உரோமபத மன்னன் மகளிர் சந்திப்பு


கம்பனில் சந்தித்த வேளையில் சிந்தித்தவை – 6

கம்பன் காப்பியத்தில் இன்றும் நாம் காண இருப்பது வசிட்ட முனிவர் சொன்ன காட்சி. உரோமபத மன்னன் அரசாட்சி செய்த காலத்தில் மழை பெய்யாமல் இருந்ததால், அதனைக் களைய முனிவர்களின் சந்திப்பில் சில ஆலோசகள் சொல்லப்படுகிறது. அதனை அமலாக்கும் விதமாய் அடுத்த இந்தச் சந்திப்பு நிகழ்கிறது.

நாட்டிற்கு மழையினை வரவழைக்க ஒரு சிறப்பான தவமுனியினை அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் அவையில் இருந்த பெண்கள் எழுந்து நின்று, நாங்கள் சென்று அந்தத் தவமுனியை அழைத்து வருவோம் என்று வணங்கிக் கூறினர். நம் முன் இம்மகளிர் சந்திப்பில் சில கேள்விகளை எழுப்புகிறது.

மகளிர் அரசவையில் இருந்திருக்கிறார்களா?
மகளிருக்கு அரசுப் பணிகளில் பங்கேற்கும் உரிமையும் தரப்பட்டிருக்கிறதா?
அப்படி மகளிர் சொல்லும் ஆலோசனையும் ஏற்கப்பட்டுள்ளதா?

இவைகளின் பதில், மகளிரை அடிமைகளாக நடத்தவில்லை என்ற முடிவுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.

கம்பன் சந்திப்பில் மகளிர் என்றே சொல்வதாய் எனக்குப் பட்டது. ஆனால் அதில் சொல்லப்பட்டிருக்கும் வர்ணனைகளை வைத்து உரையாசிரியர்களோ, அவர்கள் விலைமகளிர் என்று சொல்கின்றனர். அப்படி என்ன சொல்லி விட்டார் நம் கம்பன்? அவையில் வந்த மகளிர் இப்படி இருந்தார்களாம். ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடையவர்களாகவும் இருந்தார்களாம். அது போக, யாம் சென்று முனிவனை அழைத்து வருவோம் என்று கூறிய துணிவு இருந்த்தினாலும் அம்மாதர் விலை மகளிர் தான் எனச் சொல்கின்றனர் சான்றோர்.

அப்படியே வைத்துக் கொண்டாலும், விலைமகளிரை அரசவையில் வைத்துக் கொண்டாடும் வழக்கம் இருந்திருக்கிறதா? அதுவும் அரச காரியங்களைல் மூக்கை நுழைக்கும் அளவு அதிகாரமும் தரப்பட்டிருக்கிறதா? யோசிக்க வைக்கிறது.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள சங்க மக்களின் பால் உறவுச் சிந்தனைகளும் சமூக ஒழுங்கும் என்ற நூலைக் கையில் எடுத்தேன். சங்க காலம் என்பது மனித வளத்தினை வடித்தெடுப்பதற்கான பொற்காலம் என்கிறார்கள். இதனை திருநெல்வேலியிலிருந்து முனைவர் இரா சிவசங்கரி அவர்கள் சிறப்பான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார். (செம்மூதாய் வெளியீடு)

தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் இன்று வரை பல பெயர்களால் விலைமகளிரைக் குறிப்பிட்டுள்ளனர். பரத்தையர் என்பது சங்க இலக்கிய இலக்கணத்தில் காணமுடிகிறது. பின்னர் அற இலக்கியங்களில் வரைவின் மகளிர் என்று சொல்கிறார்கள். காப்பியங்களில் கணிகையர் என்றும் காலத்திற்கு ஏற்றார்போல் அவர்களின் பெயர்களும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. சங்ககாலத்தில் கூறப்பட்ட காமக்கிழத்தி என்பவள் தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொண்டபின் காமம் காரணமாக உரிமை கொடுத்து மணந்து கொள்ளப் பட்ட பெண்களாவர். இவர்களையும் மூன்று வகைப்படுத்திச் சொல்லி இருக்கிறார் இளம்பூரணார். இதில் ஒத்தகிழத்தி என்பவள், தலைவியை ஒத்த குலத்தை உடைய இரண்டாவது உரிமைப் பெண் என்கிறார். [அதாவது குருடான கோழி எல்லாம் கிடையாது.] இழிந்த கிழத்தி என்பவர் அரசர்களால், அந்தணர்களுக்கு கொடுக்கப்பட்ட பெண்களாம். வரையப்பட்டோர் என்பவர்கள் ஆடல், பாடல், அழகு, அறிவில் சிறந்து பலருக்கு காலம் கணித்து தந்து, கூடி மகிழ்விக்கும் கணிகையர் குலத்தில் இருந்து, தலைவன் தனக்கென வரையறுத்துக் கொள்ளப்பட்ட உரிமை பெண் என்கிறார்.

தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே பொருள் வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர் பொதுமகளிர். தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது.

கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே சான்று சொல்கின்றன. சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி போன்றவை சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள். [நன்றி: ம.செந்தமிழன் வலைப்பூ] அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோர் தேவரடியார்.

கம்பன் எழுதிய இராம அவதார நூலை அரங்கேற்றம் செய்ய ஒரு அரங்கேற்றப்(!) பாவையின் சிபாரிசு தேவைப்பட்ட கதை தெரியுமா உங்களுக்கு? தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்று ஒரு தாசி இருந்தாளாம். கம்பன் காவியத்திற்கு சான்றிதழ் இவரிடமிருந்து பெற்று வந்தால் தான் அரங்கேற்றம் செய்ய இயலும் என்றனராம் அறிஞர்கள். தாசி உருவில் நடமாடும் சரஸ்வதியாம் அவர். அவரும் ஒரு பாடலைப் பாடி அதை ஏட்டில் எழுதி கம்பரிடம் கொடுத்தாராம் படிக்காமலே. ”என்னுடைய காவியத்தை ஆய்வு செய்யப் போவதில்லையா?” என்று கம்பர் கேட்க, ”இல்லை இராமகாதை அரங்கேற்றத்தின் போது எப்படியும் எனக்கும் அழைப்பு வரும். அப்பொழுது தங்கள் திரு வாயாலேயே அதைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதில் சொன்னாராம். அஞ்சனாட்சி எழுதிக் கொடுத்த பாடல்

அம்பரா வணி சடை யரண யன் முதல்
உம்பரான் முனிவரால் யோக ராலுயர்
இம்பரார் பிணிக்கரு மிராம வேழஞ்சேர்
கம்பராம் புலவரைக் கருஹ்திலிருத்து வாம்.

இத்தனை சிரமங்களுக்கு பின்னர்தான் அந்த இராமகாதை அரங்கேற்றம் ஆகியிருக்கிறது [நன்றி: கம்பர் இராமாயணம் அரங்கேறிய கதை – கவிமாமணி பூவாளூர் ஜெயராமன்] அந்த ராமகாதை தான் இப்பொழுது கம்பராமாயணம் என்று நாம் எல்லாம் படித்துக் கொண்டிருக்கிறோம். சரி… மீண்டும் அந்த சந்திப்பு நிகழ்ந்த பாடலை பார்த்துவிட்டு அடுத்த சந்திப்பிற்கு தயாராவோம்

ஓத நெடுங் கடல் ஆடை உலகினில் வாழ்
மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அருந் தவனைக் கொணரும் வகை
யாவது?” எனக் குணிக்கும் வேலை.
சோதி நுதல். கரு நெடுங் கண். துவர் இதழ் வாய்.
தரள நகை. துணை மென் கொங்கை
மாதர் எழுந்து. “யாம் ஏகி அருந் தவனைக்
கொணர்தும்” என வணக்கம் செய்தார்.

குளிர்ந்த பெரிய கடலை ஆடையாக உடைய இவ்வுலகிலே வாழும் மனிதர்களை எல்லாம் விலங்குகள் என்றே நினைத்திருக்கின்றகுற்றமற்ற குணங்களை உடைய அரிய தவத்தை உடைய அந்த முனிவனை இங்கு அழைத்து வரக்கூடிய வழி யாது? என்று சிந்திக்கும் போது, ஒளி பொருந்திய நெற்றியையும், கருமையான நீண்ட கண்களையும், பவளம் போன்ற உதடுகளையும் கொண்ட வாயையும் முத்துப் போன்ற பற்களையும் மெத்தென்ற இரு தனங்களையும் உடைய மாதர் சிலர் எழுந்து நாங்கள் சென்று அந்த அருந்தவனை இங்குக் கொணர்வோம் என்றனர்.

சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…

Leave a comment