நீ ஒண்ணும் நானும் இல்லெ


தனுஷ் ஒரு படத்துல சொல்லுவாரு, “என்னெப் பார்த்தா பிடிக்காது; பார்க்க பார்க்கப் பிடிக்கும்.” அனிருத் இசையமைக்கும் பாடல்களும் (அவரே எழுதிப் பாடும் பாடல்கள் உட்பட) இப்படித்தான். கேட்டாப்பிடிக்காது. கேட்கக் கேட்கப் புரிய ஆரம்பிக்கும். ஒருவகையில் பார்த்தால் திருவாசகமும் அப்படித்தான். முதல் தடவை கேட்டால் பிடிக்காது. கேட்க கேட்க தான் பிடிக்கும்.

சமீபத்தில் தேன்மொழி பூங்கொடி வாடி போச்சே என் செடி என்று தொடங்கும் திருச்சிற்றம்பலம் பாடலை கேட்க வேண்டிய சூழல் வந்தது. வீட்டிலும் அதே கேள்விதான் எழுந்தது. ’இந்த மனுசனுக்கு என்ன ஆச்சு? திடீர்னு அனிருத் பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டாரு?’ அதுக்குக் காரணம் தெரிஞ்சுக்கணும்னா நீங்களும் என்கூட, நான் படித்த கோவை சிஐடி கல்லூரிக்கு வரணும். வாங்க…

கோவை சிஐடி கல்லூரியில் பழைய மாணவர்கள் கூடி, கல்லூரியின் நிறுவனர் விழாவை இசை விழாவை நடத்துவது வழக்கம். கொரோணா தொற்றுக்குப் பின்னர் விழாவை இந்த வருடம் சிறப்பாக நடத்த, இசைத் துறையில் வல்லுனராக இருக்கும் சாம் நிகோலஸ் என்பவரது தலைமையில் இசை சங்கமம் செய்ய முடிவு செய்யப்பட்டது

சிஐடியின் இளம் இசைப் புயல்கள் தெரிந்தோ தெரியாமலோ தங்களுக்குள் ஒருசில விதிகளை விதித்துக் கொண்டனர்.

விதி 1: இசைக்கருவிகள் வாசிப்பது, பாடுவது எல்லாமே மாணவர்களும் பழைய மானவர்களாகத்தான் இருத்தல் வேண்டும்.

வி2:  தனியாக யாரும் பாட அனுமதி இல்லை. டூயட் அல்லது கோஷ்டி கானங்கள் தான் அனுமதி.

3: சீனியர்கள் அனைவருக்கும் அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை பாட வாய்ப்பு கட்டாயம் தர வேண்டும்.

(உங்க காலேஜ்லெ படிக்கிறவங்களுக்கு மட்டும் ஏன் இப்படிப்பட்ட யோசனை எல்லாம் வருது? – இது அம்மணியின் கேள்வி) ரிஹர்சலில் பார்த்த போது எல்லாம் நல்லாத்தான் இருந்தது. புதிய பாடல்களை மாணவர்கள் பின்னிப் பெடல் எடுத்து கொண்டு இருந்தார்கள். பழைய பாடல்களை நாம் கொண்டு சென்ற போதுதான் சிக்கல் ஆரம்பித்த்து.

35 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்டான பாடலை பாட வேண்டும் என்று ஆசைப்பட, இன்றைய தலைமுறை அந்தப் பாடலை கேட்கவே இல்லை என்று கைவிரித்து தான் எங்களுக்கு சங்கடமாக போய்விட்டது. குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே, நிலா அது வானத்து மேலே, சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம், வாடிக்கை மறந்தது ஏனோ, நான் பார்த்ததிலே அவள் இருத்தியைத்தான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இதுபோன்ற காலத்தை வென்ற பாடல்களை இவர்களின் காதுகள் கேட்கவே இல்லையாம். ஆனாலும் சளைக்காமல் மூன்று நாட்கள் இரவு பகல் என்று பாராமல் தங்களுடைய அம்மாவிடமும், சிலர் பாட்டிகளிடம் அந்த பாடலை பற்றி கேட்டு தெரிந்துகொண்டு அவர்கள் இசையமைத்தும், டூயட் வடிவமும் தந்தார்கள்.

