தண்ணீ கருத்திருக்கு…


விவேக் காமெடியில் கலக்கிய ஒரு படம். அதில் அவர் தெருக்குழாயில் தண்ணி குடிக்கப் போவார். வெறும் காத்து தான் வரும். அந்த மேலே தூக்கும் குழாயைப் பாத்துட்டு, இந்த மாடலை மாத்தவே மாட்டாங்களா?? என்பார். அது என்னவோ ரொம்ப பழைய மாடல் கொழா மாதிரி நெனைச்சி…

இப்பொ நவ நாகரீகமான விமான நிலையங்களில் எல்லாம் இதை விட மோசமான கொழா வச்சிருக்காங்க என்பது தான் கசப்பான உண்மை. ஹைதராபாத ஏர்போர்ட்டில் இருக்கும் கொழாவில் தண்ணியை வாயில் ஏந்தி குடிக்க சர்க்கஸ் பழகிய ஆட்களால் தான் முடியும். தில்லியின் பிரமாண்டமான Terminal -3 ல் இருக்கிற கொழாயைப் பிடிச்சி சட்டையில் தண்ணீ படாம குடிக்கிற ஆட்களுக்கு பெரிய்ய விருதே கொடுக்கலாம்.

சென்னை ஏர்போர்ட்டில் பேப்பர் கப் வைத்து அந்த சிரமத்தை குறைத்துள்ளனர். மதுரை ஏர்போர்ட் கொஞ்சம் வித்தியாசமானது. மதுரெ மக்கள் ஐடியாவே தனி தான். ஏக நவீனம் என்று வாய் வைத்து குடிக்கும் (நக்கி என்று சொல்வது நல்லாவா இருக்கும்??) கொழா இருக்கும். பக்கத்திலேயே நமக்கு ரொம்பவே பழகிப்போன அந்த நன்னாரி சர்பத் அளவுக்கு பெரிய்ய கிளாஸ் வச்சிருக்காங்க. சட்டை நனையாமல் தண்ணி குடிக்க முடிந்தது.

குடிக்கிற தண்ணிக்கு நாம படும் பாட்டை நெனச்சா சிரிப்பாத்தான் இருக்கு. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் தண்ணி வராத அந்தக் காலம் எப்படி இருந்தது?. பரமக்குடி சந்தைக்கும் சின்னக்கடைக்கும் நடுவில் எங்கள் வீடு. வியாழன் தோறும் சந்தைக்கு வரும் கிராமப்புற விவசாயிகள் கூட்டம் (பெரும்பாலும் மகளிர்….), உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் பங்குனி சித்திரை மாதங்களில், வீட்டின் முன் வந்து அம்மா தண்ணீ என்பர். (அது எப்படி இந்த வீட்டில் மட்டும் வந்து தண்ணீ கேக்கிறாக என்ற சந்தேகம் அப்போதே வந்தது. இந்த வீட்டில் வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற Precedence தான்.)

செம்பு நிறைய்ய தண்ணி எடுத்து தருவேன். சிலர் கையில் அப்படியே ஊத்தச் சொல்வர். முழங்கை வழியே பாதி நீர் ஒழுகும். அப்படியே முந்தானையில் துடைத்துக்கொண்டு நன்றியோடு பார்ப்பர். எப்படிக் குடிக்கிறார்கள் என்று பாக்காதே கேட்டவர்களுக்கு தண்ணி தா.. இது அம்மாவின் கட்டளை.

பள்ளியில் நீதி வகுப்புகளில் ஒரு சின்ன பாக்கெட் டைரி வாங்கி, அதில் தினமும் செய்யும் நல்ல காரியங்கள் எழுதச் சொல்வர் ஆசிரியர். சந்தை நடக்கும் அந்த வியாழன் அன்று மட்டும் இந்த தண்ணி தர்மம் கண்டிப்பா இடம் பெறும். மத்த நாட்களில் வாத்தியார் கேப்பார்… என்ன பரமக்குடி முழுக்க அவ்வளவு முள்ளு ரோடாவா போட்டு வச்சிருக்கா? எல்லாரும் ஒட்டுக்கா “ரோட்டில் கிடந்த முள்ளை எடுத்து ஓரத்தில் போட்டேன்” என்று எழுதி இருக்காங்களே???

மனதில் ஈரத்தை சுரக்க வைக்க அன்றைய ஆசிரியர்கள் செய்த சேவை அது. வீட்டுக்கு யார் வந்தாலும் உடனடியாக தண்ணீ தருவது நல்ல மரபு. வெயிலுக்கு அது தரும் ஆறுதல், வேறு எதுவும் தராது. இலங்கைத் தமிழரிடம் இந்த நல்ல பழக்கம் இல்லையே என்ற வருத்தம்தனை நண்பர் ஒருவர் தெரிவித்தார். இலங்கை பருவநிலை அதற்கு சாதகமாக இருந்திருக்காது என்பது என் கருத்து. சாஸ்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தின் படி இலங்கையிலிருந்து அந்தமானில் பல குடும்பங்கள் வந்துள்ளனர் என்பது கொசுறு தகவல்.

