கற்போம் கம்பனில் – 27
(22-04-2020)
இந்த வீணாய்ப்போன லாக்டவுன் வந்தாலும் வந்தது, கணவன்மார்கள் சமைப்பது போலவும், மனைவி கால்மேல் கால்போட்டு உக்காந்து மொபைல் நோண்டுவது போலவும் படம் வந்து கொண்டே இருக்கு. என்னோட ஊகம் என்னன்னா, கணவன் என்ற ஒரு ஜந்து, ஒரு நாள் சமையலில் உதவி இருப்பான். ஆனா அதெப் படம் எடுத்து ஊரெல்லாம் உதார் விட வேண்டியது. யாரிடமும் சொல்லாதீங்க…. ஒரு ரகசியம் சொல்றேன்; ”என் வீட்டுக்காரரை யாராவது ஒரு மாசத்துக்கு லீசிலெ எடுத்துக்கிறதுக்கு ஆள் பாருங்க” என்று பாதிக்கப்பாட்டோர் மனைவிமார்களிடமிருந்து உதார் கோரிக்கை வந்தது. உள்ளிருப்பு நீடிக்க நீடிக்க, ”அந்த மனுஷன் நல்லவர் தான்… ஆனா கொஞ்சம் நய் நய்…” (நல்ல வேளை நாய்.. நாய் என்று சொல்லவில்லை) எப்படி உதார் உட்றாய்ங்க ரெண்டு பக்கமும் பாத்தீயளா?
உதார்த்தனம் விடுங்க. தமிழில் கொடுத்து வச்ச ஆளு என்ற, அந்தக் காலத்து பிராப்தம் (’சந்தனத்தில் ஒரு வாசமெடுத்து….’ பாடல் முனுமுனுத்தால், ஒன்று மட்டும் உறுதி: உங்கள் வயது 50க்கு மேல்) அல்லது பேறு பத்திப் பாப்போமே. சகல கவலைகள் ஏதுமின்றி இருந்த ராசாவை புகழ்வது கவிஞர்களுக்கு பிஜ்ஜா சாப்பிடுவது மாதிரி. ஒரு ராசாவோட Asset என்ன என்று IT டிபார்ட்மெண்ட்டுக்கே தெரியலையாம். அம்புட்டு சொத்து. டெய்லி சண்டெ போட்டு கொண்டார்வது, தினமும் எடுத்துக் கொள்வதால் செல்வமும் ஊறுதாம் (தொட்டணைத்தூறும் மணற்கேனி போல் போலெ..), அந்த நேரத்திலும் ஒளிபடைத்த வேலினாய் வா(ழ்க) வா(ழ்க) என்று பாடுகிறார் யதார்த்தமாய் ஒரு கவிஞர்.
”கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,
என்றும் வறிஞர் இனம்கவர்ந்தும், – ஒன்றும்
அறிவு அரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
செறிகதிர்வேல் சென்னி திரு”
யதார்த்தத்தை மீறி யோசிப்பது தான் கவிஞர்களின் கற்பனை. இப்படி யோசித்த கண்ணதாசனிn 1961 ஆம் ஆண்டின் கற்பனை ஒன்னெப் பாக்கலாமே; கண்ணு எம்புட்டு சின்னது? கலரோட கண்ணுக்குள்ளே கலர்கலரா படம் தெரியுதாம். ஓவரா இல்லெ? ஆமா இந்த கையில் சாய்வது எப்படி? யாராவது டிரை செய்து சொல்லுங்களேன். மனசுலெ யதார்த்தமா பட்டது. அதான்… சரி சரி, பாட்டு பாருங்களேன்…
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது…..
பின்னி வைத்த கூந்தலில் நீ முல்லை பூவை சூடினால்
கண்ணி நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை தாங்குமா
மின்னலிடை வாடினால் கண்ணி உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்
அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்
”யதார்த்தமா நானும் இருந்தேன்; பதார்த்தமா அவனும் என்னெப் பதம் பார்த்துட்டான்” என ஒரு வடிவேல் காமெடி வரும். இதில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய தத்துவம்: யதார்த்தம் வந்தா, அடுத்து பதார்த்தம் பத்தி யோசிக்கணும். அதுக்கு நாம பட்டினப்பாலைக்குத் தாவ வேண்டி இருக்கும். அங்கே தான் முத்தத்தில் (அடெ நீங்க நெனெக்கும் முத்தம் இல்லீங்கோ, இது முற்றம்) நெல்லு காய வச்சிருக்காய்ங்க அம்மணிகள். கோழி அதெக் கொத்த வருது. பாத்தாக அம்மணி… காதுலெ போட்டிருந்த கணமான (எந்த நகைக்கடை விளம்பரத்திலும் வராத) காதணி கொண்டு எறிஞ்சி விரட்டினாகளாம். ரொம்ப ஓவரா தங்கம் வச்சிருப்பாகளோ? அது எவ்வளவு பெர்சு தெரியுமா? அந்தக்காதணி கோழியெ வெரட்டிட்டு அப்புறம் பீச்சிலெ போய் விழ, அங்கே பசங்க ஓட்டிட்டு வந்த டிரை சைக்கிளுக்கு பிரேக் போட்டதாம்… எனக்கு என்ன கற்பனைன்னா…. அந்த காதணியை தமண்ணா போட்டா எப்படி இருக்கும்? (ஆமா எனக்கு வாங்கிக் கொடுக்க உங்களுக்கு ஏன் மனசு வரலை – இது என் வீட்டு அம்மணி வாய்ஸ்); விடு ஜூட்; பாட்டுப்படிக்கலாம் வாங்க.
