மதுரெக்காரெய்ங்களே போதும்….


vadi mdu

எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.

ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.

இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.

அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?

குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…

இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”

இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..

மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..

சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.

ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…

அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???

அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…

குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.

என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?

ஒரு பெண்ணின் மனசெத் தொட்டு…


அந்தமானில் ஒரு காலத்தில் நான்கைந்து சினிமா தியேட்டர்கள் இருந்தன. காலப்போக்கில் திருட்டு விசீடிக்களும், நூற்றுக்கனக்கான சேனல்களும் வீட்டிற்கே வந்துவிட, எல்லா தியேட்டர்களும் மூடப்பட்டுவிட்டன. இப்போது மறுபடியும் தசாவதாரம், விஸ்வரூபம் மாதிரியான படங்களை தியேட்டர் எஃபெக்ட்களுடன் பார்க்க வேண்டிய சூழல் வந்துவிட, தற்போது ஒரு சினி காம்ப்ளெக்ஸ் வந்துள்ளது. டிக்கெட் 160 ரூபாய் என்பதை அதிகம் என்கிறார்கள் இத்தீவு மக்கள். பெங்களூர் மால்களின் டிக்கெட்டை விட குறைவு என்றால் யாராவது கேக்கிறாகளா? (ஆமா… மந்திரிமாலில் எவ்வளவு டிக்கெட்? என்று கேட்றாதீங்க… நம்ம பெங்களூர் தோஸ்த் கிரியோட காசில் படம் பாத்ததை எதுக்கு வெளியிலெ சொல்ல??)

சரி நாமளும் புது தியேட்டரை ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் குடும்பத்தோடு. 2 ஸ்டேட் ஹிந்தி படத்துக்கு. சென்னை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிக்குப் பிறகு அதே போன்ற “தமிழ்” கதாநாயகி கதைகளில் வந்துள்ள மற்றொரு படம். ஆனால் ஹாஸ்டலில் ஹீரோயினும் ஹீரோவும் ஒன்றாய் படுத்து உருள்வதும் நிரோத் வரைக்கும் காண்பிக்கும் போது குடும்பத்தோடு பாக்க நெளிய வைக்கிறது. வீட்டிலாவது ரிமோட்டை தேடலாம். பாக்யராஜ் மாதிரி காசு போட்டு தேட வைக்கவா முடியும்?

சின்னத்திரையில் படம் பார்க்கும் போது வேறுபல சிக்கல்களும் வரும். சமீபத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கவிதை பாடியதாகச் செய்திகள் சொன்னது. கூட இருந்த வீட்டுக்காரி, ”நீங்களும் தான் கவிதை எழுதுவீங்களே…எங்கே இத்தனை வருஷத்திலே, எனக்காக ஒரு கவிதையாவது எழுதி இருக்கீங்களா?” இப்பெல்லாம் கவிதை வடிவத்தில் கூட வில்லங்கம் வருவதை யாரால் தடுக்க முடியும். நீயே ஒரு கவிதை… உனக்கெதற்கு கவிதை? – இப்படி நாசூக்காய் முடித்தேன்.. அப்படியே மதுரையில் பள்ளிக்கூட அசிரியையாய் இருந்தவர் அந்தமானுக்கு வாழ்க்கைப்பட்ட கதையையும் பாக்கலாமே.. அது ஒரு கரும்பு ஜூஸ் குடிக்கப் போய் கல்யாணத்தில் முடிந்த கதை.

எனக்கு கல்யாணம், என்ற பேச்சை எடுத்தவுடனேயே, நான் என் பெற்றோறிடம் வைத்த முதல் வேண்டுகோள், அந்தமான் தீவுக்கு ஏத்த பொண்ணா பாருங்க என்பதைத்தான். அதற்காய் அவர்களை முதலில் அந்தமான் வரவழைத்தேன். மூன்று நாள் (மூன்றே நாள் தான்) பெரிய கப்பலிலும், மூன்று நாள் (மறுமடியும் மூனு நாளா….) சிறிய கப்பலிலும் பிரயாணித்து கமோர்ட்டா தீவை அடைந்தோம். ஓரிரண்டு கிலோமீட்டர்கள் மட்டுமே ரோடு உள்ள அழகான ஆதிவாசிகள் வசிக்கும் தீவு. (அம்பு ஈட்டி எல்லாம் இல்லாமல் அன்போடு பழகும் நிகோபாரி இன மக்கள்) இந்த ஊருக்கு வாழத் தகுந்த மாதிரியான ஆளைப் புடிங்க என்றேன்.

கையோடு ஒரு போட்டோவைக் கையில் கொண்டு வந்திருந்தார்கள். சமயம் பாத்து என்னிடம் காட்டினார்கள். பார்த்தவுடன் சொல்லிவிட்டேன், ”இவ, இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா” என்று வடிவேலுவிடம் சொல்வது போல். அந்தப் போட்டோவில் இருந்த பெண் ரொம்ப ஹைஃபை… (வை ஃபை எல்லாம் இல்லாத காலக் கதைங்க இது). அதெல்லாம் எப்படி தெரியும் என்று கேக்கறேளா? நாம சைட் அடிச்ச பொண்ணுங்களைப் பத்தி நமக்குத் தெரியாதா என்ன?

பரமக்குடியில் எவ்வளவு தான் படித்த நல்ல பொண்ணுங்க இருந்தாலும், மதுரைக்குப் போய் பொண்ணு எடுப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல். அப்படியே மதுரையில் தேடுதல் வேட்டை ஆரம்பமானது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் வெயில். வேகாத வெயிலில் கீழவாசல் சந்திப்பில் கரும்பு ஜூஸ் குடிக்க ஆசை வந்தது. அருகிலேயே உறவினர் வீடும் இருப்பதால், அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, கரும்பு ஜூஸும் குடித்து பெண்வேட்டை தொடர முடிவானது. உறவினர் வீட்டில், யாரும் இல்லை. அவர்களின் கணக்குப்பிள்ளை இருந்தார். இப்போதைய சீரியலில் வரும் அப்பா வேடத்துக்குக் கச்சிதமாய் பொருந்தும் முகம். பொறுப்பாய் அவர் தான், வந்த வேலை பற்றி விசாரித்து அனைவருக்கும் கரும்பு ஜூஸ் பரிமாறினார்.
கையில் உள்ள ஜாதகம் எல்லாம் சேராமல் போன சோகக்கதையை அவரிடமும் விவரித்தோம். ”என்கிட்டெ ஒரு ஜாதகம் இருக்கு. அதை வெண்டுமானாலும் சேருதான்னு பாருங்களேன்…” என்றார் பவ்யமாய். கன கச்சிதமாய் பொருந்தியது. அவர், தன் மகளின் ஜாதகம் தான் கொடுத்திருந்தார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. (இது தான் சந்திலெ சிந்து பாடுவது என்று சொல்வதோ).. ஏதொ ஒரு கரும்பு ஜூஸில் ஜாதகப் பொருத்தம் ஆகிவிட்டது. முழுப்பொருத்தம் நன்னாரி சர்பத்தில் நடந்தது.

சம்பிரதாயமாய் பெண்பார்க்கும் படலம் முடிந்த அடுத்த நாள், பெண்ணை அவர் வேலை பார்க்கும் பள்ளியில் போய் சந்தித்து, விலாவாரியாய் கமோர்ட்டா தீவு பற்றி தெரிவித்தேன். அந்த உண்மை பிடித்திருந்தது போல் தெரிந்தது. நன்றாக யோசித்து முடிவு சொல்லவும் அவகாசம் கொடுத்தேன். ஏதாவது குடிக்கலாமே… நன்னாரி சர்பத் நம்மை இன்னும் புரிய வைத்தது. சர்பத் தீரும் வரை பேச நேரம் கிடைத்தது. (சர்பத் காசு அந்த ஆசிரியை தான் தந்தார் என்பது ஆச்சரியமான செய்தி) தண்ணியில்லாக் காடு என்பதை சற்றெ மாற்றி தண்ணியுள்ள காட்டிற்கு வர சம்மதம் சொன்னது இதமாய் இருந்தது மனதிற்க்கு..

என்னுடைய திருமண நாள் பற்றி ஃபேஸ்புக்கில் போட்ட போது புதுதில்லி வாழ் சேகர் அவர்கள், கம்பர் திருமண நாள் பற்றி ஏதும் சொல்லவில்லையா என்று கேட்டார். காட்டுவாசம் என்பதை அறிந்தும் கல்யாணத்திற்கு முன்பே என்னுடன் வர் சம்மதம் சொன்னவர் என் இனிய பாதி. அவரைப்பற்றி சொல்ல ஒரு சந்தர்ப்பமாய் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இப்படி காட்டுவாழ்க்கைக்கு தயாரான என் துணைவியாரை நினைக்கும் அதே நேரத்தில், அப்படியே கம்ப காவியத்திலும் ஒரு காட்டுப் பயணம் எப்படி முடிவாகின்றது என்று பார்க்கலாம். கைகேயி வரத்தில் இராமன் தான் காட்டிற்குச் செல்ல வேண்டும். மனதிற்குள், இலக்குவன் போனாலும் சரி என்று நினைத்து ரெண்டு ஜோடி டிரஸ் கொடுத்து அனுப்புகிறாள் கைகேயி. அப்போதும் கூட சீதையினை காட்டுக்கு அனுப்பும் யோசனையே இல்லை. இராமனும் தனியே போகலாம், சீதையால் இந்த காட்டுவாசம் தாங்க இயலாது என்பதாய் பதில்சொல்ல…அப்படி யோசிக்கும் போதே, சட்டுன்னு உள் சென்றாள் சீதை.. மரவுரியை அணிந்தாள் (எதுக்காவது பேன்ஸி டிரஸ் போட்டிக்கு உதவும் என்று அதையும் சீதை வாங்கி வச்சிருகுமோ?). திரும்பி வந்தாள்.. தொடர்ந்தாள்… கம்பர் வரிகள் தொடர்கிறது.

அனைய வேலை அக மனை எய்தினள்
புனையும் சீரம் துணிந்து புனைந்தனள்
நினைவின் வள்ளல் பின் வந்து அயல் நின்றனள்
பனையின் நீள் கரம் பற்றிய கையினாள்

வேறு ஏதாவது கேள்விகள் யாராவது கேட்டால், அதன் பதிலையும் கம்பனிடம் கேப்போம்.

மூக்கறுப்பது எங்கள் குலம்…


கவிதையே பாடலாக என்று ஒரு குறுந்தகடு வெளி வந்தது. வைரமுத்துவின் கவிதைகளை அவர் மேடையில் படிக்க, கலைஞர்.. வாலி.. போன்ற ரசிகர்கள் முன்னிலையில் அதையே பாடலாய் பிரபல பாடகர்கள் பாடி வலம் வரும் இசைத் தொகுப்பு தான் அது. அதில் மதுரையினை மாமதுரை என்று, கலைஞரை புகழ்வது போல் புகழ்ந்து தள்ளிவிட்டு கடைசியில் வைகை வற்றிப் போனதையும், ரசிகர் மன்றம் அதிகமானதையும், ஜாதிச்சண்டைகள் அதிகமானதையும் சோகமாய் தந்திருப்பார் கவிதையாகவும் பாடலாகவும்.