தண்ணீர் முழுசா இல்லாட்டியும் கூட, அதன் துளி கூட பாக்குறதுக்கு அவ்வளவு சுகத்தைத் தரும் தெரியுமா?. உதாரணமா ரோஜா மேல் சின்ன துளி, புல்லின் நுனியில் இருக்கும் பனித்துளி எல்லாமே கொள்ளை அழகு.
அந்த நீரின் தொகுப்பு தான் மேகம். மேகம் எதுக்கு பயன் பட்டதோ இல்லையோ, நம்ம சினிமா பாடல்களுக்கு ரொம்ம்ம்ம்பவே கை கொடுத்திருக்கு. மேகம் கருக்கையிலெ.. என்ற பாட்டு சட்டுன்னு ஞாபகத்துக்கு வரும் எல்லாருக்கும். வாணிஜெயராமின் குரலில் சுஹாசினியின் சோகமான முகம் எல்லாருக்கும் மனதில் பளிச்சிடும், அந்த பாலைவனச் சோலையில் (அந்தக் காலத்து படம் தானுங்க) மேகமே மேகமே பாடலில்.

தூது விடும் கலை அந்தக் காலத்து செமெ ஹிட்டான ஸ்டைல். இந்தக் காலத்தில் இம்மென்றால் இன்டெர்நெட் ஏனென்றால் எஸ்எம்எஸ் என்று ஆகிவிட்டதில் அந்த தூது எல்லாம் தோது படாது என்று ஆகி விட்டது. மேகத்தையும் தூது விட்டு பாட்டா படி இருக்காங்க. ஆனா மேகத்தை தூதுவிட்டா திசை மாறிப் போகுமுன்னு மேகத்துக்கே டாடா காட்டியதும் திரையிசையில் மட்டும் தான் நடந்திருக்கிறது.

தண்ணீ கருத்திருக்கு என்பதின் மூல அர்த்தம் தேடாமல், கருப்பு தண்னியெப் பத்தி பாக்கலாம். வெள்ளைப் பால் குடித்து வளர்ந்த மனிதனுக்கு கள் மேல் காதல் வரலாம். ஆனா அந்த கரும்தண்ணீ மேல் ஏன் இத்தனை கவர்ச்சி? குடிக்காதே.. குடிக்காதே என்று சொல்லியே குடிக்க அழைக்கிறதே அந்த திராவகம். கருப்பான தண்ணீயை ஹிந்தியில் காலாபானி என்பர். அந்தக் காலத்தில் காலாபானி என்று சொன்னால் அந்தமான் என்று அர்த்தம் (இப்பவும் காலாபானி என்கிறார்கள் அந்தமானை). அந்தமானில் உள்ளேயும் வெளியேயும் அந்த கரும் தண்ணீக்கு எந்த பஞ்சமும் இல்லை.

ராஜபார்வை படத்தில் அந்திமழை பொழிகிறது என்ற ஒரு சூப்பர் பாட்டு வரும். அதில் வரும் வைர வரிகள் இன்றும் நினைவில் இருக்கிறது. தண்ணீரில் நிற்கும் போதே வேர்க்கின்றதே… அதெப்படி? தண்ணீரில் நிற்கும் போது வேர்க்கும்?? மணிக்கணக்காய் கடலில் குளிக்கப் போய் உடலை ஊறப் போட்டும் பாத்தாலும் அப்படி ஒன்றும் வேர்க்கிற மாதிரி தெரியலையே…??

கவிஞர்களுக்கே தரப்பட்டுள்ள சுதந்திரம் அது. அவங்க ரேஞ்சே வேறு. எங்கே வேணும்னாலும் போகலாம். என்ன வேணுமாலும் யோசிக்கலாம் பாடலாம்.

இந்த தண்ணீரில் வேர்க்கும் சங்கதி, சுட்ட செய்தி என்று சொன்னா என்னோட சண்டைக்கு வருவீங்க. கிட்டத்தட்ட அதே மாதிரி அந்தக் காலத்திலேயே யோசிச்சவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

கிங்கரர் வதைப் படலத்தில் ஒரு சின்ன சீன் வைத்து படம் காட்றார் கம்பர். அரக்கர்கள் போர் செய்யறதைப் பாத்து கடலுக்கும், மேகத்துக்குமே வேர்த்து விறுவிறுத்துப் போச்சாம் (இந்தக்காலத்து பயத்தில் ஊச்சா போகும் வடிவேல் மாதிரி) அரக்கர்களின் ஆராவாராம் ஒருபக்கம். தேவர்களின் வாழ்த்துக்கள் இன்னொரு பக்கம். எது ஒசத்தி?? அதிலென்ன சந்தேகம்? ரெண்டாவது தான் டாமினேட் செய்ததாம்.

கார்க்கருந் தடங் கடல்களும் மழைமுகில் காணும்
வேர்க்க வெஞ்ச்செரு விளைத்து எழும் வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாத்து எழு பூசலின் ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே உயர்ந்தது அன்று அமரில்.

எங்கே இன்னொரு முறை அந்த கடமுடா என்று உச்சரிக்க வைக்கும் “கார்க்கருந் தடங் கடல்களும்” வார்த்தைகளை வாசித்துப் பாருங்கள்.. உங்களுக்கே வேர்த்துக் கொட்டும். எனக்கு பயமா இருக்கு. நான் ஓடிப் போயிடரேன்…