சின்னப் புள்ளையா இருக்கிறச்சே நிறைய விளையாட்டுகள் ஆடியிருக்கலாம். நான் ஆடிய ஆட்டம் ஒண்ணு இன்னும் ஞாபகத்திலெ இருக்கு. “படம் இருக்கா இல்லையா” என்ற விளையாட்டு தான் அது.
என் கையில் பழைய குமுதம் விகடன் ஏதாவது புத்தகம் இருக்கும். (காமிக்ஸ் & அம்புலிமாமா ஆகியவை இந்த விளையாட்டில் தடை செய்யப்பட்டவைகள்) அடுத்தவர் கண்ணுக்கு தெரியாத மாதிரி புத்தகத்தைப் பிரித்து அதில் எத்தனை படம் இருக்கும்? என்பதை அடுத்தவர் சொல்ல வேண்டும்.
படம் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு பதிலாக, “இருக்கு” அல்லது “இல்லை” தான் வர வேண்டும்.
படம் இருக்கும் போது இருக்கு என்று பதில் வந்தால் “வலதா” “இடதா” எந்தப் பக்கத்தில் என்ற கேள்வி தொடரும்.
அதுவும் சரியாக இருந்தால் எத்தனை படம் என்று கேட்டு ஆட்டம் முடியும். ஜெயிப்பவர்களுக்குப் பாயிண்ட்.
Logical Thinking வளர்வதற்கு உதவும், லாஜிக்கே இல்லாத விளையாட்டு தான் இது. கரண்ட இல்லாத நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்கள்… லாஜிக்கலா யோசிக்க உதவும். (பொண்டாட்டியோடவும் ஆடலாம்… அடுத்தவன் பொண்டாட்டியுடனும் ஆடலாம்..அதற்கு முன் உங்கள் & அடுத்தவரின் உறவு துரியோதணன் கர்ணன் மாதிரி இருக்கா என்ற லாஜிக்கான கேள்வி கேட்டு ஆரம்பிங்க..)
தொழிலாளி Vs முதலாளி, Boss Vs Subordinate இவர்களுக்குள் வரும் மோதல்களின் ஆதாரம் இந்த லாகிக்கை சரிவர புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கும் நிலை தான். இதை தான் Management புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பாஷைகளில் மாத்தி மாத்தி தருகிறார்கள்.
உங்களுக்கு மிக நெருக்கமான மனைவியின், தூரத்து உறவு வீட்டுல் திருமணம்.. (வழக்கம் போல் உங்களுக்கு போக இஷ்டம் இல்லை). வீட்டுக்காரியின் அனத்தல் காரணமாய் உங்க மொதலாளியிடம் லீவு கேக்க போறீங்க.. இது ஒரு சிச்சுவேஷன்,
முதலாளியிடம் இருக்கும் இரண்டு லாஜிக்கான பதில்கள்: லீவு தரலாம். தராமலும் இருக்கலாம். ஆனா உங்க எதிர் பார்ப்பு இந்த லாஜிக்கை விட்டு விலகி இருக்கு.. உங்களுக்கு லீவு கெடைச்சே ஆகனும்.. (முதலாளியை அப்புறம் காக்கா பிடிச்சிரலாம்.. வீட்டுக்காரியை கால் அல்லவா பிடிக்க வேண்டி வரும்)
100 முறை நீங்கள் கேட்ட போதெல்லாம் லீவு தந்தவர்தான் அந்த தங்கமான முதலாளி. ஆனால் இந்த முறை தராவிட்டால் அவருடன் மோதல் வெடிக்கும். இதேபோல் பல சமயங்களில் உங்க Boss கூட லாஜிக்கை மறந்து எதிர் பார்ப்பார், சில வேலைகளை உங்களிடம். இப்பொ புரியுதா மோதலின் ரகசியம்??
இதில் பிளைக்கும் வழி என்பது, உங்கள் திறமயை வளர்த்துக் கொள்வது தான். உங்களை விட்டா அந்த வேலையை எந்தக் கொம்பனும் செய்துவிட முடியாது என்று உங்க Boss உணரும் அளவுக்கு உங்கள் திறமை இருக்கனும்.
இல்லையா.. இருக்கவே இருக்கு யூனியன்.. என்ன ஒரு அருமையான பெயர் தெரியுமா அதுக்கு?? Colective Bargaining. நான் கொஞ்சம் இறங்கி வாரேன்.. நீயும் இறங்கு என்று சொல்லும் இடம் அது.