காதலும் வீரமும் தான் தமிழனின் உடன்பிறவா உடன்பிறப்பு. அப்பொ, ’மதுரைக்கும் வீரத்திற்கும் தொடர்பு இருக்கா? இல்லையா?’ என்ற பட்டிமன்றம் வைத்தாலும் ரெண்டு பக்கம் பேசவும் அதே மதுரைக் காரங்களைத் தான் கூப்பிடனும். மதுரையில் பெண் எடுத்த எனக்கு, மதுரையின் வீரம் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும்.

அந்தக் காலத்து ஏபி நாகராஜன் இயக்கத்தில் வந்த திருவிளையாடல் படத்தில் வந்த டயலாக் ஒன்று, அநியாயத்துக்கு இப்பொ ஞாபகத்துக்கு வந்து நிக்குது. சும்மா சொல்லக்கூடாது தமிழன் தைரியமானவன் தான். ஆனா அந்த மதுரைக்காரத் தமிழன், கடவுள் கிட்டேயே தன் தைரியத்தைக் காட்டியவர். ஆனா சந்தடி சாக்கில் சாமிக்கே குலம் பத்தி பேசி, குழப்பும் தைரியசாலிகள். அப்படத்தில் நக்கீரன் பாத்திரம் வழியாய் வரும் டயலாக் தான் நான் சொல்ல வருவது. “சங்கறுப்போர் எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம், உன் போல் இரந்துண்டு வாழோம்…” இப்படி கடவுளுக்கே சவ்டால் விடும் தைரியம் நம்மாட்களை விட்டால் வேறு யாருக்கும் வராது. உண்மையில் நக்கீரன் அப்படிச் சொன்னாரா? அல்லது ஏபிஎன் விட்ட சரடா?

லேசா கிளறித்தான் பாக்கலாமே என்று பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (எஸ் எஸ் மாத்ரு பூதேஸ்வரன் எழுதியது) புரட்டிப் பாத்தேன். தருமிக்கு பொற்கிளி அருளல், கீரனைக் கரையேற்றிடல், கீரனுக்கு இலக்கணம் உபதேசித்திடல் என்று மூன்று திருவிளையாடல்கள் ஒட்டித்தான் அந்த நாகேஷ் சிவாஜி புராணம் செய்யப்பட்டிருக்கின்றது. சினிமாவில் வீராப்பாவாய் காட்டப்படும் நக்கீரர் உண்மையில் அப்படித் தெரியவில்லை. தமிழ் இலக்கணம் சரியா தெரியாத காரணத்தால் சிவனை எதிர்த்ததாய் வருகின்றது.

சிவனின் கோவத்துக்கு இன்னொரு சூப்பர் காரணம் சொல்கிறார்கள். ஒரு சமயம் தேவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் வந்து நிக்க, கொடெ சாஞ்சி போச்சாம் பூமி. அப்போ அகத்தியரை நிமித்த அனுப்பினாராம் சிவன். லாங்குவேஜ் பிராப்ளம் வராமெ இருக்க தமிழ் இலக்கண கிராஷ் கோர்ஸ் எடுத்து அனுப்பப் பட்டாராம். இப்படிப்பட்ட தமிழ் யுனிவர்சிட்டியின் வைஸ் சான்ஸ்லர் – விசி எழுதின பாட்டை வீசிட்டு குத்தம் சொன்னா, விடுவாகளா?? அப்புறம் அதே அகத்தியரை டியூசன் மாஸ்டரா ஆக்கி நக்கீரர்ருக்கு நல்ல தமிழ் சொல்லிக் கொடுத்து, ஏற்கனவே எழுதின பாட்டெல்லாம் திருத்தி எழுதினாராம்.. சூப்பரா இருக்கில்லெ கதை…

எதுக்கு இவ்வளவு வருஷம் கழிச்சி இந்த மேட்டர் எல்லாம் தோண்டி எடுத்து ஏன் பழைய ஆட்களின் மூக்கறுக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? சும்மா இந்த மூக்கறுப்பு பத்தி இராமயண ஆச்சாரியர்கள் கம்பரும் வால்மீகியும் எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்று ”பர்வால்” இராமாயணம் என்று நானும் கொஞ்சமாய் சரடு விடத்தான். (இதெ எழுதவே இப்படி நீட்டி முழக்குறப்போ, எத்தனை நூற்றாண்டு காலமாய் தொடர்ந்து வரும் தொடர்கதையில் அப்படி இப்படி மாற்றங்கள் இல்லாமலா இருக்கும்??) அதை சொல்லத்தான் இவ்வளவு சுத்தி சுத்தி வர்ரேன்.

தாடகை இருக்கும் வனத்திற்கு அழைத்து வருகின்றார் விசுவாமித்ரர் இராம இலட்சுமணர்களை. அந்த வனத்தின் பெயரே தடகாவனமாம். (காரணப் பெயராய் இருக்குமோ?). சிங்கம் புலி எல்லாம் வாழும் செம காடு என்கின்றார் வால்மீகி. நம்ம கம்பர் அதை லேசா மாத்திவிட்டு, மருத நிலமாய் (வயலும் வயல் சார்ந்த இடமாய்) இருந்தது இப்போது பாலை நிலமாய் மாறியதாய் கவிதை பாடுகின்றார். அப்படி மாற்றியவள் தாடகை என்பதையும் கம்பர் சொல்லத் தவறவில்லை. “.. கேடி இலா வளப்பரு மருதவைப்பு அழித்து மாற்றினாள்” – இது கம்பர் வாசகம்.
தாடகையைக் கொல்ல வேண்டும் என்று விசுவாமித்ரர் சொன்னதும், ஒரு பெண்ணைக் கொல்வதா என்று யோசித்தாலும், அவள் வரும் எப்பெக்டைப் பாத்ததும் கொஞ்சம் மனசு இரங்கி (அல்லது மேலே போய்..) ”சொன்ன பேச்சு கேக்காட்டி காது மூக்கை அறுத்து கையிலெ கொடுத்திடலாம்” என்று இராமன் திருவாய் மலர்ந்தருளியதாய் வால்மீகியின் ஆக்கத்தில் வருகின்றது. முற்றிலும் ராமனைக் கடவுளின் அவதாரம் என்று காட்ட நினைத்த கம்பரின் வார்த்தையில் இந்த டயலாக் மிஸ்ஸிங்.

அப்படிச் சொல்லிய போதும் தாடகை கற்களையும் பாறைகளையும் ஆகாயத்தில் பொழிந்தாள் என்பதாய் வால்மீகி லேசா டச் செஞ்சிட்டு தவம் செய்யப் போய்விடுகிறார். ஆனா கம்பர் அதை அப்படியே பின்னிப் பெடலெடுத்துக் காட்டுகின்றார். தாடகை, மலைகளையே பரல்களாய் கோர்த்த சிலம்பு அணிந்தவளாம். அவள் நடந்தால், தரையே நெளியுமாம். அந்தக் குழிகளில் கடல் நீர் பாயுமாம். எமனே இவளைப் பாத்தா ஓடியே போவானாம். இவளின் வேகத்தால் மலையெல்லாம் கூட இவளோடு சேர்ந்தே வருமாம்.. எப்படி?? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.. கம்பரோடு சேர்ந்து.

நமக்கெல்லாம் மூக்கறுத்தது சூர்ப்பனகை வரும் போது தான் தெரியும். அதுவும் இலக்குவன் செய்தது என்று. (இது பற்றிய அலசல் அப்புறமா வச்சிக்குவோம்). தாடகை வதம் நேரும் பொது மூக்கை அறுப்பேன் என்று சூளுரைத்த்து என்னவோ இராமர் தான். ஆனால் அதை நடைமுறைப் படுத்தியது உடன்பிறப்பான இலட்சுமணன் தான். இராமனைக் கொல்ல வந்தபோது இலட்சுமணன் தடுத்து அவளின் காதுகளையும் மூக்கையும் அறுத்தான் என்று மூக்கறுபட்ட சேதியினை முணுக் என்று கோபம் கொப்பளிக்கும் முனி (விசுவமித்ரர்) முன் செய்ததாய் வால்மீகி சொல்கிறார்.

கம்பர் ஏனோ தெரியவில்லை இந்த மூக்கறுப்புக் காட்சியினை (வரம்பு மீறல் என்று நினைத்தாரோ என்னவோ?) சென்சார் செய்து விட்டார். இவ்வளவு அகோரமான காட்சியை நல்ல மெஸேஜ் ஒன்று குடுத்து பில்டப் செய்கிறார் நம்ம கம்பர். கருப்பான இராமனின் அம்பு, முனிவர்களின் சாபச் சொல் போல் வேகமா வந்திச்சாம். அது இருள் மாதிரியா இருக்கும் (பயங்கரக் கருப்பா) தாடகையின் மார்பில் (வைரம் பாய்ஞ்ச ஒடம்பு என்றும் வருது) அம்பு புகுந்ததாம். பின்புறமா ஓடிப் போயிடுச்சாம். இத்தோடு உட்டாரா நம்மாளு? கல்வி கற்காத இழிந்தவர்களுக்கு, கற்று உணர்ந்த நல்லவர்கள் சொன்ன அறிவுரை போல் பின்புறமாய் விழுந்து விட்டதாம். கம்பர்…. கம்பர் தான்… வால்மீகி வால்மீகி தான்..

பர்வால் அலசல்கள் தொடரும்.

பாஸ் என்ற இமேஜ்


இந்த இமேஜ் படுத்துற பாடு.. பெரும் பாடுங்க… அது என்ன இமேஜ்? என்று யாராவது கேட்டா, பதில் சொல்றதும் கஷ்டம் தான், (இதுவும் இந்த ஈகோ மாதிரி அல்லது ஆன்மா மாதிரி தான். யாரவது சீரியஸா சொல்றச்சே புரியற மாதிரி இருக்கும், அப்புறம் புரியாத மாதிரியும் இருக்கும்). அவனவன், அவனவன் மேலே மனசிலெ வச்சிருக்கிற ஒரு பெரிய்ய (சில சமயம் கற்பனையான, தெளிவில்லாத) அபிப்பிராயம். இப்படி ஒரு Defition ஓகேவா? (ஆமா… இந்த மாதிரி definition சொல்றப்பொ பிராக்கெட் allowed தானா?)

மாதவன் ஒரு படத்திலெ இப்படித்தான் லேட் நைட்டிலெ ராமேஷ் கண்ணா சகிதமா, வீட்டுக்கு ரெண்டு ஃப்ரண்டுகளைக் கூட்டிட்டுப் போவாரு, பயங்கரமா இமேஜ் பில்டப் செஞ்சிட்டு. தன்னோட மனைவி (ஜோதிகாங்க..) தனக்காக காத்திருந்து, அப்புறம் தான் சாப்பிடுவா என்று சொல்லி அழைத்து வருவார் அந்த ஹீரோ. ஆனா வந்து பாத்தா, எல்லாம் உல்டாவா இருக்கும்? “ஏங்க.. வழக்கம் போல, நீங்களே எடுத்துப் போட்டு சாப்பிடுங்க” என்ற அசரீரி வீட்டுக்கு உள்ளே இருந்து ஹீரோயின் வாயிலாக வந்து, கொஞ்ச நஞ்சம் இருந்த இமேஜையும் போட்டுப் புதைக்கும்.

