டாடீ எனக்கு ஒரு டவுட்டு


“டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று ஒரு காமெடி பிட்டு ஆதித்யா சேனலில் அடிக்கடி வந்து, சக்கை போடு போட்டு வருகிறது. தினமும் சொல்லி வரும், பேசி வரும், நடைமுறை வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாய் பழகிவிட்ட சில சொற்களை செமெயாகக் கிண்டலடிக்கிறது அந்த காமெடி. அனேகமாக அப்பன்களிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் வாண்டுகளாகட்டும், சாதாரணமாய் கேட்கும் ஆசாமிகளாகட்டும் இப்பொ எல்லாம், இந்த “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று தான் ஆரம்பிக்கிறார்கள். சில சமயங்களில் அதில் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நானும் முழித்த போது என் பையன் குத்த வருவது போல் வந்ததும் நடந்ததுண்டு. (நல்ல வேளை குத்து மட்டும் விழலை).

இது போகட்டும். சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். (அப்பொ என்ன விரோதி வீட்டுக்கா போவாக..!!) அங்கே இப்பொத்தான் Pre KG படிக்கப் போயிருக்கும் வாண்டு என்னைப் பாத்து, ”அங்கிள் எனக்கு ஒரு டவுட்டு” என்று அப்படியே விரல் தூக்கினான். (ஆண்டவனே… ஏன்.. எல்லா சோதனையும் எனக்கே வந்து சேருது??). சரி… நம்ம சப்ஜெட்டுக்கு வருவோம். கணக்கிலெ கில்லாடிகளா இருக்கிறவங்களை கணக்கில் புலி என்கிறார்களே? ஏன் அப்படி? (இந்தக் கேள்விக்கும் “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” அப்பா குத்து வாங்கியிருப்பார் என்பது என் அபிப்பிராயம்.

மாம்பழங்களில் கிளிமூக்கு மாம்பழம் செமெ டேஸ்ட் ஆ இருக்கும். கிளியோட மூக்கு மாதிரியே புலியோட மூக்கை கொஞ்சம் உத்துப் பாத்தா (உண்மையான புலி பக்கத்திலெ வரணும் அப்பொத் தெரியும்… சுனாமி வந்தப்பொ ஓடுன மாதிரி, துண்டெக் காணோம் துணியெக் காணோம்னு ஓடியே போயிருப்போம்) லேசா பொறி தட்டுச்சி.. மூக்கு சற்றே பெரியதாகவும் அகலமாகவும் இருந்தால் அவர்கள் கணக்கில் சூரப்புலிகளாக இருப்பர். அப்படியே கணித மேதை இராமானுஜம், சகுந்தலா தேவி ஆகியோர்களது மூக்கை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும். அதே மூக்கு பெரிதாகவும் அகன்றும் சற்றே உப்பிய மாதிரி இருந்தால் அவர்கள் கணக்குப் பன்னுவதில் புலியாக இருப்பார்கள். உதாரணமா… (ஆசை.. தோசெ.. அப்பளம்.. வடை… நானு யார் பேராவது சொல்லி வம்பிலெ மாட்ட, நீங்க ஜாலியா இருப்பீகளா… நீங்களே பாத்துகிடுங்க). ஆதாரம் தேவை என்று விக்கிபீடியாவில் போடுவது போல்னு வச்சிக்குங்களேன். ஆனா நீங்க வேற யாரையாவது வச்சிட்டிருக்கும் சேதியை மூக்கு சொல்லிடும். அம்புட்டுத்தான்.

ஏதாவது சிக்கலான சேதியாய் இருக்கும் என்று, நாம கேட்கப் போக, அது என்ன பெரிய்ய கம்ப சூத்திரமா என்ன? என்று பதில் சொல்லாமலேயே கேள்வி கேட்டு அலம்பல் செய்பவர்களும் உண்டு. அப்பேற் பட்ட ஆட்களிடம், அது என்ன கம்பசூத்திரம்? என்று திருப்பிக் கேளுங்கள். அவங்களோட டப்பா டான்ஸ் ஆடிடும். (அவங்க திருப்பி, அப்பொ டப்பா டான்ஸ் ஆடிடும்னா இன்னா, என்று கேட்டா… ஆளை வுடுங்க சாமி..)

