பேரரசன் சிற்றரசன் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 9

கம்பன் காட்டிய சந்திப்புகளில் இதுவரை தேவர்கள் பிரம்மனை சந்தித்தது, பிரம்மா சிவனை சந்தித்தது, சிவன் பெருமாளை சந்தித்தது, வசிட்ட முனிவர் அரசனை சந்தித்தது, அரசனை மகளிர் சந்தித்தது, முனிவர்களை மகளிர் சந்தித்தது, அரசன் முனிவரை சந்தித்தது இப்படி பல்வேறு சந்திப்புகளை நாம் பார்த்தோம். இன்று நாம் ஒரு பேரரசன், ஒரு சிற்றரசனை சந்திக்கச் செல்லுகின்ற ஒரு சந்திப்பை கம்பன் எப்படி காட்டுகிறார் என்பதைப் பார்க்க இருக்கிறோம்.

ஒரு சிற்றரசனைச் சந்திக்க, பேரரசன் தானே செல்லவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஒரு வளநபரை, வளம் உள்ள ஒரு நபரை, அவரால் காரியம் ஆகக்கூடிய வகையில் இருக்கின்ற ஒரு நபரை எவ்வளவுதான் சிறியவராக இருந்தாலும், அவர் சிற்றரசனாகவே இருந்தாலும் கூட அவரை நேரில் சென்று சந்திப்பது தான் மரபு என்பதை கம்பர் சொல்கிறார். அவரை வரவேற்கும் விதமாக சிற்றரசர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் நாம் கம்பரின் வரிகளிலேயே பார்க்கலாம் இன்றைய சந்திப்பில்.

யார் அந்தப் பேரரசன்? சிற்றரசன்? என்பது இப்போதைக்கு முக்கியமில்லை. கம்பனின் வரிகள் படிக்கும் போதே நமக்கு அது மிகத் தெளிவாகத் தெரிந்துவிடும்.

கொடி போல் எங்கும் கொழுந்து விட்டு புகழ் பரப்பி வாழும் அரசன் அந்தப் பேரரசன். பேரரசனின் வருகை குறித்து சிற்றரசனுக்கும் ஒற்றர்கள் மூலம் தகவல் வந்துவிடுகிறது. சிற்றரசனுடைய சிறப்பும் சொல்கிறார் கம்பர். போரில் ஈடுபட்டு வெற்றியினைப் பல பெற்றவராம். அதனால் தேய்ந்து மழுங்கித் திரண்ட வரியமைந்த வில்லைக் கையில் வைத்திருப்பவர் என்கிறார் கம்பர். (ஔவை தூது போன கதை நினைவுக்கு வந்தால் நலம்).

கடல் போன்ற வீரர்கள் கொண்ட படை புடை சூழ, செழுமை மிக்க காதணிகளும் பிற அணிகலன்களும் ஒளிரவும் சென்றாராம் வரவேற்க. கூடவே மாகதர்கள் திரண்டு வாழ்த்தும் வாழ்த்துகளோடு.. யார் அந்த மாகதர்கள்? அட… நம்ம வடிவேலுவுடன் கூடவே கோரஸ் பாட, இருக்கும் நால்வர் போன்றவர்கள் தான். வரவேற்க தனது நகரிலிருந்து ஒரு யோசனை துரம் சென்றானாம் அந்தச் சிற்றரசன். அதே மன்ன்ன், முனிவரை வரவேற்க இரு யோசனை தூரம் சென்றவன், பேரரசனை வரவேற்க, ஒரு யோசனை தூரம் போதும் என நினைத்தமை யோசிக்க வைக்கிறது.

பேரரசன் பொன்தேரில் வந்திருக்கிறார். அது நகர்ந்தால் அதன் முழக்கம் கேட்டு, மேகமும் நாணும்படியாக இருந்ததாம். ம் அப்புறம். பேரரசன் கீழே இறங்கும் போது, சிற்றரசன் சென்று அவர்தம் பாதத்தில் வீழ்ந்து வணங்க, மேன்மேலும் முதிர்கின்ற பேரன்பு பெருகி எடுத்து மன்னனைத் (தன் கைகளால்) வாரி எடுத்துத் தழுவிக் கொண்டாரா. (இன்றைய ஆட்சியாளர்கள் பாதத்தில் விழுந்து ஆசி பெறும் காட்சிகளுக்கெல்லாம் தாய் தந்தைக் காட்சியாய் இருக்கிறதே!) ஆனால் இங்கே அன்பு தான் பீரிட்டு நிற்கிறது.

சரி யார் அந்த அரசர்கள்? சிற்றரசன் உரோமபதன். பேரரசன் அயோத்தியின் அரசன் தசரதன். அது சரி அயோத்தி அரசனுக்கு தசரதன் என்று எப்படிப் பெயர் வந்தது தெரியுமா?