நண்பர்கள் போனவுடன் தான் வரும், அந்த சீனின் கிளைமாக்ஸ்.. “என்னங்க…, வீட்லெ கல்யாண வயசுலெ பொண்ணெ வச்சிட்டு, இப்படி கண்ட நேரத்திலெ, கண்ட பசங்களை குப்பிட்டு வந்தா, அப்புறம் அந்த பொண்ணு கலயாணத்திலெ இமேஜ் கெடாது?“ மாதிரி ஒரு டயலாக் போட்டு, கதாநாயகி இமேஜை சூப்பரா துக்கி பிடிச்சிருப்பாரு அந்த டைரக்டர். (இப்பொ சொல்லுங்க… என்னாலெ அந்த டைரக்டரோட இமேஜும் கொஞ்சம் மேலெ ஏறி இருக்குமே??).

வீட்டிலெ மதுரையா? சிதம்பரமா? என்ற பிரச்சினை வீட்டிலெ இருக்கோ இல்லையோ, மற்றவர்கள் அதை உன்னிப்பா கவனிப்பார்கள். நானும் அந்த ஜாதி தாங்க. ஒரு பள்ளி ஆசிரியரை இது விஷயமா உத்துப் பாத்து, ஒரு நாள் கேட்டேன். ”என்னங்க… என்ன செய்றதா இருந்தாலும் அம்மனியே அம்சம்னு இருக்கீகளே?” என்று. வந்த பதில் சூப்பர். நாம ஏதாவது சொல்லி தப்பா ஆயிட்டா, காலம் காலமா அதைப் போட்டு, நம்மளெ தாளிச்சிட்டே இருப்பாங்க. ஆனா, அதே அவங்க முடிவாலெ இருந்தா, வீடு அமைதியா இருக்கும். (அப்பொ கூட அவராலெ தாளிச்சிக் கொட்ட முடியாது என்பது தான் அவர் சொல்லாது விட்ட உண்மை). இது தான் நல்ல குடும்பத்தின் வெற்றி இமேஜின் ரகசியம். (எங்க வீட்லெ மதுரையா??? இப்படி யாரும் கேட்றாதீங்க?? அவங்க மதுரைக் காரங்க… எதுக்கு மதுரெ இமேஜ் பத்தியெல்லாம் இப்பொ யோசிக்கனும்?)

ஜெட் வேகம்.. மனோ வேகம் எல்லாம் கேள்விப் பட்டிருப்பீங்க.. ஆனா என்னெக் கேட்டா இமேஜ் வேகம் ஒன்னும் இருக்குங்க. அதோட வேகம் கண்டிப்பா உங்க வேகத்தை விடவும் அதிக வேகமா இருக்கும். அதாவது நீங்க ஒரு எடத்துக்குப் போயி சேர்ரதுக்கு முன்னாடி ஒங்களைப் பத்தின இமேஜ் போய்ச் சேர்ந்திடும். அது, ”எந்த அளவுக்கு சரியான இமேஜ்?” என்பது காலப் போக்கில் தான் தெரியும்.

இப்படித் தான் லிட்டில் அந்தமான் தீவிற்க்கு தில்லியில் இருந்து ஓர் உயர் அதிகாரி வந்தார். இங்கிருக்கும் இராணுவப் படையிலிருந்து இரவு உணவிற்க்கு அழைப்பு வந்தது. அவர்கூட இருப்பதால், கூட்டி வர ஏதுவாய் எனக்கும் அழைப்பு (போனாப் போகுதுன்னு) வந்தது. அவருக்கு அங்கு போக இஷ்டமில்லெ. அவர் உற்சாகபானம் பக்கம் போனதில்லை. அசைவமும் அவருக்கு அலர்ஜியாம். என்னிடம் சொன்னார். நானும் Non Veg சாப்பிட மாட்டேன். நீங்களும் அப்படித்தான். சரக்கு எனக்கு ஆவாது. நீங்களும் தொட மாட்டீங்க…(அதெப்படி… என்னோட இமேஜ் இப்படி தாறு மாறா டெல்லி வரைக்கும் தப்பா பரவி இருக்கு என்று இன்று வரை புரியவில்லை).. உங்க முயற்சி இல்லாமலும் சில நேரங்களில் இமேஜ் வளரும்… பரவும்.. ஜாக்கிரதையா இருங்க.

ஆபீசில் யாருக்கவது மெமொ குடுத்தால் அந்த நபர்க்கு கை கால் எல்லாம் நடுங்குவது எதனால்? தங்கள் இமேஜ் கெட்டுப் போகுமோ என்ற பயத்தினால் தான். (சிலபேரு அதை வாங்கி ”வடெ போச்சே” டயலாக்குக்கு முன்னாடி தூக்கிப் போட்ற பேப்பர் மாதிரி தூக்கியும் கெடாசுவாங்க..) தான் ஒரு மெமொ கூட வாங்கியதில்லை என்று ஒருவர், தன்னோட ரிட்டயர்மெண்ட் தினத்தில் பெருமையாப் பேசினார். (ஒரு வேளை மெமொ கொடுக்கத் தெரியாத ஆளுக கிட்டேயே முழு சர்வீசும் கழிச்சிருப்பாரோ?)

இந்த மாதிரி இமேஜ் மோதல்களைத் தவிர்க்க சில ஏற்பாடுகள் உள்ளன. ஓர் ஊழியரைத் திட்டனுமா? தனியா கூப்பிட்டு கட்டி ஏறுங்க.. (அவனும் திருப்பி ஏறினா, அப்பொவும் உங்க இமேஜுக்கு எந்தக் குந்தகமும் வராது). அதே சமயம், அதே ஆளை பாராட்டனுமா? நாலு பேத்துக்கு முன்னாடி கூப்பிட்டு ஒரு சபாஷ் போடுங்க… (ஆனா முக்கா வாசிப் பேருங்க, சபாஷ் சொல்றதுக்கு மூக்காலெ அழுவானுங்க… ஆனா திட்றதெ மட்டும் நாலு பேருக்கு முன்னாடி செய்வாய்ங்க…) ம்…அது தான் அவங்க இமேஜ் என்று விட வேண்டியது தான்.

கம்பரிடமிருந்து ஒரு SMS வந்தது. ”இந்த மாதிரி நீ எழுதுறதுனாலெ, என்னோட இமேஜ் என்ன ஆவுது?” கம்பர் இமேஜுக்கு சிக்கல் வந்ததோ இல்லையோ, எனக்கு கம்பர் இமேஜ் வந்திடுச்சி… ”இதெப்பத்தி கம்பர்…” என்று கேட்கும் அளவுக்கு. எப்படியோ எனக்கு வந்த இமேஜை நான் காப்பாத்தியாக வேண்டும். சரி… கம்பர், இமேஜ் பத்தி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ன? அவர் நேரடியா சொல்லலை.. மறைமுகமா இருக்கு. (அது தான் கம்பன் சொல்லின் ஸ்பெஷல் மெஸேஜ்)

தாயைத் தேர்ந்தெடுக்கும், தந்தையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு எப்படி இல்லையோ, அதே மாதிரி உங்கள் ”பாஸ்” மேலதிகாரி, முதலாளி, மேலே இருப்பவர் எப்படி இருக்க வேண்டும் என்றும், நீங்க நிர்ணயம் செய்ய முடியாது. வந்து வாய்க்கிறதை அனுபவிச்சே தீரனும். ஆனா ஒன்னு.. நம்ம பாஸோட இமேஜை எந்த விதத்திலும் கீழே இறக்கி விடக் கூடாது. கம்பரின் ராமாயணத்தில் பாஸ் – ராமன்; ஊழயர் – அனுமன்.

ராமன் சீதைக்கு வைத்த அக்னி பரீட்சையில் அனுமனுக்கு அவ்வளவா இஷ்டமில்லை. (ராமனின் இமேஜ் ஏகமாய் அடி வாங்கும் இடம் வேறு அது). சீதை கற்போடு தான் இருக்கிறார் என்பதை நேரில் பாத்த ஒரே சாட்சி அனுமன். தான் சொன்னதை நம்ம பாஸ் சரியா நம்பலையோ என்ற கவலையும் ஒரு பக்கம். கம்பகாப்பியத்தில் நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கும் ”டோபி சார்” (சலவைத் தொழிலாளி) பேச்சு எல்லாம் கிடையாது. இராவணன் கதை முடிந்து, சீதையை சந்திக்கும் முதல் சீனில் அந்த அக்னி பரீட்சை நடக்கிறது.

அப்புறம் அயோத்திக்கு தகவல் தர, சரியான நெட்வொர்க் இல்லாததால், அனுமன் பரதனைப் பாக்க கிளம்புகிறார். பாஸ் சொன்ன சொல் கேட்டு. அங்கே பரதனிடம் அந்த ஊழியர், ராமனின் இமேஜுக்கு பிரச்சினை வராமல் அந்த அக்னி பரீட்சை பத்தி சொல்லாமல் சொன்ன சீன் பாருங்க….

”பகைவரின் ஊன் நுனியில் பொருந்தப் பெற்ற வேலையுடைய பரதனே! மாலை அணிந்த ராமன், பிரம்மா, சிவன், மயன் எல்லாரும் வாழ்த்த, தேவர்களின் தலைவியாகிய சீதையைப், பிறனிடத்தில் உயிர் வாழ்ந்ததால் சினம் கொள்ள, உடனே அக்னி வந்து அவளது கற்பின் சிறப்பைக் கூறிய அளவில் சினம் தணிந்தான்.” இது பரதனிடம் அனுமன் சொன்னது. சீதை அக்னியில் இறங்கியதை நாசூக்காய் மறைத்து, ராமனின் இமேஜுக்கு எந்தப் பங்கமும் வராமல் இருக்க, அனுமன் வாயிலாக கம்பர் சொன்னது. கடைசியில் கம்பராமாயணப் பாட்டு வருவது என் இமேஜ்… இதோ பாட்டு..

நான்முகன் விடையை யூரும் நாரி ஓர் பாகத்து அண்ணல்
மான்முகன் முதலாய் உள்ள வானவர் தொழுது போற்ற
ஊன் முகம் கெழுவு வேலாய் உம்பர் நாயகியைச் சீறி
தேன் முகம் மலரும் தாரான் அரி சொலச் சீற்றம் தீர்ந்தான்.

அதுசரி… இப்பொ யோசிச்சிச் சொல்லுங்க… எது உங்க இமேஜ்??

