தென்கச்சி சுவாமிநாதன்
’இன்று ஒரு தகவல்’ மூலம் பிரபலமாகி நகைச்சுவைப் பேச்சாளராக உலா வந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள், 2001 ஆம் ஆண்டு, அந்தமான் மனித உரிமைகள் இயக்க நிகழ்ச்சிக்காய் போர்ட் பிளேயர் வந்திருந்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை வரவேற்க சிறப்பு அனுமதி வாங்கி, விமான நிலையத்தின் உள்ளேயே சென்று காத்திருந்தனர்.
தென்கச்சியார் இறங்கி வந்தார். அவரை வரவேற்பு அறையில் அமர வைத்து விட்டு லக்கேஜ் வருவதற்கென காத்திருந்தனர்..
சிறிது நேரம் கழித்து, அவரே ”போகலாம்லெ” என்றார்.
”லக்கேஜ் எந்த கலர், எப்படிப்பட்டது என்று சொன்னால், அதனை எடுத்துவர உதவிகரமாய் இருக்கும்” இது ஏற்பாட்டாளர்கள்.
”எனக்கு எந்த லக்கேஜும் இல்லையே. கையில் கொண்டு வந்திருக்கும் இந்த மஞ்சள் பை மட்டும் தான் என் லக்கேஜ்”
30 வருடங்களுக்கும் மேலாக எல்லார் காதுகளையே, தன் வசம் வைத்திருந்த தென்கச்சியார், தன் வசம் இவ்வளவு அரிய எளிமையையும் வைத்திருந்தார் என்பதை அறிந்த போது வியக்காமல் இருக்க முடியவில்லை.
இரவு உணவு தமிழர் சங்க தலைவர் வீட்டில் ஏற்பாடு. தென்கச்சி அய்யா அவர்கள் பல நிகழ்ச்சிகளை கூறி அனைவரையும் சிரிப்பிலும் ஆச்சரியத்திலும் (ஆனால் அவர் சிரிக்காமல்) ஆழ்த்திக் கொண்டிருந்தார். திடீரென்று ஒரு சிறுவன் “அங்கிள் நீங்க டி வி லெ மாதிரியே இங்கேயும் ஏன் சிரிக்க மாட்டிறீங்க?“ என்று கேட்டதும் அவர் உட்பட அனவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

தன் சிந்தனைகளாலும், கருத்துக்களாலும் தமிழர் நெஞ்சமெலாம் சிரிக்க வைக்கும் தென்கச்சியாரையே சிரிக்க வைத்த காட்சி வியப்பு தானே!
[தகவல் உதவி: அந்தமான் தமிழர் சங்க தலவர் திரு காஜா முஹைதீன் மற்றும் துணைத்தலைவர் முனைவர் திரு இராஜ்மோகன் அவர்கள் – சிரிக்க வைத்த சிறுவன் இம்ரான்]
தொடரும் அடுத்த விஐபி எழுச்சிக் கவிஞர் சிநேகன்