மதுவும் மகளிரும்…


எத்தனைக் கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை என்
சிந்தையிலே தான் பேதமடா –

இப்படி ஒரு பாட்டு கமலஹாசன் இளமைத் துள்ளலோடு வலம் வந்த மன்மதலீலை படத்தில் வந்தது. இது ஏதோ மதுவைப் பற்றி சொல்வதாய்த் தான் மேலோட்டமாய்ப் பார்த்தால் தெரியும். ஆனால் மன்மதலீலை படம் பார்த்தவர்களுக்கு அந்த வில்லங்கமான ”அந்த” அரத்தமும் தெரிய வரும். நாம் அதில் அதீத நாட்டத்தைச் செலுத்தாமல், சற்றே பின் வாங்கி, சில பிற விவரங்களை உள்வாங்கச் செல்வோம்.

மது பற்றி தொடங்கியதால் அது பற்றி மேலும் யோசிப்போம். இன்றைய சூழலில், ”சம்பவம்” என்றால் ”கொலை” என்று எப்படி ”அருஞ்சொல் பொருள் விளக்கம்” ஆக மாறிப் போனதோ, அப்படித்தான் மதுவின் அர்த்தமும் மாறிப் போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன். மது என்ற தேன், எப்போது மயக்கம் தரும் மதுவாய் மயங்கியது என்பது பெரிய்ய கேள்விக்குறி தான்.

மதுரம், மதுகுமார், மதுமிதா, மதுகலா இப்படி எல்லாம் பெயர் வைத்துள்ளனர். அதில் இருக்கும் மதுவிற்கும், டாஸ்மாக்கில் விற்கும் மதுவிற்கும் எந்தத் தொடர்வும் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என்றே கருதுகிறேன்.

தொலைக்காட்சிகளில் முன்பெல்லாம் நேரலை, கோப்புக் காட்சிகள், சித்தரிக்கப் பட்டவை இப்படியான அறிவிப்புகள் தான் அறியத் தருவர். பின்னர் விளம்பரங்களின் “நிபந்தனைக்கு உட்பட்டவை” என்று வர ஆரம்பித்தன. பின்னர் “இவை திறனாளர்களை வைத்து உருவாக்கியவை. நீங்கள் செய்ய முயல வேண்டாம்” என்ற எச்சரிக்கை எக்கச்சக்கமாய் வரத் தொடங்கின. உங்கள் முதலீடுகள் சரியான வரவைத் தராவிட்டால் எங்களைத் திட்ட வேண்டாம் என்பதை மிகவும் ”நல்ல” முறையில் சொல்லவும் வந்தன பின்னர்.

புகை பிடித்தல் உடல் நலத்திற்குக் கேடு என்று போடத் தொடங்கியது தான் சிக்கலை துவக்கி விட்ட்து. மது வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது இல்லை என்று போட ஆரம்பித்தனர். (ஆமா மது நட்டுக்கு நல்லது தானே என்று அரசு தரப்பில் வாதம் வைக்க மாட்டார்களா?) இப்போது வரும் படங்களில் விளம்பர இடைவெளியில் மட்டும் தான் இந்த புகையும் மதுவும் வராமல் இருக்கிறது. என்ன செய்ய? இப்போதைக்கு புகையும் மதுவும் தான் தெரிந்துள்ளது. இப்படியே போனால், பலான இடம் போவதை காட்டும் போது “எய்ட்ஸ் வரும் வாய்ப்பு உள்ளது” என்றும் போடலாமே. அப்புறம், கோபம் அதிகம் வருவதை காட்டும் போது, ”இரத்த அழுத்தம் வரலாம்” என்றும் போட்டு வைக்கலாம். இதேபோல் இரத்தக் களரியாய் வரும் காட்சிகளில், “கலவரங்கள் அமைதியினை நீக்கும்” என்றும் நீதி போதனைகள் காட்சிகளில் தொடரலாம்.

