வந்தாரய்யா ஜுனியர் வந்தாரய்யா


புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறு அடி பாயும். இதெல்லாம் வாரிசுகளுக்காய் வரிஞ்சு கட்டிச் சொல்லும் வாக்கியங்கள். இது முற்றிலும் உண்மை தானா? காந்திஜியோடொ பிதாஜீ, விவேகானந்தரோட டாடி, சுஜாதவோடொ தோப்பனார் எல்லாம் யார் என்று கேட்டால் பலருக்கு அவர்களின் பெயர் கூட தெரியாது. இதே மாதிரி பல பிரபலங்களின் வாரிசுகளின் பெயர்களும் தெரியாமலேயே போனதும் உண்டு. இன்னொரு பக்கம் தகப்பனை மிஞ்சி மேயும் வாரிசுகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரையுலகில் வாரிசுகள் வந்து கொண்டிருக்கிறார்கள். பலர் கலக்கிக் கொண்டிருக்க, மண்ணைக் கவ்விய மைந்தர்களும் உண்டு தான். அரசியலில் வாரிசுகளுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. பெரிய்ய நிர்வாகத்திறமை, கடின உழைப்பு என்று சப்பை கட்டு கட்டினாலும், உன்னிப்பா கவனிச்சா ஒரு பொறி தட்டும். ஒரு பிரபலத்தின் வாரிசு, சிறு வயதில் ஏதாவது ஒளறும். அந்த வார்த்தைக் கோர்வைகளைக் கூட கவிதை என்று வர்ணிக்கும் அந்த வட்ட மாவட்ட சுற்றுகள். அந்த வாரிசு, பாம்பாக இருந்தாலும் அது பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு. அதனால் நிர்வாகம் மிக எளிதாக ஏதுவாகி விடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கு. உங்களுக்கு எப்படி தோணுது??

திருவாசகம் பற்றிச் சொல்லும் போது சுகி சிவம் அவர்களிடமிருந்து ஒரு சுட்ட பழம், பறித்து உங்களுக்குப் பரிமாறலாம் என்று இருக்கேன். அந்தக் காலத்தில் ராசாவோட மகன் மக்கா இருந்தாலும் ராசா ஆய்டுவான். ஆனா மந்தரி மகன் மந்திரி ஆகிவிட முடியாது.. புத்திசாலியா இருந்தா தான் மந்திரி ஆக்குவாங்க (அந்தக் காலத்தில்). மந்திரி மகன், புத்திசாலியா இருந்தாத் தான் மந்திரி ஆக முடியும். அப்படி ஒரு மந்திரி தான் வாதவூரான்.. பிற்காலத்தில் மணிவாசகர் ஆனவர்.

வாரிசு வேண்டும் என்றும், அதுவும் அந்த வாரிசு நல்லபடியா பிறக்க வேண்டும் என்றும் பல வேண்டுதல்கள் வைக்கிறார்கள். அதனை நிறைவேற்றி வைக்கவும் சில பல Gynacologist கடவுள்கள் இருக்கின்றன. அப்படி பிறக்கும் கொழந்தைக்கும் சாமி பெயரும் வைப்பார்கள். நானும் அப்படி வேண்டுதல் வைத்தேன். எங்கள் சார்பில் கர்ப்ப ரக்சாம்பிகையிடம் இமெயில் அனுப்பப் பட்டது. மாமியார் சார்பில் சப்தகன்னி அம்மனுக்கு கூரியரும் தரப்பட்டது. குழந்தை வரம் கிடைத்தது. அப்புறம் ரெண்டு சாமிக்கும் கோபம் வராத மாதிரி, பொண்ணுக்கு சப்தரக்சிகா என்று பெயர் வச்சி, ரெண்டு சாமியையும் கூல் செஞ்சிட்டோம்.
அபிமன்யூ மாதிரி வயித்தில் இருக்கும் போதெ கத்துக் கொண்டு, அதி புத்திசாலிக் குழந்தை பிறக்கவும் இந்த பரமக்குடிக்காரர்கள் முயற்சி செய்துள்ளார்கள். அவர்கள் பெற்றது வெற்றியா என்று சகல கலா வல்லவர்தான் சொல்ல வேண்டும். ஆனா பழுத்த ஆன்மீகக் குடும்பத்தில் நிகழ்ந்த வேண்டுதல் ஏன் இப்படி ஒரு நாத்திகனை உருவாக்கித் தந்தது? இதற்க்கு அந்தக் கடவுள் தான் பதில் சொல்ல வேண்டும்.

