தெருத்தெருவா கூட்டுவது…


Modi in sydni

தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்லி விட்டு, அதோடு நிற்காமல், அப்படியே அடுத்தடுத்து அரசு இயந்திரத்தையும் பொது மக்களையும் சுழற்றி வருகிறார் நம் பிரதமர். ரொம்ம காலத்துக்கு அப்புறம் இப்பத்தான் நம்ம நாட்டுக்கு பிரதமர்னு ஒருத்தர் இருக்கார்ன்னு மக்கள் நம்பவே ஆரம்பிச்சிருக்காங்க. அமெரிக்கா என்ன? ஆஸ்திரேலியா என்ன? மைக்கை சரி செய்து உதவிய செயல் என்ன? இப்படி என்ன? என்ன? என்ற லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம். உலகம் முழுக்க அவருக்கு ஆதரவாளர்கள் ஒரு பக்கம் உருவானாலும் கூட அவரை எதிர்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமீபத்தில் இப்படி மோடி எதிர்ப்பாளர் ஒருவர் மல்லுக் கட்டிக் கொண்டு நின்றார். நம்ம தான் அரசு அதிகாரியா இருக்கிறதுனாலெ, மோடி பக்கம் தானே நிப்போம். (இதுக்கு முன்னாடி அப்படி இருந்தீகளான்னு கேள்வி கேட்டு, நம்மளை இக்கட்டுலெ மாட்டி வைக்கக் கூடாது). ஆசிரியர்கள் தினத்தில் அவர் எப்படி குழந்தைகளோடு பேசப் போச்சி? ஆசிரியர்கள் தானே பேசனும் என்றார் அந்த ரிட்டையர்ட் ஆசிரியர். காலம் பூரா வாத்திகள் பேசுறதெக் கேக்கிறாய்ங்க பசங்க. இன்னெக்கி மோடியோட பேசினதுலெ என்ன தப்பு? என்றேன். ஒத்துக்கவே மாட்டேன்றார் மனுஷன். பாவம் National Informatics Centre தொழில்நுட்ப உதவிகள் செய்ததை புரிந்து கொள்ளாமல், அந்த NIC தான் கேள்விகள் தயார் செய்து கொடுத்தார்கள் என்று யாரோ சொன்னதை, உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார். பாவம் அவரிடம் படித்த மாணவர்கள் அதை விடப் பரிதாபம்.

mgr

எது நல்லதோ கெட்டதோ, இந்த தூய்மை இந்தியா பத்தி எல்லாரும் சொல்லிட்டு சொல்லிட்டு சொல்லிட்டு இருக்கும் போது, ”வாங்கைய்யா வாத்தியாரய்யா” ஸ்டைலில் தெருத்தெருவாய் கூட்டுவது பொது நலத்தொண்டு, அதை ஊரார் தெரிந்து கொள்ள படம் எடுத்தாலும் பொது நலம் உண்டு என்பதை நிரூபித்து விட்டார். எந்த சர்க்குலர் நெட்டில் இருந்து இறக்கிக் காட்டினாலும், நமக்கு அதிகார பூரவமாக வரலையே என்று சொல்லும் நம் துறை தலைவர் கூட, மோடி அவர்கள் தொடப்பக்கட்டையெ தூக்கினதைப் பாத்து தானும் களத்தில் இறங்கி எல்லாரையும் களத்தில் இறக்கியது கலக்கலான கதை தான்.

c bay

நம்ம ஏரியாவை நாமளே கிளீன் செய்யும் காரியம் ஏதோ புதியதாகத் தெரிந்தாலும், நமக்கு அது அரதப் பழசுங்கோ… அது, அந்தமானுக்கு வந்த புதிது. 1986. அந்தமானின் தென் கோடித் தீவான கிரேட் நிகோபாரில் தான் முதல் வேலை. அந்தமானில் தலைநகராம் போர்ட் பிளேயர் வரவே மூணு நாளு கப்பல்ல ஆடி அசெஞ்சி வந்துட்டு, அப்புறம் நாலு நாள் சின்ன கப்பல்லெ பயணம் செஞ்சா வரும் அந்த கேம்ப்பல்பே என்கிற தீவு. (என்ன சிந்து பாத் கதை ஞாபகத்துக்கு வருதா? நல்ல லுக்குக்கு லைலாக்களும் இருந்தனர் என்பது தனிக்கதை.)

12 பேர் தங்கும் ஒரு டார்மெட்ரி தான் நமது மாளிகை அப்போது. இரண்டு கழிப்பறைகள். வந்த அன்றைக்கே முகம் சுழிக்க வைத்தன அவைகளின் சுத்தம். கழிவறை சுத்தம் செய்யும் ஊழியர் அந்த ஊருக்கே ஒரு ஆள் தான். அதனால் அவருக்கு செமெ டிமாண்ட். மனுஷன் அந்தக் காலத்திலேயே சபாரி கோட் சூட் போட்டார்னா பாத்துகிடுங்க. சுத்தம் சோறு அவருக்கு விருந்தே போட்டிருக்கு. அந்த டார்மெட்ரியில் குளிக்கப் போகும் போது சர்க்கஸ் தெரிந்தவர்கள் தான் நல்லா போக முடியும் கிணற்றடிக்கு. சின்ன சின்ன கல் வைத்து அதில் ஒவ்வொரு காலாய் கவனமாய் வைத்து, சகதியில் விழுந்து விடாமல் கவனமாக கிணறுக்குப் போக வேண்டும். குளிக்கும் போது அந்தத் தண்ணியும் அதே சகதியில் போய் சேரும்.

