ஒரு காலத்தில் பாலகுமாரனின் இரும்புக் குதிரைகள் செமெப் பாப்புலர். (இப்பவும் தான் அந்தமான் தீவுகளில் கூட, சுகிசிவம் நூல்களுக்கு அடுத்தபடியாக, பாலகுமாரனின் நாவல்கள் தான் விற்பனை ஆகின்றதாம்). கதைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத குதிரை பற்றி, தேவைப்படும் போதெல்லாம் எழுதிய விதம், படிக்கும் போதும், படித்த பின்னரும், குதிரை மேல் ஒரு மரியாதை, பக்தி, பாசம், ஆசை இவைகளை உங்களுக்குத் தெரியாமலேயே வளர்த்து விட்டிருக்கும். குதிரை பற்றி தெரிந்து கொள்ள அந்த நாவல் அதீத உதவி செய்யும். (குதிரை பற்றிய கவிதைகள் தான் செம ஹிட்)
சுயமுன்னேறம் தொடர்பான எல்லா நூல்களிலும், தவறாமல் இந்த குதிரைகளின் படம் இடம் பெறுவதைப் பாக்கலாம். கம்பீரமாய் சிலிர்த்து நிக்கும் அந்த குதிரையினைப் படத்தில் பாக்கும் போதே, அப்படியே நம்பிக்கை சுடர் விடுமென்று ஆசிரியர்கள் நினைக்கிறார்களோ? அதே மாதிரி வாழ்த்து அட்டைகளிலும் குதிரையின் கம்பீரமான படங்கள் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாதவையாகவே இருந்தன. (இன்னும் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் யாரிடமாவது இருக்கா? நானு டிஜிட்டல் மின் அஞ்சலில் அனுப்புவதைக் கேக்கலை. உண்மையான வாழ்த்து அட்டை பத்தி கேக்கிறேன்).
அந்தக் காலத்தில் குதிரைப் படைதான் ரொம்பவும் பவர்ஃபுல்லாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். (இப்பொ இருக்கிற சூழலில் எந்தப் ஃபுல்லு பவரா இருக்கும் என்பதில் தான் டாஸ்மாக் ரொம்பவும் கவனமாய் இருக்கிறது போல் தெரியுது). குதிரைப் படையின் திறம் மட்டுமே இன்னமும் ஹார்ஸ்பவர் என்று மாறாமல் பயன் படுத்தப் பட்டும் வருகிறது. ஆடம்பர அணி வகுப்புகளில், இந்த குதிரை தவறாது இடம் பெறும். பல திருமண வைபவங்களிலும் குதிரையும் கூடவே இருந்திருக்கிறது. இன்னும் இருந்தும் வருகிறது. குதிரை வைத்து பிழைப்பு ஓட்டுபவர்கள் பீச்சை தாண்டி அந்த மாதிரி நேரங்களில் தான் டவுன் பக்கமும் வருகிறார்கள்.
மன்னராட்சி நடந்த காலத்தில் மந்திரியாய் இருப்பதற்க்கு சில தேவையான தகுதிகளை நிர்னயித்து இருந்தனர். (ஆதாரம் எல்லாம் கேக்காதீங்க..நான் என்ன ஆராய்சிக் கட்டுரையா எழுதுறேன்?). படித்தவராக இருக்க வேண்டும். பல வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும். பல மொழிகளில் புலமை வேண்டும். பட்டங்களும் பெற்றிருக்க வேண்டும். தனித் திறமைகளும் எதிலாவது இருக்க வேண்டும் (ஏதாவது ஒரு துறையில் நிபுனத்துவம்). அப்படி எல்லாவற்றிலும் தகுதியாய் இருந்து, குதிரைகள் பற்றிய அறிவும் இருந்த காரணத்தால் தான் மந்திரி ஆனார் மாணிக்கவாசகர். (ஆக குதிரை எல்லாத்துக்கும் யூஸ் ஆகுது பாருங்க). இதிலெ ஒரு சின்ன விசயம் அவரோட அப்பாவும் மந்திரியா இருந்தவருதான். அப்பா மந்திரியா இருந்தாலும், இவ்வளவு தகுதி பாத்து மந்திரி ஆனவர் அந்த வாசகர், அந்தக் காலத்தில்.
குதிரை வாங்குவதில் அவ்வளவு திறமை இருந்தும், திருவாசகத்தில் குதிரை பற்றி ஏதும் பாடியதாய்த் தெரியவில்லை. (என்னமோ திருவாசகத்தை கரைச்சி குடிச்சவன் மாதிரி எழுதுற ஆளெப் பாரு… என்று யாரும் சொல்வதற்கு முன்னால் நானே சொல்லியிற்றேன்.. அப்படி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.) ஆனா குறை குடமா இருக்கிற நாம…அட நான் தாங்க… ராமயணம் படிச்சாலும் அதிலெ ஏதாவது RTI (தகவல் அறியும் உரிமை) பற்றி நைசா உள்ளே தள்ளிடுவோம்லெ…
இப்படி சம்பந்தம் இல்லாத இடங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாததை இழுப்பதில் அப்பப்பொ நல்லதும் நடக்கும். சமீபத்தில் ஒரு இண்டர்வியூவிற்க்கு போகும் ஒருவர், என்னிடம் வந்து யோசனை கேட்டார். (கவுண்டமனி ஸ்டைலில் செந்திலிடம், என்னைப் பாத்து ஏண்டா இப்படிக் கேட்டே என்று என்னால் கேக்க முடியலை). கேட்டவர் Pile foundation ல் நிபுனர். Soil Test பற்றியும் தெரியும் என்றார். நான் சொன்ன சின்ன அட்வைஸ் இது தான்: எந்தக் கேள்விக்கு சொல்லும் பதிலிலும், உங்களுக்கு தெரிந்தவைகளை இழுத்து வந்து பதில் சொல்ல வேண்டும். அதாவது சொல்லும் பதிலில் Pile, Foundation, Soil Test இப்படி ஏதாவது இழுத்து விட வேண்டும். அடுத்த கேள்வி கண்டிப்பாய் அதை ஒட்டியே இருக்கும். அப்புறம். வேலை உங்களுக்குத் தான். (வேலை தரும் பொறுப்பில் இருப்பவர்கள் இதை படித்து, மாத்தி கேள்வி கேட்டு என் பெயரைக் கெடுக்க வேண்டாம் ப்ளீஸ்). நம்ம குதிரை எங்கே போச்சி.. எங்கோ விட்டோமே???
