Brand Vs Punch Dialogue பிராண்ட் Vs பன்ச் டயலாக்


நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

நக்கீரனும் சிவனும் மோதும் திருவிளையாடல்

எல்லாம் வெலெ ஏறிப்போச்சி… பாக்கெட்டிலெ காசு கொண்டு போய் பையிலெ காய்கறி வாங்கிணு வந்த காலம் போயி, பையிலெ காசு கொண்டு போய் பாக்கெட்டிலெ காய்கறி வாங்கிணு வர வேண்டியிருக்கே என்கிற புலம்பல் ஒரு பக்கம். ஆனாலும் கார் வாங்கும் மக்களும், பல மாடல்களில் மொபைல் மாற்றி வரும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள். [Tab 1 மாடல் தெரியாத்தனமா வாங்கிட்டேன். அடுத்து Tab 2 வந்த பிறகு, இன்னுமா இதெ வச்சிட்டிருக்கே?? என்று துக்கம் விசாரிக்கிற மாதிரி என் தூக்கத்தெக் கெடுக்கிறாய்ங்கப்பா…அடிக்கடி.]

காலேஜ் டயத்திலெ சூப்பரான ஒரு பாட்டு, சுராங்கனி… சுராங்கனி. [இன்னும் கூட இந்த பாட்டுக்கு ஒரு வேல்யூ இருக்கத்தான் செய்யுது] அதுலெ மாலு மாலு மாலு என்று வரும். அதன் அர்த்தம் அப்பொ தெரியலை. ஆனா இப்போ இந்த மால் கலாச்சாரம் வந்த பிறகு தான் தெரியுது. ஓஹோ இந்த மால் பத்தித்தான் சொல்றாங்களோ என்று. மால் என்றால் பணம் என்கின்ற அர்த்தம் இருந்தாலும், மாலுக்குள் போயிட்டு வந்தா பணம் அம்பேல் தான். [ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. லிப்ஸ்டிக்கை விட, அத விக்கிற குமரிகள் உதட்டு லிப்ஸ்டிக் நல்லாவே இருக்குங்க..]

மதுரெயிலும் கூட இப்பொ மால் தலையெக் காட்டியிருச்சி.. எங்கே திரும்பினாலும் பிராண்டட் ஐடம் தான். ஒரு சாதாரண செருப்பு, அதாங்க.. சிலிப்பர் அது 2500 போட்டிருக்கு. அதெ வேறு எங்கேயும் போட முடியாது. பாத்ரூமில் மட்டுமே தான் போட முடியும். வேறு எந்த வேலைக்கும் ஆவாது. (லேடீஸ் சப்பலுக்காவது அப்பப்பொ வேலை வரும்) அதுக்கு போயி அம்புட்டு ரேட்டா?? அப்புறம் அதே மாதிரி ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விக்கும் பேனாக்கள். பெரும்பாலும் நம்ம ஏர்போர்ட்களில் நோட்டம் விட்டா தெரியும். அந்தமான் ஏர்போர்ட்டில் இப்பொத்தான் சிப்பி முத்து வச்சி நகை கடை வச்சிருக்காய்ங்க.. ஒரே மகளிர் அணி கூட்டம் தான். நம்மாலெ எட்டிக்கூட பாக்க முடியலை (தூரத்திலிருந்து பாகிறதோட சரி.)

எனக்கும் இந்த பிராண்டட் பொருளுக்கும் என்னமோ தெரியலை ஏழாம் பொருத்தம் தான். ரெண்டாயிரம் ரூபாக்கும் அதிகமா சொன்ன ஒரு பிராண்டட் சட்டை வாங்கி போட்டால், அதன் பட்டன் அடுத்த நாளே பல் இளிக்கும். செமெ பிராண்ட் பெல்ட் வாங்கி போட்ட அடுத்த வாரம் அது ரெண்டு பீஸா ஆயிருக்கும். சரி பேட்மிண்டன் வெளையாட நல்லா பிராண்டட் ஷூ வாங்கி, போட்ட ரெண்டாவது நாள் அன்பே சிவம் கமல் மாதிரி நடக்க வேண்டி வந்திடுச்சி.. நமக்கு என்னமோ அந்த குமார் ஷர்ட் (இன்னும் இருக்குங்களா 90 ரூபாய்க்கு சட்டை தந்த புண்ணியவான்கள்), சரவனா ஸ்டோர்ஸ் அன்னாச்சி கடை சரக்கு தான் ராசி போல் இருக்கு. (ஆமா… அந்த சரக்குகளோட பிரண்ட் பேரு எனக்கு புரியவே புரியாத புதிர். ஒருவர் சூப்பர் சரக்கு என்பார். இன்னொருவர் அதையே புளிச்ச தண்ணி என்பார். அது ஒரு தனிக் கதை)