அங்க(male) வஸ்திரம்


கொஞ்ச காலம் முன்பு வரைக்கும், தாலி செண்டிமெண்ட் படங்கள் சக்கை போடு போட்டன. (இப்பொ எல்லாம் பிரமாண்டமான படங்கள் தான் வெற்றி பெறுகின்றன). ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் தாலியின் மகிமை, இப்படி காலாவதி ஆகிவிட்டதைப் பாத்தால் வியப்பாத்தான் இருக்கு. சமீபத்தில் ஒரு ரவுடி பலாத்காரமாய் தாலிகட்ட, அதை தூக்கி எறிய நாயகி வரும் போது, தாலி பற்றிய டயலாக் பீரிடும் படம் பாத்தேன். சிரிப்பாத் தான் இருந்தது. சாதாரன சாம்பு, சோப்புக்கு பயந்து தாலியைக் கலட்டி வைக்கும் இந்தக் காலத்தில்..??? பியூட்டி பார்லரில் தாலியை மாட்டி வைக்க தனி ஏற்பாடே இருப்பதாய் கேள்வி.. எட்டிப் பாக்க ஆசை தான். விட மாட்டேன் என்கிறார்களே!!

ஸ்டேட்டஸ் சிம்மள் பற்றி சூப்பரான ஒரு பதிவை இதயம் பேத்துகிறது ஜவஹர் எழுதி இருந்தார். கார், மொபைல் இதெல்லாம் எப்படி Status Symbol ஆனது என்று அந்தப் பதிவு பேத்துகிறது… சாரி..பேசுகிறது. என்னைக் கேட்டா (யாரு கேக்கிறா?) தாலியையும் இதில் சேத்துக்கலாம். மஞ்சள் கயிறில் ஆரம்பித்த அந்தத் தாலி, இப்பொ மஞ்சள் கலரில் ஜொலிக்கும் தங்கத்துக்கு மாறி விட்டது. அந்தக் காலத்தில் தாலியை அடகு வைப்பது போதாத காலத்தில். ஆனா இப்பொ தாலி செய்யவே எல்லாத்தையும் வைத்தாலும் போதாது போல் இருக்கு. ஜுவல்லரி முதலாளிகள் புத்திசாலிகள். எங்காவது தாலி மாதிரி கொஞ்சம் சேட்டை செய்து வித்தை காட்டி விடுகிறார்கள்.

பெண்களுக்கு தாலி போல் ஆண்களுக்கு அப்படி ஒன்றும் இல்லையா என்று யோசிக்கும் போது (உன்னை யாரு இப்படி யோசிக்கச் சொன்னது?) தான் பூணூல் மனசிலெ சிக்கியது. ஆண்களில் சிலருக்கு பூணூல் ஓர் அடையாளமாய் வந்து நிக்குது. 1980 களில் பூணூலைக் கலட்டி எறியும் போது அப்படியே Slow motion ல் அலைகள் ஓய்வது போலக் காட்டிய அ. ஓ இல்லை என்று ஒரு படம் வந்தது. அதே போல் அதுக்கு அப்புறம் பாக்கியராஜ் பூணூல் போடும் போதும் மங்கல இசை முழங்க அதுவும் Slow motion ல் தான் வரும். மாற்றங்கள் மாறுதல்கள் இப்படி மெதுவாத்தான் வரும் என்று நாசூக்காச் சொல்றாகளோ? இருக்கலாம். காலப்போக்கில் இதுவும் காலாவாதியாகி விட்டது.

என்னோட பையன் முன்னாடி எல்லாம், ஆதித்யா சிரிப்பொலி மாதிரி காமெடி சேனல்களை விரும்பிப் பாப்பான். இப்பொ சமீப காலமா முரசு, சன் லைப்ல வர்ர படத்தை அப்பப்பொ விரும்பிப் பாக்குறான். வெவரம் கேட்டா, அப்பா, ”அந்தக் காமெடியை விட இந்தப் பழைய படங்களோட காமெடி சூப்பரா இருக்குப்பா.. இவங்க டிரஸ்ஸு, டான்ஸ், டயலாக், பாட்டு, முக expression, இப்படி எல்லாமே செமெ காமெடியா இருக்குப்பா” என்கிறான். சமீப காலமா காணாமப் போன சங்கதிகள் எல்லாம் படத்திலெ பாத்தாலும் சிரிப்பாத் தான் இருக்கு.

ஒரு சமயம் காஞ்சிபுரம் போயிருந்தேன். சரி வந்தது தான் வந்தாச்சி, அந்த ”தெய்வத்தின் குரல்” எழுதின தெய்வத்தை(??)யும்தான் தரிசித்து வரலாம்னு கிளம்பிட்டேன். உள்ளே போகும் முன், சட்டையைக் கழட்டனும் என்றார்கள். ஏற்கனவே இப்படி கேராளா கோவில் ஒன்றில் கலட்டியதாய் ஞாபகம். சரி.. கழட்டி பாத்தா… நான் ஒத்தெ ஆளு தான், பூணூல் இல்லாமெ நிக்கிறேன். ஒத்தெப் பிராமணன் என்பார்கள். நான் பிராமினாய் ஒத்தையாய் நின்றேன்.

நான் பிராமணனா? என்று கேள்வியினை எனக்குள் கேட்டுக் கொண்டேன். தமிழினை என்றும் நெஞ்சோடு வைத்திருக்கும் எனது பூர்வீகம் தேடினால், தற்போதைய குஜராத்தின் சௌராஷ்ட்ரா பகுதிக்கு போக வேண்டி வரும். வந்தோரை வாழ வைக்கும் தமிழகம், நம்மையும் வாழ வைத்தது… வைக்கிறது.. இனியும் வாழ வைக்கும். மதுரையில் மெய்யாலுமே ”மதுரை”( மதுரையா? சிதம்பரமா என்பதின் மதுரை) ஆண்ட காலம் அது. வந்து பல நூறாண்டுகள் கடந்த போதும், பூணூல் போடலாமா என்ற பிரச்சினை வந்தது. ராணி மங்கம்மாள் முன்னிலையில் மணிக்கணக்காய் வாதிட்டு (இப்பொது பிரச்சினை வந்திருந்தால் வருடக் கணக்கில் ஆயிருக்கும்) பூணூல் போடலாம் என்று ஒரு சாசனம் (தெலுங்கில் எழுதி) கொடுத்து பிரச்சினை முடித்தார்கள்.

மநு தர்மம் என்ன தான் சொல்கிறது என்று மேலோட்டமா ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அதில் பிராமணர்கள் அல்லாதவர்களும் பூணூல் அணியலாம் என்றும் அரசல் புரசலா தெரிஞ்சது. அங்கேயும் ஒரு பஞ்ச் இருக்கு. எல்லாரும் எல்லா பூணூலும் போட்டுவிட முடியாது. பருத்தி, சணல், உல்லன் நூல்கள் வைத்து தனித் தனியே அணிய வேணுமாம். அப்படியே மேஞ்ச போது மாமிசம் சாப்பிட அனுமதியும் இருக்கு என்கின்ற தகவலும் சிக்கியது. அந்தமானில் கடல் உணவு ஜாலி தான்.. எல்லார்க்கும். குறுகிய காலத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாக்கும் நாம், இந்த மாதிரியான விஷயங்களிலும் ரொம்பவே மாறிட்டோம் என்று மட்டுமே தான் சொல்ல முடியும்.

படத்தில் காட்டப் படும் அளவுக்கு பூணூலின் மகத்துவம் இருக்கோ இல்லையோ, தேவையான நேரங்களில் போட்டுக் கலட்டுவதும் பாக்கத்தான் முடிகிறது. முக்கியமான நல்லது கெட்டதுகளில் கல்யாணம் கருமாதி போன்ற நேரங்களில் பூணூல் முக்கிய அம்சமாய் இருக்கிறது. என் நண்பர் ஒருவர் இருக்கிறார்… உற்சாக பாணம் அருந்தும் சமயங்களில் பூணூலை கழட்டி வைத்து விடுவார். தேவையான நேரங்களில் மட்டும் அணிபவர்களும் உண்டு. அந்தமானின் சிறு சிறு தீவுகளில் பூஜாரிகளின் நிலை இது போல் தான். பூஜை நேரத்தில் மட்டும் பவ்யமாய் பூணூலோடு தரிசனம் தருவர். மத்தது எல்லாம்…எல்லாமே… உண்டு தான்.

இந்த வம்பன் பார்வையில் இன்று மாட்டி வதை படுவது இந்தப் பூணூல். இந்தப் பூணூல், அந்தக் காலத்தில் கம்பரின் பார்வையில் படுது. எப்புடி எழுதுறாரு பாக்கலாமா?
அசோக வனத்தில் இராவணன் வருகிறார் .. பராக்..பராக்..பராக்.. நீலக்கலர்ல ஒரு மலை (பாத்தாலே கிரானைட் குவாரி போட்டு விக்கத் தோணும் அளவுக்கு ரிச் கலர்). அது மேலேயிருந்து ரொம்ப பள்ளத்துக்கு விழுகிற மாதிரி வெள்ளை வெள்ளேர்னு… பூணூலா… அது தான் இல்லை. அப்படி பளீர்னு பட்டு நூல்ல செஞ்ச மாலை மாதிரி இருக்கிற மேலாடை.. ம்.. அப்புறம், கழுத்தில் மாலை. அதில் மணிகள் ஒளி வீசுதாம்.. அது சும்மா சுகமான இள வெய்யில் (ஈவினிங் பஜ்ஜி சாப்பிட்டு டீ குடிக்கிற சுகம்) மாதிரி இருக்குமாம். இப்பொத் தான் கிளைமாக்ஸிலெ மிஸ்டர் பூணுல் தெரிகிறார். கருமேகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் மின்னலைப் போல. வாவ்… கலக்கிட்டீங்க கம்பரே… இராவணன் அசைந்து வரும் போது அவரோடு சேர்ந்து அந்தப் பூணூலும் அசைஞ்சி வந்ததாம்.

நீல் நிறக் குன்றின் நெடிது உறத் தாழ்ந்த நித்த வெள் அருவியின் நிமிர்த்தபால் நிறப் பட்டின் மாலை உத்திரியம் பண்பறப் பசும் பொன் ஆரத்தின்மால்நிற மணிகள் இடை உறப் பிறழ்ந்து வளர் கதிர் இளவெயில் பொருவசூல் நிறக் கொண்மூக் கிழிந்து இடை துடிக்கும் மின் என மார்பில் நூல் துளங்க.

இராவண மகராசா எப்போவும் பூணூல் போடுவாரா? அல்லது சீதை யை பார்க்கும் நல்ல(??) காரியம் செய்யும் போது மட்டும் போட்டாரா என்பதை ஆய்வாளர்கள் கையில் விட்டு, நான் கலண்டுகிறேன்.

முகத்தில் முகம் பார்க்கலாம்…


இப்படி சொன்னவுடன் காதலியின் பளிங்கு மாதிரியோ, கண்ணாடி மாதிரியோ இருக்கிற கண்ணத்தில் போய் மெய்யாலுமே முகம் பாக்க போயிடாதீங்க.. இந்த காலத்து பொண்ணுங்க அவ்வளவு மேக்கப் போட்டிருப்பாளுக…. நாம எங்கிட்டு போயி முகம் பாக்க??