சிலம்பரசன் என்றால் உடனே எல்லாருக்கும் தெரியும். ஆனால் சம்பராசுரன் என்றால் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சம்பராசுரன் போரை வைத்துத்தான் ராமாயண கதையின் அச்சு சுழல்கிறது. அந்த சம்பரன் என்ற அசுரன், இந்திரனை வென்று ஆட்சியையும் கைப்பற்றுகிறான். தன்னையும் தன்னுடைய சிம்மாசனத்தை மீண்டும் பெற்றுத் தரும்படி அயோத்தியின் அரசன் உதவியை நாடுகிறார் இந்திரன். சம்பராசுரனிடம் மிகப் பெரிய படை இருந்தது. அதிலும் சிறப்பான பத்து தேர்கள் கொண்ட படை வைத்திருதான். (தசரத = பத்து இரதங்கள்).

அந்தத் தேர்ப் படையினை வெல்வதற்குத்தான் அயோத்தி மன்னன் போரிடத் தொடங்கினார் இந்திரனுக்காய். போரில் தேரோட்டியாக கைகேய நாட்டு இளவரசி கைகேயி உடன் வருகிறார். இனி அடுத்து நிகழ்ந்த கதை உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். தேர் ஓடும் போது அச்சு முறிந்து விடுகிறது. தன்னுடைய விரலை சக்கர அச்சாக பயன்படுத்தி, தேரைச் செலுத்தி அந்த அயோத்தி மன்னனுக்கு உதவி செய்து வெற்றி பெற வைத்தார். தச ரதம் வென்றதால் தசரதன் என்ற பெயரும் பெற்றார். (இரும்புக்கை மாயாவியை வாயைப் பிளந்து கொண்டு படித்த நமக்கு, கைகேயின் இரும்புவிரல் கதையும் இருக்கு படிக்க. அதைப் பின்னர் தனியாகப் பார்ப்போம்)

பொதுவாகவே வாய்க்கு ருசியா நல்ல சமையல் செய்து தந்தாலே, தங்க வளையல் பரிசாகத் தருவோம். (வீட்டுக்காரிக்கோ அல்லது சமையல்காரிக்கோ, அது உங்க சாமர்த்தியம்) போரில் வெற்றியுடன், தசரதன் என்ற பெயரும் வாங்கித்தந்த கைகேயிக்கு தந்த அந்த அன்புப் பரிசுதான், அந்த இரண்டு வரங்கள். வானுலகத்தை நிலைபெறச் செய்த, என்று கம்பன் சொன்னதன் பின்னனி தான் இவ்வளவு கதையும்.

சரி…இப்போது நாம் மீண்டும் தசரதன் உரோமபதன் சந்திப்பில் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைப் பார்ப்போம். சொல்லாத நாளில்லை சுடர் மிகு (வடி) வேலா என்பதைப் போல் பாடாமல், உள்ளம் மகிழ்ந்து வரவேற்கிறார். விருந்தினராக வரும் விவிஐபியை முன்னரே சென்று மடக்கி வரவேற்று நம் காரில், மன்னிக்க நம் மாணிக்கத்தேரில் ஏற்றிக் கொண்டு வருவது போல் தான் தன் அரன்மனைக்கு அழைத்து வந்தாராம். இதோ கம்பனின் வரிகள்:

‘யான் செய்த மா தவமோ! இவ் உலகம்
செய் தவமோ! யாதோ! இங்ஙன்.
வான் செய்த சுடர் வேலோய்! அடைந்தது?’ என.
மனம் மகிழா மணித் தேர் ஏற்றி.
தேன் செய்த தார் மௌலித் தேர் வேந்தைச்
செழு நகரில் கொணர்ந்தான் – தெவ்வர்
ஊன் செய்த சுடர் வடி வேல் உரோமபதன்
என உரைக்கும் உரவுத் தோளான்.

வானுலகத்தை நிலைபெறச் செய்த ஒளி மிகுந்த வேலை உடைய அரசே! இங்குத் தாங்கள் எழுந்தருளக் காரணம் நான் செய்த பெருந்தவமோ! இந்த நாடு செய்த நல்ல தவமோ! மற்றும் வேறு ஏதேனும் நற்செயல்களோ! (எனக் கூறி), மனம் மகிழ்ந்து தயரதனைத் தேரில் ஏற்றி பகைவரின் உயிரற்ற ஊனுடலாக்கிய ஒளிமிக்க கூரிய வேலை உடைய உரோமபதன் எனக் கூறப்படும் வலிய தோள்களை உடைய அவ்வரசன், தேன்பிலிற்றும் பூமாலையணிந்த மணிமுடி சூடியிருப்பவனாகிய தேர்ப்படையை உடைய தயரத வேந்தனை செழிப்புடைய தனது நகருக்கு அழைத்து வந்தான்.

சிந்திப்புகளுடன் அடுத்தடுத்த சந்திப்புகள் தொடரும்…

அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
17-08-2022

Leave a comment