இதே டீவியில் நல்ல செய்திகளும் வரத் தவறுவதில்லை. ஒன்றே சொல் நன்றே சொல் அருமையான தகவல்களை அள்ளித் தருகின்றது. இதில் ஒரு நாள் கள் குடித்தல் என்பது தமிழரின் பாராம்பரிய வாழ்வு முறையில் ஒன்றுதான் என்பதாய் நன்றாய் சொன்னார். (ஒன்றே சொல். நன்றில்லாததும் சொல் என்றா பெயர் மாற்றச் சொல்ல முடியும்?). ஏகப்பட்ட சங்க காலப் பாடல் எல்லாம் சொன்னர் அவர். ஆனால் மக்களை குடித்துக் குட்டிச் சுவராய் ஆவதற்கு வழி சொல்வதாய் எனக்குப் படவில்லை. (அந்த எண்ணத்தில் கண்டிப்பாய் அவர் சொல்லி இருக்க மாட்டார் என்ற நம்ம்பிக்கை உள்ளது)

தமிழருக்கும் மதுவுக்கும் ஆதி காலத்தில் இருக்கும் பழக்கம் பற்றி யாராவது சொன்னாலோ, அல்லது குடிப் பழக்கம் தவறு என்று சொன்னாலும் கூட உடனே எல்லாருக்கும் சோம சுரா போன்ற திராவகங்களை தேவர்கள் கூட அருந்தினர் (தேவர்களை நம்பாதவர்கள் கூட) என்றும் சொல்ல ஆரம்பிப்பர். போதாக் குறைக்கு ஆதி மகளிரையும் வம்புக்கு இழுக்கின்றனர். பொதுவாக அதியமான், ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த கதை தான் சொல்லுவர். (நெல்லிக்காய் தானே இருக்கும். நெல்லிக்கனி இருக்குமா என்று “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்” நிகழ்சியில் அந்த அப்பா வயிற்றில் குத்து வாங்கியது பெட்டிச் செய்தி).

சமீப காலமாய் அதியமான் ஔவை பற்றி இன்னொரு செய்தியும் பிரபலமாகி வருகிறது. மது தொடர்பானது தான் அதுவும். அரசனுக்கு ஒரு மடக்கு மது கிடைத்தால், அதை ஔவைக்கே வழங்கிடுவாராம். ஒரு கோப்பை கிடைத்தால் அரசன் பாதி ஔவை பாதி என்று பகிர்ந்து கொள்வாரம். சொல்ல வரும் நீதி: மகளிரும் மது அருந்தினர் என்பதாய். என்னால் இதை ஏற்க முடியவில்லை. பிச்சை புகினும் கற்கை நன்று எனச் சொன்ன ஔவையாக அந்த ஔவை இருக்காது.

எனக்கு என்னமோ அரசன் கொடுப்பதில் வல்லவன், என்று சொல்வதாய் மட்டுமே அதனை எடுத்துக் கொள்ளலாம் என்று தான் தெரிகின்றது. கொடுப்பது என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நிற்கும். என்ன தருகிறோம்? எப்படி தருகிறோம் என்பதெல்லாம் தேவையில்லாத யோசனை. குளிரால் நடுங்கும் மயிலுக்கு போர்வை கொடுத்தவரை வள்ளல் பட்டியலில் வைத்துள்ளோம். மயிலுக்கு போர்வை தேவையா என்ன? அதே போல் முல்லைக்கு தேர் குடுத்தவரும் கொஞ்சம் அதிகப் பிரசங்கத்தனமாய் தான் படுகிறது. இதிலும் தரும் பொருளை விட தரும் எண்ணம் தான் முக்கியம். அதே போல், மதுவே கிடைத்தாலும் ஔவைக்கு தந்து மகிழ்வார் என்று நாம் ஏன் பொருள் கொள்ளக் கூடாது?

