தயரதன் வசிட்டர் சந்திப்பு
கம்பனின் படைப்பில் இதுவரை பார்த்த மூன்று சந்திப்புகள் எல்லாமே, வசிட்ட முனிவர் தன் மனதில் நினைத்துப் பார்த்தவைகள். இன்று நாம் அந்த வசிட்டர் எப்படி தயரத மன்னரைச் சந்தித்தார்? என்பதைப் பார்க்க உள்ளோம். அதனைக் கம்பன் அவர்கள் தன்னுடைய வரிகளில் எப்படி குறிப்பிட்டுள்ளார்? என்பதையும் சற்றே பார்க்கலாம். நேராக மூக்கைத் தொடுவது என்பது தான் நம் வழக்கம் இல்லையே! சற்றே கொஞ்சம் கொஞ்சமாக சுற்றிவிட்டு, மீண்டும் கம்பனின் மூக்கை தொடுவது பற்றி யோசிக்கலாம்.
களத்தூர் கண்ணம்மா… களத்தூர் கண்ணம்மா என்று ஒரு படம். இந்த படத்தில் மற்ற எல்லாச் சிறப்புகளையும் தூக்கி எறிந்து விட்ட்து ஒரு குழந்தை நட்சத்திர அறிமுகம். ஆம். அன்று குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமானவர் தான், இன்றைய உலக நாயகன் கமலஹாசன்.
இப்போதைக்கு, களத்தூர் கண்ணம்மா என்றாலே கமலஹாசன் அறிமுகமாகிய படம் என்கின்ற அளவிற்கு புகழ் பெற்று விட்டது அந்தப் படம். அந்தக் காலத்தில், அதாவது கமலஹாசன் என்று பெயரே, யாரும் அறியாமல் இருந்த காலத்தில் நடந்திருக்கும் செய்தியினை ஒட்டியது தான் நான் சொல்ல வந்திருக்கும் சேதி. இந்தப்படம் தமிழகமெங்கும் சக்கை போடு போட்டதாம். அதைப் போலவே கமலஹாசன் பிறந்த ஊரான பரமக்குடியிலும் மிகப் பிரபலம் அப்படம். அந்தப் படத்தில் கமலஹாசன் பாடுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும் பாடல் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே! அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே! மேலும் பிரசித்தம். அந்தப்பாட்டை அப்படியே கொஞ்சம் மாற்றி வீடுகளின் பாடிக் கொண்டிருந்தது இன்னும் நினைவில் இருகிறது. தமிழின் சிறப்பே அது தானே!
தமிழில் ஒன்றை நாம் எப்படி உச்சரிக்கின்றோம் என்பதை ஒட்டி அதன் பொருள் மாறுபடும். நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் கமலஹாசன் பாடிய பாடலின் சொற்களைப் பிரித்தும், சேர்த்தும் பாடிக் கொண்டிருந்தார்கள். அதனால் அதன் பொருளும் மாறி இருந்தது. அம்மா உண்ணியே! அப்பா உண்ணியே என்று பாடிக் கொண்டிருந்தனர். பரமக்குடி வட்டாரத்தில் உண்ணி என்பது, ஆடு மாடுகள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு பூச்சி.

ஆனால் அந்தப் படத்திலோ, இறைவனைப் பார்த்து அம்மாவும் நீயே தான்; அப்பாவும் நீயே தான்; என்று பாடுவது போல அமைந்த பாடல் அது. அப்பா ஒரு பூச்சியைப் போல்; அவன் அம்மாவும் ஒரு பூச்சி தான்; கடவுளே! நீ தான் எல்லாம் என்ற வகையில் வயோதிக பாட்டிகள் பாடிக்கொண்டிருந்தனர். சிறுவயதில் கேட்டது இன்னும் மனதில் நினைவாக இருக்கிறது. கடவுளையே இப்படிப் புகழ்ந்து பாராட்டி வருகிறார்களே! ஏன் இப்படி? உணர்வுபூர்வமாக யோசிக்கத் தோன்றுகிறது, இந்த பாடலை கேட்டதும். கடவுள் தான் எல்லாமே என்று முழு சரணாகதி அடந்த நினையினைக் கடவுளிடம் சொல்வது போலத்தான் அமைந்திருந்த்து அப்பாடல்.

அதேபோலத்தான் எல்லாம், எல்லாம்தான் என்று பிரகாஷ்ராஜ் ஒரு ரகசியமானதை பகிரங்கமாக விளம்பரம் செய்து ஏதோ விற்பனை செய்து கொண்டு இருந்தார். ஆனால் வெளிப்படையாக எல்லாவற்றையும் விட்டாலும் கூட, விடாமல் இருக்க போவது எதை? இப்படி ஒரு கேள்வி கேட்டாரல், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தான் பதில் சொல்வார். இங்கே இப்படிப்பட்ட கேள்விகு ஓர் ஆங்கிலேய அதிகாரி என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.
