எனக்கு ஆஃபீஸ் வேலை தவிர்த்து ஏதாவது உபரி தொழில் வந்து கொண்டே இருக்கும். இப்படி சமீபத்தில் வந்த பணி தான் அந்தமானில் உள்ள ஐ டி ஐ பசங்களுக்கு ரெண்டு நாள் கிளாஸ் எடுக்கனும்கிறது.
(அவனவன் அவங்க பசங்களை ஐஐடிக்கு சேக்க படாத பாடு படும் இந்த நேரத்தில், நானு ஐ டி ஐ பசங்களோட மல்லுக்கு நிக்கிறேன்)
இந்தியாவில் சில ஐடிஐ மட்டும் செலெக்ட் செய்து அதில் இரண்டு வருஷ படிப்புக்கு பிறகு சாண்ட்விச் கோர்ஸ் மாதிரி வைத்திருக்கிறார்கள்.
அந்தமான் ஐ டி ஐயும் அதில் ஒன்று. அதில் Syllebus தவிர்த்து இங்கு என்ன தேவை என்பதை யோசித்து field ல் இருப்பவர்கள் வந்து பாடம் நடத்த வேண்டும். அதில் தான் எனக்கு அழைப்பு
வந்தது. கொஞ்சம் வேலை அதிகம் ஆயிட்டதால் பவர் பாய்ண்ட் சங்கதி செய்ய முடியவில்லை.
வகுப்பு எடுக்க கிளம்பும் 10 நிமிடங்களுக்கு முன்பு ஒரு தகவல் கிடைத்தது. பசங்க கிளாசில் நல்லா தூங்குறாங்க.. அவ்வளவு சரியா ரிசீவ் செய்வதில்லை என்று. இரண்டாம் வரிசையில் உக்காந்தே ஒரு
நிகோபாரி ஆதிவாசி பெண் தூங்குவது சிறப்புச் செய்தியாம்.
நான் எடுக்கப் போகும் டாபிக் கொஞ்சம்…ஏன்… ரொம்பவே Dry ஆன மேட்டர்… Construction Management & Analysis of Rate (அதான் ..கங்கிரீட் என்ன ரேட் என்று பாக்கும் வித்தை தான்)..
இதை கொஞ்சம் ஜாலியா சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன். அதன் விளைவு தான் இந்த போஸ்ட்..
ஆரம்பத்தில் ஒரு குட்டிக்கதை சொன்னேன்:
சுகிசிவத்திடம் சுட்டது… கொஞ்சம் உல்டா செய்தது.
கதை இது தான்:
நான் குடியிருக்கும் வீடு முதல் மாடி. ஒரு முறை கீழே இருக்கும் போது கண்ணாடி தேவைப்பட்டது (ஏதாவது படிக்கனும்னா கண்ணாடி தேவைப்படுது..ம்..வயசாயிடுச்சி இல்லையா???).
எம் பொண்ணைக் கூப்பிட்டு, எடுத்துட்டு வா என்றேன். போப்பா… 17 படி ஏறனும்… அப்புறம் கண்ணாடி வேறெ தூக்கிட்டு வரனும் (ஏதோ.. மலையை தூக்கிட்டு வர்ர மாதிரி..).
கொஞ்ச நேரமாச்சி… என் பொண்ணோட தோஸ்த் வந்தா… அவகூட 30 தடவெ மாடி ஏறி மேலெ கீழெ வந்திட்டு இருந்தா..
நான் அந்த வாண்டுவெ கூப்பிட்டு கேட்டேன். ஏன்.. இப்படி… ? ஒரு கண்ணாடி எடுத்துட்டு வரச்சொல்ல
கஷ்டமா இருந்திச்சி..ஆனா ஒன் பிரண்டு கூட இத்தனை தடவெ போனே???
எனக்கு கிடைத்த பதில். அப்பா… நீங்க சொன்னது வேலைப்பா… ரொம்பவே போரு. நாங்க செஞ்சது
வெளையாட்டுப்பா.. அது செமெ ஜாலி.
ஒரே செய்கை.. வேலை என்றால் கசக்கிறது. விளையாட்டு என்றால் இனிக்கிறது.. இப்பொ
நம்ம விளையாட்டா ..ஜாலியா Construction Management & Rate Analysis பாக்கலாமா??? – ன்னு கேட்டேன்.
