மனிதர்களை எவ்வாறு நிர்வாகம் செய்வது என்பது பற்றிய நிர்வகக் கலையினை மேனேஜ்மெண்ட் (“MAN”agement) என்கிறார்கள். லோ லோ என்று லோல்படும் நாய் களை வைத்து நிர்வாகம் பற்றிய செய்திகளை அலசும் போது DOGagement என்று சொல்லலாமா? என்ன திடீரென்று நாய் மீது இவ்வளவு அக்கரை என்று கேட்கிறீர்களா? சமீபத்திய செய்தித் தொலைக் காட்சிகள் அனைத்திலும் ஒரே நாய் மயம் தான். போதாக் குறைக்கு இந்த சமூக வலைத்தளங்களும் இதைப் பற்றியே அதிகம் எழுத எனக்கும் இது பற்றி யோசிக்க ஆசை வந்து விட்டது.
ஒருவனிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அதை அவனும் செய்யமாட்டான். அடுத்தவர்களிடம் கொடுத்து செய்யவும் விடமாட்டான். இப்பேர்ப்பட்ட நபர்களிடம் வேலையினைக் கொடுப்பது என்பது கண் திறந்தபடியே பாழும் கிணற்றில் விழுவதற்குச் சமம். அரசு நிறுவனங்களில் ஒரு புதுமொழி உண்டு. ஒரு அலுவலகத்தில் நன்றாக வேலை செய்பவனிடம் வேலையைக் கொடு (வேலையை வாங்கு); வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு. நாயை இங்கும் இழுக்க முடியும். நாய் பெற்ற தெங்கம்பழம் (தேங்காய்) என்பார்கள். தானும், தள்ளியும் என்று வில்லங்கமாய்ச் சொன்னால் எல்லாருக்கும் புரியும்.
எப்போதும் பரபரப்பாய் இயங்குவர் சிலர். எதுக்கெடுத்தாலும் முண்டியடித்துக் கொண்டு இறங்கிவிட அல்லது ஏறிவிடத் துடிக்கும் மனோபாவம். (ஒரு வேளை குழந்தையாய் இருக்கும் போது ரேசன் கடை, குடத்தில் தண்ணீர் பிடித்தல் இது போன்றவற்றில் முட்டி மோதிய அனுபவமாய் இருக்குமோ? விமானத்திலும் கூட இதனைப் பார்க்கலாம். அந்தமானிலிருந்து சென்னை வந்து இறங்கியது என்ற அறிவிப்பு வந்தவுடன் இறங்கத் தயாராய் நின்று விடுவர். எவ்வளவு சீக்கிரம் போனாலும் கீழே போய் பெட்டி படுக்கைகள் வாங்க காத்திருக்கணுமே.!!!. இந்த மாதிரியான பரபரப்பான நபர்களுக்கு ஏதோ சுரப்பிகள் அதிகம் சுரக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதனால் பெரும் இடைஞ்சல் யாருக்கு என்றால் உண்மையிலேயே அவசரமாய் (பாத்ரூம் போக நினைப்பவர், அடுத்த இரயில், பஸ், விமானம் பிடிக்க வேண்டியவர்) போக வேண்டியவருக்கு சங்கடம் தருகின்றனர். ”நாய்க்கு நிக்க நேரமில்லை. செய்ய ஒரு வேலையும் இல்லை” என்பார்கள். இந்த ரக ஆட்களா நீங்கள்? கொஞ்சம் நேரம் ஒதுக்கி டாக்டரைப் பாருங்க…
எல்லா நிறுவனத்துக்கும் பணம் சம்பாதிப்பது மட்டும் தான் முதல் தத்துவம். என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். எப்படி வேண்டுமென்றாலும் கூட செய்யலாம். ஆனா காசு சம்பாதிப்பது ரொம்ப முக்கியம். சமூக அக்கறை.. (அதாங்க Social Responsibility) அதெல்லாம், அவ்வப்போது ஞாபகம் வந்தா சின்னதா ஒரு நிகழ்சிக்கு ஸ்பான்ஸர் செய்தால் போச்சி.. (விளம்பரத்துக்கு விளம்பரம்.. பேருக்கு நல்ல பேரும் கிடைக்கும். ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்?) இதுக்கும் நாம நாயை இழுக்கலாம். நாய் வித்த காசு குரைக்காது. (குரைக்கிற நாய் கடிக்காது என்பதை கொங்கு மண்டலத்தில் உளைக்கிறது என்பார்களாமே? அது உண்மையா??