பிராண்டட் வார்த்தைகளை பன்ச் டயலாக் என்று சொல்லலாமா? (இதென்ன கேள்வி? சொல்லிட்டாப் போச்சி.. யாரு எதிர் கேள்வி கேக்கப் போறாக… கேட்டாலுமே, சும்மா ஜாலிக்காக எழுதினதுன்னு சொல்லிட மாட்டோமா என்ன?) ஏதோ பன்ச் டயலாக் இப்பொ வந்த மாதிரி நெனைக்கிறீங்களா?? (இப்பொ கம்பராமாயணம் வருமே… இப்படி நீங்க நெனைச்சா அது ரொம்ப தப்புங்க.. அதுக்கு கொஞ்சம் இன்னும் டயம் இருக்குங்க)

ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்…. அம்பாள் எப்போது பேசினாள்?. இதெல்லாம் அந்தக் காலத்தில் வந்த, பன்ச் டயலாக் என்று பெயரிடப்படாத.. பன்ச் டயலாக்கள். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசும் திருவிளையாடல் படம் பாத்திருப்பீங்க. இதுவும் ஒரு வகையில் பன்ச் டயலாக் தானே.. இதே படத்தில் திருவிளையாடல் முடிந்த பிறகு நக்கீரனின் கடைசி டயலாக் “மன்னியுங்கள் தவறிருந்தால்”. (இது உண்மையில் நக்கீரனின் சொல்தானா? அல்லது ஏபி நாகராஜனின் டயலாக்கா என்ற கேள்வியை கொஞ்சம் தள்ளி வைப்போம்). சிவனிடம் மன்னிப்பே கேட்டாலும், மதுரெக்காரெங்க இப்புடித்தான் கேப்போமில்லெ என்று சொல்ற மாதிரி குசும்பா இல்லே..??

சொல்வதை எல்லாம் சொல்லிட்டு, மன்னிக்கனும் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா என்று சொல்வதற்கு உண்மையில் பெரிய மனசு வேணும். (அப்படிப் பாத்தா, சிவ பெருமானையே வம்புக்கு இழுத்து, உண்டு இல்லைன்னு ஆக்கிய நக்கீரனும் பெரிய மனசுக்காரர் தானா??).. சரி..இப்பொ அப்படியே கம்பர் பக்கம் போவோம். அங்கேயும் இப்படி வக்கனையா தன்னோட பாஸ் கிட்டெ சொல்றதெல்லாம் சொல்லிட்டு… தப்பா இருந்தா உட்ருங்க. என்பதாய் வருகிறது.

கம்பர் கவிச்சக்கரவர்த்தி அல்லவா.. அவர் கொஞ்சம் ஒரு படி மேலேயே போவார். பாஸ் கிட்டே, ”நீ தான் பெரிய்ய சூப்பர் ஸ்டார். நான் சாதாரண டம்மி பீசு..ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேன்.. ஏதாவது ஏடா கூடமா இருந்தா, திட்டனுமா திட்டு” என்பதாய் வருகிறது. இங்கே (பழைய) பாஸ் இராவணன். ஊழியர் – விபீஷணன். இராமன் படையைப் பற்றி போருக்கு முன்னர் எச்சரிக்கும் இடம். ஆனா எரிச்சல் இராவணனுக்கு… ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு?? பாட்டு பாருங்க.

கற்றுறு மாட்சி என்கண் இன்றாயினும்
உற்று உறு பொருள் தெரிந்து உணர்தல் ஓயினும்
சொற்றறு சூழ்ச்சியின் துணிவு சோரினும்
முற்றுறக் கேட்டபின் முனிதி மொய்ம்பினோய்.
(யுத்த காண்டம்; இராவணன் மந்திரப் படலம்)

ஒரு அதிகாரி (அரசன்) கிட்டெ ஊழியம் எப்படி பேசனும்கிறது சொல்லாமெ சொல்ற மாதிரி இல்லே..????

மகளிர்க்கு மரியாதை


காதலுக்கு மரியாதை என்பது தான் அடிக்கடி காதில் விழும் வாசகம். காதல் என்றால், என்ன ஒரு மரியாதை பெறும் ஓர் இடமா? பொருளா? அல்லது ஊர் சிரித்தது என்றால் ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று பொருள் படும் ஆகு பெயரா? (எட்டாம் வகுப்பில் படித்த தமிழ் இலக்கணம் இன்னும் கொஞ்சம் ஞாபகம் இருப்பதை எப்படியெல்லாம் சொல்லி நிரூபிக்க வேண்டி இருக்கு!!) அப்பொ இது காதலர்களுக்குத் தரும் மரியாதையாக இருக்கலாம்.

மரியாதை தரும் நேரத்தில், சில மரியாதை இழக்கும் சம்பவங்களும் நடக்கும். எனக்குத் தெரிந்த ஒரு கல்யாண வீட்டில் நெருங்கிய உறவினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மரியாதை என்றால் ஒன்றும் பெரிசா பூரண கும்ப மரியாதை எல்லாம் ஒண்ணும் கிடையாது. சும்மா ஒரு தேங்கா தரும் சம்பிரதாயம் தான். எல்லாருக்கும் தந்து முடித்தா? என்ற கேள்வியை ஒரு பெரியவர் கேட்டார். கூட்டத்தில் ஒருவர் கை தூக்கி, “எனக்கு வரவில்லை” என்றார். “ஓஹோ உனக்கும் தரணும் இல்லெ” என்று சொன்னது தான் தாமதம். அங்கே மோதல் ஏறபடும் அளவுக்கு நிலமை மரியாதை இழந்து நின்றது தான் வேடிக்கை.

ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் என்று சொல்லி வருகிறார்கள் இந்தக் காலத்தில். என்னோட பையன் விழுந்து விழுந்து ஒலிம்பிக் பாத்துக் கொண்டிருந்த போது, “இன்னும் இந்த gender discrimination இருக்கிறதே?” என்கிறான். என்ன ஏடா கூடாமா அவன் கண்ணில் பட்டதோ என்று பாத்தா, வாலிபால் நெட் உயரத்தில் வேறுபாடு இருக்கிறதாம். நானும் ஏதோ, ஆண்களின் சராசரி உயரம் பெண்களின் சராசரி உயரத்தில் வேறுபாடு இருக்கலாம் என்று கூறி சமாளித்தேன். [எனக்கும் உண்மையில் பதில் தெரியலை. இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே!]

மகளிர் மட்டும் என்றும் லேடீஸ் ஸ்பெஷல் என்றும் இப்போல்லாம் வந்துவிட்டன. அந்தமானில் மகளிருக்கென்று தனி ஜெயில் வைப்பர் தீவில் அமைத்து அன்றே மகளிருக்கு என்று தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அன்றைய ஆங்கில அரசு. அதை ஒட்டி தற்போது தான், மகளிர் ஸ்பெஷல் பஸ் இயங்க ஆரபித்துள்ளது. அதில் மகளிர் நடத்துனரையும் அந்தமான் நிர்வாகம் நியமித்துள்ளது. [குடும்பத்தை நடத்துவது கைவந்த கலையாய் வைத்திருக்கும் மகளிருக்கு பஸ்ஸை நடத்துவது சிரமமா என்ன?]

ஆனால் இந்த மகளிருக்கு மரியாதை என்பது என்னவோ இப்பொ வந்த சமாச்சாரமாய் தான் பார்க்கிறார்கள். சில ராணிக்கள் அந்தக் காலத்தில் ஆட்சி செய்திருந்தாலும், அந்த சந்தேகம் வரத்தான் செய்கிறது. தமிழர்களின் வாழ்வில் மகளிருக்கு மரியாதை தந்திருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியும். ஆதாரம்….?? (கம்பராமாயணம் வர இன்னும் கொஞ்சம் காத்திருங்க பிளீஸ்..) சமீபத்தில் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். 12ம் நூற்றாண்டு சிற்பம் ஒன்றை அங்கு உள்ள மியூசியத்தில் ஒரு சிலையாக வைத்திருந்தனர். சிலையின் பெயர் துவாரபாலகி. அதாவது பெண் போலீஸ் அல்லது Security Guard. அப்பொ…. நடுவில் தான் சிக்கல் வந்திருக்குமோ…

இப்பொவும் கூட பார்ட்டிகளில் (வார இறுதி கொண்டாட்ங்கள் நீங்கலாய்) கொஞ்சமாய் கூத்தடித்துவிட்டு பின்னர் சாப்பாடு தட்டு ஏந்தும் போது (பஃப்பே என்று நாகரீகமாய் அழைப்பர்). பெரும்பாலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பர்கள். [ஒரு வேலை அவங்களை சாப்பிட விட்டு நாம இன்னும் கொஞ்சம் சுதி ஏத்திக்கலாம் என்ற நல்ல எண்ணமாகவும் இருக்கலாமோ!!] இந்த மகளிருக்கு மரியாதை தரும் வித்தை எப்பொ வந்திருக்கும்? [இந்த மாதிரி கேள்வி வரும் முன்னே…. கம்பராமாயணம் வரும் பின்னே… இது தான் தெரிஞ்ச விஷயம் தானே!!]

அனுமன் சீதையைக் கண்டு திரும்பின் பிறகு நடந்த சின்ன சம்பவம் பாக்கலாமே! ராமனிடத்தில் நடந்த சம்பவங்களை சொல்ல வேண்டும். என்னவோ ஏதோ என்று டென்ஷமாய் ராமனும்… அதை விட பதட்டமாய் லெட்சுமணன். வந்தார் அனுமன். ராமனை வணங்கவில்லை. அதற்குப் பதில் சீதை இருந்த தென்திசை பாத்து நிலத்தில் விழுந்து வணக்கம் வைத்தாராம். எப்புடீ நம்மாளோட மகளிருக்கு முதல் மரியாதை??

எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலைவன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.

அப்புறம்… எங்க வீட்லெ மீனாட்சி ஆட்சி தான். (அவங்க வீட்டைப் பாத்துக்க நான் ஜாலியா கம்பராமாயணம் படிச்சிட்டே இருக்கேன். ) ஆமா உங்க வீட்லெ எப்படி??