அகன்நகர் வியன்முற்றத்துச் சுடர்நுதல் மடநோக்கின்
நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை
பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
முக்கால் சிறுதேர் முன்வழி விலக்கும்
தார்த்தம் என்றால் ஒப்பந்தமாம் (நிச்சய தார்த்தம்???); ஒப்பந்த அடிப்படையில் சேலை உற்பத்தி செய்வது என்பது பரமக்குடியில் சரளமாய் புழங்கும் வாசகம். அது சரீ… பரமக்குடியின் பெருமை என்ன? எனக் கேட்டால் பட்டியல் போட முடியுமா? ’கமல் பிறந்த ஊர்…’ இது போதாதா என்ன? ஆனா தேவாரத்தில் திருன்ஞான சம்பந்தர் ஓர் ஊரெப் பத்தி சொல்றார் பாருங்க…
திருச்சண்பை நகருக்குத் தான் இம்புட்டு பில்டப்பு; கரோணா காலாவதி ஆகட்டும்; ஒரு எட்டு பாத்துட்டு வரலாம். முழவு மாதிரியான இசை ஒலிக்குதாம்; அடி எடுத்து வைக்கும் அத்தனெ பேரும் வட்டணை மாதிரி டான்ஸ் ஆட்றாகளாம், சிவன் போஸ்டர் கையில் இருக்காம்; நெத்தியிலும் கட்டியிருக்காகளாம்; எப்பவும் மணக்குதாம் – உமா தேவி வச்சிருக்கும் பூவால்; எப்போதும் உண்மையே பேசும் ஆளுங்க இருக்காகளாம்; அறுபத்து நான்கு கலைகள் கிளி மாதிரி சொல்லித் தர ஆள் இருக்காம்; சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலை இருக்காம்; யப்பா…. போய் பாத்தே ஆகணும். இதோ தேவாரப் பதிகம்; படிங்க புண்ணிய தீரத்தம் போகாமலேயே புண்ணியம் கிடைக்கும்.
கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.
கம்பர் TeamLink இல் அழைப்பு அனுப்பி இருந்தார்; காணொலி/ளி இல் உரையாடியதில் கிடைத்த தகவல் இதோ உங்களுக்காய். உதார், பிராப்தம், யதார்த்தம், பதார்த்தம், தார்த்தம், தீர்த்தம் இதே ஃப்ளோவில் உதாத்த அணி வருதாம். உதாத்தம் என்பதற்கு ‘வேறு ஒன்றிற்கு இல்லாத தனிச் சிறப்பு’ என்று பொருள். இவ்வணிக்கு ‘வீறுகோள் அணி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. வியக்கத்தக்க செல்வத்தினது சிறப்பையும், மேம்பட்ட உள்ளத்தினது உயர்ச்சியையும் அழகுபடுத்திக் கூறுவது உதாத்தம் என்னும் அணி ஆகும்.
இப்பொ பாத்தது எல்லாம் செல்வச் சிறப்பு பற்றி பாடப்பட்ட பாடல்களாம்; மேம்பட்ட உள்ளத்து உயர்ச்சி பற்றி பதிவு 2/2 இல் வரும். (ஆமா அந்த சின்ன சின்ன கண்ணிலே…? கம்பன் கோபமாய் முறைத்தார்)
இராமாயணத்தில் வரும் நகரப்படலத்தில் வரும் பாடல் தந்தார்; அந்நகரத்தில் வாழ்பவர்களின் செல்வச் செருக்கையும், கவலை இல்லாமையையும் களிப்பின் மிகுதியையும் காட்டி நிற்கும் பாட்டு இது. ஆக இது வீறு கோள் அணி அல்லது உதாத்த அணியாகும்.
இதோ கம்பர் தந்த பாடல்
காடும், புனமும், கடல் அன்ன கிடக்கும். மாதர்
ஆடும் குளனும், அருவிச் சுனைக் குன்றும், உம்பர்
வீடும், விரவும் மணப் பந்தரும், வீணை வண்டும்
பாடும் பொழிலும், மலர்ப் பல்லவப் பள்ளி மன்னோ!
[பால காண்டம் – நகரப் படலம்]
அந்நகரைச் சேர்ந்த காடுகளிலும், கொல்லைகளிலும், கடல் போன்ற அகழியின் ஓரங்களிலும், பெண்கள் நீர் விளையாடும் தடாகங்களிலும், அருவிகளையும் சுனைகளையும் உடைய மலைகளிலும், மேல் வீடுகளிலும், பற்பல இடங்களிலும் விரவியுள்ள முத்துப் பந்தர்களிலும், வீணை போல வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலைகளிலும், ஆகிய இடங்களில் எல்லாம் மலர்களாலும் தளிர்களாலும் அமைந்துள்ள படுக்கைகள் நிலைத்திருக்கும்.
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.