கற்போம் கம்பனில் – 20
(03-04-2020)
வடிவேலுவும் பார்த்திபன் ஜோடியும் கலக்க ஆரம்பித்த அந்த குண்டக்க மண்டக்க காமெடியினை மறந்திருக்க மாட்டீங்க. பாட்டிலும் கூட இப்படி இட்டுக் கட்டிப் பாடும் பாடலும் இருக்கத்தான் செய்யுது. ஒரு ஃப்ளோவில் ஒரு பாட்டு சிக்கியது.
உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்
அசைத்து இசைத்தது வளைக்கரம் தான்
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான்
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான்
சில வரிகள் வம்படியா கூட்டிட்டு வந்தது மாதிரி இருக்கும் சிலசமயம். சிலம்பொலிக்கு இட்டுக்கட்டா வலம்புரியை வைத்தது நாம கவனிக்காமலேயே போயிடும். (ஆனா உங்க கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் சிக்குதோ? இது என் இல்லத்தரசி; சாதாரணமாவே இப்படி அடி விழுந்திட்டே இருக்கும். இப்பொ இருக்கும் லாக் டவுனில் தர்ம அடி தான்).
இதே மாதிரி இன்னொரு செமெ பாப்புலர் அந்த ‘மானே தேனே போட்டுக்கிடுங்க’ கமல் தன் படப்பாடல் ஒன்றில் சொல்லப் போக, செமெ ஹிட் ஆயிடுச்சி. ஆஃபீசில் ஒரு லெட்டர் தயார் செய்யிங்க; அதில் இந்த மாதிரி பலான, பலான செய்திகள் உள்ளடங்கி இருக்கணும் என்றேன். (ஹலோ…ஹலோ..நீங்க நெனைக்கிற அந்த பலான கிடையாதுங்க); பொறுமையாக கேட்டவர், சார் கொஞ்சம் வெயிட் செய்ங்க சார், கொஞ்சம் மானே, தேனே எல்லாம் போட்டு கொண்டு வாரேன் என்றார். (மானே தேனே என்றால், மானே தேனே மாதிரி அது சார்ந்த சங்கதிகள் என்று பொருள் கொள்க.) பாடல் எழுதின கவிஞர் கூட இதெ இப்படியெல்லாம் யூஸ் பன்னுவாய்ங்கன்ணு நெனெச்சே பாத்திருக்க மாட்டாரு.
மானுக்கும் தேனுக்குமே இப்படி வரிஞ்சி கட்டி வார்த்தை போடும் நம்ம கவிஞர்ங்க, போர்… அதுவும் ஜெயிச்ச போர் பாத்த என்ன ஆவாய்ங்க? (அதெப்படி போராடிக்காமெ, போர் செய்தாய்ங்க? போர் பத்தி எழுதிய புலவர்களுக்கும் போரடிக்கலையா? ராசாவும் கொடுக்கிறதை நிறுத்தின மாதிரியே தெரியல்லெயே.) அப்பொ கன்னிப் போரில் ஜெயிச்சா, சந்தோசத்துக்குக் கேக்கவா வேணும்? ஒரு சீனு இப்பிடி வருவதை கவிஞர் பாடி இருக்கார். (இட்டு கட்டி என்பது சொல்லாமலேயே புரிஞ்சிருக்குமே!) வந்தவ நாடாகிய சக்கரக் கோட்டத்தை வயிராகரம் என்ற இடத்தில் பொருது வெற்றி கொண்டான். மனிதர்களின் தீய நெறி புருவ வில் மாதிரி கோபத்தோடு வளைக்க எமனுடைய ஊர் போயே போச்சு என்கிறார் புறப் பொருள் வெண்பா மாலையில்.
மனுக்கோட்டம் அழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்டம் நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம்.
இட்டுக்கட்டுவதில் கெட்டிக்காரிக நாட்டுப்புறப் பாடகிகள் தான். சமீபத்தில் (கரோணாவில் மறையாத) மறைந்த பரவை முனியம்மா உட்பட. கல்லூரிகளில் எல்லாரும் இப்படிப்பட்ட பாடல்கள் பாடியிருப்பீங்க; கடைக்கு ஒவ்வொரு பொருளாக வாங்க வரும் பொண்ணு நல்ல பொன்னு என தாராரந் தோப்பிலெ தாரான் தாரான் தோப்பிலெ என்று வரும் அப்பாடல். விளக்கு – விமலா; பிஸ்கட் – பிருந்தா; கடலை – கமலா; இப்படி வரும். ஒரு பாட்டுக்கே இப்படி என்றால் சமீப காலத்தில் இப்படிப்பட்ட பாடல்களா எழுதித் தள்ளி யிருக்காகளாம், (அதுவும் அந்தாதியா..!!!) . சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் கோமதி அந்தாதி என்னும் அரிய நூல் படைத்துள்ளார். இதில் 46 மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. 100 பாடல்கள் கொண்டதாம். வேண்டுவோர் கிண்டிலில் வாங்கிப் படிக்கலாம்.
எதுக்கு இம்புட்டு மெனக் கெடரீங்க. தானா வந்தா ஓகே; இல்லையா? ஏன் வம்படியா சிரமப்பட்றீங்க. இது நம்ம தமிழ் ஐயா சூரிய நாராயண சாஸ்திரியார் சொல்வது. (அப்பொ முத்துக்களோ பெண்கள்; தித்திப்பதோ கன்னம்; – இது ஓகேவா?) ”உனக்கெல்லாம் புரியணும்னா ஆங்கிலத்தில் அறிஞர் ரிட்லே பாட்டுக் கலையைப் பற்றி விளக்கிச் சொல்லி இருக்கார். பார்” என்றார். (”அதுக்கு இது பதில் இல்லையே?” என்று புலிகேசி ஸ்டைலில் (மீசை மட்டும் முழுதாய் மழித்தபடி ) நகர்ந்தேன்.