முகத்தில் முகம் பாக்க இவ்வளவு எல்லாம் சிரமப்பட வேண்டாம். பேசாமெ உங்க வெப் கேமிராவை கொஞ்சம் உத்துப் பாத்தாலே போதுமே!! சரி அதுவும் இல்லையா?? இருக்கவே இருக்கு, மொபைல் கேமிரா. Self Shot அடிக்கிற வித்தை தான் இப்பொ எல்லா டப்பா ஃபோனும் தான் செய்யுதே?? உங்க மொகத்தெ நீங்களே பாத்துகிடுங்க..

25000 போட்டு வாங்கின Samsang Galaxy Tab என்னென்ன வித்தைகள் செய்யும் என்ற கேள்விக்கு என் பையன் சொன்ன பதில்: இதெ வச்சி மொகம் பாத்து ஷேவிங் செஞ்சிக்கலாம் என்கிறான். 5 ரூபா கண்ணாடியோட technically advanced costly replacement (சார்ஜ் செய்ய மறந்தால் அதுவும் அம்பேல் தான்!!)

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகி விடுவாய் என்கிறது ஒரு தத்துவம். அப்படிப் பாத்தா, சூர்யா கல்யாணத்துக்கு முன்னாடி அம்புட்டு ஆம்பிளைப் பசங்களும் ஜோதிகா ஆயிருக்கனுமே!!! அல்லது இப்பொ பசங்க எல்லாம் தமண்ணாவாவா மாறிட்டாக?? ஆக… ஆகி விடுவது என்றால்… உணர்வில் அப்படி..

பாரதியும் அப்படித்தான். கண்ணனின் காதலியாய் மாறி கண்ணம்மாவாய் அவதாரம் எடுத்தார். ஆண்டாளும் இதே வகை தான். மதுரையில் கிருஷ்ண பகவானின் நாயகியாய் தன்னை பாவித்தபடி வாழ்ந்து நடனகோபால நாயகி ஸ்வாமிகள் என்று பெயரே பெற்றார். இப்போதைய சாமியார்கள் பார்வைமட்டும் (கதா) நாயகிகளின் முகம் நோக்கி ஓடுதே? இதுவும் நாயகி பாவமாக்கும் முயற்சியோ?? யாருக்குத் தெரியும்? (மதுரைக்கு சோதனை வருவது புதுசா என்ன??)

ஒருவரின் முகத்தைப் பாத்து ஆளு எப்படி என்று எடை போடும் கலை, வர்த்தக நிறுவனங்களில் இருப்பவர்களுக்கு அத்துப்படியாய் இருக்கும். ஆனால் பெரும் ஜமீன் பரம்பரையாய் இருந்தாலும் ரொம்பவும் சிம்பிளான உடை உடுத்தும் மக்கள் கோவை பகுதியில் தான் அதிகம் இருக்கிறார்கள் என்று படுகிறது. அவர்கள் முகம் பார்த்து ஆள் எப்படி என்று எல்லாம் எடை போட்டுவிட முடியாது.

ஒரு சின்ன கார் வைத்திருப்பவன் செய்யும் பந்தாவே எக்குதப்பா இருக்கும் இந்தக் காலத்தில், பத்து பதினைந்து லாரி, ஓரிரு கல்வி நிறுவனங்கள் நடத்தும் அதிபரின் எளிமை பாத்து அரண்டு போய்விட்டேன். இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

லைலா மஜ்னு காதல் பற்றி பேசாத ஆட்களே இருக்க மாட்டார்கள். காதலில் இதயத்தை இடம்பெயர்த்த மூத்த முதல் காதலர்கள் அவர்கள். ஒரு விசாரனை வருகிறது. கேள்வி லைலாவை நோக்கி, “உன் பெயர்?”
லைலாவின் பதில்: மஜ்னு.
மஜ்னுவிடம் மறுபடியும் அதே கேள்வி.
பதில்: லைலா.
ஒருவருக்குள் ஒருவர் மாறி மாறி வாழும் காதல் சரித்திரம் அது.

முகத்தில் மலர்ச்சி காதலில் தான் வருமா? கடவுளிடம் அப்படி இருக்காதா? கடவுள் சன்னதியில் சமீபத்தில் நடந்த நிகழ்வு. திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். வழக்கமாய் அரச்சனை யார் பேருக்கு என்ற கேள்விக்கு நாம பெரிய்ய லிஸ்ட் தருவோம் (நட்சத்திரம் ராசி சகிதமாய்… உங்களுக்கு கண்டது எல்லாம் ஞாபகத்துலெ இருக்கு.. இந்த நட்சத்திரம் மட்டும் ஏன் மனசிலெ நிக்க மாட்டேங்குது என்ற என் மனையாளின் திட்டும் மறுபக்கம்)

ஒரு பக்தர் சொன்னது மட்டும் என்னை உற்றுப் பார்க்க வைத்தது. ஓர் ஊர் பெயரைச் சொல்லி, அந்த ஊர் பொதுமக்கள் அனைவரின் சார்பாக அர்ச்சனை செய்யுங்கள் என்றார். (ஊரில் நல்லவர்கள் அங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்… நம்ம கண்ணுக்கு அப்பப்பொ தான் தென்படுகிறார்கள்). ஊர் மக்கள் மகிழ்வுடன் இருந்தால் தான் நானும் மகிழ்வாய் இருக்க முடியும் என்ற உயரிய எண்ணம்.

நாமளும் தான் தினமும் எத்தனையோ முகத்தெப் பாக்கிறோம். நமக்கு ஒன்னும் வித்தியாசமா தெரியாது. ஆனா கம்பர் பார்வை மட்டும் வித்தியாசமா இருக்கும். எந்த எடம் தெரியுமா? ராவணனின் அரண்மனை. இழுத்து வரப்பட்ட நிலையில் அனுமன். பத்து தலையையும் பதறாமல் பார்க்கிறான் அனுமான். ஒவ்வொரு முகமும் ஒவ்வொன்றாய் தெரிகிறதாம்.
ஒரு முகம் தன்னோடு வேலை செய்யும் தேவர்களுடன் அரசியல் பேசியதாம். சில முகங்கள் மந்திராலோசனை நடத்தியதாம். ஒரு முகம் தீய சிந்தனையில் இருந்ததாம். அட… ஒரு முகம் சீதை முகம் மாதிரி இல்லெ இருக்கு!!!.. இது எப்படி இருக்கு??

இராவணன் நினைப்பில் சதா சர்வகாலமும் சீதை இருப்பதால் அவனின் ஒரு முகம் சீதை முகம் போல் ஆகிவிட்டது என்கிறார் கம்பன். ஒரு வேளை அனுமன் கூட, எப்பவுமே சீதையை மீட்பதில் குறியாய் இருந்ததால் அனுமன் கண்ணுக்கு இப்படி படுகிறதோ.. இருக்கலாம்.

நம் மனசிலும் இப்படியான பத்து முக சிந்தனைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முறையாவது நல் சிந்தனைகளை ஒருமுகப் படுத்த முயற்சிக்கலாமே!!!

இதோ கம்பன் பாடல் வரிகள்:

தேவரொடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த
மூவரொடு மா மந்திரம் ஒருமுகம் முயல
பாவகாரிதன் பாவகம் ஒரு முகம் பயில
பூவை சானகி உரவொளி ஒரு முகம் பொருந்த

என்ன… ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி பாட்டு ஞாபகம் வருதா?

தண்ணீ கருத்திருக்கு…


விவேக் காமெடியில் கலக்கிய ஒரு படம். அதில் அவர் தெருக்குழாயில் தண்ணி குடிக்கப் போவார். வெறும் காத்து தான் வரும். அந்த மேலே தூக்கும் குழாயைப் பாத்துட்டு, இந்த மாடலை மாத்தவே மாட்டாங்களா?? என்பார். அது என்னவோ ரொம்ப பழைய மாடல் கொழா மாதிரி நெனைச்சி…

இப்பொ நவ நாகரீகமான விமான நிலையங்களில் எல்லாம் இதை விட மோசமான கொழா வச்சிருக்காங்க என்பது தான் கசப்பான உண்மை. ஹைதராபாத ஏர்போர்ட்டில் இருக்கும் கொழாவில் தண்ணியை வாயில் ஏந்தி குடிக்க சர்க்கஸ் பழகிய ஆட்களால் தான் முடியும். தில்லியின் பிரமாண்டமான Terminal -3 ல் இருக்கிற கொழாயைப் பிடிச்சி சட்டையில் தண்ணீ படாம குடிக்கிற ஆட்களுக்கு பெரிய்ய விருதே கொடுக்கலாம்.

சென்னை ஏர்போர்ட்டில் பேப்பர் கப் வைத்து அந்த சிரமத்தை குறைத்துள்ளனர். மதுரை ஏர்போர்ட் கொஞ்சம் வித்தியாசமானது. மதுரெ மக்கள் ஐடியாவே தனி தான். ஏக நவீனம் என்று வாய் வைத்து குடிக்கும் (நக்கி என்று சொல்வது நல்லாவா இருக்கும்??) கொழா இருக்கும். பக்கத்திலேயே நமக்கு ரொம்பவே பழகிப்போன அந்த நன்னாரி சர்பத் அளவுக்கு பெரிய்ய கிளாஸ் வச்சிருக்காங்க. சட்டை நனையாமல் தண்ணி குடிக்க முடிந்தது.

குடிக்கிற தண்ணிக்கு நாம படும் பாட்டை நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தண்ணி வராத அந்தக் காலம் எப்படி இருந்தது?. பரமக்குடி சந்தைக்கும் சின்னக்கடைக்கும் நடுவில் எங்கள் வீடு. வியாழன் தோறும் சந்தைக்கு வரும் கிராமப்புற விவசாயிகள் கூட்டம் (பெரும்பாலும் மகளிர்….), உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் பங்குனி சித்திரை மாதங்களில், வீட்டின் முன் வந்து அம்மா தண்ணீ என்பர். (அது எப்படி இந்த வீட்டில் மட்டும் வந்து தண்ணீ கேக்கிறாக என்ற சந்தேகம் அப்போதே வந்தது. இந்த வீட்டில் வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற Precedence தான்.)

செம்பு நிறைய்ய தண்ணி எடுத்து தருவேன். சிலர் கையில் அப்படியே ஊத்தச் சொல்வர். முழங்கை வழியே பாதி நீர் ஒழுகும். அப்படியே முந்தானையில் துடைத்துக்கொண்டு நன்றியோடு பார்ப்பர். எப்படிக் குடிக்கிறார்கள் என்று பாக்காதே கேட்டவர்களுக்கு தண்ணி தா.. இது அம்மாவின் கட்டளை.

