மலரே….. குறிஞ்சி மலரே….
இந்த மாதிரி ஒரு சேனல் வராதா?? என்ற என் ஏக்கத்தின் பதிலாய் வந்து சேர்ந்தது எங்கள் தீவுக்கும் “முரசு” டீவி. பெயரைப் பார்த்ததும் வைகோ அல்லது விஜயகாந்த் நடத்தும் டீவியாக இருக்குமோ என்று நினைத்தேன். எந்த விளம்பரமும் இல்லாமல் ஆரம்பித்து (இப்போது குறைந்தபட்ச விளம்பரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது). Negative News மட்டுமே குறி பார்த்து சொல்லும் சேனல்களுக்கு மத்தியில் செய்திகளே இல்லாத சேனல் என்றால் மகிழ்ச்சி தானே.. அதுவும் அறிவிப்பாளர் கூட இல்லாமல் தொடர்ந்து பழைய பாடல்கள்.. தேன்மழை தான் போங்கள்..
அதில் அடிக்கடி கேட்கும் பாடல் ஒன்று… எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் அது. மலரே.. குறிஞ்ச்சி மலரே.. தலைவன் சூட… நீ மலர்ந்தாய். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்ச்சிப் பூவை காதலிக்கு உவமையாய் சொல்ல காதலனுக்கு கசக்குமா என்ன? (காக்கா பிடிப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அதில் குறிஞ்ச்சிப்பூ என்ன குஷ்பூ என்ன?? எல்லாம் ஒரே மீனிங்க்தானே..) மலரை யார் சூடுவர்? மகளிர். அதுவும் மலர்ந்த மலரை விரும்பிச் சூடுவர். ஆனால் இந்தப் பாட்டில் பாருங்களேன்… தலைவன் சூட குறிஞ்ச்சி மலர் மலர்ந்ததோ என்று பாடிய சாக்கில் காதலியை சொல்கிறார். தான் அணியவும், பிறருக்கு அணிவிக்கவும் “சூட” என்ற ஒரே வார்த்தை தான். இந்த அர்த்தத்தோடு பாடல் கேட்டால் இன்னும் இனிக்கும்.
நாமெல்லாம் யார் யாருக்கோ வரவேற்பு வளையம் (Welcome Arch) வைக்கிறோம். இந்த லிட்டில் அந்தமான் தீவிற்கு லேனா தமிழ்வாணன் வந்த போது அவரை வரவேற்க வரவேற்பு வளையம் (Welcome Arch) வைத்தோம். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவு வரவேற்பு தந்தவர்கள் நீங்கள் தான் என்றார். பதிலுக்கு நாம் சொன்ன பதில்: இந்த தீவுக்கு வந்த முதல் எழுத்தாளர் நீங்கள். சரி லேனாவை விடுங்க. மலர்களே.. மலர்களே மலருங்கள் என்று வரவேற்பு கொடுப்பதெல்லாம் கூட “ஆயிரம் மலர்களே மலருங்கள்” என்று பாடலாய் பாடி வைத்துள்ளனர். தானாக் கனிவதை தடி கொண்டு கனிய வைக்கும் வித்தையா இது?
பரமக்குடியிலிருந்து 1980 களில் கோவை பொறியியல் கல்லூரியின் விடுதியில் நுழைந்த போது ஏகமாய் புதுமுகங்கள். தமிழகத்தில் தமிழ் பேசவும் தெரியாமல் இருப்பார்களா என்று என் தலையைப் பிய்த்துக் கொள்ள வைத்த பலர். பலர் பேசிய ஆங்கிலம் என்னை ஓர் ஓரம் விரட்டியது. கோலிக் குண்டும் பம்பரமும் மட்டுமே விளையாடி சென்றவனுக்கு அங்கே கிரிக்கெட், வாலிபால், பேஸ்கெட்பால், டென்னிஸ், டேபிள் டென்னிஸ் இப்படி எல்லாம் புதிது புதிதாய்த் தெரிந்தது. அந்த விளையாட்டை விட அதற்க்கான உடைகள் பிரமிப்பின் உச்சத்தை அடைய வைத்தன. TMS SPB சுசீலா இவர்களை தாண்டி விரிவடையாத மனசு பல மைக் ஆசாமிகளின் போஸ்டர்களைப் பார்த்து, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பாத்த மாதிரி விழிலிளித்தேன்.