அது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலம். ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு வடமொழியில் இருந்த பகவத்கீதையை மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதற்கான செலவு கணக்கை எடுத்து அவருடைய மேலதிகாரிக்கு அனுப்பி இருக்கிறார். மேலதிகாரியோ, இன்றைக்கும் கேட்கும் அதே கேள்வியை அன்றைக்கே கேட்டாராம்! இதற்காக ஆகின்ற செலவை நியாயப்படுத்த வேண்டும் என்றாராம். அதற்கு அந்த ஆங்கிலேய அதிகாரி சொன்ன பதில் தான், மேலே குறிப்பிட்ட எல்லாம் தான்… எல்லாமே தான் போன்ற பதில். நாம் தான் ஏதோ ஒரு காலத்தில், இங்கிலாந்துக்கு திரும்பி செல்லத்தான் வேண்டும். அப்பொழுது ஒன்றுமே வேண்டாம் ஆனால் எல்லாமும் இருக்கின்றது போன்ற நிலையிலும் ஏதாவது ஒன்றை இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்லவேண்டும் என்றால், அது இந்த பகவத்கீதை ஆகத்தான் இருக்க முடியும். மேலதிகாரிக்கு அவரின் விளக்கம் பிடித்திருந்தது. பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையும் அப்படித்தான் தொடங்கியது.
இப்படித்தான் கம்பனின் வரிகளை படித்தவுடன் நினைக்கத் தோன்றுகிறது. வசிட்ட முனிவரை தசரத மன்னன் சந்தித்தபோது. யாரையாவது சந்திக்கும் பொழுது, நீங்க வல்லவர், நல்லவர் என்பதும், மானே தேனே எனப் புகழ்ந்து தள்ளுவதும் இப்போதைய பழக்கம் என நினைக்க வேண்டாம். காலம் காலமா கம்பன் காலம் தொட்டு அது நடந்திட்டே இருக்கிறது. இது தூரமாய் இருக்கின்ற ஒருவரை, மிகவும் அருகில் அவரை நெருக்கி, நெருங்கியவர் ஆக்கிக் கொள்வதற்கு இத்தகைய புகழ் வார்த்தைகள் தேவைப்படுகின்றது. இதைத்தான் கம்பனும் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பது போலத்தான் படுகிறது.
ஆயவன் ஒரு பகல் அயனையே நிகர்
தூய மா முனிவனைத் தொழுது தொல் குலத்
தாயரும் தந்தையும் தவமும் அன்பினால்
மேய வான் கடவுளும் பிறவும் வேறும் நீ.
தயரத மன்னன், ஒரு நாள் பிரமனுக்கு ஒப்பாகத் திகழும் தூய்மை பொருந்திய மாமுனிவனாகிய வசிட்ட முனிவனை வணங்கி, பழமை பொருந்திய எமது குலத்தாய்மாரும், தந்தைமாரும் தவப்பயன்களும் அன்பு கொண்டு நான் விரும்பும் கடவுளும் மற்றையோரும். வேறுபட்ட உயிர்களும் எல்லாமே எனக்குத் தாங்களேதாம் என்றாராம். வசிட்டரை மன்னன் எப்படி மதித்துள்ளான் என்பது இதனால் புலப்படும்.
அதென்ன ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் பிரம்மன்? இதற்கும் பதில் பகவத்கீதையில் இருக்கிறது. ‘ஆயிரம் யுகங்களின் கால அளவு பிரமனின் ஒரு பகல் அளவு’ என்று குறிப்பிடுகிறது. இங்கு ‘யுகம்’ என்பது ‘மகாயுகம்’ என்பதைக் குறிக்கிறது என்பதை உரையாசிரியர்கள் அனைவரும் சுட்டிக் காட்டுகிறர்கள். ஒரு மகாயுகம் என்பது தொடர்ந்து வரும் நான்கு யுகங்களின் கால அளவு.
அதாவது கிருத யுகம் (17,28,000 ஆண்டுகள்), திரேதாயுகம் (12,96,000 ஆண்டுகள்), துவாபரயுகம் (8,64,000 ஆண்டுகள்), கலியுகம் (4,32,000 ஆண்டுகள்); ஆக மொத்தம் ஒரு மகாயுகம் என்பது 43,20,000 ஆண்டுகள். ஆயிரம் மகாயுகங்கள் என்றால், 432 கோடி ஆண்டுகளுக்குச் சமமானவரே என்று அழைக்கிறார் அரசர். அப்புறம் சந்திப்பு வெற்றியாய் முடிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன?
கம்பன் வரிகள் மூலம் நாம் கற்க வேண்டிய பாடமும் அது தானே!
சிந்திப்புகளுடன் சந்திப்புகள் தொடரும்…