அந்தமானில் நிறைய குதிரைகள் இருந்ததாய் சொல்றாய்ங்க. சிறைச்சாலை படம் பாத்த போதும் அதில் குதிரைகள் இருக்கிறதும் தெரியுது. தீவில் அங்காங்கே குதிரைகள் கட்டி வைத்த இடங்கள் எல்லாம் இப்பொ குடியிருப்புகளாய் ஆகி உள்ளன. ஆனால் அளவு என்னவோ, அதே அளவு தான். குதிரை இருந்த இடத்தில் குடித்தனம். சிறைச்சாலை படப்பிடிப்பு முடிந்த பிறகு, ஒரே ஒரு குதிரையை மட்டும் விட்டுட்டுப் போனாங்க. ஒரு வேளை 1200 கிமீ கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்று விட்டாங்களோ? அந்தக் குதிரையும் கொஞ்ச நாளில் நம்மை விட்டுப் போனது தான் பரிதாபம். (ஒரு வேளை கொள்ளு, கடிவாளம் ஆகியவை இல்லாது வாழ முடியலையோ?)
அது சரி… குதிரை பேசுமா?? இந்த மாதிரி வில்லங்கமான கேள்விகள் எல்லாம் ஒரு ஆளு கிட்டே தான் கேக்க முடியும். அவரு வேற யாருமில்லெ… நண்பண்டா… என் கம்பண்டா.. (ஆளுக்காளு கம்பரை பாத்தும், அவரோட மீசையெப் பாத்தும் வெலவெலத்துப் போயிருக்க, நான் மட்டும் தான் அவர்கிட்டெ தைரியமா மிஸ்ட் கால் கொடுத்து பேசுறேன்). உடனே பதில் வந்தது.
”ஒரு காரைப் பத்தி நல்லா தெரிஞ்சிக்கனுமா?? யார் கிட்டெ கேக்கனும். அந்தக் காரை ஓட்றவங்க கிட்டெ தானே கேப்பீங்க?? காருக்கே இந்த பார்முலானா, அப்பொ தேருக்கு?? அதை ஓட்றது யாருங்கோ?? குதிரை தானே? குதிரை பேசும்ங்க… குதிரை சொன்னா கேளுங்க.. அதுக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும். அப்படியெ தேரோட்டி ஒப்பீனியனும் கேட்டுட்டு ஒரு முடிவு எடுங்க”. இது கம்பர் சொன்னது. (அட… நம்புங்க..)
இவ்வளவு சொன்னா, ஏதாவது பாட்டிலெ சொல்லாமலா இருப்பாரு.. தேடினால், கிடைக்கப்படும். கிடைச்சதே… இராமன் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு ஒரு தேர் கிடைக்குது. அதை இந்திரன் அனுப்பி வைக்கிறார். புதுக்கார் வந்தவுடன் மாடல், மைலேஜ், பவர் ஸ்டியரிங் என்றெல்லாம் சூப்பரா சொல்லிட்டே இருப்போமே, அதே மாதிரி அந்தக் காரோட்டி.. சாரி..சாரி.. தேரோட்டி மாதலி கூடுதலா அளக்கிறார்..
எல்லாம் கேட்டும், அதுக்கு அப்புறமும் ராமனுக்கு சரிவர நம்பிக்கை வரலை. ஏதாவது உள்குத்து இருக்குமோ?? (அதாங்க.. மாயாஜால வேலைகளா இருக்குமோ?? மாதலிக்கே அந்த மாயம் புரியலையோ). சும்மா லைட்டா ஒரு சந்தேகம். இல்லெ.. இல்லெ… மாதலி சொன்னது நூத்துக்கு நூறு உண்மை என்று குதிரை சொன்னதாம். எப்படிப்பட்ட குதிரை தெரியுமா? செறிந்த பிடரி மயிரினை உடைய வலிமையான குதிரைகள், முதுமையான வேதங்கள் பயின்ற மொழிகளால் எடுத்து இயம்பினவாம்.
ஐயன் இது கேட்டு இகல் அரக்கர் அகல் மாயச்
செய்கைகொல் எனச் சிறிது சிதையில் நினைந்தான்
மெய் அவன் உரைத்தது என வேண்டிஹ்வ் இடை பூண்ட
மொய் உளை வயப் பரி மொழிந்த முழு வேதம்.
குதிரைக்கும் வேதம் தெரியுமுங்கோ.. அதனாலெ குதிரெ சொல்லைத் தட்டாதீர்கள்.. வேறு ஏதும் தேடலாம்.