அது என்ன அப்பாடக்கரா என்பது மாதிரி, கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று தேடும் அவா வந்தது. இப்பொத்தான் எப்பொ சந்தேகம் வந்தாலும் கூகுளாண்டவரெத் தானே தேடறோம். நானும் தேடத் துவங்கினேன். அப்பொத்தானா இந்த தமிழ் Font கோளாறு செய்யனும். சரி.. மேட்டரு அர்ஜெண்ட் என்று நினைத்து, English லே போட்டுத் தேடலாம் என்று ஆரம்பித்தேன். Kamba Suuthram in Tamil என்று தேடினேன். கூகுள் ஹி..ஹி.. என்று பல் இளித்தது. போதாக் குறைக்கு, கம்ப சூத்திரம் சரக்கு இல்லை. காமசூத்திரத்தில் 53 லட்சத்துக்கும் மேலா பக்கம் இருக்கு. வேணுமா என்று கெஞ்சியது. ம்… 50 வயசுக்கு மேலெ இவ்வளவு பக்கம் பாத்து இன்னா செய்ய?? எல்லாமே இப்படி லேட்டாத்தான் நடக்குமோ? இப்படித்தான் அரசு வழங்கும் வீடும்.

அரசு உத்தியோகம் கிடைச்சவுடன் சின்னதா ஒரு வீடு கிடைக்கும். Type I or Type A என்று சொல்லும் ஒரு Bed & Singe fan இருக்கும் வீடு. அப்பொத்தான் நண்பர்கள் படை சூழ வீடே ஜே ஜே என்று. அப்பொ சின்னதா இருக்கும் வீடு. ஆனா அம்பது வயசிலெ மூனு பெட்ரூம் இருக்கும் Type E or Type V வீடு கிடைக்கும். பசங்க அப்பொ காலேஜ் படிக்கப் போயிருப்பாய்ங்க.. என்ன செய்ய? ஒரு பொண்டாடியும் இல்லாத நேரத்துலெ இப்படி ஒவ்வொரு ரூமா உக்காந்து மாத்தி மாத்தி ராமாயணம் படிக்க வேண்டியது தான். புண்ணியத்துக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

ஒரு வழியா ரீ பூட் செய்து தமிழ் Font சரியாக்கி, மீண்டும் தேடினால் ஒரு வழியா 6K அளவு பக்கங்கள் இருப்பதாய் தகவல் தந்து ஒதுங்கியது. சில சமயங்களில் ஒரு பக்கம் திறக்கவே லிட்டில் அந்தமான் தீவில் ஒரு நாள் ஆகும். நானு என்னெக்கி எல்லாத்தையும் பாத்து…ம்.. படிச்சி.. எழுதி…??

சிலர் பல விஷயங்களை “அது பெரிய கம்ப சூத்திரம் இல்லை” என்பார்கள். அவர்கள் கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்வார்கள். இப்படிச் சொன்னவர் எங்க ஊர் பரமக்குடியார் கமலஹாசன். நிறைய தடவை படிச்சிப் பாத்துட்டேன். எனக்கு ஒன்னும் வெளங்கலெ… உங்களுக்கு ஏதாவது வெளங்குதா?? (அது என்ன பெரிய்ய்ய் க சூத்திரமா என்று சொல்லி விட்டால் நீங்க பெரிய்ய்ய் ஆளு தான்)

கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று புரிவதற்குள் அவர் வைத்திருக்கும் சூத்திரத்தைப் பாக்கலாமே. (போற போக்கிலெ ஒரு சின்ன கொசுறு தகவல்: கம்ப சித்திரம் தான் பின்னர் மறுவி.. அதாங்க மாறிப் போயி சூத்திரம் ஆனதாய் ஏகப்பட்டவர்களின் கருத்தா இருக்குங்க). பெருக்கல் கூட்டல் இப்படி ஏதும் இருந்தாத் தானே அது சூத்திரம். கம்பன் கிட்டெ அப்படி ஏதாவது சூத்திரம் இருக்கா என்று பாத்தபோது கெடெச்ச சேதி.. இதோ உங்களுடன்.