மஹாத்மா காந்தி அவர்கள் ஒருமுறை நீதிமன்றத்துக்குப் போனாராம். அப்போது அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்றனராம் (நீதிபதி உட்பட). அந்த அளவு மரியாதையின் உச்சத்தில் இருந்தவர் அவர். பின்னர் ஒருகட்டத்தில் ஒரு குற்றவாளி அதே நீதிமன்றத்தில் வந்தார். அவரின் பெயர் கேட்டபின்னர், அப்பா பெயர் கேட்டனர். அவர் சொன்ன பதில், தேசத்தின் தந்தை பெயர். ஆடிப் போய் விட்டனர் அனைவரும். (அப்புறம் மன்னித்து விட்டது தனிக்கதை). தேசப்பிதாவிடம் இதைப்பற்றிக் கேட்ட போது அவர் சொன்ன பதில் தெரியுமா நண்பர்களே.. “அந்தப் பையன் பிறக்கும் சூழலில் நானும் அப்படித்தான் இருந்தேன்”. இப்படி ஒரு தன்னிலை விளக்கம் தேசப்பிதாவால் மட்டுமே தர முடியும்.

தமிழக எழுத்தாளர்களில் சுஜாதாவை விட்டு விட்டு பட்டியல் போட முடியுமா என்ன? அவரது வாரிசுகள் யாராவது அப்படி எழுதுகிறார்களா? தெரியலையே?? தமிழ்வாணன் வாரிசுகளில் லேனா தமிழ்வாணன் மட்டும் அப்படியே அதே பாணியில். அது சரி.. அவரின் வாரிசு..? எழுதுவதாய் தெரியவில்லை.. ஆமா இப்பத்தான் ஐடி வந்தாச்சே..எதுக்கு மத்த வேலைகள் எல்லாம்? காமெடி நடிகர் செந்தில் மகன் பல் டாக்டர். பழைய நடிகர் ஜெய்சங்கரின் வாரிசு கண் டாக்டர். ஆனா கண்டக்டரா இருந்து நடிக்க வந்து ஹா..ஹா.. கலக்கிட்டிருக்கார் வாரிசுகளோட..

தலைமுறை இடைவெளி என்ற வார்த்தை யார் தான் கண்டுபிடிச்சாங்க என்றே தெரியவில்லை. நம்ம வாரிசுகளை நம்மாள ஒழுங்கா திட்டக் கூட முடியலை. நாங்கல்லாம் அந்தக் காலத்திலெ, காலுக்கு செருப்பில்லாமெ, நடந்தே போயி…. இப்படி நாம படிச்ச விவரத்தெ முழுசா கேக்கவும் தயாரா இல்லை இப்பொ பசங்க. உடனே எதிர்க் கேள்வி வரும்… அப்பா உங்கப்பா ஒரு நெசவுத் தொழிலாளி.. உங்களுக்கு செருப்பு வாங்கித் தரலை.. ஆனா எங்கப்பா ஒரு இஞ்ஜினியருப்பா… செருப்பு ஷு பிளே ஸ்டேஷன் எல்லாம் வாங்கித் தரணும்ப்பா… என்ன பதில் சொல்ல??

ராமாயணத்தில் இப்படி ஒரு சூழல் வருகிறது. (அங்கே சுத்தி இங்கே சுத்தி வந்தாரய்யா ராமாயணத்துக்கு என்று பாடுவது கேக்குது). இலங்கையில் அனுமர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சண்டையின் முன்னோட்டம். எதிரில் இந்திரசித்தன். இ சி அம்பு எய்கிறான் அனுமன் மீது. அடச்சீ என்று கோபம் வருது நம்ம வானர தூதனுக்கு. இந்திர சித்தனை தேரோடு தூக்கி வானத்திலெ வீரமா வேகமா எறிஞ்சி வீரப்பா சிரிப்பு சிரித்தாராம்.

இது வரை எல்லாம் ஓகே தான். கம்பர் ஒரு இடைச் செருகல் வைக்கிறார். கோபம் & தேரைத் தூக்கி எறிதல்.. இந்த ரெண்டுக்கும் நடுவுலெ சின்ன கேப். அதில் அனுமன் வேகமாமாமாமாப் போனாராம். வேகம் என்றால் வேகம், அது எப்பேற்பட்ட வேகம் தெரியுமா? ராமனின் அம்பு தான் வேகமானது. இதை அனுமனிடம் கேட்டா என்ன சொல்வார்?? ஆமா… ஆமா… Boss is always correct. ராம் தான் அனுமனின் Boss. கம்பர் சொல்லி இருக்கலாம் ராமன் அம்பு மாதிரி வெரெஸ்ஸாப் போனார் என்று.. சொல்லலையே

கம்பர் கலையே ஓவர் பில்டப்தானே… ராமன் அம்பைவிட அதி வேகமாக விரைந்து போனாராம். கொஞ்ச Gap ல என்ன வெளையாட்டு காட்டுகிறார் பாத்தீகளா??