சரி பிரச்சினைகள் தான் எல்லா எடத்திலும் இருக்கே?? ஆனா தீர்வுகள்??
ஒரே பிரச்சினையை இருவர் எப்படி வித்தியாசமாய் முடிவு எடுக்கிறார்கள் என்று சொல்லட்டுமா??
ஒரு சின்ன வீடு சமாசாரம் தான். ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும் நிலையில், அவரோட சின்ன வீட்டிற்கு பென்ஷன் மீதும் ஆசை.. (ஆசை அறுவது நாள் என்பது சின்ன வீட்டுக்கு செல்லாதோ!!) எந்த நாதாரிப்பய குடுத்த ஐடியாவோ வச்சி ஒரு லெட்டர் போட்டு விட்டார்.. காதலன் ஆபீசுக்கு. உயர் அதிகாரிக்கு லட்டு மாதிரி மேட்டர் கிடைக்க பென்ஷனுக்கே அல்வா குடுத்துட்டார்.
இன்னொரு அதிகாரி கையிலும் இதே மாதிரி கடிதம் கிடைக்குது. அவரோ இதை பெரிசுபடுத்தினா அந்த மனுஷன், பெரிய வீடு, சின்ன வீடு, குழந்தைகள் எல்லாருக்கும் சிக்கல். எல்லரையும் கூப்பிட்டு பென்ஷனில் சின்ன வீட்டுக்கு 30% தர முடிவு செஞ்சி பிரச்சனையை முடித்தார். (அரசுப் பணியிலும் கூட நாலு பேருக்கு நல்லது செய்ய எதுவுமே தப்பில்லை என்று நெனைச்சிருப்பாரோ??) இந்த இடத்தில் ..தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டு பிண்ணனியில் ஓடிருக்குமே!!
ஊழியர்களின் பிரச்சனையில் எழுத்துபூர்வமான டாக்குமென்ட்கள் & சாட்சிகளின் வாக்குமூலம் தான் முக்கியம்.
சரி இங்கே ஒருவர் ரொம்ப நேரமா Call waiting லே இருக்கார். அவரோட பிரச்சினை… ஹீரோயினுக்கு இடை இருக்கா இல்லையா என்பது தான். என்பது கிலோ எடை இருந்தால் இந்த கேள்வியே தேவைப் பட்டிருக்காது.
சரி..நமக்குத் தெரிந்த அதே லாஜிக்கை வச்சி யோசிக்கலாமா???
Documental Evidence: இல்லையே.. அந்த இடைக்கு உவமையா எதுவுமே சிக்கலை..அதனாலெ யாருமே அதைப் பத்தி எழுதி வைக்கலையே!!
அப்பொ சாட்சி: ஹீரோ தான். சாதாரன கண்களால் அந்த இடையை பாத்துட முடியாதாம். தடவிப் பாத்து அட… இடெ இருக்கே என்று சொல்லத்தான் முடியுமாம்.
இந்த பிரச்சினைக்கு தீர்ப்பு நீங்களே சொல்லுங்க…
நான் அந்த ஹீரோயின் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல பாக்கி இருக்கு. யாராவது படம் வரையனும்னா ஒரு மாடல் வச்சி வரைவாங்க.. ஆனா இவங்க இவங்களோட அழகைப் பாத்தே எவ்வளவு அழகான மகளிரையும் படைச்சிடுவாங்களாம். பிகரே இல்லை என்று கவலைப்படும் தெருவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கச் சொல்லலாமா??
அது சரி அந்த ஹீரோ ஹீரோயின் யாரு தெரியுமா?? Call Waiting ல இருப்பது யார்னு பாத்தா வெளங்கிடும்… அட..நம்ம…கம்பர்… அப்பொ ஹீரோ ராமர். ஹீரோயின் சீதை.. விளங்கி விட்டதாஆஆஆஆஆஆ???
சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.
அப்படி இப்படீங்கிற பேச்சுக்கே இடம் கெடையாது என்பார்கள்… கம்பரோ அதுக்கும் மேலே போய்… இல்லை இல்லை எறங்கி… சொல்லுக்கே இடம் கிடெயாது என்கிறார்..
ஆமா… நாட்டாமைகளே..உங்க தீர்ப்பு என்ன???