சினிமாவில் மட்டுமே புகை பிடிக்கும், மது அருந்தும் மகளிரை பார்த்த எனக்கு நேரில் அப்படி பார்த்த போது பகீர் என்று தான் இருந்தது. கொல்கொத்தாவில் தான் அந்த பாக்கியம் கிடைத்தது. ஒரு நண்பரின் அழைப்பினை ஏற்று நட்சத்திர உணவகம் சென்றோம் குடும்பத்தோடு. மகளிருக்கு என்ன மது தேவை என்று கேட்ட போது தான், இதெல்லாம் இங்கே சகஜமப்பா என்ற சேதி தெரிந்தது..

வள்ளுவரும் கள்ளுக் குடியை விட்டொழியுங்கள் என்கிறார். நம்மாளுங்க புரிந்து கொள்ளும் நீதி, வள்ளுவர் காலத்திலும் சரக்கு அடிக்கும் பழக்கம் இருந்திருக்கு என்பதைத்தான். தமிழருவி மணியன் இந்தச் சூழலினை அழகாய் கையாள்கிறார். கள் குடிப்பது எல்லாம் நடப்பது தான் என்று இருந்த காலத்தில், கள் குடிக்காதே என்று சொன்ன வள்ளுவரை கலக்க்காரன் என்று புகழ்கிறார்.

கமபன் மட்டும் கலகக்காரன் இல்லையா? பல்லாயிரக் கணக்கான தாரங்களை மணந்து வாழும் அரச குடும்பத்தில் பிறந்து, ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைசி வரை நிலைநாட்ட கம்பன் காப்பியம் முழுதுமே கலக்கலாய் செய்வதைப் பார்க்கலாம். மூலக் கதையில் கால் பட்டு அகலிகை சாபம் நீங்கியதாய் இருந்தாலும், இந்த கலகக்காரக் கம்பன், ராமனின் கால் தூசு பட்டே அகலிகை மலர்ந்ததாய்க் கூறியதைப் பார்க்கலாம்..

அதுசரி.. மகளிரும் மதுவும் பற்றி அதே கம்பர் ஏதும் சொல்லவில்லையா? என்ற கேள்வி உங்களில் அநேகம் நபர்களுக்கு வந்திருக்குமே??

உங்களுக்கு என்ன? சாதாரணமாய்ச் சொல்லிட்டீங்க. கம்பரிடம் போராடி ஒரு பாட்டு தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்.

வனவாசம் முடிந்த பிறகு அயோத்தி திரும்புகிறார் இராமன். இராமன் வருகையினை எப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எதிர் கொண்டனர் என்பதை விளக்கும் பாடல் தான், நம் நண்பர் கம்பர் தந்த பாடல்.

இராமனைப் பார்க்க வந்தவர்களில் பலர் பலரகம். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதை கம்பர் ரகவாரியாய்ப் பிரித்துப் பார்க்கின்றார். அவர்களுக்கு ராமன் எப்படித் தெரிந்தான் என்பதைச் சொல்லத்தான். இதுவரை ராமனைப் பார்க்காது இருந்து முதல் முதலாய் பார்ப்பவர்க்கு (14 ஆண்டுக்கு உள்ளான விடலைப் பருவத்தின்ருக்கு) தாயைப் பார்த்த உணர்வை ராமன் முகம் தந்ததாம். தன்னை அன்புப் பெருக்கோடு பார்த்த அனைவருக்கும் அமிழ்தம் கிடைத்தது போல் இருந்ததாம். முனிவர்களுக்கு இறைவனே காட்சி அளித்தது போல் இருந்த்தாம்.

நீங்கள் ஆவலோடு காத்திருக்கும் செய்தி இப்போது தான் வருகிறது. இராமனைத் தரிசிக்க அழகிய விழிகளை உடைய பெண்டிரும் தான் வந்திருந்தனர். அவர்கள் கண்களுக்கு ராமன் எப்படி இருந்தார் தெரியுமா?? தெளிவே இல்லாத மகிழ்ச்சியினைத் தரும் இனிய மதுவின் தெளிவு போல் இருந்ததாம்.