வழக்கமான ஒரு ஞாயிற்றுக் கிழமை அப்படியே பேசிட்டு இருக்கும் போதே ஒரு நண்பர் சட்டுன்னு,’ நாமளே ஏன் டாய்லெட் கிளீன் செய்யக் கூடாது?’ என்று சொல்ல, நான் முதலாவதாக சப்போர்ட் செய்து கை தூக்கினேன். (சில சமயங்களில் தண்ணி அடிக்காத பார்ட்டிகளில் கூட நல்ல ஐடியாக்கள் உதயமாகும் நம்புங்க தோழர்களே..). சிலர் தயங்கினர். ’என்னையெப் பாத்தா என்ன டாய்லட் கழுவும் ஆளாகவா தெரியுது?’ என்று கேள்வி வேறு வந்தது. அதெல்லாம் கெடையாது. ரெண்டு பேர் ஒரு டீம். மொத்தம் 6 டீம். வாரத்துக்கு ஒரு தடவை கிளீன் செய்யணும். பரிட்சாத்த முறையில் கிளீன் செய்பவர்கள், நாமே கிளீன் செய்த டாய்லெட்டிலும் மற்றவர்கள் நாற்றம் பிடித்த டாய்லெட்டிலும் போக ஒப்பந்தம் ஆனது.

ஜாலியா டாய்லெட் கழுவ ஆரம்பிச்சி முடிஞ்சதுக்கு அப்புறம் பாத்தா, “மாமி, முகம் தெரியும் மாமி” என்று இப்போதைக்கு ஒரு டைல்ஸ் கம்பெனி விளம்பரம் மாதிரி, அந்தக் காலத்திலேயே மொகம் பாக்குற மாதிரி பளிச்சின்னு ஆயிடுச்சி. அதெப் பாத்துட்டு அடுத்த வாரமே, எதிர்ப்புக் குரல் கொடுத்தவங்களும் சப்போர்ட் செய்ய ரெண்டு டாய்லெட்டும் பள பள, பளிச் பளிச்..

அடுத்த ஞாயிறு கிணற்றடிக்கு கவனத்தைத் திருப்பினோம். கையில் கிடைத்த கத்தி கம்பு அரிவாள் என்று (ஏதோ கலவரத்துக்கு போற மாதிரி தெரியுதா? – ஆமா, பரமக்குடிக்காரங்க இப்படி ஏதும் சொன்னா, வில்லங்கமா தான் நெனைப்பீங்க…) கிளம்பினோம். ரெண்டு மணி நேரத்துக்குள் முழுதாய் சுத்தம் ஆனது. சும்மா பான் (அடெ அந்தமான்லெ வெத்திலெங்க) வாங்க வந்த உதவிப் பொறியாளர், நாம் செய்யும் வேலை பாத்து பதறிட்டார். ஐயோ… இதெல்லாம் உடுங்க. நாளைக்கே இந்த ஏரியா சுத்தம் செய்து உடற்பயிற்சி செய்ய பார் (அடெ… உண்மையான பார் தாங்க) எல்லாம் அமைத்து தந்தார்கள். (ஆனால், கிளீன் செய்த செலவும் சேத்து அவர் ஏப்பம் விட்ட கதை அப்போது நமக்கு மண்டையில் ஏறலை… இப்பவும் சில வில்லங்கமான சேதிகள் நம் மண்டையில் ஏறுவதில்லை. எப்படி எல்லாம் யோசிக்கிறாய்ங்க என்று தான் யோசிக்க முடியுது.)

நீ 86 ல் நடந்த கதை சொல்றே… நானு, 8ம் நூற்றாண்டு கதை சொல்லவா? இது கம்பரின் குரல் அசரீரியாய் வந்தது.

சொல்லுங்க சாமி….அது, தூய்மை இந்தியா பத்தித்தானே?? – இது நான்.

“ம்…. தூய்மை சரி தான். ஆனால் இலங்கை பத்தி…” பதில் சொன்னார் கம்பர்.

சூர்ப்பனகை வரும் முன்னர் எவ்வளவு சூப்பரா இருக்கு அரன்மனை என்பதாய் வரும் நம்ம பாட்டு. எங்கே பாத்தாலும் பூக்கள். அதிலிருந்து மகரந்தங்கள் கொட்டுவதால் மணம் வீசும். அரசர்கள் எல்லாம் (அம்மா காலில் போட்டி போட்டு விழுபவர்கள் மாதிரி) விழும் போது கிரீடங்கள் மோதுமாம். அப்புறம் அதில் இருந்த ரத்தினங்கள், முத்து எல்லாம் கொட்டுமாம். அது விழுறதுக்கு முன்னாடியே வாயு பகவான் துடைச்சு எடுத்து குப்பை இல்லா இலங்கையா மாத்திடுமாம். அப்படி இருந்த சபையில் இராவணன் இருந்தானாம். எப்புடி நம்ம சரக்கு?

கம்பன் தொடர்ந்தார்.. இதோ உனக்காக பாட்டும்…பிடி.. சொல்லி மறைந்தார். நான் படித்த எனக்குப் பிடித்த பாடல் இதோ…

நறை மலர்த் தாதும் தேனும், நளிர் நெடு மகுட கோடி
முறை முறை அறையச் சிந்தி முரிந்து உகும் மணியும் முத்தும்,
தறையிடை உகாதமுன்னம் தாங்கினன் தழுவி வாங்கி,
துறைதொறும் தொடர்ந்து நின்று சமீரணன் துடைப்ப மன்னோ.

மீண்டும் வருவேன்…. எதையாவது கிளீன் செய்வோம்லெ…