”ஆமா..அவனவன் உயிரெக் கையிலெ புடிச்சிட்டு இருக்கோம். இந்தச் சிச்சுவேஷன்லெ கன்னம் ஆராய்ச்சி எல்லாம் தேவையா?” கம்பர் நேரில் வரலை. வாட்ஸ் அப்பில் தகவல் சொன்னார். (லாக் டவுனெ கனகச்சிதமா ஃபால்லோ செய்கிறாரோ? இருக்கலாம். மனித குலத்துக்கே அறம் சொன்னவர். எது செய்தாலும் அறம் சார்ந்தே இருக்கும். (அதுக்காக வாட்ஸ் அப்புமா?)
இல்லை கம்பர் ஐயா… ஒரு திருமறைப்பாட்டும் (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் – சேத்திரத் திருவெண்பா) இப்படி வம்படியாப் சிவனைப் பிடிப்பது மட்டும் தான் எல்லா சங்கடங்களும் தீர ஒரே வழி என்கின்றார். வண்டியில் பளுவைத் தாங்குகின்ற நல்ல அச்சுப் போன்ற உடம்பு, செயலற்று வீழ்வதற்குள் அம்பலமே
என்று சேரணுமாமே..
ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்றாரும்
கோடுகின்றார் மூப்புங் குறுகிற்று – நாடுகின்ற
நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்.
கம்பர் மீண்டும் ’வாட்ஸப் வெப்’ மூலம் தகவல் அனுப்பினார்… ஏதோ இழுத்துப் போட்டு எழுதும் கலை பத்தி சொல்ல வருவது மாதிரி தெரியுது.
ஆமாம் ஐயனே…
சொல்லணி என்பார்கள் அதனை. உன்னால் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் (தாராரம் தோப்பில் உட்பட) திரிபணி என்ற வகையில் அடங்குது. திரிபணியில் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வரும்.
இராமவதாரத்திலும் இப்படி ஒரு பாட்டு இருக்கு… பாடல் தந்து விட்டு ஆஃப் லைன் போய் விட்டார்.
கம்பர் பாடல் பாக்கிறதுக்கு முன்னாடி எனக்கு, அந்தக் காலத்திலிருந்து ஒரு டவுட்டு; இப்பொ ஒரு கருத்தான ஒரு கவிதை வரிகள் பாக்கலாம்:
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்கம்மா – உன்
இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா
எண்ணை இல்லாம விளக்கு எரியுமா
கண்ணே கங்கம்மா
மரம் இழுக்குற கைய பாரம்மா……ஹஹாஹ்..
இதில் எண்ணை & கண்ணே என்பதில் இரண்டாம் எழுத்தை எதுகை
என்கிறார்கள். முதல் எழுத்தை மோனை என்கிறார்கள். (ஏன் மோனை எதுகை என்று சொல்லாமல், எதுகை மோனை என்றார்கள்?) என் சந்தேகம் அப்படியே தள்ளி வச்சிட்டு முக்கியமான சமாச்சாரம் பாக்கலாம். இதிலும் மோனை மாறி வர எதுகை மட்டும் அப்படியே வருவதனால் இச்செய்யுளும் திரிபணியில் அமைந்த பாடல் எனக் கொள்ளலாம். (இலக்கண ஆசான் தொல்காப்பியம் பெயரில் இயங்கும் வாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் மன்னிக்கவும்)
வாங்க அப்படியே கம்பர் அனுப்பிய பாட்டும் பாத்திடலாமே…:
ஓம் அ ராமரை, ஒருங்கும் உணர்வோம் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை, நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா- அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அது கொடு எற்றவரலும்
ஆரண்ய காண்டம்; விராதன் வதைப் படலம்.
ஓம் எனும் பிரணவ மந்திரப் பொருளாகிய இராமபிரானை, முற்றும் உணர்ந்த பெரியோரே அறியத்தக்க, இராமன் எனும் திருப்பெயர் கொண்ட அவரை, சிறந்த தர்மத்தை நிலை நிறுத்தற்காக, தமக்குரிய ஆதி சேடனாம் பள்ளியை விட்டு நீங்கி உலகில் வந்து அவதரித்தவரை ஒரு பெரிய ஆச்சா மரத்தைப் பிடுங்கி ஒடித்து அதனைக் கொண்டு அடிக்க வந்தான் விராதன். (ஓம் & தாம் என எதுகை மாறாது வந்ததால் திரிபணியில் வந்த பாடல் என கம்பர் அனுப்பினாரோ? கம்பர் குடுத்தா, அதுக்கு ஏது அப்பீல் ?)
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.
தாங்கள் கேட்கும் எல்ல கேள்விகளுக்கும்
சமாதானம் சொல்ல (பதிலளிக்க) கம்பர் தவறாமல்
வந்துவிடுகின்றார் !
எங்கோ ஆரம்பிச்சி கம்பரில் முடிப்பது தானே என் பாவிகம். அதாவது கொள்கை. அதன் படி எல்லாம் சரியா ஒடிக் கொண்டிருக்கு.
எப்படியோ முடிச்சி போட்டு விடுறீங்க. எதுக்கும் எதுக்கும் எங்கறதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா? O.S.Subramanian.
On Tue, 7 Apr 2020 at 06:04, அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:
> Tamil Nenjan commented: “எங்கோ ஆரம்பிச்சி கம்பரில் முடிப்பது தானே என் > பாவிகம். அதாவது கொள்கை. அதன் படி எல்லாம் சரியா ஒடிக் கொண்டிருக்கு.” >
அது தானே நம்ம வேலையே…