பசங்க குஷி ஆயிட்டாங்க…
யாருக்காவது ஜூன் மாதத்தில் பிறந்தநாள் வருதா? ன்னு கேட்டேன். இன்னெக்கி Birthday Baby ன்னு
மொத நாள் தூங்கி வழிந்த நிகோபாரி பெண் எழுந்தாள். வாழ்த்தி விட்டு ஜூன் ஆளைத்
தேடினேன். ஜுன் முதல் நாள் பிறந்த நாள் வரும் பெண் கிடைத்தாள்.
கலர் பேனாவை கையில் குடுத்து… உன்னோட பிறந்த நாளை ரொம்ப சிறப்பா கொண்டாட முடிவு
செஞ்ச்சிட்டோம்.. என்னென்ன செய்யனும்?? உங்க டீமோட சேந்து லிஸ்ட் போடும்மா அந்த ஒயிட் போர்டில்-என்றேன்.
மட மடவென்று நண்பர்கள் எல்லாரும் ஒவ்வொன்னா சொல்ல..20 ஐட்டம் வந்து விட்டது. இன்னொரு
பையனை அழைத்து இதை கொஞ்சம் முன்னாடி பின்னாடி எதை செய்யனும்னு பாரேன்- என்றேன்..
Predecessor & Successor சமாச்சாரத்தை லேசா திணித்தேன்.. Network Diagram அவர்களையே போட வைத்தேன்..
பிறந்த நாள் கொண்டாட்டத்தை பாதியில் நிப்பாட்டி அப்படியே ஒரு Building Construction க்கு தாவினேன்.. 75 பசங்களும் கூடவே வந்தாங்க.. அப்படியே ஜாலியா MS Project Software ல் அதை
போட்டு காண்பிக்க.. ஜாலியா ரெண்டு மணி நேரம்…
இதே மாதிரி அடுத்த டாபிக்… நேரே காங்கிரீட்டுக்கு Rate Analysis பாக்கப் போகாமெ.. முட்டை ஆம்லெட் என்ன விலைன்னு கேட்டேன்.
பத்து ரூபான்னு பதில் வந்தது.
பத்து ரூபா நியாயமான ரேட் தானா?? பாக்கலாமா என்றேன்.. சரி என்று பதில் வந்தது.
ஒரு ஆம்லெட்டுகக்குப் பதிலா, 10 ஆம்லெட் தயார் செய்ய Material, Labour, Mechinary என்று
பசங்களிடம் கேட்டு பசங்களையே எழுத வச்சி.. Profit, Watercharges எல்லாம் சேத்து 9ரூபா 88 பைசா வந்தது.
Say 10 ரூபா என்றேன். ஒரு கை தட்டல் வந்தது.
அப்படியே காங்கிரீட்டுக்கு வந்து..பின்னர் MS Excel வைச்சி வித்தை காண்பித்தேன். வகுப்பு முடிந்த போது எல்லா பசங்களும் எந்திரிச்சி நின்னு கை தட்டினாங்க.
இரண்டாம் நாள் வகுப்பும் இப்படியே முடிய… கிளம்பும் நேரத்தில்..சார் ஒரு நிமிடம் என்று அழைப்பு வந்தது. பசங்க எல்லாம் சேந்து உங்களுக்கு ஒரு கிஃப்ட் தர்ராங்க..வாங்கிக்கனும் என்று வேண்டுகோள்..
பரிசு கொடுத்தது யார் தெரியுமா? முதல் நாள் தூங்கி வழிந்த அதே நிகோபாரி ஆதிவாசிப் பெண்தான்..
மனசு நிறைந்த நேரம்.. அதைவிட ஆச்சரியம்.. உள்ளே இருந்தது ஒரு…. காமாட்சி விளக்கு.
அவர்களுக்கு வெளிச்சம் வந்ததா இதை வச்சிக்கலாமா??
நீதி : துவைப்பார் துவைத்தால் எல்லா கறையும் கரையும். அப்படி இல்லாட்டி.. கறை நல்லது – ன்னு
சொல்லிட்டு போக வேண்டியது தான்.
அந்தமானிலிருந்து
கிருஷ்ணமூர்த்தி