குரங்குப் படைகள் ஏகமா அணிவகுத்து நிக்குது கிஷ்கிந்தாவில் (மறுபடியும் போலாமா டாடீ என்று கிளம்பும் அந்த கிஷ்கிந்தா இல்லீங்கோ.. அது அசல்). எவ்வளவு இருக்கும் என்று தோராயமா, உத்தேசமா நிருபர் ரேஞ்சுலெ கணக்கு போட்டு சூத்திரமா சொல்கிறார் கம்பர். இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று இருக்கும் அந்தப் படை கடலின் பரப்பு மாதிரி இருக்கு என்று சொல்லலாமான்னு மொதெல்லெ யோசிக்கிறார் கம்பர். ஆனா கடலில் எல்லையெப் பாத்தவங்களும் இருக்காகளே. இந்தப் படையின் அளவு பத்தி சொல்ல இந்த கம்பன் என்ன?? எந்தக் கொம்பன் வந்தாலும் முடியாது. அவங்களுக்கும் சொல்றதுக்கும் எந்த உவமையும் சிக்காமெ திண்டாடுவாங்க!!

சரி..இங்கே சூத்திரம் எங்கே வருது? இருங்க வாரென்… பத்தை இரட்டிப்பாக்கி இரவு பகலா பாத்தாலும் பாதி படையைத்தான் பாக்க முடியுமாம். அப்புடீன்னா, முழுப் படை எப்புடி இருக்கும். நீங்களே பாத்துகிடுங்க. அப்படியே பாட்டும் பாக்கலாமே..

அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எத்திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ??

(அத்தி – கடல்)
இங்கே, ”பத்து இரட்டி” தான் சூத்திரம் என்பது என் பதிவின் மூலம். (பத்து இரட்டி என்பதை பல நாட்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர் பள்ளத்தூர் பழ பழனியப்பன் சொல்கிறார்.) அப்பொ இதையும் அந்த உரை ஆசிரியர் அசைத்து விட்டதால், கடலின் எல்லையைக் கம்பர், சூத்திரம் மூலம் பாத்து தெரிந்து எழுதி இருகிறாரே.. அதையாவது கம்ப சூத்திரம் என்று நம்பலாமே…

5 thoughts on “டாடீ எனக்கு ஒரு டவுட்டு

  1. SUBRAMANIAN OBULA says:

    கம்பசூத்திரம் பெ. = மிகவும் கடினமானது; பிரம வித்தை;
    something that involves extraordinary sill. இது என்ன கம்ப சூத்திரமா?
    குழந்தை கூடச் செய்யலாமே?

    இப்படிக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் பொருள் உள்ளது.
    (எங்கிட்ட இந்த அகராதி இருக்குன்னு சொல்லிக்க வேண்டாமா!)

    எனக்கு ஒரு டௌட்டு ! குழந்தை கூட செய்துவிடுமே என்று இருந்தால் சரியாக
    இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது.

    அப்பறம் அந்த ஒற்றுக்கள் எங்கு வரும்? கூடச், எனக்குத் என்று எழுதணுமா?

    • Tamil Nenjan says:

      ரொம்ப நல்லா கோடிட்டுச் சொல்லிட்டீங்க… நானும் ஒரு நல்ல தமிழ் அகராதி வாங்கி வச்சிக்கணும். உங்களின் சந்தேகம் தீர்க்க….

  2. jayarajanpr says:

    Pathu iratty pathivugalil ithuvum Valakkam pol arumai.

  3. ravikandasamy says:

    puthia chinthanai, nalla thirvu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s