சாதாரனமாக வசனம் என்று பேசப்பட்ட ஒரு சங்கதி இப்போது, பஞ்ச்…டயலாக்…, குத்து வசனமாக மாறி விட்டது. அந்தக் காலத்துலெயும் இந்த மாதிரி குத்து வசனங்கள் இருக்கத்தான் செஞ்சது.
ஓடினாள் ஓடினாள்…இப்படி யாராவது ஆரம்பித்தால், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் என்று கண்டிப்பா யாராவது முடித்து விடுவார்கள்.. அந்த அளவுக்கு பாப்புலரான வசனம் அது.
சபாஷ் சரியான போட்டி என்பது இந்த ரகம் தான்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்…
நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி…
சிங்கம் சிங்கிளா வரும் போன்றவை ரஜினி மூலம் பிரபலமான குத்து வசனங்கள்.
இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் என்று ஒரு அசத்தல் காமெடி படம் … அதில் ஓர் ஆதிவாசி பெண் கல்யாணம் வரும். கல்யாணத்தின் பிறகு கலங்கி ஒரு டயலாக் வரும். அதை ஆதிவாசி மொழி தெரிந்தவர் மொழி பெயர்ப்பார்.
முதல் மொழிபெயர்ப்பு இப்படி வரும்: “நான் என் கண்ணையே ஒங்கிட்டே ஒப்படைக்கிறேன்”அடுத்த வரியை மொழிபெயர்த்து சொல்லும் முன்…அது எனக்கு தெரியும் “அதுல நான் எப்போவும் ஆனந்தக் கண்ணீரைத்தான் பாக்கனும்” என்று முடிப்பார்.
அட… ஆதிவாசி பாஷை தெரியுமா?? என்று முழிப்பாய்ங்க…
இந்த காலத்து வாண்டுக கூட இந்த டயலாக்கை பிச்சி உதற்றாங்க…
சமீபத்தில் என்னோட பொண்ணை போர்டிங்க் ஹாஸ்டல்லே சேத்துட்டு வரும் போது… அங்கே ஹாஸ்டலில் இருக்கும் வாண்டுகள் “அங்கிள்…உங்ககண்ணை எங்க கிட்டே குடுத்திட்டீங்க… நாங்க அதுலே ஆனந்தக் கண்னீர் வர்ர மாதிரி பாத்துக்குவோம்” னு தூள் கிளப்புறாய்ங்க… என்னத்தே சொல்ல…??
இன்னும் இதே மாதிரி பாப்புலரான ஒரு சூப்பர் டயலாக் இருக்கு….”போகனுன்னு தான் தோன்றது..ஆனா எங்கே போவனும்னு தோணலையே….நேக்கு யாரைத் தெரியும்…”
சென்னைக்குப் போய் லோல் படுவதற்கு முன்னால் விவேக் ஒரு படத்தில் அடிக்கும் டயலாக் ஒன்று…வீட்டை விட்டு போகும்படி சென்னவுடன்…அழுத முகமா வச்சிட்டு..” அப்படி மட்டும் சொல்லிடாதீங்க…எனக்கு யாரைத் தெரியும்????…”… திடீர்னு குரல் மாத்தி…”அப்படி மட்டும் சொல்லுவேன்னு பாக்காதீங்க… சென்னைக்கு போறென்” என்று வரும்…
ஏதாவது ஏடாகூடமாகவோ… அல்லது நல்லதோ சொல்லி விட்டு…இப்படி எல்லாம் இல்லை என்று சொல்லும் வித்தையில் விவேக் கலக்குவார்…
அது சரி… கொஞ்சம் இருங்க… பேஸ் புக்கில் ஒரு Notification வந்திருக்கு பாத்திட்டு வர்ரேன்…
அடடே… கம்பர் ஒரு போஸ்ட் செஞ்ச்சிருக்கார்… ஓ கே… இந்த விவேக் மேட்டரையும் கம்பர்கிட்டே கேக்கலாமே… இந்த சித்து விளையாட்டை அவர் செஞ்ச்சிருக்க மாட்டாரா என்ன???
கேட்டவுடன் பதில் வந்தது…
கம்பன்ன்ன்டா….
இராவணனுக்கு ஏதாவது ஆப்பு வைக்கனும்னா…அது யாரால முடியும்?? இது கேள்வி.
பதிலுக்கு கம்பர் சொல்லும் பதில் என்ன தெரியுமா???
புலித்தோலை சர்ட் மாதிரி மாட்டியிருக்கும் சிவன்
பீதாம்பரம்..அதுவும் பொன்னாலானது…ஆடையா வச்சிருக்கும் விஷ்ணு..
தாமரைப் பூவில் குந்தியிருக்கும் பிரம்மன்
இவங்களால் தான் ஆப்பு வைக்க முடியும்…என்னு நெனைச்சா…அது
தான் இல்லை.
கம்பர் பண்ற சேட்டை பாத்தீங்களா???
பாட்டும் பாக்கலாமா??
புலியின் அதன் உடையானும் பொன்னாடை புனைந்தானும் பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்;
இந்த அல்லர் இல்லாம படிச்சா… வேற அர்த்தம்…அதோடு படிச்சா வேறு ஒரு அர்த்தம்…
கம்பர் கூட அந்த காலத்தில் விவேக் மாதிரி காமெடி செஞ்ச்சிருக்காரே…
இன்னும் தேடுவேன்…