வழக்கம் போல் மகளிர் கம்ப காலத்திலும் மது அருந்தினர். எனவே தான் இப்படி கம்பர் சொல்லி இருக்கிறார் என்று நீங்கள் தவறாக புரிந்து கொண்டுவிடக் கூடாது. மதுவை இங்கு சுட்டிக் காட்டுவதின் உள் நோக்கம் என்ன? மது என்ன செய்யும்? உற்சாகமாய் ஆடவைக்கும். ஆனால் மது ஆடாது. இராமனும் அப்படித்தான். ஆட்டுவிப்பான். ஆனால் ஆட மாட்டான். (இப்படி கம்பர் நினைத்திருப்பாரோ).

வேதியியல் படிக்கும் போது கிரியாஊக்கி என்று ஒன்று வரும். ஒரு இராசாயண மாற்றத்தைச் செய்யும். ஆனால் அது ஒன்றும் ஆகாது. விசில்ப்ளோவர் என்பதினை ஊதுகுழல் ஊதுவோர் என்று மொழி பெயர்ப்பு செய்தது சரியா என்று என் கல்லூரி நண்பர் அசோகன் கேட்டிருந்தார். என் மனதிற்கு கிரியை ஊக்கி என்று சொல்வது தான் சரியாய்ப் படுகிறது. அவரும் செயல் படுவார் சமூகத்தையும் செயல் படச் செய்வார்.

இதோ அந்தப் பாட்டும் உங்கள் பார்வைக்கு:

எளிவரும் உயிர்கட்க்கெல்லாம் ஈன்ற தாய் எதிர்ந்தது ஒத்தான்
அளி வரும் மனத்தோர்க்கு எல்லாம் அரும் பத அமுதம் ஆனான்.
ஒளி வரப் பிறந்த்த ஒத்தான் உலகினுக்கு ஒண்கணார்க்குத்
தெளிவு அருங் களிப்பு நல்கும் தேம் பிழித் தேறல் ஒத்தான். .

சரி.. ராமனை இனி கிரியாஊக்கி என்று அழைக்கலாமா? அல்லது கிரியைஊக்கி என்று விளிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.

24 thoughts on “மதுவும் மகளிரும்…

  1. jayarajanpr says:

    Nalla thiranaivu… valthugal…

  2. பல்வேறு சிந்தனைகள். ராமாயணத்தில் தசரதனுக்கு மனைவியர் அதிகம் என்ற செய்தி வால்மீகியில் இல்லை. அறுபதினாயிரம் பெண்கள் அந்தப்புரத்தில் இருந்தனர் என்பது பொதுவான செய்தி தானே ஒழிய மனைவியரைக் குறிக்கும் சொல் அல்ல. மூன்று மனைவியரின் சேடிகள், தசரதனின் மாளிகை அந்தப்புரத்தில் ஏற்கெனவே இருந்த பெண்கள், புதிய சேடிகள் என்று தான் அவை எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். :)))))

    • Tamil Nenjan says:

      பரவலாய் சொல்லப்படும் செய்தியை வைத்து தான் எழுதியது. அப்படிப் பார்த்தாலும் மூன்று மனைவிகளும், அதிகாரமும் வசதியும் வாலிபமும் அழகும் இருந்தும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நிலை நாட்ட அவதரித்த மகா மனிதன் ராமன் என்றும் சொல்லலாமே???

  3. அப்புறம் அகலிகை குறித்தது. அதுவும் வால்மீகியில் இப்படி வராது. இங்கே எழுதினால் பெரிசா ஆயிடும். :)))) சுட்டி தேடித் தரேன்.

  4. http://sivamgss.blogspot.in/2008/04/8.html

    http://sivamgss.blogspot.in/2008/04/blog-post_09.html

    இவை வால்மீகியைப் படித்த என்னுடைய கருத்து மட்டுமே. நன்றி. வணக்கம்.

