகம்) (பக்கம் 31)

‘பெண் பிறந்தேனுக்கென்றால் என்படும் பிறருக்கு?’ என்ற கம்பன் வரி, ‘ செந்தமிழ்த்தேன் மொழியால்’ பாட்டில் ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ?’ என வைத்த்து என்கிறார். சரிதான். ‘கம்பன் கொடுத்த கவிப்பிச்சை ஓரளவு’ என்று கவியரசரே பாடியுள்ளாரே!

நைய்யாண்டியா?

ஏங்க! கிருஷ்ணமூர்த்தி மட்டும் திரைப்பாடல், பட்த்தலைப்புகளை எடுத்தாளலாமா? நான் செய்யக் கூடாதா? கிண்டலில் சமுதாயச் சிந்தனைகளைத் தருவது நல்ல கலைஞர்களுக்கு அழகு! வெறும் சிரிப்பலைகளை மட்டும் வீசாமல் அந்தமான் ஆழ்கடல் பவளம் போல அழகான சமுதாயச் சிந்தனைகளைத் தந்துள்ளமை போற்றற்குரியது. “மனசு முழுக்க மனையாளை வச்சிக்குங்க! பார்க்க நல்லது. பர்சுக்கும் அல்லது” – காலத்திற்குத் தேவையான புத்திமதி இது! ( வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே – பாட்டின் விளக்கம் தொடங்கி, சூர்ப்பநகை இராவணனிடம் பேசுவது வரை கலகலப்புத்தான்.)

’எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்’ விவேக் ‘காமெடி’ எய்ட்ஸ் த்டுப்புக்கான விளம்பரமாயிற்று! தசமுகன், சீதையின் அழகில் மயங்கி உடம்பு பருத்துவிட்டானாம். அவள் கிடைப்பாளா, மாட்டாளா என்ற ஏக்கத்தில் இளைத்து விட்டானாம்!

“வீங்கின, மெலிந்தன வீரத்தோள்களே!” என்றார் கம்பர். தமிழ்நெஞ்சன் ஒரு காலத்தில் கம்பனைக் கிண்டல் செய்தவர் தான்! பத்துத்தலை எந்த வரிசையில் இருந்தாலும் ’பேலன்ஸ்’ ஆகாதே!” என்றவர்! இப்போது இராமாயணத்தை வரிவரியாக விழுந்து விழுந்து படித்து நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். “எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டார்?”

அறை சிறை நிறை

கும்பாபிஷேகத்தின் போது கருடன் வந்த்து என்று தொடங்கி, சடாயு என்ற் கழுகு, இராமனுக்குக் கோபத்தை அடக்கு என்ரு அறிவரை சொன்னதை வளர்த்து,கம்பனின் பாதை அறப்பாதை, அமைதிப் பாதை என முடித்த்து அருமை! லார்ட் மயோ கொலை, அந்தமான் செல்லுலார் சிறை என்று அனைத்தையும் இணைத்து விட்டாரே! அபார மூளை!

‘சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம தோணுதடி’ என்ற பாட்டில் வெற்றிலை இடிக்கும் சத்தம் இடையிசையாக வரும். அதிலே மனம் லயித்து, ‘கொட்ட்டைப் பாக்கும் கொழுந்து வெத்திலை’ குஷ்புவின் ஆட்ட்த்தில் ஈடுபட்டு, அப்பாவின் வெற்றிலை போடும் பழக்கத்தினை அசை போட்டு, ஊரெல்லாம் வெற்றிலையை மென்று வீதியுல் துப்பும் நம் (துப்பு உள்ள துப்பு கெட்ட) மனிதரை நினைத்து வருந்துகிறார். அரக்கிமார் வீசி எறிந்த நகைகள் அனுமனை நடக்க விடாமல் தடுத்ததாம் இலங்கையில் – கம்பர் காட்சிக்கு வம்பர் எங்கெல்லாம் போய் விளக்கம் தருகிறார் பாருங்கள்!

சோகத்திலும் சிரிக்கலாம் – கடவுள் துணையிருந்தால், கடவுள் கூடவே இருந்தால்!

கம்பரைப் படிக்கணும், அன்போடு, இன்னும் அன்பு சேர்ந்து படிக்கணும்.

கம்பன் கணக்கில் புலி. வெள்ளம் என்பதன் விளக்கம் நமக்கு அதைக் காட்டுகிறது.