62 நபர்களின் கூட்டு முயற்சியின் பலனாக இசை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி. அரங்கம் முழுவதும் கைதட்டி, குத்தாட்டம் போட்டு, நடனமாடி மாணவர்களின் இசை நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தது. பழைய மாணவர்கள் பாடிய (பழைய) பாடல் அவர்களுக்கு ஓய்வு என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அரங்கத்தில் அமைதி காத்த்தே, பெரிய ஆறுதலாக இருந்தது. அப்போதே மனதில் ஓர் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன்.

சின்ன சின்ன கண்ணிலே பாடல் பாடிய மூன்றாம் ஆண்டு மாணவி

ஓரிரு அனிருத் பாடலாவது நான் கேட்டிருக்க வேண்டும் என்று. அதன் விளைவுதான் திருச்சிற்றம்பலம் படத்தின் பக்கம் பார்வையை திருப்பினேன். திருவாசகத்தை போலவே பாடல் முதலில் பிடிக்கவில்லை. பின்னர் கேட்கக் கேட்க புரிய ஆரம்பித்தது. அதில் வந்த ஒரு வரி எனக்கு என்னமோ இலக்கணச் செறிவு உள்ள வரியாகப் பட்டது. நீ ஒண்ணும் நானும் இல்லெ என்று வரும் இந்த வரிகள் மாணிக்கவாசகரின் வரிகளோடு ஏதோ தொடர்பு உள்ளதாகப் பட்டது.

திருவாசகத்தில் கோயில் திருப்பதிகம் புரட்டினால் அதில் ஒன்றும் நீ அல்லை; அன்றி, ஒன்று இல்லை என்று வருவதைத் திருவாசகத்தின் சாரம் என்றே சொல்கிறார்கள். திருபெருந்துறையில் உறைகின்ற சிவனே, இந்த பொருள்களும் உயிர்களும் நீ இல்லை; நீ இல்லாமல் வேறு எதுவும் இல்லை. இது அனிருத் பாடல் வரியின் மூலம் என் சிந்தனையில் உதித்தது.

இதே வரிகளில் கம்பனின் சிந்தனையும் வராமல் இருக்குமா என்ன? அதுக்கு நாம் சூர்ப்பனகையின் பின்னால் போய் நின்று, அவர் மனதைப் படிப்போம். சூர்ப்பனகை சீதையைப் பாக்கிறாள்.

தன் உயிர் ஓய்ந்து அழிந்தாலும் தான் இராமன் மேல் கொண்ட ஆசையிலிருந்து நீங்காத சூர்ப்பணகை, நீலமலரோ கயல்மீனோ என்று கூறத்தக்க இருகண்களையுடைய அவன் மனைவியோ, இலக்குமியை விட அழகுள்ளவளாக இருக்கிறாள்; (அதனால்) பாவியாகிய என்னையும் அவன் கண்ணெடுத்துப் பார்ப்பானோ என்று கூறி வருந்துவாள். அல்லது அனிருத் பாஷையில், நான் ஒண்ணும் நீயும் இல்லை என்று நினைத்திருக்கலாம். இதோ கம்பனின் வரிகள்:

‘காவியோ கயலோ எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள்;
பாவியேனையும் பார்க்கும் கொலோ? ‘எனும்
ஆவி ஓயினும் ஆசையின் ஓய்வு இலாள்.

அனிருத் பாடல் கேட்க முடிவு செய்த பழைய பாடல் இரசிகர்கள்

நீதி: நீங்களும் இனி அனிருத் பாடல்கள் கேளுங்க.

2 thoughts on “நீ ஒண்ணும் நானும் இல்லெ

  1. நன்று

    மாறும் நிறங்களிடை
    மாறா உளம் கொண்டாய்
    மலர்களின்
    நிறங்கள்
    வித விதமானவை
    உன் சுயம்
    வெண்மைதான்
    குறீயீட்டுக்
    கொண்டாட்டங்கள்
    நிறப் பிரிகைகளால்
    ஆனவை
    நீ
    தனி நிறமானாலும்
    பனித்துளியை
    போல
    நிறங்களை
    பிரதிபலிக்கின்றாய்
    தமிழ் நிறமே
    நினதுளம்
    என்பேன்
    மைவிழியாளே
    மரகதமே

    ஆரா

  2. Tamil Nenjan says:

    நன்றி ஐயா

Leave a comment