    • Tamil Nenjan says:

      கம்பரின் மூலநூல் வால்மீகி ராமாயணம் என்பதில் எந்த ஐயம்ம் இல்லை.. ஆனால் காப்பிய பாத்திரங்கள் அனைவருக்கும் வேட்டி கட்டிய தமிழராய் காண வைத்தது தான் கம்பன் கனவு எனச் சொல்லக் கேள்வி..

      அடியேன் சமீபத்தில் தான் கம்பரை கையில் எடுத்தேன். வால்மீகியையும் படிக்க வேண்டும்.

  5. Thiagu says:

    Nice Analysis

      • c.s.krishnamoorthy says:

        தெளிவே இல்லாத மகிழ்ச்சியினைத் தரும் இனிய மதுவின் தெளிவு போல் இருந்ததாம்.
        சரி.. ராமனை இனி கிரியாஊக்கி என்று அழைக்கலாமா? அல்லது கிரியைஊக்கி என்று விளிக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.
        The lines kindled my thoughts.Very fine linking of current events in your narration . They are educative as well as warning messages to the declining trend of our ancient glorious Indian Culture and heritage.
        Let your contribution to our second mother continue!

  6. சி.ந.தியாகராஜன் says:

    ராமன் கிரியை ஊக்கியே…..

  7. பழநதமிழரில் மகளிரும் கள் அருந்தினர் என்பதற்குச் சான்றுகள் உண்டு. அதுவல்ல கேள்வி. இன்றைய சூழ்நிலையில் மகளிராவது குடிக்காமல் காப்பது எப்படி என்பதே. தங்கள் அழகிய தமிழ் நடை மனதைக் கவர்ந்தது.

  8. தீ காய் செகண்ட் மதர் ? சொக்கட் காம் ! செகண்ட் வொய்ஃப் மெனி மெனானி !!!

  9. praba says:

    அவ்வையார் என்ற சொல்லுக்கு தாய் போன்ற மூத்த பெண்மணி என்று பொருள்.
    இந்த பெயரில் பெண்பாற்புலவர்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்து தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர்..
    சங்க காலத்து அவ்வை வேறு..அதன் பின் தோன்றிய திருக்குறளை சிறப்பித்து பாடிய அவ்வை வேறு..கம்பர் காலத்து அவ்வை வேறு..
    ஏன் அதற்கு பின்பும் ஞானக்குறள் பாடிய அவ்வை வேறு..
    பாடல்களில் இருந்தே காலமாறுபாடு தெள்ளத் தெளிவாக தெரியும்..(மு.வ. வின் தமிழ் இலக்கிய வரலாறு பக்கங்கள் 201,202 )
    அதியமான் காலத்து அவ்வை சங்க காலத்துக்காரர்.
    இனக்குழுக்கள் சற்றே வளர்ந்து சிற்றரசுகளாக மாறிய காலம்..
    அந்தக் காலத்தில் பாணர்,பொருநர்,விறலியர் கோலோச்சியிருந்த காலம்…
    அதே பாணர் முதலியோர் வீழ்ச்சியுற்று தூது சென்று பின்னர் கடைசியில் விறலியர் பரத்தையராய் சரிந்ததை தமிழிலக்கியத்தில் காணலாம்…
    கல்வியில் தேர்ந்த நிழக் கிழார்களும்,பிற மேட்டுக்குடியினரும் அரசனுக்கு பக்கத்தில் புலவர்களாய் அவைகளில் வீற்றிருக்க தொடங்கிய பின்னர் இயல்பாக பாடிய பாணர் போன்றோர் வீழ்ச்சியுற்றனர்..
    அந்த இனக்குழு சமூகவாழ்வில் கூடி களித்து கொண்டாடிய சமயத்தில் கள்ளை
    ஆண்மக்கள் மட்டுமே உண்டிருக்க முடியாது..
    அதை தெரிவிக்கின்ற ஆதிகாலத்து வாய்மொழி இலக்கியத்தின் ஒழுக்க அளவுகளை இன்றைய ஒழுக்க அளவுகளைக் கொண்டு எடை போடலாகாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s