பள்ளியில் நீதி வகுப்புகளில் ஒரு சின்ன பாக்கெட் டைரி வாங்கி, அதில் தினமும் செய்யும் நல்ல காரியங்கள் எழுதச் சொல்வர் ஆசிரியர். சந்தை நடக்கும் அந்த வியாழன் அன்று மட்டும் இந்த தண்ணி தர்மம் கண்டிப்பா இடம் பெறும். மத்த நாட்களில் வாத்தியார் கேப்பார்… என்ன பரமக்குடி முழுக்க அவ்வளவு முள்ளு ரோடாவா போட்டு வச்சிருக்கா? எல்லாரும் ஒட்டுக்கா “ரோட்டில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டேன்” என்று எழுதி இருக்காங்களே???

மனதில் ஈரத்தை சுரக்க வைக்க அன்றைய ஆசிரியர்கள் செய்த சேவை அது. வீட்டுக்கு யார் வந்தாலும் உடனடியாக தண்ணீ தருவது நல்ல மரபு. வெயிலுக்கு அது தரும் ஆறுதல், வேறு எதுவும் தராது. இலங்கைத் தமிழரிடம் இந்த நல்ல பழக்கம் இல்லையே என்ற வருத்தம்தனை நண்பர் ஒருவர் தெரிவித்தார். இலங்கை பருவநிலை அதற்கு சாதகமாக இருந்திருக்காது என்பது என் கருத்து. சாஸ்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் படி இலங்கையிலிருந்து அந்தமானில் பல குடும்பங்கள் வந்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.

தண்ணீர் முழுசா இல்லாட்டியும் கூட, அதன் துளி கூட பாக்குறதுக்கு அவ்வளவு சுகத்தைத் தரும் தெரியுமா?. உதாரணமா ரோஜா மேல் சின்ன துளி, புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி எல்லாமே கொள்ளை அழகு.
அந்த நீரின் தொகுப்பு தான் மேகம். மேகம் எதுக்கு பயன் பட்டதோ இல்லையோ, நம்ம சினிமா பாடல்களுக்கு ரொம்ம்ம்ம்பவே கை கொடுத்திருக்கு. மேகம் கருக்கையிலெ.. என்ற பாட்டு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும் எல்லாருக்கும். வாணிஜெயராமின் குரலில் சுஹாசினியின் சோகமான முகம் எல்லாருக்கும் மனதில் பளிச்சிடும், அந்த பாலைவனச் சோலையில் (அந்தக் காலத்து படம் தானுங்க) மேகமே மேகமே பாடலில்.

தூது விடும் கலை அந்தக் காலத்து செமெ ஹிட்டான ஸ்டைல். இந்தக் காலத்தில் இம்மென்றால் இன்டெர்நெட் ஏனென்றால் எஸ்எம்எஸ் என்று ஆகிவிட்டதில் அந்த தூது எல்லாம் தோது படாது என்று ஆகி விட்டது. மேகத்தையும் தூது விட்டு பாட்டா படி இருக்காங்க. ஆனா மேகத்தை தூதுவிட்டா திசை மாறிப் போகுமுன்னு மேகத்துக்கே டாடா காட்டியதும் திரையிசையில் மட்டும் தான் நடந்திருக்கிறது.

தண்ணீ கருத்திருக்கு என்பதின் மூல அர்த்தம் தேடாமல், கருப்பு தண்னியெப் பத்தி பாக்கலாம். வெள்ளைப் பால் குடித்து வளர்ந்த மனிதனுக்கு கள் மேல் காதல் வரலாம். ஆனா அந்த கரும்தண்ணீ மேல் ஏன் இத்தனை கவர்ச்சி? குடிக்காதே.. குடிக்காதே என்று சொல்லியே குடிக்க அழைக்கிறதே அந்த திராவகம். கருப்பான தண்ணீயை ஹிந்தியில் காலாபானி என்பர். அந்தக் காலத்தில் காலாபானி என்று சொன்னால் அந்தமான் என்று அர்த்தம் (இப்பவும் காலாபானி என்கிறார்கள் அந்தமானை). அந்தமானில் உள்ளேயும் வெளியேயும் அந்த கரும் தண்ணீக்கு எந்த பஞ்சமும் இல்லை.

ராஜபார்வை படத்தில் அந்திமழை பொழிகிறது என்ற ஒரு சூப்பர் பாட்டு வரும். அதில் வரும் வைர வரிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே… அதெப்படி? தண்ணீரில் நிற்கும் போது வேர்க்கும்?? மணிக்கணக்காய் கடலில் குளிக்கப் போய் உடலை ஊறப் போட்டும் பாத்தாலும் அப்படி ஒன்றும் வேர்க்கிற மாதிரி தெரியலையே…??

கவிஞர்களுக்கே தரப்பட்டுள்ள சுதந்திரம் அது. அவங்க ரேஞ்சே வேறு. எங்கே வேணும்னாலும் போகலாம். என்ன வேணுமாலும் யோசிக்கலாம் பாடலாம்.

இந்த தண்ணீரில் வேர்க்கும் சங்கதி, சுட்ட செய்தி என்று சொன்னா என்னோட சண்டைக்கு வருவீங்க. கிட்டத்தட்ட அதே மாதிரி அந்தக் காலத்திலேயே யோசிச்சவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு சின்ன சீன் வைத்து படம் காட்றார் கம்பர். அரக்கர்கள் போர் செய்யறதைப் பாத்து கடலுக்கும், மேகத்துக்குமே வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம் (இந்தக்காலத்து பயத்தில் ஊச்சா போகும் வடிவேல் மாதிரி) அரக்கர்களின் ஆராவாராம் ஒருபக்கம். தேவர்களின் வாழ்த்துக்கள் இன்னொரு பக்கம். எது ஒசத்தி?? அதிலென்ன சந்தேகம்? ரெண்டாவது தான் டாமினேட் செய்ததாம்.

கார்க்கருந் தடங் கடல்களும் மழைமுகில் காணும்
வேர்க்க வெஞ்ச்செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாத்து எழு பூசலின் ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.

எங்கே இன்னொரு முறை அந்த கடமுடா என்று உச்சரிக்க வைக்கும் “கார்க்கருந் தடங் கடல்களும்” வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள்.. உங்களுக்கே வேர்த்துக் கொட்டும். எனக்கு பயமா இருக்கு. நான் ஓடிப் போயிடரேன்…

மாமியார் ஒடெச்சாலும் பொன்கொடம்


மாமல்லபுரத்து சிற்பம்

“அண்ணே… ஒரே வயித்து வலிண்ணே… ஏதாவது மருந்து சொல்லுங்கண்ணே”
“அடேய்… நா என்ன.. டாக்டர் ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ் ன்னு போர்டு மாட்டியா இருக்கேன்”

என்றும் மறக்காத, அருமையான அனைவராலும் ரசிக்கப்பட வைத்த காமெடி அது. இதே படத்தில்… “அடேய் இது ஒனக்குத் தெரியுது.. இந்த ஊருக்குத் தெரியலையே..?? இதெல்லாம் ஊருக்கு எடுத்துச் சொல்லனும்டா… இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா, நல்லவரு, வல்லவரு..” இப்படி ஒரு சூப்பர் டயலாக்கும் வரும்.

ஒருவர் நல்லவரா வல்லவரா என்பதை யார் சொல்வது? யாராவது நம்மைப் பத்தி தப்பா சொல்லித் தொலைக்கிறதுக்கு முன்னாடி நாமளே நல்லபடியா சொல்லிக்கிறது நல்லது இல்லையா? இதெத்தான் அந்த கவுண்டமனி காமெடி சொல்லி இருக்குமோ..

சமீபத்தில் கல்கத்தா போயிருந்தேன். நட்பு ரீதியாய் பழகி இருந்த மத்திய புலனாய்வு அதிகாரியை சந்தித்தேன். அவரோ, அவரது சக சகாக்களிடம், நான் வல்லவர் நல்லவர் , RTI Expert, பாடகர், தமிழ் பேச்சாளர், Electronic Man என்று ஏகமாய் சொல்லி வைக்க, அப்பொ… முழு நேரம் இது தானோ? என்ற ரேஞ்சுக்கு கேட்டு வைத்தார் ஒருவர். அவருக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

நீங்கள் வீட்டுக்கு., ஆபீசிலிருந்து செல்ல எவ்வளவு நேரம் கல்கத்தாவில் ஆகிறது ? என்று கேட்டேன். இரண்டரை என்று பதில் வந்து. ஆக ஒரு நாளுக்கு ஐந்து மணி நேரம் செலவு செய்கிறீர்கள் டிராவலுக்கு மட்டும். நான் எனது லிட்டில் அந்தமான் தீவில் அதற்காய் 5 நிமிடங்கள் ஒதுக்கினால் போதும். ஆக எனக்கு உங்களை விட அதிதிதிதிக நேரம் இருக்கிறது.. என்றேன்.. ( ப்ளாக் எழுதுவதின் சூத்திரம் புரிந்திருக்கும் இப்போது).

நல்ல பேரு வாங்குவது இருக்கட்டும். பேர் சொல்லி அழைப்பதே பெரிய காரியம் தான். சமீபத்தில் அந்தமான் வந்த பிரபலமான அரசியல் தலைவர் கூட, கூட வந்த அமைச்சரின் பெயரையே மாற்றிச் சொன்னார். ( தலைவருக்கு ஒரே அலைச்சல் அதான்… என்று தொண்டர்களும் அதனை சமாளித்தனர்)

மேடைப் பேச்சாளர்கள் பலர் மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் பேர் சொல்லி அழைத்து பேச்சை ஆரம்பிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். சிலரோ யார் பேராவது விட்டிருக்கிறதா? என்று பொறுப்பாய் கேட்டும் வைப்பார்கள்.

சமீபத்தில் “ஒன்றே சொல் நன்றே சொல்” புகழ் சுப வீரபாண்டியன் அந்தமானுக்கு வந்திருந்தார். அனைவரின் பெயரையும் எந்தக் குறிப்பும் எடுத்து வைக்காமல், வரவேற்பு நடனம் ஆடிய சிறு குழந்தை, மேஜிக் செய்த (என் பையன் தான்) சிறுவனையும் தம்பி விஜய் என்றும் விளித்துப் பேசியது சிறப்புச் செய்தி.

இன்னொரு சீடி வெளியீட்டு விழாவில் நடந்த கூத்து ஒன்று. 20 வருடங்களாய் எங்களோடு தோளோடு தோள் கொடுத்தவரும், நீண்ட நாள் நண்பருமான … ஆமா உங்க பேரு என்ன?? என்று கேட்ட வேடிக்கையும் நடந்து இருக்கிறது.

நல்ல பேரு என்பதுடன் நல்ல கருத்தும் சேர்த்து பாக்கலாம் என்பது என்னோட கருத்து. ஆரம்ப காலத்தில் பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டும் என்று சொன்ன போது நானும் அட… மல்லிகை பூவை அலுங்காம குலுங்காமெ ஸ்கூட்டரில் எப்படி எடுத்துப் போவது? என்றே யோசித்தேன் நான். இட்லிக்கு சாம்பார் சட்னி இதெல்லாம் பிளாஸ்டிக் இல்லாமல் எப்படி கொண்டு போவது??