நிர்வாகத்தில் பிரச்சினைகள் வருவதை யாராலும் தவிர்க்க இயலாது. ஆனால் அதனை தீர்க்க வழிமுறைகள் தேட வேண்டும். உங்களால் தேடிப்பிடிக்கப் பட்ட பல வழிமுறைகளில் இந்த புது (அல்லது அரதப் பழசான) வழிமுறையையும் கட்டாயம் சேர்த்து யோசித்துப் பாருங்கள். அது “ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது” என்பது தான். செலவே இல்லாத இந்த வழியையும் யோசித்து வையுங்கள். அப்படி இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போயிடாது என்று ஒரு முடிவிற்க்கு உங்களால் வர முடிகிறதா? அப்பொ.. அந்த முடிவு சரி தான். இங்கும் திருவாளர் நாய் உதவிக்கு வருவார்: சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனுக்கு என்ன கேக்கவா போகுது? நாய் நம்மை கடித்தால் நாம அதனைத் திருப்பிக் கடிக்க வேண்டியதில்லை.
ஒரு நிறுவனத்தை நடத்துபவர் அதன் போட்டியாளர்கள் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதே போல், ஊழியர்களின் நடவடிக்கைகள் மேலும் சற்றே எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். எந்த அளவுக்கு போட்டி நிறுவனமும், போட்டியாளரும் போகிறார் என்பதிலும் உள்குத்து வாங்காமலும் மிக்க கவனமாய் இருத்தல் வேண்டும். இது பத்தி வள்ளுவர் உட்பகை என்று பத்து குறலும் எழுதி வைத்துள்ளார். நாய் இழுத்து வச்சி சொன்னாத்தான் நம்புவீங்களா? எலும்பைக் கடிக்கும் நாய் இரும்பைக் கடிக்குமா என்ன? (எந்த நிறுவனமும் தனது இரும்பான முதலீட்டைப் பாதுகாத்திட எலும்புகளை சரிவர வைத்திருக்கிறதா என்ற அக்கறையும் தேவை).
நிர்வாகத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற சில வழிமுறைகள் இருப்பது போல் என்னென்ன வெல்லாம் செய்தல் கூடாது என்பதையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். ”திருத்த முடியாத ஜென்மம்” என்று சிலரை நாம் மனதில் கற்பனை செய்து வைத்திருப்போம். ”அதற்கு மேல் அவரால் செய்ய முடியாது” என்பதும் நமது கற்பனையாய் இருக்கும். நாம் இப்படி யோசிக்காமல், ஏன் இவரால் இதை மீறி யோசிக்க முடியவில்லை என்பது போல் யோசிக்கலாம். அதைக் கடந்து, அவருடைய பிடித்தமான துறையினைப் பிடித்துக் கொடுத்து விட்டால், அவர் அதில் கில்லாடி ஆகி விடுவார். அதை விடுத்து, ”.நாய் வாலை நிமிர்த்த முடியாது; நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்….” என்கின்ற டயலாக் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அது கதைக்கு ஆவாது.
இனி கொஞ்சம் அந்தமான் பக்கம் போகலாம். ஹாவ்லாக் தீவிற்கு ஜெர்மனி நாட்டிலிருந்து நாயைப் பார்க்கவே வருடா வருடம் ஒரு மூதாட்டி வந்து கொண்டிருக்கிறார். நான் கேட்டேன்,”உங்க பேரன், பேத்திகள்…?”; அவர்கள் இவ்வளவு பிரியமுடன் பாட்டி அருகே வருவதில்லையாம்.
அமெரிக்கா சென்ற நண்பர் கார்த்திக் முதலில் சொன்ன முத்தான தகவல், ”இங்கே குழந்தைகளை நாய் மாதிரி தெருவில் விட்டு விடுகிறார்கள். நாய்களை, குழந்தைகள் மாதிரி வீட்டில் கவனிக்கிறார்கள்”
ஒரு வீட்டிற்கு சாவு வரும் முன்னர் நாய் குரைக்கும் என்பார்கள். ஏன் தெரியுமா? எமனின் காவல் படையினரே, சரமோய் என்ற நாய்கள் தானாம். பக்கத்து தெரு நாய் வந்தாலே தெருவையே ரெண்டு செய்யும் நாய்கள்… இந்த எம லோகத்து நாய்களை சும்மா விடுமா? அதான் போட்டு கத்து கத்து என்று கத்துகிறதோ? ஆமா நாய் கண்ணுக்கு மட்டும் அது தெரியுமா? மனிஷ மோப்ப சக்தியை விட 400 மடங்கு அதிகம் நாய்க்கு இருக்காம். நாய்க்கு பூகம்பம் வந்தாலும் தெரிஞ்சிடுமாம். அப்பொ அந்தமானில் நாய் வளர்ப்பதில் ஆதாயமும் இருக்கு.