உய்த்த வெஞ் சரம் உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப
கைத்த சிந்தையன் மாருதி நனி தவக்க னன்றான்
வித்தகன் சிலை விடு கணைவிசையினும் கடுகி
அத் தடம் பெருந் தேரொடும் எடுத்து எறிந்து ஆர்த்தான்.

மீண்டும் ஒரு கம்பர் கலாட்டாவோடு சந்திப்போம்…..

இடை இருக்கா இல்லையா???


சின்னப் புள்ளையா இருக்கிறச்சே நிறைய விளையாட்டுகள் ஆடியிருக்கலாம். நான் ஆடிய ஆட்டம் ஒண்ணு இன்னும் ஞாபகத்திலெ  இருக்கு. “படம் இருக்கா இல்லையா” என்ற விளையாட்டு தான் அது.

என் கையில் பழைய குமுதம் விகடன் ஏதாவது புத்தகம் இருக்கும். (காமிக்ஸ் & அம்புலிமாமா ஆகியவை இந்த விளையாட்டில் தடை செய்யப்பட்டவைகள்) அடுத்தவர் கண்ணுக்கு தெரியாத மாதிரி புத்தகத்தைப் பிரித்து அதில் எத்தனை படம் இருக்கும்? என்பதை அடுத்தவர் சொல்ல வேண்டும்.

படம் இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு பதிலாக, “இருக்கு” அல்லது “இல்லை” தான் வர வேண்டும்.

படம் இருக்கும் போது இருக்கு என்று பதில் வந்தால் “வலதா” “இடதா” எந்தப் பக்கத்தில் என்ற கேள்வி தொடரும்.

அதுவும் சரியாக இருந்தால் எத்தனை படம் என்று கேட்டு ஆட்டம் முடியும். ஜெயிப்பவர்களுக்குப் பாயிண்ட்.

Logical Thinking வளர்வதற்கு உதவும், லாஜிக்கே இல்லாத விளையாட்டு தான் இது. கரண்ட இல்லாத நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்கள்… லாஜிக்கலா யோசிக்க உதவும். (பொண்டாட்டியோடவும் ஆடலாம்… அடுத்தவன் பொண்டாட்டியுடனும் ஆடலாம்..அதற்கு முன் உங்கள் &  அடுத்தவரின் உறவு துரியோதணன் கர்ணன் மாதிரி இருக்கா என்ற லாஜிக்கான கேள்வி கேட்டு ஆரம்பிங்க..)

தொழிலாளி Vs முதலாளி, Boss Vs Subordinate இவர்களுக்குள் வரும் மோதல்களின் ஆதாரம் இந்த லாகிக்கை சரிவர புரிந்து கொள்ளாமல் அடம் பிடிக்கும் நிலை தான். இதை தான் Management  புத்தகங்களில் Industrial Relations, Change management என்று புரியாத பாஷைகளில்  மாத்தி மாத்தி தருகிறார்கள்.

உங்களுக்கு மிக நெருக்கமான மனைவியின், தூரத்து உறவு வீட்டுல் திருமணம்.. (வழக்கம் போல் உங்களுக்கு போக இஷ்டம் இல்லை). வீட்டுக்காரியின் அனத்தல் காரணமாய் உங்க மொதலாளியிடம் லீவு கேக்க போறீங்க.. இது ஒரு சிச்சுவேஷன்,

முதலாளியிடம் இருக்கும் இரண்டு லாஜிக்கான பதில்கள்: லீவு தரலாம். தராமலும் இருக்கலாம். ஆனா உங்க எதிர் பார்ப்பு இந்த லாஜிக்கை விட்டு விலகி இருக்கு.. உங்களுக்கு லீவு கெடைச்சே ஆகனும்.. (முதலாளியை அப்புறம் காக்கா பிடிச்சிரலாம்.. வீட்டுக்காரியை கால் அல்லவா பிடிக்க வேண்டி வரும்)

 100  முறை நீங்கள் கேட்ட போதெல்லாம் லீவு தந்தவர்தான் அந்த தங்கமான முதலாளி. ஆனால் இந்த முறை தராவிட்டால் அவருடன் மோதல் வெடிக்கும். இதேபோல் பல சமயங்களில் உங்க Boss கூட லாஜிக்கை மறந்து எதிர் பார்ப்பார், சில வேலைகளை உங்களிடம். இப்பொ புரியுதா மோதலின் ரகசியம்??

இதில் பிளைக்கும் வழி என்பது, உங்கள் திறமயை வளர்த்துக் கொள்வது தான். உங்களை விட்டா அந்த வேலையை எந்தக் கொம்பனும் செய்துவிட முடியாது என்று உங்க Boss உணரும் அளவுக்கு உங்கள் திறமை இருக்கனும்.

இல்லையா.. இருக்கவே இருக்கு யூனியன்.. என்ன ஒரு அருமையான பெயர் தெரியுமா அதுக்கு?? Colective Bargaining. நான் கொஞ்சம் இறங்கி வாரேன்.. நீயும் இறங்கு என்று சொல்லும் இடம் அது.