போதாக் குறைக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் வேதியியல் பேராசிரியர் பிளாஸ்டிக் ரோடுக்கு ரோடு போட.. அட.. பிளாஸ்டிக் இருந்தா என்ன என்ற நெனைப்பும் வந்தது.

அப்புறம் டார்ஜிலிங்க் போய் பாத்த போது தான் பிளாஸ்டிக் இல்லா ஊரின் அழகே புரிந்த்து. நானும் காரில் ரெண்டு துணி பைகளை வைக்க ஆரம்பித்தேன். Reduce Reuse, Recycle இதில் முடிந்த வரை அமல் படுத்தும் திட்டம் அமலானது. நானும் காரில் ரெண்டு துணி பைகளை வைக்க ஆரம்பித்தேன். கோழி வாங்கப் போனா, பையில் ஒரு சில்வர் பாத்திரம் இருக்கும். ஏனென்றால் அந்த கோழிக்கறியின் பையை நாம் ரீயூஸ் செய்ய இயலாது. வாரம் தோறும் பாத்திரம் பார்க்கும் பத்து பேரில் யாராவது பிளாஸ்டிக் கைவிட மாட்டார்களா என்ற நப்பாசை தான்.

மறுபடியும் கவுண்ட மணியின் பாப்புலர் டயலாக்குக்கு வருவோம். அது என்னவோ தெரியலை செந்திலின் தலை பாத்து தான் அதிக டயலாக் இருக்கும். அதில் தலை சிறந்த ஒன்று தான் “பன்னித் தலையா”.

சிங்கம் தான் சிங்கிளா வரும்… அது ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டாவும் இருக்கும். ஆனா.. பன்னி கூட்டமா வரும். பன்னியோட சேந்த…..ம் எதையோ திங்கும் என்பார்கள். ஆனா நிகோபாரி ஆதிவாசிகளின் சீர்வரிசையின் முதல் வரிசையில் இருப்பது அந்த திருவாளர் பன்றிகள் தான். அதற்காகவே பால் ஊட்டி (தேங்காப்பால் தான்) வளர்ப்பார்கள்.

தனக்கு பிடிக்காத ஆட்களைத்தானே பன்னித்தலையா என்பார்கள்?? ஆனா இன்னொரு Criteria இருக்கே.. அதான் மாமியார் ஒடெச்சா… அது,.. அது.. அதே தான்.

அரசு அலுவலகங்களில் கூட வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று இரு குரூப் அங்காங்கே இருக்கும். வேண்டிய நபர் ஆபீசில் புகுந்து லேப்டாப்பை உடெச்சாலும் டீக் ஹை… சலேகா தான். அதே வேண்டாத ஆள் பைலில் பேஜ் நம்பர் போடாது வந்தாலே மெமொ தான் பாயும்.

இதே மாதிரி தான் ராமாயனத்திலும் ஒரு பன்னித்தலையா என்று திட்ட வேண்டிய சீன் வருது. ஆனா அவரோ மேலிடத்துக்கு ரொம்ப வேண்டியவர். அவரை திட்ட முடியுமா என்ன??

கம்பர் அதை சூப்பரா சமாளிக்கிறார். என்ன சீன் என்று சொன்னால் உங்களுக்கும் புரியும். அனுமன் சீதையை சந்தித்த பின்னர் திரும்பும் போது சில மனிஷ சேட்டைகள் செய்கிறார். (பின்னெ மனிதர்கள் கொரங்கு சேட்டை செய்யும் போது, அனுமன் மனிஷ சேட்டை செய்ய மாட்டாரா என்ன?? )

அனுமன் அசோக வனத்தை அழித்ததை பாக்கும் போது தான் கம்பருக்கு “பன்னித்தலை வைத்து செய்யும் சேட்டையா” தெரியுது. அதை நல்ல விதமா சொன்னா நல்லா இருக்குமே என்று நினைத்து, வராக அவதாரம் மாதிரி இருந்தார் என்கிறார். இதிலெ வேடிக்கை என்னவென்றால், ராம அவதாரம் போல் இன்னொரு அவதாரம் தான் அந்த வராக அவதாரம். ராமனின் தூதன், இன்னொரு ராம அவதாரம் மாதிரி இருக்கே என்று சொல்வது கொஞ்சம் ஒவராத்தான் இருக்கு..

என்று நினையா இரவி சந்திரன் இயங்கும்
குன்றம் இரு தோள் அனைய தன் உருவு கொண்டான்
அன்று உலகு எயிற்றிடை கொள் ஏனம்எனல் ஆனான்
துன்று கடி காவினை அடிக்கொடு துகைத்தான்.

வட்டச் செயலாளர் ஒருவர் முதலமைச்சர் மாதிரி இருக்கிற கற்பனை மாதிரி தெரியலை??.

ஆகாயப் பந்தலிலே…


இதை சாதாரணமாகப் படிப்பதற்கும், பாட்டாய் படிப்பதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? சாதரனமாய் படிக்கும் போது இரண்டு வார்த்தைகளின் உச்சரிப்பு.. அவ்வளவு தான். ஆனால் அதே பாடலாம் படிக்கும் போது இருக்கும் ஏற்ற இறக்கங்கள்,அதுவும் காதலில் உருகிப் பாடும் TMS. இதெல்லாம் சேர்ந்து கேட்கும் போது அலாதி சுகம் தான்.

மிகப் பிரமாண்டமாய் யாராவது, ஏதாவது வரவேற்பு குடுத்தால், அங்கே… அந்தப் பந்தல் பாக்கனுமே ஆகாசத்தையே மறைச்சிட்டு நிக்குது என்பார்கள். அதுக்கு நேர் மாறா.. நம்பவே முடியாத ஒரு செயலை செய்வதாக யாராவது சொன்னால், ஆகாச கோட்டை கட்டுவதாகவும் நம்ப மறுப்பார்கள்.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை நுழைவாயில்கள் அதான்.. Gate என்பது ரொம்பப் பிரபலம். அது India Gate ஆகவும் இருக்கலாம்… அல்லது Gate way of India ஆகவும் இருக்கலாம். (அது சரி ஒரு பாஸ்மதி அரிசிக்கு ஏன் இண்டியா கேட் என்று பெயர் வைத்தார்கள் என்பது யோசிக்க வேண்டிய செய்தி தான்… ஒருவேளை உடம்பின் கேட் வாய்.. அதுக்கு ருசியா, நல்லா இருக்கட்டும்னு வச்சிருப்பாங்களோ..!!). இந்த வாசலுக்கு சம்பந்தமே இல்லாத water gate (ஊழல்) & Bill Gates இப்படி சிலவும் இருக்கு (அ) இருக்கிறார்கள்.

சென்னையில்கூட பிரபலமான நுழைவாயில் பெசண்ட் நகர் பீச்சில் இருக்குமே.. அதான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஏரியா தான். அண்ணா சதுக்கம், சைதை வளைவு இப்படி ஏகமாய் இருக்குது. யானையுடன் கூடிய அண்ணா பலகலைக்கழக வளாக வாயில் ரசிக்கும் படி தான் இருக்கு எப்பொ பாத்தாலுமே..

ஒரு நுழைவாயில் என்பது, …. அதன் உள்ளே எப்படி இருக்கப் போகுது என்று சொல்வதின் ஒரு ஆரம்ப அடையாளம் தான். வெள்ளையர்கள் காலத்தில் தான் இந்த வளைவுகள் அதிகமாக வைத்து கட்டினார்கள். இப்பொ வளைவுகள் ஜாக்கிரதை என்று லேடீஸ் காலேஜுக்கு முன்பாக போர்டு மட்டும் தான் வைக்கிறார்கள்.

அது சரி..அப்பொ நுழைவாயில் பாத்துட்டு ஊர் பாக்காமெ போயிடலாமா என்ன?? இதையும் கொஞ்சம் கேளுங்க… இதைப் பாத்தா அதெப் பாக்க வேண்டியதில்லைன்னு சொல்லுவாங்க.. ஆப்பிள் இல்லையா?? நெல்லிக்காய் போதும்.. காசி ராமேஸ்வரம் போக வசதி இல்லையா?? போரூர் போனால் போதும்.. இப்படி ஏகமாய் சொல்லுவாய்ங்க.. முக்கியமான சேதி ஒண்ணு இருக்கு.. அம்மாவை படித்துறையில் பாத்தா பொண்ணை வீட்டில் போய் பாக்க வேண்டியதில்லை என்பார்கள்.. நான் பெண் பார்த்த போது நடந்த கலாட்டா இது..

மதுரைக்காரங்க கொஞ்சம் ஒரு கோட்டிங்க் மேக்கப் அதிகமா போடுவார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டு உண்டு. (எல்லா ஊரிலும் அப்படித்தான் என்று உலகம் சுற்றிய வாலிபர்கள் சொல்லக் கேள்வி.. நமக்கெதுக்கு ஊர் பொல்லாப்பு?) சம்பிரதாயமாய் பெண்பார்த்தது போதவில்லை எனக்கு.. சரி டீச்சரா வேலை செய்றவங்க தானே என்று, ஸ்கூல் பெயரை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து கிளம்பினேன்… ஸ்கூல் விடும் சமயம் பாத்து.

ஸ்கூல் வாசலில் ரொம்ப ஆவலோடு காத்திருந்த போது எல்லா டீச்சர்களும் (அந்த ஆயா உட்பட) அனைவரும் அழகானவர்களாய்த் தான் தெரிந்தார்கள்.. (இந்தக் காலமாய் இருந்தால்.. கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்று மனசுக்குள்ளாவது கேட்டிருக்கலாம்?) ஒரு அழகிய தமிழ் டீச்சர் ஆங்கலத்தில் கேட்டது.. யார் வேண்டும்? என்று.

உஷா என்றேன்.. One Minute Please என்று என்னை பத்து நிமிடம் காக்க வைத்தார்.. (அது மட்டும் பத்து மணி நேரமாய் கனத்தது).. உஷா please என்று ஒரு யூனிபார்ம் போட்ட குழந்தையை கையில் தினித்தார்கள்.. நானும் அந்த குழந்தை அதைவிடவும் விழித்தது…
மிஸ்… நான் கல்யாணம் செஞ்ச்சிக்கப் போற பெண்ணு உஷா மிஸ்ஸைப் பாக்க வந்தேன்..என்றேன். அப்போது தான் அவர்களுக்கே வெக்கம் வந்து.. சாரி..சாரி.. அவர் இதே ஸ்கூல் தான் ஆனால் அதன் கிளை வேறு இடத்தில் என்றுசொல்ல… அப்புறம் பாத்தது கல்யாணம் ஆனது எல்லாம் தனிக்கதை..