3500 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ரிக் வேத்த்தில் நாய் இருக்கு. மநுதர்மத்தில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் நடுவே நாய் போனால் அன்னெக்கி லீவே விட்ருவாங்களாம். விவேக சிந்தாமனியிலும் திருவாளர் நாயாரின் தரிசனம் உண்டு. பைரவர் என்று கும்பிடவும் செய்கிறோம். தேவாரம் திருவாசகத்தில் திரும்பின பக்கமெல்லம் நாய் கிடைக்கும். நாலடியார் கூட நாயின் கால் விரல்கள் பத்திப் பாடி இருக்கிறார்கள். மகாபாரத்த்தில் தரும்மே நாய் வடிவில் காட்டப் பட்டிருக்கு. அப்படி இருந்தாலும், நாய் என்ற ஈரெழுத்து எங்கு தேடினாலும் கிடைக்காத இரு இலக்கியகர்த்தாக்கள்: திருவள்ளுவர் & ஔவையார். மேலும் விவரங்களுக்கு ”இலக்கியத்தில் நாய்” என்று கூகுள் செய்யவும்.
கம்பரின் படைப்பில் நாயும் வரும். குகன் தன்னை மிகவும் நன்றியுள்ளவன் என்று சொல்லும் போது ”நாய் அடியேன்” என்பார். இன்னொரு இடத்தில் நாய் மாதிரி என்னைச் சீதை பார்க்க நேரிடுமே என்று சொல்லும் இடமும் வருகிறது. இராவணன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் பாருங்கள். பொறுமையில் பூமா தேவியாம். மூங்கில் தோள் உடையவளாம். யாரு? சீதை தான். அந்த சீதையின் கண்ணுக்கு ”ராமனைத் தவிர, நாமும், காமனும் வேறு யார் வந்தாலும் சரி… எல்லாம் ஒரு நாய்க்குச் சமம்” இப்படி முடிக்கிறார். பாட்டையும் பாத்திடுவோம் அப்படியே…
போய் இனித் தெரிவது என்னே பொறையினால் உலகம் போலும்
வேய் எனத் தகைய தோளி இராகவன் மெனி நோக்கி
தீ எனக் கொடிய வீரச் சேவகச் செய்கை கண்டால்
நாய் எனத் தகுதும் அன்றே காமனும் நாமும் எல்லாம்
(யுத்த காண்டம் – கும்பகர்ணன் வதைப் படலம்)
இனிமேல் யாரையாவது நாய் என்று திட்ட வேண்டுமென்றால், கொஞ்சம் யோசியுங்கள்.. அப்புறம் திட்டுங்கள். அப்படியே வந்து விட்டால், “இச்சைச் செயலுக்கும் அனிச்சைச் செயலுக்கும் நாய் வைத்து சொல்லிக் கொடுத்ததால், இப்படி அனிச்சையாய் வந்து விட்டது” என்று சொல்லிச் சமாளியுங்கள்.
ஒருவனிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் அதை அவனும் செய்யமாட்டான். அடுத்தவர்களிடம் கொடுத்து செய்யவும் விடமாட்டான். இப்பேர்ப்பட்ட நபர்களிடம் வேலையினைக் கொடுப்பது என்பது கண் திறந்தபடியே பாழும் கிணற்றில் விழுவதற்குச் சமம். – SUPER
மிக்க நன்றி.. உங்கள் ஆதரவிற்கு.
வைக்கோல் போர் மீது அமர்ந்த நாய்
கொ3வத் ஹொல்லொ பி3ஸெ ஸுநொ –
நாய் வைக்கோலைத் தானும் தின்னாது’ பிறரையும் தின்ன விடாது.
நாயிடம் மெரிட் உண்டு; டிமெரிட்டும் உண்டு.
நாய் நமக்காக உயிரை விடும் என்று சொல்வர்.
ஆனால் அதே சமயத்தில் வெறி பிடித்த நாய் நம்மைக்
கடித்தால் பர லோகத்திற்கு செல்ல வேண்டியது தான்.
நாயை வளர்த்தால் பூனையை வளர்க்க முடியாது;
பூனையை வளர்த்தால் நாயை வளர்க்க முடியாது.
ஏதாவது ஒன்றைத்தான் வீட்டில் வளர்க்க முடியும்.
குழந்தை குட்டி இல்லாதவர்கள், நடைபயிற்சிக்கு துணையைத் தேடுபவர்கள், வீட்டைக் காவல் காக்க
நாய் வளர்க்கின்றனர்.
நமக்கு அதற்கெல்லாம் நேரம் கிடையாது !
GOD becomes DOG if written in reverse order.
Bhairavar is also a GOD !
உங்களின் ஆதரவிற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
nice
Thanks.