ரூமில் Hubert ஹுபர்ட் என்பவர் இருந்தார். சொந்த ஊர் என்னவோ நாகர்கோவில் தான். ஆனால் ஆளைப் பாத்தா அப்படித் தெரியவில்லை. ஏற்கனவே மிரண்டு கிடக்கும் எனக்கு, அவர் கையில் இருக்கும் கிடார் இன்னும் பயமுறுத்தியது. ஒரே ஆறுதல் அவர் அந்த கிடாரில் வாசித்த ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடல் மட்டும் தான்.
ஆண்டுகள் கழிந்தன. 25 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சந்தித்தோம். மைக் என்றால் மைல் தூரம் ஓடிய என் கையில் அப்போது மைக். மேடையில் நான். அந்த ஹுபர்ட் நண்பரை தேடிப் போனேன். அவருக்கு நினைவில் சிக்கவில்லை. கடைசியில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. பாடினேன். நினைவுக்கு வந்தது அவருக்கு. குடும்பப் பாடல் பாடி ஒன்று சேரும் (நாளை நமதே, தம்பிக்கு ஒரு பாட்டு மதிரி) குடும்பம் மாதிரி நண்பரை தேடிக் காண உதவிய பாடல் அது.
பெரும்பாலும் மொட்டுக்களை யாரும் வாங்குவதில்லை.. (மல்லிகை விதிவிலக்கு.. மொட்டாக இருந்தாலும் மணம் தரும்.. மலர்ந்த மலருக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல்) கும்மி அடிக்க கட்டைகள் வைத்திருப்பர். ஆனந்தக் கும்மி அடிக்க மென்மையான tool (Property என்றும் Prop என்றும் தற்போது பாப்புலர் ஆகி விட்டன டீவி மூலமாய்) தேவைப் பட்டிருக்குமோ!! அதனால் தான் ஒரு தாமரை வேண்டாம்.. 1000 தாமரை மொட்டுகளோடு ஆனந்தக் கும்மி என்று கவிஞர் கற்பனை செய்திருக்கிறார் போலெ. தாமரை மேல் கற்பனைக் கண் வைக்காத கவிஞர்களே இல்லை எனலாம்.
கம்பர் மட்டும் விதிவிலக்கா என்ன??
கவிஞர் மனது எப்படியோ, அப்படித் தான் பார்க்கும் இடமெல்லாம் தெரிகிறது. இயற்கையான நிகழ்வுகள் கூட தங்களின் மன நிலைக்கேற்ப பார்க்கும் வலிமை கவிஞர்களின் தனி உரிமை. சாதாரண கவிஞர்களுக்கே இப்படி என்றால், கவிச் சக்கரவர்த்தி கம்பனுக்கு எப்படி இருக்கும்???
சீதையைத் தேடி அனுமன் அலையும் போது, ஒரு அகழி கண்ணில் படுகிறது. அதிலோ மணம் கமழும் தமரை மலர்கள். அது இரவு நேரம். ஆகவே மலர்கள் குவிந்து காணப்பட்டன. நம்ம அனுமனுக்கு எப்படி தெரியுது தெரியுமா?? இவங்க (தாமரை) நம்ம சீதா பிராட்டிக்கு சொந்தக் காரங்களா (காரிகளா) இருக்கணும். இல்லாட்டி அவங்க மாதிரி இவங்க எல்லாம் ஏன் சோகமா இருக்கணும்? இப்படி யோசிக்கிறாராம் அனுமன் மனசு மூலமா கம்பர்.
நறவு நாறிய நாள் நறுந் தாமரைதுறைகள் தோறும் முகிழ்ந்தன தோன்றுமால்சிறையின் எய்திய செல்வி முகத்தினொடுஉறவு தாம் உடையார் ஒடுங்கார்களோ
திருமணம் ஆன மகளிரை Mrs என்று முன்பு அழைத்தனர். நாகரீகமாய் இப்போது Ms என்று அழைக்கிறோம். ஆனா கம்பர் அப்போதே “செல்வி” என்று அழைத்திருக்கிறார் சீதையினை. என்ன ஒரு தீர்க்கதரிசி!!!!