எதிர்காலத்தில் நிகழ்காலமாய் நினைத்துத் தேசத்திற்கு விடுதலை உணர்வை ஊட்டிய பாரதியாரைத் தினம் நினைவு கொள்வோம்.

பொண்டாட்டி இல்லாத நேரத்தில் அதிக்க் கவனம் தேவை!

மனப்பாடமா வாய்ப்பாடுகள் சொல்லும் இந்தியாவின் மனக்கணக்குத்திறன் உஅலக அரங்கில் அவனை உயர்த்தியுள்ளது.

ஏழ்மையைக் கழித்து, செழுமையைக் கூட்டி, சமதர்ம்ம் பெருக்கிட வழி செய்வோம்.

பேசித் தீருங்க பிரச்சினைகளை!
பிரச்சினைகளை அலசிப் பார்த்து முடிவெடுங்க!

நியூட்டனின் விதி – 3 ‘ஒவ்வொரு விசைக்கும் அதற்க்குச் சம்மான எதிர் விசை உண்டு’ என்பது. வாலி சுக்ரீவனைப் போருக்கழைக்குமிட்த்தில் (கிட்கிந்தா காண்டம் – வாலி வதைப்படலம்) இதைக் கம்பன் முன்னரே சொல்லி இருக்கானே! என வியக்கிறார் ஆசிரியர். ‘வாழைப்பழத்தில் ஊசி’ நுழைந்த மாதிரி வாலியில் மார்பில் இராமபாணம் சென்றது. பின் நின்றது! இதை வாழைப்பழ (கரகாட்டக் காரரின் கவுண்டமணி செந்தில்) நகைச்சுவைக் கலாட்டாவில் தொடங்கி, விளங்கிவிட்டு, ஆமாம் எது வாழைப்பழம்? எது ஊசி? என்று கலாய்க்கிறாரே! அழகு!

கழுதைக்குப் பின்னாலும், ஆபீசருக்கு முன்னாலும் அடிக்கடி போய் நிற்காதே! – நல்ல அறிவுரை.

அரசு அலுவலகத்திற்குப் போன கடிதம் மாதிரி ஒரு பதிலும் இல்லை. நல்ல அங்கதம் (Satire). கலைஞரை வாலியும் வைரமுத்துவும் புகழ்வது போல எனக் கிண்டல் வேறு!

மென்மையாகக் காலைப்பிடித்துக் கொடுத்து எழுப்பினால், (கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர்) எழுப்பிப் பாருங்கள் சண்டை சச்சரவே இருக்காது. நல்ல தீர்வு! காலில் விழும் கலாச்சாரம் – கம்பனில் நிறைய உண்டு.

தேவையில்லாத கவலைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்! சீதையைப் பிரிந்த இராமன் இயந்திர மனிதன் (Robot) மாதிரி இயங்கினான் எபதால் கம்பனுக்கு எந்திரன் பற்றித் தெரிந்திருக்க்க் கூடும் என்கிறார்.

நொடிப் பொழுதில் விபத்து. ரேஷன் கார்டிலிருந்து அவன் பெயரே நீக்கப்படுகிறது.

திமிங்கில கிலங்கள் (திமிங்கிலங்களையே கொன்றுவிடும் கடல்வால் உயிரினம்) என்று கம்பன் குறிப்பது வியப்புக்குரியது.

நிறைவாக்க் கம்பன் மேலாண்மை குரு என்று கட்டுரைத் தொடரை நிறைவு செய்கிறார். இன்று காலம், ஆற்றல், மனாழுத்தம் எல்லாவற்ரிற்கும் மேலாண்மை தேவை என்கிறோம். அவையனைத்தும் கம்பநாடனின் இராமகாதையிலே உள்ளன என்றுஇந்த நிர்வாக மேலாண்மையாளர் சொன்னால சரியாய்த்தானே இருக்கும்!

இன்னும் எழுதுக!

எடுத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது அத்தனை செய்திகள்! அதுவும் எளிய இனிய நடையில்! பாமரனிடம் கம்பனைக் கொண்டு செல்லும் அரிய முயற்சி இது! தமிழ்நெஞ்சனே! இனிய கம்பநேசனே! அந்தமானைப் போன்ற அழகான நூலைத் தந்த உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க! வளர்க! இன்னும் எழுதுங்கள்.

என வாழ்த்தும்,
சரசுவதி இராமநாதன்