சரி பிரச்சினைகள் தான் எல்லா எடத்திலும் இருக்கே?? ஆனா தீர்வுகள்??

ஒரே பிரச்சினையை இருவர் எப்படி வித்தியாசமாய் முடிவு எடுக்கிறார்கள் என்று சொல்லட்டுமா??

ஒரு சின்ன வீடு சமாசாரம் தான். ஒரு அரசு ஊழியர் ஓய்வு பெறும் நிலையில், அவரோட சின்ன வீட்டிற்கு பென்ஷன் மீதும் ஆசை.. (ஆசை அறுவது நாள் என்பது சின்ன வீட்டுக்கு செல்லாதோ!!) எந்த நாதாரிப்பய குடுத்த ஐடியாவோ வச்சி ஒரு லெட்டர் போட்டு விட்டார்.. காதலன் ஆபீசுக்கு. உயர் அதிகாரிக்கு லட்டு மாதிரி மேட்டர் கிடைக்க பென்ஷனுக்கே அல்வா குடுத்துட்டார்.

இன்னொரு அதிகாரி கையிலும் இதே மாதிரி கடிதம் கிடைக்குது. அவரோ இதை பெரிசுபடுத்தினா அந்த மனுஷன், பெரிய வீடு, சின்ன வீடு, குழந்தைகள் எல்லாருக்கும் சிக்கல். எல்லரையும் கூப்பிட்டு பென்ஷனில் சின்ன வீட்டுக்கு 30% தர முடிவு செஞ்சி பிரச்சனையை முடித்தார். (அரசுப் பணியிலும் கூட நாலு பேருக்கு நல்லது செய்ய எதுவுமே தப்பில்லை என்று நெனைச்சிருப்பாரோ??) இந்த இடத்தில் ..தென் பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே பாட்டு பிண்ணனியில் ஓடிருக்குமே!!

ஊழியர்களின் பிரச்சனையில் எழுத்துபூர்வமான டாக்குமென்ட்கள் & சாட்சிகளின் வாக்குமூலம் தான் முக்கியம்.

சரி இங்கே ஒருவர் ரொம்ப நேரமா Call waiting லே இருக்கார். அவரோட பிரச்சினை… ஹீரோயினுக்கு இடை இருக்கா இல்லையா என்பது தான். என்பது கிலோ எடை இருந்தால் இந்த கேள்வியே தேவைப் பட்டிருக்காது.

சரி..நமக்குத் தெரிந்த அதே லாஜிக்கை வச்சி யோசிக்கலாமா???

Documental Evidence: இல்லையே.. அந்த இடைக்கு உவமையா எதுவுமே சிக்கலை..அதனாலெ யாருமே அதைப் பத்தி எழுதி வைக்கலையே!!

அப்பொ சாட்சி: ஹீரோ தான். சாதாரன கண்களால் அந்த இடையை பாத்துட முடியாதாம். தடவிப் பாத்து அட… இடெ இருக்கே என்று சொல்லத்தான் முடியுமாம்.

இந்த பிரச்சினைக்கு தீர்ப்பு நீங்களே சொல்லுங்க…

நான் அந்த ஹீரோயின் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல பாக்கி இருக்கு. யாராவது படம் வரையனும்னா ஒரு மாடல் வச்சி வரைவாங்க.. ஆனா இவங்க இவங்களோட அழகைப் பாத்தே எவ்வளவு அழகான மகளிரையும் படைச்சிடுவாங்களாம். பிகரே இல்லை என்று கவலைப்படும் தெருவுக்கு ஒரு ரவுண்ட் அடிக்கச் சொல்லலாமா??

அது சரி அந்த ஹீரோ ஹீரோயின் யாரு தெரியுமா?? Call Waiting ல இருப்பது யார்னு பாத்தா வெளங்கிடும்… அட..நம்ம…கம்பர்… அப்பொ ஹீரோ ராமர். ஹீரோயின் சீதை.. விளங்கி விட்டதாஆஆஆஆஆஆ???

சட்டகம் தன்னை நோக்கி யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டு இடை இருக்கும் தன்மை இயம்பக் கேட்டு உணர்தி என்னின்
கட்டுரைத்து உவமை காட்ட கண்பொறி கதுவா கையில்
தொட்ட எற்கு உணரலாம் மற்று உண்டு எனும் சொல்லும் இல்லை.  

அப்படி இப்படீங்கிற பேச்சுக்கே இடம் கெடையாது என்பார்கள்… கம்பரோ அதுக்கும் மேலே போய்… இல்லை இல்லை எறங்கி… சொல்லுக்கே இடம் கிடெயாது என்கிறார்..

ஆமா… நாட்டாமைகளே..உங்க தீர்ப்பு என்ன???