கற்போம் கம்பனில் – 3
(22-09-2019)
ஒரே விசயத்தெ அடிக்கடி செஞ்சிட்டே வந்தோம்னா, அதில் நாம் கரை கண்டு விடுவோம் என்பார்கள். (ஆனா, கரை காணுதல் என்றால் என்ன? என்பது மட்டும் இன்னும் புரிபடலை). ரிஷி முனிகள் தவம் செய்து பெற்ற வரங்களும் இப்படிப்பட்ட ப்ராண்டில் தான் வரும். அப்துல் கலாம் ஐயா சொன்ன, தூங்க விடாது கனவு காணச் சொல்வதும் இதே ரகம்தான். ஆனா அமெரிக்காவே இரத்தினக்கம்பளம் விரித்து நம் பிரதமரை வரவேற்றாலும் கூட, நம்மூர் டீவிகள் கெட்ட கெட்ட செய்திகளையே காட்டிக் கொண்டிருக்கும். (டீவி சீரியல்கள் உட்பட). நாம என்ன ஊரு ஒலகத்திலெ இல்லாத ஒண்ணா காட்றோம் என்கிறார்கள்?
சமீபத்தில் அந்தமான் போலீஸ் டிரைனிங் ஸ்கூலில் போய், ஸ்ட்ரஸ் மேனேஜ்மெண்ட் பத்தி டிரைனிங் குடுக்கப் போனேன். (ஆமா, அந்தமானில் நீங்க மைக் புடிக்காத இடம் ஏதாவது இருக்கா? என்று கேட்க வேணாம் ப்ளீஸ்) காக்கி அணிந்த இளஞ்சிட்டுகள் தான் அதிகம் இருந்தது, வகுப்பு எடுக்க பூஸ்ட் சாப்பிட்ட மாதிரி தன் இருந்தது. (பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை எனெர்ஜி என்பது இது தானோ?) இதுவரை மார்ச்சுவரி, போலீஸ் தானா (ஸ்டேசன் எனத் தமிழில் சொல்லப்படும், காவல் நிலையம்) போகாதவர்கள் கை தூக்குங்கள் என்றேன். எல்லாரும் கை தூக்கினர். இது நிஜம். நிழலான நம்ம் தமிழ் சீரியல்களில், போட்டுத் தள்ளிடு, தூக்கிடு, போலீஸ் ஸ்டேசன் வராத சீரியல் உண்டா? இப்பொ தெரியுதா சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு என்ன மூலம்? ஏதாவது கேட்டா, ஊர் ஒலகத்திலெ இல்லாததா என்று அபராதம் வேறு கட்டுகிறார்கள். மன்னிப்பும் கேட்டு.
பக்திப் பாடல் பக்கமா போனா, நம் மாணிக்கவாசகர் சொல்கிறார். சிவன் சாமீ கீறாரே, அவரு, வானத்திலெ உலாப் போகும் அம்புட்டு சாமிக்கும் டாப்புலெ, மேலே இருக்காறாம். அவரு மட்டும் தன்னை நாய் மாதிரியான ஆளுங்கிறார். சாமீ ஓகே. ஆனா ஆசாமீ பெரீய்ய பெரீய்ய படிப்பெல்லாம் படிச்சவரு, அவார்டு எல்லாம் (தென்னவர் பிரம்மராயன்) வாங்கினவரு. தமிழ் ஹிந்தி (அட… ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி… கையிலெ தாரும் பிரஸ்ஸும் வச்சிட்டு இப்புடியா அலைவாய்ங்க, நம்ம இளைஞர்கள் வாய்ப்பை கெடுக்க) வடமொழி எல்லாம் கரெச்சிக் குடிச்சவருங்கோ. அறிவு இருக்கும் இடத்தில் வீரம் இருக்காது என்பர் (ரெண்டும் இல்லாதது நம்ம ஜாதிங்க). ஆனா இவரு குதிரைப் படை பத்தின சகலமும் தெரிஞ்சவர். ஏன் இப்படி ஒலகத்திலெ இல்லாது தன்னை, நாய் எனச் சொல்லிக்கிட்டார் தன்னோட திரு அம்மானைப் பாட்டில்?
அம்மானை பற்றிய சர்ச்சை சமீபத்திய சென்னை ஐஐடி விசிட்டில் வந்தது. கடலில் அலைகளைத் தடுக்கும் வகையில், தான் தயாரித்த (சின்னத்திரை வரலாற்றில் முதன் முதலாக) உலகத்தில் இல்லாத, ஆறு கால் கொண்ட அக்ராபாட் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் ஒரு வெளிநாட்டு அறிஞர். பாத்தா அது நம்ம மாணிக்கவாசகர் காலத்தில் ஆடிய அம்மானையினைப் புடிச்சி ஆறு பக்கமும் இழுத்த மாதிரி இருக்கு. ஒருவேளை கடலில் எழும் அலைகளை தடுக்க அக்ராபாட் மாதிரி, மனதில் எழும் கெட்ட எண்ண அலைகளை குறைக்க அம்மானை உதவுமோ?
இப்படி ஓவர் பில்டப் & லோயர் பில்டப் செய்வதில் மாணிக்கவாசகருக்கு முன்னரே நம்ம ஐயன் வள்ளுவர் செஞ்சிருக்கார்.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்! –
சின்ன வாண்டுக அன்பால் ஊட்டும் கூழ் அமிழ்தத்தை விடவும் டேஸ்டா இருக்குமாம். நோட் பன்னுங்கப்பா…நோட் பன்னுங்கப்பா… அவங்கவங்க கேர்ள் ஃபிரண்டெ ஊட்ட வச்சி, இப்படி ஒரு டயலாக் அடிங்க. அப்புறம் பாருங்க நெருக்கம் எப்படி இறுகுதுண்ணு. அன்பு மட்டும் இல்லாட்டி வாழும் வாழ்வே வீணாம். அன்பில்லா வாழ்க்கை, பேலன்ஸ் இல்லாத நெட்வொர்க் மாதிரி, (ஓர் உலகில் இல்லாத) பாலை நிலத்தில் மரம் வளர்ந்த மாரிதிங்கிறார்.
அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை
வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று.
உலகம் கிடக்கட்டும் ஒரு பக்கம்; ஒட்டு மொத்த இந்தியா ஒரு பக்கமா சாய்ஞ்சா, நம்ம தமிழகம் வேறு பக்கம் யோசிக்கும். வட ஹிந்தியாவில் ஆளும் கட்சி, எதிர் கட்சித் தலைவர்கள் சும்மா ஜம்முண்ணு நமஸ்தே சொல்லிட்டுப் போறாய்ங்க. ஆனா இங்கே ஒரே இடத்தில் (உதய) சூரியனும், (இராம) சந்திரனும் சந்திக்கிறதே சிரமம் தான். இளங்கோவடிகள் ஒரே மேடையில் சூரியணும் சந்திரனும் இருக்கும் மாதிரி சிலப்பதிகாரத்தில் சொல்கிறார்.
ஒரு புற 400 காட்சி. சேர ராசாவுக்கும், சோழ ராசாவுக்கும் சண்டை. அடிக்கிற அடியிலெ தாரை தம்பட்டைகள் கிழிய வேணாமா? என்ற வடிவேலின் டயலாக் மாதிரி, அப்பொ யாரோ ஒரு தறுதலை கத்திவைக்க, முரசின் மேலாடை கிழிகின்றதாம். அது ஏதோ பிறை என நெனைச்சி ஒரு யானை தடுக்கி விழ, ரத்தம் அந்த முரசு வழியா ஓடுதாம். களவழி நாற்பதில் பொய்கையார் என்ற புலவர் வீடியோ எடுத்த மாதிரி பதினெண்கீழ் கணக்கில் எழுதி வச்சிருக்கார். (இந்தக் கணக்கெல்லாம் நமக்கு வேண்டாம். வேற ஆட்களைக் கணக்கு பன்ன ஏதும் வழி சொல்லுவியா?).
ஆழ்வார் பாசுரம் சொல்லுது, ’நீல மலை ஒன்று இரண்டு பிறைகளைக் கவ்விக் கொண்டு நிமிர்ந்ததைப் போல வராக அவதாரம் எடுத்தவனே’. சரக்கடிக்காமலேயே ஒரு பிறை, ரெண்டு பிறையா தெரிஞ்சதாம் நம்ம பத்தாம் திருவாய்மொழி ஆழ்வாருக்கு. (ஆழ்வார் என்றால், நமக்கு தலெ நடிச்ச படம் தான் ஞாபகத்துக்கு வரும். நம்ம டிசைன் அப்படி). இதுக்கும் ஒரு படி மேலே போய் வைரமுத்து ஸ்டைலில், தண்ணீரில் நிக்கும் போதே, வேற்கின்றதே மாதிரி, திங்களில் தீத் தோன்றியற்று (சந்திராயன் அனுப்பாமலேயே நிலவில் தீ என்கிறார்) குறிஞ்சிக் கபிலர்.
”போதுமா… மே ஐ கம் இன்?” என்றார் நம்ம கம்பர். அவரும் ஊர் உலகத்தில் இல்லாத சமாச்சாரம் சொல்றாரு பாக்கலாமா?
கற்றை வெண் நிலவு நீக்கி, கருணை ஆம் அமிழ்தம் காலும்
மற்றுறு கலையிற்று ஆய முழுமதி மகத்தினானை
பெற்றவன் அளித்த மோலி இளையவன் பெற, தான் பெற்ற
சிற்றவை பணைத்த மோலி பிலிகின்ற சென்னியானை;
[யுத்த காsண்டம், வீடணன் அடைக்கலப் படலம்]
[தொகுதியான நிலவொளியை நீக்கிவிட்டு, கருணையாகிய அமுதைப் பொழிகின்ற நிறைந்த கவலைகள் உடையதாகிய முழுமதி போன்ற முகத்தை உடையவனை தந்தையாகிய தயரதன் தந்த மகுடத்தை தம்பியாகிய பரதன் அடைய, தான் பெற்ற தனது சிறிய தாயாராகிய கைகேயி கட்டளைப்படி அணிந்த சடைமுடி விளங்குகின்ற தலையை உடையவனை ]
இராமனது முகம் முழுமதி போன்றது. ஆனால் நிலவொளி இல்லை. கருணையாகிய அமுதம் பொழியுதாம். எங்காவது இப்படி ஊர் உலகத்தில் பாக்க முடியுமா?
கம்பனில் கற்கும் இன்றைய அணிப்பாடம்:
இல் பொருள் உவமை அணி
இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது தான் இந்த அணி. ஆக… இல்லாத ஒன்றை இருக்கின்ற ஒன்றிற்கு உவமையாக்குதல் இல்பொருள் உவமையணி எனப்படும்.
ஆமா… பதிவு நீளா போகுதே? ஏன் ரெண்டு குறள்? திருக்குறளைப் படித்தால் முழுத் தமிழையும் படித்த மாதிரி என்பர். ஆனா இந்த இ பொ உ அணிக்கு பாடல் தேடினா, கூகுள் முழுக்க ஒரு பாட்டையே திரும்ப திரும்பக் காட்டுது. அதான் ரெண்டாவது குறள் தேடி வச்சேன்.
இப்பொ சொல்லுங்க… ஊர் உலகத்தில் இப்படி யாராவது இலக்கணப் பாடம் சொல்லித் தாராய்ங்களா?
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.