பரமக்குடியில் Archவளைவு என்பது ஒரு லேண்ட் மார்க். ஒருபக்கம் காந்திசிலை, மறுபக்கம் ரயில் நிலையம். இன்னொரு பக்கம் பேருந்து நிலையம். மீதம் இருப்பதோ அடிக்கடி கலவரமாகும் ஐந்துமுனை. இப்படி எல்லாத்துக்கும் வழி சொல்லும் இதமாய் இருந்த Archவளைவு சமீபத்தில் காணவில்லை. ஏதோ விபத்தில் உடைந்து விட்டதாய் தகவல். அது வெறும் ஒரு வளைவு அல்ல. அதன் பின்னால் இருக்கும் வரலாறும் அல்லவா காணமல் போகிறது? யாரோ எப்பவோ வந்ததிற்கு வேறு யாரோ அமைத்த வளைவு என்று தான் இப்போதைக்கு சொல்ல முடியும்.

உலகத் தமிழ் மாநாடு நடந்ததின் விளைவாக மதுரைக்கு இப்படி பல நுழைவாயில்கள் கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு பெயரும் உண்டு. இனி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் இதன் பெயர் கேட்டாலும் கேட்கக் கூடும். மதுரை மக்கள் வாய்ப்பை பயம் படுத்திக் கொள்ளவும்.

கம்பருக்கு ஒரு சிலை இருக்கு மாட்டுத்தாவணி பேரூந்து நிலயத்துக்கு அருகில். பக்கத்தில் ஒரு வளைவும் உண்டு. ஒரு நாள் கம்பரின் கழுத்தில் மாலைகள் அமர்க்களமாய். பொதுவாய் சாதீய தலைவர்களுக்கும், சாதி சாயம் பூசப்பட்ட தேசீயத் தலைவர்களின் சிலைகளுக்கு தான் அப்படி மாலைகள் விழும். கம்பருக்கு மாலைகளளிருக்கே… ஆட்டோவில் போகும் போது கவனித்தது.

எப்படியோ கம்பர் வரை வந்து விட்டோம்.. அப்புறம் இன்னும் கொஞ்சம அவர் சொல்லும் நுழைவாயில் சமாச்சாரத்தையும் தான் பாத்திடுவோமே.. கம்பருக்கு முன் அனுமன் தான் Gateway of Lanka வைப் பார்க்கிறான். சாதாரணமா எதுக்கும் பயப்படாத பய தான் நம்ம அனுமன்.. ஆனாலும் அந்த நுழைவாயில் பாத்து செத்த நொடிஞ்சி போகிறார் என்பது தான் உண்மை.

நம்ம நாகேஷ் மெட்ராஸை முத்ன்முதலாக பாத்து, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று வாயெப் பிளந்தது மாதிரி அனுமன் வாயை மூடாமல் பாக்கிறார். ஒரு valuation கணக்கு போகுது.. ஏழு உலகத்து மக்கள் எல்லாரும் சண்டை போட வந்தாலும் (அனுமன் சண்டைக்கு வந்ததால் இப்படித்தானே யோசனை போகும்?) எல்லாரும் ஒண்ணா போயிடலாமாம்..அவ்வளவு பெரிய நுழைவாயில்..அதுவும் இதெல்லாம் சாதாரண டிராபிக் போகத்தானாம்.. அப்படிப்பாத்தா இந்த ராஜாவோட படை ஏழு கடலைவிட அதிகமா இருக்குமே… இப்படி போகுதாம் யோசிப்பு..

ஏழ் உலகின் வாழும் உயிர் யாவையும் எதிர்த்தால்
ஊழின் முறை இன்றி உடனே புகும் இது ஒன்றோ?
வாழியர் இயங்கு வழி ஈது என வகுத்தால்
ஆழி உள ஏழின் அளவு அன்று பகை என்றான்.

சரி..சரி.. வேற எந்த வளைவைப் பத்தியும் யோசிக்காம பொங்கல் வைப்போம்.. பொங்கல் வாழ்த்துக்கள்.

மீன் வாசம் மறையுமா??


சமீபத்திய சன் மியூசிக் சேனலில் அடிக்கடி வரும் பாட்டு “சர..சர..சாரக்காத்து வீசும் போது” என்ற பாடல் தான். பாடல் வரிகளை மீறி அதன் இசையும், அதற்கும் மேலாக அந்த நாயகியின் முக பாவங்களும்.. ஆஹா.. எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காது இருக்கிறது.

அதில் வரும் ஒரு காட்சியில், ஓடையில் மீன் பிடித்து அதனை வறுத்துத் தருவது மாதிரி ஒரு சீன்… பாக்கும் போதே வாயில் நீர் ஊறுது… மீன் மணமும் லேசா அடிக்குது… அதென்ன மீன் வாசம் என்று சொல்லாமல், மீன் மணம் என்று சொல்றேன்னு பாக்குறீங்களா??

இது ரெண்டையும் விட, நல்ல வார்த்தைப் பிரயோகம் நாற்றம் என்பது தான். ஒரு காலத்தில் நல்ல அரத்தம் தரும் இந்தச் சொல், சமீப காலமாய் பொருள் மாறி நாத்தமடிக்க ஆரம்பித்து விட்டது. கற்பூரம் நாறுமோ.. கமலச் செவ்வாய் நாறுமோ என்று ஆழ்வார் பாசுரங்களில் வந்த காலம் போய், அது வேறு வாய்…இது நாற வாய்.. என்று வடிவேலு வாயில் வந்து விழுந்து கிடக்கிறது, இந்த மணம் கமழ்ந்த தமிழ் வார்த்தை.

அந்தமானில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, சைவ உணவு விடுதிகள் உள்ளன.. சைவக் காரர்கள், அசைவ ஆட்களோடு இருந்து சைவம் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டியது, இங்கு மிகவும் அவசியமான ஒன்று. காய்கறி மார்க்கெட் அருகிலேயே மீன் மார்க்கெட் இருப்பதும் இங்கே சர்வ சாதாரணம்.

மீன் வாசமே இப்படி என்றால்… கருவாடு வாசம் எப்படி இருக்கும்??
கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள், ஆசை ஆசையாய் பரமக்குடி கருவாடுக்காய் ஏங்குவார்கள்… (மதுரை கிட்னி, சட்னிக்கு பேமசு என்பது போல், பரமக்குடி கலாட்டாவுக்கு அடுத்து கருவாடு தான் ரொம்ப பேமஸு). ஒரு படத்தில் கூட கருவாடு கூடை கூடையாய் கமல் கொண்டு வருவது போலவும், ஆட்டோக்காரர் படும் அவதியும் காமெடியாய் பாத்திருப்பீர்கள்.

அந்தமான் வந்த பிறகும் அந்த பரமக்குடி கருவாடுக்கு ஒரு டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. மறைந்த கக்கன் அவர்களின் மருமகன் நம்மூர் கருவாட்டுக்கு ரசிகர் என்ற ரகசியமான தகவல்… யாருக்கும் சொல்லிடாதீங்க..

கல்லூரிக் காலமாய் ஆகட்டும், அந்தமான் வந்த போதும் சரி… அந்த கருவாட்டை ஒரு வாசமில்லா மலரிது மாதிரி…. வாசமில்லா கருவாடு ஆக்கி எடுத்துச் செல்வது தான் பெரிய்ய கலை மாதிரி..
இதோ.. இந்த பிரச்சினையால், கருவாடு சாப்பிடும் ஆசையினையும் நாக்கையும் அடக்கும் அசைவ பிரியர்களுக்கான உன்னத டிப்ஸ்..

அரை கிலோ கருவாடை நாடு கடத்தி, வாசமில்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா..?? அதற்கு, அரைக்கிலோ கருவேப்பிலை வாங்குங்கள்.. முதலில் கருவேப்பிலையை படுக்க வைத்து அதன் மேல் பேப்பர் வைத்து கருவாட்டினை அடுக்கவும். பின்னர் அதன் மேல் இன்னொரு பேப்பர் வைத்து அங்கும் கருவேப்பிலை வைத்து சுருட்டவும்.. ஒவ்வொரு ரவுண்டிலும், கருவேப்பிலை வைக்க மறக்காதீர்கள்..

பேக்கிங்க் அளவு கொஞ்சம் பெரிசா இருக்கும்.. ஆனா மூக்கு மேலே வச்சி உறிஞ்சி பாத்தாலும் கூட, கருவாடு வாசம் வரவே வராது… கருவேப்பிலை தான் Default ஆக வந்து நிற்கும்..

ஒரு நாள் பரமக்குடியிலிருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஏம்மா கருவாட்டுக் கூடெ.. ஏறாதே…எறங்கும்மா..என்று கராராய் மூக்கில் விரலை … கையை வைத்து… வைது கன்டக்டர் விரட்டினார்.. நான் போனேன் வக்காலத்து வாங்க…

நீங்க கருவாடு சாப்பிடுவீங்களா?? என்று கண்டக்டரைக் கேட்டேன்..
ம்..என்றார்..

அப்பொ..ஏன் இவங்களை இந்தக் கெடாசு கெடாசுறீங்க?? இது என் கேள்வி.

இந்தக் கருவாட்டுக் காரிக்கு டீஸண்டா(???) இருக்கும் நீங்க சப்போர்ட்டா??? இது அவர்களின் ஆச்சரியமான கேள்வி..

நானும் ஒரு கருவாட்டுக்காரன் தான் என்று அந்த கருவேப்பிலை பேக்கிங்க் காட்டினேன்… கருவாட்டுக் காரிக்கு சீட் கிடைந்தது… நாலைந்து பேர் வாந்தி எடுதார்கள் என்பதை நான் எழுதப் போவதில்லை..

அரைக்கிலோ கருவாடு வாசம் எடுக்க இவ்வளவு சிரமப் பட்டா… ஒரு கடலில் இருக்கும் மீன் பூரா வாசமில்லாமெ மணக்க என்ன செய்யலாம்???

கம்பர் உதவிக்கு வருகிறார்… நான் பார்த்திருக்கேன் என்று.. வடிவேலு ரஜினி ஸ்டைலில் “நான் கேட்டேனா” என்று என்னால் கேக்க முடியலை… “சொல்லுங்க வாத்தியாரே நீங்க” என்றேன்.

கம்பர் தொடர்கிறார்: இலங்கையின் பிரமாண்டம் பாத்து அப்படியே பிரமித்துப் போகும் அனுமன், அப்படியே அதன் கடல் மீதும் ஒரு பார்வை பாக்கிறான். கடலில் கலப்பவை எவை? எவை? என்று கண் பார்க்க, மனசு அதுக்கு மேலும் போய் பார்க்கிறது..

பூக்களின் மீதுள்ள தேன்; சந்தனக் குழம்பு, கஸ்தூரியின் (நடிகை இல்லீங்க) வாசனைக் கலவை; வானுலக fresh ஆன கற்பகப்பூ; யானையின் மத நீர் இதெல்லாம் கடல்லெ கலக்க… கடல்லெ இருக்கிற மீன் எல்லாம் புலால் நாத்தம் போய் மணக்க ஆரம்பிச்சிட்டதாம்…

தேனுன் சாந்தமும் மான்மதச் செறி நறுஞ் சோறும்
வான நான் மலர்க் கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கழமும் அவ்வேலை.

இப்பொ சொல்லுங்க கருவாடு மணக்கிறதா??? நாத்தமடிக்குதா???